Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ33_1 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  –  33

 

திருமணத்திற்கு இன்னும் இருதினங்களே இருக்க, கல்யாண வீடு களை கட்டியது. வீடு முழுவதும் ஆட்கள். வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. முன் இரவு துளசியின் பேச்சு, மூர்த்தியின் முகத்தில் வசீகரத்தை கூட்டிக் காட்டியது. அவள் மொழிந்த காதல் வார்த்தைகள் புது உற்சாகத்தைக் கொடுக்க.. மாப்பிள்ளை களை தாண்டவமாடியது முகத்தில். முகத்தில் படிந்திருந்த நிம்மதிக்குச் செல்வனும் முக்கிய காரணம்.

 



Advertisement

விடிந்ததும் செல்வனிடம் சென்று பேசினான். “உன் மைனிக்கு உன்ன நான் பேசிட்டேன்னு ஒரே கோவம். ‘என் தம்பிய எப்படி அடிப்ப? எப்படி தப்பா பேசலாம்’ன்னு என் கூட அவ ஒரே சண்டை. நீ என் கூட பிறந்தவன். எனக்கு தெரிஞ்சிருக்கணும் என் தம்பிய பத்தி. நான் தப்பா பேசி இருக்கக் கூடாது. உன் கூட வந்தவள ஒண்ணும் சொல்ல வாய் வரல. ஆனா, தோளுக்கு மேல வளந்த உன் மேல கை நீட்டிட்டேன். மன்னிச்சி..” மூர்த்தி முடிக்கக் கூட இல்லை. அண்ணனைக் கட்டி தழுவிக்கொண்டான் செல்வன்.

 

“ண்ணா.. சாரி எல்லாம் சொல்லி என்னை அசிங்க படுத்தாதண்ணா. நான் செஞ்சது தப்பு தான். அப்படியே நான் தப்பே செய்யலனா கூட என்னைக் கொல்ல கூட உனக்கு எல்லா உரிமையும் இருக்குண்ணா… மன்னிப்பு அது இதுன்னு பேசாத!”

Advertisement

 

Advertisement

மூர்த்தி மேல் செல்வன் வைத்திருந்ததின் பெயர் என்ன? பக்தியா? மரியாதையா? அன்பா? எல்லாம் தான். மூர்த்தி பேச்சற்றவனாகப் போன நிமிடம் அது. செல்வனைத் தெரியும் என்று நினைத்ததெல்லாம் ஒன்றுமில்லாமல் போனது. செல்வனின் பாசப் பிணைப்பில் நெகிழ்ந்து நின்றான். இரவெல்லாம் செல்வனின் புராணம் ஏன் பாடினாள் என்று புரிந்தது. இருபது நாளில் துளசிக்கு அவன் தம்பியைத் தெரிந்த அளவு கூட இத்தனை வருடங்களாக தனக்கு தெரியவில்லையோ என்று தோன்றியது. கண்டிப்பாக அவன் மனைவி இந்த குடும்பத்தை பாசப் பிணைப்பில் கட்டிவைப்பாள் என்று தோன்றவும் மனம் லேசாகிப் போனது.

 

செல்வனுக்கும் செய்ய வேலைகள் வரிசை கட்டி நிற்க.. அவனும் இயல்புக்கு மாறி வேலையில் மூழ்கிப் போனான்.  

Advertisement

 

பரபரப்பு இல்லை என்றாலும் தோட்ட-வீட்டிலும் பஞ்சமில்லா சிரிப்பு சத்தம். எழில் சித்தி குடும்பம் விடியற்காலையிலே வந்திருக்க, துளசிக்கு ஆனந்த மிகுதியில் பேச்சே வரவில்லை. கட்டி அணைத்த சித்திக்கும் அதே நிலை தான். சுந்தரி கையில் இருபது மாத பெண் குழந்தை. அனைவர் உள்ளத்தையும் அவள் மழலையால் கொள்ளைக் கொள்ள.. தரையில் ஒழுங்காக கால் பதிக்காமல் தத்தக்க பித்தக்க என்று ஓடிக்கொண்டே இருந்த குழந்தையை விட்டு தங்கம் நகர்ந்தாள் இல்லை.

 

“உன் வீட்டுல இருந்த இலுவாச்சி கோம்ஸ்சு. எனக்கு வேணும்ன்னு அம்மாட்ட பதியம் போட சொல்லியிருந்தேன். உனக்கு பிடிக்குமேன்னு ரெண்டு எடுத்திட்டு வந்தேன்.” என்று சுந்தரி இருவாட்சியை கொடுக்க.. சுந்தரியைக் கட்டிக் கொண்டவளுக்கு அதை எங்கு நடவேண்டும் என்று உள்ளம் உரைத்தது. விட்டுப் போன கதை எல்லம் பேச நேரம் போதவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

 

பானுவுக்கு உதவியாய் நந்தினியும் வந்து இருக்க அவளிடமும் நிறைய மாற்றங்கள். முழு மனதோடு வேலையில் ஈடுபட்டாள். துளசியிடம் சிரித்துப் பேசவில்லை என்றாலும் முகம் காட்டவில்லை. இழுத்துப் பிடிக்காமல் புன்னகைக்க முடிந்தது.

 

“டுல்சி” சத்தம் கேட்டுத் திரும்பிய துளசி திக்குமுக்காடி போனாள். நிலா, ராட், விஜி, அருண், சுருட்டை என்று அவர்கள் கூட்டமே நின்றிருந்தது. எல்லாம் மூர்த்தியின் வேலை. நாள் குறித்த அன்றே அனைவருக்கும் அழைப்பு விடுத்துவிட்டான்.

 

“ஆம் ஹாப்பி ஃபார் யூ டுல்சி” என்றவன் முகத்தில் உண்மையாகவே மகிழ்ச்சி பொங்கியது. எதற்காகவும் துளசியின் திருமண தருணத்தை தவற விட மனமில்லாதவன் கையில் இளம் சிவப்பு ரோஜா கொத்து இரண்டு டஜன்!

 

“கடைசில உன் அத்தானையே கட்டிக்க போற… நடத்து நடத்து.” என்று தோளை இடித்த நிலா, “இப்போ எங்கள கூட்டிட்டு வந்தாரே உன் சின்ன அத்தான்..”

 

“யாரு செல்வன்னா? ஏன் அவருக்கு என்ன?”

 

“அவர் கூட நல்லாதா இருக்கார்..” நிலா புன்முறுவலோடு இழுக்க..

 

“என் புருஷன் கிட்டச் சொல்லி உன் டி.சி-ய வாங்கி உன்ன ஆம்பளைங்களே இல்லாத காட்டுக்கு நாடு கடத்த போறேன் பாரு. ஊர்ல ஒருத்தனை விடாத!” பொய்யாய் துளசி மிரட்ட..

 

“ப்ச்… பேசு டி.. ஏன் பேச மாட்ட? நீ செட்டில் ஆகிட்ட. அந்த திமிர்! உன் குட்டி அழகு அத்தான் கிட்ட என்னைப் பத்தி நல்லதா நாலு வார்த்தை பேசி எங்களை செட் பண்ணிவிடுவன்னு பார்த்தா… போடி நீ எல்லாம் ஒரு ஃப்ரெண்ட்!” செல்லமாய் அவள் கோபித்துக் கொண்டாள்.

 

துளசிக்கு தெரியும், நிலாவிடம் வெறும் பேச்சு மாட்டும் தான் என்று. இரண்டு வருடமாக பார்க்கிறாளே ஒருவரோடும் தேவைக்கு அதிகமாகப் பேசமாட்டாள். அவள் வாய் எல்லாம் அவள் நட்புகளுடன் மட்டும் தான்.

 

“போடி இவளே… செல்வன் எங்க வீட்டுக் குட்டி வாரிசு. எங்க வீட்டு இளவரசன். அவருக்கு ஏத்த ராஜகுமாரிய நானே தேடி கண்டுபிடிச்சு கட்டி வைப்பேன்…”

 

“ம்ம்கும்… எங்கள பார்த்தா கண்ணு தெரியல.. தேட போறாளாமே..? இளவரசன்னு சொன்னதும் நினைவு வருது.. தெரியுமா? நாலு நாள் முன்னமே வந்துட்டோம். இங்க இருக்க இடம் எல்லாம் சுத்தி பார்த்தோம். எம்.பி தான் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தார் இந்த ட்ரிப்ப! கன்னியாகுமரி நிஜமாவே ரொம்ப அழகு தான். உன் வீடு என்னடி அந்த பத்மநாபபுர பேலஸ் மாதிரி இருக்கு?” சுற்றிப் பார்த்த அனைத்தையுமே கண் விரியக் கூறினாள்.

 

[the_ad id=”6605″]

 

 

“மைனி.. உங்க ஃப்ரெண்ட்ஸ்.” என்று செல்வன் தான் கூட்டி வந்திருந்தான். வந்தவர்களைக் கவனிக்கும் வேலை அவன் மேல் விழ.. அவனுக்கு இரண்டு வீட்டிற்கும் சுற்றித் திரிவதற்கும்.. விருந்தினர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும்.. என்று நேரம் சரியாக இருந்தது.

 

பேசி பேசி ஒருவருக்கும் வாயும் வலிக்கவில்லை, நேரமும் போதவில்லை. பெரிய வீட்டில் ஆண்கள் திருமண வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள.. தோட்டத்து வீட்டில் பெண்கள் தங்கள் அரட்டை கச்சேரியில் மூழ்கினர்.

 

மாலையில் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் துளசியும் பெண்களும் குழந்தையோடு சுற்றித் திரிய.. நிலா வாய் மூடினாள் இல்லை.

 

“உங்க வீட்டு இளநீர்.. வாவ் செம்ம ஸ்வீட் துளசி. இங்க எல்லாமே செமையா இருக்கு பா! ரொம்ப பிடிச்சு போச்சு எனக்கு! எதுக்கு டி எம்.பி இந்த சொர்கபூமிய விட்டுட்டு அங்க வந்து அவஸ்தை படுறார்?” நிலா கேட்க, இவளுக்கும் உள்ளுக்குள் எழுந்த கேள்வி தான் இது. கேட்கவும் செய்தாள் மூர்த்தியிடம்.

 

“அக்கா மகன், மணிக்கு சின்னதில இருந்தே என்னைப் பிடிக்காது. ஏன் என் மேல அவ்வளவு வெறுப்புன்னே எங்க யாருக்கும் தெரியல. அவனுக்கு என்னைப் பார்த்தாலே முகம் மாறிடும். அவனுக்கு காம்ப்லெக்ஸ் வரக் காரணம் கூட இல்ல. நல்லா படிப்பான். விளையாட்டுல முன்ன நிப்பான். நல்ல அறிவு. பாக்க அட்டகாசமா இருப்பான். எல்லாம் இருந்தும் அவனுக்கு ஏதோ ஒரு குறை உள்ளுக்குள்ள. எல்லாத்துக்கும் என்னை போட்டியா நினைப்பான். விட்டுக் கொடுத்தாலும் பிடிக்காது… அவன தோக்கடிச்சாலும் அவனுக்குப் பிடிக்காது.

 

பத்தொன்பது வயசுல அப்பாவ திடீர்ன்னு இழந்தவனுக்கு இழப்ப தாங்க முடியல. கெட்ட சாவகாசம்.. அதனால வேண்டாத பழக்கம் பழக ஆராம்பிச்சான். வீட்டு பெரியவங்க பேச்சைக் காது கொடுத்து கேட்க மாட்டான். ஒருத்தரும் சத்தமா கூட நம்ம வீட்டில பேச மாட்டாங்க. அப்புறம் எங்க அவன அடக்க!

 

அத்தான் இழப்பில, அக்கா உடஞ்சு போய்டாங்க. அத்தான் தான் அவங்க உலகம்.. பித்து பிடிச்ச மாதிரி மாசமா இருந்த அக்காவ பாத்துக்கவே ஆள் தேவை பட்டுது. மகன எங்க இருந்து பாக்க? அக்கா உடம்பு தேறி வந்த நேரம், ரொம்ப விலகி போய்ட்டான். எனக்கு தெரிஞ்சுது.. ஆனா என்னை நெருங்க விடல அவன். யார் பேச்சும் கேக்குற நிலையை தாண்டிட்டான்.

 

அப்போ எனக்கு யூஜி முடிஞ்ச டைம். நான் வீட்டுல இருந்தா முழு நேரமும் தங்கம் என் மடில தான் இருப்பா. எப்போவாது இவன் வந்து தூக்குவான். அவன் தூக்கின மறு நிமிஷம் அழுவா! பிறந்த அன்னையில இருந்தே என் மடியில தவழ்ந்த குழந்த, சோ நான் தூக்கினதும் சிரிப்பா. அது அவனுக்கு சுத்தமா பிடிக்கல. அதுக்கும் என்னை தான் வெறுத்தான்.

 

ஒரு நாள் குழந்தைய அவன் ஆசையா தூக்க… அவளுக்குத் தூக்கக் கலக்கம்.. பசி.. அழ ஆரம்பிச்சா. அக்கா குழந்தைய கேக்கவும், “என்ன நான் தூக்கினா மட்டும் பிடுங்க வரிங்க.. குடுக்க முடியாது. இனி மேல் நான் மட்டும் தான் தூக்குவேன் அவன் தூக்கக் கூடாது. ஒத்துகிட்டா தரேன்”ன்னு வீம்புக்கு நின்னான். குழந்தை அழுகை அதிம் ஆகிட்டே போச்சு.. அவனும் இறங்கி வரல..

 

நடந்த எதுவும் தெரியாது எனக்கு. அப்போ தான் உள்ள போனேன். அக்கா ஒரு பக்கம் அழுக. அம்மா ஒரு பக்கம் திட்டிட்டு இருந்தாங்க. அவன் குழந்தையை தோள்ள போட்டுட்டு மரம் மாதிரி உக்காந்து இருக்கான். அழுது அழுது என் தங்கம் முகம் எல்லாம் சிவப்பாகி… உடம்பு பூரா ஈரம் ஆகி.. வாயிலேந்து எச்சில் வடிஞ்சு.. பாக்கவே கொடுமையா இருந்துது. அந்த நிமிஷம், சத்தியமா அவனுக்கு ஈவு இறக்கமே இல்லன்னு தோணிச்சு!

 

என்னை பார்த்ததும் ஒம்பது மாச குழந்த கைய நீட்டி தேம்பினா என்ன பண்ணுவேன்..? அவ என் தங்கம். அவள தூக்க கை நீட்டினா.. அவன் தரல. குழந்த பயங்கரமா சத்தம் வைக்கவும் எனக்கு கோபம் வந்திடுச்சு. சட்டுன்னு யோசிக்காம அவன் மேல கை நீட்டிட்டேன். யாருமே என்னை ஒன்னும் சொல்லல.. ஆனா அவன தான் ஆளாளுக்கு திட்டினாங்க.

 

குடும்பத்துக்கும் அவனுக்கும் நடுவில இருந்த கடைசி நூலும் அன்னைக்கு அறுந்திடுச்சு. அவனா நானான்ற ரேஞ்சுக்கு அவன் பேசவும் நான் அதிகம் வீட்டு பக்கம் வரதில்ல. ஹாஸ்டல் படிப்புன்னு தள்ளி போயிட்டேன். ஆனா.. ஒண்ணும் மாறல. அவன் எங்களோட ஒட்டவே இல்ல. இப்போவும் எதிரி மாதிரி தான் பாப்பான் என்னை. அவன் மேல அக்கா எவ்வளவு பாசம் காட்டியும் அவனுக்கு ஏனோ அது புரியவே இல்ல.

 

எனக்கு தெரிஞ்சு எங்க வீட்டுல அப்படி எல்லாம் கட்டி பிடிச்சு பாசாம் காட்டாட்டியும்.. உணர்த்த வேண்டிய நேரம் உணர்த்துவாங்க. அவன் கிட்டயும் எல்லாரும் அது மாதரி தான் இருந்தாங்க! ஆனா ஏனோ அவனுக்கு அது போதல போல. என் கிட்ட அக்கா வந்தா போதும்.. அவனுக்கு எப்படியோ ஆகிடும்! நான் இங்க இருந்தா அவன் வீட்டுக்கு வரவே மாட்டான். அதனால் படிச்சிட்டு மெட்ராஸ்லயே இருந்துட்டேன்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவனும் ஒரு கல்யாணம் செஞ்சு வீட்டோட இருந்துட்டா.. நானும் இங்க வந்திடுவேன். பாப்போம், காலம் என்ன பதில் வச்சிருக்குனு! ஆனா என்னால தான் அவன் இப்படி ஆகிட்டானோன்னு மனசு அடிச்சுக்கும். நான் காரணம் இல்லன்னு எனக்கு தெரியும்.. நான் யாரையும் அவன் கிட்ட இருந்து பிரிக்கல தான். இருந்தாலும் அவனுக்கு என் மேல ஒரு மனஸ்தாபம். அவன் இப்படி குடும்பத்தை விட்டு விலக என்னை அறியாமலே நான் காரணம் ஆகிட்டேன்.

 

அவன் திரும்பவும் குடும்பத்தோட சேர ஏதாவது ஒரு காரணம் இருந்தா… அது எதுனாலும் அவனுக்காக நான் செய்வேன் துளசி. என் மேல உயிரே வச்சிருக்க அக்காக்காக… என் தங்கத்துக்காக… கண்டிப்ப செய்வேன்.

 

அவன் வரவே மாட்டேன்னு போய்ட்டா பி.ஹெச்.டி முடியவும் வந்திடணும்னு நினைச்சிருந்தேன். உனக்கு பிடிச்சிருக்கா இங்க.. நீ என்ன நினைக்கிற.. இங்க வந்திடலாமா?”

 

நினைவுகளிலிருந்து மீண்டவளுக்கு அந்த மணியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. ‘அன்புக்கு ஏங்கும் முரட்டுக் குழந்தையோ?’ என்று தான் நினைத்தாள். வீட்டிலிருந்த மற்ற ஆண்கள் போலவே இருப்பான் என்று அவள் அவனை பற்றி நினைக்க…

 

அவனோ அவளின் நினைப்பை பொய்யாக்கும் வண்ணம், வீட்டில் ஒரு ஆணும் செய்யத் துணியாத செயலில் ஈடுபட்டிருந்தான்.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!