Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 19

அத்தியாயம் 19

அன்று ஞாயிற்றுக்கிழமை. கெளதம் ஆலுவலகத்தில் ஆண்டு விழா. இன்றைய விழாவில், அவனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த எம்ப்ளாயிக்கான விருது வழங்கப்படுகிறது. அந்த விழா இன்று மாலை பிரபல ஹோட்டலில் நடக்கவிருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் புறப்படவேண்டி இருப்பதால், தேஜாவை குளிப்பாட்ட வேண்டி, குழந்தையை மிருதுளா தேட, அவளோ அவளின் சித்தியுடன் விளையாடி கொண்டிருந்தாள். அவளைத் தூக்கி வந்து, தண்ணீரை பார்த்ததும் சேட்டை செய்யும் அவளைக் குளிப்பாட்டி, உடைமாற்றி விடுவதற்குள் ஒருவழியாகி விட்டாள் மிருதுளா.

குழந்தையை ஆராவிடம் ஒப்படைத்துவிட்டு, இவள் தயாராகி முடிக்கவும், அறைக்கு வந்த கெளதம், “அம்மு, எனக்கு டிரஸ் எடுத்து வச்சுடு.” என்று கூறிவிட்டு அவன் குளிக்கச் சென்றுவிட, அவனிடம் மூன்று சூட்கள் இருக்க, அதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு பட்டிமன்றமே நடத்தி முடித்தவள், முடிவில், கருப்பு கலர் கோட்டும், வெள்ளை நிற உள் சட்டையும் கொண்ட, சூட்டை எடுத்து வைத்தாள்.

இவள் தேர்ந்தெடுப்பதற்குள், கெளதம் குளித்து முடித்தே வந்துவிட்டான். வந்தவன், பூனை நடை நடந்து வந்து, மிருதுளாவை பின்பக்கத்தில் இருந்து அணைக்க, அதில் திடுகிட்டவள், “சொல்லிட்டு வர கூடாதா, நான் பயந்தே போயிட்டேன்.” என்று பதற, “இதுக்கெல்லாம் சொல்லிட்டு வரகூடாதுடி, என் மக்கு பொன்டாட்டி.” என்றவன் அவள் கூந்தலை வாசம் பிடிக்க, அவனை வலுகட்டாயமாகத் தன்னிடம் இருந்து பிரித்தவள், “மொதல்ல கிளம்புங்க. டைம் ஆச்சு.” என்றுவிட்டு நகரபோக, அவள் கைகளைப் பிடித்து இழுத்தவன், துண்டை எடுத்து அவள் கையில் கொடுத்து, “உன் பொண்ணை ரெடி பண்ணல, அதே மாதிரி உன் புருஷனையும் ரெடி பண்ணு.” என்றவன் அவள் துவட்டுவதற்கு வசதியாக, தலையைக் காட்ட, அவனின் குழந்தை போன்ற பாவனையில் புன்னகைத்தவள், சிரிப்புடன் அருகில் சென்று அவனது தலையைத் துவட்டிவிட்டாள்.



Advertisement

மிருதுளா துவட்டும் வரை அமைதியாக இருந்தவன், அவள் கவனிக்காத நேரம், அவள் வயிற்றில் ‘ஊஃப்’ என்று காற்றை ஊத, அதில் துள்ளி விலகியவளை பார்த்து இவன் வாய்விட்டு சிரிக்க, “இன்னைக்கு ஒரு மார்கமா தான் இருக்கீங்க.” என்று புன்னகையுடன் மிருதுளா சொல்ல, “கரக்டா கண்டு பிடிச்சிட்டியே அம்மு, இதுக்காகவே இன்னைக்கு நைட் உனக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கப் போறேன்.” என்று விஷமமான சிரிப்புடன் பதிலளித்தான் கெளதம். “ஹம்!! கொடுப்பீங்க……..கொடுப்பீங்க.” என்று பதிலுக்குச் சொன்னவள், துண்டை அவன் மீது வீசிவிட்டு, “இதுக்குப் பனிஷ்மென்ட், நீங்களே ரெடி ஆகுங்க.” என்று பழுப்பு காட்டியவள், கதவை அடைத்துவிட்டு வெளியேறினாள்.

கலட்டாவுடன் ஒருவழியாக மூவரும் கிளம்பி கௌதமின் காரில், விழா நடக்கவிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றனர். காரை பார்க் செய்துவிட்டு, மிருதுளா, தேஜாவுடன், இவன் உள்ளே நுழைய, வாசலில், அவனின் மேல் அதிகாரி அவனிடம் வர, அவரிடம் மனைவி குழந்தையை அறிமுகம் செய்தவன், சில நிமிடங்கள் பேசிவிட்டு, இருக்கையைத் தேடிப் பிடித்துக் குடும்பத்துடன் அமர்ந்தான். அதன் பின், அரை மணிநேரத்தில் விழா ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடந்த விழாவில், இறுதியில் பெஸ்ட் பெர்ஃபார்மர் அவார்ட் கௌதமுக்கு அறிவிக்கபட, மிகுந்த கரகோஷம் அங்கே. பக்கத்தில் அமர்ந்திருந்த, அவனின் நண்பர்கள் எல்லாம் இவனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல, புன்னகையுடன் அவற்றை ஏற்றவன், மிருதுளாவை பார்த்து புன்னகைத்துவிட்டு, மேடைக்குச் சென்று விருதை வாங்கிக்கொண்டான். அவன் விருது வாங்குவதில் மிகுந்த பெருமை அடைந்த மிருதுளா, சந்தோஷத்துடன் கைகளைத் தட்டியவள், குழந்தை தேஜாவின் கையை எடுத்து, “அம்மு குட்டி, அப்பாக்கு ப்ரைஸ் தராங்க பாருங்க. கிளாப் பண்ணுங்க.” என்று கூறி அவளின் கையை எடுத்து கைத்தட்ட வைத்தவளை, மேடையில் இருந்தே பார்த்தான் கெளதம். விருதை வாங்கியவன் இவர்களை நோக்கி புன்னகையை வீசினான்.

இனிதே விழா முடிந்து அனைவருக்கும் ‘பஃப்பே’ முறையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன், உரையாடிக்கொண்டு, உணவருந்திக் கொண்டிருக்க, தேஜாவோ, மிருதுளாவின் தட்டில் இருப்பதை விரல்களில் எடுத்து தன் வாயில் போடுவதும், பெற்றோருக்கு ஊட்டிவிடுவதும், கீழே சிந்துவதும் என்று சேட்டை செய்துகொண்டிருக்க, பிங்க் நிற பார்பி பொம்பை போல அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தையயை எல்லோரும் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். “பாப்பா செம்ம கியூட்டா இருக்கா.”, “பொண்ணு அப்படியே அவங்க அம்மா மாதிரி.” என்ற பேச்சுக்கள் அந்த இடத்தைச் சுவாரசியமாக்கியது.

Advertisement

தேஜாவை, அமைதியாக இருக்கவைக்கக் கௌதமும் மிருதுளாவும், படாதபாடு பட்டனர். தங்களோடு சேர்ந்து குழந்தைக்கும் ஊட்டிவிட்டு, ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்ததும், தேஜாவை கௌதமிடம் கொடுத்துவிட்டு தட்டுகளை வைத்துவிட்டு வந்தாள் மிருதுளா. அடுத்துக் கெளதம் கூல்ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருந்த நேரம், தேஜாவோ, ‘எனக்கு’ என்பது போல அவன் க்ளாசை பிடித்து இழுத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் க்ளாசில் இருந்த கூல்ட்ரின்ங் அவன் சட்டையிலும் குழந்தையின் ஆடையிலும் கொட்டியது.

Advertisement

“வரவர இவளுக்கு ரொம்பச் சேட்டை ஆகிடுச்சு.” என்றபடி குழந்தையை அவனிடம் இருந்து மிருதுளா வாங்கிக்கொள்ள, மூவரும் சற்று தள்ளி இருந்த கைகழுவும் இடத்திற்குச் சென்றனர். கர்சீபை தண்ணீரில் நனைத்து அவனின் சட்டையைத் துடைத்து விட்ட மிருதுளா, அடுத்து தேஜாவின் உடையைத் துடைத்துகொண்டிருக்க, கௌதமின் அலுவக கொலீக் அவனிடம் வந்து மேல் அதிகாரி அழைப்பதாகச் சொல்ல, “ரிது, நீ பாப்பாவோட அதோ அங்க இருக்கிற சேரில உட்கார்ந்திட்டு இரு. இதோ வரேன்.” என்றுவிட்டுச் சென்றான்.

கெளதம் சொன்னதுபோலத் தேஜாவின் உடையைத் துடைத்துவிட்டு, தூரத்தில் இருந்த அந்தச் சேரில் சென்று அமர்ந்துகொண்டாள். தேஜாவின் டிரெஸ்ஸை மிருதுளா, காற்றில் உளற வைத்துக்கொண்டிருக்க, அவளோ தாயிடம் இருந்து திமிறி இறங்கி ஓட, அவளைத் துரத்திக்கொண்டு சென்றவள், குழந்தையைப் பிடித்துத் தூக்கி நிமிர, அப்பொழுது, “மிருதுள!” என்ற குரல் பின்னால் இருந்து கேட்கவும், திரும்பி இவள் பார்க்க, எதிரில் நின்றிருந்தவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

மிருதுளாவின் முன்னால் கணவன் சந்துரு, அவள் எதிரில் நின்று கொண்டிருந்தான். மிருதுளா குழந்தையுடன் இருப்பதைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டவன், அவளைத் தேடி அருகில் வந்தான். கிட்டத்தட்ட ஒன்றை வருடங்கள் கழித்து அவளைப் பார்த்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. ஆவலுடன் அவள் அருகில் வந்தவன், “மிருதுளா!” என்று அழைக்க, அவனைப் பார்த்ததில் அதிர்ந்து தான் போனாள் மிருதுளா. சந்துருவை அங்கு எதிர்பார்க்காதவள், அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், குழந்தையை இறுக அணைத்து கொண்டவள், அந்த இடத்தை விட்டு நகரப் போக, “மிருதுளா ஃப்ளீஸ். உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று அவன் சொல்லவும், வேறு வழியில்லாமல் அங்கேயே நின்றாள்.

Advertisement

மிருதுளா போகாமல் நின்றதும் நிம்மதி அடைந்தவன், “எப்படி இருக்க, மிருதுளா?!” என்று கேட்க, இவளோ, “ஹம், நல்லா இருக்கேன்.” என்றதோடு நிறுத்திக்கொண்டாள். பதிலுக்கு அவன் எப்படி இருக்கிறான் என்று கேட்கவில்லை. இருந்தும் அவன் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. தனது குரலை செருமி கொண்டவன், வருத்ததுடன், “என்னை மன்னிச்சுடு மிருதுளா. நான் செஞ்சது ரொம்பப் பெரிய தப்பு. யாரோ சொன்னதை நம்பி அன்னைக்கு உன்னை என்னனவோ பேசிட்டேன். ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மிரு. எவ்ளோ மன்னிப்புக் கேட்டாலும் நீ அன்னைக்குப் பட்ட கஷ்டத்துக்கு ஈடாகாது. இருந்தும் மனசார மன்னிப்புக் கேட்கிறேன் மிரு.” என்றவனின் பார்வை குழந்தை தேஜா மேல் படிந்தது.

‘ஒஹ் இவளுக்குப் பெண் குழந்தாய் பிறந்திருக்கா.’ என்று நினைத்தவன், தேஜா மிருதுளாவுக்குப் பிறந்த குழந்தை என்று எண்ணினான். ஏனெனில், அன்று குழந்தை பிறக்க இருந்த நேரத்தில் தானே, இவளை விட்டுச் சென்றான். அதுவும், பலபேர் முன்னாடி தான் கட்டிய தாலியை அறுத்தெரிந்துவிட்டு.

தன் நினைவில் இருந்து வெளியே வந்தவன், “முன்ன மாறி நான் இப்போ இல்லை மிரு. திருந்திட்டேன். முழுசா திருந்திட்டேன். எல்லா உண்மையும் தெரிஞ்ச பின்னாடி, எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டோம்ன்னு நான் ரொம்ப நொந்து போயிட்டேன் மிரு. இப்போ நான் தனியா தான் இருக்கேன். எல்லாத்துக்கும் காரணம் என்னோட அம்மா தான்னு தெரிஞ்சதும், அம்மாவை விட்டு பிரிஞ்சு வந்துட்டேன். இதுநாள் வரை ஒரு வார்த்தை கூட அவங்ககிட்ட பேசலை. அதுல இருந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு, சென்னைல எல்லா இடத்துலையும் உன்னைத் தேடினேன். உன்னோட வீட்டு அட்ரெஸ் கூட எனக்குத் தெரியாது மிரு. தேன்ங் காட். இப்போ உன்னைப் பார்த்துட்டேன்.” என்றவன் சிறு இடைவெளிவிட்டு, “உன்னை எப்படியாவது கண்டுபிடிச்சு, உன்னோட சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசைபட்டேன் மிரு. ஒருவழியா எனக்கு நீ கிடைச்சிட்ட. என்னை மன்னிச்சு ஏத்துப்பியா மிரு. ஃப்ளீஸ்.” என்று ஏக்கத்துடன் கேட்டான்.

அவன் ‘சேர்ந்து வாழணும்னு ஆசைப்பட்டேன்.’ என்று சொன்னதிலேயே அதிர்ந்து பார்த்தவள், அடுத்து அவன், ‘என்னை மன்னிச்சு ஏத்துப்பியா’ என்று சொன்னதும் மறுத்து பேச போக அதற்குள், “ரிது! இங்க இருக்கியா!” என்று கேட்டுக்கொண்டே, மிருதுளா நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான் கெளதம்.

வந்தவன், “இங்க என்ன பண்ணிட்டு இருக்க அம்மு?!” என்ற கேள்வியுடன், எதிரில் நின்றிருந்த சந்துருவை பார்த்தவன், “யாரு ரிது இவரு?!” என்று கேட்க, “இவரு சந்துரு.” என்று பதிலளித்தாள் மிருதுளா. அவள் குரலிலேயே ‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை’ என்ற செய்தி இருக்க, அதைப் புரிந்துகொண்ட கெளதம், “ஒஹ்! சந்துரு வா!” என்று கேட்டுவிட்டு, அவனிடம் திரும்பி, “ஹாய் சந்துரு. ஐயம் கெளதம்.” என்று கூறிவிட்டு கையை நீட்ட, சந்துருவோ, கேள்வியாகக் கௌதமை பார்க்க, அவனின் பார்வையைப் புரிந்துகொண்டவன், அவன் கண்முன்னே, மிருதுளாவின் இடுப்பில் கைவைத்து அணைத்தவாறு, “நான் மிருதுளாவோட ஹஸ்பன்ட்.” என்று புன்னகையுடன் கூறவும், ‘மிருதுளாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா!!‘ என்று அதிர்ந்தான் சந்துரு.

இருந்தும் தன்னைச் சமாளித்துக் கொண்டவன், கஷ்டப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, “ஹாய்!” என்று புன்னகையுடன் பதிலுக்குக் கை நீட்ட, கைகுலுக்கிய கௌதமின் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது. சில நொடிகள் குலுக்கிவிட்டு, சிரிப்புடனே கையை விட்ட கெளதம், மிருதுளாவிடம் திரும்பி, “டைம் ஆச்சு அம்மு. கிளம்பலாமா.” என்று கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்க, இடுப்பில் இருந்த அவன் கையின் அழுத்தத்திலேயே அவனின் கோபம் இவளுக்குப் புரிய, சரி என்பது போலத் தலை அசைத்தவள், சந்துரு பக்கம் திரும்பாமலே, நடக்க, கெளதமோ, “குட் பை சந்துரு.” என்றபடி பொய்யான புன்னகையுடன் விடைபெற்ற கெளதம், மிருதுளாவுடன் அங்கு இருந்து கிளம்பி சென்றான்.

போகும் கௌதமையே கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சந்த்ரூவிற்கு, மிருதுளாவின் இடுப்பில் இருந்த அவனின் கை, கோபத்தை உண்டாக்கியது. “அதுக்குள்ள என்னை மறந்துட்டு இன்னொருத்தனை கட்டிபிடிக்கிற அளவுக்கு வந்துட்டியா.” என்றவனின் முகம் பொறாமையில் கொழுந்துவிட்டு எரிந்தது.

மிருதுளாவிற்கு இரண்டாம் திருமணம் ஆகி இருக்கும் என்று சந்துரு சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் மிருதுளாவை பிடிக்காமல் தான், அவளை விட்டு பிரிந்து சென்றான். ஆனால் என்றைக்கு அந்த ஃபைலில் இருந்த செய்தியை பற்றிய உண்மை அவனுக்குத் தெரியவந்ததோ, அதிர்ந்து போனான். தப்பு தன் மேல் இருக்க, மிருதுளாவின் மேல் பழியைப் போட்டு, அவளைப் பிரித்து வைத்ததை நினைத்து நொந்துபோனான். அதன் பிறகு எப்படியாவது அவளை மீண்டும் தன்னுடன் சேர்த்துகொள்வதே அவனுக்கு அப்போதைக்கு இருந்த ஒரே வழி. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அதன்படி உறவினர்கள் மூலம் அவளது பெற்றோர் வீட்டு முகவரியை தெரிந்துகொண்டு அங்கே இவன் போக, அவர்கள் வீட்டில் வேறு யாரோ இருந்தனர்.

பெங்களூருவில் வேலை செய்து வருவதால், அடிக்கடி லீவ் போட்டு அவனால் சென்னைக்கு வர முடியாமல் போக, கிடைக்கும் நேரம் மிருதுளாவை பற்றி விசாரித்தான். அப்பொழுதுதான் இரு குடும்பத்துக்குத் தூரத்து சொந்தமான ஒருவரின் மூலம், ஆராவிற்கு வேலை கிடைத்து மொத்த குடும்பமும் பெங்களுர் வந்திருப்பது தெரிந்தது. அந்தச் செய்தி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இங்குத் தானே இருக்கிறாள். எப்படியும் ஒரு நாள் கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்திருந்தவனுக்கு, அதிர்ஷ்டவசமாக இன்றைய சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அவளுக்கும் கௌதமிற்கும் திருமணம் ஆன விஷயம் இவனுக்குத் தெரியாது.

இன்றைய விருது வழங்கும் விழாவிற்கு அவனுடைய கம்பனியும் வந்திருக்க, அங்கு வேலை செய்வதால் இவனும் இன்றைய விழாவில் பங்கேற்க வந்திருந்தான். விழா முடிந்து, நண்பர்களுடன் சாப்பிட்டு முடித்தவன், கைகழுவிவிட்டு வரும்போது தான், தேஜாவை துரத்திக்கொண்டு மிருதுளா வருவதைச் சற்று தள்ளி இருந்து பார்த்தான். ஆராவும் ஐ.டி துறையில் வேலை செய்வதால், ஒருவேளை அவள் இந்த விழாவிற்கு வந்திருக்கக் கூடும். அவளோடு மிருதுளாவும் வந்திருப்பாள் என்று நினைத்தான். அத்தோடு அவள் கையில் இருந்த தேஜாவையும் மிருதுளாவின் குழந்தை என்றே நினைத்திருதான்.

தான் இத்தனை நாள் கனவு கண்டதை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்று நினைத்தவன், இன்று எப்படியாவது மிருதுளாவிடம் பேசி, அவளைச் சம்மதிக்க வைத்து, தேஜாவையும் அவளையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று முடிவு செய்து தான் மிருதுளாவிடம் வந்து பேசினான். ஆனால் அவள் கணவன் என்று சொல்லிக்கொண்டு கெளதம் வருவான் என்று சற்றும் எதிர்பார்க்காதவன், தன் கண்முன்னே அவன் அவளை அணைத்துக்கொண்டு சென்றதை பார்க்கும்பொழுது, ‘தான் உபயோகித்ததை வேறு ஒருவர் பயன்படுத்தக் கூடாது என்ற அவனின் கேவலாமான குணம் தலை தூக்க, எங்கே மிருதுளாவை இழந்துவிடுவோமோ! எங்கே தன் கவுரவத்தை இழந்துவிடுவோமோ! என்ற அச்சத்தில் அவன் புத்தி வேறு வழியில் யோசிக்க ஆரம்பித்தது. “கூடிய சீக்கிரத்தில் உனக்கு ஆப்பு வைக்கிறேன்.” என்று மனதுக்குள் வன்மத்துடன் நினைத்தவன், போகும் அவர்களை முறைத்துவிட்டுச் சென்றான்.

கெளதம், காரை வீட்டை நோக்கி ஓட்டிக்கொண்டிருக்க, அவனின் முகமோ கட்டுகடங்கா கோபத்தை அடக்கி இருக்க, ஸ்டீரிங் வீலில் இருந்த அவனின் கைகளோ இறுகி இருந்தது. ‘அவன் தான் பேசிட்டு இருந்தானா, இவ எதுக்கு நின்னு பேசுறா. அவன் மூஞ்சியும் அவனும்.’ என்று சற்று முன்பு மிருதுளா தன்னிடம் சொன்ன விளக்கத்தை நினைத்து, மனதுக்குள் இருவரையும் பொரிந்து கொண்டிருந்தான். அதே கோபத்துடனே பக்கத்தில் அமர்ந்திருந்த மிருதுளாவை திரும்பி பார்க்க, அவளோ சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள். அவளின் கண்ணீரை பார்த்ததும், இவனின் கோபம் குறைய, காரை பிரேக் போட்டு நிறுத்தினான்.

பின் மிருதுளாவின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த தேஜாவை தூக்கிக்கொண்டு கதவை திறந்தவன், பின்பக்கம் குழந்தைகென்றே பிரத்யேகமாகப் பொருத்தபட்டிருந்த, பேபி கார் சீட் குஷனில், அவளின் உறக்கம் கலையாதவாறு, மெதுவாக உட்கார வைத்தவன், அதன் பெல்ட்டை போட்டுவிட்டு, முன்பக்கம் வந்து அமர்ந்து கதவை சாத்திவிட்டு, மிருதுளா பக்கம் திரும்பி, “அம்மு” என்று அழைக்க, அவனின் அன்பான அழைப்பில், அழுகையுடன் அவன் நெஞ்சில் தலை சாய்ந்தவள், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். மனைவியின் அழுகையை பார்த்ததும், அவன் கோபம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. “அம்மு, ப்ளீஸ் அழாதடா. இங்க பாரு.” என்று கெளதம் பல தடவை சொல்லியும் அவள் அழுகை குறையாததால், அதன் பின் ஒன்றும் சொல்லாமல், அவளை அழ விட்டான். அவர்களைக் கடந்து சென்ற வண்டிகளின் ஹார்ன் சத்தத்தில், அவனிடம் இருந்து விலகிய மிருதுளா, “கிளம்பலாம்.” என்று சொல்ல, கௌதமும் வண்டியை கிளப்பினான்.

வீடு வந்ததும், கலங்கிய முகத்துடன் காரை விட்டு இறங்கிய மிருதுளா, தேஜாவை தூக்க போக, அவளைத் தடுத்த கெளதம், “நீ வீட்டுக்கு போ ரிது. நான் பாப்பாவை தூக்கிட்டு வரேன்.” என்று சொல்லவும், பதில் சொல்லாமல், படிகளில் ஏறி மேலே சென்றாள்.

ஹாலில் ஆராவும், ஜெய்யும் டீவி பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது மிருதுளா உள்ளே நுழையவும், “ஹே! அக்கா வந்தாச்சா! பார்ட்டி எப்படிப் போச்சு.” என்று கேட்டுக் கொண்டே ஆரா வாசலுக்கு வர, மிருதுளாவோ, ஒன்றும் சொல்லாமல் அவளது அறைக்குள் சென்றுவிட, அவளது வீங்கிய முகமே, ‘ஏதோ’ என்ற செய்தியை சொல்ல, ‘என்ன ஆச்சு.’ என்று இவள் யோசிக்கும் நேரம், குழந்தையுடன் உள்ளே கெளதம் வர, அவனிடம் இருந்து குழந்தையை வாங்கிக்கொண்ட ஆரா, “என்ன ஆச்சு அத்தான். அக்கா முகம் ஒரு மாதிரி இருக்கு?!” என்று கேட்க, தனது ஷூவை கழட்டிக்கொண்டே, “ஹம், சந்துருவை பார்த்தோம்.” என்று சொல்லவும், அவளுக்குப் புரிந்துவிட, ‘அவனா!’ என்று அதிர்ந்தவள், “ஏதாவது பிரச்சனையா அத்தான். அக்கா முகம் அழுத மாதிரி இருக்கு.” என்று கேட்க, “இல்ல மா. பிரச்சனைலாம் இல்லை. அவனைப் பார்த்ததும் உங்க அக்காவுக்குப் பழைய நியாபகம் வந்துடுச்சு. அதான் அப்செட்டா இருக்கா.” என்று பதிலளித்தான்.

“ஒஹ்!” என்று நிம்மதி அடைந்தவள், “பாப்பா எங்ககூட இருக்கட்டும் அத்தான். நீங்க அக்காவை சமாதனப் படுத்துங்க. பழசு நியாபகம் வந்துடுச்சுனா, அக்கா ரொம்ப மனசு கஷ்டபடுவா.” என்று ஆரா கௌதமிடம் கூறினாள். ஏனெனில் அவளுக்குத் தெரியும், மிருதுளா எவ்வளவு மனம் உடைந்து போவாள் என்று. அதிலும் அன்று அவன் சொன்ன கேவலமான வார்த்தைகள், இன்றும் மிருதுளாவின் ஆராத வடுவாக இருக்கிறது என்று இவளுக்கு நன்றாகத் தெரியும்.

“இல்ல வேண்டாம் ஆரா. பாப்பாவை நாங்க பார்த்துக்கிறோம். உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்.” என்று பதில் கூறிய கௌதமோ, சண்டைபோட்டு ஒருவழியாக ஒன்று சேர்ந்துள்ள அவர்களை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என்று நினைத்து தயங்க, “அண்ணா, அதான் ஆரா சொல்றாள. எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை. நீங்க மொதல்ல அண்ணியைப் போய்ப் பாருங்க. பாப்பா இன்னைக்கு நைட் எங்க கூட இருக்கட்டும்.” என்று சொன்ன ஜெய், அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல, கதவை அடைத்து லாக் செய்துவிட்டு, ஆராவை அழைத்துக்கொண்டு தங்களது அறைக்குச் சென்றுவிட்டான்.

ஹாலின் லைட்டை அணைத்துவிட்டு, தங்களது அறைக்குக் கெளதம் செல்ல, உள்ளே இருட்டாக இருக்க, கட்டிலில் முதுகு காட்டி படுத்திருந்தாள் மிருதுளா. கதவை லாக் செய்துவிட்டு அவள் அருகில் சென்றவன், மெதுவாக அருகில் அமர்ந்து, “ரிது மா!” என்று அழைக்க, இரண்டு மூன்று அழைப்புகளுக்குப் பின்பு, கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தவள், கௌதமின் முகம் பார்க்காமல், “பாப்பா தூங்கிட்டாளா?!” என்று கேட்க, அவள் குரலே அவளின் வருத்தத்தின் அளவை சொல்ல, அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பாப்பா, ஜெய் கூடத் தூங்க போய்ட்டா.” என்றான்.

எதுவும் சொல்லாமல், அமைதியாக அமர்ந்திருந்தவளுக்கு, பழைய நினைவுகளை நினைத்து மெல்ல மெல்ல, கண்கள் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பிக்க, அதைப் பார்த்த கெளதம், “அம்மு!” என்று அவளின் தோளில் கைவைக்க, அதற்கு மேல் தன் உணர்வுகளைக் கட்டுபடுத்திக்கொள்ள முடியாமல், கதறலுடன் அவனின் இடுப்பை கட்டிக்கொண்டு நெஞ்சில் தலை சாய்ந்தவள், “என்னால மறக்க முடியலங்க. அவர் அன்னைக்குச் சொன்ன வார்த்தையை என்னால மறக்க முடியல. என்னை அப்படியே சேர்த்துல முக்குண மாதிரி, உடம்பெல்லாம் அருவருப்பா இருக்குங்க.” என்று வாய்விட்டு கதறியவளை, ஆதரவாக அணைத்துக் கொண்டவன், “அம்மு, தயவு செஞ்சு, பழசை நினைச்சு அழாதா டா. உங்களுக்குள்ள எது நடந்திருந்தாலும், அது இப்போ முடிஞ்சு போன ஒன்னு. இப்போ அதை நினைச்சு உன்னை நீ கஷ்டபடுத்திக்காத அம்மு. ப்ளீஸ். இனி நானும் தேஜாவும் தான் உன்னோட வாழ்க்கை. இதை மட்டும் மனசில வச்சுகோ டா.” என்று ஆறுதலாகக் கூறினான்.

ஆனால் அவளோ, “இல்லைங்க உங்களுக்குத் தெரியாது. அவர் என்னை நடத்தை கெட்….” என்று மேற்கொண்டு பேசப் போனவளின் உதடுகளை மூடியவன், “அது இப்போ உண்மை இல்லைன்னு அவருக்கே தெரியும் அம்மு. எல்லாத்துக்கும் காரணம் அவங்க அம்மான்னு இப்போ அவருக்குத் தெரிஞ்சு போச்சு. அதனால தான் இன்னைக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு. இனி நீ இதைப் பத்தி என்னைக்கும் நினைச்சு வருத்தப்படகூடாது அம்மு. எனக்காக.” என்று இவன் சொல்ல, அதிர்ச்சியுடன் தலையை நிமிர்த்தியவள், “இது எப்படி உங்களுக்குத் தெரியும்.?!” என்று விழிவிரித்துக் கேட்க, “அதெல்லாம் தெரியும். அவ்ளோதான். நீ மொதல்ல கண்ணைத் துடை.” என்றவன், “நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னைப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியும் அம்மு. அப்போவும் சரி, இப்போவும் சரி, உன்னை நான் என்னைக்குத் தப்பா நினைச்சது இல்ல. உன்னோட முகத்தைப் பார்க்கும்போதே, நீ அந்தப் பாலுக்குச் சமமானவன்னு என்னால உணர முடிஞ்சுது டா. பை மிஸ்டேக், சந்துரு இப்படி உன்னைப் பத்தி தப்பா நினைச்சு இருக்கலாம்னு தான் நானும் நினைச்சேன். அதுதான் நடந்தும் இருக்கு. அதானால தயவு செஞ்சு இனிமே அதையே நினைச்சு, உன்னை நீயே வருத்திக்காத டா. ரியலி, நீ அழுதா எனக்குக் கஷ்டமா இருக்கு.” என்று கூற, அவளோ, “ஆனா அன்னைக்கு எல்லார் முன்னாடியும், என்னைப் பத்தி தப்பா பேசி, எல்லாரும் என்னை அசிங்கமா பார்த்ததை என்னால எப்படிங்க மறக்க முடியும். அப்படியே கூனிகுருகி போயிட்டேன். அப்போவே செத்துப் போய்டலாம் போல இருந்துச்சு.” என்றவளை இறுக அணைத்து அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், “அம்மு ப்ளீஸ் டா. அழாத. எனக்காக.” என்று சொல்லவும், பேசாமல் அமைதியானவளின் அழுகை மட்டும் குறைந்தபாடில்லை.

இங்கே ஜெய்யின் அறையில், குழந்தையைக் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, அருகில் அமர்ந்து குழந்தையை ஆரா தட்டி கொடுத்துக்கொண்டிருக்க, ரெப்ரெஷ் செய்துவிட்டு தூங்க வந்த ஜெய்யின் கண்களில், ஆராவின் கலங்கிய கண்கள் பட, வேகமாக அவள் அருகில் வந்தவன், “ம்ப்ச்! என்ன ஆரா நீ!” என்று வருத்தப்பட, அவனின் தோளில் தலை சாய்ந்தவள், அப்படியே அமைதியாக இருக்க, “ஆமாம் இந்தச் சந்துரு யாரு அரா?! என்ன நடந்துச்சு?!” என்று அவன் கேட்கவும், மிருதுளாவின் கடந்த காலத்தைச் சொல்ல ஆரம்பித்தாள் ஆரா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!