Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் – 15

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்) 

15. மூன்று பெண்கள் மூன்று திசையில்…

விடிவெள்ளி கடல் பஞ்சணையில் துயில் கொண்டு கண்விழித்த அற்புதமான தருணம். வெண்மதிக்கு உறக்கம் கண்ணை தழுவ, விண்மீன்கள் பவனியோடு ஏஜியன் கடல் மெத்தைக்கு சென்று கொண்டிருந்தாள். ரினீவா தீவின் மீது செக்க சிவந்த சூரிய ஒளி பட்ட போது, தீவின் கொள்ளையழகு கடலில் வந்து கொண்டிருந்த சவ்ஜித்தாவின் மரகலனுக்கு நன்கு புலப்பட்டது. 



Advertisement

ரினீவா தீவு, கடற் கொள்ளையர்களின் சொர்க்கபுரி. செலூக்கியஸ் கையிழுப்பிய ஒரு செயற்கை பாதுகாப்பு அரண். ஏஜியன் கடற்பரப்பில் அந்நியர்கள் நுழைவை தடுக்க கிரேக்கத்தின் கடற்படை தளபதியாக இருந்த செலூக்கியஸ் உருவாக்கிய தீவு அரண். சீனர், அராபியர், கிரேக்கர், பாரசீகர், பாபிலோனியர், கறுப்பினதவர், பாலித் தீவினர் என்று ஒரு கலப்பின கொள்ளையர்கள் கூட்டம் இங்கு வசித்து வந்தது. இவர்களுக்கு ஒரே ஜாதி, ஒரே பெயர்… “கடற் கொள்ளையர்கள்”. எவருக்கும் அஞ்சாத இந்த கூட்டம் சத்யத்திற்கும், தங்கள் தலைமைக்கும் கட்டுப்பட்டது. இம்மியும் பிசகாத கூட்டம். 

ரினீவாவின் தோற்றம்

ரினீவா ஒரு அற்புதமான கட்டமைப்பை கொண்டது. இந்த தீவின் சிறப்புகள் இரண்டு. ஒன்று இயற்கையாகவே, தீவின் கரையை மரக்கலன்கள் எட்ட, ஏற்றாற்போல் அமைந்த ஆழாமான கடற்பரப்பு. இரண்டு இந்த தீவிற்கு முன்பாக வலது பாகத்தில் அமைந்த ஒரு வலிய பெரிய குன்று. 

இதை அற்புதமாக பயன்படுத்திய செலூக்கியஸ் குன்றின் மீது மிகவும் உயரமான ஒரு பொறி கோபுரம் அமைத்து இருந்தான். அந்த பொறி கோபுரத்தில் இருந்து நாலாபுறமும், இருபது கல் தொலைவுக்கு எரிகணைகள், அம்புகள், இரும்பு குண்டுகள் எரிய இயலும். உச்சியில் கலங்கரை விளக்கு அமைந்து இருக்கும். இதிலிருந்து வெளியேறும் இரும்பு குண்டுகள், மரக்கலன்கள் மீது மோதினால், மரக்கலன்கள் உடைந்து மூழ்கிப் போகும். சராசரியாக தானியங்கி விசை மூலம், ஒரே நேரத்தில் சகல திசையிலும் ஆயுதங்கள் செலுத்திட இயலும்.

Advertisement

Advertisement

அடுத்து இந்த தீவின் மொத்த சுற்றளவு சுமார் ஐந்து கல் தொலைவு மட்டுமே. இதை சுற்றி பெரிய கரும் கற்களால் ஆன கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோட்டை தீவை சுற்றிலும் எழுப்பப்பட்டு, ஒரு பெரிய வாயிலில் முடிவு பெரும். அந்த கோட்டை வாயிலில் இருந்து சுமார் அரை கல் தூரத்திற்கு மரக்கலன்கள் நிற்க வசதியாகவும், பொருட்கள் ஏற்றி இறக்க வசதியாகவும் இருக்க கற்கள் கொண்டு எழுப்பப்பட்ட அகன்ற மேடைப்பகுதி இருக்கும். அதில் அமைக்கப்பட்டுள்ள, உலோக தூண்களில் பெரிய மரக்கலன்கள் கட்டி நிறுத்த முடியும்.

கோட்டையின் வாயில் இரண்டடுக்கு தேக்கு மரபலகைகள் மூலம் பலமானதாக அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு இருபது அடிக்கு, ஒரு காவல் மாடம் அமைக்கப்பட்டு அதில் பொறிகள் பொருத்தப்பட்டு இருந்தன. கடலில் இருந்து தாக்குதல் நடத்த முயலும் படைகளை தீவை நெருங்க விடாது தடுக்க ஏற்ற பொறிகள் பொருத்தப்பட்டு இருந்தது. 

கோட்டையின் உள்ளே முதல் அடுக்கில் காவலர்கள் குடியிருப்பும், இரண்டாம் அடுக்கில் வணிகர்கள், மாலுமிகள் குடியிருப்பும், மூன்றாம் அடுக்கில் கொள்ளையர்கள் குடியிருப்பும், நான்காம் அடுக்கில் அரண்மனையும் இருந்தது. அரண்மனையின் உள்ளே கருவூல அறையும் இருக்கும். கருவூல அறையில் இருந்து துவங்கும் ஒரு சுரங்கம் இஸ்தான்புல் வரை செல்லும். இது கடலுக்கு அடியில் அமையப்பட்ட ஒரு மலைத்தொடரை பயன்படுத்தி, பாறைகளை குடைந்து உருவாக்கியது. ஆறு ஆண்டுகள் கடின உழைப்பை போட்டு, செலூக்கியஸ் உருவாகிய இந்த வழி, செலுக்கியசுக்குப் பிறகு, பாஹ்லாஸ் மட்டுமே அறிவான். 

Advertisement

இந்த தீவில் இருக்கும் அரண்மனையும், அதன் அமைப்பும், ராஜ குடும்பத்தினர் மாளிகையிலும் காணப்படாதது. அத்தனை சௌகரியங்களுடன் செலூக்கியஸ் இதை நிர்மாணித்து இருந்தான். அத்தகைய ரினீவாவின் கடற்பரப்பில் கொள்ளையர்களுக்கு சொந்தமான ஆறு மரக்கலன்கள் பிறைச்சந்திர வடிவில் நிற்கும். அவற்றுக்கு முன்பு ஐம்பது ரோந்துப்படகுகள் சதா காலமும் சுற்றி வரும். ரினீவாவில் மரக்கலன் பழுதுபார்க்க வசதியும் உண்டு. இந்த தளத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஈரடுக்கு மரக்கலன் தான் “ஸ்கேட்ஸ்”. 

ரினீவாவின் தோற்றம் தற்போதைய படம்

ஸ்கேட்ஸ் மரக்கலன் இன்றைய போர்க் கப்பல்களின் முன்னோடி என்று சொல்லலாம். முழு மரக்கலனிலும் முன்னூறு பேர் கீழ்தளத்தில் தங்க முடியும். முதல் தளம் முழுதும் உணவுப்பொருட்களையும், ஆயுத சேமிப்பையும் உள்ளடக்கி இருக்கும். இரண்டாம் தளத்தில் பற்பல பொறிகள் அமைக்கப்பட்டு இயக்க ஆட்களும் தங்க இயலும். கலனில் மேற்தளத்தில் ஆலிமாவின் அறை, நவீன எரிகணைகள் செலுத்தும் பொறிகள், தானியங்கி வேல் எறியும் வில்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் ஒரு முனையில் சுக்கான் பிடிப்பவரின் அறையும் அமைந்திருக்கும். ஸ்கேட்ஸ் மரக்கலனை எளிதில் எல்லாம் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் அது நடவாத கனவே.

அத்தகைய சிறப்புக்குரிய ரினீவாவில் அதிகாலையிலேயே உற்சாகம் களைகட்டியிருந்தது. அதற்கு காரணம் ஒன்று தங்கள் தீவின் பொறுப்பு அதிகாரி, சவ்ஜித்தாவின் வருகை. இரண்டு தங்கள் அரசியும், தீவுவாசிகளுக்கு எல்லாம்,  பிள்ளை என்றும், சகோதரி என்றும், தாய் என்றும் அறியப்பட்ட, ஆலிமாவின் வருகை.கடலின் உப்புக்காற்றில் சதா உலாவரும் இந்த தேவதை, இங்கு வந்து தங்கும் நாட்களே குறைவு. அப்படி தங்க வரும் அரசியை வரவேற்று கொண்டாடி மகிழ்வர் தீவுவாசிகள். ஆலிமாவும் ஒவ்வொருவர் வீடாக சென்று அனைவருடனும் மகிழ்ந்து இருப்பாள். அந்த மகிழ்வுக்காக அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். 

கோட்டை முகப்பில் இருந்த கம்பத்தில் பச்சை நிறக் கொடி பறக்கவிடப் பட்டிருந்தது. அது தான் அடையாளம். அடையாளத்தில் மாறுதல் வந்தால் தாக்குதல் உடனடியாக ரிணிவாவில் இருந்து தொடங்கும். சவ்ஜித்தா வந்து கொண்டிருந்த மரக்கலனில் பச்சை கொடி ஏற்றப்பட்டு இருந்தது. துறைமுக கலன் கட்டும் மேடை நோக்கி ஓடிவந்தனர். 

சவ்ஜித்தாவின் மரக்கலன் ரினீவாவின் கடல்பகுதிக்குள் நுழைந்தது. உற்சாக குரல்கள் ரினீவா கோட்டைக்குள் இருந்து கேட்க தொடங்கியது. மரக்கலனின் முகப்பில் நின்று கொண்டிருந்த சவ்ஜித்தா, மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். மரக்கலன் கலன் கட்டும் மேடையை நெருங்கியது. பாலிக்குள்ளர்கள் மூவர் கலனிலிருந்து கயிற்றை தூக்கி மேடை நோக்கி வீசினார்கள். மேடையில் நின்று கொண்டிருந்தவர்கள் கயிற்றை எடுத்து உலோக தூண்களில் கட்டவும், மரக்கலன் மெல்ல மேடையை நெருங்கி நிற்கவும் சரியாக இருந்தது. மேடையில் இருந்து சைகை காட்ட, மரக்கலனில் இருந்து நூலேணி ஒன்று, மேடைமீது வீசப்பட்டது. 

முதல் ஆளாக சவ்ஜித்தா இறங்கினாள். அதற்கு அடுத்து கண்கள் கட்டப்பட்டு, சங்கிலிகளில் பிணைக்கப்பட்டிருந்த டையோனிஸ் இருவர் உதவியுடன் இறக்கப்பட்டான். முக்கியமானவர்கள் இறங்கியவுடன் உலோக தூணில் பிணைக்கப்பட்டிருந்த கயிறுகள் விடுவிக்கப்பட்டு, நூலேணியும் மேலே இழுத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த சில வினாடிகளில் மரக்கலம் பிற மரக்கலன்களுடன் சேர்ந்து கொள்ள புறப்பட்டது. 

சவ்ஜித்தாவை அணுகி வந்த கோட்டை பொருப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய சவ்ஜித்தா, ஆலிமாவின் அறை மற்றும் உணவுகள் குறித்து கட்டளைகள் கொடுத்தாள். சற்று நேரத்தில் கலங்கரை பொறி கோபுரத்தில் இருந்த வீரன் ஒருவன் எரிகணைகள் இரண்டை தீவை நோக்கி வானத்தில் செலுத்தி, “ஸ்கேட்ஸ்” வரவை உறுதி செய்தான். ஸ்கேட்ஸ் மரக்கலனின் கொடிமர கண்காணிப்பு மாடத்தில், நீலவண்ண அடுக்கு உடையை அணிந்து, தலையில் மெல்லிய பொன் கிரீடம் சூட்டி, கடல் தேவதையாக காட்சி கொடுத்துக் கொண்டிருந்த ஆலிமாவின் எண்ணத்தில், தான் கண்ட கனவு திரும்ப திரும்ப வந்தது. 

ரினீவா அரண்மனையின் உட்புற தோற்றம்

கடலில் தன்னோடு குதித்து தன்னை காத்த அந்த வாலிபன் ஏஜியன் மற்றும் அரபு கடல்வெளியில் அவள் இதுவரை கண்டிராத தோற்றத்தை கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான தோற்றமும், நீண்ட கரங்களும், பரந்து விரிந்த மார்பும், மார்பில் சுருண்டு கிடந்த முடிகளும், அவ்வளவு ஒரு அழகை அவனுக்கு தந்திருந்தது. ஒரு கரத்தால் தன் உடலை அணைத்துக் கொண்டவன் விரல்கள், விலகியிருந்த அவ் மேற்சட்டையின் இடைவெளியில் உண்டான இடை பரப்பை அழுந்த பிடித்து இருந்தது. அந்த பிடியின் ஆண்மைத்தனத்தை, ஆலிமாவின் பெண்மை விழித்துக்கொண்டு ரசனைக்கு கொண்டு செல்ல, காதல் வீணையை வாசிக்கும் கலைஞன் போல அவன் அவளுக்குள் இசைபாடிக் கொண்டிருந்தான். அந்த கனவின் மெய்மறந்த நிலையில் சமுத்திரத்தில் விழப் போனவளை பாஹ்லாஸ் மட்டும் சரியான நேரத்தில் வந்து பிடித்திருக்காவிடில்!!!????…. இப்போது நினைத்தாலும் ஆலிமாவின் பெண்மைக்குள் பூ பூத்து சிரித்தது. 

முதல் முறையாக ஆலிமா இதுபோன்று ஆகி உள்ளாள். இதுவரை ஆண்களை நேருக்கு நேர் தன் வாளால் என்னவென்று கேட்டுப் பழகியவள், முதல்முறையாக முகமே தெரியாத ஒரு வாலிபனிடம் தன்னை பறிகொடுத்து நிற்பது, அவளுக்கே கேவலமாக தோன்றியது. இத்தகைய சிந்தனையில் நின்று கொண்டிருந்தவள் கண்களில் ரினீவா தோன்றிய நொடியில் அனைத்தும் மறந்து போனது. ஸ்கேட்ஸ் மரக்கலன் ரினீவாவின் கடற்பரப்பில் நுழைய, பொறி கோபுரத்தில் இருந்து ஏழு வண்ண எரிகணைகள் வானில் செலுத்தப்பட்டது. அப்போது கடற்பரப்பில் வானவில் போல புகை எழுந்து, ஸ்கேட்ஸ் மரக்கலனை வானவில் நுழைவு வாயில் அமைத்து வரவேற்றது. 

கோட்டையில் இருந்து இன்னிசையும், ஆடல் பாடலும் தொடங்கின. பெண்கள் சேர்த்து வைத்திருந்த மலர்களை ஸ்கேட்ஸ் நோக்கி தூவ ஆயத்தமாயினர். ஸ்கேட்ஸ் துறைமுகத்தை நெருங்க, கைப்பற்றப்பட்ட பிற சேரத்து மரக்கலன்கள் அரை சந்திர மரக்கலன் வியூகத்தின் பிடியில் நிறுத்தப்பட்டன. ஸ்கேட்ஸ் கண் கட்டும் மேடையை நெருங்கி நிற்க மூன்று கயிறுகள் கொண்டு உலோக தூணில் அது கட்டப்பட்டு நங்கூரம் இறக்கப்பட்டது. “ஸ்கேட்ஸ்”- ன் பக்கவாட்டு பலகை ஒன்று திறந்து வெளியே நீட்டிக்கொண்டு நிற்க, ஆலிமா அதன் மீது வந்து நின்றாள். அவளை கண்டதும் தீவுவாசிகள் உற்சாக குரல் எழுப்பினர். பெண்களும் குழந்தைகளும் அவள் மீது பூக்களை தூவினர். 

கலனில் இருந்த சிலர் ஒரு விசையை திருக, ஆலிமா நின்று கொண்டிருந்த பலகை மெல்ல கீழே இறங்கியது. சில நொடிகளில் பலகை மேடையை ஒட்டி அந்தரத்தில் நிற்க, உற்சாகமாக தரையில் குதித்தாள் ஆலிமா… அதே வேகத்தில் ஓடிச்சென்று சவ்ஜித்தாவை கட்டிக்கொண்டாள் ஆலிமா. 

ஸ்கேட்ஸ் மரக்கலன்

அதே வேளையில் முத்து தீவில் சவ்ஜித்தாவின் குறும் வாளுக்கு இலக்கான அக்கோட்டஸ் நீரின் ஆழத்தை எட்டியிருந்தான். தோளிலும், புருவத்தின் மீதும் குத்தி கொண்டு நின்ற இரண்டு வாளையும் மிகுந்த வேதனையோடு பிடுங்கினான். கொப்பளித்து வெளியேறிய குருதியாலும், கடல் நீரை சில வாய் குடித்ததாலும், சோர்வுற்று இருந்தவன் எப்படியும் நீந்திவிட எண்ணி சோர்வுற்று மூர்ச்சையானான். அப்போது அவனது உள்ளுணர்வில் அந்த காட்சி தோன்றியது. நீலமணிக் கண்கள் இரண்டின் தீட்சண்யமான பார்வையும், அந்த கண்களுக்கு கீழே குமுதமலர்கள் இரண்டு முட்டி நின்ற தோற்றத்தில் சிவந்து குவிந்த இதழ்கள் தந்த புன்னகையும், அக்கோட்டஸை உயிர்பித்தன. 

சட்டென்று கண்விழித்தவன் உடல் இப்போது பழைய பலத்தை திரும்ப பெற்றது. அந்த காட்சியை திரும்ப திரும்ப எண்ணியவாரே நீந்த தொடங்கினான். அசுரர் வேகத்தில் நீந்தியவன் சில நிமிடங்கள் முடிவில் கடலின் மேற்பரப்பிற்கு வந்து மூச்சை விட்டான். கதிரவனின் சூட்டில், கடலின் மேற்பரப்பு சற்று வெது வெதுப்பான நிலையில் இருக்க, சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டவன் கண் முன்னே, ஒரு சிறிய படகும் சில மீனவர்களும் தட்டுப்பட்டனர். அவர்களை நோக்கி கைகளை ஆட்டியவரே நீந்தனான் அக்கோட்டஸ். அதற்குள் படகில் இருந்தவர்கள் அக்கோட்டஸை கண்டு கொண்டு உதவி செய்ய விரைந்து வந்தனர். அக்கோட்டஸை கைகொடுத்து படகில் ஏற்றி அமர வைத்தனர். 

அவனது காயங்கள் ஏற்படுத்திய வலியில் அக்கோட்டஸ் மயங்கி போனான். அந்த படகு வேகமாக கரை திரும்பியது. அந்த படகை செலுத்தியவர்கள் சமரானிக் வளைகுடா பகுதியில் இருந்த, காராதோஸ் தீவிற்கு விரைந்தனர். காராதோஸ் தீவு கிரேக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஒரு அழகிய தீவு. இங்கு கிரேக்க கடற்படையின் தளம் உள்ளது. அந்தஅக்கோட்டஸை நன்கு அறிந்திருந்த படியால் அவனை கடற்படையிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர்.

சேரத்தின் காந்தளூர்ச்சாலையில் இருந்து வேகமாக வெளியேறிய வெள்ளைப் புரவியில் சேர அரஸுடை பூண்டு புறப்பட்டு இருந்தாள் மணிமேகலை. “அத்தானுக்கு என்னவாகி இருக்கும். அவரை நெடுங்கிள்ளி சிறையில் வைத்துள்ளான் என்றல்லவா அப்பா கூறினார். நான் நாகை சென்று மாமாவையும், அதையையும் காணவேண்டும்” என்று எண்ணியவாறு, பயணப்பட்டு கொண்டிருந்தாள் மணிமேகலை. 

மணிமேகலையும் அவள் புரவியும்

மணிமேகலை எண்ணத்தை உணர்ந்தவாறு புரவியும் நல்ல ஒத்துழைப்பை தந்தது. சீரான ஆனால் சிறப்பான வேகத்தில், புரவி சென்றது. காந்தளூர்ச்ச்சாலை சோதனை சாவடிக்கு செல்லாமல், மாற்றுப் பாதையில் சென்ற மணிமேகலை, அடுத்து வரும் கானகத்தை தாண்டினால், பாண்டியதேசத்திற்குள் சென்றுவிடுவாள். சிந்தனை சிறிதும் சிதறாமல் சுற்றிலும் நோட்டமிட்டவாறே சென்ற மணிமேகலை கானகத்தின் இறுதிக்கு வந்தபோது, சரேலென்று புரவியின் கடிவாளத்தை பிடித்து இழுத்து நிறுத்தவும், அவள் சென்ற பாதையின் குறுக்கே இரண்டு ஈட்டிகள் பறக்கவும் சரியாக இருந்தது. ஈட்டிகளை வீசியவர்கள் சேர வீரர்கள் என்பதை நொடியில் உணர்ந்த மணிமேகலை சற்றும் தாமதியாமல் பக்கவாட்டில் இருந்த புதர்களின் வழியே புரவியை செலுத்தினாள். சற்று சிரமமான பாதை, ஆனால் வெளியில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் அவளைத் தாக்கிட இயலாது. 

ஒருவழியாக கானகத்தை தாண்டி மலை சரிவு ஒன்றின் அருகில் வந்து சேர்ந்தபோது, அந்தோ அங்கே????!!!!…… கோதையாறு பொங்கி ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக செல்லகிறது. எப்படி இதை தாண்டுவது என்று தவித்தவளுக்கு தெரியாத சூட்சுமத்தை புரவி இனம் கண்டு கொண்டு ஓடத்துவங்கியது. அரைக்காத தூரம் வந்ததும் ஆழம் குறைந்த இடத்தை தன் கூரிய பார்வையில் உணர்ந்து கொண்ட புரவி, அனாயாசமாக நீரில் இறங்கி ஆற்றை கடக்க தொடங்கியது. மணிமேகலை எதற்கும் ஒரு பாதுகாப்பிற்கு என்று வில்லையெடுத்து நாணேற்றி வைத்துக் கொண்டாள். 

அதற்குள் சேர வீரர்கள் மூவர் மலை சரிவிற்கு வந்து சேர்ந்தனர். தூரத்தில் புரவி ஒன்று ஆற்றை கிடப்பதை கண்டு, வீரர்களில் ஒருவன் புரவியின் கழுத்தை நோக்கி, அம்பை எய்ய குறிவைத்தான். அதற்குள் புரவி மறுகரையை அடைந்து, அடர் கானகத்திற்குள் ஓடி மறைந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் நிறைவேறிவிட்ட இந்த சம்பவத்தின், பிரதிபலன் காந்தளூர்ச்சாலையில் தெரிய தொடங்கியது மாரப்பதேவன் வழியே….

தொடரும்…..

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!