Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 34.1

அத்தியாயம் 34 (1)

கௌதமை ஆஷ்ரம அலுவக அறையில் அமர வைத்துவிட்டு, பியுன் மட்டும் உள்ளே சென்றவன், சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து, கௌதமை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே இவன் கையில், பிங்க் நிற பூந்துவாலையில் சுற்றப்பட்ட, ஒரு மாதமே ஆகி இருந்த அழகிய பெண் குழந்தை கொடுக்கப்பட்டது. அந்த நிமிடம் வரை அழுது கொண்டிருந்த அக்குழந்தை இவன் கைகளில் வந்ததும், பட்டென்று அழுகையை நிறுத்திவிட, இங்கே கௌதமிற்கும், அக்குழந்தையைக் கைகளில் வாங்கியதும், உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாக, ஒரு நேர்மறை எண்ணமும், தான் பெற்ற குழந்தையைத் தொடுவது போல ஒரு உணர்வையும் நெஞ்சுக்குள் உணர்ந்தான்.

அந்த குட்டி ரோஜாவோ, முகத்தில் கண்ணீர் கோடாக வழிந்திருக்க, கண்ணீர் தேங்கியிருந்தும், சிரிப்பை காட்டும் கண்களுடன், கைகால்களை உதறிக்கொண்டு, உதடு விரிந்த புன்னகையுடன், இவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும், ‘தன் குழந்தையும் உயிரோடு இருந்திருக்கக் கூடாதா, இருந்திருந்தாள் இப்படித்தானே இருப்பாள். அவளைக் கைகளில் ஏந்தும்பொழுது இப்படிதானே உணர்ந்திருப்பேன்.’ என்ற எண்ணம் அவனுக்குள் தோன்ற, கண்கள் கலங்கிவிட்டது கௌதமிற்கு. குனிந்து குழந்தையின் நெற்றியில் வலிக்காதவாறு, இதழ் ஒற்றியவனின் கண்ணீர் துளி, அக்குழந்தையின் கண்ணீரோடு கலந்தது, அவளின் கன்னத்தில் வழிந்தோடியது.

அடுத்த நொடி, யாழினியின் நியாபகம் வர, நிர்வாகியிடம் திரும்பி, “பாப்பாவ இன்னும் யாரும் அடாப்ட் செய்யலையே?” என்று கேட்க, அவர் இல்லை என்று சொன்னதும், “தேங்க்ஸ்.“ என்றவன், பியுனுடன் மருத்துவமனைக்கு விரைந்தான். டெலிவரி ரூமிற்குச் சென்று டாக்டரிடம் குழந்தையை இவன் கொடுக்க, அந்த வயதான நர்ஸ் பெண்மணி குழந்தையின் காலை கிள்ளிவிட, அதில் அக்குழந்தை வீரிட்டு அழ, பார்த்திருந்த கௌதமிற்கோ, கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஒருவகையில் இப்படிச் செய்ததும், நல்ல பலனை கொடுத்தது.



Advertisement

மெஷின்களின் பீப் ஒலிகளுக்கு இடையில், மயக்கத்தில் இருந்த யாழினியிடம் லேசான அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்தவளின் கருவிழிகள், அங்கும் இங்கும் ஓடி, குழந்தையைத் தேட, உடனே டாக்டர் அவள் நெஞ்சின் மேல் குழந்தையைக் கிடத்த, ஆசையுடன் குழந்தையை வருடியது அவளின் கண்கள். மெல்ல, கைகளை உயர்த்தி, குழந்தையின் தலையைத் தன் நெஞ்சோடு அழுத்தி கொண்டவள், மிருதுவாகத் தலையில் இதழ் பதித்தாள். அதன் பிறகே, அவளின் ஆன்மா அமைதியடைய, அவளுடைய உடல் நிலையும் சராசரி நிலைக்கு வந்தது. மெல்ல சக்தியை ஒன்று திரட்டி, எழுந்து அமர முயற்சிக்க, ஆனால் அவளால் முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. உடலில் தெம்பு இல்லாததால் தானோ என்று அவளே ஒன்றை கற்பனை செய்துகொண்டு விட்டுவிட, ஆனால் அது காரணம் இல்லை என்று பிறகு தான் தெரியவந்தது.

யாழினியின் பெற்றோருக்கு மட்டுமே, குழந்தை இறந்துவிட்டது தெரியும். அதுவும் இனியனுக்குக் கூடத் தெரியாது. அவர்களுக்குமே, அந்த நேரம், யாழினி உயிர் பிழைத்தால் போதும் என்று தான் நினைத்தனர். கௌதம் அவ்வளவு முயற்சி செய்வதைப் பார்க்கும்பொழுது, இப்படி ஒரு மருமகன் கிடைக்கத் தாங்களும், தங்கள் பெண்ணும் என்ன தவம் செய்திருக்கிறோமோ என்று தான் நினைக்கத் தோன்றியது.

குழந்தையைக் கெளதம் தத்து எடுக்க முடிவு செய்தது தெரியாததால், வேறு யாரோ குழந்தை என்பதாலும், ஆபரேஷன் செய்துள்ளதாலும், யாழினியின் உடல் பலவீனகமாக இருப்பதாலும், குழந்தையை அவளிடம் இருந்து எடுத்துப் பக்கத்தில் தொட்டிலில் வைத்த டாக்டர், இப்போதைக்குக் குழந்தைக்குப் பசியாற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பசியற்றாமல் இருப்பதால் அவளுக்கு வலி ஏற்படாமல் இருக்க, மாற்று ஏற்பாடுகளைச் செய்தார்.

Advertisement

சி-செக்க்ஷன் செய்திருப்பதால், அடுத்தச் சில நாட்களுக்கு முழுவதும் பெட் ரெஸ்டில் அவள் இருக்க, இங்கே கெளதமோ, ஆஷ்ரமத்திற்குச் சென்று முறைப்படி ரெஜிஸ்டர் செய்து, அக்குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டான். இதற்கிடையில், சேகரும், ஜெய்யும், இனியனும் திருச்சி வந்து யாழினியை பார்த்துவிட்டு சென்றனர். அவர்களுக்கும் குழந்தை பற்றிய உண்மை சொல்லப்படவில்லை. யாழியின் பெற்றோரையும் சொல்ல வேண்டாம் என்று கெளதம் ஏற்கனவே சொல்லி இருந்தான்.

Advertisement

இப்படிச் சில நாட்கள் கழிய, ஓர் அளவுக்கு உடல் நலம் தேறிய யாழினி, அன்றொரு நாள், தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கவென, கட்டிலில் இருந்து எழுந்துகொள்ள முயற்சிக்க, அவளால் முடியவில்லை. கைகளை ஊனி எழுந்துகொள்ள நினைத்தால், ஒரு பக்க கை அப்படியே தளர்ந்து மடங்கிவிட, பயந்து போனவள், கௌதமை அழைக்க, அவனும், இவள் தாயும், வந்து பார்க்க, இருவருக்கும் பயம் பிடித்துக் கொண்டது.

உடனே டாக்டரை கெளதம் அழைக்க, அவரோ யாழினியை பரிசோதித்துவிட்டு, நெற்றியை சுருக்கினார். உடனே யாழினிக்கு சில பரிசோதனைகளை எடுக்கப்பட, அதன் முடிவில், அரிதாக வரக்கூடிய Guillain–Barre syndrome என்று சொல்லப்படக் கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியால், புற நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு அதால் வரக்கூடிய தசை தளர்ச்சி அல்லது செயலிழப்பு அவளுக்கு வந்திருப்பது தெரிந்தது. அடுத்த 72மணி நேரத்திற்குள் வலியுடன் கூடிய நரம்பு தளர்ச்சியை அனுபவித்தவள், பின் படுத்த படுக்கையானாள். அடுத்தச் சில நாட்களில் பேசும் சக்தியையும் இவள் இழக்க, ICUவில் வைத்து, செயற்கை சுவாசத்தில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள். இதற்கிடையில், ஜெய்க்கு கல்லூரி விடுமுறை விட, அவனும், சேகரும் யாழினியின் பெற்றோர் வீட்டில் வந்து தங்கி கொண்டனர்.

பல சமயம், தன் அருகில் அமர்ந்து, தன் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கண்ணீர் சிந்தும் கௌதமிடம், கண்களால் ஆறுதல் சொல்லும் யாழினி, கூடிய விரைவில் எல்லாம் சரி ஆகிவிடும் என்கிற ரீதியல் கஷ்டப்பட்டுப் புன்னகைப்பாள். மருத்துவர்களும், இது குணமாககூடியது தான் என்று சொன்னது ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது அவனுக்கு, ஆனால் அது எப்பொழுது என்றுதான் தெரியவில்லை. சில மாதங்களாகவும் இருக்கலாம், சில வருடங்களாகவும் இருக்கலாம். கடவுளுக்கே வெளிச்சம்.

Advertisement

ஏற்கனவே குழந்தை இறந்த வலி என்றால், இப்பொழுது யாழினியின் இந்த நிலைமை என்று மேலும் மேலும் கௌதமை சோதித்து விதி. தன் மனைவி உட்பட, எல்லாவற்றையும் கிட்டத்தட்ட இழந்த நிலையில், நடை பிணமாக மாறினான் கெளதம். அந்தத் திக்கற்ற காட்டில், அவனுக்கிருந்த ஒரே வெளிச்சம் அக்குழந்தை. குழந்தைக்குப் பெயர் கூட வைக்கவேண்டும் என்ற நினைவில்லாமல், ஒரு பக்கம் யாழினி, மறுபக்கம் குழந்தை என்று நேரத்தை கழித்தான் அவன்.

மருத்துவமனையில் இருவர் மட்டுமே தாங்கிக்கொள்ள அனுமதி உள்ளதால், கௌதமும், யாழினியின் தாயும் அவளுடனே தாங்கிக்கொள்ள, யாழினியின் தந்தை, சேகர், மற்றும் ஜெய், மூவரும் வீட்டை பார்த்துக்கொள்ள, இருபத்தி நான்கு மணிநேரமும் யாழினியுடனே இருந்தான் கெளதம். மருத்துவமனை சூழல் குழந்தைக்குச் சரிவராது என்பதால், அவள் வீட்டிலேயே இருந்தாள். தினமும் காலை, மாலை கௌதமை பார்க்க வரும்பொழுது, தன்னுடன் குழந்தையை எடுத்து வருவார் சேகர்.

அந்த நேரங்களில் எல்லாம், குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு யாழினியின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு, அவளுடன் பேசிக் கொண்டு, அவள் முன் குழந்தையின் கை கால்களை அசைத்து காண்பித்து, சில சமயங்களில் விளையாட்டு காட்டி, குழந்தை அசுத்தம் செய்யும் நேரங்களில், “பாரு உன் பொண்ணு என் டிரெஸ்ஸை அசிங்கம் செஞ்சுட்டா, சீக்கிரம் எழுந்து வந்து உன் மாமாவோட டிரெஸ்ஸை கிளீன் செஞ்சு, அப்படியே ஒரு கிஸ்ஸை கொடு அம்மு. இல்லை நான் பொல்லாதவனா ஆகிடுவேன்.” என்று கிண்டலாக ஆரம்பித்து, கண்கள் கலங்க முடிப்பவனுக்கு, அவள் நீண்ட நாள் எதிர்பார்த்த குழந்தைக்காகவாவது, சீக்கிரம் குணமாகி வந்துவிட மாட்டாளா என்ற நப்பாசை. பதிலுக்கு யாழினியோ, கௌதமின் கலங்கிய கண்களைப் பார்த்து, கண்காளாலே தன் கண்டிப்பை காட்டுபவள், சிரிக்க முயன்று தோர்ப்பாள்.

இந்நிலையில், ஒரு நாள், யாழினியின் பெற்றோர் திருமணம் ஒன்றிற்குச் சென்றிருக்க, மருத்துவமனையில் இருந்த கெளதம், தன் மதிய உணவை முடித்துக்கொண்டு, யாழினி இருக்கும் அறைக்கு வந்து பார்க்க, அவளோ கண்மூடி படுத்திருப்பது தெரிந்தது. மெதுவாக யாழினி என்று இவன் அழைக்க, அவள் கண் முழிக்கவில்லை. மீண்டும் இரண்டு மூன்று முறை அழைத்துப் பார்த்தவனுக்கு, எதுவோ வித்யாசமாகத் தெரிய, அப்பொழுதுதான் கவனித்தான், இதயத் துடிப்பை காட்டும் கருவியில், வழக்கமாக வரும் ஓசைக்குப் பதில், வேறு ஓசை வருவதை. அதன் அருகில் சென்று பார்க்க, இதயத் துடிப்பு இல்லை என்பதைச் சுட்டி காட்டும் வகையில், சீரான நீள கோடு ஒன்று போக, இவனுக்கு உள்ளுக்குள் பயம் சூழ்ந்தது.

உடனே யாழியிடம் விரைந்தவன், அவளைத் தொட்டு எழுப்ப முயற்சிக்க, அவளிடம் எந்த அசைவும் இல்லை. உடல் வேறு, லேசாகச் சில்லென்று இருந்தது. அடுத்த நொடி பதற்றம் இவனைத் தொற்றிக்கொள்ள, உடனே டாக்டரை தேடி ஓடியவன், வழியில் பார்த்த நர்ஸ் ஒருவரிடம் விஷயத்தைச் சொல்லி, அழைத்துக்கொண்டு மீண்டும் அறைக்கு வர, அவரும் பார்த்துவிட்டு, உடனே டாக்டரை அழைத்துவர, அடுத்தச் சில நிமிடங்களில் அங்கே வந்த டாக்டர் யாழினியை பரிசோதித்துவிட்டு, CPR procedure செய்து பார்த்தார். அப்படியிருந்தும் யாழினியிடம் எந்த அசைவும் இல்லை.

இவற்றையெல்லாம் நெஞ்சில் கலக்கத்துடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கெளதம், யாழினியின் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “அம்மு! என்னைப் பாரு அம்மு. கண்ணை முழிச்சு பாரு. ப்ளீஸ் டி. என்னை ஏமாத்திடாதாடி. பாப்பாவை நினைச்சு பாரு அம்மு. தயவு செஞ்சு கண்ணைத் திறடி.” என்று அவள் கைகளைப் பரபரவெனத் தேய்த்துகொண்டே கண்களில் நீர் வழிய புலம்பிக் கொண்டிருக்க, பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு சோர்வுடன் கௌதமின் அருகில் வந்த டாக்டர், “சாரி சர். எங்களால காப்பாத்த முடியல.” என்று கூறிவிட்டு செல்ல,

இடிந்துபோய்க் கட்டில் அருகில் மண்டியிட்டவனின், கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்க, அந்த மங்களான காட்சியிலும், அழகாக, புன்னகையுடன், நிர்மலமான முகத்துடன் படுத்திருக்கும் தன் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, சிறிது நேரத்திற்கு முன்பு, சாப்பிட போகும் முன், தான் ஏதோ பேசிக்கொண்டே இருக்க, இமை மூடாமல் தன் முகத்தையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவள், தான் நிமிர்ந்து பார்த்ததும், ஒருவித வெட்கத்துடன் கண்களைத் திருப்பிக் கொண்ட காட்சி கண்முன் காட்சியாக ஓட, அதன் தாக்கத்தில் நெஞ்சில் பாரம் ஏற, அப்படியே யாழினியின் கைகளில் முகம் புதைத்து அழுதான். இந்த நொடி வரை யாழினி இறந்துவிட்டாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.

வெகு நேரம் அழுது கொண்டிருந்தவனைக் கலைத்தது, அவன் குழந்தையின் அழுகை ஓசை. கூடவே, “என்ன ஆச்சு ப்பா??!!”, “என்ன ஆச்சு அண்ணா??!!” என்று பதற்றமாக ஒலித்த சேகர், ஜெய் குரல்கள். சிவந்த கண்களுடன் எழுந்து இவர்கள் அருகில் வந்தவன், “அப்…….அப்…..அப்பா, யாழினி……யாழினி என்னை அனா….அனாதையா விட்டுட்டு போய்ட்டா ப்பா.” என்றவனுக்கு அதற்கு மேல் அழுகையை அடக்க முடியாமல் ஜெய்யை கட்டிக்கொண்டு கதறினான்.

கெளதம் சொன்னது, தலையில் இடியை இறக்கியது போல இருக்க, “என்ன அண்ணா சொல்ற??!!” என்றவர்களுக்கு, அவனின் அமைதியே குலைநடுங்க செய்ய, “அண்ணி!!!!!” என்று ஜெய்யும், “அம்மாடி!!!!” என்று சேகரும் வெடித்து அழ ஆரம்பித்தனர். அடுத்து விஷயம் கேள்விப்பட்டு வெளியூரில் இருந்து அடித்துபிடித்து வந்து சேர்ந்தனர் யாழினியின் பெற்றோர். சென்னையில் இருந்து இனியனும் கிளம்பியிருந்தான்.

யாழினியின் உயிரற்ற உடலை பார்த்து, நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுத அவளின் தாய், “இப்படி அல்பாச்யிசில போயிட்டியே டி. இப்படி ஒரு நல்ல வாழ்க்கை கிடச்சும், அதை முழுசா வாழாம, எல்லரையும் விட்டுட்டு போயிட்டாளே என் பொண்ணு. இந்த மனுஷனை விட்டு போக எப்படி டி மனசு வந்தது. பாருடி, மாப்பிளையைப் பாருடி, அவருக்கு நான் இப்போ என்ன பதில் சொல்வேன். அப்பா! ஆண்டவா! என்னைக்காவது புழச்சு வந்துடுவான்னு உன்னைத் தானே மலைபோல நம்பிட்டு இருந்தேன். இப்படி அந்த நம்பிக்கையில மன்ன அள்ளி போட்டுட்டியே.” என்று அந்த மருத்துவமனையே கலங்கும் அளவுக்கு அழுது கரைந்தார்.

பெண்கள், சட்டென்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுவார்கள், ஆனால் ஆண்கள் முக்கால்வாசி நேரம் தங்கள் உணர்வுகளை, முக்கியமாக அழுகையைக் கட்டுபடுத்திக் கொள்வார்கள். பெற்றோரும், நண்பர்களும், இந்தச் சமுதாயமும், அவர்களை அப்படிதான் வளர்த்துள்ளது. அப்படித் தான் உணர்வுகளைத் தனக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொண்டு வாழ்ந்தவர்களுக்கு, மனதிற்கு நெருக்கமானவர்களின் இறப்பும், பிரிவும் அவர்களை நிலைகுலைய செய்துவிடும். அதில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவது மிகவும் கஷ்டம்.

இங்கே கௌதமும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தான். யாழினி இறந்த அந்த நொடியில் மனதளவில் இறந்து போயிருந்தான். அன்றைக்குப் பிறகு, யாழினியின் இறுதிசடங்கு, அதன்பின் என்று நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தாலும், கௌதமின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. யாழினியும், அவனும் வாழ்ந்த அவனின் படுக்கை அறையிலேயே எந்நேரமும் முடங்கி இருப்பவன், எப்பொழுதும் சுவற்றை வெறித்தபடி, கட்டிலில் கையைத் தலைக்குக் கொடுத்துப் படுத்திருப்பதும், பால்கனியில் வானத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதும், சில நேரங்களில் குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்து, அவனும் யாழினியும் எடுத்துக்கொண்ட புகைப்பட ஆல்பத்தைக் கண்கள் கலங்க பார்ப்பதும் என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!