Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 33

அத்தியாயம் 33

குழந்தையின் மேல் இருந்த எதிர்பார்ப்பு, யாழினியை அதீத அக்கறையை வெளிபடுத்தச் செய்ய, அதுவே, அவளுக்கு ஆபத்தாகி போனது. குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என்று அவள் போகாத கோவில் இல்லை. இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டால் சுகப்ரசவம் நடக்கும், இந்தச் சாமியை வேண்டிக்கொண்டால் குழந்தை நீண்ட ஆயிலுடன் இருக்கும் என்று யார் எதைச் சொன்னாலும், அவர்களிடம் விலாசத்தை வாங்கிக் கொண்டு, கௌதமை அழைத்துக்கொண்டு உடனே அந்தக் கோவிலுக்குச் சென்றுவிடுவாள்.

ஆனால், அவளைச் சொல்லியும் குற்றல் இல்லை. பல வருடங்கள் கழித்து, மருந்து மாத்திரை, ட்ரீட்மென்ட் என்று சிலபல முயற்சிகளுக்குப் பிறகே கர்ப்பம் தரித்திருகிறாள். முதல் முறை தாயாகபோகும் யாருக்குமே பிரசவத்தைப் பற்றிய பயமும், குழந்தை எந்தக் குறையும், பிரச்னையும் இல்லாமல் பிறக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கத்தானே செய்யும். மருந்து மாத்திரை உதவியுடன் கர்ப்பம் தரிதிருப்பதால், அவளுக்குள் அதிகமாகவே பயம் இருந்தது உண்மை.

அப்படிதான், அவள் ஐந்து மாதங்கள் இருக்கும்பொழுது, தோழியின் தோழிக்கும் இவள் மாதிரியே நீண்ட நாட்கள் கழித்துக் குழந்தை உண்டாகியதாகவும், அவள் அந்தக் கோவிலுக்குச் சென்றதால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் குழந்தை நன்றாகப் பிறந்ததாகவும் இவள் தோழி சொல்லவும், யாழினி உடனே அந்தக் கோவிலை பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டு, அந்த வார ஞாயிற்றுக்கிழமை, அங்குச் சென்று வருவது என்று முடிவு செய்துகொண்டாள். ஆனால் கௌதமிற்கு அவ்வளவு தூரம் இருக்கும் அந்தக் கோவிலுக்கு, கற்பமாக இருக்கும் யாழினியை அழைத்துச் செல்வதற்கு விருப்பம் இல்லை. இருந்தும் அவள் அடம் பிடிக்கவே சரி என்று சம்மதித்தான்.



Advertisement

அதன்படி, அந்த வார விடுமுறை நாளில் இருவரும் காரில் கிளம்பி அந்தக் கோவிலுக்குச் சென்றனர். சென்னையைத் தாண்டி பல கிலோமீட்டர் தள்ளி இருந்த அந்தக் கோவிலுக்கு மதியம் சென்று சேர்ந்தவர்கள், சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு, நண்பகல் வேளையில் அங்கிருந்து வீட்டிற்குக் கிளம்பினர்.

தேசிய நெடுஞ்சாலை என்பதாலும், நண்பகல் வேலை என்பதாலும் சிறிய வாகனங்களைவிட, கணரஞ்சக வாகனங்கள் அதிகமாக அதுவும் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. சீரான வேகத்தில் கெளதம் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து எதிர் தசையில் இவர்களுக்கு எதிரில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென்று கட்டுபாட்டை இழந்து, தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு, இவர்களை நோக்கி வர, கடைசி நொடியில் லாரி தங்களை நோக்கி வருவதைப் பார்த்துவிட்ட கெளதம், லாரியின் பாதையில் இருந்து விலக ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்ப, அப்படி இருந்தும், அந்த லாரி வந்த வேகத்தில், இவர்களின் காரை பக்கவாட்டில் இடித்துவிட்டு செல்ல, அதில் நிலைதடுமாறிய கௌதமின் கார், அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்து, ரோட்டில் பல அடிகள் தேய்ந்துகொண்டே சென்று நின்றது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்திருக்க, கார் குப்புற கிடக்க, உருண்டதில் தலையில் அடிபட்டு யாழினி மயக்கம் அடைந்திருந்தாள். கௌதமிற்கு அவ்வளவாக அடிபடாவிட்டாலும், கார் ரூப் இடித்ததில், தலை வின்வின் என்று வலித்தது. கஷ்டப்பட்டுச் சீட் பெல்டை கழட்டிவிட்டு, பக்கவாட்டில் திரும்பி யாழினியை பார்க்க, ஒருபக்கமாகச் சாய்ந்த வாக்கில் கண்மூடி அவள் படுத்திருக்க, பதறியவன், “அம்மு!! அம்மு!!” என்று அவளைத் தட்டி எழுப்ப, அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவளின் அந்த நிலைமை, ஒரு நிமிடம் கௌதமை பயம்கொள்ளச் செய்ய, உடனே மூச்சை பரிசோதித்துப் பார்க்க, அவள் உயிரோடு இருப்பது தெரிந்தது. உடனே கஷ்டபட்டு காரைவிட்டு வெளியே வந்தவன், அந்தபக்கம் சென்று யாழினியை வெளியே இழுக்க முயற்சிதான். அதற்குள் சற்று தள்ளி இளநீர் கடை வைத்திருந்த ஒரு தம்பதியர் உடனே கௌதமிடம் விரைந்து வந்து, அவனுக்கு உதவி செய்ய, பல நிமிட போராட்டத்திற்குப் பின்பே யாழினியை வெளியே கொண்டுவர முடிந்தது.

Advertisement

அப்பொழுதுதான், அந்த இளநீர் கடை பெண்மணி, “சர் என்னதிது??” என்று பதற்றத்துடன் சொல்ல, அவர் காட்டியை இடத்தைக் கெளதம் பார்க்க, அடுத்த நொடி, தலையில் இடி விழுந்தது போல இருந்தது. யாழினியின் கால்பகுதி சேலை முழுவதும் சிவப்பு நிறத்தில் இருந்தது. ஆனால் அவளுக்கு நெற்றியில் மட்டுமே லேசான காயம் இருக்க, இதைப் பார்த்ததுமே கௌதமிற்கு நெஞ்சுக்குள் பகீர் என்று இருந்தது. ஒருவேளை கரு கலைந்திருக்குமோ என்று. நினைக்கும்பொழுதே, நெஞ்சுக்குள் ஒரு மாதிரி பிசைய, உடனே அந்தப் பெண்மணியிடம், “பக்கத்தில ஏதாவது ஹாஸ்பிடல் இருக்குங்களா?? ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் போகணும்.” என்று ஒருவித கலங்கிய குரலில் சொல்ல, அந்தப் பெண்மணி, ஓர் அளவுக்கு விஷயத்தை ஊகித்தவர், தன் கணவரிடம் திரும்பி, “மச்சான், உன் ஆட்டோவை எடுத்துட்டு வா, உடனே பக்கத்தில இருக்குல அந்த ஆஸ்பத்திரிக்கு இவங்களைக் கூட்டிட்டு போ.” என்று அவசரபடுத்த, அவரும் உடனே கடைக்கு அருகில் நிறுத்தி இருந்த ஆட்டோவை எடுத்துவர சென்றார்.

Advertisement

அவர் சென்றதும் அந்தப் பெண்மணி, “ஏன் சர், உங்க பெண்ஜாதி, முழுகாம இருந்துச்சா??” என்று தனது சந்தேகத்தைக் கேட்க, கெளதமோ, கண்களில் நீருடன், ‘ஆம்’ என்பது போலத் தலையசைக்க, அந்தப் பெண்மணியின் முகமே சோகமானது. இருந்தும் கௌதமுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு, “ஒன்னும் கவலைபடாத சர். பயபடுற மாதிரி எதுவும் இருக்காது.” என்றார். பதிலுக்கு, “தேங்க்ஸ் மா.” என்றான் கெளதம்.

அதற்குள் அந்தப் பெண்மணியின் கணவர் ஆட்டோவுடன் வந்துவிட, உடனே யாழினியுடன் பக்கத்தில் இருந்த அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர். ஒரு பத்து நிமிடத்தில் அங்கே சென்றதும், விஷயத்தைக் கூறி, யாழினியை அட்மிட் செய்ய, அங்கிருந்த இளநிலை டாக்டர்கள் சாலை விபத்து என்றதும் சற்று தயங்க, சீப் டாக்டர் அங்கே வந்து உடனே யாழினியை அட்மிட் செய்யச் சொல்லி தானே அவளுக்கு ட்ரீட்மென்ட் செய்தார். அதே நேரம் கௌதமிற்கும், அடிபட்ட இடத்திற்குச் சிறு தையல் போடப்பட்டு, TT இன்ஜெக்க்ஷன் போடப்பட்டது. தையல் போடப்பட்டதும், உடனே யாழினி இருந்த அறை வாசலுக்குச் சென்ற கெளதம், டாக்டருக்காகக் காத்திருந்தான்.

இவன் வந்த அரை மணிநேரத்தில் வெளியே வந்த டாக்டர், கெளதம் யார் என்பதைக் கேட்டு தெரிந்துக் கொண்டவர், “சாரி டு சே திஸ் சர், உங்க வைப்புக்கு அபார்ஷன் ஆகிடுச்சு. மத்தபடி அவங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. மயக்கத்தில இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழுச்சுடுவாங்க. அண்ட், உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லாம, நல்லா இருக்கோம்ன்னு நினைச்சுகோங்க. டோன்ட் வொரி. டே கேர்.” என்றுவிட்டு சென்றார்.

Advertisement

அந்தச் செய்தியை கேட்ட கெளதம், அப்படியே இடிந்துபோய்ச் சேரில் அமர்ந்துவிட்டான். அப்பொழுதும் அவன் குழந்தையைப் பற்றி நினைக்கவில்லை. இந்த இழப்பு யாழினியை எந்த அளவுக்குப் பாதிக்கப் போகிறதோ என்று நினைக்கையில் தான் ஒருவித பயம் அவனைச் சூழ்ந்தது. அப்படியே எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தவனைக் கலைத்தது, நர்சின் அழைப்பு. “உங்க வைப் முழுச்சிட்டாங்க சர்.” என்று கூறியவர் இவனை உள்ளே போகச் சொல்லிவிட்டு சென்றார்.

இங்கே அறைக்குள் கண்முழித்த யாழினிக்கு முதலில் தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. சில நொடிகள் பின்பே நடந்தது யாவும் நியாபகம் வர, குழந்தைக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்று உள்ளுக்குள் பகீர் என்றிருக்க, உடனே தன் வயிற்றில் கைவைத்து பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் உணர்ந்த வெறுமை, மற்றும் வலி, என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்த, அப்படியே கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

அந்த நேரம் அறைக்குள் நுழைந்த கௌதமின் அழுது சோர்ந்து போயிருந்த முகத்தைப் பார்த்ததும், தான் நினைத்தது உறுதியாக, “மாமா!!” என்று ஈனஸ்வரத்தில் அவனை அழைத்தாள். அவளின் அழைப்பில் “அம்மு!!” என்றபடி பதற்றத்துடன் அவள் அருகில் நெருங்கியவன், “ஒன்னும் இல்லடா. உனக்கு ஒன்னும் ஆகல.” என்று குரல் நடுங்க ஆறுதல் கூற, யாழினியோ, அவனின் கையைப் பிடித்துத் தன் வயிற்றில் வைத்தவள், “காலியா இருக்கிற மாதிரி இருக்கு மாமா!! என…….எனக்கு பயமா இருக்கு. பா…….பாப்பாக்கு ஏதாவது??” என்றவள், கேள்வியாகக் கௌதமின் முகத்தைப் பார்க்க, அவள் முகத்தில் தெரிந்த பாவத்தைப் பார்த்ததும், கௌதமிற்குச் சட்டென்று கண்களில் நீர் நிறைந்து வழிய தொடங்கவும், தன் அழுகையைக் கட்டுபடுத்த அந்தபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டவன், முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டான்.

கஷ்டப்பட்டுத் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டவன், முகத்தைச் சாதரணமாக வைத்துக்கொண்டு, அவள் பக்கம் திரும்பி, “வீட்டுக்குச் சொல்லிட்டேன் டா. அப்பா வந்துட்டு இருக்காங்க.” என்று வேறு பேச, அவளோ இவனின் கண்களையே கூர்மையாகப் பார்த்துக்கொண்டு, “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே மாமா நீங்க.” என்று திரும்ப அதையே கேட்க, மெல்ல மெல்ல கௌதமின் உதடு பிதுங்கி அழுகை வர, அவன் சொல்லாமலே பதிலை புரிந்துகொண்டவள், கண்கள் நிலைகுத்த, பிரம்மை பிடித்தவள் போல, இவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மெல்ல மெல்ல அழுகை வர, “மாமா!!!” என்ற கதறலுடன் அவனின் வயிற்றில் முகம் புதைத்தவள் கதறி அழுதாள்.

“ஏன் மாமா கடவுள் நமக்கு இப்படிச் செஞ்சாரு??! நான் என்ன பாவம் செஞ்சேன் மாமா??!! கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு ஏமாத்திட்டாரு, ஏன் மாமா??!! ஏன் இப்படிச் செஞ்சாரு??” என்று நீண்ட நேரம் அழுது கரைந்தவளை, அவள் உடல்நிலை கருதி அமைதியாக இருக்கச் சொன்னவனுக்கோ, குழந்தை போல அவள் பிதற்றுவதைக் கண்களால் பார்க்க முடியவில்லை. “அம்மு!! ப்ளீஸ் டா. அழாதடா! என் குட்டிமால, ப்ளீஸ் டா. உடம்புக்கு ஏதாவது ஆகிட போகுது. ப்ளீஸ்டா அம்மு. அழாதடா.” என்று திரும்பத் திரும்பச் சொன்ன பிறகே, அவள் அமைதியாக, மெல்ல மெல்ல அவளைத் தூங்கவைத்தான். அதற்குள் சேகரும், ஜெய்யும் வர, அவர்களிடம் விஷயத்தைச் சொன்னவன் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வெளிபடுத்த, சேகரும், ஜெய்க்கும், அவனைச் சமாதனம் செய்ய வெகுநேரம் எடுத்தது.

அடுத்து ஒருவாரம் மருத்துவமனையில் யாழினி அட்மிட் செய்யப்பட, அதற்குள் விஷயம் தெரிந்து அவளின் பெற்றோர் மற்றும் இனியனும் வந்து சேர்ந்தனர். யாழினியின் தாய், செய்தியை கேட்டு புலம்பியவர், பிறகு தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டு யாழினியை சமாதனம் செய்ய, இங்கே இனியனோ கௌதமை சமாதனம் செய்தான். அப்படீயே அந்த ஒருவாரமும் ஓட, யாழினியை டிச்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

தங்கள் அறைக்குள் வந்ததுமே, யாழினியின் கண்ணில் குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த பொம்மைகள் எல்லாம் கண்ணில் பட, அதன் அருகில் சென்றவள், மெல்ல அதைத் தடவி பார்க்க, பழைய சந்தோஷமான நியாபகங்கள் எல்லாம் கண்முன் வர, சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள். அப்பொழுது அவள் அருகில் கெளதம் வரவும், “அம்மு” என்ற அவனின் கனிவான அழைப்பில், அழுகையுடன் அவனை அனைத்துக்கொண்டவள், “எனக்கு என் பாப்பா வேணும் மாமா, எப்படியாவது என் பாப்பாவை திருப்பிக் கூட்டிட்டு வாங்க ப்ளீஸ் மாமா. எனக்கு வேணும். எனக்கு என் பாப்பா வேணும்.” என்றபடி கதறியவளை சமாதனம் செய்யமுடியாமல் தவித்துப் போனான் அந்த அன்பு கணவன்.

அவளின் உடல்நிலை கருதி, சில மாதங்கள் அங்கேயே தங்கிகொண்டனர், யாழினியின் பெற்றோர். அவளுக்குத் தேவையான, சத்தான ஆகாரங்கள் செய்து கொடுத்து, அவளுக்கு ஆறுதலாக இருந்து என அவர்களின் உபசரிப்பிலும், கௌதமின் அன்பிலும் மெல்ல மெல்ல உடல்நலம் தேறினாள் யாழினி. ஆனால் அவளின் நடவடிக்கைகளில் ஒரு சில மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. குழந்தை இறந்ததிற்குத் தான் தான் காரணம் என்ற எண்ணம் அவளைக் குற்ற உணர்ச்சி அடைய செய்ய, அது அவளின் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட ஆரம்பித்தது.

அந்தக் குற்ற உணர்ச்சியும், குழந்தையை இழந்த ஏமாற்றமும், பல சயங்களில் கோபமாகவும், அழுகையாகவும், எரிச்சலாகவும் யாழினியிடம் இருந்து வெளிப்பட ஆரம்பித்தது. சில சமயம் இரவு சத்தமில்லாமல் அழுவாள். சில சமயம் அனாவசியமாகக் கோபபடுபவள், “எல்லாத்துக்கும் நான் தான் கரணம்.” என்று எரிந்துவிழுவாள். எங்கே அவளின் இந்த நடவடிக்கைகள் அவளை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடுமோ என்று பயந்த கெளதம், அலுவகத்தில் சொல்லி அவளின் லீவை கேன்சல் செய்தவன், அவளிடம் பேசி அலுவகம் போக வைத்தான். சேகர் கூட, “ஏன்ப்பா, அவளுக்கே உடம்பு சரி இல்லை. இதுல ஆபீஸ் டென்ஷன் வேற தலையில போட்டுக்கணுமா, வேண்டாமே டா.” என்று சொல்ல, “இல்லைபா, வீட்டுக்குள்ளையே இருந்தான்னா, நடந்து முடிஞ்சது அவ மைன்ட்ல ஓடிட்டே இருக்கும். அந்த நினைப்புல இருந்து அவளை டைவேர்ட் செய்யணும். அதுக்குத் தான் ஆபீஸ் வர சொல்றேன். நான் தான அப்பா அவளுக்குச் சீனியர். அவளுக்கு வொர்க் லோட், டென்ஷன் வராம பார்த்துக்கிறேன்.” என்றான் பதிலுக்கு.

அலுவகம் வந்து, நண்பர்களுடம் பழக ஆரம்பித்ததும் தான், மெல்ல மெல்ல அவள் மனநிலை நார்மலாக ஆரம்பித்தது. நடந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தாள். வேலையும் அவளை உள்ளே இழுத்துக்கொள்ள, அவளது கவனம் அதில் திரும்ப ஆரம்பித்தது. அவளைத் தன் கண்முன்னே வைத்துக்கொண்ட பின்பு தான், கௌதமிற்கும நிம்மதியாக இருந்தது. தன் வேலைகளுக்கு நடுவில் அவளை அவ்வபொழுது கண்காணித்துக் கொண்டான். அவன் தான் இவளின் டீமிற்கு லீட் என்பதால், வேலைப்பளு அதிகம் போகாமல் பார்த்துக்கொண்டான். சில சமயம் அதிகம் பெண்டிங் வொர்க் இருந்தால், தானும் அதில் பங்கெடுத்துக்கொண்டு, ப்ராஜெக்ட் சீக்கிரம் முடிய உதவினான்.

இப்படி முற்றிலும் வேறு சூழ்நிலை, யாழினியை முழுவதுமாகத் தனது குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே கொண்டு வந்தது. இருந்தும், குழந்தையின் இழப்பை நினைக்கும்பொழுது, கண்கள் கலங்க தான் செய்யும். அந்த நேரம், கெளதம் தான், “நிச்சயம் கடவுள் நமக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுப்பாரு அம்மு. நீ கவலை படாத.” என்று ஆறுதல் கூறுவான்.

இப்படியே கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் கடக்க, மீண்டும் கர்ப்பம் தரித்தால் யாழினி. ஏனோ முதல்முறை போல அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படாவிட்டாலும், ஓர் அளவுக்கு நிம்மதியும் சந்தோஷமும் இருந்தது அவளுக்கு. அதே நேரம், இந்தக் குழந்தையாவது நல்லபடியாகப் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவள் மனதுக்குள் விதைத்துவிட்டது. இரண்டாவது முறையாக அவள் கருத்தரித்திருப்பதால், அவளை வேலையை விடச் செய்த கெளதம், குழந்தை பிறக்கும் வரை, யாழினியின் பெற்றோரை இங்கேயே வந்து தங்கி கொள்ளும்படி சொல்லிவிட்டான். அவர்களும் சரி என்று, இங்கேயே வந்து தங்கி கொண்டனர். தாயின் கவனிப்பிலும், அக்கம்பக்கத்து வயதான பெண்மணிகளின் அறிவுரைகளிலும், இந்த முறை எந்தவித பிரச்சனையும் இன்றி, மாதங்கள் செல்ல, வலைக்காப்புச் செய்து திருச்சிக்கு அருகில் இருக்கும் அவளின் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லபட்டாள் யாழினி. கௌதமும் எதுவும் எதிர்ப்புத் தெரிவிக்காமல், கூடவே சென்று அவளை வீட்டில் விட்டு விட்டு, டுயு தேதிக்கு முன்பு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தான். ஏனோ அவனுக்கும், யாழினி அங்கே இருந்தால், தெரிந்தவர், தோழிகள் என்று நல்லவிதமாக இருப்பாள் என்று நம்பிக்கை.

அதன்பின் வாரம் தவறாமல் யாழினியை சென்று பார்த்து வந்தான். நாட்கள் வேகமாகச் செல்ல, யாழினியின் ட்யு தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஊருக்கு வந்துவிட்டான் கெளதம். ஏனோ அவனுக்கு மனமே சரி இல்லை. சீக்கிரம் கிளம்பி செல்வோம் என்று எண்ணம் மனதுக்குள் வந்துக்கொண்டே இருக்க, அதன்பொருட்டே, ஒருவாரம் முன்பே கிளம்பி வந்துவிட்டான்.

அவன் வந்து மூன்று நாட்கள் இருக்கும். அன்று இரவு, திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்துகொண்ட யாழினிக்கு அடிவயிற்றில் சுருக் என்ற வலி வந்ததுபோல இருந்தது. எழுந்து அமர்ந்தவளுக்கு, ஒருவேளை தன் பிரம்மை தானோ என்ற எண்ணம் தோன்ற, சில நொடிகள் கழித்து மீண்டும், அதே போலச் சுருகென்ற வலி கொஞ்சம் அதிகமாக வரவும், உடனே கௌதமை எழுப்பினாள். அடுத்தடுத்து அவளின் பெற்றோரும் எழுந்துகொள்ள, யாழினியின் தாய், ஒருவேளை சூட்டு வலியாக இருக்கும், இன்னும் தேதி இருப்பதால், கொஞ்ச நேரம் பாப்போம், என்று சொன்னவர், சில கைவைதியங்கள் செய்ய, அதன்பின்பும் மீண்டும் அவளுக்கு விட்டுவிட்டு வலி அதிகமாக வர ஆரம்பிக்க, இதற்குமேல் நேரத்தை கடத்த வேண்டாம் என்று சொன்ன கெளதம், தனது காரில் அனைவரையும் ஏற்றிக்கொண்டு திருச்சிக்குக் கொஞ்சம் தள்ளி இருந்த அந்த மருத்துவமனைக்கு விரைந்தான்.

அடுத்த அரை மணிநேரத்தில் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டு, அறை ஒதுக்கப்பட்டுப் படுக்கவைக்கப் பட்டிருந்தாள் யாழினி. முதலில் மருத்துவர் வந்து அவளைச் செக் செய்துவிட்டு சென்றார். அதன்பின் நர்ஸ் வந்து அடிக்கடி செக் செய்துவிட்டுப் போனார். ஏனோ, எதிர்பார்த்திருந்த நேரத்தை நெருங்கிவிட்டோம் என்ற பீதியும், குழந்தை நல்லபடியாகப் பிறக்கவேண்டும் என்ற பயமும், அப்பொழுதே யாழினியை ஆட்கொள்ள ஆரம்பித்தது. நொடிக்கொரு தரம் கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தாள். இதில் அவ்வபொழுது வந்து செல்லும் வலி வேறு, பிரசவத்தைப் பற்றிய பயத்தை அவளுக்கு அதிகரிக்கச் செய்தது. அப்பொழுதே அவளுக்கு உடலுக்குள் ஒரு நடுக்கம் வர ஆரம்பித்தது.

நேரம் செல்ல செல்ல வலி அதிகரிக்க ஆரம்பித்தது. அடிவயிற்றை முட்டுவதுபோல ஒரு உணர்வு. கிட்டத்தட்ட பனிரெண்டு மணிநேரத்திற்கு மேல் வலியில் துடித்தவள், வலி வரும் நேரம் கௌதமின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவளின் வேதனையைப் பார்க்கும்பொழுது இவனுக்குமே பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்தது.

பிரசவ வலி சிறிது சிறிதாக ஆரம்பிக்கும்பொழுது, செர்விக்கல் டைலேஷன் (கருப்பை வாயில் திறப்பு) 3CM ஆக இருக்க, மெல்ல மெல்ல அது அதிகரித்து, 7CM வரை வந்து, பின்பு 10CM ஆக இருக்கும்பொழுது, பிரசவிக்கத் தயார் ஆகவேண்டும்.

அதன்படி, கிட்டத்தட்ட பல மணிநேரங்கள் கழித்து, யாழினிக்குப் பனிக்குடம் உடைய, உடனே மருத்துவர்கள் விரைந்தனர். கெளதம் உட்பட, அனைவரும் அறைக்கு வெளியே அனுப்பப்பட, அவளுக்கு epidural anesthesia கொடுக்கப்பட்டு, டெலிவரி ப்ரோசீஜர்ஸ் ஆரம்பம் ஆனது. டாகடர் அவளிடம், “புஷ் பண்ணுங்க. இன்னும் கொஞ்சம் தான் புஷ் பண்ணுங்க.“ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க, உயிரை கொடுத்து இவளும் முயற்சிக்க, நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பும், குழந்தையை வெளியே எடுக்க முடியவில்லை. யாழினியோ முயற்சி செய்து செய்து களைத்து போயிருந்தாள். உடல் முழுவதும் வேர்த்துகொட்ட, முகத்தில் முடிகற்றைகள் வேர்வையில் ஒட்டியிருக்க, கண்கள் சொருகியது அவளுக்கு. அந்த நேரம், மருத்துவர், பதற்றமாக யாரையோ போனில் அழைத்துப் பேசுவதும், பின்பு நர்சிடம் எதுவோ சொல்வதுமாக இருக்க, யாழினிக்குள் குழந்தையை நினைத்து இருந்த பயம் அதிகரிக்க, இதில் பிரசவ டென்ஷனும் சேர்ந்துகொள்ள, அவளது ரத்த அழுத்தம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

உடலில் இருந்த சத்து முழுவதும் வடிந்திருக்க, லேசாக மயக்க நிலைமைக்குச் செல்ல ஆரம்பித்தாள் யாழினி. நர்ஸ் ஒருவர் தான் இவளை பார்த்துவிட்டு டாக்டரிடம் சொல்ல, அவரோ பேசாமல் சீ – செக்க்ஷன் செய்துவிடலாம் என்று முடிவு செய்தவர், உடனே அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். அரை மயக்கத்தில் யாழினி படுத்திருக்க, இங்கே டாக்டர்கள் ஆபரேஷன் செய்து, குழந்தையை வெளியே எடுக்க, குழந்தையோ அழாமல், எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. டாக்டருக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. அவரும், நர்சும் குழந்தையைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, முதுகில் தட்டி, என்று எல்லாம் செய்து பார்த்தும், குழந்தையிடம் ஒரு அசைவும் இல்லை.

அரை மயக்கத்தில் இருந்தாலும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்திருந்த யாழினிக்கு, ஆபரேஷன் முடிந்தும், குழந்தையின் அழுகை கேட்கவில்லையே என்ற பீதி மனதுக்குள் ஓட, அவள் கண்கள் குழந்தையைப் பார்க்க ஏங்கியது. செவிகளோ, குழந்தையின் அழுகை ஒலிக்குக் காத்திருந்தது. ஆனால் டாக்டர் எதுவும் சொல்லாமல் இருக்க, திரும்பி பார்த்தவளின் கண்களில், அசைவற்ற குழந்தையை டாக்டர் பிடித்திருப்பது தெரிய, இவளுக்குள் அதிர்ச்சியும், பதற்றமும் அதிகரிக்க, முந்தயக் குழந்தை இழப்பு மனதுக்குள் வந்துபோக, இவளின் இதயத்துடிப்பு அப்நார்மல் ஆனது. ரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது. இதை அங்கிருந்த இயந்திரங்கள் பீப் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்ய, குழந்தையை நர்சிடம் கொடுத்துவிட்டு யாழினியிடம் விரைந்த டாக்டர், அவளைக் கவனிக்க, அவளோ குழந்தையைப் பற்றிக் கேட்க, அதில் அவள் உடல்நிலை மோசமடைய ஆரம்பிக்க, என்ன செய்வது என்று தெரியாமல், உடனே கௌதமை உள்ளே அழைத்தனர்.

விஷயம் கேள்விப்பட்டு உள்ளே விரைந்தவன், குழந்தையைக் கூடப் பார்க்காமல், யாழினியிடம் விரைந்து, “அம்மு, அமைதியா இரு டா. ப்ளீஸ். டென்ஷன் ஆகாத. கால்ம் டவுன்.” என்று சொல்ல, அவளோ, “பா…பா…பாப்பா” என்று குழந்தையைக் கைகாட்ட, அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தான். வருத்தத்தைத் தனக்குள் புதைத்துக் கொண்டவன், அவளைச் சமாதனம் செய்ய முயற்சிக்க, பலன் இல்லை. “டாக்டர் ப்ளீஸ் எதாவது செய்ங்க.” என்று டாக்டரிடம் சொல்ல, அவரோ, “குழந்தையை அவங்க தேடுறாங்க சர். அதான், அவங்களுக்குள்ள இந்த மாதிரி ரியாக்க்ஷன். நாங்களும் எங்களால முடிஞ்சதை ட்ரை செஞ்சுட்டு தான் இருக்கோம்.” என்று சொன்னவருக்கு இவளை பார்ப்பதா, இல்லை குழந்தையைப் பார்ப்பதா என்று இருந்தது.

பல முயற்சி செய்தபின்னும், அவர்களால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. நிமிடங்கள் செல்ல செல்ல, யாழியின் உடல் தூக்கிபோட ஆரம்பித்தது. ‘பிக்ஸ்’ எதுவும் வந்துவிடக் கூடாதே என்ற பயம் அனைவரையும் பிடித்துக்கொண்டது. அந்த நேரம், அங்கிருந்த வயதான செவிலிய பெண்மணி, டாக்டரிடம் வந்து, குழந்தையைத் தான் யாழினியின் தாய் உள்ளம் தேடுவதாகச் சொன்னவர், “ஒரு குழந்தையை இவங்க கிட்ட காட்டினா, இவங்க உயிரை காப்பாத்திடலாம். பேசாம நம்ம ஆஷ்ரமத்தில இருந்து குழந்தையை எடுத்துட்டு வரலாம் டாக்டர். இதைத் தவிர இப்போதைக்கு வேற வழியில்லை அவங்க உயிரை எப்படியாவது காப்பாத்தனும்.” என்று சொல்ல, அவர் சொல்வது புரிந்தாலும், கெளதம் இதற்கு ஒத்துகொள்வானா?? இது ஒத்துவருமா?? இப்படிச் செய்தாள் யாழினி பிழைத்துக்கொள்ள முடியுமா?? என்று பல கேள்விகள் அவருக்குள் எழுந்தது.

ஆனால் சில சமயம், அறிவியல் அதிசியங்கள் செய்ய முடியாததை உளவியல் ரகசியங்கள் செய்து முடிக்கவள்ளது. ஏனெனில், உளவியல் என்னும் மந்திரத்தில் தான் மனிதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். உளவியைலை பொருத்து தானே அவனின் செயல்பாடுகள் மாறக்கூடும்.

பல யோசனைகளுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் நர்ஸ் சொன்னதையும் முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்த டாக்டர், இந்த விஷயத்தைப் பற்றிக் கௌதமிடம் சொல்ல, அவனுக்குமே, இது வேலை செய்யுமா என்ற யோசனை தான். ஆனால் யாழினி பிழைக்கவேண்டும் என்றாள் எதையும் செய்யத் தயார் என்ற மனநிலையில் இருப்பவன், டாக்டர் சொன்னதற்குச் சரி என்று ஒத்துக்கொண்டான். உடனே அவர்கள் மருத்துவமனை டிரஸ்ட்டுக்குச் சொந்தமாகச் சற்று தள்ளி இருந்த ஆஷ்ரமத்திற்கு, மருத்துவமனை ப்புயுனுடன் புறப்பட்டுச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!