Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uyir Niraigiraen Azhaga

உயிர் நிறைகிறேன் அழகா-21

அத்தியாயம்-21

மேடையில் மணமக்களை பார்த்தபடி வேகமாய் விரைந்தான் ராஜா..அவன் மேடையை நெருங்குவதற்கும், ஐயர் “கெட்டிமேளம்,கெட்டிமேளம்”
என்று சொல்லுவதற்கும் சரியாக இருந்தது..

மணமகன் மதுவின் கழுத்தில் தாலியை கட்டினான்..
நிறுத்துங்க என்று கூறி, கடைசி நொடியில், மண்டப சத்தத்தில் நிறுத்த, இது சினிமா இல்லாத காரணத்தால், திருமணம் நடந்தேறியது..

அதுவும் தாலி கட்டும் வேலையை விட்டுவிட்டு, யார் நிறுத்த சொல்வார்கள், தாலியை கழுத்து அருகே கொண்டு சென்ற பின், வேடிக்கை பார்ப்போம் என்று மணமகனும் நினைக்காத காரணத்தால், யாரும் தடுக்க முடியாமல் திருமணம் நடந்தது..



Advertisement

அந்த காட்சியை பார்த்து விட்டு, ஸ்தம்பித்து நின்றான் ராஜா..
வாழ்வில் முதல் முறையாக, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்..

சில நிமிடம் அவனிடம் அசைவில்லை..
பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு வந்த பாண்டியின் கண்களில், மணமக்கள் படம் போட்ட பேனர் பட்டது..

மதுவந்தி வெட்ஸ் அமித்லால் என்று இருந்தது..

Advertisement

கீழே, அன்புடன் அழைப்பது பிஆர் குரூப் ஆப் கம்பனிஸ் குடும்பத்தார், நிர்வாகம், மற்றும் ஊழியர்கள் என்று இருந்தது..

Advertisement

அவன் இருந்த அவசரத்தில், கண்ணில் பட்டது கருத்தில் படவில்லை..வேகமாய் உள்ளே நுழைந்தான்..

மணமக்கள் இருவரும், திருமணத்திற்கு பிறகு உள்ள சடங்குகள் செய்து கொண்டிருந்தார்கள்..

கண்களால் அலசி, ராஜாவை கண்டு பிடித்து அருகில் வந்தான்..
அவன் நிலை பார்த்து, தோளை தொட்டு அசைத்தவன், மேடையை பார்த்தான்..

Advertisement

மதுவின் கழுத்தில் தாலி தொங்கியது..

“மாப்பு..”

அவனும் அதிர்ந்து போய் அழைத்தான்..
அவனை அழைத்து சென்று, அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்த்தினான்..

ராஜா முகம் எல்லாம் வியர்த்து, மூச்சு விட மறந்தவனாக அமர்ந்தான்..
என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல், பாண்டியும் விழித்துக் கொண்டிருந்தான்..

அப்பொழுது தான் மேடையை விட்டு இறங்கிய ராஜசேகர், இவர்களை பார்த்து விட்டு அருகில் வந்தார்..

“வா ராஜா..வாப்பா பாண்டி.. இப்போ தான் வரிங்களா??முன்னவே வர கூடாதா??அக்கா,அகல் எல்லாம் வரலியா??”

கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்..
ராஜாவின் நிலையை பார்த்து விட்டு, அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து பாண்டி..

“இப்போ தான் வந்தோம் சித்தப்பா..வண்டியில, அத்தை சீர் கொடுத்த பொருள் எல்லாம் இருக்கு..எடுக்க மறந்துட்டோம்.. எடுத்துட்டு வரோம்..”

“அதுகென்ன அவசரம் பாண்டி.. அப்புறம் எடுத்துக்கலாம்..”

“இல்ல சித்தப்பா..இதோ வரோம்..”

ராஜாவை கை பற்றி இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்..காரை அடைந்ததும், கதவை திறந்து அவனை உள்ளே அமர்த்தி, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான்..

அதை வாங்கும் நிலையில் கூட இல்லை ராஜா..

“மச்சான், இதை குடி..இப்படி இருக்காத டா, எனக்கு பயமா இருக்கு..”

கண்கள் கலங்க, சீட்டின் பின்புறம் தலை சாய்த்தான் ராஜா..
கண்களை இறுக மூடினான்..
கண் ஓரங்களில் நீர் வழிந்தது..

பாண்டியும் சில நிமிடம் அமைதியாய் இருந்தான்..

சில நிமிடத்தில் கண் திறந்தவன்,
“போவோம் பாண்டி..”

“இல்ல மாப்பு..இப்போ கிளம்புனா, உன் மாமாக்கு சந்தேகம் வரும்..அத்தைக்கும்,உடனே ஏன் வந்தோமுன்னு, பதில் சொல்ல முடியாது..கொண்டு வந்ததை கொடுத்துட்டு, கொஞ்ச நேரம் இருந்துட்டு போவோம்..நடந்ததை மாத்த முடியாது..ஏத்துக்க நாள் ஆகும்..வேற வழி இல்லை..”

சில நொடிகள் எடுத்துக் கொண்டவன்,ஒரு  பெரு மூச்சு விட்டு, தன்னை சமன் செய்தான்., முகத்தை அழுத்தி துடைத்து கொண்டு,
“வா, உள்ள போகலாம்..”

அங்கு உதவிக்கு நின்ற பெண்களிடம், சீர் எல்லாம் கொடுத்த பாண்டி,
“உள்ள கொண்டு போங்க..”

அவர்கள் பின்னோடு சென்றவன், ராஜசேகரிடம் சொல்லிவிட்டு வைத்தான்..

ராஜாவும் அவன் பின்னே சென்று, ஒரு இருக்கையில் அமர்ந்தான்..
சடங்கு எல்லாம் முடிந்து, மேடையில் மணமக்கள் நின்றார்கள்..

ஒவ்வொருவரும் சென்று, அவர்களை வாழ்த்தி விட்டு, பரிசு கொடுத்து விட்டு சென்றார்கள்..

இவர்கள் அருகில் வந்த ராஜசேகர்,
“வாங்க பா மேடைக்கு போகலாம்..”

அவர் அழைப்பை மறுக்க முடியாமல், இருவரும் பின்னே சென்றார்கள்..

மேடையில் நின்றிருந்த மதுவின் அருகில் சென்ற சேகர்,

“மது,யார் வந்துருக்கா பாரு..”

அவர்களை பார்த்த மது,
“ஹு இஸ் திஸ் டாட்..??”

அவள் கேள்வியில், அதிர்ந்து போய் பார்த்தான் பாண்டி..

அதுவரை வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்ற ராஜா,இவளை கூர்ந்தான்..

சேகரும் திகைத்து,
“என்ன மது இப்படி கேட்குற??உன் அத்தை மகன் ராஜா..இவங்க வீட்டுல தானே, இவ்ளோ நாள் இருந்த..”

சட்டென அவள் கண்களில் மின்னல்..

“ஓ..சாரி டாட்.. ஐ பஃர்கெட் ஹிம்..சாரி ராஜா..நைஸ் டு மீட் யூ..”

அவனை நோக்கி கையை நீட்டினாள்..
அவளை பார்த்துக் கொண்டே, கைகளை குவித்தான்..

“ஓ..வணக்கம்..பண்பாடு..ஐ லைக் திஸ்..”

புன்னகையோடு கை குவித்தாள்..

பாண்டியின் முகம் கோபத்தில் சிவந்தது..
அவள் கலக்கத்தோடு பார்த்திருந்தால் கூட ,அவன் மனம் ஆறி இருக்கும்..அவளின் பேச்சில், பல்லைக் கடித்தான் பாண்டி..

அவள் கண்களில் அலட்சியம்..
புருவத்தை உயர்த்தி, இன்னும் எதுவும் கேள்வி உண்டா கேள், பதில் அளிக்க தயார் என்னும் நிலையில் இருந்தாள்..

“வாழ்த்துக்கள், மிஸ்ஸர்ஸ் மதுவந்தி..”

அவனின் தெளிவான வாழ்த்தில், பாண்டிக்கே ஆச்சார்யம்..
மதுவின் கண்களில், ஒரு மெச்சுதல் பார்வை வந்து போனது..

“தேங்க்ஸ் ராஜா..”

புன்னகையோடு கூறினாள்..

அதன் பிறகு புகைப்படத்துக்கு நின்றவன்,
“வா பாண்டி, போலாம்..”

பாண்டியும் கிளம்பும் மனநிலையில் தான் இருந்தான்..

“என்ன பா?? இப்போ தான் வந்திங்க..அதெல்லாம் உடனே போக கூடாது..சாப்பிட்டு தான் போகணும்..”

அவர்களை அழைத்து சென்று,அவர் நண்பரின் அருகில் அமர வைத்த சேகர்..

“இவன், என் பிரெண்ட் நடராஜன், பேசிட்டு இருங்க வரேன்..”

அவர்  இவர்களோடு சாதாரணமாய் பேச ஆரம்பித்தார்..

பாண்டி, எப்பொழுது கிளம்புவோம் என்னும் மனநிலையில் இருந்தான்..அதனால், அவர் பேச்சில் கவனம் இல்லாமல் இருந்தான்..

ராஜா, அவரின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..
அவரை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்..

‘இவருக்கு, அர்ச்னையா  பண்ண போறோம்..விட்டா, குலம் கோத்திரம் முதற்கொண்டு சொல்லுவார் போல..’

கடுப்போடு நினைத்தான் பாண்டி..
சற்று நேரத்தில், இவர்கள் அருகில் வந்து அமர்ந்த சேகர்,கொஞ்ச நேரம் ராஜாவோடு பேசிக் கொண்டிருந்தார்..

பிறகு,
“வாங்க பா சாப்பிடலாம்..”

“அதெல்லாம்..”
வேண்டாம் என்று வேகமாய் சொல்ல வந்தான் பாண்டி..

“வாடா, சாப்பிட போலாம்..”

ராஜாவின் பேச்சில், வாய்  அடைத்து நின்றான்..
எரிச்சலோடு, அவன் பின்னே சென்றான்..

இருவரும் சாப்பிடும் வரை, கூடவே நின்றார் நடராஜன்..

பேருக்கு சாப்பிட்டான் பாண்டி..

“நல்லா சாப்பிடுங்க தம்பி..”

‘க்கும்.. இவர் வேற..மாப்பிள்ளையை  உபசரிக்கிற மாதிரி, விழுந்து விழுந்து கவனிக்கிறார்..இருக்குற கடுப்புல..’

சாப்பிட்டு விட்டு, சொல்லிக் கொண்டு வெளியே வந்தவன் கண்ணில், அந்த பேனர் மீண்டும் பட்டது..

‘இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை.. பொண்ணா இது?? இப்படி நடிக்குது..’

சட்டென, பெயரை திரும்ப பார்த்தான்..

ராஜாவின் தோளில் கை வைத்து தடுத்தவன்,
“மாப்பு,பிஆர் குரூப்ஸ் அஹ் டா இவங்க..??”

“ஆமா..”

“உன் மாமா குடும்பம் தானா இது..??அப்போ..மது..??”

“வினோத் நிலைமைக்கு காரணமான பொண்ணு, இவ தான்..”

“டேய், இது முன்னவே தெரியுமா உனக்கு??”

“ஹ்ம்ம்..தெரியும்..”

“அப்புறம் எப்படி டா, இவளை போய் விரும்புன??அவளை பத்தி தெரிஞ்சும்.அதான், இப்படி கவுத்துட்டா.. இப்படி தெரிஞ்சே குழில விழுந்து இருக்க..

இவன்னு முன்னவே தெரிஞ்சு இருந்தா, நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டு இருப்பேன்..

தெரிஞ்சும், ஏன்டா இவளை நம்புன..ஏமாத்திட்டா சதிகாரி..எவ்ளோ தெனாவெட்டா நிக்குறா.. யாருன்னு வேற கேட்குறா..

இப்போவும் ஒன்னும் லேட்டா ஆகலை.. நீ இங்கயே இரு..உள்ள போய், அவ புருஷன் முன்னாடியே, அவ முகத்திரையை கிழிச்சுட்டு வரேன்..பொண்ணா இவ..”

ஆவேசமாய் உள்ளே செல்ல திரும்பினான் பாண்டி..

அவன் கையை பிடித்து தடுத்த ராஜா,அவனை அழைத்துக் கொண்டு காருக்கு சென்றான்..

“ஏன் மாப்பு??என்னை விடு மாப்பு..எங்கிருந்தாலும் வாழ்க மனநிலைக்கு வந்துட்டியா..??உன்னையே அழ வச்சவ மாப்பு இவ.. நீ அழுது, நான் பார்த்ததே இல்ல..
இவளை சும்மா விட சொல்லுறியா??

இன்னும் எத்தனை பேரை, இப்படி கஷ்டப்படுத்துவாளோ..??இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு வரேன்..
எல்லோர் முன்னாடியும் அவமான படுத்துனா தான், புத்தி வரும்..”

“உள்ள உட்கார்..”

அவனை முன் இருக்கையில் அமர்ந்தியவன். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, காரை எடுத்தான்..

“ச்சு.. என்ன மாப்பு..??சரி போறா விடு..நீ இறங்கு, நான் ஓட்டுறேன்..”

“இப்போ, நீ தான் டென்சன்ல இருக்க..நானே ஓட்டுறேன்..”

“அப்போ, உனக்கு வருத்தம் இல்லியா??”

மறுப்பாய் தலை அசைத்தான்..

“பொய் சொல்லாத மாப்பு..”

“நான் ஏன் பொய் சொல்லணும்??”

“பின்ன, நேத்து விஷயம் கேள்வி பட்டதுல இருந்து,இப்போ, இங்க காருல, கொஞ்ச நேரம் முன்ன வரை எப்படி இருந்த??. இப்போ, நீ சொல்லுறதை நம்ப சொல்லுறியா??”

“…”

“அதை விடு.. இவ தான் வினோத்தை ஏமாத்தினவன்னு தெரிஞ்சும், ஏன் சொல்லல..??
தெரிஞ்சும் ஏன் விரும்புன?? பதில் சொல்லு??”

“…”

“பதில் சொல்லுடா..மதுவை பத்தி தெரிஞ்சும் ஏன் விரும்புன??”

“நான் எங்க மதுவை விரும்புனேன்..??மதியை தான் விரும்புனேன்..”

‘அதிர்ச்சியில், இவனுக்கு எதுவும் ஆகி விட்டதா??’

“மாப்பு என்ன சொல்லுற??”

“ஹ்ம்ம்..இவ என் மதி இல்ல..யாரோ ஒருத்தி.இவ எப்படி இருந்தா எனக்கென்ன??”

“என்ன மாப்பு உளருற..??”

“மேடையில் அவ கிட்ட, மாமா நம்மை அறிமுகப் படுத்தும் போது, அவ முக பாவத்தை பார்த்தியா??”

“பார்த்தனே, உன்னை தெரியாத மாதிரி நடிச்சா??ஏமாத்துகாரி..”

“இல்ல,அவளுக்கு நான் யாருனே தெரியல..அவ நடிக்கலை.. அவ கண்ணை நான் பார்த்தேன்..முதல்ல அறியாத தன்மை, பிறகு ஒரு அலட்சியம், கேலி,திமிர்,ஏளனம்..”

“என்ன மாப்பு, என்ன என்னமோ சொல்லுற??”

“உண்மையை தான் சொல்லுறேன்..அவளுக்கு நான், மதியை விரும்புறது தெரிஞ்சு இருக்கு..அதான், அவ கண்ணுல கேலி,ஏளனம்,அது பத்தி நான் கேட்டா, பதில் சொல்ல தயாரா, திமிரா நின்னா.. நான் கேட்கலைன்னதும், அவ கண்ணுல ஒரு ஆச்சர்யம், அப்புறம் ஒரு மெச்சுதல்..
இவ என் மதி இல்லை..”

“போ மாப்பு..பார்க்க அப்படியே இருக்கா.. நீ இல்லைன்னு சொல்லுற..அப்போ, மதி வேற மது வேறயா??”

“ஹ்ம்ம்..அப்படி தான் தோணுது..”

“அது எப்படி மாப்பு..??வேற வேற பொண்ணுன்னு சொல்லுற..இவ நடிக்குறான்னு தான் தோணுது எனக்கு..இவ, இவங்க அப்பாக்கு ஒரே பொண்ணு தானே..??அப்புறம் எப்படி??”

“அதான் தெரில.ஆனா, இவ என் மதி இல்ல..என் கண்ணை, என் மதி, நேருக்கு நேர், சில நிமிஷம் கூட பார்க்க மாட்டா.. அதுவும், அவ மேல தப்பு இருந்தா, சுத்தமா பார்க்க மாட்டா..
இவ என் கண்ணை, இமைக்காம எதிர் கொண்டா..

என் மதி கண்ணுல, எனக்காக இருக்குற ஆர்வம், வெட்கம், ஆசை, எதுவுமே இல்லை..”

“பக்கத்துல புருஷனை வச்சுட்டு, எப்படி டா அப்படி பார்ப்பா..போடா..”

“அவளை பார்த்தா, பிடிக்காமையோ, இல்ல கட்டாயத்துல கல்யாணம் பண்ணுறவ மாதிரியா இருந்துச்சு.??.”

மறுப்பாய் தலை அசைத்தான்..

“நான் அவளை காதலிச்சேன்னு, அவ புருஷன் முன்னாடி சொல்லிடுவனோன்னு, பயந்த மாதிரி தோணுச்சா..??”

“க்கும்.. திமிரா இல்ல நின்னா..”

“கரெக்ட்..அவ பயப்படலை..அதே மாதிரி, யாரும் அவளை கட்டாய படுத்தலை..
மாமா சொன்னதை கவனிச்சியா??அவளுக்கும் அவனுக்கும், முன்னவே ரிஜிஸ்டர் மேரேஜ் ஆகிடுச்சாம்.. இது, ஊருக்காக செய்யுற கல்யாணம்..அவனை லவ் பண்ணிட்டேன்னு, ஒத்தை காலுல நின்னு, கல்யாணம் பண்ணி இருக்கா..”

பாண்டியின் புருவம், யோசனையில் சுருங்கியது..

“பதினைஞ்சு நாள் முன்னாடி வரை, நம்ம வீட்டுல இருந்த பொண்ணு..உடனே ஒருத்தனை விரும்பி, அவசர கல்யாணம் பண்ணுமா??”

“ஒரு வேளை, முன்னவே விரும்பி இருக்குமோ..??உன்னை ஏமாத்த, உன் கூட அப்படி பழகி இருக்கும்..”

“இல்ல, வாய்ப்பே இல்லை..என் மதி கண்ணுல  நான் பார்த்த காதல், பொய் இல்ல..”

“அப்போ அவ எங்க??”

“தெரில. ஆனா, என் மதியா தான் இருப்பா..”

பாண்டிக்கு குழப்பமாக இருந்தாலும், அப்படி இருந்தா, நல்லது தான் என்று, அமைதியாய் வந்தான்..

இருவரும் வீட்டிற்கு வர, நள்ளிரவு ஆகி விட்டது..மரகதம் தூங்கி இருந்தார்..தன்னிடம் உள்ள சாவி கொண்டு, வீட்டை திறந்தான் ராஜா..நேரமாகி விட்டதால், இவன் வீட்டிலேயே இரவு தங்கினான் பாண்டி..

அதிகாலையிலேயே வந்து விட்டாள் அகல்..

கூடத்தில் அமர்ந்திருந்த மரகதம்,
“என்ன டி, இவ்வளவு வெள்ளன வந்திருக்க??”

“அண்ணா எங்க??”

“அவனும் பாண்டியும், சாமம் தாண்டி தான் வந்தானுவ போல..இன்னும் தூங்குறானுங்க..”

“கல்யாணம் என்ன ஆச்சு??”

“என்னமோ, பரிச்சை முடிவு மாதிரி கேட்குற..நல்லா தான் முடிஞ்சு இருக்கும்..”

“ச்சு போமா..அண்ணனை எழுப்பு..”

“ஏண்டி, தூங்குற பிள்ளையை எழுப்ப சொல்லுற..அவனே, ஊருல இருந்து வந்து, உடனே கல்யாணத்துக்கும் இம்புட்டு தூரம் போய்ட்டு வரான்..அவனை தொந்தரவு பண்ண சொல்லுற..போடி..எழுந்ததும் பேசிக்குவ..”

“அதெல்லாம் முடியாது.நேத்து போன் போட்டா, எடுக்கவே இல்லை.. இன்னிக்கு பேசிட்டு தான் போவேன்..”

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, ராஜா மாடியில் இருந்து இறங்கி வந்தான்..

“அண்ணா என்ன ஆச்சு..??”

“இதே தாண்டா கேட்டுட்டு இருக்கா, அப்போல இருந்து..என்னமோ, ஆகி போச்சு இவளுக்கு..”

“சும்மா இரு ம்மா.. சொல்லு ண்ணா.. அண்ணி எங்க??”

“அவ புருஷன் வீட்டுக்கு போய் இருப்பா.. என்ன கேள்வி டி இது..??”

“அம்மா”
பல்லை கடித்தவள்..

“அண்ணனுக்கு காபி போடு.. உள்ள போ..”

“எனக்கு தெரியும் போடி..”
கூறியபடி,
சமையல் அறைக்கு சென்றார்..

“சொல்லு ண்ணா..”

“கல்யாணம் நல்ல படியா முடிஞ்சுது..”

“என்ன ண்ணா சொல்லுற??அப்போ அண்ணி??”

அதிர்வோடு கேட்டாள் அகல்..

“மாமா பொண்ணு கல்யாணம் முடிஞ்சுதுன்னு சொன்னேன்..
உன் அண்ணிக்கு முடிஞ்சுதுன்னா சொன்னேன்..”

“என்ன ண்ணா சொல்லுற??”

குழம்பி போய் கேட்டாள்..

“நல்லா கேளு அகலு..நேத்துல இருந்து என் கிட்டயும், இப்படி சொல்லி தான் குழப்புறான்..நான் அவன் இல்லை மாதிரி..”

“உங்க ரெண்டு பேருக்கும் தெளிவா சொல்லுறேன் கேட்டுக்கோங்க..நேத்து, மதுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..
மதிக்கு இல்ல..”

“அப்போ மதி..??”

“உங்க அண்ணியை..கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வரேன் வீட்டுக்கு..”

பாண்டியும் அகலும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள்..

பெங்களுரில் இருந்த  ஒரு மகளிர் விடுதி அறையில்..

கண்ணில் கோபத்தோடு, எதிரில் நின்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் மீனா..

“என்ன பண்ணிட்டு வந்து இருக்க மித்து.. ??அறிவோட தான் இருக்கியா??”

அவள் எதிரில், கன்னத்தை பிடித்துக் கொண்டு, கண்ணீரோடு நின்றாள் மித்ரா.  மித்ரமதுமதி என்ற மதி..வருவின் மதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!