Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ28_2 Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 28_2

 

மணி மூன்று.. தில்லியிலும் தான்!

 



Advertisement

வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு படுத்தாலும் உள்ளுக்குள் சின்ன உதறல் எடுத்தது துளசிக்கு. இவ்வளவு சாமர்த்தியமாகத் திட்டம் போட்ட மாதுரி, தான் போவதாக உரைத்தால்.. வெற்றிலை பாக்கு வைத்து அனுப்பிவிடுவாளா என்ன? கண்டிப்பாக அனுமதிக்க மாட்டாள்.

 

ஏதேனும் காவல் வைத்திருப்பாளா? மாதுரி.. ரிஷி.. வீட்டில் இருக்கும் உறவுக்கார கும்பல்.. இரண்டு கூர்க்காகக்கள்..! இவர்கள் அனைவர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டுச் செல்வது அவ்வளவு சுலபமாயிருக்க போவதில்லை.

Advertisement

 

Advertisement

தூக்கம் கண்ணைத் தழுவ ஆரம்பிக்கவில்லை. தப்பிக்க முடியாமல் போனால்..? பயம் லேசாக அடிவயிற்றைக் கவ்வி பிடிக்க ஆரம்பித்தது. இன்று ஒரு நாள் தான் அவள் கையில்… நாளைய தினத்தை நினைக்கவே பிடிக்கவில்லை. முடியாது என்று மறுத்தால் கண்டிப்பாகக் கட்டாய தாலி தான். சந்தேகமே இல்லை. இங்கிருந்து சென்றே ஆகவேண்டும்!

 

போவது என்று முடிவெடுத்தபின் இங்கு என்ன வேலை என்று எண்ணியவள் அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டை விட்டுப் போகும் வழிகளை ஆராய ஆரம்பித்தாள். சொத்து பத்திரமோ.. நகையோ.. ஏன் அவளின் பெட்டியோ… எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. இங்கிருந்து போனால் போதும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க.. முந்தியில் முடிந்த சில ரூபாய் நோட்டுகளோடு, சத்தம் எழுப்பாமல் கதவைத் திறந்தாள். குப்பென இருட்டு முகத்தில் அறைந்தது. அவளறையில் இருந்த சொற்ப வெளிச்சம் கூட அங்கில்லை. சிறிது நேரம் பிடித்தது கண் இருட்டிற்கு பழக. மனம் விரும்பாத ஒரு வித சூழல். இதயம் வேகம் எடுக்க ஆரம்பித்தது. இப்படிப் பட்ட தப்பிக்கும் முயற்சி எல்லாம் புதிதில்லை தான்… இருந்தும் பயம் இருக்கத் தான் செய்தது.

Advertisement

 

படியில் உருண்டுவிடக் கூடாதே.. சுவரை பிடித்துக்கொண்டே பூனை நடை போட்டாள். மூச்சு சத்தமே பயமுறுத்தியது. முன் வாசல் நோக்கி இருட்டின் உதவியோடு மெல்ல நடந்தாள். கண் இருட்டிற்குப் பழகி இருக்க எதையும் தள்ளி விடாமல் நடப்பது அவ்வளவு சிரமாயில்லை.

 

அவள் எதிர்பார்த்ததுப் போல் நடுக் கூடம் காலியாயில்லை. உறவில் சிலர் படுத்திருக்க… மூச்சுக் காற்று சத்தம் கூட கேட்டுவிடாத வண்ணம் தரைக்கும் வலிக்காமல் ஓசையும் எழுப்பாமல் நடந்தவள், மெல்ல தாழ்ப்பாளை விலக்கவும்.. ‘க்ரீச்ச்..’ எங்கிருந்தோ.. கதவை திறக்கும் சத்தம்.

 

தடதடத்த இதயம் துடிப்பதை உணர முடிந்தது. கை கால் நடுங்க அப்படியே நின்றுவிட்டாள். நிமிடம் கழிந்த பின்னும் அரவமில்லை. ஆள் நடமாட்டமில்லை. மூச்சை இழுத்துவிட்டவள், தாழ்ப்பாள் விலக்கிய கதவை இழுக்க… அது திறக்க மறுத்தது. என்ன முயன்றும் திறக்கவே இல்லை. வெளியே யாரோ தாழ்ப்பாள் போட்டிருக்க வேண்டும். பல்லை மட்டும் தான் கடிக்க முடிந்தது.

 

அங்கு நின்று பயனில்லை. மீண்டும் சத்தம் எழுப்பாமல் பின் வாசல் நோக்கி இருட்டில் நடக்க ஆரம்பித்தாள். நிசப்தமான இருட்டு… தடதடக்கும் இதயம்… இருட்டில் அசைந்த தீரை சீலை.. தெரு வெளிச்சத்தின் உதவியோடு நிழலாய் தெரிந்த பேய் உருவங்கள், உடல் வியர்க்க நடக்கவும் மீண்டும் ஏதோ சத்தம். கால் நகருவேனா என்றது.

 

நடக்க நடக்க அறை நீண்டுகொண்டே போனது.. திடீர் என்று தோளில் ஒரு கை.. உயிர் போய் விட்டது. அவளையும் மீறி வந்துவிட்டது, “அம்மா…” என்ற சத்தம்.

 

“நீயா மா? இங்க என்ன பண்ற?” பாத்ரூம் கதவை கொண்டு ‘க்ரீச்’ சத்தம் ஏற்படுத்திய பெருசு! மூச்சு மீண்டது.

 

“தண்ணி குடிக்க..” ஏதோ சொல்லிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்தவள் தான் அடுத்த ஒரு மணி நேரம் அசையவே இல்லை.

 

விடிந்தால் கண்டிப்பாகத் தப்பிக்கவே முடியாது. என்ன செய்ய? என்ன செய்ய? மூளை பரபரத்தது.

 

இரண்டு புடவையை எடுத்துக் கொண்டு பால்கனி சென்றாள். அவள் அறை வீட்டின் வலதுபுறம் இருக்க.. சட்டென்று காவலாளி கண்ணில் படமாட்டாள். முன்புறம் திருமணத்திற்காக போடப் பட்டிருக்கும் நாற்காலிகளின் உதவியோடு மதில் ஏறிக் குதிக்கும் யோசனையோடு புடவையை பால்கனி கம்பிகளில் கட்டினாள். புடவையை கீழே எறிய.. “யாரு மா அது?” காவலாளி சத்தம்.

 

[the_ad id=”6605″]

 

 

புடவை மேலே இழுபட்டது. ‘எருமை மாடு… கீழயே உக்காந்து இருப்பான் போல.. ச்ச..’

 

அடுத்த திட்டம் என்ன? சத்தியமாகத் தெரியவில்லை. அவளுக்கு ஒரு வழி பிறக்கும் முன் விடிந்துவிட்டது.

 

மூர்த்தியிடம் உரைக்க வேண்டுமே… கண்டிப்பாக அவர் ஏதாவது வழி ஏற்படுத்தித் தருவார். அவரால் வர முடியாது.. ஆனால் கண்டிப்பாக ஏதாவது செய்வார். சத்யன்? சத்யன் அண்ணா உதவ முடியுமே! மனம் கணக்கு போட முகத்தை சிரமப்பட்டு அமைதியாய் வைத்துக்கொண்டு தொலைப்பேசி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 

அப்படி எல்லாம் மாதுரி லேசில் விட்டுவிடுவாளா?

 

“வந்து சாப்பிடு கோமல்..” வந்து முன் நின்று கொண்டாள்.

 

‘ஒரு வேளை சாப்பிடாட்டா செத்து போக மாட்டேன்’ கத்த வேண்டும் போல் எழுந்த ஆத்திரத்தை அடக்கிகொண்டு..

 

“பசி இல்ல. ஃபோன் பேசிட்டு சாப்பிடுறேன்..” கூறிவிட்டு எண்களை சுழற்ற ஆரம்பித்தாள். கல்லூரிக்கு அழைத்தாள். ஐந்து நிமிட காத்திருப்பு..

 

ரிசிவரில் ‘ஹலோ’ வரவும்… “மூர்த்தி சார்…” என்ற அடுத்த நொடி..

 

“மேடம்… சார் பிரின்ஸிபால் கூட இருக்காங்க… ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடுங்க..”

 

இவள் பதில் பேசுமுன் அழைப்பு துண்டிக்க பட்டது. அதன் பின் அந்த நாள் முழுவதும் ஒரு பெருசு எப்பொழுதும் அதன் அருகில் அமர்ந்தே இருக்க.. அவளால் தொலைப்பேசி அருகில் நெருங்கக் கூட முடியவில்லை.

 

அமரோடு சுற்றித் திரியப் புறப்பட்டாள். “நாளைக்கு வீட்டுல விசேஷம்.. ரெண்டு பேரும் வெளில போக கூடாது” ஸ்டிக்டானா ஆணை மாதுரி இடமிருந்து.

 

“வீட்டுக்குள்ளயே இருக்க பிடிக்கல.. கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்.” என்றவளுக்கு வழி மறுக்கப்பட்டது. வாசலில் காவல்.

 

வீட்டில் எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம்.. ஆனால் படியைத் தாண்ட முடியாத நிலை.

 

“நாளைக்குக் கல்யாணம்.. போ போய் படுத்து ரெஸ்ட் எடு” என்றாள் மாதுரி.

 

மாதுரிக்கு தெரிந்துவிட்டதோ? மூளையைக் கசக்கிப் பிழிந்தாள். சிக்கலில்  மாட்டிக்கொண்டாயிற்று.. தனியே போராடி பயனில்லை. யாரிடம் உதவி கேட்பது? இந்த வீட்டில் நம்ப தக்க ஒரு ஜீவன்? அமர்!

 

“எனக்கு அவசரமா ஒரு தந்தி கொடுக்கணும். என்னால வெளில போக முடியாது. நீ போறதும் யாருக்கும் தெரியகூடாது.. உன்னால முடியுமா?” தம்பியிடம் கேட்டு நின்றாள்.

 

சுவர் ஏறி குதிக்க சிறுவன் காத்திருந்தான். மூர்த்தியின் கல்லூரி மற்றும் வீட்டு முகவரியோடு தகவலையும் கொடுத்தாள். இரண்டு தொலைப்பேசி எண்ணும், ஒரு வரி செய்தியும் அவள் கூற… சிறுவன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.

 

“நாளை காலை அவசர திருமணம் துளசிக்கு. மூர்த்தி சார் வரவை அவஸ்தையுடன் எதிர்நோக்கும் உங்கள் மனைவி..”

 

அவனுக்கு புரிய கூடாது என்பதற்காகவே இப்படி கொடுக்க.. அவனோ.. “நான் உன் தம்பிக்கா… உனக்காக என்ன வேணுனாலும் செய்வேன்.. நீ தான் துளசியா? அத மட்டும் சொல்லு?” என்று கேட்டவன் நேரம் பார்த்து அமர்ந்திருந்தான் வெளியே செல்ல.

 

தனியே அழும் சின்ன அக்காவின் கண்ணீரும்.. பெரிய அக்காவையே கழுகு பார்வை பார்க்கும் ரிஷியின் பார்வையையும் கவனிக்கத்தான் செய்தான் சிறுவன். ஆனால் அவன் வயதுக்கு இது புலப்படக் கூடிய விஷயமா என்று தெரியவில்லை. ஒருவரும் கணிக்க முடியாத வண்ணம் மாதுரி செயல் பட.. சிறுவன் எம்மாத்திரம்.

 

மதுவிற்கு திருமணம். ஆனால் பெண்கள் இருவருக்கும் ஒரே போல் நகையும் புடவையும். தன் மூன்று பிள்ளைகளுக்கு நிகராய் எதிலும் குறைவில்லாமல் மூத்த தாரத்து மகளை நிறுத்தியிருப்பவளை யார் சந்தேகிப்பது?

 

“முதல் தாரத்து பொண்ண எப்படி தாங்கறா பாரு. இவ மனசு யாருக்கு வரும்” என்ற பலரின் கூற்று துளசி காதில் விழாமல் இல்லை. நல்ல பெயர் வாங்கப் போடும் வேஷம் என்று பார்க்க.. திட்டமோ ஒருவரும் யோசிக்க முடியாத அளவில் போட்டிருந்தாள்.

 

ரிஷி, மூத்தவளைப் பார்ப்பது தான் இளையவளின் கண்ணீருக்குக் காரணம் என்ற வரை அமருக்கு புரிந்தது.

 

மாலை ஆட்கள் வரத்து ஆரம்பிக்கவும் சிறுவன் நழுவி சென்று வந்தான். “தந்தி குடுத்துட்டேன். ஆனா ஃபோன்ல அவங்க பேசறது புரியல..” என்றான் ஹிந்தி மட்டுமே தெரிந்த சிறுவன்.

 

தன் நிலை என்ன? தந்தி போய் சேருமா? கொடுத்தவன் ஒழுங்காக கொடுத்தானா? மூர்த்தி கையில் கிட்டுமா? நாளை காலைக்குள் யாரேனும் உதவ வருவார்களா? பெண் மனம் தொய்வடைய ஆரம்பித்தது.

 

வீட்டில் விருந்தோம்பல் களைக்கட்டிக் கொண்டிருந்தது.

 

“நீ சீக்கிரம் கிளம்பு.. எல்லாரும் வர ஆர்ம்பிச்சுட்டாங்க..” துரிதப் படுத்தினாள் மாதுரி.

 

“கல்யாண பொண்ணு ரெடி ஆனா போதுமே… எனக்கு முடியல. நான் வரல… நீங்க உங்க வீட்டு விசேஷத்த பாருங்க.” கூறிவள் சட்டமாய் தொலைப்பேசி அருகே இருந்த சோஃபாவில் அமர்ந்துகொண்டாள்.

 

மாதுரி என்ன நினைத்தாளோ… “சரி படுத்து ரெஸ்ட் எடு..” என்று அறையில் கொண்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.

 

கூட்டம் பாதிக்கு மேல் வெளியே இருந்த பந்தலில் இருக்க.. ஜன்னல் வழி வெளியே வெறித்து நின்றவள் மனம் கணக்குப் போட்டது. சரியாக அனுப்பி இருந்தால் தந்தி மூர்த்தி கையில் கிடைத்திருக்கும். கிடைக்காமல் போயிருந்தால்?

 

 

[the_ad id=”6605″]

 

 

அவள் அறையில் தனித்திருக்க.. ரிஷி வந்தான்.  எல்லா வழியும் அடைக்கப்பட.. எதிர்த்துத் தான் நின்றால் என்ன என்ற எண்ணம் மேலோங்க..  “உன் மனசில என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும் ரிஷி. நீ நினைக்கிற எதுவுமே நடக்காது. நீ, மெட்ராஸில ஒருத்தர் கிட்ட பேசி.. அவர் சரி சொன்ன பிறகு தான் என்னை நீ இங்க கூட்டிட்டு வந்த நினைவிருக்கா? அவர் தான் என்னை கல்யாணம் பண்ண போறவர். உன் சுண்டு விரல் என் மேல பட்டா கூட… உன் கைய நீ மறந்து போயிட வேண்டி இருக்கும். தாலி கட்டலாம்ன்னு கனவு காணாத. இவ்வளவு சொன்ன பிறகும் நீ பிடிவாதமா தாலி கட்டினா.. நீ செத்தா தான் அது என் கழுத்த விட்டு இறங்கும்னா.. அவர் உன்ன கொன்னுடுவார். யாருக்காகவும் எதுக்காகவும் என்னை விட்டு கொடுக்கவே மாட்டார்.. நினைவுல வச்சுக்கோ” மிரட்டும் தொனியில் அவள் கூற.. அவனுக்கு வார்த்தையின் வீரியம் புரியவில்லை. மூர்த்தி என்பவன் துளசிக்காகக் கொலையும் செய்வான் என்பது அவனுக்குப் புரியவில்லை.

 

“வர சொல்லு. என்ன பண்றான் பார்த்துடுவோம்” கூறி சென்றான்.. நக்கல் தொனியில்.

 

பந்தி ஆரம்பித்திருக்க… வீட்டாள் அனைவரும் பந்தலில். எல்லாம் பின் தள்ளினாள். மூர்த்தி மட்டுமே முன்னுக்கு வர.. சத்தமில்லாமல் தொலைப்பேசியை எடுத்துக் கொண்டு சோஃபா பின் கீழே அமர்ந்துகொண்டாள். தொலைப்பேசியை இயக்க, அதற்கு அவள் அவஸ்தை புரியவில்லை. அந்த காலத்து தொலைப்பேசி.. வட்ட வடிவில் எண்கள் 0-9 வரை. எண்கள் மேல் இருக்கும் ஓட்டைக்குள் விரலை விட்டு சுற்ற வேண்டும். STD கோடை போட்டு.. மாமி வீட்டு எண்ணை ஒவ்வொன்றாய் சுற்ற.. அது ஒரு ஓசையோடு சுற்றியது. அவஸ்தையோடே சுற்றி முடித்தாள்.

 

அவள் நல்ல நேரம்.. ஒருவரும் அவள் கையிலிருந்து அதை இன்னும் பிடுங்கி இருக்கவில்லை.

 

ஒருவழியாய் மாமி எடுத்தார்.

 

“என்னடி கோந்தே…”, அவர் ஆரம்பிக்கவும்

 

“மாமி மாமி ரொம்ப அவசரம் மாமி.. அவர கூப்பிடுங்களேன்..” என்றாள் வேண்டுதலாய்.

 

“நோக்கு விஷயம் தெரியாதாடிமா? அவன் கார்த்தால பெட்டியோட தான் காலேஜுக்கே போனான். மதியம் போல ஊருக்கு கிளம்பறதால்ல.. சொன்னான்?  இந்நேரம் எந்த ஊர்ல இருக்கானோ? ஆமா நோக்கு என்ன அவசரம்?”

 

இருந்த ஒரே பிடிமானமும் போனது.

 

அவள் உடல் பாரமா இல்லை மனம் பாரம் தான் அவளைப் பூமிக்குள் புதைத்துக் கொண்டிருக்கிறதா? தெரியவில்லை. ஆனால் ஏதோ அவளை அழுத்தியது. உடலெல்லாம் வியர்த்தது.

 

“மாமி மாமி.. நான் சொல்ற நம்பருக்கு உடனே ஒரு ஃபோன் போட்டு என்னை டெல்லில இருக்க என் அப்பா வீட்டுல இருந்து காப்பாத்த சொல்லுங்க மாமி. அவர், சத்யன் மாம்பேல போலீஸ்..” என்று சத்யன் எண்ணையும் கொடுத்தாள். அவளால் அழைக்க முடியாமல் போனால்.. அவராவது விஷயத்தை சத்யனிடம் சேர்ப்பாரே என்ற நப்பாசை!

 

[the_ad id=”6605″]

 

 

“ஏண்டி.. கோந்தே என்ன நம்பர் சொன்னே… எழுதி வைச்சுக்கறேண்டி…”

 

அவள் மீண்டும் உரைத்து முடிக்கும் முன்.. “கீழ என்ன பண்ணிட்டு இருக்க கோமல்? உடம்பு சரி ஆகிடுச்சா? போ போய் படு போ… விடிஞ்சதும் கல்யாணம் இருக்கு இல்ல…” சிரித்த முகமாய் கையிலிருத ரிசிவரை வாங்கிவிட்டு மாதிரி துளசியை அனுப்பி வைத்தாள்.

 

நேரே ராஜனை காணச் செல்ல.. அவர் கதவில் பூட்டு தொங்க… துளசி திரும்பிப் பார்க்க… தொலைப்பேசி அருகிலேயே நின்றிருந்த மாதுரி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

 

கால் நேராக மாடி படியை நோக்கிச் சென்றது. அடிவாங்கிப் போனாள். மனம் அதிகமாய் மூர்த்தியைத் தேடியது. கையை விட்டு பொருள் பறிக்கப்படும் போது குழந்தை விறீடுமே.. அப்படி மனம் வீறிட்டது. அவ்வளவு தானா? நெஞ்சு விம்மியது. கண்டவன் எல்லாம் என் கழுத்தில் தாலி கட்டுவானா? நான் மூர்த்தியின் மனைவி இல்லையா?

 

ஒரு சின்ன பிரிவு தான் அவள் மனதை முற்றிலும் அவன் வசம் கூட்டி சென்றது. ஆனால் பிரிவே நிரந்தரம் ஆகிவிடும் போல் தோன்ற.. ‘மூர்த்தி சார்’ சத்தமில்லாமல் மனம் அலறியது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!