Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 34.2

அத்தியாயம் 34 (2)

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகுதான் அந்த அதிர்ச்சி செய்தி அனைவருக்கும் தெரியவந்தது. அதாவது யாழினி இறக்க காரணம், அவளுக்குக் கொடுக்கப்பட்ட செயற்கை ஸ்வாச சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டு, ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது தான். கிட்டத்தட்ட தமிழ்நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவம் தொலைக்காட்சி, செய்திதாள் என்று எல்லா இடத்திலும் செய்தியாக வந்திருந்தது. மருத்துவமனையின் அஜாகிரதையை கேள்விப்பட்டு கோபமுற்ற மக்கள், அந்த மருத்துவமனை அடித்து நொறுக்க, மருத்துவமனை மேல் வழக்குத் தொடரப்பட்டது. அடுத்தச் சில மாதங்களில், கவன குறைவாக இருந்ததற்காக மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்பட்டதோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது.

அந்த வகையில், கௌதமின் குடும்பத்திற்கு வந்த நஷ்டஈடு தொகையை, ஒரு பைசா செலவு செய்யாமல், சின்னச் சின்னத் தொகைகளாகப் பிரித்து, யாழினி பெயரில், பல அனாதை ஆஷ்ரமத்திற்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டான் கெளதம். அவனின் இந்தச் செயலை நினைத்து மிகவும் பெருமைப்பட்டனர் சேகரும், ஜெய்யும். நஷ்டஈடு பணம் அவன் கையில் வந்ததும், இனியனிடம் சொன்னதுதான் அப்பொழுதும் இவன் நினைவுக்கு வந்தது. யாழினியின் சம்பள பணம் வந்துதான் வீடு நிறையப் போவதில்லை என்பது போல, இன்றும், அவள் இறந்ததற்காகக் கொடுக்கப்பட்ட பணம் வந்துதான், இவன் துக்கம் காணாமல் போகப் போவதில்லை. அதனாலையே அதை முழுவதும் அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டான்.

அந்த நேரம் ஜெய்க்குப் பெங்களூருவில் வேலை கிடைக்க, கௌதமும் தன் அலுவகத்தில் சொல்லி பெங்களூருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றான். அதன் பின், தன் கவனத்தைக் குழந்தை பக்கம் திருப்பியவன், யாழினியின் ஆசைப்படி, அவளுக்கு ‘தேஜஸ்வினி’ என்று பெயர் சூட்டி, யாழினியின் புகைப்படத்தின் முன்பு, குழந்தையுடன் நின்றவன், “நீ ஆசைப்பட்ட மாதிரி, உனக்குப் பிடிச்ச பேரை வச்சுட்டேன் அம்மு. நல்லா இருக்கா?! இப்போ அனேகமாக உனக்கு உண்மை தெரிஞ்சு இருக்கும். இவ நம்ம பொண்ணு இல்லைன்னு. இருந்தாலும், இவளை நம்ம பொண்ணா தான் நான் வளர்க்க போறேன் அம்மு. உனக்கும் இதுல சந்தோஷம்ன்னு எனக்கு நல்லா தெரியும். அவளை உன்னை மாதிரியே ஒரு தேவதையா வளர்க்க போறேன் டா. உன் பொண்ணு உன்னை மாதிரியே இருக்கணும். எனக்குத் தெரியும் அம்மு, நீ எப்பவும் பாப்பா பக்கத்தில தான் இருப்பேன்னு. உன் பொண்ணை நீ தான், கெட்டதில இருந்து பார்த்துக்கணும் அம்மு.” என்று கண்கலங்க வேண்டியவன், போட்டோவில் இருந்து குங்குமத்தை எடுத்து, தேஜாவின் நெற்றியில் வைத்துவிட்டான். ஏனோ, யாழினியே வைத்துவிட்டது போல ஒரு பிரம்மை கௌதமிற்கு. தன் பாக்கெட்டில் இருந்த யாழினியின் போட்டோவை எடுத்து பார்த்தவன், போட்டோவிற்கு ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான். குழந்தைக்கென யாழினி எப்பொழுதோ வாங்கி வைத்திருந்த செயினை எடுத்து தேஜாவிற்குப் போட்டு விட்டான். யாழினிக்கு குழந்தை பிறந்து இறந்த அன்றைய தேதியையே, தேஜாவின் பிறந்த தேதியாக வைத்துக் கொண்டான்.



Advertisement

பெங்களுர் வந்து சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அலுவகம் போக ஆரம்பித்தான் கெளதம். இதற்கிடையில் இனியனுக்கு, அமெரிக்காவில் வேலை மாற்றல் கிடைத்துவிட, பெற்றோரை அழைத்துக்கொண்டு அங்கே சென்றுவிட்டான். இங்கேயே அவர்கள் இருந்தால், யாழினியின் நினைவாகவே இருப்பர் என்று நினைத்தவன், அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்றுதான், கிட்டத்தட்ட கட்டாயபடுத்தி, அவர்களை அழைத்துக்கொண்டு சென்றான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்கைப்பில் கௌதமிற்கு அழைத்துப் பேசுவான்.

இப்படி மாதங்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது தான், ஆரா பெங்களுர் வந்தது. அவளின் முயற்சியில் தான் மிருதுளா இவன் வாழ்கையில் வசந்தமாக நுழைந்தது. இன்று அவளுடன் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்கிறான்.

**********

Advertisement

இவை எல்லாவற்றையும் மிருதுளாவிடம் சொல்லி முடித்திருந்தான் கெளதம். ஏனோ அவன் மன பாரம், குற்ற உணர்ச்சி எல்லாம், தண்ணீரில் போட்ட உப்பாகக் கரைந்து காணாமல் போனது போல உணர்ந்தான். அதே நேரத்தில், யாழினியின் நினைவுகள், ஆழ் மனதில் இருந்து மேலெழும்பி இருக்க, அவன் கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்துக்கொண்டே இருந்தது. கௌதமின் நிலை அப்படி என்றால், அவன் அருகில் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவிற்கோ, துக்கத்தைக் கட்டுபடுத்திகொள்ள முடியவில்லை. கௌதமின் நெஞ்சில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள். அழும் மிருதுளாவை சுற்றி கைகளைப் போட்டு, லேசாக அணைத்துக் கொண்டான் கெளதம்.

Advertisement

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த இரண்டு பேர், வாழ்கையின் ஒரு புள்ளியில் சந்தித்து, காதலில் விழுந்து, பல கனவுகளுடன் திருமணப் பந்தத்தில் இணைந்து, பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, இறுதியில், அதில் ஒருவர் தன் வாழ்கையை முடித்துக்கொண்டு, அழுது கரைந்தாலும் கண்டுபிடிக்க முடியாத, இருட்டில் ஐக்கியமாகி, தேடி அலைந்தாலும் கண்டுபிடிக்க முடியாதபடி, காற்றோடு கலந்துவிட்டார்.

என்னே வாழ்கையின் விந்தை! இதனால் தான் வாழ்க்கையை ஒரு நதி என்கிறார்களோ! ஒரு புள்ளியில் பிறந்து, குழந்தை பருவம், இளமை பருவம், போன்ற பல கரைகளைக் கடந்து, குடும்பம், தோழமைகள், சொந்தங்கள், பந்தங்கள், சுற்றம், போன்ற துணை நதிகளுடன் பறந்து விரிந்து, கல்யாணம் என்ற புள்ளியில், வாழ்கைதுணை, பிள்ளைகள், மருமக்கள், பேரன் / பேத்திகள் போன்ற கிளை நதிகளாகப் பிரிந்து, சிறுத்து, முதுமை என்ற தடுப்புகளால் நீரோட்டம் குறைந்து, இறுதியில் இறப்பு என்னும் புள்ளியில் பிரபஞ்சம் என்ற கடலோடு கலந்து, கரைந்து, காணாமல் போகிறோம். இப்பயணத்தில், மலர்களையும் ஸ்பரிசிக்கிறோம், குப்பைகளிலும் மூழ்கி செல்கிறோம். ஆனால் எது முக்கியமோ அதை மட்டுமே நம்மோடு இறப்பு வரை எடுத்துச்செல்ல வேண்டும். சில குப்பைகளை, கடந்து சென்றிட வேண்டும். நதிக்கு மட்டுமே, தன் வழியில் எது வந்தாலும், அதைத் தூர தள்ளிவிட்டுச் செல்லும் சக்தி உள்ளது.

அதே நேரம் வாழ்க்கை ஒரு மர்ம பெட்டகமும் கூட. எதிர்பார்க்கும் நபர்களைச் சந்திக்க மாட்டோம், எதிர்பார்க்காத நபர்களைத் தான் சிந்திப்போம். நினைத்தது நடக்காது, நினைக்காதது எல்லாம் நடக்கும். வாழ்க்கை நாம் நினைத்த பாதையில் செல்லாது. அதன் போக்கில் தான் நம்மை அழைத்துசெல்லும். வாழ்க்கை என்னும் பாதையில் மனிதர்கள் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

Advertisement

பல மணிநேரம் தன் நினைவில் மூழ்கி இருந்த கெளதம், தன்னைச் சமன்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவன், தன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் மனைவியை விலக்கி, “அம்மு, அழாதடா! ப்ளீஸ். பாப்பா பாரு நம்மளை தான் பார்த்துட்டு இருக்கா.“ என்று சொல்ல, அவளோ நிமிராமல், “என்னால முடியலைங்க. யாழினி அவங்களை நினைக்கும்பொழுது, என்னால என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியலை. உங்க மேல எவ்வளவு லவ் வச்சு இருந்திருப்பாங்க. உங்ககூட எப்படி எல்லாம் வாழணும்னு நினைச்சிருப்பாங்க. கடைசி வரை சந்தோஷமா இருக்கணும்னு கனவு கண்டிருப்பாங்க. ஆனா…….ஆனா கடைசில எல்லாம் கனவாவே போய்டுச்சே. அவங்க மனசு எவ்வளவு கஷ்டபட்டிருக்கும். நான் அவங்க அளவுக்கு உங்களை லவ் பண்றேனான்னு கேட்டா, இல்லைன்னு தான் என்கிட்ட இருந்து பதில் வரும்.” என்று புலம்பியவள், அழுகையுடன் நிமிர்ந்து, கௌதமின் முகத்தைப் பார்த்தவள், “கடவுள் ஏங்க, நல்லவங்களை எப்பவும் சோதிச்சுட்டு இருக்காரு?? நல்லவங்க என்ன பாவம் பண்ணாங்க?? அவங்க நல்லவங்களா இருக்கிறது தான் அவங்க செஞ்ச பாவமாங்கா?? எனக்குச் சத்தியமா தெரியலைங்க. ஒருத்தன் நல்லவனா இருக்கிறதும், கெட்டவனா இருக்கிறதுக்கும் அந்தக் கடவுள் தானங்க காரணம். அவர் இல்லைன்னா ஒரு அணுவும் அசையாதுன்னு சொல்றாங்களே. அப்போ, மனுஷனோட, புத்தியில நல்ல எண்ணத்தை விதைக்கிறதும், கெட்டதை விதைக்கிறதும் அவர் தானே செய்றாரு. நாம வாயில இருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தையும் அவர் ஏற்கனவே முடிவு செஞ்ச ஒன்னு தானே! நாம செய்ற ஒவ்வொரு செயலும், அவர் ஏற்கனவே எழுதி வச்சது தானே! அவர் செஞ்சதுக்கு, நமக்கு எதுக்குங்க தண்டனை கொடுக்கிறாரு?? ஏங்க??” என்று ஆதங்கத்துடன் கேள்விகளைக் கேட்க,

அவளின் கண்களைத் துடைத்துவிட்டவன், “அம்மு!! கடவுள் அவ்வளவு சோதனையும் செய்றது, இந்த உடம்புக்குன்னு நினைக்கிறியா டா. நிச்சயம் இல்லை அம்மு. இந்த உடம்புகுள்ள இருக்கிற ஆத்மாக்கு. உடம்புக்கான உறவு, இந்தப் பூமியோட முடிஞ்சு போய்டுது டா. நம்ம ஆத்மா தான், இந்தப் பூமியை கடந்து, அண்ட சராசரத்தில பயணிச்சு, அவர் காலடில போய்ச் சேருது. அப்படி அவருக்குள்ள போய் ஐக்கியம் ஆகணும்னா, நம்ம ஆத்மா எவ்வளவு சுத்தமா இருக்கணும். நாம குழந்தையா பிறக்கும்பொழுது, இதே கடவுள், நம்ம ஆத்மாகுள்ள நல்லதை மட்டும் தான் வச்சு அனுப்பி இருக்காரு. நாம அதே நல்ல குணத்தோட அவர்கிட்ட வரோமான்றது தான் அவர் எதிர் பார்க்கிறது. எவ்வளவு தான் கல்லடி, புயல், மழைன்னு கஷ்டபட்டாலும், இனிப்பான பழம் இனிப்பா தான் இருக்கும் அம்மு. அதோட இனிப்பு என்னைக்கும் மாறாது. அதே போலத் தான், நாம வாழ்கையில எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சாலும், எவ்வளவு துன்பம் அனுபவிச்சாலும், இயற்கையான நம்ம நல்ல குணத்தை எப்பவும் இழக்க கூடாது. பிறக்கும்பொழுது, கடவுள் கொடுத்த நல்ல குணத்தை அவர்கிட்ட திருப்பிக் கொடுக்க வேண்டியது நம்ம பொறுப்பு அம்மு. யாழினி எவ்வளவு நல்லவளா இருந்தாளோ, கடைசி வரைக்கும் அப்படிதான் இருந்தா, அதோட பலன், நிச்சயம் அவ அந்தக் கடவுள் பக்கத்தில இருப்பா. கடவுளுக்கு இணையான சக்தி அவளுக்கு நிச்சயம் இருக்கும் அம்மு. நான் நம்புறேன். அவளால நம்ம கூட இந்தப் பூமியில இருக்க முடியும். நமக்கு ஏதாவது கெட்டது வர இருந்தா, அதில நாம பாதிக்கபடாம, நம்மளை காப்பாத்த அவளால முடியும். ஏனா, அவ ஏஞ்சில் அம்மு. நல்லவங்களா பிறந்து, நல்லவங்களாவே வாழ்ந்து, இறந்து போனவங்களால தான் ஏஞ்சிலா இருக்க முடியும். அவங்களால தான், கெட்ட விஷயத்தில இருந்து நம்மளை காப்பாத்த முடியும்.” என்று சொன்னவனின் முகத்தில் யாழினியை நினைத்துப் பூரிப்பு நிறைந்து இருக்க,

மிருதுளாவோ அவன் பேச்சில் மூழ்கி போய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனை நினைக்கையில் பெருமையாக இருந்தது. யாழினியை எந்த ஆளவுக்கு அவன் காதலிக்கிறானோ, அதே அளவுக்குத் தன்னையும் காதலிக்கும் இவன் கிடைக்க, நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்!! அவனின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இந்த ஆத்மா சுத்தமாக இருக்க வேண்டும். அதைத்தான் அந்தக் கடவுள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் தத்தம் நினைவுகளில் மூழ்கி இருக்க, அந்த நேரம், தத்தி தத்தி நடந்து இவர்கள் அருகில் தேஜா வரவும், தன் நினைவில் இருந்த மிருதுளாவிற்கு, தேஜா தன் உதிரத்தில் பிறந்த குழந்தை என்ற நியாபகம் வர, அவளை அப்படியே நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொள்ள, அதே நேரம், தேஜாவின் கேசத்தைத் தடவிகொடுத்த கெளதம், “இவளுக்குக்காகத் தான் கடவுள், இவ்வளவு வேலை செஞ்சு நம்மளை சேர்த்து வச்சிருக்காரு போல அம்மு.” என்று சொல்லிவிட்டு புன்னகைக்க, மிருதுளாவின் இதழும் அழகாக விரிந்தது.

ஆனால் இதையும் தாண்டி, ஒரு பந்தம் இருவருக்குள்ளும் இருக்கிறது என்பது இப்பொழுது அவர்களுக்குத் தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!