Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 39 (2)

அத்தியாயம் 39 (2)

“என்ன வேலு!! வேனுக்குப் போன் செஞ்சாச்சா!! எப்போ வரும்??” என்று மூத்தவர் தன் தம்பியை பார்த்துக் கேள்வி கேட்க, “பேசிட்டேன் அக்கா. இன்னும் அஞ்சு நிமிஷத்தில வந்துடும். ஆமா, மாப்பிளையை இன்னும் காணோம். எங்க போனான்?!!” என்று பதிலுக்கு அவர் கேள்வி கேட்க, “அப்போவே வந்துட்டான் வேலு!! குளிச்சிட்டு இருக்கான். இதோ வந்துடுவான்.” என்றவரோ, வரமுடியாது என்று அந்த நிமிடம் வரை சொல்லிக் கொண்டிருந்த மகனை எப்படியோ பேசி குலதெய்வ கோவிலுக்குச் செல்ல சம்மதிக்க வைத்திருந்தார்.

இதோ அடுத்தப் பத்து நிமிடத்தில், வீட்டு வாசலில் வேன் வந்து நிற்கவும், அதே நேரம் இவர் மகனும் தயாராகி வரவும், எல்லாப் பொருட்களையும் வேனில் எடுத்து வைத்துவிட்டு, தன் சொந்தங்களுடன் குலதெய்வ கோவிலுக்குக் கிளம்பினார் மூத்தவர் மீனாட்சி.

அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லாத அந்த அதிகாலை வேளையில், அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்தது இவர்கள் பயணித்த வேன். டிரைவர் சீட்டின் பின் இருக்கையின் ஜன்னல் ஓரத்தில் மீனாட்சியின் மருமகள் அமர்ந்திருக்க, அவளுக்குப் பக்கத்தில் மீனாட்சி அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அவரின் மகன் அமர்ந்திருக்க, எதிர் இருக்கையில், மீனாட்சியின் தம்பியும், தம்பி மனைவியும் அமர்ந்திருந்தனர்.



Advertisement

“குல தெய்வ கோவிலுக்குப் போயிட்டு வந்ததும், கூடிய சீக்கிரம் நல்ல செய்தியா சொல்லுங்க.” என்று மீனாட்சியின் தம்பி மனைவி சொல்ல, இவரோ, “அதெல்லாம் கவலை படாதீங்க மரகதம். அடுத்த முஹூர்த்தத்தில, என் பையனுக்கும், உன் பொண்ணுக்கும் கல்யாணத்தை வச்சுடலாம்.” என்று மகிழ்ச்சியுடன் சொல்ல, அந்த இளம் பெண்ணோ, தன் அத்தை மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொள்ள, மீனாட்சியோ, இவளின் வெட்கத்தைப் பார்த்து மேலும் சத்தமாகச் சிரித்தவர், “என் மருமகளுக்கு இப்போவே வெட்கத்தைப் பாரு.” என்றவர் தன் மருமகளின் அழகை திருஷ்டி கழித்தார்.

ஆனால் அவரின் அருகில் அமர்ந்திருக்கும் அவர் மகனோ, கொதி நிலையில் இருந்தான். ‘எல்லாம் தெரிஞ்சும் இவ சம்மதம் சொன்னாளா!! என்ன நினச்சிட்டு இருக்கா இவ மனசில!! இந்த அம்மாவை சொல்லணும், எத்தனை தடவை சொல்லி இருக்கேன், எனக்குக் கல்யாணம் வேண்டாம்னு. எல்லாம் தெரிஞ்சும், அடுத்தக் கல்யாணத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. இனி இவங்ககிட்ட பேசி ஒரு பிரயோஜனம் இல்லை. நமக்கு வேற வேலை இருக்கு. நான் நினைச்சது நடந்துச்சுனா, அதுக்கு அப்புறம் இந்த ஊர் பக்கமே வரகூடாது. எங்கையாவது போய்ச் செட்டில் ஆகிட வேண்டியது தான். இது தான் கடைசி இவங்ககூட வர்றது.’ என்று தன் மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தான். அவன் எந்த நேரத்தில் ‘இது தான் கடைசி’ என்று சொன்னானோ, உண்மையில் இந்தப் பயணம் தான் அவனுக்குக் கடைசி ஆகப் போகிறது.

வேன் டிரைவருக்கு மெல்ல மெல்ல போதை அதிகம் ஆக, கண்கள் மங்க தொடங்கியது. லேசான உளறல் அவனிடம் இருந்து வந்தது. ஆனால் இதை யாரும் கவனிக்கவில்லை, பக்கத்தில் இருந்த கிளீனர் இளைஞன் உட்பட. சாலை காலியாக இருந்ததால், வேன் சீறி பாய்ந்து சென்று கொண்டிருக்க, திடீரென்று ஒரு இடத்தில இவர்கள் எதிரில் வந்த வண்டியின் மேல் மோதுவது போலச் சென்று கடைசி நொடியில் சுதாரித்து வண்டியை ஒடித்துத் திருப்பினான் வேன் ஓட்டுனர். அதற்குள், “ஏய்!!!!!!!” “தம்பி, பார்த்து ஓட்யா!!” என்ற பல்வேறு கூச்சல்கலும், திட்டுகளும் வண்டிக்குள்.

Advertisement

எதிர்பாராத இந்த நிகழ்வில், அடி வயிற்றில் புளியை கரைக்க, பயந்து போன டிரைவர், சட்டென்று வேனின் வேகத்தைக் குறைத்தான். அதற்குள் அவனுக்கு வேர்த்துக் கொட்டிவிட்டது. பக்கத்தில் இருந்த இளைஞனோ, ‘இன்னைக்கு இந்த ஆளுக்கு நேரம் சரி இல்லை, நல்லா திட்டு வாங்க போறான். நான் அப்போவே சொன்னேன். குடிக்காதீங்கன்னு. கேட்டாதானே!! இப்போவே இப்படிக் கண்ணைக் கட்டுதே!! இன்னும் என்னனென்ன நடக்கப் போகுதோ!!’ என்ற பீதியில் உறைந்துபோய், ஊரில் இருக்கும் ஆத்தனை தெய்வங்களிடமும் வேண்டுதல்களை வைத்துக்கொண்டே, ஹான்டிலை இறுக பிடித்துக்கொண்டான்.

Advertisement

“ஷப்பா!! உசுரு போய் உசுரு வந்துடுச்சு. என்ன வேலு வேன் ஏற்பாடு செஞ்சுருக்கீக, நல்லா ஆளா பார்த்து ஏற்பாடு செய்யக்கூடாதா!!!” என்று மீனாட்சி குறைபட, “நான் என்ன அக்கா கண்டேன். சேக்காளிக்கு தெரிஞ்ச பையன்னு சொன்னான். அதான் இவனையே ஏற்பாடு செஞ்சுட்டேன்.” என்று அவர் பதில் சொல்ல, “என்னமோ போடா!!” என்று சலித்துக்கொள்ளத் தான் முடிந்தது மீனாட்சியால்.

நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வானம் லேசாக விடிந்தும் விடியாமலும் இருக்க. கொஞ்சம் கொஞ்சம் சூரிய கதிர்கள் மஞ்சள் கலந்த சிவப்பு ஒளியாக வெளியே வர ஆரம்பிக்க, இருளும் ஆங்காங்கே இருந்தது. அதிகாலை வேளை என்பதால், அந்தத் தேசிய நெடுஞ்சாலையில், கனரஞ்சக வண்டிகளும், ஒருசில கார், பைக் போன்ற வண்டிகளும் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் கோவில் இருக்கும் ஊருக்குள் நுழைந்துவிடலாம் என்றிருந்த சமயத்தில் தான் யாரும் எதிர்பார்க்காத, அந்தப் பெரும் விபத்து நடந்தது.

ஊர் நெருங்க நெருங்க, சவாரியை சீக்கிரம் இறக்கி விட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என்ற அவசரத்தில், ஓட்டுனர், வண்டியை பறக்க விட்டுக் கொண்டிருக்க, அந்தச் சமயம் தான், ஒரு திருப்பத்தில் பழுதடைந்து கண்டைனர் லாரி ஒன்று நின்றிருக்க, அதைப் பார்த்துவிட்ட வேன் டிரைவர், வண்டியின் வேகத்தைக் குறைத்து, பிரேக் போடுவதற்குள், இவர்களின் வேன், அந்த லாரியின் பின்பக்கத்தோடு, ‘டமால்’ என்ற பெரும் சத்தத்துடன் மோதியது.

Advertisement

லேசான இருட்டு எங்கும் பரவியிருக்க, கண்டைனர் லாரி இருந்ததை வண்டியில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை. அத்தோடு டிரைவர் சீட் வேறு முன்பகுதி முழுவதையும் மறைத்து இருந்ததால், யாருக்கும் சாலை தெரியவாய்ப்பில்லை. மோதிய பிறகு தான் வண்டிக்குள் எல்லோருடைய அலறலும், கூச்சலும் கேட்டது.

இவர்கள் வண்டி வந்த வேகத்திற்கு, இழுத்துவிடப்பட்ட ரப்பர் பேன்ட் போல, மொத்த வண்டியும் லாரியோடு நெருக்கப்பட்டடு (squeeze), அதே வேகத்தில் பின்னோக்கி தூக்கி வீசப்பட்டது. இடித்த வேகத்தில், வேனின் முன்பகுதி முழுவதும், அப்பளம் போல நொறுக்கப்பட, டிரைவர், கிளீனர் இளைஞன், மீனாட்சி, அவரின் மருமகள் சரண்யா, மகன் சந்துரு, ஆகியோர், வேனோடு தாங்களும் சேர்ந்து லாரியோடு அமுக்கபட, அடுத்த நொடி, உடலில் இருந்த உதிரம் முழுவதும் வாய் வழியே வழிந்தோடியபடி இருக்க, கண்கள் நிலைகுத்தியிருக்க, அமர்ந்தவாக்கில் உயிர் இல்லாத உடல்களாக மாறியிருந்தனர்.

மற்றவர்களில் ஒரு சிலருக்கு பலத்த அடியும், ஒரு சிலருக்கு சிறிய அடியும், எலும்பு முறிவும் ஏற்பட்டு இருந்தது. விபத்து நடந்து அரைமணி நேரம் கழித்தே, போவோர் வருவோர், வயல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் கண்களில் இந்த விபத்து பட, அதன் பின்பே இறந்தவர்களைத் தவிர மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

**********

கொட்டாவியை வெளியேற்றியபடி கட்டிலில் எழுந்து அமர்ந்தார் மோகன். சித்ரா பத்து நிமிடங்களுக்கு முன்பு எழுந்து குளிக்கச் சென்றிருந்தார். கட்டில் பக்கத்தில் இருந்த டேபிள் கிளாக்கை எடுத்து நேரத்தை பார்க்க, நேரம் எட்டை நெருங்கி கொண்டு இருந்தது. கைகளைப் பரபரவென்று தேய்த்துக்கொண்டு, கண்களில் ஒத்தி எடுத்தவர், எதிரில் சுவரில் இருந்த கடவுள் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு, கட்டிலை விட்டு எழ, அப்பொழுது அவரின் போன் ஒலித்தது. மகள் மிருதுளா தான் அழைக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு போனை ஆன் செய்து காதில் வைக்க, அந்தப் பக்கம் சொல்லப்பட்ட செய்தியில், அதிர்ந்தவர்,

“என்ன அண்ணே சொல்ற?!!” என்று நம்பமாட்டாமல் கேட்க, தான் கேட்ட செய்தி உண்மை என்று புரிய, ஒன்றும் சொல்லாமல் போனை அணைத்து வைத்தவருக்கு, எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுடன் கட்டிலில் அப்படியே அமர்ந்துவிட்டார். அந்த நேரம் சித்ராவும் குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவர், கணவரின் நிலை கண்டு பதறி அவர் அருகில் வந்தவர், என்ன என்று கேட்க, மோகன் சொன்ன செய்தியை கேட்டதும் அதிர்ந்தவர், “என்னங்க சொல்றீங்க?? உண்மையாவா??” என்றவருக்கும், என்ன சொல்வது என்று தெரியாமல் கணவரின் அருகில் அமர்ந்துவிட்டார்.

சென்னையில், தங்கள் அறையில், மிருதுளாவை தன் நெஞ்சில் சாய்த்தவாறு தூங்கிக் கொண்டிருந்த கௌதமின் மொபைல் போன் ஒலி எழுப்ப, சில நிமிடங்கள் கழித்தே அசைந்தவன், தன் நெஞ்சில் தலை வைத்திருக்கும் மனைவியின் முகத்தை ஒரு நொடி பார்த்தவன், முன்தினம் அவள் அழுத அழுகையும், தெரிந்துகொண்ட உண்மையும் நினைவுக்கு வர, லேசான முறுவலுடன், குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், அவள் விழித்துகொள்ளாத வகையில் மெல்ல அவளைத் தன்னிடம் இருந்து பிரித்து, தலையணையில் படுக்கவைத்தவன், எழுந்து அமர்ந்து, ஒலித்துக் கொண்டிருந்த போனை எடுத்து பார்க்க, ‘மாமா காலிங்’ என்று இருக்க, உடனே போனை ஆன் செய்து காதில் வைத்தான்.

“ஹலோ!! மாமா!! காலையிலேயே கால் செஞ்சு இருக்கீங்க. அங்க எல்லாம் ஓகே தான?!!” என்று கெளதம் கேட்கவும், அந்தப் பக்கம் மோகன் சற்றே பரபரப்பான குரலில், “இங்க எல்லாரும் சவுக்கியம் தான் மாப்பிள்ளை. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். என் ஒண்ணுவிட்ட அண்ணன் இப்போ பேசுனாரு. அதுவந்து, சந்துரு தம்பியும் அவங்க அம்மாவும் கோவிலுக்குப் போற வழியில ஆக்சிடென்ட் ஆகி, ஸ்பாட்லையே இறந்துட்டாங்களாம். கூடப் போயிருந்த யாரோ ஒருத்தர் ஊருக்கு விஷயம் சொல்ல, அந்த ஊரில இருக்கிற என் அண்ணனுக்கு இப்போதான் விஷயம் தெரிய வந்திருக்கு. அதான் எனக்கு உடனே போன் செஞ்சு சொன்னாரு.” என்று தனக்கு வந்த செய்தியை சொல்ல,

மோகன் சொன்ன செய்தியில ரொம்பவே அதிர்ந்து போன கெளதம், “என்ன மாமா சொல்றீங்க??!! இது எப்போ நடந்துது??” என்று நம்பமாட்டாமல் அதிர்ச்சியில் குரலை உயர்த்த, கணவனின் குரலில் மிருதுளாவும் எழுந்துகொண்டாள். ஆனால் கெளதம் அவளைக் கவனிக்கவில்லை. மாமனார் சொல்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“இன்னைக்குக் காலையில தான் மாப்பிள்ளை நடந்திருக்கு. மீனாட்சி அம்மா, அவங்க தம்பி ஒருத்தர் இருக்காரே, அவர் பொண்ணு கூட டாக்டரா இருக்கு, அவங்க குடும்பம், அப்புறம் இன்னும் கொஞ்சம் சொந்தகாரங்க கூட, காலையிலேயே குலதெய்வம் கோவிலுக்கு வேனில கிளம்பி போயிருக்காங்க. கோவிலுக்குக் கொஞ்சம் முன்னாடி, ஹைவே ரோட்டில, நின்னுட்டு இருந்த கன்டைனர் லாரில போய் மோதி, ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு அண்ணன் சொன்னாரு.” என்று தனக்கு வந்த செய்தி முழுவதையும் சொன்னவர், மேற்கொண்டு சில நிமிடங்கள் பேசிவிட்டு, மிருதுளாவிடம் பார்த்துப் பக்குவமாகச் சொல்லும்படி சொல்லிவிட்டு வைத்தார்.

இவர்களின் பேச்சுச் சத்தத்தில், எழுந்துகொண்ட மிருதுளா, கௌதமையே பார்த்துக் கொண்டிருக்க, பேசிவிட்டுப் போனை வைத்தவன் அப்பொழுது தான் மிருதுளாவை பார்த்தான். அவளோ, “என்னங்க!! யார் போன்ல?!! உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு??!” என்று சற்றே பதற்றமாகக் கேட்டாள். ஏனெனில் அவளுக்கு, தேஜாவிற்கு ஏதும் உடம்பு சரி இல்லையோ என்ற பயம்.

மிருதுளாவை சமாதனம் செய்த கெளதம், “பாப்பாக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல டா அம்மு. அது வந்து, சந்துருவும், அவன் அம்மாவும் கோவிலுக்குப் போற வழியில ஆக்சிடென்ட் ஆகி இறந்துட்டாங்களாம். என்று மென்று முழுங்கி மெதுவாகச் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்தவள் “கடவுளே!!” என்று அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

அப்படியே உறைந்துபோய் அமர்ந்திருந்தவளின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் தேங்கியது. சந்துரு எவ்வளவு கொடுமைகள் இவளுக்குச் செய்திருந்தாலும், தொட்டு தாலி கட்டி குடும்பம் நடத்திய கணவன் ஆயிற்றே, அந்த உறவு, இப்பொழுது அவன் இறந்துவிட்டான் என்ற செய்திய கேட்கும்பொழுது மனதை பிசையதான் செய்தது.

அசையாமல் அமர்ந்திருந்த மனைவியை லேசாக அணைத்துக்கொண்ட கெளதம், அவளது முதுகை வருடிகொடுக்க, சில கண்ணீர் துளிகள், மிருதுளாவின் கன்னங்களில் விழுந்து உருண்டோடியது.

கெளதம், மிருதுளா இருவருமே, சந்துரு தங்கள் வாழ்கையில் இருந்து விலகி செல்லவேண்டும் என்று தான் நினைத்தனர். இப்படி உலகை விட்டே செல்லவேண்டும் என்று சத்தியமாக மனதளவில் கூட நினைக்கவில்லை. இப்படிச் சீக்கிரமே செல்வான் என்றும் எதிர் பார்க்கவில்லை. இருவரையுமே இந்தச் செய்தி, கவலை கொள்ளச் செய்திருந்தது. சக மனிதன் என்ற முறையில், அவனுக்காக வருத்தப்படச் வைத்தது.

வெகு நேரம் அமைதியாகக் கண்ணீர் வடித்த மிருதுளா, பின் எழுந்து சென்று ஷெல்பில் வைக்கபட்டிருந்த சுவாமி படத்திற்கு முன்பு நின்றவள், படத்தில் இருக்கும் கடவுளின் கண்களைக் கூர்மையாகப் பார்த்தபடி, கைகளைக் கூப்பி நின்றவள், ‘கடவுளே! அவரும் அத்தையும், என்னதான் எனக்குக் கஷ்டம் கொடுத்து இருந்தாலும், அதை அவங்க தெரிஞ்சு செய்யல. அவங்க விதி அவங்களைச் செய்ய வச்சுடுச்சு. அவங்க செயலுக்கும் நீ தான் காரணம். உன்னோட பார்வை இல்லாம இந்த உலகத்தில இருக்கிறவங்க மூச்சுகூட விட முடியாது. இப்போ அவங்க விதி இறந்து போய்ட்டாங்க. அவங்க செஞ்ச தப்பை எல்லாம் மன்னிச்சு, அவங்களை நீ ஏத்துக்கணும். அவங்க ஆத்மாக்கு சாந்தியும் அமைதியும் கொடுத்து, அவங்களை உன்கூடச் சேர்த்துக்கோ.’ என்று மனதுக்குள் மனம் உருக வேண்டியவள், கண்களை ஒருநொடி மூடி திறந்து, கடவுள் படத்திற்கு முன்பு இருந்த திருநீரை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டாள். கெளதமோ அவள் எதிரில் நின்று அவளைத் தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இவன் கண்களுக்கு மிருதுளா வெறும் ஒரு பெண்ணாகத் தெரியவில்லை. தேவதையாகவே தெரிந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!