Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

nizhalae ennai thalli pogaathae

Nizhalae Ennai Thalli Pogaathae 6

தள்ளிபோகாதே – 6

மறுபடியும் பல முறை சூரியாவிடமிருந்து அழைப்பு வரவே தன் கண்களை துடைத்துக் கொண்டு, அழுகையினால் வறண்ட தொண்டையை சரிசெய்த பின் கைபேசியை எடுத்து காதில் வைத்தாள்.

“தேவி, எவ்வளவு நேரம் கால் பண்றேன் ஏன் போனை எடுக்கவில்லை?” என்று பதட்டத்தோடு வினவினான் சூரியா.

என்ன சொல்ல என்று யோசித்தவள், “கொஞ்சம் களைப்பாக இருந்தது அதுனால தூங்கிட்டேன்,” என அவள் சமாளிக்கவே, “வேற ஒன்னும் இல்லையே!” என உறுதி படுத்திக்கொண்டான்.



Advertisement

“ஒன்றுமில்லை,” என்றாள் கண்களில் கண்ணீர் குளமாகின.

“சரி, நீ சாப்பாடு கொண்டு வந்து என்னை பார்க்காமல் சென்றிருக்கிறாயே அதான் கால் பண்ணுனேன் தேவி,” என்றான் அவன் மறுமுனையில்.

“நீங்க தான் மீட்டிங்னு சொன்னிங்களே அதான் உங்களை தொந்தரவு பண்ணவேண்டாம்னு வந்துட்டேன்,” என்றவள் தன் வாயில் கை வைத்து பொத்திக்கொண்டாள் தான் அழுகிறது தெரியாதவாறு.

Advertisement

“மீட்டிங் நாளைக்கு மாத்தி வச்சிட்டாங்க, தேவி,” என்றான்.
‘ஓஓ! ஜீவிதாவுடனான மீட்டிங்கை மறைத்து விட்டீர்களே, சூரியா,’ என்று தன்னுள்ளே மறைத்துக்கொண்டாள். அவளுக்கு சூரியாவிடம் பிடித்ததே அவனது நேர்மையான குணம் தான். தன் திருமணமான முதல் நாளே தன் மனதை வெளிக்காட்டினான் ஆனால் இப்போது அந்த சூரியா எங்கே?

Advertisement

அன்று மாலை சூர்யா வீடு திரும்பும்போது, தேவிகா மௌனமாகவே இருந்தாள்.  அவளுக்கு தன் கணவன் எந்த தப்பும் செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்த போதிலும் தன் கணவன் தன்னிடம் இருந்து மறைத்து விட்டது பெரிதாக தோன்றியது. இன்று தன்னிடம் சொல்லிவிடுவான் அல்லது நாளை சொல்லிவிடுவான் என்று எதிர்ப்பார்த்தவளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் இருவரும் சரிவர பேசுவதும் இல்லை. இருவருமே தூக்கத்தை மறந்தனர். தேவிகாவிடம் ஜீவிதாவை பற்றி எப்படி சொல்ல என்றே
நாட்கள் நகர்ந்து ஏழாவது மாதமும் ஆனது.

எந்த மாதமும் தேவிகாவிற்கு மருத்துவரை பார்க்க, இரண்டு நாட்களுக்கு முன்பே சூரியா தான் நினைவுபடுத்துவான் ஆனால் இந்த மாதம் ஒரு வாரம் தாண்டியும் அவன் சிந்தனையில் எழவில்லை. பின், தேவிகாவே அவனிடம் கூற சூரியாவோ, “தேவி, இன்றைக்கு என்னால வரமுடியாது கொஞ்சம் வேலை இருக்கு. நான் உன்னை சிவாவிடம் (சூரியாவின் நண்பன், கார் ஓட்டுநர், அந்த காரில் தான் இவர்கள் எங்கு போக வேண்டுமானாலும் சேர்ந்தே செல்வர்) காரில் கூட்டிப்போக சொல்கிறேன்,” என்றவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவளுக்கு தன் செவிகளை நம்பமுடியாதவளாய் நின்றாள். ஆயிரம் வேலை இருந்தாலும் தேவிகாவிற்காக தூக்கிபோடும் சூரியாவா இது? என்று தன் கண்களில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டாள்.

அவள் மருத்துவரை சந்தித்து தன் குழந்தை நலமுடம் இருப்பதை தெரிந்துக் கொண்டவளுக்கு கொஞ்சம் மனநிம்மதியாக இருந்தது. இந்த மாதம் மிகவும் பயந்துபோயி இருந்தாள். ஒழுங்கான தூக்கம் இல்லை, உணவு உட்கொள்வது குறைவு என்பதனால். சூரியா, ஒருமுறை கூட தேவிகாவிற்கு கைபேசியில் அழைப்பு விடுக்கவில்லை. அவளோ, சூரியாவிற்கு முக்கியமான வேலை இருக்கும் என்று தன் மனதை தேற்றிக்கொண்டாள்.

Advertisement

அவள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அந்த ஆதிர்ச்சிகரமான சம்பவம் அவள் கண்களில் விழுந்தது. சூரியாவும், ஜீவிதாவும் ஒரு மருத்துவமனையிலிருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருப்பதை தன் கழுத்தை திருப்பி கொண்டு அவனது பிம்பம் இவளது கண்களில் தென்படும்வரை அவனை நோக்கினாள். கண்ணீர் மளமளவென அவளது புடவையை நனைக்க அவள் முடிந்த அளவு அடைக்கிகொண்டு வந்தவள் வீட்டில் நுழைந்ததுமே கதறி அழுதாள். ஒரு மணி நேரம் அழுகைக்கு பின், ஏன் சூரியா இப்படி பண்ணுறீங்க? என்னால நம்பமுடியல நீங்கதானானு? ஐயோ! என்னால தாங்கவே முடியலியே. இன்னும் ஒரு போன் பண்ணி கேட்க கூட முடியல, இது தான் உங்களுக்கு முக்கியமான வேலையா? என்று சூரியாவை தன்னுள்ளே கடிந்துக்கொண்டாள்.
திருமணம் முடிந்த முதல் நாளில் அவருடைய மனதை வெளிக்காட்டினார், ஏன் இப்போது வெளிக் காட்டவில்லை என்ற ஆத்திரம் அவளுக்கு மேலோங்கியது.

அன்று மாலை வேலை முடிந்து  வீட்டுக்கு வந்தவன் தேவிகாவின் வாடின முகத்தை பார்த்து, “ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? மருத்துவர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டான்.

“ஒன்னும் இல்லை!!! குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது,” என்றாள் தன் முகத்தை திருப்பிக் கொண்டு, குரலில் வருத்தத்தை காட்டினாள்.

“ஏன் தேவி, நான் வரவில்லை என்று வருத்தமா?” என்று அவள் முகத்தை தன் திசை திருப்பி கேட்டான்.

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு தான் ஏதோ முக்கியமான வேலை இருந்ததாக சொன்னீங்க தானே,” என்றாள் அவன் கண்களை பார்த்து இப்போதாவது உண்மையை கொட்டிவிட மாட்டானா என்ற நம்பிக்கையில்.

“ஆமா, தேவி. நல்லபடியாக முடிந்தது,” என்றான் முகத்தில் சின்ன பதட்டம் கூட இல்லாமல். ‘இப்படி, எப்போது சூரியா நடிக்க படித்தீர்கள்?’ என்று மனதில் வெம்பினாள்.

“ம்ம்ம்,”

“ஏதோ சொல்ல வாருகிறாய்னு தெரியுது ஆனால் என்னவென்று புரியவில்லை,” என்றான் அவன்.

“எனக்கு எங்க வீட்டுக்கு போகணும் போல இருக்குது,” என்றாள் தேவிகா. தன் அண்ணனின் முகத்தை பார்த்து அவனுடைய மடியில் தலைவைத்து அழுது கொட்டினாலும் இந்த மன பாரம் களையுமா? அவளது பெற்றோருடன் இருநாட்கள் பேசி பேசியாவது அவள் மன வேதனை குறையுமா? இது இரண்டும் கேள்வி குறியே இருப்பினும் அவள் அங்கு செல்ல ஆசைப்பட்டாள்.

“அப்படியா?” என்றவன் அவள் முகத்தை பார்த்து புன்னகை பூத்தான். அவளோ ஒன்றும் அறியாதவளாய் அவனை நோக்கினாள் ஏன் என்ற கேள்வி கணைகொண்டு.

“இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்துக்கொள்,” என்றவன் தன் அறை நோக்கி நகர்ந்தான். அவளும், அவனிடம் எதுவுமே அதற்கு மேல் கேட்கவில்லை. அப்படியே ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். மனக்குழப்பமும், சிந்தனையை சிதறியவளுக்கு புத்தகத்தில் கவனம் செல்லவா செய்யும் இருப்பினும் சூரியா முன் தன்னால் முடிந்த பாவனையை காட்டிக்கொண்டாள்.

அவனோ அவளுக்கு தேனில் ஊரவைத்த பேரிச்சம் பழம் மற்றும் ஒரு கப் பால் எடுத்துக்கொண்டு அவள் அருகாமையில் வந்து இருந்தான். பின் அவள் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி ஓரமாக வைத்தவன், பால் கப்பை நீட்டினான். கண்களில் கண்ணீர் தழும்ப அவனிடமிருந்து பெற்றுக்கொண்டாள். அவன் தன் காதை கூர்மையாகி தலையை அவள் வயிற்றில் சரிந்து, பின் ஒரு கையை அவள் வயிற்றில் வைத்தான். அவன் கை அவள் வயிற்றில் வைத்ததுமே குழந்தை அவள் வயிற்றை மெல்ல உதைக்க அதை உணர்ந்த இருவருக்கும் ஆனந்த கண்ணீர் கண்களின் ஓரத்தை தொட்டது. அவளுக்கு ஒரு புறம் அவனை கட்டி அணைத்து ஏன் சூரியா என்கிட்ட மறைக்கிறீங்க ஜீவிதாவை பற்றி என கேட்டு விடலாமா? மறுபுறம் அவன் சட்டையை பிடித்தவாறு ஏன் உங்கள் அன்பு எனக்கு துரோகம் இழைக்கிறது? என்ற தன்னுள்ளே வந்த சிந்தனைகளினால் ஆனந்த கண்ணீர் மாறி நிஜமாகவே அழ தொடங்கினான்.

கலங்கிய கண்களோடு அவன் அவளை பார்க்க, தேவிகாவோ மாலை மாலையாக கண்ணீருடன் காணப்பட்டாள். இந்த கண்ணீர் மகிழ்ச்சியினால் வந்தது என நினைத்தவன் அதை தன் கைகளால் துடைத்துவிட்டு அவள் நெற்றி பொட்டில் முத்தம் பதித்தான்.

யாரோ கதவு மணி அடிக்க சூரியா கதவை திறக்க சென்றான். இந்த நேரத்தில் யாரு என்பது போல் தேவிகா கதைவை நோக்கி பார்த்தவாறு இருந்தாள். தன் குடும்பத்தினரின் வருகையை எதிர்ப்பார்க்காதவள் தன் பெற்றோர் மற்றும்  அண்ணணை பார்த்ததுமே அணைத்துக் கொண்டாள். அவர்களை பார்க்க ஆசைப்பட்ட கண்களின் ஏக்கம் அவளின் முகத்தில் நன்கு தெரிந்தது. “ஏன், என்கிட்ட நீங்க எல்லாம் வரபோகிறத ஒருவார்த்தை கூட சொல்லல? நான் உங்களை பார்க்க நாளைய தினம் வரனும்னு நினைத்தேன். நீங்களே வந்துட்டீங்க..மகிழ்ச்சி!! ” என்று கூறினாள் இதள் விரித்து.

அவள் தந்தை சூரியாவின் மீது செலுத்திய பார்வையை இவள் மேல் திருப்பி “நாங்க அடுத்த வாரம் தான் வரவேண்டும் என்று நினைத்தோம் ஆனால் மாப்பிள்ளை தம்பி தான் எங்களை இந்த வாரம் வரசொன்னாங்க,” என்று மகிழ்ச்சி பொங்க கூறினாள்.

‘எல்லாமே உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனாலும் ஏன் என்னை கொல்லாமல் கொல்லுறீங்க? ஏன் இந்த பகல் வேஷம் சூரியா?’ என்ற சிந்தனை ஓடியது அவனை பார்த்தவாறே. பின் தன் மௌனத்தை தானாக கலைத்தவள் தன் குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட்டாள்.

இந்த இரண்டு வாரமும் அவள் குடும்பத்தினரோடு இருந்தது அவளுக்கு மன அழுத்தத்தை கொஞ்சம் குறைத்தது. பல முறை அவளது அண்ணன் அவளின் தீடீர் மௌனத்தை கண்டுகொண்டு வினவிய பின்பும், இவள் வாய் அண்ணணிடம் சொல்ல வந்தும் சூரியாவை பற்றி சொல்ல தயங்கி மறைத்து விட்டாள். தானே எது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம், குடும்பத்தினரின் மகிழ்ச்சியை கலைக்க அவள் மனம் வரவில்லை. உண்மை தெரிந்தால் அவர்கள் நொறுங்கி போயி விடுவார்கள் என்று எண்ணி இனி இதற்கு ஒரு முடிவு தானே கட்ட வேண்டும் என்று எண்ணினாள்.

இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வீடு திரும்பினார்கள். தேவிகாவிற்கு வீடும் மனதும் வெறிச்சோடி போயி கிடந்தது. நாட்களை கஷ்டப்பட்டு உருட்டினாள். சூரியா அருகில் இருக்கும் நேரமும் அவளுக்கு வெறுமனாகவே இருந்தது. நாட்கள் செல்ல செல்ல சூரியா, இனி அவளிடம் ஜீவிதா பற்றி சொல்லுவான் என்ற நம்பிக்கை இல்லை.

அன்று அவளின் எட்டாவது மாத கர்ப்ப பரிசோதனைக்காக சூரியா தேவிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
தேவிகா வயிறு பருத்தும், முகம் நல்ல பளபளப்பு கொடுத்து காணப்பட்டாள்.

“குழந்தை நலமுடன் இருப்பதாக”  மருத்துவர் கூறவே, “டாக்டர், இனி அடுத்த மாதம் தேவிகாவுக்கு வளைகாப்பு வைக்க திட்டமிட்டுள்ளோம். ரயிலில் நெடுந்தூரம் பயணம் செய்யலாமா?” என்று கேட்டவனை தேவிகா பார்த்தாள். அவளின் கர்ப்பகால ஆரம்பத்திலேயே  சூரியா தேவிகாவிற்கு ஒன்பதாம் மாதத்தில் தான் வளைகாப்பு வைக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தான் ஏனென்றால் அவனால் அவன் மனைவியை வெகு நாட்களுக்கு பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தை தேவியிடம் இரண்டாம் மாதத்திலே கூறியிருந்தான்.

“தாராளமாக செல்லலாம். உங்கள் மனைவி மற்றும் குழந்தை ஆரோக்கியமாவே உள்ளனர்,” என்றார் அந்த மருத்துவர். சரி என்று தலை அசைத்தவாறு இருவரும் மருத்துவருக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொண்டு அந்த மாதத்திற்கு தேவையான மருந்துகளை வாங்கி வீடு திரும்பினர்.

இரண்டு நாட்கள் கழித்து, சௌந்தர்யாவிடமிருந்து கைபேசி அழைப்பு வரவே, தேவிகா எப்போதும் போலவே அவர்களுடன் சகஜமாவே பேசினாள். சௌந்தர்யா, ஆதிரா பற்றி பேச ஆரம்பிக்க நான் தான் சித்தி கிட்ட பேசுவேன் என்று போனை வாங்கி காதில் வைத்தவள், “சித்தி, நல்லா இருக்கிங்களா? பாப்பா நல்லா இருக்கா?” என்று மகிழ்ச்சி தழும்ப விசாரித்தாள்.

“ஆமா, ஆதிரா குட்டி. நீ எப்படி இருக்க?” என்று ஒரு குழந்தையாகவே மாறி ஆதிராவிடம் வினவினாள்.

“நான் சூப்பர் சித்தி. சித்தி…..நான் பாட்டு போட்டியில் செலக்ட் ஆகியிருக்கேன். இந்த வாரம் சனிக்கிழமை எங்க மேம் என்னை சென்னைக்கு கூட்டிட்டு வாறாங்க. நீங்க என்னை பார்க்க கண்டிப்பாக வரனும் சித்தி,” என்று தன் மழலை குரலில் அழகாக பேசியவளிடம், “சூப்பர், நன்று!!! வாழ்த்துக்கள். சித்தி கண்டிப்பாக வாறேன். எந்த ஸ்கூல்?”

“உங்கள் வீட்டு பக்கத்தில இருக்க ஸ்கூல் தான் அம்மா சொன்னாங்க,” என்று கூறியவள் சௌந்தர்யாவிடன் போனை கொடுத்து விட்டு ஓடினாள். பின் அவளிடம் பேசினாள் தேவிகா…

தேவிகாவிற்கு இந்த இரண்டு நாட்களும் ஆதிராவை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியிலேயே கழிந்தது. அவளின் துக்கங்களுக்கு, இந்த இரண்டு நாட்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தாள் போலும். ஆதிரா, சூரியாவிடமும் பேசியிருக்கிறாள் இது பற்றி.

அன்று காலை சூரியா தேவிகாவை பத்திரமாக கொண்டு பள்ளியில் விட்டவன் வெகு நேரம் காத்திருப்புக்கு பின் ஆதிராவை சந்தித்தனர். அவளோ மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க, சூரியா அவளை தூக்கி வைத்துக்கொண்டான். பின் போட்டி ஆரம்பமான நிலையில், சூரியாவிற்கு அழைப்பு வர முக்கியமான வேலை இருக்கிறது என்று கிளம்பி விட்டான். தேவிகா, ஆதிராவுக்கு ஊக்கம் அளித்து பாராட்டி கொண்டே இருந்தாள். தேவிகாவின் ஊக்குவித்தலால் இன்னும் நன்றாக பாடி முதல் பரிசு பெற்றாள். அன்று அவள் வாழ்வில் என்ன நடந்தது? மீண்டும் சூரியாவோடு ஜீவிதாவை பார்த்தாளா? அவள் ஏன் சூரியாவை விட்டு பிரிந்தாள்? அப்படி என்ன தான் நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!