Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-20

அத்தியாயம்-20

ராஜா ஊருக்கு சென்று ஒரு வாரம் கடந்திருந்தது..
மது இங்கு சோர்வாகவே காணப்பட்டாள்.. அன்று தான் அகல் வந்திருந்தாள்..மரகதம் வர சொல்லி தொலைபேசியில் கூறியிருந்தார்..

அவளிடம்,
“உன்ற அண்ணி சாப்பிடவே மாட்டேங்குறா.. அவளை சாப்பிட வை.. நான் சொன்னா சாப்பிடுறேன்னு சொல்லிட்டு, அப்புறம் இப்படியே பண்ணுறா..”

அகல் புன்னகைத்து கொண்டாள்..



Advertisement

‘தலைவனை பிரிந்த ஏக்கத்தில், தலைவிக்கு உணவு உள்ளே சொல்லவில்லையா??’

அவளுக்கு ஜூஸ் கொண்டு சென்றாள் அகல்..
கூடத்தில் அமர்ந்திருந்தாள் மது..

“அண்ணி..”

Advertisement

ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவள், இவள் அழைப்பில் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்..

Advertisement

“வா அகல்..உன் மாமியாருக்கு பரவால்லையா??”

“கொஞ்சம் பரவால்ல அண்ணி..ஸ்டிக் வச்சு நிக்குறாங்க, கொஞ்ச நேரம்..”

“ஓ..சரி ஆகிடும்..”

Advertisement

“ஹ்ம்ம்..என்ன அண்ணி, ஒழுங்கா சாப்பிடவே மாட்டேங்குறியா??அம்மாக்கு ஒரே வருத்தம்..”

“அதெல்லாம் இல்ல அகல்..”

“அண்ணா இல்லைன்னு வருத்தமா??சீக்கிரம் வந்துடும் அண்ணி..ஆனா, இதை நீ பழகிக்க தான் வேணும்..அண்ணா எப்போவும் இப்படி தான், எங்கேயாவது போய்கிட்டே இருக்கும்..”

சோகையாய் புன்னகைத்தாள்..

“நீ தான், இனி பிடிச்சு வைக்கணும்..
சரி இந்தா, இதை குடி..”

அவள் கையில் இருந்த ஜூஸ்சை கொடுத்தாள்..

அதை வாங்கி, வாய் அருகே கொண்டு போன மது, அதன் வாசத்தில் அதை நன்றாக முகர்ந்து பார்த்தாள்..

“இ..இது என்ன ஜூஸ் அகல்??”

“அன்னாச்சி பழம் அண்ணி..நம்ம தோட்டத்துல வந்த பழம்.. நல்லா இனிப்பா இருக்கும்..குடிச்சு பாரேன்..”

“இல்ல அகல் வேண்டாம்..”

“ஏன் அண்ணி??உனக்கு பிடிக்குமே..ஒரு தடவை சொன்னியே..”

“இல்ல அகல்..இப்போ வேண்டாம்..இப்போ தான் சாப்பிட்டேன்..நீ குடி..”

“நீ, சரியாய் சாப்பிடலைன்னு அம்மா சொல்லுது..நீ  நெறய சாப்பிட்டது மாதிரி சொல்லுற..போ அண்ணி..”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது போன் வந்தது..

மரகதம் சென்று எடுத்தார்,

“ஹலோ…”

“…”

“ராசாவா.. எப்படி லே இருக்க??ஒழுங்கா சாப்பிடுறியா??இடம் எல்லாம் வசதியா இருக்கா??”

“…”

“ஹ்ம்ம்..எல்லாரும் நல்லா இருக்கோம்..அகல் வந்துருக்கா, பேசுறியா??”

அகலிடம் போனை கொடுத்தார்..

அண்ணனிடம் பேசியவள்,
“அண்ணா,எப்படி இருக்க??நீ இல்லாம ஒரு ஆளுக்கு, சாப்பாடே உள்ள இறங்கலை..”
மெல்லிய குரலில் கூறினாள்..

மரகதம் அருகில் இருந்ததால், தொலைபேசியை மதுவிடம் கொடுக்க முடியவில்லை அவளால்..

அவனும், மதுவின் நலம் மட்டும் விசாரித்து விட்டு வைத்து விட்டான்..

ஆர்வமாய் பார்த்த மதுவிடம்,
“அண்ணா நல்லா இருக்கு அண்ணி..உன்னை, ஒழுங்கா சாப்பிட சொன்னுச்சு..”

சிறிது நேரம் பேசி விட்டு, அவள் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்..

ராஜாவுக்கு, அங்க போன வேலை இழுத்துக் கொண்டே சென்றது..அங்கு உள்ள மக்களின் அறியாமை, விவசாயத்தில் பல முறைகளை விளக்க வேண்டி இருந்தது..

நன்மை செய்யும் பூச்சிகளான குளவி,தேனீ, சிலந்தி, தட்டான்,பட்டாம்பூச்சி, கட்டெறும்பு,ஓணான், எட்டுகால் பூச்சிகள் பற்றி கூறினான்..இரட்டை வால் குருவி போன்ற பறவைகள் செய்யும் நன்மைகள்..மண்புழுக்கள் பெருக செய்ய வேண்டியது..அவை செய்யும் நன்மைகள்..

அவை எப்படி விவசாயத்துக்கு, என்ன நன்மைகள் செய்கிறது..நாம் ரசாயன உரம் பயன்படுத்துவதால், அது எப்படி பாதிக்க படுகிறது என்பதை பற்றி விளக்கி கூறினான்..

இயற்கை முறையில் பயிர் வளர்வதற்கு தேவையான அமிர்த கரைசல், பஞ்ச கவ்வியம்,மீனமிலம்,ஜீவ அமிர்தம்,ஈயம் திரவம்  போன்றவை தயாரிக்கும் முறைகள்..

தீமை செய்யும் பூச்சிகளை அழிக்க இயற்கை முறையில் செய்ய வேண்டிய முறைகள்..

இயற்கை உரங்களான சாண கழிவு,துவரை கழிவு,வைக்கல் கழிவு போன்றவற்றை சரியான படி பயன்படுத்துவது பற்றி, அவர்களுக்கு புரியும் படி விளக்கி கூறினான்..

அவர்கள் எல்லாம் அதில், ஓரளவு தெளிவு பெற்ற பின் தான், அவனால் அங்கிருந்து கிளம்ப முடிந்தது..அதற்கு அவன் கூறிவிட்டு சென்ற நாட்களை விட ,அதிக நாட்கள் ஆகி இருந்தது..
முழுதாக ஒரு மாதம் கடந்த நிலையில் தான், அவனால் திரும்ப முடிந்தது..

வீட்டிற்கும் அடிக்கடி  பேச முடியவில்லை..இரண்டு மூன்று முறை பேசினான்..

டவர் கிடைக்கும் இடமும், இவன் தங்கி இருக்கும் இடமும் அதிக தொலைவு இருந்ததாலும், வேலைகள் அவனை இழுத்துக் கொண்டதாலும், அவனால் அடிக்கடி அழைக்க முடியவில்லை..கிளம்பும் முன், சுருக்கமாய் அன்னையிடம் பேசி விட்டு வைத்தான்..அதற்கே, சிக்னல் அதிகம் கிடைக்கவில்லை..

அவன் சென்று பத்து நாட்கள் கழித்து..
கூடத்தில் அமர்ந்திருந்த மரகதத்தின் அருகில் வந்து அமர்ந்த மது,
அவர் மடியில் தலை சாய்ந்தாள்..

“என்ன கண்ணு??”

அவள் தலையை கோதிய படி கேட்டார்..

“அடுத்த வாரம் என்னை, சென்னை வர சொல்லி அப்பா சொல்லிட்டாங்க அத்தை..”
மென் குரலில் கூறினாள்..

“என்ன கண்ணு திடீருன்னு..??”

“தெரில அத்தை.. வர சொல்லிட்டாங்க..”
கூறியவள் கண்களில் கண்ணீர்..

“என்ன கண்ணு, சின்ன பிள்ளை மாதிரி அழுதுட்டு..எப்போ வரணுமுன்னு தோணுதோ, உடனே வா.. இது உன்ற வீடு மாதிரி..இதுக்கு போய் அழுதுட்டு..”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ,மரகதத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது..

“ஹெல்லோ..”

“நான் தான் மா மரகதம், சேகர் பேசுறேன்..”

“சொல்லு ண்ணா..எப்போ வெளிநாட்டுல இருந்து வந்த??”

“நாலு நாள் ஆச்சு மா.அப்புறம், எல்லோரும் நல்லா இருக்கீங்களா??”

“நல்லா இருக்கோம் ண்ணா.. சொல்லு ண்ணா..”

“அடுத்த வாரம் கார் அனுப்பி வைக்குறேன்..மதுவை அனுப்பி விடு..”

“இப்போ தான் பிள்ளை சொல்லுச்சு..கொஞ்ச நாள் இருக்கட்டுமே ண்ணா..”

“எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல மா..உன் அண்ணி பத்தி தான் தெரியுமே..இவ்ளோ நாள் விட்டதே பெருசு..இப்போ, உடனே பார்க்கணுமுன்னு சொல்லுறா..

மறுபடி அனுப்புறேன்..அவளை இத்தனை நாள் பத்திரமா பார்த்துகிட்டதுக்கு, நாங்க உனக்கு நன்றி சொல்லணும்..”

“என்ன ண்ணா பிரிச்சு பேசுற..அது நம்ம வீட்டு புள்ள..இதுக்கு நன்றி எதுக்கு.??”

“தெரியும் மரகதம், உன்னை பத்தி..இருந்தாலும், என்னை பொறுத்த வரை, இது பெரிய உதவி.மது இருக்காளா??”

“இதோ இருக்கு ண்ணா. கொடுக்குறேன்..”

“மது..”

“சொல்லுங்க ப்பா..”

“அந்த கரிகாலனை பிடிச்சு, உள்ள போட்டாச்சு மா.பெரிய கேஸ் ரெண்டுல மாட்டி இருக்கான்..ஆதாரம், அவனுக்கு எதிரா சிக்கி இருக்காம்.. இனி பத்து பன்னெண்டு வருஷம், வெளிய வர முடியாதாம்..
இனி பிரச்சனை இல்லை.. நீ கிளம்பி வா..”

“சரிங்க ப்பா..”

“என்ன மா?? குரலே சரி இல்லை.. கொஞ்ச நாள் பொறு, உன் அம்மா கிட்ட பேசி, திரும்ப அங்க அனுப்பி வைக்குறேன்..”

“ஹ்ம்ம்…”

“சரி மா வச்சுடுறேன்..”

அதன் பிறகு மரகதம், எவ்வளவோ சமாதானப்படுத்தியும், அவள் முக வாட்டம் மாறவில்லை..

அகல் வந்தாள்..
தனியாக சென்று மதுவிடம் பேசினாள்..

“என்ன அண்ணி?? அண்ணா வீட்டுல இல்லாதப்போ கிளம்புற..அண்ணா வார வரை இரு..”

“அப்பா கூப்பிட்டாங்க அகல்.கிளம்புறேன்..”

எங்கோ வெறித்துக் கொண்டு சொன்னாள்..

“ச்சு போ அண்ணி..”

சற்று நேரம் மௌனம்..

“சரி அண்ணி, நீ விசனப்படாம போ..அண்ணா வந்ததும் முறை படி பேசி, நீ இங்கேயே வந்துடலாம்..”
மகிழ்வோடு கூறினாள்..

இவளிடம் அதற்கு எதிரொலி இல்லை..
மறுநாள் பாண்டியும் வந்து, இவளுக்கு ஆறுதல் கூறினான்..

கிளம்பும் நாளும் வந்தது..

“கிளம்புறேன் அத்தை..”

“போய்ட்டு வா கண்ணு..இங்க வரும் போது எப்படி இருந்த?? இப்போ, பாதி ஆளா போய்ட்டே.. என்ற அண்ணன் பார்த்தா, உன்ற அத்தை சாப்பாடே போடலியான்னு கேட்கும்..”

மரகதத்தை அணைத்து, வெகு நேரம் கண்ணீர் விட்டவள், அகலின் கையை பிடித்து கொண்டு, சிறிது நேரம் நின்றாள்..

அகலின் கண்களும் கலங்கி இருந்தது..

“என்னம்மா பாசமலரே, கப்பல் விடலாம் போல இந்த ஊருக்கு..வெள்ளமே வரும் போல..”

“சும்மா இருடா கூறுகெட்டவனே..அதுவே வருத்தத்துல
இருக்கு..இவன் வேற..”

“சிரிக்க வைக்கலாமுன்னு சொன்னேன் அத்தை..மது எதுக்கு அழுகை??இங்க தானே திரும்பி வர போற..”

“என்ன லே சொல்லுற..??”

“அடிக்கடி வரலாமுன்னு சொன்னேன் அத்தை..”

அனைவரையும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே, காரில் சென்று ஏறினாள்..

அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை, ஜன்னலின் வழியே எட்டி பார்த்துக் கொண்டே சென்றாள்..

அவள் கண்ணை விட்டு மறைந்ததும்,
“ஏன் ம்மா அண்ணியை அனுப்பிச்ச??”

“இதென்னடி புதுசா பேசுற..பெத்தவங்க கூப்பிடும் போது அனுப்பாம, என்ன செய்ய..??எனக்கு மட்டும் அதை அனுப்ப இஷ்டமா என்ன??அது இருந்தப்போ, வீடே கலகலப்பா இருக்கும்.இனி எனக்கு தான், வெருக்கு வெருக்குன்னு இருக்கும்…”

முந்தானையில் கண்ணை துடைத்துக் கொண்டு கூறினார்..

“போய் உன் அண்ணன் கிட்ட, அண்ணியை பொண்ணு கேளு..”

“போடி கூறுகெட்டவளே..உனக்கு, எங்க அண்ணி பத்தி தெரியாது..இந்த ஊரு மண்ணை மிதிக்குறதே, கவுரவ குறைச்சலுன்னு நினைக்கும்..பொண்ணை கொடுக்குமா??எனக்கு மட்டும் ஆசை இல்லியா?? என்ற அண்ணன் பொண்ணு, இங்க மருமகளா வரணுமுன்னு..கொடுப்பனை இருந்தா தானே.??.எட்டாத பழத்துக்கு ஆசை பட கூடாது டி.. போ..போய் வேலையை பாரு..”

“க்கும்.. என் அண்ணனுக்கு என்ன குறைச்சல்..??”
சிலிர்த்துக் கொண்டு நின்றாள்..

“உன்ற அண்ணனுக்கு என்ன குறை..??என்ற அண்ணிக்கு, உன்ற அண்ணன் இந்த நாட்டு ராசவாவே இருந்தாலும் பிடிக்காது..என்ற அண்ணன் சொந்தம் யாரையும் பிடிக்காது..”

சொல்லிவிட்டு, உள்ளே சென்று விட்டார்..

அவரை முறைத்தவள்,
“உன் அண்ணியா கல்யாணம் பண்ணிக்க போகுது..??வரட்டும் எங்க அண்ணன்..உன் அண்ணி முன்னாடியே போய், என் அண்ணியை தூக்க சொல்லுறேன்..”

அதை கேட்டு கொண்டே வந்த பாண்டி..

“அகலு, நீ கவலைப்படாத. அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க.. உன் அண்ணன் வந்ததும், கல்யாண ஏற்பாடு பண்ணிடுவோம்..”

“சீக்கிரம் செய் மாமா..உன்னை நம்பி தான் பொறுமையா இருக்கேன்..”

தன் நெஞ்சை பிடித்துக் கொண்டவன்,
“என்ன சொன்ன அகலு??திரும்ப சொல்லு..மாமாவா.??.”

அவனை முறைத்தவள்,
“இந்த குரங்கு சேட்டை எல்லாம் பண்ண..அப்புறம், திட்டிப்புடுவேன் பார்த்துக்கோ..”

“ஓகே, ஓகே..இப்படியே மரியாதையை மெய்ண்டைன் பண்ணு.. உங்க அண்ணன் கல்யாணம், என் பொறுப்பு..”

இவர்கள் இருவர் எண்ணமும் நிறைவேற போவதில்லை என்பதை உணர வைக்கும் பொருட்டு..
அடுத்த வாரம் ராஜசேகர் இங்கு வந்தார்..

கையில் கல்யாண பத்திரிக்கையோடு,
மதுவின் கல்யாண பத்திரிக்கையோடு..

ஒரு வாரம் கடந்த நிலையில், தான் வருவதாய் தகவல் தெரிவித்த ராஜசேகர்..

அன்று காலையில் வந்து இறங்கினார்..

“வா ண்ணா.. அண்ணி வரலியா??”

“இல்ல மா..”

“ஏன் ண்ணா, ஒரு மாதிரி இருக்குற..??”

“ஒண்ணும் இல்ல மா..”

“சரி, என்ன சாப்பிடுற சொல்லு..சமையல் தயார் ஆகிடுச்சு..சாப்பாடே சாப்பிட்டுடுறியா ??”

“இருக்கட்டும் மா..நான் எதுக்கு வந்தேன்னா, அடுத்த வாரம் மதுவுக்கு கல்யாணம்..”

“என்ன ண்ணா திடீருன்னு??அதுவும் இவ்ளோ சீக்கிரம்..”

“எல்லாம், அவ அம்மா ஏற்பாடு..என் பேச்சு எங்க எடுபடுது.. என்ன என்னமோ சொல்லுறா.. எதுவும் புரியல..”

“மது கண்ணுக்கு சம்மதமா??”

“சம்மதமுன்னு தான் சொல்லுறா.. எனக்கு சுத்தமா பிடிக்கலை…”

“ஏன் ண்ணா??”

“பையன் வடக்கு, மும்பை பையன்..அது கூட பிரச்சனை இல்லை..அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி,பொண்டாட்டி உயிரோட இல்லையாம்..அவனுக்கு போய், இரண்டாம் தாரமா கொடுக்கணுமுன்னு, ஒத்தை காலுல நிக்குறா”

“என்ன ண்ணா சொல்லுற??நம்ம மது கண்ணுக்கு என்ன குறை..??அதை போய் ஏன், இப்படி கொடுக்கணும்..??”

“என்ன கேட்டாலும், ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்குறா.. நான் ஒத்துக்கலைன்னா, அவளே கல்யாணம் பண்ணிடுவேணு சொல்லுறா.. ஒரு வாரமா இது தான் ஓடுது வீட்டுல..ஒரே தலைவலி..சரி, எப்படியோ போங்கன்னு விட்டுட்டேன்..”

“சரி ண்ணா விசனப்படாத..அண்ணி யோசிச்சு தான் முடிவு பண்ணி இருப்பாங்க..”

அவர் முகம் தெளியவில்லை..அங்கு சிலருக்கு பத்திரிக்கை கொடுத்து விட்டு,
மதிய உணவு உண்டு விட்டு, உடனேயே கிளம்பி விட்டார்..

மாலையில் வந்த அகலிடம், விஷயம் பகிரப்பட்டது..

“என்ன ம்மா சொல்லுற..??”

“எதுக்கு டி கத்துற..??”

“இல்லை.. இது நடக்க கூடாது..”

“வாயிலேயே ஒண்ணு போட்டுடுவேன்..கழுதை.. கல்யாணம் ஆனா பிள்ளைன்னு பார்க்குறேன்..நல்ல காரியம் சொல்லுறேன்..அபசகுணமா பேசுற..”

“அம்மா,அண்ணிக்கு இதுல சம்மதமா??”

“சம்மதமுன்னு தான் அண்ணன் சொன்னார்..”

“இல்ல ம்மா.. அண்ணி சம்மதிச்சு இருக்காது..”

“ஆமா, இவ பார்த்தா.. போடி, போய் வேலையை பாரு..பெத்தவரு சொல்லுறாரு..இவ இல்லைங்குறா..”

அவளின் வீட்டுக்கு சென்ற அகல்,பாண்டிக்கு தொலைபேசியில் அழைத்து, விசயத்தை கூறினாள்..

“பொறுமையா இரு அகல்..என்னன்னு விசாரிப்போம்..”

“எப்படி பொறுமையா இருக்குறது..??அடுத்த வாரம் கல்யாணம்..ஏதாவது பண்ணு மாமா..”

“சரி இரு..நான் மது போன்க்கு கூப்பிட்டு, பேசி பார்க்குறேன்..”

அலைபேசியை அணைத்தவன்..மதுவின் நம்பர்க்கு அழைத்தான்..
அது ஸ்விட்ச் ஆஃப் செய்ய பட்டதாய் சொன்னது..
பல முறை முயன்றும், இதே பதில் தான் வந்தது..

அதன் பிறகு ராஜாவுக்கு அழைத்தான்..
அவன் போன், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாய் சொன்னது..

என்ன செய்வது என்று தெரியாமல், திகைத்து நின்றான் பாண்டி..

அந்த ஒரு வாரமும், அகலின் அழுகையிலும், பாண்டியின் கையறு நிலையிலும் கழிந்தது..

மதுவின் திருமணத்திற்கு முதல் நாள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு,மரகதத்திடம், டவுனுக்கு கார் அனுப்ப சொன்னான் ராஜா..

மரகதம், டிரைவரோடு காரை அனுப்பி வைத்தார்..அதன் பிறகே, பாண்டிக்கு தகவல் சொன்னார்..

வீட்டில், அவன் வரவுக்காய் காத்திருந்தான் பாண்டி..
அவன் வரும் வழியில், எதிரில் பைக்கில் வந்த பழனி, இவன் வண்டியை நிறுத்தினான்..

டிரைவர் வண்டியை நிறுத்தியதும் கீழே இறங்கிய ராஜா..

“என்ன பழனி??”

“என்ன ராஜா, கிளி பறந்து போய்டுச்சா??”

“என்ன??”

“அதான் பா, உன் வீட்டு வண்ண கிளி..உன்னை விட்டு பறந்து போயிடுச்சு போல..”

“என்ன டா உளருற..??”

“அப்போ, விஷயம் தெரியாதா உனக்கு??உன் மாமன் மவ மதுவுக்கு, நாளைக்கு கல்யாணம்.அழைப்பு வரலியா உனக்கு..??இங்க வந்து, உன் மாமாவே நேருலை கூப்பிட்டு போனாரே.. எங்க அப்பாக்கு கூட பத்திரிக்கை கொடுத்தார்..”

அவன் சட்டையை வேகமாய் பிடித்தான் ராஜா..

“என் சட்டையை ஏன் பிடிக்குற ராஜா?? உன் மாமன் மக கன்னத்துல, நாலு விட்டு கேளு..ஏன் இப்படி பண்ணன்னு??
அவ சென்னை பப்லேயே,  ஒரு நாளுக்கு  பத்து பேரை மாத்துனவ. உன் கூடவா இருக்க போறான்னு நெனச்சேன்..சரியாய் தான் நெனச்சுருக்கேன்..
இப்போ பாரு, உனக்கே டாட்டா காட்டிட்டா..”

“பழனி, ஒழுங்கா வீடு போய் சேரும் எண்ணம் இல்லியா??”

“எதுக்கு பா கோவப்படுற??உன் வீட்டுக்கு போய், நான் சொன்னது உண்மையா, பொய்யான்னு கேளு..பொய்ன்னு சொன்னா, என் வீட்டுக்கே வந்து அடி. நான் எங்கேயும் போகாம காத்திருக்கேன்..

ஆனா, நான் சொல்லுறது உண்மை..ஆளை மாத்துறது, கழட்டி விடுறது, எல்லாம் உன் மாமன் மகளுக்கு வழக்கம் தான்.. நான், அவளை சென்னைல பார்த்துருக்கேன், பப்ல..அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும்..

அவ பழக்க வழக்கமே சரி கிடையாது..உனக்கு, என் மேல நல்ல அபிப்பிராயமே கிடையாது..அதான், இவ்ளோ நாள் சொல்லல..
இப்போ உனக்கே புரிஞ்சுருக்கும்..என் சட்டையை விட்டுட்டு, அவ கழுத்தை பிடி..”

அவனை உதறினான் ராஜா..
வேகமாய் காரில் ஏறி, வீடு நோக்கி சென்றான்..

வன்மமாய் புன்னகைத்துக் கொண்டான் பழனி..

‘என்னையா டி ஆஸ்பத்திரில படுக்க வச்ச.. ராஜாவை பத்தி தெரியாது உனக்கு..இனி, அவன் பார்த்துக்குவான் உன்னை..’

அவள் செய்ததற்கு, பழி தீர்த்த திருப்தி தோன்றியது அவனுக்கு..

வீட்டிற்கு வந்து இறங்கியதும், வேகமாய் உள்ளே சென்றான்..

“ராசா வாலே.. எப்படி இருக்க??”

” மதி எங்க??மதிக்கு கல்யாணமா??”

பாண்டியை பார்த்துக் கேட்டான்..

“ஆமா லே..உனக்கு யார் சொன்னா??போன வாரம் தான், என் அண்ணன் வந்து பத்திரிக்கை கொடுத்துட்டு போனார்..”

பாண்டியும் ஆமோதிப்பாய் தலை அசைத்தான்..

“நம்ம வீட்டுல இருந்து, யாராவது போனும் லே..அகலை போக சொன்னா,ஒரு முழ நீளத்துக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு, ஒரு வாரமா சுத்துறா.. உன்ற அப்பாவுக்கு அப்புறம், நான் உள்ளூர் விசேஷம் தவிர, எங்கேயும் போறதில்லை..

இது, என்ற அண்ணன் மக கல்யாணம் வேற..
நானே, பாண்டியை அனுப்புவோமா, என்ன பண்ணுறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..நல்ல வேளை, நீயே வந்துட்ட..

நாளைக்கு அதிகாலை முகூர்த்தம், சீக்கிரம் கிளம்பு லே..போய்ட்டு வா..
இவனையும் கூட்டிட்டு போய்ட்டு வா..”

பேசிக் கொண்டே உள்ளே சென்றார்..

கண்கள் சிவக்க நின்றிருந்தான் ராஜா..அவன் தோளில் கை வைத்த பாண்டி..

“மாப்பு,டென்சன் ஆகாத.. இப்போ உடனே கிளம்புனா.. சீக்கிரம் போய் கல்யாணத்தை நிறுத்திடலாம்..
நானும், இவ்ளோ நாள் என்ன செய்யன்னு தெரியாம தான் முழிச்சுட்டு இருந்தேன்..உன்னோடையும் பேச முடியல..”

வேகமாய் தன் அலைபேசியை எடுத்த ராஜா, மதுவின் எண்ணுக்கு அழைத்தான்..
சுவிட்ச் ஆப் என்று சொன்னது..

“ச்செய்..”

அவன் கோபத்தில்,
“மதுவுக்கா மாப்பு..??நானும் பல தடவை போட்டுட்டேன்..சுவிட்ச் ஆப் தான் வருது..வா மாப்பு, நேருல போறது தான் நல்லது..”

அப்பொழுது வேகமாய் உள்ளே நுழைந்த அகல்,

“அண்ணன்,நீ வரேன்னு அம்மா இப்போ தான் போன் பண்ணுச்சு.. அதான், விரசா வந்தேன்..
அண்ணே, சீக்கிரம் போய் அண்ணியை கூட்டிட்டு வாண்ணா..

இது  நிச்சயம், அண்ணி விருப்பம் இல்லாம தான் நடந்து இருக்கும்..
அண்ணியோட அம்மா கட்டாயப் படுத்தி இருக்கும்..

நீ போய்  பேசி, கூட்டிட்டு வா..
கல்யாணத்தை நடக்க விட்டுடாத ண்ணா..”

கண்ணீர் வழிய கூறினாள் அகல்..

“நீ அழுகாத அகல்.நாங்க பார்த்துக்குறோம்..”

பாண்டி தான் ஆறுதல் கூறினான்..ராஜா, பேசும் நிலையில் இல்லை..

கையில் சில பொருட்களோடு வெளியே வந்த மரகதம்..

“இந்தா லே இந்த சீர் எல்லாம் கார்ல வை.. அத்தை முறை செய்யனும்..என்னால தான் வர முடியல..நீங்க போய், எந்த குறையும் இல்லாம செய்ங்க..”

அப்பொழுது தான் அகலை பார்த்தவர்,
“ஏண்டி அகலு, எப்போ வந்த??ஏன் அழுதுட்டு நிக்குற??”

“ஹ்ம்ம்..வேண்டுதல்..”

“வர வர உன்ற பேச்சே சரி இல்ல..இந்தா, இதை எல்லாம் கொண்டு போய் கார்ல வை..”

“மாட்டேன்..நீயே வை.. அண்ணே, நான் கிளம்புறேன்..நீயும் சீக்கிரம் போய், நல்லபடியா முடிச்சுட்டு வா..”

சொல்லிவிட்டு, விறுவிறுவென அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்..

“இவ எதுக்கு வந்தா??இப்போ ஏன் போறா??”

“அத்தை, அதை குடு. நான் கார்ல வைக்குறேன்..”

“இந்தா லே. இன்னும் உள்ள கொஞ்சம் இருக்கு. வந்து எடுத்துட்டு போ..”
கூறிவிட்டு சென்றார்..

“மாப்பு, நிக்க நேரம் இல்லை.. சீக்கிரம் கிளம்பு..எவ்ளோ சீக்கிரம் கிளம்புறோமோ, அவ்ளோ நல்லது..வா..”

அவன் சொல்லின் அவசரம் புரிந்து, வேகமாய் காருக்கு சென்றான்..

“சாப்பிட்டு போங்க லே..”

“இல்ல அத்தை, வழில பார்த்துக்குறோம்..”

வேகமாய், காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் பாண்டி..

ராஜா ஓட்டும் மனநிலையில் இல்லை.. பாண்டியும், அவனை ஓட்ட விட கூடாது என்று அவனே ஓட்டினான்..

ஓட்டுனரை வேண்டாம் என்று கூறிவிட்டு, இவனே வண்டியை எடுத்தான்..

ராஜா அருகில் அமர்ந்திருந்தான்..
அவன், ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

பாண்டி தான், அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டே வந்தான், வழி எங்கும்..உணவு உண்ண கூட எங்கும் நிறுத்தாமல், விரைந்து சென்னை வந்து சேர்ந்தனர்..

இவர்கள் மண்டபத்தை நெருங்கும் நேரம், முகூர்த்த நேரமும் நெருங்கி இருந்தது..

பெரிய மண்டபம், அதிக கூட்டம்.. பார்க்கிங்க்கு ஒழுங்கு செய்பவர்..

“இங்க நிறுத்தாதிங்க..”

“மாப்பு, நீ முன்னாடி போய், உன் மாமா கிட்ட  விஷயத்தை சொல்லி நிறுத்து..நான் பார்க் பண்ணிட்டு வரேன்..”

வேகமாய் இறங்கிய ராஜா, மண்டபத்திற்குள் நுழைந்தான்..

மேடையில், மதுவும் மணமகனும் அமர்ந்திருந்தார்கள்..கூட, ராஜசேகர் பிரமீளா எல்லோரும் இருந்தார்கள்..
விரைந்து அவர்களை நெருங்கினான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!