Skip to content
Post Views: 1,518
அத்தியாயம் 8
“ஆக மொத்தம் உங்க பையன் கல்யாண விஷயம் பேச போய் என் படிப்பை அம்போனு விட்டாச்சு அப்படி தானே?” என லதாவை முறைத்து நின்றாள் பல்லவி.
Advertisement
“எது? உன் படிப்பை நான் அம்போன்னு விட்டேனா?” லதாவும் பதிலுக்கு முறைத்து கேட்க,
Advertisement
Advertisement
“ப்ச்! படிப்பை விட்டது என்னவோ நான் தான். ஆனா படிக்க வைக்குறேன் வாழ்க்கைக்கு விளக்கு ஏத்துறேன்னிங்களே! என்ன ஆச்சு?” என்றாள் பல்லவியும் அசராமல்.
Advertisement
காலை இன்று வர கொஞ்சம் தாமதமாகிவிட்டது பல்லவிக்கு. வந்ததும் முன்னறையில் யாரையும் காணாமல் தானே லதாவின் அறைக்கு வந்துவிட்டாள்.
வந்ததும் அவரை நலம் விசாரித்து பொதுவாய் பேசி என நேரம் நகர, இப்படி மகன் கவலையில் இருக்கிறான் என பேச்சோடு பேச்சாய் லதா பல்லவியிடம் கூறிவிட்டார்.
இத்தனை நாட்களும் இப்படி மனதில் இருப்பதை எல்லாம் யாருடமும் பகிர்ந்து கொண்டது இல்லை லதா.
அதற்கான மனிதர்களும் கிடைக்கவில்லை என்றால் மிகையில்லை. அஞ்சலி பள்ளி செல்கிறாள். முழுதும் சுட்டித்தனம் தான். அன்னைக்கு செல்லம் வேறு. எதுவும் அவளை பாதிக்க கூடாது என்று அவளிடம் மறைத்தவர், மகனிடம் கவலைப்படவேண்டிய அவசியமே இருந்தது இல்லை இத்தனை வருடங்களில்.
கணவனைப் பற்றி மகனிடம் கூற நினைத்தது கூட இல்லை. தனக்கு தேவையானதையும் கூட அவனே செய்துவிடுவதால்.
இப்பொழுது மகன் விஷயத்தில் தான் அத்தனை குழப்பங்களும் கணவனின் மேல் கோபமும் என ஆதங்கமாய் பல்லவியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
‘இப்ப கல்யாணம் பண்ணலைனா அவ்ளோ தான்னு என்னையே மிரட்டுறா’ என்று ஈஸ்வர் அன்னையிடம் கூறிய நேரம்,
“ஏன்? அவ ஏன் உன்னை மிரட்டுறா. இங்க பாரு ஈஸ்வர். கல்யாணம் எல்லாம் இப்படி சட்டுனு முடிவெடுத்து பண்ணிட முடியாது. உன் அப்பா நினைச்சுட்டா நடத்திடவும் முடியாது. எங்க யாருக்கு யார்னு கடவுள் ஏற்கனவே முடிச்சு போட்டு தான் வச்சிருப்பார். இது தான் உனக்கான வாழ்க்கைனா அது கடவுள் தான் நினைச்சு நடத்தணும். இல்லைனா தானா எல்லாம் நடக்கும்” என்று லதா சொல்ல,
“எனக்கும் புரியுது ம்மா. ஆனா அங்க லாவண்யா அப்பா முன்னாடி வச்சு கல்யாணத்தை இப்பவே வச்சுக்கலாம்னு பேசுறாங்க அப்பா. சட்டுனு அவங்க முன்னாடி எப்படி எனக்கு வேண்டாம்னு சொல்ல? என்கிட்ட இதை தனியா பேச வேண்டாமா முதல்ல? இல்ல உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண வேண்டாமா?” என்றெல்லாம் அவன் கேட்க,
“உன் அப்பா என்கிட்ட டிஸ்கஸ் பண்றதா? நடந்துட்டாலும். ஈஸ்வர்! நீ தான் உனக்காக பேசணும். அப்பா அவங்க எப்பவும் அப்படி தான். மாத்தவெல்லாம் முடியாது. நீ உனக்கு பிடிச்சதை பண்ணு. ஆனா எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சுக்கோ!” என்று சொல்லி இருந்தார் லதா.
அதை தான் மகன் குழப்பத்தில் கவலை கொண்டு அதை பல்லவி வந்ததும் புலம்பி இருக்க, அனைத்து கதையையும் கேட்டுக் கொண்டவள் தான் தன் படிப்பு விஷயத்தை லதா அவர் மகனிடம் பேசவில்லை என்று முறைத்து நின்றாள்.
“இதோ இப்ப வருவான். நீயும் இருக்கியே! இப்பவே கேட்டுடுறேன்!” என்று லதா சொல்ல, மலங்க விழித்தாள்.
நேற்று தன் பேச்சை அவன் கேட்டு முறைத்து நின்றானே அப்போது இருந்து வந்தது தான் கீர்த்திஸ்வரன் மீதான பயம். தன் மேல் தான் தவறு. யார் என்ன செய்தால் என்ன என்று இராமல் வாயை விட்டு இப்பொழுது அவன் முகம் பார்க்கவே சங்கடமாய் இருந்தது பல்லவி.
இதே நிலையில் அவனிடம் உதவி வேறு கேட்கவா என அவள் தயங்கி நிற்க,
“லதாம்மா! ஃபோர்ஸ் பண்ணி எல்லாம் கேட்க வேண்டாம். ஜஸ்ட் அப்படியே காத்து வாக்குல அவங்க காதுல போட்டு வைங்க. அது போதும். கொஞ்சம் பொறுமையா போனா கூட ஓகே தான். காலேஜ் ஓப்பனிங்னா இனி நெஸ்ட் அகடாமிக் இயர்ல தானே ஜாயின் பண்ண முடியும்? அதுக்குள்ள எதாவது ஒரு சின்ன வேலையா பார்த்து செட் ஆகிட்டேன்னா சின்ன அம்பானி ஆயிடுவேன்ல?” என்று சொல்லி சிரிக்க,
“அவ்ளோ தானே! கண்டிப்பா ஆகிடுவ.” என்று சிரித்தார் லதாவும்.
அன்னை அறைக்குள் வரும் பொழுதே சிடுசிடுவென்ற முகத்தோடு கீர்த்திஸ்வரன் வர,
“கிளம்பிட்டியா ஈஸ்வர். இப்போ தான் பேசிட்டு இருந்தோம் உன்னை!” என்றார் லதா.
“ஹ்ம்!” என பல்லவியையும் கண்டவன்,
“லாவண்யா வர்றாளாம் ம்மா!” என்றான்.
பேரைக் கேட்டதும் தனிச்சையாய் பல்லவி முகம் சுருங்க, சட்டென்று தன்னை தானே அதட்டி திருத்திக் கொண்டாள் அவளே. அதையெல்லாம் கவனிக்கவில்லை ஈஸ்வர்.
“வந்தா நான் சைட்டுக்கு போய்ட்டேன்னு மட்டும் சொல்லுங்க. எந்த சைட்னு சொல்ல வேண்டாம். அப்பா கேட்டா கூட அதேயே சொல்லுங்க. ரொம்ப பேசினா எனக்கு கால் பண்ண சொல்லுங்க நான் பேசிக்குறேன்!” என்று அவன் சொல்ல, ஏன் எதற்கு என எந்த கேள்வியும் இன்றி தலையாட்டினார் லதா.
“கொஞ்சம் பெரிய வேலை தான் இல்ல ம்மா?” என அன்னை முகம் கண்டு அவனே கனிந்து கூற,
“உனக்காக இது கூட பண்ண மாட்டேனா ஈஸ்வர்?” என்ற லதாவை பல்லவி கிண்டலாய் பார்த்து வைத்தாள்.
“ஹ்ம்! வர்றேன் ம்மா!” என்றவன் பல்லவியையும் திரும்பிப் பார்த்துவிட்டு வேகமாய் சென்றுவிட்டான்.
அவள் முன்னே சொல்லவா என்ற எண்ணம் தாண்டி அவனுக்கு இதை என்னவென்று அன்னையிடம் பகிர என்றே தெரியவில்லை.
லாவண்யாவின் இந்தவித கட்டளையான பேச்சு சுத்தமாய் பிடிக்கவில்லை. தான் அதிகமாய் நினைக்கிறோமோ என அதற்கும் தன்னையே அலசி ஆராய்ந்து பார்த்தான் அவன்.
லாவண்யா என்றால் அவள் எங்கும் எதற்கும் யாரிடமும் பணிவாய் எதையும் கேட்டுக் கொள்பவள் இல்லை. வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றாலும் கட்டாயப்படுத்தக் கூடாது தன்னை. நான் இப்படி தான் என்ற வகையறா. அது அவளின் குணம்.
இப்போது வரை லாவண்யா விஷயத்தில் அதிகமாய் யோசிக்காத கீர்த்திஸ்வரன் நேற்றில் இருந்து அவளை, அவள் குணனை, அவள் பேச்சை, தன்னிடம் அவளின் அணுகுமுறையை என ஒவ்வொன்றையும் கணக்கிட்டுக் கொண்டவனுக்கு என்னவோ அது எல்லாம் தன்னுடன் ஒட்டவில்லை என்றே தோன்றியது
திருமணம் செய்ய இருக்கும் பெண் என்ற இடத்தில் அவளை வைத்து தான் யோசிக்கின்றோம் என்ற எண்ணமும் அதன்பின் தான் தோன்றி, “ஹ்ம்! ஆமால்ல!” என்றும் நினைக்க வைத்தது.
நேற்று லாவண்யா தந்தை முன் மகேஸ்வரன் பேசியதை கேட்டதில் இருந்தே இந்த எண்ணம் தான் இதயத்தில்.
என்னவோ குறைகிறதாய் ஒரு சிந்தனை. என்னவென்று தான் பிடிபடவே இல்லை. அதிகமாய் யோசித்தால் தனக்கு திருமணம் இப்பொழுது வேண்டாம் என்றும் தோன்றியது.
மகேஸ்வரனிடம் கூட நேற்றைய இரவு பேசிப் பார்த்துவிட்டான். “இப்போ பண்ணலைனா என்ன பண்ண போற? அந்த ஆள் அவன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சே ஆகணும்னு நிக்குறான். அந்த பொண்ணும் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நிக்கிது. உனக்கு என்ன தான் வந்துச்சு?” என்றார் மகேஸ்வரன்.
அவருக்கான தொழில்முறை ஆதாயங்கள் அடிப்படையில் தான் மகேஸ்வரன் இந்த சம்மந்தத்தை முதலில் ஏற்றுக் கொண்டது.
இந்த திருமணம் மட்டும் நடந்துவிட்டால் இப்பொழுது இருக்கும் தன் கம்பெனியை விட மூன்று மடங்கு பெரிய கம்பெனியும் தனக்கு வந்து சேரும் என கணக்கீடு தான் முதலில் அவரின் எண்ணம்.
அதற்கே திருமணத்திற்கு தலையாட்டிவிட்டார். மகன் என்ன கூறுவான் என்ற எண்ணமெல்லாம் இல்லை. தான் கூறினால் கேட்டு தான் ஆக வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் எப்போதும் இருக்கிறதே அவரிடம்.
அன்னையிடமே தனக்கு என்ன வேண்டும் என்று கூற முடியாதவனுக்கு தந்தையிடம் அதைபம்பற்றி பேச கூட விருப்பமில்லை.
இப்பொழுது கூட தன் தோழி திருமணத்திற்கு என ஷாப்பிங் செல்ல கிளம்பிய லாவண்யா ஈஸ்வரையும் அழைத்துக் கொள்ள வருவதாய் போனில் சொல்லியவள் அவனின் பதிலை கூட கேட்காமல் வைத்துவிட்டதில் இன்னுமே கடுப்பாகிவிட்டான்.
அன்னையிடம் சொல்லிவிட்டு வேகமாய் கிளம்பி வெளியே வந்தபின் மூச்சு விட்டுக் கொண்டவனுக்கு தானாய் ஒரு எண்ணம். மகேஸ்வரன் அவரை மாதிரியே கேரக்டர் உள்ள பொண்ணை தான் பார்த்து வச்சிருக்கார். என்ன சொன்னாலும் தலையாட்டணும் போல என்று.
தான் தான் அதிகப்படியாய் கொஞ்சம் அதிகமாய் எதிர்பார்க்கிறோமோ இப்படி தான் இருக்குமோ என எண்ணம் முழுதும் அங்கேயே தான் சுழன்றது அவனுக்கு.
கீர்த்திஸ்வரன் கிளம்பி சென்ற ஒரு மணி நேரம் பின்னேயே அவன் வீடு வந்து நின்றாள் லாவண்யா.
அந்த நேரம் மகேஸ்வரனும் இல்லை. பல்லவி தனக்கும் லதாவிற்கும் என காபியோடு வந்தவள் லதாவிடம் ஒன்றை கொடுத்துவிட்டு கதைபேசி நிற்க,
“ஹை ஆண்ட்டி! ஈஸ்வர் இங்க இல்லையா?” என்று வந்ததும் லாவண்யா அவளே கேட்டு,
“ப்ச்! கால் பண்ணிட்றேன்!” என்று அவனுக்கு அழைத்துக் கொண்டு நிற்க, பல்லவி காபியை குடித்துக் கொண்டு கவனிக்காதவளாய் நின்றாள்.
“என் கால் எடுக்காம அப்படி என்ன வேலை?” லாவண்யா சொல்ல,
“இப்ப தான் வெளில கிளம்பிப் போனான் லாவண்யா. நீ வர்றதா சொன்னனு இவ்வளவு நேரமும் வெயிட் பண்ணினான். அவங்க அப்பா தான் ஏதோ வேலையா அனுப்பினாங்க!” என லதா கோர்வையாய் சொல்ல,
‘அவ்வா!’ என்று வாயில் கை வைத்தாள் பல்லவி. லதா கண்ணசைக்க,
“அப்படியா? ஆமா நான் மார்னிங்கே வர்றதா சொன்னேன். ஆனா தூங்கிட்டேன். அதான் லேட். இவ்வளவு நேரமும் வெயிட் பண்ணிட்டு தான் போனானா?” என அவளும் அப்பாவியாய் கேட்க, சிரிப்பு பொத்துக் கொண்டு தான் வந்தது பல்லவிக்கு.
“அவசரமா எங்கேயும் போனுமா லாவண்யா?” லதா கேட்க,
“ஆமா ஷாப்பிங் போகணும். ரெண்டு நாள்ல பிரெண்ட்க்கு மேரேஜ்!” என்றவள்,
“சரி நான் ஈவ்னிங் ஈஸ்வர்க்கு கால் பண்ணி ஜாயின் பண்ணி போயிக்குறேன்!” என்று அவளே முடிவு செய்து கொண்டு,
“வர்றேன் ஆண்ட்டி!” என்றவள் பல்லவியை முறைப்பதாய் பார்க்க, அசாராமல் எதிர் கொண்டாள் அவளும்.
“வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்பிட எதாவது குடுக்கணுமேனு மேனர்ஸ் இல்ல?” பல்லவியிடம் லாவண்யா கேட்க,
“லாவண்யா!” என லதா அழைக்கும் போதே,
“உடம்பு சரி இல்லாதவங்களைப் பார்த்தா இப்ப எப்படி இருக்குனு கேட்கணும்ன்ற மேனர்ஸ் தெரியாதவங்க தான் எனக்கு மேனர்ஸ் கத்து தர்ராங்களா?” என்று கூறி இருந்தாள் பல்லவியும்.
“முடிஞ்சது!” லதா தலையில் கை வைக்க,
“யூஉஉஉஉ!” என்று பல்லைக் கடித்தவள்,
“நான் ஈஸ்வர்கிட்ட பேசிக்குறேன்!” என்று சென்றுவிட்டாள்.
“உங்க பையன் இவங்க கால் வந்த அடுத்த நிமிஷம் வெளில ஓடிருப்பாங்க நினைக்குறேன். நீங்க என்னடான்னா இந்த புளுகு புளுகுறீங்க? இப்ப தான் கிளம்பினாரா?” பல்லவி லதாவிடம் கேட்க,
“என்ன பண்றது? ரெண்டு பேரையும் சமாளிக்கணுமே! இவகிட்ட உண்மையை சொல்லி இவ அப்படியே ஈஸ்வர் அப்பாகிட்ட கம்பளைண்ட் பண்ணிட்டா? அதான். ஒரு பாதுகாப்புக்கு அப்படி சொன்னேன். அவளும் சமாதானமாகிட்டா. ஆனா இப்ப டென்ஷனா தான் போறா இல்ல?” என்றவர் விழிக்க,
“இதெல்லாம் ஓவர் அம்மாக்கும் பையனுக்கும்!” என்றாள் பல்லவி.
error: Content is protected !!