Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Aagaayam Theeyaagavae

ஆகாயம் தீயாகவே..! – 15

ஆகாயம் 15:

ஆதி, அதிகாலையில் கண்விழிக்க, அப்போதுதான் இரவில் நடந்த அனைத்தும் கண்முன்னே உலா போனது.

“எப்ப தூங்கினேன்..?” என்று தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டவன், அருகில் பார்க்க, அங்கே துவாரகி இல்லை.

“எங்க போனா..?” என்று சுற்றும் முற்றும் பார்க்க,



Advertisement

‘நான் இயர்லி மார்னிங் போய்டுவேன் என்று முந்தைய நாள் இரவு அவள் சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வந்தது அவனுக்கு.

“எதுக்காக நைட் வந்தா..? வந்த உடனே போக வேண்டிய அவசியம் என்ன..? மின்னல் மாதிரி அப்பப்ப வந்துட்டு போறாளே..? என்ன காரணமா இருக்கும்..?” என்று யோசிக்க, ஒன்றும் அவனுக்கு புலப்படவில்லை.

‘காலங்காத்தால இப்படி யோசிச்சுட்டு இருந்தா பொழப்பு கிழிஞ்சுடும்..’ என்று மனசாட்சி கடுப்புடன் சொல்ல,

Advertisement

‘அதுவும் உண்மைதான்..! பிளைட்டுக்கு டைம் ஆகிடும்..’ என்றவன், அடுத்து கிளம்புவதற்கு ஆயத்தமானான்.

Advertisement

என்னதான் துவாரகியை விடுத்து, அடுத்த செயலில் அவன் இறங்கினாலும், நேற்று இரவு அவள் வந்துவிட்டு சென்ற அவள் வாசம் அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது.

எந்த வேலை செய்தாலும், அவளின் முகமே முன்னால் வந்து சென்று கொண்டிருக்க,

“என்னைய சோதிக்கனும்ன்னே வந்து முகத்தைக் காட்டிட்டு போயிருப்பாளோ..?” என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.

Advertisement

“வேண்டாம் ஆதி..! உனக்கு நிறைய வேலை இருக்கு. அவளை நினைச்சு இப்படி உட்கார்ந்திருந்தா, அவ்வளவுதான்…” என்று நினைத்தபடி கிளம்பி வந்தான். கவின் அவனுக்கு முன்பாகவே கிளம்பி வந்திருக்க,

“என்ன கவின்..? நான் தான் உன்னை கூட வரவேண்டாம்ன்னு  சொன்னேன்ல..?” என்றான்.

“சார் நீங்க தனியா போக வேண்டாம்ன்னு மேடம் தான் எனக்கு கால் பண்ணி வர சொன்னாங்க சார்..?” என்றான் கவின்.

“எந்த மேடம்..?” என்றான் புரியாமல்.

“துவாரகி மேடம் தான் சார்..” என்றான் கவின்.

“துவாரகியா..? அவ எப்போ உனக்குக் கால் பண்ணா..?” என்றான்.

“சார் நைட்டே சொல்லிட்டாங்க. அதான் கிளம்பி வந்தேன்..” என்றான் கவின்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் தான் உனக்கு என்ன செய்யணும்னு சொல்லியிருக்கேன்ல. அதை மட்டும் செஞ்சா போதும்..” என்றான்.

“ஓகே சார்..!” என்றான்.

“சம்பத் இன்னைக்கு வர்றதா சொல்லியிருந்தானே..? வந்துட்டானா..?” என்றான் ஆதி.

“அவர் ஒன்னும் சொல்லலை சார். அவரை மீட் பண்ணிட்டு போனா, உங்களுக்கு பிளைட்க்கு டைம் ஆகிடும் சார்..” என்றான் கவின்.

“எஸ்..! அதுவும் உண்மை தான். நான் போன்ல காண்டாக்ட் பண்ணிக்கிறேன். நான் சொன்னதெல்லாம் நியாபகத்துல இருக்கட்டும் கவின். எந்த வேலையும் மிஸ்ஸாக கூடாது..” என்றான் ஆதி.

“ஷ்யர் சார்..” என்றான் கவின்.

கருணைநாதன் வீட்டில்…

“எங்கம்மா போயிட்டு வர..?” என்ற கருணைநாதனின் குரலில் அப்படியே நின்றாள் துவாரகி.

உண்மையை சொல்ல வாயெடுத்தவளுக்கு, ஏதோ ஒன்று உள்ளுக்குள் இடற,

“முக்கியமான கேஸ்ப்பா. அதான் நைட் ஹாஸ்பிட்டல்லையே தங்கிட்டேன்..” என்றாள். அது வழக்கம் தான் என்பதால் கருணை நாதனும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

ஆனால், அருணாவிற்கு சந்தேகமாய் இருந்தது.

“நில்லு துவாரகி..? நிஜமா நீ ஹாஸ்பிட்டலுக்கு தான் போனியா..?” என்றார்.

“இல்லை.. என் புருஷன் வீட்டுக்குத் தான் போயிருந்தேன்..” என்றாள் துவாரகி.

“அதை அப்பகிட்ட சொல்ல வேண்டியது தான..? எதுக்காக பொய் சொல்ற..?” என்றார் அருணா.

“நான் காரணமில்லாம எதையும் செய்யவும் மாட்டேன், சொல்லவும் மாட்டேன்..” என்றவள், அவரைக் கடந்து உள்ளே செல்ல, அது சசிதரனின் காதில் விழுந்து வைத்தது.

நேராக தந்தையிடம் வந்தவன்,

“துவாரகி நடவடிக்கை ஒன்னும் சரியில்லைப்பா..! எதுக்கும் அவமேல ஒரு கண்ணு இருக்கட்டும்..” என்றான்.

“என்ன சசி? திடீர்ன்னு..?” என்றார் கருணைநாதன்.

“அவ, அந்த ஆதிப்பய வீட்டுக்குப் போயிட்டு வந்திருக்காப்பா..” என்றான் சசி.

“இல்லையே..? முக்கியமான கேஸ், ஹாஸ்ப்பிட்டல்ல இருந்தேன்னு தான் சொன்னா..?” என்றார் யோசனையுடன்.

“இப்போதான் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தா..” என்றான்.

சசி சொன்னதைக் கேட்ட கருனைனாதனின் முகம் மாறியது. துவாரகி அவரிடம் பொய் சொன்னதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

ஏற்கனவே இருக்கும் நிலைமைகள் மோசமாக இருக்க, இப்போது துவாரகி அவனுடன் பிணைப்பாய் இருப்பது வெளியே தெரிந்தால், அது ஆதித்ய வர்மாவுக்கு சாதகமாக அமையக் கூடும் என்று நினைத்தார் கருணைநாதன்.

அதே நேரத்தில், அங்கே திவ்யாவும், கனகவேலுவும் வேறு திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

“எல்லாமே இப்படி கடைசி நேரத்துல சொதப்பிடுச்சேன்னு நினைக்கிறப்போ தான் எரிச்சலா இருக்கு டாடி..” என்றாள் திவ்யா.

“நானும் இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்க்கவே இல்லை திவ்யா..” என்றவரின் முகத்திலும் யோசனை தான்.

“விஷயம் தெரியுமாப்பா..? அந்த ஆதித்ய வர்மா ஒன்னும் உங்க தலைவருக்கு  பூச்சாண்டி காட்டவெல்லாம் கட்சி ஆரம்பிக்கலை. அவன் மூளைக்காரன், எதை எப்படி செய்யனும்ன்னு தெளிவா யோசிச்சு வச்சிருக்கான். வெளிய தெரியாம அவன் நிறைய வேலை செய்றதா தகவல் வருது. எதிர்க்கட்சி தலைவர் சக்ரபாணி கூட்டணிக்கு கூப்பிட்டும் மாட்டேன்னு சொல்லியிருக்கான்னு சொன்னா, அவனுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கணும். அந்த அளவுக்கு அவன் வேலை செஞ்சிருக்கணும்..” என்றாள் திவ்யா.

“கூட்டணிக்கு கூப்பிட்டும் மாட்டேன்னு சொல்லிட்டானா..? என்னம்மா சொல்ற..? பெரிய கட்சி நாங்களே கூட்டணிக்கு சரின்னு சொல்லியிருக்கோம். இவன் இப்ப தான் கட்சி ஆரம்பிச்சிருக்கான். இப்பவே முடியாதுன்னு சொன்னா, அவன் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்ட்டம் திவ்யா. அதனால நாம பயப்படாம இருக்கலாம்..” என்றார் கனகவேல்.

“நீங்க யோசிக்கிறது ரொம்ப தப்புப்பா. அவன் ரசிகர் ஒட்டுலையே பாதி கிணறு தாண்டுவான்.அவனோட வியூகம் சரியா இருந்தா முக்கால் கிணறு தாண்டிடுவான். அதுக்குமேல என்ன வேணும்ன்னு எதிர்பார்க்குறிங்க..?” என்றாள் திவ்யா.

“நீ என்னம்மா சொல்ற..?இத்தனை வருஷம் அரசியல் அனுபவம் இருக்குற நானே தனி கட்சி ஆரம்பிக்க யோசிச்சுட்டு இருக்கேன். அவன் அவசர அவசரமா வந்து அதே வேகத்துல ஜெயிக்கிறது முடியாத காரியம்..” என்றார்.

“அங்க தான் நீந்த தப்பு பண்றிங்க டாடி. நீங்க அரசியலுக்கு வந்து தான் பேமஸ் ஆனிங்க. ஆனா அவன், பேமஸ் ஆகிட்டு தான் அரசியலுக்கே வரான். இரண்டுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. ” என்றாள்.

“இப்போ நாம என்னதான் செய்யறது திவ்யா..?” என்றார்.

“இப்போதைக்கு ஒன்னும் செய்ய வேண்டாம் டாடி. நீங்க கருணைநாதன் அங்கிள் கூடவே இருங்க. ஆனா, ஆதித்ய வர்மா பக்கம் போக வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தா, கண்டிப்பா நீங்க அவன் பக்கம் போய்த் தான் ஆகணும்.” என்றாள்.

“வாய்ப்பே இல்லை திவ்யா. அவன் சின்ன பையன், அவன்கிட்ட நான் போய் நிக்கிறதா..? இதெல்லாம் நடக்கவே நடக்காது. என்னோட அரசியல் வாழ்க்கைக்கு முடிவே வந்தாலும், நான் அவன் பக்கம் போக மாட்டேன்..” என்றார் கனகவேல்.

“நீங்க எமோஷனலா பேசுறிங்கப்பா. நாம எதையும் தீர்மானம் பண்ண முடியாது. அரசியல்ல ஒன்னு மட்டும் காலம் தான் தீர்மானம் பண்ணும்..” என்ற திவ்யாவின் மனதிற்குள் என்ன யோசனை இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

 

ஆதி ஷூட்டிங் கிளம்பி சென்று மூன்று நாட்கள் ஆகியிருந்தது. ஏனோ துவாரகிக்கு இப்போது அவனுடைய நினைவு அதிகமாக வருவதைப் போன்று இருந்தது. கருணைநாதன் அவருடைய முடிவை கொஞ்சம் கூட மாற்றிக் கொள்ளவில்லை. துவாரகியை நிறுத்துவது தான் அவருடைய இறுதி முடிவாய் இருக்க, அவளும் குழம்பித்தான் போனாள்.

அவள் காரில் ஹாஸ்பிட்டல் சென்று கொண்டிருக்க, சம்பத்தும் உடன் இருந்தான்.

“உன்னோட முடிவு என்ன துவாரகி..?” என்றான்.

“எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை சம்பத். ரெண்டு பக்கமும் எனக்குத் தான் இடி..” என்றாள் துவாரகி.

“எனக்கும் அது தான் புரியலை துவா. உங்கப்பா இப்படி ஒரு முடிவை எடுப்பாருன்னு நானும் நினைக்கவேயில்லை..” என்றான் சம்பத்.

“ஆதி பேசினாரா சம்பத்..?” என்ற துவாரகியின் குரலில் இருந்த எதிர்பார்ப்பு சம்பத்தை என்னவோ செய்தது.

“நான் வரும் போது அவன் இல்லை துவா. ஷூட்டிங் கிளம்பிப் போயிட்டான். ஆனா, செய்ய வேண்டிய எல்லா வேலையையும் பக்காவா செஞ்சுட்டு தான் போயிருக்கான். அவன்கிட்ட இருந்து இப்படி ஒரு ரிசல்ட்டை நான் எதிர்பார்க்கவேயில்லை..” என்றான் சம்பத்.

“எஸ் சம்பத். நானும் எதிர்பார்க்கலை. நாம எவ்வளவு முட்டாளா இருந்திருக்கோம், ஆதியைப் பத்தி குறைவா எடைபோட்டது நம்மளோட தப்புத்தான்..” என்றாள்.

“நீயாவது பரவாயில்லை துவா. நானெல்லாம் அவனுக்கு நண்பனா இருந்தும், அவனை குறைச்சு எடை போட்டுட்டேன். அதை நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு..” என்றான் சம்பத்.

“இதைப் பார்க்க விக்ரம் உயிரோட இல்லையே சம்பத்..?” என்ற துவாரகியின் கண்களில் விக்ரமின் முகமும்,  அவனுடனான நாட்களும் நினைவில் வந்து போனது.

நினைவில்…

“மேடம் உங்களுக்கு உங்கப்பா ஹாஸ்பிட்டலே கட்டிக் குடுத்துட்டார். அப்பறம் என்ன கவலை உனக்கு..?” என்று அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

“வேண்டாம் விக்ரம்…! நானா கேட்டேன். அவரா பிடிவாதமா கட்டிக் குடுத்தா, அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?” என்றாள் துவாரகி.

“சிஎம் பொண்ணு வெளி ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தா அவருக்கு கௌரவ குறைச்சல்ன்னு நினைச்சிருப்பார்..” என்றான் விக்ரம்.

“எனக்கும் வெளிய வேலை பார்க்கனும்ன்னு தான் ஆசை. ட்ரெயினிங் பீரியட்ல நல்ல டாக்டர் நமக்குக் கிடைக்கனுமேன்னு நானே கவலைப் பட்டுட்டு இருக்கேன்..” என்றாள்.

“உன்னோட ஹாஸ்ப்பிட்டல  அறிவிப்பு மட்டும் குடு. ஆயிரம் பேர் வருவாங்க..” என்றான் விக்ரம்.

“அவங்க எல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு பார்கவி ஆன்ட்டி வந்தா நல்லாயிருக்கும்ன்னு தோணுது. பிளீஸ்டா, நீ ஆன்ட்டிகிட்ட பேசேன்..” என்றாள் துவா.

“என்ன விளையாடுறியா துவா..? நான் ஏதோ பழகுன தோஷத்துக்காக வேலைக்கு வர சம்மதம் சொன்னேன். எங்கம்மா கண்டிப்பா மாட்டாங்க. அதுலயும் எங்கண்ணன் ஆதி, கண்டிப்பா விட மாட்டான்..” என்றான் விக்ரம்.

“உங்க அண்ணன் என்ன பெரிய இவனா..? உன்னோட திறமைக்கு, பின்னாடி பெஸ்ட் ஹார்ட் சர்ஜனா வருவ விக்ரம். ஆனா, உங்கண்ணன் உன்னையும் சினி பீல்டுக்குள்ள இழுத்து விட்டிருக்கார். இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். மாசத்துல பாதி நாள் ஷூட்டிங் போயிடுற..?” என்று துவாரகி ஆதியை கடுப்புடன் பேசினாள்.

“இப்போ அண்ணனை எதுக்கு குறை சொல்ற துவா. ஆக்ட்டிங் பண்ணட்டுமான்னு நான் தான் அண்ணாகிட்ட கேட்டேன். அப்போ கூட அவர் நீ சொன்ன மாதிரி தான் சொன்னார். நான் தான் பிடிவாதம் பிடிச்சு நடிக்க போனேன். இப்போ அதனால என்ன கெட்டுப் போய்டுச்சு..? என்னோட பிரபஷனையும் விடலை, என்னோட ஆசையையும் விடலை. ரெண்டையும் நான் ஈகுவலா மெயின்டெயின் பண்றேன்..” என்றான் விக்ரம்.

“டேய் லூசாடா நீ. ஆக்ட்டிங்கும் நம்ம ப்ரோபஷனும் ஒண்ணா..? பெரிய சினி பீல்ட். கழுதை கெட்டா குட்டி சுவர்ன்ற மாதிரி, ஆனா ஊன்னா எல்லாரும் அங்கேயே போறீங்க..? படிக்க பயந்தவங்க தான் அந்த பீல்ட் போவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்..” என்றாள் எகத்தாளமாய்.

“என் அண்ணன் ஆதி அந்த கேட்டகிரி கிடையாது தெரியும்ல்ல. லா காலேஜ்ல

அவன் தான் பெஸ்ட் ஸ்டூடன்ட். சினி பீல்டுக்கு வராம இருந்திருந்தாலும், அவன் இந்நேரம் வேற லெவல்ல தான் இருந்திருப்பான்..” என்றான் விக்ரம்.

“டேய்.. போதும்டா உன் அண்ணன் புராணம்..கேட்டுக் கேட்டு காதுல ரத்தமே வருது..” என்று துவாரகி சொல்லி சிரிக்க,

“இப்படி சொல்ற நீதான், அவனோட எந்த படம் ரிலீஸ் ஆனாலும், முதல் ஷோவுல, ஜொள்ளு வடிய அவனைப் பார்த்துகிட்டு இருக்குற..?” என்றான் விக்ரம் சிரிப்பை அடக்கியபடி.

அவனின் தோளில் கையைப் போட்ட துவாரகி,

“மச்சி, அது வேறு. இது வேறு. உண்மையை இப்படி பப்ளிக்காவெல்லாம் சொல்லக் கூடாது. சரியா..?” என்றாள் துவா.

“எங்க அண்ணன் ஆதிக்கு, உன்னை யாருன்னே தெரியலை. ஆனா, மேடம் நீங்க அவனை விழுந்து விழுந்து சைட் அடிக்கிறிங்க..?” என்றான் நக்கலாய்.

“ஏதோ உங்கண்ணன் பார்க்க நல்லாயிருக்கானேன்னு பார்த்தா, ரொம்ப ஓவரா பேசாதடா. உங்கண்ணன் பெரிய இவன். அவனுக்கு என்னை யாருன்னே தெரியாதாமா..? நான் சிஎம் பொண்ணுடா..” என்றாள் துவாரகி கெத்தாக.

‘நான் சிஎம் பொண்ணுடா..’ டைட்டில் நல்லா இருக்கு துவா. அடுத்த படத்துல வைக்க சொல்லி அண்ணன் கிட்ட சொல்றேன்.. என்று விக்ரம் சொல்ல, அவனை கொலைவெறியுடன் பார்த்தாள் துவாரகி.

“நீ எல்லாம் எனக்கு நண்பனாடா. உன்னோட அண்ணன் பெரிய ஹீரோ, ஒரு தடவையாவது என்னை நேர்ல கூட்டிட்டு போயிருக்கியா..?” என்றாள்.

“நான் என்ன பண்ண..? மேடம் நீங்க தான் பிசி. அப்படியே நீங்க ப்ரீன்னாலும், அவன் ஷூட்டிங் போய்டுறான். அதான் சம்பத்தை பார்த்தல்ல. அப்பறம் என்ன..?” என்றான் விக்ரம்.

“சம்பத், நீ எல்லாம் பட்டிங் ஹீரோஸ்டா. ஆனா, என்னோட ஹீரோ,த பேமஸ் ஹீரோ ஆதித்ய வர்மாடா..” என்றாள், ஏதோ ஆதியே அவள் கண் முன் நிற்பதை போன்ற கற்பனை அவளுக்கு.

“ஓவர் இமேஜின் உடம்புக்கு ஆகாது..” என்றான் விக்ரம்.

“நீ அடங்கு. அதையெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்..” என்றவள்,

“ஆமா, நான் சொன்னது என்னாச்சு..? பார்கவி ஆன்ட்டிகிட்ட பேசுடா..” என்றாள்.

“கண்டிப்பா பேசுறேன் துவா. அம்மா, நான் சொன்னா ஓகே தான் சொல்லுவாங்க. ஆனா, அண்ணா என்ன சொல்றான்னு தான் தெரியலை..” என்றான் விக்ரம்.

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க..” என்றாள்.

“உனக்கு விஷயம் புரியலை துவா. அம்மா விருப்பப்பட்டா அவனே ஒரு ஹாஸ்பிட்டல் கட்டிக் குடுத்துடுவான். அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு தான் அவன் அதை செய்யலை. அதுமட்டுமில்லாம, அவனுக்கும்,உங்கப்பாவுக்கும் ஏற்கனவே ஆகாது. அதனால அவன் ஓகே சொல்ல வாய்ப்பில்லை தான்..” என்றான்.

“எங்க அப்பாவுக்கும், உங்க அண்ணனுக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகறாராடா.? எங்கப்பா பதவியில இருக்குற கெத்தைக் காட்டுறார். உங்கண்ணன் பெரிய ஹீரோன்ற கெத்தைக் காட்டுறார். இதுல நாம இடையில என்ன பண்ணோம். அவங்க பிரச்சனையை நம்ம தலையில ஏத்திக்க வேண்டாம் ஓகே. எனக்கு பார்கவி ஆன்ட்டி ஹெல்ப் ரொம்ப தேவை. பிளீஸ்டா..” என்றாள்.

“ஓகே..!ட்ரை மை லெவல் பெஸ்ட்..” என்றான் விக்ரம்.

விக்ரமும், துவாரகியும் ஒரே வயதினர். சிறந்த நண்பர்களுக்கு இலக்கணம்,உதாரணம் கேட்டால் இவர்களை கைகாட்டும் அளவிற்கு நல்ல நட்பு இருந்தது இருவருக்குள்ளும்.

துவாரகி இரண்டு மூன்று முறை விக்ரம் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். விக்ரமும்  துவாரகியின் வீட்டிற்கு சென்றிருக்கிறான். ஆனால் இரண்டு குடும்பமும் பின்னி பிணையும் அளவிற்கு நெருக்கம் கிடையாது. சொல்லப் போனால் பகை தான் கூடிக் கொண்டிருந்தது.

ஒரு நடிகனாக, ஆதித்ய வர்மாவின்  படங்களின் கருத்துக்கள் அனைத்தும், ஆளும்கட்சியான கருணைநாதனுக்கு எதிராகவே இருந்தது தான் முதல் காரணம். அவனை நேரில் அழைத்துப் பேசிய பிறகும், அவன் கேட்காமல் மீண்டும் மீண்டும் அதே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்க, அதனால் கருணைநாதனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் ஏராளம்.

மற்றவர்களை அடக்கி வைத்திருந்த கருணைநாதனுக்கு ஏனோ ஆதித்ய வர்மாவை மட்டும் அடக்க முடியவில்லை. அவர் தரும் குடைச்சல்கள் அனைத்தையும் அவன் தாண்டி வரவர, அவனுடைய  மார்க்கெட்டும் எகிறிக் கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் இதையெல்லாம் உணராமல் இருந்த விக்ரமுக்கு, அவன் படம் நடிக்க தொடங்கியவுடன், ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது. இதற்காகத் தான் ஆதி, அவனை வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே தடுத்தான். ஆனால் விக்ரம் கேட்கவில்லை. அவன் நடித்த முதல் படமே அவனுக்கு ஓரளவிற்கு வெற்றிப் படமாய் அமைய, சினிமா உலகத்தில் ஒரு வெற்றியை ருசித்தவனுக்கு, தொடர்ந்து அதை ருசிக்க ஆசை வந்துவிட்டது. அதனால் அண்ணனைப் போல் தானும் பெரிய நடிகனாக வேண்டும் என்று விக்ரமும் களத்தில் இறங்கிவிட்டான்.

“என்னடா..? ரெண்டு பேரையும் நீங்க ஆசைப் பட்டதைத்தான் படிக்க வச்சேன். இப்ப என்னடான்னா..? சினிமாவுல போய் நிக்குறிங்க..?” என்று பார்கவி தான் அவ்வப் பொழுது குறைபட்டுக் கொள்வார்.

எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது, விவசாயத்தை மையமாய் வைத்து, ஆதித்ய வர்மா நடித்த படம் வெளியாகும் வரை.

அதற்கு பிறகு தான் ஒவ்வொரு பிரச்சனையாய் ஆரம்பித்தது.

விக்ரமின் நினைவில் இருந்த துவாரகிக்கு விழியோரம் நீர் கசிய,

“விக்ரம் நியாபகமா..?” என்றான் சம்பத் சரியாக.

“ஆமா..!” என்பதைப் போல், துவாரகி தலையை ஆட்ட, சம்பத்திற்கும் சொல்ல முடியாத ஒரு உணர்வு, சோகம் அவன் நெஞ்சை அழுத்திப் பிடித்தது.

எப்போதும், துருதுருவென்று இருக்கும் விக்ரம் இப்போது அவர்களுடன் இல்லை. துவாரகிக்கு தன்னில் பாதியை இழந்துவிட்ட உணர்வு. காதலனையும், காதலியையும் இழந்தவர்கள் தான் உக்கி உருகுவார்கள் என்று யார் சொன்னது..? எல்லாமுமாய் இருந்த ஒற்றை நட்பு இப்போது இல்லையென்ற வலியே, துவாரகிக்கு காலம் முழுவதும் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கும். அதற்கு காரணமானவர்களின் அருகிலேயே இருந்தும் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் தன்னுடைய இயலாமையை எண்ணி, அவள் வருந்தாத நாட்களே கிடையாது என்பது தான் உண்மை.

இப்போது அவன் இருந்திருந்தால், சிறந்த நடிகனாக மட்டுமல்ல,மிகச்சிறந்த மருத்துவனாகவும்  இருந்திருப்பான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

“நடந்து முடிஞ்சதைப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை துவாரகி. நடக்கப் போறதுக்கு என்ன வழின்னு மட்டும் யோசி..” என்றான் சம்பத்.

“அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை சம்பத். அப்பா மனசுல என்ன பிளான் இருக்குன்னே என்னால கண்டு பிடிக்க முடியலை. எதுக்காக என்னை எலக்சன்ல நிருத்துறாருன்னும் எனக்குப் புரியலை..” என்றாள் துவாரகி.

“உங்கப்பா என்ன சாதாரண அரசியல்வாதியா..? இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்காரோ..? ஆனா ஒன்னு, இதுக்குப் பின்னாடி பெரிய பிளான் இருக்குன்னு மட்டும் புரியுது. எதுக்கும் நீ பத்திரமா இரு துவாரகி..” என்றான் சம்பத்.

“ஆயிரம் தான் இருந்தாலும், நான் அவருக்கு பொண்ணு சம்பத். அதுலயும் அதிர்ஷ்ட்டகார பொண்ணு. என்னைய அவர் ஒன்னும் செய்ய மாட்டார். நீ கவலைப் படாத..?” என்றாள் துவாரகி.

“அப்படி சொல்ல முடியாது துவா. அவரும் எத்தனையோ வழியில ஆதி கூட மோதிப் பார்த்துட்டார். எதுவுமே முடியாம,கடைசியா அவர் கையில் எடுத்திருக்க ஆயுதம் நீதான்…” என்றான் சம்பத்.

“எனக்கும் புரியுது சம்பத். இது ஆதிக்கும், கருணைநாதனுக்கும் நேரா நடக்குற போட்டிதான்னாலும், எனக்கும் எங்கப்பாவுக்கும் மறைமுகமா நடக்குற போட்டி. கண்டிப்பா நான் இதுல ஜெயிப்பேன். அவருக்கு மகளா இருந்து, இதைக் கூட செய்யலைன்னா எப்படி..?” என்றாள் துவாரகி.

“அப்போ, நான் கிளம்புறேன் துவா..” என்று சம்பத் சொல்ல, காரை நிறுத்தினாள்.

“இன்னையிலிருந்து ஸ்டார்ட் பண்ணிடுவோமா..?” என்றாள்.

“கண்டிப்பா..” என்று அவளுக்கு கை உயர்த்திக் காட்டியவன், புன்னகையுடன் விடைபெற்றான்.

வியூகங்களை வகுத்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கும் ஆதித்ய வர்மா…

களம் மாறுவோமா? வேண்டாமா? என்ற சிந்தனையில் கனகவேல்…

மறைமுக ஆட்டத்தை அதிரடியாய் ஆட, தயாராய் இருக்கும் துவாரகி…

செய்த பாவங்கள் எல்லாம், பலமுனைத் தாக்குதலாய் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை அறியாமல், தன்னுடைய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் கருணைநாதன்…

உள்ளே வெளியே ஆட்டத்தில்… உள்ளிருப்பவர் யார்..?

வெளியே செல்பவர் யார்..?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!