Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 30.2

அத்தியாயம் 30 (2)

அதன் பின் கெளதம், யாழினி இருவரும், அலுவகம் சேர்ந்து, நாட்கள் வேகமாகச் சென்று, இதோ கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. கெளதம் அலுவகம் வரும் வழியில் தான், யாழினியின் ஹாஸ்டல் இருப்பதால், முக்கால்வாசி நாட்களில், இவன் அலுவகம் வரும் அதே நேரம், அவளும் பஸ்ஸில் இருந்து இறங்கி அலுவகத்துக்குள் நுழைவாள். ஆதலால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள நேரும்பொழுது, குட் மார்னிங், இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்? பஸ் லேட் ஆகிடுச்சா? போன்ற சின்னச் சின்னப் பேசுக்கள் அவர்களுக்குள் இருந்து வந்தது. அத்தோடு, யாழினி, டெவலப்பராக வேலை செய்யும், அதே ப்ராஜெக்ட்டில் தான் கெளதம் டெஸ்டராக வேலை செய்கிறான். யாழினி செய்யும் கோடிங்கில் இருக்கும் பிழைகளைக் கண்டறியும் வேலை கௌதமிற்கு. ஆகையால், சில சமயம் வேலை சம்பந்தமாகவும் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

கௌதமிற்கு, யாழினியை பார்த்த முதல் நாளே பிடித்துப் போனது. ஆனால் அது காதல் என்று அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவளது அமைதியான முகம், சாந்தமான சிரிப்பு இதெல்லாம் அவனுக்குப் பிடித்திருக்கிறது. காலையில் அலுவகம் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கும்போது இவனுக்குள் ஒருவித மனஅமைதி, உற்சாகம், ஏற்படும்பொழுது, அதனை ரசித்தான். அந்த அளவுக்குத் தான் அவனால் இப்போதைக்கு உணர்ந்துகொள்ள முடிகிறது.

யாழினிக்கும் இதே எண்ணம் தான். அதிகம் ஆண்களிடம் பழகாதா அவளுக்கு, அலுவகத்தில் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் கௌதமின் பழக்கம், அவனின் மரியாதையான தோற்றம், காலையில் அலுவகத்தில் தன்னைப் பார்த்ததும் புன்னகை வீசுவதும், இப்படி எல்லாம் பார்த்திருந்ததால், அடிப்படையில் கௌதமை, அவளுக்கும் பிடித்திருந்தது. அந்தப் பிடித்ததிற்கு இதுதான் பெயர் என்று அவள் என்றைக்கும் யோசித்தது இல்லை.



Advertisement

இதற்கிடையில், இனியனுடனான கெளதம் நட்பும், மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது. சில மாதங்கள் கழித்தே, இனியன் தன்னுடைய போன் நம்பரை கௌதமிடம் பகிர்ந்துகொண்டான். அதுவும், தன் தங்கையுடன் வேலை செய்பவன் என்பதால். ஒரு அவசரம் என்றால் கௌதமிடம் பேசிக் கொள்ளலாமே என்ற எண்ணம் தான் அவன் மனதில். ஆனால் போகப் போக அவர்களுடனான போன் உரையாடல்கள் அதிகரித்து, அவர்களுக்குள் நல்ல நட்பு வளர்ந்திருந்தது.

இனியன் அவ்வளவாகத் தன் அலுவலக நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ள மாட்டன். அவர்களுக்குக் காதலிகளுடன் பேசவும், வெளியே செல்லவுமே நேரம் சரியாக இருக்கும். அதேபோல அறை தோழர்களும், சரியான சோம்பேறிகள், எந்நேரமும் போனும் கையுமாக இருப்பவர்கள். அதனால் அவர்களுடனான நட்பும் இவனுக்குப் பிடித்தம் இல்லை. ஏனெனில், இனியனுக்கோ, வெளியே காற்றோட்டமாகச் சென்று, சென்னையைச் சுற்றிபார்க்க, மிகவும் பிடிக்கும். நண்பர்களுடன் நேரம் செலவு செய்யப் பிடிக்கும். பள்ளியில் படிக்கும்போது அப்படிதான் அவனுக்குப் பொழுதுபோகும். போகப் போக அதற்குப் பழக்கமும் ஆகிவிட்டன. ஆனால் இங்கே சென்னையிலோ நிலைமை அப்படியில்லை. அது அவனுக்குப் பிடிக்கவும் இல்லை.

கௌதமும் இனியனும் இந்தக் குணத்தில் ஒத்துபோனதோடு, இருவரும் ஒரே வயதை ஒத்தவர்கள் என்பதால், எந்தவித தயக்கமும் இல்லாமல், இருவரும் தோழமையோடு பழகினர். தன் நண்பர்களின் பிறந்தநாள் பார்டிகளுக்குத் தவறாமல் இனியனையும் அழைத்துச் செல்வான் கெளதம். இவர்களின் நட்பு, யாழினிக்கும் தெரியும். அண்ணனின் நண்பர் என்ற எண்ணமும் சேர்ந்துகொள்ள, மற்ற ஆண்களை விட, கெளதமுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் இயல்பாகப் பழக ஆரம்பித்தாள்.

Advertisement

அன்றொரு நாள், வேலை அதிகம் இருந்ததால், அனைத்தையும் முடித்துக்கொண்டு, கெளதம் கிளம்ப இரவு ஆகிவிட்டது. கணினியை ஷட்டவுன் செய்துவிட்டு, கிளம்ப எழுந்துகொள்ள, அவனுடைய வரிசையின், பின்பக்கம் இருந்த வரிசையில், யாழினி இன்னும் கணினியில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. “இவ இன்னுமா கிளம்பாம இருக்கா!! நைட் ஆகிடுச்சு.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அலுவகத்தைச் சுற்றும் முற்றும் பார்க்க. ஒருசில, ஆண்கள் ஆங்காங்கே அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்க, யாழினியை தவிரப் பெண்கள் யாரும் இல்லை.

Advertisement

அவளைத் தனியே விட்டுவிட்டு கிளம்ப மனம் இல்லாமல், மீண்டும் சென்று தன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டவன், கணினியை ஆன் செய்து, பெண்டிங்கில் விட்ட, எர்ரர் செக்கிங் வேலையைச் செய்ய ஆரம்பித்தான். இப்படியே அடுத்த அரை மணிநேரம் செல்ல, மீண்டும் திரும்பி யாழினியை பார்த்தான் கெளதம். அவள் கிளம்புவது போலத் தெரியவில்லை. தன் கையில் கட்டியிருக்கும் வாட்சை பார்க்க, நேரம் ஒன்பதை தாண்டி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

திரும்பி யாழினியின் முகத்தைப் பார்க்க, அவள் ஏதோ டென்ஷனாக இருப்பது தெரிந்தது. சரி அவளிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தவன், எழுந்து அவள் அருகே செல்ல, அவளோ திடீரென்று தன் அருகில் நிழலாடவும், திக் என்று அதிர்ச்சியுடன் திரும்ப, “நான் தான். எதுக்கு இப்படிப் பயபடுறீங்க?!” என்றான் அவசரமாக. யாழினியோ, “சடனா, நிழல் தெரியவும் பயந்துட்டேன்.” என்றாள் லேசான நடுக்கத்துடன். அவள் அருகில் சேரை இழுத்துப்போட்டு உட்கார்ந்த கெளதம், “வொர்க் முடியலையா?? டைம் ஒன்பது ஆகுது. பார்க்கலையா?” என்று கேட்க, அப்பொழுதுதான் அவசரமாக நேரத்தை பார்த்தவள், பதட்டத்துடன், “ஐயையோ!! லேட்டா போனா ஹாஸ்டல்ல உள்ள விட மாட்டங்க. இந்தக் கோடிங் வேற எர்ரர் காட்டுது. அவுட்புட்டே வர மாட்டேங்குது.” என்று கிட்டத்தட்ட அழுது விடுபவள் போலச் சொல்ல, “நீங்க தள்ளுங்க. நான் பார்க்குறேன்.” என்று கெளதம் பதில் சொல்லவும், “இல்ல வேண்டாங்க. யாரவாது பார்த்தா திட்டுவாங்க.” என்றவளின் குரலில், யாராவது பார்த்து TL யிடம் சொல்லி விடுவார்களோ என்ற பயம்.

“அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க, நீங்க நகருங்க.” என்றவன், அவளைக் கட்டாயபடுத்தி நகரச் சொல்லி, அவளின் சிஸ்டத்தில் உட்கார்ந்தவன், அடுத்தப் பத்து நிமிடத்தில், வேலையை முடித்து, அவுட்புட்டை கொண்டுவர, “வாவ்! சூப்பருங்க. எப்படிக் கண்டுபுடிச்சீங்க?” என்று உற்சாகத்துடன் யாழினி கேட்க, எப்படி என்று விளக்கம் அளித்தான் கெளதம்.

Advertisement

‘அட சின்ன மிஸ்டேக் தான்.’ என்று கெளதம் விளக்கம் சொன்னதும், இவளுக்குத் தெரியவர, சங்கடத்துடன், “காலேஜ்ல, ப்ராக்டிக்கல்ஸ் ஈசியா இருக்கும். இங்கதான், கொஞ்சம் கஷ்டமா இருக்கு. நிறைய எர்ரர் வருது.” என்று அவள் சொல்ல, மெலிதாகப் புன்னகைத்தவன், “காலேஜ்ல படிக்கிறது எல்லாம் பேசிக்ஸ் தான் யாழினி. ஆபிஸ்ல அதை அடிப்படையா வச்சு, இன்னும் அதிகமாக வொர்க் செய்யவேண்டி வரும். காலேஜ்ல நீங்க படிச்சதை பயன்படுத்தி இன்னும் நிறையக் கத்துப்பீங்க. ஸ்டார்டிங்ல கொஞ்சம் கஷ்டமா தெரியும். பட் போகப் போக, எர்ரர் இல்லாம செய்யப் பழகிடும். கவலைபடாதீங்க.” என்றான் ஆறுதலாக. பதிலுக்குப் புன்னகைத்தவளின் மனதில், கெளதம் மேல் லேசான ஈர்ப்பு வளர ஆரம்பித்தது. அதன் பின் ஐந்து நிமிடத்தில், வேலை முடித்து, அலுவகத்தை விட்டு வெளியே வந்ததும், பஸ் வர தாமதம் ஆனதால், அவளை ஆட்டோ பிடித்து எற்றிவிட்டவன், தானும் பைக்கில் அவளைப் பின்தொடர்ந்து சென்று, அவள் ஹாஸ்டலில் இறங்கியதும், அவளிடம் விடைபெற்றுக்கொண்டு தன் வீட்டை நோக்கி சென்றான்.

ஹாஸ்டல் வந்ததுமே, இனியனுக்கு அழைத்து, நடந்ததைச் சொன்னாள், யாழினி. கேட்க கேட்க, அவனுக்கும் கௌதமை பிடித்துப்போனது. ‘நம்மளை மாதிரி போல.’ என்று மீண்டும் ஒருமுறை நினைத்துக் கொண்டான். அடுத்தச் சில மணி நேரத்திலேயே கௌதமை அழைத்த இனியன், அவனிடம் தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டான். “அட, இதுக்கு எதுக்கு நண்பா தேங்க்ஸ்லாம்.” என்று கெளதம் பதிலுக்குச் சொல்ல, அவனோ, “இல்லை நண்பா, ஹெல் பண்ணனும்ன்னு மனசில பல பேர் நினைக்கலாம், ஆனா முன்வந்து ஹெல் பண்றது ஒருசிலர் தான். இவ்ளோ நேரம் அவளுக்குப் போன் செஞ்சு பார்த்துக் கொஞ்சம் பயந்துட்டேன். நீங்க டைமுக்கு ஹெல் பண்ணலைனா, வொர்க் முடிஞ்சி இருக்காது. ரொம்ப லேட் அகிடுச்சுனா, பத்திரமா அவ ஹாஸ்டலுக்கு வரணுமே. எனக்கும் இங்க டென்ஷன்.” என்று சொல்ல, அவனின் பேச்சின் நியாயம் புரிய, சரி சரி என்று கேட்டுக் கொண்டான்.

அதன்பின் வந்த நாட்களில், கெளதம், யாழினி இடையேயான நட்பு அதிகரித்தது. ‘ஹாய்’, ‘குட் மார்னிங்’ போன்ற பேச்சுக்களைத் தாண்டி, சில சமயம் சிரித்துப் பேசுவதும், பொதுவான சில விஷயங்களையும் அலசுவதும் என அவர்களின் நட்பு அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது.

இதற்கிடையே ஒருநாள், படம் பார்க்க, மாலுக்குச் சென்றிருந்தான், கெளதம். அன்றைய தினம், பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டதால், அவரின் சொந்த தொகுதியான, அந்த மால் இருக்கும் பகுதியில் கலவரம் வெடித்தது. கண்ணில்பட்ட கடைகளை, பெரிய பெரிய காம்ப்ளெக்ஸ்களை அடித்து நொறுக்கி கொண்டிருந்தனர் அவரின் கட்சியைச் சேர்ந்த ஆட்கள். அதனால், கெளதம் படம் பார்த்துக் கொண்டிருந்த மாலிலும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அனைத்து திரையரங்குகளிலும், மக்களுக்கு விவரம் சொல்லப்பட்டு, திரைப்படக் காட்சி ரத்து செய்யப்பட, வெளியே வந்த கெளதம் நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, பார்க்கிங் இருந்து தனது பைக்கை எடுக்கபோக, சற்று தள்ளி, யாழினி யாரோ தோழியுடன் நிற்பது தெரிந்தது.

‘இந்த நேரத்தில், இவ ஹாஸ்டலுக்குப் போகாம, இங்க என்ன பண்றா?’ என்று சற்றே எரிச்சல் அடைந்தவன், வண்டியை கிளப்பிக்கொண்டு அவள் அருகில் செல்ல, இவனைப் பார்த்ததும், அவள் முகத்தில் நிம்மதி. “இங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?? விஷயம் தெரியுமா தெரியாதா உங்களுக்கு??” என்று கோபத்துடன் கெளதம் கேட்க, யாழினியோ, “ஷாப்பிங் வந்தோம். இப்போதான் ஃபரிண்ட் விஷயம் சொன்னா. அதான் கிளம்புறோம். ஆனா, வண்டி எதுவும் கிடைக்கல.” என்று பாவமாகச் சொல்ல, “நிலைமையோட சீரியஸ்னஸ் தெரியலையா உங்களுக்கு. இந்த நேரத்தில் எந்த வண்டி வரும்.” என்றவனின் குரலில், முன்பைவிட, இன்னுமே எரிச்சல். அவனின் கோபத்தில், பயந்துபோய் அவள் பார்க்க, அவள் முகத்தைப் பார்த்த பிறகே கெளதம் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டான். அதற்குள், யாழினியின் தோழியின் நண்பன் அங்கே வந்துவிட, அந்தப் பெண் இவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவர்கள் சென்றதும் யாழினியை முறைத்த கெளதம், “வண்டில ஏறுங்க. நான் கொண்டு போய் விடுறேன்.” என்று கோபத்தை அடக்கிய குரலில் சொல்ல, அவளோ, “பைக்லையா?!!” என்று தயங்க, “இப்போ பேசிட்டு இருக்க நேரம் இல்லை. மொதல்ல ஏறுங்க.” என்று அவன் சத்தம் போட, அப்பொழுதும் அவள் முழித்துக்கொண்டு நிற்க, “அப்போ சரி. நீங்க இங்கேயே இருங்க. நான் கிளம்புறேன்.” என்று கோபத்துடன் உருமியவன், வண்டியை நகர்த்தபோக, “இருங்க, ப்ளீஸ். தனியா விட்டுட்டு போகாதீங்க.” என்று யாழினி, பதட்டப்பட, “அவசரத்துக்கு வண்டில போறதால, ஒன்னும் ஆகாதுங்க. அதை மொதல்ல புரிஞ்சுகோங்க.” என்று அமைதியாகவே இவன் சொல்லவும், அடுத்த நொடி, வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள் அவள்.

மனதில் கனன்ற கோபத்துடனே, வண்டியை கிளப்பியவன், போகும் வழி முழுவதும் ‘இங்க எதுக்கு வந்தீங்க? யார்கூட வந்தீங்க? இனியன் கிட்ட சொன்னீங்களா?’ என்று இவளை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்துவிட்டான். அவளோ ஒவ்வொரு கேள்விக்கும், பயந்து பயந்து பதில் சொன்னாள். விஷயம் இதுதான். ஹாஸ்டல் அறை தோழிகள் அனைவரும், ஷாப்பிங் போகலாம் என்று முடிவெடுக்க, தான் மட்டும் தனியாக அறையில் என்ன செய்வது என்று நினைத்தவள், அண்ணனிடம் அனுமதி கேட்க, அவனும் சரி என்று சொல்லிவிட, இவளும் போகலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

ஆனால் கிளம்பும் நேரம், தோழிகள், போகும் இடத்தை மாற்றிவிட்டனர். அது மட்டுமில்லாமல், மாலுக்கு வந்ததும், அவரவர் அவர்களுடைய காதலர்களுடன் சென்றுவிட, யாழினியும் மற்றொரு பெண்ணும் தான் மிஞ்சினர். இறுதியில், கிளம்பும் நேரம், மற்ற தோழிகள், இவர்கள் இருவரையும் ஆட்டோ பிடித்து வருமாறு கூறிவிட்டு சென்றுவிட, இவளுடன் இருத்த மற்றொரு பெண்ணோ, மாலுக்கு அருகில் வசிக்கும் தன் நண்பனை வரச்சொல்லி, கெளதம் இவளுக்குத் தெரிந்தவன், அவனுடன் இவள் வந்துவிடுவாள், என்று நினைத்து, தன் நண்பனுடன் கிளம்பிவிட்டாள்.

இவற்றையெல்லாம் யாழினி சொல்லி முடித்ததும், கிட்டத்தட்ட திட்டாத குறையாக, அவளுக்கு அறிவுரைகளை வழங்கினான் கெளதம். அமைதியாகவே அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்டே வந்தாள் அவள். அடுத்த அரை மணிநேரத்தில், அவள் ஹாஸ்டல் வாசலில் வண்டியை நிறுத்தியவன், அவள் இறங்கியதும், “இனிமே இனியன தவிர வேற யார் கூடையாவது வெளியே போறீங்கன்னா, அவன்கிட்ட மட்டும் சொல்லாம, எனக்கும் ஒரு மெசேஜ் செஞ்சு சொல்லிடுங்க.” என்று கட்டளையாகக் கூறிவிட்டு கிளம்பிவிட்டான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த யாழினி, சிறு புன்னகையுடன் ஹாஸ்டலுக்குள் சென்றாள்.

அன்றைய சம்பவத்திற்குப் பின்பு, அடுத்து வந்த நாட்களில், யாழினியிடம் கோபித்துக் கொண்டு, அவளிடம் சரியாகப் பேசாமல் சுற்றித் திரிந்தான் கெளதம். ஆனால் இனியனிடம் மட்டும் சகஜமாகப் பேசினான். ஆனால் இவள் செய்துவைத்த காரியத்தால், முதல் நாள் இனியனுக்கே கௌதமிடம் இருந்து திட்டு விழுந்தது. அவனும், “நண்பா, எனக்கு அவ அங்க தான் போறான்னு தெரியாது. இங்க ஆபீஸ்ல அர்ஜென்ட் வொர்க் வேற.” என்று ஏதேதோ சமாதனம் சொல்லியும், கெளதம் அவனின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தவன், அதன்பின்பே சகஜம் ஆனான். ஆனால் யாழினியின் மேல் இருந்த கோபம் போக அவனுக்குக் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது. அதற்குள் யாழினிக்கு தான், கஷ்டமாகி போனது. ஏனெனில், உண்மையான, ஒரு நல்ல நண்பன் ஸ்னானத்தில் இருப்பவன் கெளதம். அவனின் மனதை வேதனை படுத்திவிட்டோமே என்று நினைத்து வருந்தினாள்.

அதன்பின், கெளதம் திட்டியதில் இருந்து, தோழிகளுடன் வெளியில் போவதையே, வெகுவாகக் குறைத்துக்கொண்டாள். அப்படியே தோழியின் திருமணம் என்று கட்டாயமாக வெளியே போகவேண்டி வந்தாள், இனியனுக்கும், கௌதமுக்கும் போன் செய்து விஷயத்தைத் தெரியபடுத்திவிடுவாள். அப்படி விஷயத்தைச் சொல்லும்பொழுது, கெளதம் சொல்லும் விஷயம், அங்கே சென்றதும், ஒரு மிஸ்ட்கால், கிளம்பும் நேரம் ஒரு மிஸ்ட்கால், ஹாஸ்டளுக்குத் திரும்பி வந்ததும், ஒரு மெசேஜ் செய்திடவேண்டும் என்பது. சிரிப்புடனே எல்லாவற்றுக்கும் சரி என்று சம்மதிப்பாள். ‘அண்ணனை விட ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருப்பார் போல.‘ என்று சில சமயங்களில் மனதுக்குள் நினைத்து சிரித்துக் கொள்வாள்.

கெளதம் அவ்வளவு அறிவுரை வழங்கியும், பின்னாளில், இவற்றுக்கும் மேலே ஒரு ஆபத்தில், மாட்டப் போகிறாள் என்று யாழினிக்கும் சரி, கௌதமிற்கும் சரி, அப்பொழுது தெரியாது. அதன் பலனாக, தன் வாழ்கையின் அடுத்தகட்ட முடிவை தான் எடுப்போம் என்று கௌதமுக்கும் தெரியாது.

அது என்ன ஆபத்து? கௌதமின் முடிவு என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!