Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 40.1

அத்தியாயம் 40 (1)

கடவுளிடம் வேண்டிவிட்டு நிமிர்ந்த மிருதுளா எதிரில் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம், ‘என்ன?!’ என்று பார்வையாலே கேட்க, அவனோ ஒன்னும் இல்லை என்று பதில் பார்வை பார்த்தவன், அவளை நோக்கி கைகளை விரிக்க, கலங்கிய கண்களில் லேசான சிரிப்பை காட்டியவள், கௌதம் அருகில் சென்று அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.

சந்துரு இறந்த செய்தி, இவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்த அதே நேரம் ஒருவித நிம்மதியை கொடுத்தது என்பதும் உண்மை. இதுநாள் வரை, போராட்ட வாழ்கையை அனுபவித்துவிட்டு இப்பொழுதுதான் ஒரு நிலையான வாழ்க்கைக்கு வந்திருகின்றனர் இருவரும். மகிழ்ச்சி, துயரம், அழுகை, வேதனை, வலி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், என்று வாழ்கையில் பலவற்றைச் சந்தித்து, வாழ்க்கை கயிறின் கடைசி நுனியை பிடித்து ஒருவாறு தட்டு தடுமாறி மேலே ஏறி இருக்கும் நிம்மதி. இனி யாராலும் எந்தத் துன்பமும் ஏற்படாது என்ற நிம்மதி. தன்னவள் / தன்னவன் வுடன் இணைந்துவிட்ட மன நிறைவு.

பல நிமிடங்கள் கழித்து, இருவரும் விலக, கெளதம் அடுத்து ராஜேஸ்வரிக்கு போன் செய்து விஷயத்தைக் கூறினான். “இஸ் இட்??!!” என்று செய்தியை கேட்டு அதிர்ந்தவர், சில நிமிடங்கள் பேசிவிட்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டுப் போனை வைத்தார்.



Advertisement

அதன்படி அடுத்தப் பத்து நாளில், சந்துருவின் இறப்பு சான்றிதழை வாங்கி, அதனுடன், பஞ்சாயத்தில் கொடுக்கப்பட்ட சந்துரு – மிருதுளா பிரிவு ஒப்பம் பேப்பர், மிருதுளா, கெளதம் திருமணச் சர்டிபிகேட் ஆகியவற்ற்றோடு, பஞ்சாயத்தில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் சிலரையும் வரவழைத்து அவர்களின் சாட்சிகளோடு, அனைத்து டாக்குமென்ட்ஸ்சையும் கோர்ட் மற்றும் திருமணப் பதிவு அலுவகத்தில் சமர்பித்து, மிருதுளா, கௌதம் திருமணத்தைச் சட்டபூர்வம் ஆக்கினார். இதைச் செய்து முடிக்கக் கிட்டதட்ட ஒரு மாதம் பிடித்தது அவருக்கு. இனி எந்தப் பிரச்னையும் இல்லை என்று அவர் சொன்ன பிறகே, கௌதமும், மிருதுளாவும் பெங்களுர் திரும்பினர்.

அங்கே போன பின்பு, தேஜா, கெளதம் மிருதுளா குழந்தை தான் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவர, எல்லோரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். ஆராவோ ஒருபடி மேலே போய், சந்தோஷத்தில் மிருதுளாவை தூக்கி சுற்றியவள், அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள். பெரியவர்களோ ‘எல்லாம் இறைவன் செயல்!’ என்று கடவுளின் காலடிகளை சரணடைந்தனர்.

**********

Advertisement

சில மாதங்கள் கழித்து.

Advertisement

அன்றைக்குத் தேஜாவின் இரண்டாவது பிறந்தநாள். மாலை தங்கள் அபார்ட்மெண்ட் கம்முயுனிட்டி ஹாலில் விழா ஏற்பாடு செய்திருந்தான் கெளதம். இதோ மாலை வேளை நெருங்கி கொண்டிருந்தது. ஆராவும், ஜெய்யும் வண்ண காகிதங்களைச் சுவற்றில் ஒட்டிக் அலங்காரம் செய்தபடி, விழாவிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

தூக்கி சொருகிய புடவையில், தன் கையில் இருக்கும் கலர் பேப்பரை எம்பி நின்றவாறு சுவற்றில் ஓட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஆரா. அவள் அப்படி நிற்கும்பொழுது, சற்று பூசினார் போன்று தெரிந்த அவள் இடை அழகில் சொக்கிப்போன ஜெய் தன் கையில் இருந்தவற்றை டேபிளில் வைத்துவிட்டு, சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என்று பார்க்க, ஒருவரும் இல்லை. பின் தன் அருகில் இருந்த பலவண்ண பெயிண்ட் டப்பாக்களில் ஒவ்வொரு விரலை ஒவ்வொரு நிறத்தில் முக்கி எடுத்துக் கொண்டவன், மெல்ல பூனை நடை நடந்து, ஆராவின் பின்புறம் வந்து நின்றுகொண்டு, ஆரா எதிர்பார்க்காத நேரம், அவள் இடையில் லேசாகக் கிள்ள, அதில் துள்ளிக்கொண்டு தன் நெஞ்சின் மீது மோதியவளின் முகத்தில் தன் விரல்களில் இருந்த பெயிண்ட்டை பூசிவிட்டு, சற்று தள்ளி போய் நின்றுகொண்டு ‘ஈ!!!’ என்று சிரித்துக் கொண்டிருந்தான்.

அவன் கிள்ளியதில் வலியில் முகத்தைச் சுருக்கியவள், அவன் எதையோ தடவி சென்றதை உணர்ந்து, அருகில் இருந்த சின்னக் கண்ணாடியில் முகத்தைப் பார்க்க, அவன் செய்த அக்கபோரு தெரிய, அடுத்த நொடி, “ஜெய்!!!” என்று கத்தி கொண்டே அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.

Advertisement

அவனோ, இவள் கைகளில் சிக்காத படி ஓடிக் கொண்டிருந்தவன், அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் வேண்டும் என்றே, ‘தனம்’ என்று அவள் பெயரை சொல்லி வெறுப்பேத்த, ஆராவின் வேகம் இன்னும் அதிகம் ஆனது. ஒரு கட்டத்தில் ஆரா எதிலோ காலை வைத்து தடுமாறி கீழே விழபோக, “ஆரா!!” என்று புயலென அவள் அருகில் வந்து, சட்டென்று அவள் இடையில் கைகொடுத்து, கீழே விழாதவாறு பிடித்த ஜெய், அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “ஆர் யு ஒகே பேபி!!!” என்று முகத்தை ஆராய, அவளோ சில நொடிகள் ஜெய்யையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் எதிர்பார்க்காத நேரம், பக்கத்தில் இருந்த பெயிண்ட் டப்பாவை எடுத்து, முழுவதையும் அவன் தலையில் கொட்டினாள்.

“அடி பாவி!!! சிவனேன்னு இருந்தவன் மேல இப்படிப் பெயிண்ட்டை கொட்டிடிட்யே!” என்று முகத்தில் வழிந்த பெயிண்ட்டை துடைத்துக் கொண்டே ஜெய் கேட்க, “இந்த டயலாக் நான் சொல்லணும். சிவனேன்னு வேலையைப் பார்த்துட்டு இருந்தவளை, சீண்டிவிட்டு இப்போ நல்லா அபிஷேகம் வாங்குனீங்களா!!” என்று சிரிப்புடன் பதிலுக்கு அவள் பழுப்பு காட்ட,

ஒற்றைப் புருவத்தைத் தூக்கி விஜயகாந்த் போல முறைத்த ஜெய், “இப்போ அடுத்து என்ன நடக்குதுன்னு மட்டும் பாரு.” என்று கூறிவிட்டு சுற்றும் முற்றும் பார்க்க, “எ….என்ன நடக்கப் போ..போகுது….” என்று ஆராவின் உதடுகள் தந்தியடிக்க, எதையோ தேடுயவனின் கண்களில் ஏதோ சிக்கிய மகிழ்ச்சி தெரிய, அவனின் பார்வை போன திசையைப் பார்த்துவிட்டு, “ஐயையோ!!!” என்றபடி ஓட நினைத்தவளை, பாய்ந்து பிடித்தவன், தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, ஆராவோ இவன் பிடியில் இருந்து விலகப் போராடிக் கொண்டிருந்தாள்.

ஆராவை பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன், தன் கையில் வைத்திருந்த கருப்புப் பெயிண்ட் டப்பாவை ஜன்னல் திண்டில் வைத்து, ஒற்றைக் கையால் அதன் மூடிய திறக்க, ஆராவோ, “வேண்டாம் ஜெய்!! ப்ளீஸ்!! கருப்பு கலர் வேற. அழுக்காகும். வேண்டாம்…” என்று கெஞ்ச ஆரம்பிக்க, ஜெய்யோ, “கருப்பு, உழைப்போட வண்ணம்.” என்று பட டயலாக் சொன்னவன், மொத்த டப்பாவையும் ஒற்றைக் கையால் தூக்கி, அவள் வேண்டாம் வேண்டாம் என்று கதற கதற, இருவர் மேலேயும் முழுவதையும் கவிழ்த்தான்.

சொட்ட சொட்ட வழிந்து கொண்டிருந்த பெயிண்ட்டை கையால் துடைத்த ஆரா, “இப்போ உங்களுக்குச் சந்தோஷமா!!” என்று ‘உர்ர்’ என்று முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, “இல்லையே, இன்னொன்னு செஞ்சாதான் எனக்கு ஹாப்பி!!” என்றவன், அப்படியே ஆராவின் இதழ்களை நோக்கி குனிய, அந்த நேரம் யாரோ வரும் சத்தம் கேட்க, “அய்யய்யோ யாரோ வராங்க!!! என்று பதறிய ஜெய், ஆராவை அம்போ என்று விட்டுவிட்டு, மற்றொரு வாசல் வழியே வெளியே வந்தவன், விறு விறுவென்று மாடியேறி ஓடிவிட்டான். போகும் வழியிலேயே, பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்த நண்பர்களை அழைத்து, பெயிண்ட் தெரியாமல் கொட்டிவிட்டது, அதனால தான் குளித்துவிட்டு வருவதாகவும், அதற்குள் மீதம் இருக்கும் வேலைகளையும் முடித்துவிடும்படி கூறினான்.

மாடியேறி வீட்டுக்குள் வர, நல்லவேளை எல்லோரும் எதிர் வீட்டில் இருந்தனர். வேகமாகத் தங்கள் அறைக்குள் ஜெய் செல்ல, அவனைப் பின்தொடர்ந்து ஆராவும் அறைக்குள் நுழைய, கதவை லாக் செய்துவிட்டு, “நான் தான் முதலில் குளிப்பேன்.” என்று மீண்டும் அவர்கள் ஒரு சண்டையை ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் சோர்ந்துபோன ஆரா, “நான் வெயிட் பண்றேன். நீங்க போய்க் குளிங்க.” என்றுவிட்டு குளியல் அறை அருகில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொள்ள, “ஒகே!!” என்று தோள்களைக் குலுக்கிய ஜெய், குளியல் அறை சென்று கதவை அடைத்துக்கொள்ள, ஆராவோ கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள். அப்பொழுது திடீரென்று குளியல் அறை கதவு திறக்க, அந்தச் சத்தத்தில் திரும்பி பார்த்தவளை, உள்ளே இருந்து வந்த ஒரு கை உள்ளே இழுத்து கதவை சாத்தியது.

இங்கே எதிர் வீட்டில், தேஜாவிற்கு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள் மிருதுளா. பெரியவர்கள் கோவிலுக்குச் சென்றிருந்தனர். ஹால் அலங்காரங்களைச் செக் செய்துவிட்டு, மிருதுளாவை தேடி மாமனாரின் வீட்டிற்கு வந்த கெளதமின் கண்களில், அழகிய அரக்கு நிற கலரில், மெல்லிய பட்டு உடுத்தி, தலை நிறைய மல்லிகை பூவை சூட்டிகொண்டு, தேவதையாக இருக்கும் மனைவி, குனிந்து குழந்தைக்கு உடை மாற்றிக் கொண்டிருப்பது பட, மெதுவாக உள்ளே நுழைந்தவன், சத்தம் வராமல் வாசல் கதவையும், அறை கதவையும் சாத்திவிட்டு, மிருதுளா அருகில் சென்றவன், அவள் தலையில் உள்ள மல்லிகை பூவை வாசம் பிடிக்க, அதன் நறுமணத்தில் கிறங்கி போனவன், மெதுவாக, அவள் பின்னால் இருந்து அணைக்க, அதில் திடுக்கிட்டு மிருதுளா கத்த போக, “அம்மு!! நான் தான். கத்தாத.” என்று அவசரமாக இவன் சொல்ல, “நீங்கதானா. நான் பயந்தே போயிட்டேன்.” என்று சிரித்தாள் மிருதுளா.

“நான் இல்லாம வேற யாருடி உன்னை இப்படிக் கட்டிபிடிக்க முடியும்.” என்றவன், அவள் காதருகே குனிந்து, “செம்மைய இருக்க அம்மு. கூடிய சீக்கிரம் தேஜாக்கு ஒரு தம்பி பாப்பாவ ரெடி செஞ்சுட வேண்டியது தான்.” என்று கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டு, அவள் காதோரம் தன் மீசை உரச, மிருதுவாக இதழ் பதித்தவன், மேலும் முன்னேற போக, “பங்க்ஷன் டைம் ஆச்சு. நீங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க.” என்று வெட்கத்துடன் மிருதுளா திமிற, கைவளைவுக்குள் வைத்துக்கொண்டே அவளைத் தன் பக்கம் திருப்பிய கெளதம், “ஹம்!! என் பொண்ணோட பர்த்டேக்குக் கிஃப்ட் ரெடி செஞ்சுட்டு இருக்கேன்.” என்றவனுக்கு இன்னும் கிறக்கம் போகவில்லை.

“அப்படியா, நம்ம பொண்ணுக்கு இன்னைக்குப் பர்த்டே. நீங்க சொல்றதை பார்த்தா, அடுத்தப் பர்த்டேக்கு தான் கிஃப்ட் ரெடி பண்ணுவீங்க போல.” என்று சொல்லிவிட்டு மிருதுளா அழகாக வெட்கப்பட, அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன், “என்னைச் சரியா புரிஞ்சு வச்சிருக்க அம்மு. நானும் அதைதான் சொன்னேன். அடுத்தப் பர்த்டேக்கு, இப்போவே ரெடி பண்றேன்.” என்று சொல்லிவிட்டு, அவள் மேலும் பேசுவதற்குள், மிருதுளாவின் இதழ்களை, தன் இதழ்களால் சிறைப் பிடித்தான்.

வெகு நேரம் நீடித்த முத்தத்தில் லயித்துப் போன கெளதமின் உதடுகள், அவள் இதழ்களில் இருந்து விடுதலை வாங்கிகொண்டு, அப்படியே கழுத்து வளைவுக்குள் தஞ்சம் புக, மிருதுளாவோ, கௌதமை தன்னிடம் இருந்து பிரிக்கப் போராடி கொண்டிருந்தாள். “என்னங்க!! பாப்பா இருக்கா!! யாராவது வந்துட போறாங்க.” என்று அவள் பதற, இவனோ, “ஒரு நிமிஷம் டி.” என்றவனின், கைகள் மிருதுளாவை, இடையோடு சேர்த்து தன்னோடு இருக்கிக்கொள்ள, அவன் இதழ்களோ, கழுத்து வளைவு, பின்னங்கழுத்து, என்ற ஊர்வலம் போக ஆரம்பிக்க, அந்த நேரம் காலிங் பெல் சத்தம் கேட்கவும், மனமே இல்லாமல் மனைவியிடம் இருந்து விலகியவன், “எவன் டா அது கரடி மாதிரி.” என்று கடுப்புடன் சென்று கதவை திறக்க, வாசலில் ஜெய் நின்று கொண்டிருந்தான். கெளதம் சொன்னது இவன் காதில் விழுந்தது போல, “என்ன அண்ணா, சிவ பூஜையில கரடி மாதிரி வந்துட்டேனா!!” என்று சொல்ல, கெளதமோ, “ச்சே!! ச்சே!! அதெல்லாம் இல்லடா.” என்று கஷ்டப்பட்டு முகத்தைச் சிரித்தபடி வைத்துக்கொண்டு சமாளிக்க, கௌதமின் பின்னால் வந்து கொண்டிருந்த மிருதுளா, பக்கென்று சிரித்துவிட்டாள்.

அண்ணியின் சிரிப்பில் புரிந்துகொண்ட ஜெய், “நான் வரேன்னே, நீ பூஜையை முடிச்சிட்டு வா.” என்று சொல்லி சிரித்துவிட்டு படியிறங்கி போக, பேசும்பொழுது சிரித்துக் காட்டிக்கொடுத்த மனைவியைத் திரும்பி பார்த்தவன், “இன்னைக்கு நைட்டு வச்சுக்கிறேன் அம்மு உன்னை!!” என்று போலியான கோபத்துடன் சொல்ல, “வச்சுகோங்க! வச்சுகோங்க!” என்று ஹஸ்கியான குரலில் கூறிய மிருதுளா, கெளதம் சுதாரிப்பதற்குள், தேஜாவுடன் படி இறங்கி சென்றுவிட்டாள். இவனோ, “என் பொண்டாட்டி ஒரு தயிர் சாதம்ன்னு நினைச்சேன். இவ சிக்கன் பிரியாணியா இருப்பா போலையே?! விட்டா, நம்மளை சிக்கன் 65 போட்டுடுவா!!” என்றவன், தலையைக் குலுக்கிக்கொண்டு, சிரிப்புடன் வீட்டை பூட்டிவிட்டு கீழே சென்றான்.

அடுத்து விழா இனிதே ஆரம்பித்து, அனைவரின் வாழ்த்துக்களும் பரிசுகளோடும் இனிதே முடிந்தது. அன்றைய இரவு தூங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் தங்கள் அறைக்குள் நுழைந்த மனைவியின் பின்னே சென்ற கெளதம், குழந்தையை வாங்கி, தொட்டிலில் படுக்க வைக்க, மிருதுளாவோ உடை மாற்ற சென்றாள். அவள் வருவதற்குள் வேறு உடைக்கு மாறியிருந்தவன், பீரோ பின்னால் ஒளிந்துகொள்ள, வெளியே வந்த மிருதுளா, நகைகளைக் கழட்டி வைத்துவிட்டுக் கெளதம் எங்கே என்று தேட, திடீரென்று மிருதுளா பின்னால் இருந்து வந்தவன், அவளை அப்படியே கைகளில் ஏந்தி சென்று கட்டிலில் படுக்க வைத்தவன், தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தவளிடம், “வச்சுக்கச் சொன்னலா. இப்போ பாரு.” என்றவன் அப்படியே அவள் மேல கவிழ, மாலை தன் சொன்னதை ரெடி செய்யும் பணியில் இறங்கினான் தன் மனைவியின் வெட்கப் புன்னகையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!