Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ41_2 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி – 41_2

 

ஐந்து நிமிடம், பூட்டியிருந்த வீட்டின் கதவையே துளசி பார்த்திருந்தாள். பாமா  வந்தாளில்லை. பாமாவிற்கு அங்கு என்ன வேலை? அவள் வயதில் அங்கு பிள்ளைகள் இல்லையே… துளசிக்கு ஏதோ சரி இல்லை என்று தோன்றியது. என்ன என்று வரையறுக்க முடியவில்லை.. உள்ளுக்குள் ஒரு நெருடல். எதுவும் யோசிக்கவில்லை. விறுவிறு என்று வேக நடை போட்டு அந்த வீட்டுக் கேட்டை அடைந்தாள். யாரோ வீடு.. இது வரை அங்குச் சென்றதில்லை. சின்ன தயக்கம்.. தேங்கி நின்றாள். வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டப் பட்டிருந்தது. உள்ளே இருப்பது பாம்பா பழுதா? போகவா வேண்டாமா?

 



Advertisement

உள்ளே:

அந்த பெண் தின்பண்டங்களைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருந்தாள். சாக்லேட்டை கொறித்துக் கொண்டே தொலைக்காட்சியைச் சிறுமி கண்விரித்து ஆர்வமாய் பார்த்து நின்றிருக்க, அவன்.. அந்த 45 வயது மனிதன், சிறுமியின் பின்னிருந்து அவளை அணைத்தான். படக்கூடாத இடத்தில் அவன் கை செல்ல சிறுமி நெளிந்தாள்.

 

Advertisement

வெளியே:

Advertisement

துளசிக்கு இதயம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. மனம் அடித்துச் சொன்னது, ஏதோ சரி இல்லை என்று. கேட்டை திறந்து உள்ளே வந்தவள், கதவில் கை வைக்கவுமே தொலைக்காட்சி சத்தம் கேட்க நொடி நேரம் தாமதித்தாள். வீட்டில் மறுபுற சாளரம் வழி தான் சத்தம் வந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழி பார்க்கவுமே துளசி அதிர்ந்து போனாள். அது வீட்டின் நடுக் கூடம் இல்லை. படுக்கை அறை.

 

அவன் மனைவி என்றவளும் அங்கு தான் இருந்தாள். மனைவி என்ற ஒருத்தியே இப்படி எல்லாம் செய்வாளா? தெரியவில்லை. எந்த எந்த வேஷத்தில் காமுகர்கள்.

Advertisement

 

“ப்ளீஸ் என்னை தொடாதீங்க.. எனக்கு பிடிக்கல..” சிறுமி விலக முற்பட்ட.. அவன் விட்டான் இல்லை.

 

இன்னும் என்னவெல்லாம் இந்த உலகத்தில் பார்க்க வேண்டும்? இதற்கு மேல் துளசியால் நிற்கக் கூட முடியவில்லை.

 

துளசியின் கை, கால் நடுங்கினாலும், கோவம் உச்சத்தை அடைந்தது.

 

தன் முழு பலம் கொண்டும் கதவைத் தட்டினாள். தெருவிற்கே சத்தம் கேட்டிருக்கும். புல்லட் சத்தம் அவளை தாண்டி சென்றது கூட அவள் காதில் விழவில்லை. அப்படி ஒரு கோபம் அவளுக்குள்.

 

அந்த பெண் தான் வந்து கதவை திறந்தாள். அவளை வெளியே இழுத்து.. இழுத்த வேகத்திலேயே ஓங்கி அறைந்தும் விட்டாள் துளசி.

 

அவள் கதவை அறையும் சத்தம், வீட்டிற்கு வந்துகொண்டிருந்த மூர்த்தியின் கவனத்தை ஈர்க்க.. பின்னோடு வந்தவனுக்கு விஷயம் தெரியாதே.

 

நிறுத்தாமல் துளசியும் அடிக்க.. அவள் துளசியைக் கீழே தள்ள.. ஓடிவந்தவன், இடையோடு தாங்கி பிடித்து நிறுத்தினான்.

 

“நீங்க தள்ளுங்க.. இவள இங்கேயே அடிச்சு கொன்னா தான் எனக்கு அடங்கும்” திமிறிக்கொண்டு வந்தவளை அடக்கிக் கொண்டே..

 

“என்ன ஆச்சு…? ஏன் இவ்வளவு கோபம்?”

 

அடிவாங்கின பெரியவள் விழிக்க…. துளசிக்கு கோபம் அடங்கவில்லை.. மூச்சு வாங்கியது. திமிறிக்கொண்டு சென்று இன்னும் இரண்டு வைக்க.. உள்ளிருந்து சத்தம் கேட்டு வந்தவன் பின்னோடு வந்தாள் சிறுமி. அவள் பின் அந்த வீட்டின் முதியவர்.

 

பார்த்த மூர்த்திக்கு முதலில் ஒன்றும் தோன்றவில்லை. வீட்டின் உள்ளே வயதான பெண் ஒருத்தி.. வெளியே 40 வயது பெண்மணி.. அதனால் சிறுமி உள்ளிருந்து வந்தது இவனுக்கு எந்த வேண்டாத சந்தேகத்தையும் எழுப்பவில்லை.

 

“என்ன மா? ஏன் கோவம்?” – மூர்த்தி

 

“இவ இவ… அந்த பாமாவ கூட்டிட்டு வந்து அவ புருஷனுக்கு… அவனும் அவனும்…” என்று அவள் மூச்சு வாங்க… அவன் சிறுமியைத் தான் பார்த்தான்.

 

பாமாவால், மூர்த்தியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. ஏதோ வரக் கூடாத இடத்திற்கு ஒரு மிட்டாய்க்கும், தொலைக்காட்சிக்கும் வந்தது அவள்  தவறென்று நினைத்திருப்பாள் போல.. அவள் தலை உயர்த்தக் கூட இல்லை. சிறுமிக்கு இப்படி எல்லாம் ஆகும் என்று தெரியாதே.. இதைப்பற்றித் தெரியும் வயதா?  குடும்பமாக வாழும் இடத்தில் இதெல்லாம் சாத்தியமா? வெளியே வந்த சிறுமிக்கோ.. தவறு தன் மேல் என்ற எண்ணம். தெரியாதவர் வீட்டிற்குச் சென்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வு. இது தான்… இந்த குற்ற உணர்வைத் தான் பயன் படுத்தும் இந்த குள்ளநரி கூட்டம். எப்படியும் இங்கு நடந்ததைச் சிறுமி பயத்தில் வெளியே  சொல்ல மாட்டாள் என்ற தைரியம்.

 

வெளுத்ததெல்லாம் பாலும் அல்ல.. வயதானவன் எல்லாம் நல்லவனும் அல்ல! பாம்பு, புற்றில் மட்டும் இருப்பதில்லையே.. மனைவியே இப்படி எல்லாம் செய்வாளா என்பது தான் துளசியின் கேள்வி!

 

மூர்த்தி கையால் இடி போல் இறங்கிய இரண்டே அடியில் சுருண்டு போனான் அவன். இரண்டு அடி வாங்க லாயக்கில்லாத பதருக்கு எத்தனை தைரியம்?

 

இரண்டே நாளில் அந்த வீட்டின் முன் பூட்டுத் தொங்கியது. அவனோ அவன் மனைவியோ திருந்தி இருப்பார்கள் என்று மட்டும் தோன்றவில்லை!

 

பக்கத்து வீட்டில் விளையாடக் கூட இனி பிள்ளைகளை விட முடியாதா? என்ன உலகம் இது? என்ன இடம் இது? துளசிக்கு வெறுத்தே போனது.

 

“ஏன் மூர்த்தி சார் இப்படி?” வீட்டிற்குச் சென்றபின்னும் அவளால் இயல்புக்கு வரவே முடியவில்லை.

 

“தெரியல துளசி” என்றான். அவனுக்கு மட்டும் எப்படித் தெரியும்? இதெல்லாம் அவன் கேள்வி கூடப்படாத ஒன்று.

 

துளசியை விட மூர்த்தியை இது அதிகம் பாதித்தது. அருவருப்பின் உச்சத்தில் இருந்தான்.

 

“இந்த சிட்டி லைஃப் வேண்டாம் துளசி..” என்றான் தீர்மானமாய். இன்று வரையுமே, ஊருக்குச் சென்றால் சரிவருமா? என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்துகொண்டே இருந்தது. பட்டணத்து வாழ்க்கை முறைக்கு இருவருமே பழகியிருக்க.. ஒரு மாதம் ஊரில் தங்குவது வேறு.. அங்கேயே இடம் பெயர்வது சரிவருமா என்ற எண்ணத்தில் உழன்றவனுக்கு, இதை எல்லாம் பார்க்கும் சக்தி இல்லாமல் போகவே ஊரோடு போக முடிவெடுத்துவிட்டான்.

 

“என் பொண்ணு இங்க வளர வேண்டாம்..” என்றான், எதோ யோசனையில்.. யோசிக்காமல்.

 

அவன் யோசிக்காமல் கூறியதை அவள் யோசித்தாள்.

 

அவசர அவசரமாக படுக்கையறையில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டி முன் நின்றாள். முயன்று மாதவிடாய் நாளை நினைவில் கொண்டு வந்தாள்.

 

பேனா எடுத்து நாள் குறிக்க ஆரம்பித்தாள். கை நடுங்க ஆரம்பித்தது. கண் மூடி நாட்காட்டியில் நெற்றி முட்டி நின்றாள். எப்படி? நிஜம் தானா? முன் போல மீண்டும் நாள் தவறி வர ஆரம்பித்துவிட்டதா? வராது. இன்று தலை சுற்றியதே… குமட்டியதே..

 

‘மூர்த்தி சார்’ மனம் சத்தமில்லாமல் அவனைத் தான் அழைத்தது.

 

அவள் அழைப்பு அவனுக்குத் தேவையில்லை போலும். வந்துவிட்டான்.

 

“துளசி? விடு.. அந்த அசிங்கத்தை நினைக்காத. பாமாட்ட பேசு. வருத்தப்படாத..” தோள் பிடித்துத் திருப்ப.. கண் கலங்கி நின்றாள்.

 

“என்ன துளசி இது? பச்!”

 

சொல்ல வேண்டும்.. மனதை அழுத்துவதைச் சொல்லவேண்டும். இருந்தும் ஒரு பயம். கனவு கலைந்து போய்விடுமோ என்ற பயம்.

 

என்றும் மார்பைக் கட்டிக் கொள்பவள்.. கழுத்தைக் கட்டி, கால் மேல் நின்றுகொண்டாள்.

 

இடையோடு தூக்கிக்கொண்டான். கண்ணீர் தோளை நனைத்தது.

 

“ஷ்.. என்ன துளசி இது?”

 

மௌனமான கேவல்.

 

“துளசி மா..”

 

“வயிற நசுக்காதீங்க மூர்த்தி சார்..” தோள் வளைவிலிருந்து முகத்தை எடுத்தாளில்லை. குரலில் புதிதாய் ஒரு குழைவு.. நகைப்பு..

 

மூர்த்தியின் கண் முன், நாட்கள் அடிக்கப்பட்ட நாட்காட்டி. துளசியின் கையெழுத்தில், ‘8 வீக்ஸ்’ அவனைப் புரட்டிப் போட்டது.

பேச்சு வரவே இல்லை. கண்ணில் மெலிதான நீர்ப் படலம். ‘அப்பா’வா நான்?

 

உணர்ச்சி மிகுதியில் இருவருக்குமே பேச்சு வரவில்லை. எத்தனை வேண்டுதல்.. எவ்வளவு நாள் காத்திருப்பு? கிடைக்குமா? கிடைக்காதா? கிடைக்கும் என்றால்.. இன்னும் எத்தனை வருடம் காத்திருக்கவேண்டும்? உள்ளுக்குள் இருக்கும் ஏக்கமெல்லாம் உள்ளுக்குள்ளையே எத்தனை நாள் போட்டுப் புதைக்கவேண்டும்? கனவெல்லாம் கானல் நீராய் போய்விடக் கூடாதே என்ற வேண்டுதல்.. இன்று இறைவனை எட்டியே விட்டதா? உணர்வுகளின் ஒட்டு மொத்த தாக்கம்.

 

அமர்ந்தே இருந்தனர். என்றும் அவன் அமர்ந்திருக்க மடியில் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பாள். இன்று மூர்த்திக்கு அந்த அணைப்பு தேவைப் பட்டது போலும்.

 

மனைவி மடி சாய்ந்து இடையைச் சுற்றிக் கட்டிக் கொண்டான்.

 

அழகான கனவு உருவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. பொக்கை வாய் சிரிப்பும்.. அப்பா..அம்மா அழைப்பும்..அத்தனை உணர்ச்சியிலும் ஒரு அமைதியைக் கொடுத்தது.

 

குனிந்து, அவள் அன்பின் திருவுருவத்தின் முரட்டுக் கன்னத்தில் எச்சில் பட மென்மையான முத்திரை பதித்தாள்.

 

தோளோடு ஒரு கை அணைத்திருந்திருக்க, ஒரு கை மூர்த்தியின் கேசத்தை அளைந்து கொண்டே இருந்தது.

 

யார் கூறியது காதலுக்கு உருவம் இல்லை என்று?

அவர்கள் எழுதிய காதல் கவிதைக்கு இதயத்துடிப்பு வந்துவிட்டதே.. 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!