Skip to content
Post Views: 4,350
அத்தியாயம் 11
கங்காவுக்குத் திருமணமான சமயம் ராஜு வெளிநாட்டில் இருந்தான். அவன் வெளிநாட்டிற்குச் சென்றதிலிருந்து அவனுக்கும் அவளுக்கும் இடையே தொடர்பு விட்டுப் போயிருந்தது. எனவே தான் திருமணத்தைப் பற்றி அவனுக்குத் தெரிவிக்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைக்கவில்லை. பின்னாலில் அதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் ஏற்படாமலேயே போய்விட்டது..
அதனால் தான் கங்காவின் திருமண வாழ்வு பற்றியும் சிவசந்திரன் பற்றியும் அவன் அறிந்திருக்கவில்லை.
“நான் கங்கா வினுஷா எல்லோருமே கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். எல்லோருமே நல்ல நண்பர்கள் அதிலும் கங்காவும் வினுஷாவும் பெஸ்ட் பிரண்ட்ஸ்” என்றான் ராஜு.
Advertisement
“இந்த வினுஷாவிற்கு உதவுவதற்காகத் தான் நீயும் கங்காவும் அந்த ஹோட்டலுக்குச் சென்றீர்களா?” என்று சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியின் பெயரை கூறி கேட்டான் சிவசந்திரன்.
சிவசந்திரன் அந்த ஹோட்டலை பற்றி விசாரித்த போது ராஜுவின் முகத்தில் கவலை படிந்தது. ஏதோ ஒரு கலவரத்தில் சிக்குண்டனைப் போலப் பதற்றமடைந்தான்.
“சார் இது வினுஷாவின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது” என்று மீண்டும் தடுமாறினான்.
Advertisement
“இதில் வினுஷாவின் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருப்பது மட்டும்தான் உனக்குத் தெரியும். அதன் பிறகு சிதைந்து போன எங்கள் இருவரது வாழ்க்கை பற்றி உனக்குத் தெரியாது அதனால் தயவு செய்து மேலே சொல். உண்மையில் அந்த ஹோட்டலில் என்ன நடந்தது? எதற்காக நீங்கள் அங்கே சென்றீர்கள்?” என்று அழுத்தமான குரலில் கேட்டான் அவன்.
Advertisement
சிதைந்து போன இருவரது வாழ்க்கையில் ஒன்று கங்காவின் வாழ்க்கையும் தான் என்பதால் அதற்கு மேல் எதையும் மறைக்காமல் அனைத்தையும் சொல்லத் தொடங்கினான் ராஜு.
“நானும் கங்காவும் அந்த ஹோட்டலுக்குச் சென்றது சிவரூபனை சந்திப்பதற்காகத் தான்”
Advertisement
“வாட்” என்று வெளிப்படையாகவே அதிர்ந்தான் சிவசந்திரன்.
“ஆமாம் சார் வசுந்தரா மேடத்தின் மகன் உங்கள் உடன்பிறவா சகோதரன் சிவரூபனும் எங்களுடன் ஒன்றாகப் படித்தவன் தான்” என்றான் ராஜு.
அவனுக்கு முற்றிலும் புதிய செய்தி இது மட்டுமல்ல, இனி அவன் தெரிந்து கொள்ளப் போகும் அனைத்துமே அவனுக்குப் புதிதுதான்!
“குணக்கேடன் நடத்தை கெட்டவன் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே சிவரூபன் தான். ஆனாலும் அவன் பணக்காரன் என்பதால் அவனுக்குத் துதி பாடி ‘ஜே’ போடவும் ஒரு கோஷ்டி இருந்தது. அப்படிப்பட்டவன் வினுஷாவை காதல் வலையில் சிக்க வைத்தான். நானும் கங்காவும் அவனைப் பற்றி எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் ஏற்க மறுத்துவிட்டாள்.
ஒரு நாள் வினுஷாவே கங்காவை தேடி வந்து சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறாள். அதன் பிறகு கங்கா என்னை அழைத்துச் சிவரூபனின் அன்றாட நடவடிக்கையைக் கண்காணித்து வரச் சொன்னாள். நானும் அவள் கேட்ட விபரங்களை எல்லாம் அவளிடம் வந்து கூறினேன்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் சிவரூபன் இருப்பான். இரவில் வெகு நேரம் அங்கே இருக்கும் பப்பில் இருந்துவிட்டு பின்னர் அங்கேயே ஓர் அறையில் தங்கி விடுவான்.
முழுப் போதையில் அவன் அறைக்குச் சென்ற நேரத்தில் நானும் கங்காவும் உள்ளே சென்று விட்டோம். உள்ளே சென்ற பிறகு பெண்களின் ஆடைகளைக் கொடுத்து என்னை அவனுக்கு அணிவிக்கச் சொன்னால் கங்கா. நானும் அப்படியே செய்தேன். பிறகு அவனை விதவிதமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்தோம், சிவரூபன் சுயநினைவே இல்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்தான். போன வேலையை முடித்துவிட்டு நாங்களும் வேகமாக வெளியேறி விட்டோம்.
அங்கே சென்று திரும்பும் வரை உண்மையிலேயே எதற்காகக் கங்கா இப்படி எல்லாம் செய்தாள் என்பது எனக்கே தெரியாது. பிறகு அவளிடம் கேட்ட போது தான் உண்மையைச் சொன்னாள். சிவரூபன் வினுஷாவுடன் நெருங்கி பழகிவிட்டு இப்போது அவளைத் திருமணம் செய்ய மறுத்திருக்கிறான். வினுஷா தொடர்ந்து அவனை வற்புறுத்தவும் இனி அவன் வழியில் குறுக்கிட்டால் இருவரும் நெருங்கி இருந்த சமயத்தில் வினுஷாவுக்கே தெரியாமல் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி இருக்கிறான். அதில் பயந்து போன வினுஷா கங்காவிடம் வந்து நடந்தவற்றைச் சொல்லி அவள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று அழுதிருக்கிறாள்.
அதனால் தான் வினுஷாவுக்காகக் கங்கா இவ்வளவு ரிஸ்க் எடுத்தாள். கங்கா சிவரூபனை எடுத்த புகைப்படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தாள். அவன் வினுஷாவின் புகைப்படங்களை வெளியிட்டால் சிவரூபனின் புகைப்படங்களையும் அதே வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டினாள். அவன் ஆணல்ல பெண் என்று வதந்தியை பரப்பி விடுவேன் என்றாள். அந்தப் புகைப்படங்களில் சிவரூபன் பெண் வேடத்தில் இருந்ததால் அவனும் கொஞ்சம் அடங்கி விட்டான். அதற்குப் பின்னால் அவன் கல்லூரிக்கு வரவில்லை. நாங்கள் எல்லோரும் படிப்பை முடித்துவிட்டோம். வினுஷாவுக்கு வேறொருவருடன் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் இப்போது அவள் எங்கள் யாருடனும், ஏன் அவளுக்காக இவ்வளவு உதவி செய்த கங்காவுடன் கூடத் தொடர்பில் இல்லை” என்று நடந்த அனைத்தையும் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சிவசந்திரன் கடந்த காலத்திற்கே சென்று விட்டான். நடந்த தவறுகளுக்கு யார் காரணம் யார் குற்றவாளி என்று அவனால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் முன்பை விடக் கங்கா அவன் மனதில் உயர்ந்து நின்றாள்.
“சிவரூபனை தவிர வேறு யாராலும் கங்காவிடம் பகைமை பாராட்ட முடியாது. கங்கா விலகிச் சென்ற போதும் அவன் தான் மீண்டும் மீண்டும் தேடி வந்து வம்பு வளர்த்தான். கங்காவை சீண்டுவதற்காகவே கல்லூரிக்கு வருவான் சிவரூபன். கங்காவின் அசைன்மென்ட் ரெக்கார்ட் நோட்டுகளைக் கிழித்து விடுவான், கல்ச்சுரல்ஸ் விழாவில் அவள் பரதம் ஆட வந்தால் பரதநாட்டிய பாடலுக்குப் பதிலாகப் பாப் மியூசிக்கை மாற்றி விடுவான். கங்கா பாப் பாடலுக்கும் தகுந்தபடி பரதமாடி எல்லோரின் பாராட்டுகளையும் பெற்று விடுவாள். சிவரூபன் எவ்வளவு தொல்லை கொடுத்த போதிலும் இறுதியில் வெற்றி பெறுவது என்னவோ கங்காவாகத் தான் இருக்கும். கங்காவை தோற்கடிப்பதும் அசிங்கப் படுத்துவதும் தான் அவனுடைய லட்சியம். அது தெரிந்தும் கங்கா அவனை அலட்சியமாகவே நினைத்தாள்.
சார் உங்களுக்கும் கங்காவுக்கும் என்ன உறவு என்ன பகை என்று எனக்குத் தெரியாது உங்களைப் பற்றிக் கூட எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் கங்காவை பற்றி நன்றாகத் தெரியும். அவள் யாருக்கும் தீங்கு செய்தது கிடையாது, அவளுக்கு நல்லது மட்டும் தான் செய்யத் தெரியும். இப்போது நான் இந்த நிலைமையில் இருப்பதற்குக் காரணமே அவள்தான். நான் கல்லூரி படிப்பை படித்தது கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப்பில் தான் ஆனால் அதைத் தாண்டிய கல்வி செலவுகளும் நிறையவே இருந்தது. அதற்கெல்லாம் எனக்கு உதவி செய்தது கங்கா தான். படிக்கும் காலத்தில் அவளுக்குக் கிடைத்த ஊக்கத்தொகை பரிசுத் தொகை என எல்லாப் பணத்தையும் எனக்குக் கொடுத்து விடுவாள். கடைசியாக எனக்கு ஜப்பானில் வேலை கிடைத்தது கூட அவள் விட்டுக் கொடுத்ததினால் தான். முதலில் அந்த வேலைக்குத் தேர்வானதே கங்கா தான் அந்த வேலை எனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அவள் அதை மறுத்து விட்டாள். மற்றவர்களுக்குக் கங்கா நல்ல தோழி நலம் விரும்பி என்றால் எனக்கு அவள் தெய்வத்திற்குச் சமமானவள்” என்றான்.
ராஜு விடைபெறும் முன், “சார் கடைசியாக நீங்கள் என்னை அதிகப் பிரசங்கி என்று நினைத்தாலும் நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன் எதை இழந்தாலும் கங்காவை மட்டும் இழந்து விடாதீர்கள்” என்றான்.
இவ்வளவு தாமதமாகவா அவன் இந்த வார்த்தைகளைக் கேட்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு இதை யாராவது அவனுக்குச் சொல்லி இருக்கக் கூடாதா! ஆனால் அவளை இழந்து தான் அவன் ஞானம் பெற வேண்டும் என்பதுதான் விதி போலும் என்று தன்னையே நொந்து கொண்டான்.
கங்கா அவன் மாடத்தின் மணி விளக்கு, வறியவனுக்குக் கிடைத்த ரத்தின குவியல். அவள் பிரிந்து சென்றபோதே அவன் வீடு மட்டுமல்ல அவன் வாழ்க்கையும் இருண்டு விட்டது. இப்போது அவனுடைய வாழ்வு திசை மாறிய படகை போலத்தான் அது கரை சேர்வதும் கவிழ்ந்து போவதும் இனி காலத்தின் கையில்!
இப்போது அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது, ஒன்றைத் தவிர! அதைத் தெரிந்து கொள்வதற்காக வசுந்தராவை சந்திக்க நினைத்தான். பள்ளி நேரம் முடிந்தவுடன் வசுந்தராவை அழைத்துச் செல்வதற்காக டிரைவர் காத்திருந்தார். அவரிடம் தானே அவரை அழைத்து வருவதாகக் கூறி திருப்பி அனுப்பி விட்டுக் காத்திருந்தான். வசுந்தரா வந்து டிரைவரை தேடவும், “டிரைவர் அப்போதே வீட்டுக்கு சென்று விட்டார், நானே உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன். ஏறிக் கொள்ளுங்கள்” என்று கார் கதவை திறந்து விட்டான்.
அவன் தன்னிடம் எதையோ பேச விழைவது அவருக்கும் புரிந்தது மறுப்பின்றிக் காரில் ஏறிக்கொண்டார்.
சற்று நேரத்தில் அவன் காரை நிறுத்திய இடம் ஊருக்கு வெளியே இருந்த அவர்களுடைய தோப்பு. மாலை வேளையில் காவலாளிகளைத் தவிர மற்ற வேலையாட்கள் யாரும் அங்கே இருக்க மாட்டார்கள். வசுந்தராவுடன் தனியே பேசுவதற்காகத் தான் அவன் அங்கே அழைத்து வந்திருந்தான். அவன் காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்கிக் கொள்ள அவனைப் பின்பற்றிய வசுந்தரா, “என்ன விஷயம் பேச வேண்டும் சொல்லுப்பா” என்று கேட்டார்.
“நானும் கங்காவும் கணவன் மனைவி என்பது உங்களுக்கு முன்பே தெரியுமா?” என்று கேட்டான்.
ஒருவேளை நூற்றில் ஒரு பங்காக வசுந்தராவுக்கு இந்த உண்மை எதுவும் தெரியாமல் இருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தான் அவருடன் தனியே பேச நினைத்தான் ஆனால் அவனது எண்ணத்தைப் பொய்யாக்கி, “தெரியும்” என்றார் வசுந்தரா.
அவன் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை. இது ஓரளவு அவன் எதிர்பார்த்ததுதான் இல்லாவிட்டால் இப்போது அவன் பள்ளியில் எடுக்கும் எந்த முடிவையும் எதிர்க்காமல் இருப்பவர் கங்கா விஷயத்தில் மட்டும் அவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே!
“அவ்வளவு தான் தெரியுமா அல்லது எங்கள் பிரிவு அதற்கான காரணம் அதைப் பற்றியும் தெரியுமா” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
இதுவரை சலனம் இல்லாமல் இருந்த வசுந்தராவின் முகத்தில் சின்னதாக ஒரு மாற்றம் வந்தது. “அதுவும் தெரியும்” என்றார் சன்னமான குரலில்.
“எப்படித் தெரியும்?”
“சிவரூபன் மூலமாகத்தான் அதுவும் அவன் இறக்கும் தருவாயில் தான் கூறினான்”
“அப்படியே இருக்கட்டும், ஆனால் உங்கள் மகன் இறந்து அதன் பின்னர் நான் இங்கே வந்து சேர்ந்த இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூடவா என்னிடம் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லை” என்று குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான் சிவசந்திரன்.
“முதலில் எனக்குக் கங்காவை பற்றி மட்டும் தான் தெரியும். அவளைப் பற்றி விசாரித்து முழுமையான விபரத்தை சேகரித்த போது தான் அவள் உன் மனைவி என்பதைத் தெரிந்து கொண்டேன்” என்று சூழ்நிலையை விளக்கினார் வசுந்தரா.
“அதைத்தான் நானும் கேட்கிறேன் ஏன் என்னிடம் சொல்லவில்லை” என்று ஆதாங்கப் பட்டவன், “அதுவும் நான் இருக்கும் இடத்திற்கே என் மனைவியை வரவழைத்தவர் அதை ஏன் எனக்கு மறைத்துச் செய்ய வேண்டும் எனக்கு எதிராக என் மனைவியை வைத்தே சதி செய்வதற்காகத் தானே?” என்று பழி சுமத்தினான் சிவசந்திரன்.
அவன் பேச்சு மனதை வருத்த, “இதற்காகத்தான் நீ இப்படியெல்லாம் பேசுவாய் என்பதற்காகத் தான் அவளைப் பற்றி உன்னிடம் சொல்லாமலேயே வரவழைத்தேன். ஏற்கனவே நீ அவளை வெறுத்து பிரிந்து இருப்பவன் அதைவிடப் பன்மடங்கு என்னை வெறுப்பவன். நான் வந்து கங்காவை பற்றிய உண்மைகளைக் கூறியிருந்தாலும் கூட நீ எப்படி நம்பியிருப்பாய் அது கூட நான் செய்யும் சதி என்று தானே நினைத்திருப்பாய். அதனால்தான் கங்காவை பற்றிய உண்மைகளை நீ தானாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்” என்றார் வசுந்தரா.
அவர் கூறிய காரணமெல்லாம் அவனுக்கு ஏற்றுக் கொள்ளும் படியாக இருக்கவில்லை. “அது எப்படித் தானாகவே தெரிய வரும் சுடர் விளக்கமாக இருந்தாலும் தூண்டுகோல் வேண்டுமே. இப்போதும் நீங்கள் நினைத்த மாதிரி தானாக எதுவுமே தெரியவில்லை நானாக முயன்று தான் தெரிந்து கொண்டேன். நான் உங்கள் மகனாக இருந்திருந்தால் இவ்வளவு விட்டேற்றியாக இருந்து இருப்பீர்களா?” என்றான் அவன் கைத்த குரலில்.
“இதில் நான் உன்னைப் பற்றி மட்டும் யோசிக்க முடியாது சந்துரு. கங்காவை பற்றியும் யோசிக்க வேண்டும். இனி இந்த வாழ்வை தொடர வேண்டுமா என்பதைப் பற்றி அவள் தானே முடிவு எடுக்க வேண்டும்” என்றார் வசுந்தரா தெம்பிழந்த குரலில்.
“ஓ பெண்ணியமா!” என்று சிலாகித்துக் கொண்டவன் “உங்கள் மகன் செய்த தவறுக்கு நீங்கள் பிராயசித்தம் தேடிக் கொண்டீர்கள். கங்காவின் நல்வாழ்வுக்காகப் பாடுபடுகிறீர்கள். உங்கள் உயிரினும் மேலான அந்த உயிரற்ற பள்ளிக்கூடத்திற்குக் கூடக் கங்கா தான் எதிர்காலம் என்று ஓர் எதிர்காலத்தை நியமித்து விட்டீர்கள் ஆனால் என்னைப் பற்றி எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?” என்று அவன் கேட்டபோது வசுந்தரா முழுமையாக உடைந்து விட்டார்.
“மானம் மரியாதை இழந்து மனைவியைப் பிரிந்து அனாதை போல் சுற்றித் திரியும் என்னைப் பற்றி ஒரு நாளாவது கவலைப்பட்டு இருப்பீர்களா? எல்லா உண்மையும் தெரிந்த பின்னரும் கூட நீங்கள் மௌனமாக இருந்தது எதற்காக? என்னை இன்னும் இன்னும் தண்டிப்பதற்காகத் தானே?” என்று கோபத்துடன் தொடங்கியவன் மனக் குமுறலுடன் முடித்தான்.
அவனுடைய கோபமும் குமுறலும் வசுந்தராவின் மனதை பாதித்தது.
“இல்லை சந்துரு” என்று தடைப்பட்ட குரலில் வார்த்தைகளைத் தேடினார் வசுந்தரா.
“கங்கா இங்கே வந்த பின்னர் கூட அவளை எப்படி நடத்தினேன், எவ்வளவு இழிவாகப் பேசி விட்டேன், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வாய்த் திறவாமல் இருந்து விட்டீர்கள் இல்லையா? கடைசியில் நீங்கள் நல்லவராகி என்னைப் பாவியாக்கி விட்டீர்கள்” என்று வறண்ட குரலில் பேசியவன் விரத்தியுடன் காரில் ஏறிக்கொண்டு ஹாரன் அடித்தான். தளர்ந்த நடையுடன் வசுந்தராவும் வந்து ஏறிக் கொண்டார்.
அவரை வீட்டில் இறக்கிவிட்டு அவன் சென்று விட்டான். அவன் பேசிய வார்த்தைகள் அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவன் பேசிய அத்தனையும் நியாயமானது தான். அதில் தவறே சொல்ல முடியாது. எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தபடியே எதிலோ சறுக்கி விட்டார் வசுந்தரா. அவன் சொன்னது போலக் கங்காவைப் பற்றி யோசித்த அளவு கூட அவர் சிவசந்திரனை பற்றி யோசிக்கவில்லை.
அவன் நல்லவனோ கெட்டவனோ அவன் மனைவியைப் பற்றிய விஷயத்தை முதலில் அவனிடம் தான் தெரிவித்திருக்க வேண்டும் அது தான் முறை. அதிலிருந்து தன் தவறுகளைச் சரி செய்து கொள்வதும் மாறாக எதையும் நம்பாமல் முரண்டு பிடிப்பதும் அவனுடைய தனிப்பட்ட விருப்பம். குறைந்தபட்சமாகக் கங்கா இங்கே வருவதாக முடிவான பிறகேனும் சொல்லி இருக்கலாம். வசுந்தரா முன்பே எல்லா விஷயத்தையும் சொல்லி இருந்தால் கங்கா இங்கே வந்த பிறகு அவன் அவளிடம் அவ்வளவு கடுமையாக நடந்து கொண்டிருக்க மாட்டான். இது ஏற்கனவே பகையில் இருந்தவர்களுக்கு மத்தியில் இன்னும் விரிசலை தான் அதிகப்படுத்தும். இவ்வளவு சின்ன விஷயத்தை யோசிக்கத் தவறியது மாபெரும் பிழையாகவே தோன்றியது வசுந்தராவுக்கு.
உண்மையில் சிவசந்திரன் வசுந்தரா பெற்ற மகனாக இருந்திருந்தால் அவன் விஷயத்தில் இவ்வளவு பொறுப்பற்று அவரால் நடந்து கொண்டிருக்க முடியுமா? ஆனால் அப்படி இல்லையே பெற்ற மகனை விடவும் சிவசந்திரனைத் தானே அவர் உயர்வாக நினைத்தார். அதனால் தானே அவனை ‘ஜெ எம் டி’ ஆக்கினார். கங்காவை இங்கே வரவழைத்தது கூட அவருடைய சுயலாபத்திற்காக இல்லையே அவனுக்கும் கங்காவுக்கும் இடையே இருக்கும் திரை விலக வேண்டும் என்பதற்காகத் தானே. ஆனால் அது தானாக விலகுவது தான் அவர்களுக்கு நல்லது என்று நினைத்தது மட்டும் தான் அவர் செய்த தவறு.
சிவரூபன் அவரைத் தாயாக மதித்ததே இல்லை. சிவசந்திரனுக்கு அவருடைய அன்பு புரியவில்லை. அப்படியானால் அவருடைய தாய்மையில் குறை இருக்கிறதோ என்று அவர் மனம் பரிதவித்தது!
error: Content is protected !!