Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 8.1

அத்தியாயம் 8 (1)

தன்னை ஆசுவாசபடுத்திக்கொள்ளக் கையில் குழந்தையோடு கட்டிலில் உட்கார்ந்த மிருதுளா, தேஜாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டாள். வலியின் தாக்கத்தால் கண்களை அவள் மூடி இருக்க, ஏதோ உணர்வு தோன்ற கண்களைத் திறந்து பார்த்தவள், குழந்தை செய்த அந்த செயலை பார்த்தாள். வீரிட்டு அழுதுகொண்டிருந்த குழந்தை, அவளின் சேலையைப் பிடித்து இழுத்து அவளின் மார்பு பகுதியில் முகத்தைப் புதைத்து, எதையோ எதிர்பார்ப்புடன் தேடியது.

இந்தக் காட்சியைக் கண்டவளுக்குள் இப்பொழுது வலி அதிகரிக்க, இந்த வலி எதனால் என்பதைப் புரிந்து கொண்டவள், கண்களில் கண்ணீர் வழிய மடமடவென குழந்தைக்குப் பசியாற்றத் தொடங்கினாள்.

அதே நேரம்,



Advertisement

‘பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ!

நான் கொள்ளும் கர்வம் நீ!

……………………………………………………………………..

Advertisement

……………………………………………………………………..

Advertisement

கண்கள் நீயே காற்றும் நீயே

……………………………………………………………………..

எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்

Advertisement

நான் தான் நீ வேறில்லை

என்ற திரைப்படப் பாடல் தொலைகாட்சியில் ஓடியது.

அந்தப் பாடலின் தாக்கத்தில் கண்ணீருடன், குழந்தையை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டாள் மிருதுளா. இத்தனை நாள் தாயை பார்த்திடாத குழந்தை, தாயிடம் பழகாத குழந்தை, இன்று எப்படி இவ்வாறு செய்கிறது? அதுவும் தன்னிடம்??!! என்பன போன்ற கேள்விகள் அவள் மனதில் எழுந்தாலும், அதற்கு விடை தேடும் எண்ணத்தில் தற்பொழுது அவள் இல்லை. குழந்தையை இழந்த தனக்குக் கடவுள் கொடுத்த குழந்தை தேஜா, என்றே அவள் மனம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டது. குழந்தை பசியாற பசியாற, அவளுக்குள் இருந்த வலி மெல்ல மெல்ல மட்டுப்பட்டது. குழந்தை பசியாறிய திருப்தி தந்த மகிழ்ச்சியில் அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். கைகள் மட்டும் குழந்தை மேல் இருந்த தனது இறுக்கத்தை விடவில்லை.

அந்த நேரம் கோவிலுக்குச் சென்றிருந்த அவளின் பாட்டி பார்வதி வீட்டிற்குத் திரும்பி வந்தவர், தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு திறந்து உள்ளே வந்தார். வந்தவருக்கு ஏதோ கருகும் வாடை வரவும், அவசரமாகக் கிட்சனுக்குச் சென்றார்.

அங்கே அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சட்டியில் இருந்த குழம்பு சுண்டிப்போய், பாத்திரம் தீய ஆரம்பித்து, புகை வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து பதறியவர், அடுப்பை அனைத்துவிட்டு, ‘இப்படித் தீய விட்டுட்டு இவ என்ன பண்றா?!’ என்று நினைத்தபடி மிருதுளாவைத் தேடி அவளின் அறைக்குச் சென்றார்.

பாத்திரம் அப்பொழுதுதான் கருக ஆரம்பித்திருந்ததால், பக்கத்து வீடுகளுக்கு வாசம் தெரியவில்லை.

அறையின் உள்ளே சென்றவர், தான் பார்த்த காட்சியில் அதிர்ந்துபோய், “கண்ணு!!!” என்று அதிர்ச்சியுடன் மிருதுளாவை அழைக்க, அந்த அழைப்பில் மறுபக்கம் திரும்பி உட்கார்ந்திருந்த மிருதுளா சட்டென்று எழுந்து வாசலை பார்க்க, பார்வதியை பார்த்துக் கண்களை விரித்தவள், என்ன சொல்ல என்ற ரீதியில் தவிப்புடன் அவரைப் பார்த்தாள். குழந்தையை எங்கே தன்னிடம் இருந்து பிரித்துவிடுவாரோ என்ற பயத்தில் குழந்தையை இறுக பிடித்துக்கொண்டாள்.

மிருதுளா செய்த செயலை புரிந்து கொண்டவர், அவள் அருகில் வந்து, “என்ன செஞ்சுட்டு இருக்கக் கண்ணு.” என்று அதிர்ச்சியுடன் கேட்க,

“ப்ளீஸ் ஆச்சி, தயவு செஞ்சு இதை மட்டும் என்னைச் செய்ய வேண்டாம்னு சொல்லிடாதீங்க. என்னால இவ அழறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. நெஞ்செல்லாம் வலிக்குது ஆச்சி.” என்று கண்களில் நீர் வழிய தவிப்புடன் கெஞ்சினாள் மிருதுளா.

ஆனால் அவரோ, “இப்படிச் செய்யக்கூடாது கண்ணு. அடுத்த வீட்டு குழந்தைக்கு நீ பால் கொடுக்கிறது தப்பு டா மா. இது பழகிடுச்சுனா உனக்கும் கஷ்டம். குழந்தைக்கும் கஷ்டம். அப்புறம் அவ பசிக்கும்போதெல்லாம் உன்னைத் தேட ஆரம்பிப்பா. எத்தனை நாலு கண்ணு உன்னால இப்படிச் செய்ய முடியும்?” என்று எடுத்து கூற,

“இவ எனக்கு அடுத்த வீட்டு குழந்தை இல்லை ஆச்சி. நிறைகுடமா இருந்த பால் சொம்பை தட்டிவிட்டு அதை ஒன்னும் இல்லாத காலி பாத்திரமா மாத்துன மாதிரி, சந்தோஷத்தோட குழந்தை எப்போ பிறக்கும்ன்னு எதிர்பார்த்திட்டு இருந்த என் நினைப்புல தீயை அள்ளிபோட்டு, அந்தக் கடவுள் என் குழந்தையைப் பறிச்சி, என் வயித்தை பாலைவனமா ஆக்கிட்டான். அன்னைல இருந்து நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கேன். என்னைக்கு இவள பார்த்தேனோ, இறந்துபோன என் குழந்தை இவ ரூபத்தில என்கிட்ட வந்திருக்குன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன் ஆச்சி. இவ என் குழந்தை ஆச்சி. நான் இவளை பத்து மாசம் சுமந்து பெக்கலானாலும், இவ எனக்குப் பொண்ணு தான் ஆச்சி. என் பொண்ணு இவ…” என்று அழுகையுடன் கூறியவள், “பிள்ளையும் போய், புருஷனும் போய் வாழ்கையும் இல்லாம தனியா நிக்கிறேன் ஆச்சி. பெத்த பிள்ளைக்குத் தான் பால் கொடுக்க எனக்குக் கொடுத்து வைக்காம எமனுக்கு வாரி கொடுத்துட்டேன். இவளுக்குக் கொடுக்கிற பாக்கியமாவது எனக்குக் கிடைச்சிருக்கு, இவளுக்காவது நான் அம்மாவா இருக்கேனே ஆச்சி. அது எத்தனை நாளா இருந்தாலும், நான் சாகுற வரைக்கும் இவளுக்கு அம்மாவா இருப்பேன் ஆச்சி. உங்க கால்ல விழுந்து கெஞ்சி கேக்குறேன். வேண்டாம்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ். இவ இல்லனா நான் செத்தே போய்டுவேன் ஆச்சி.” என்று உணர்ச்சி மிகுதியில் அப்படியே தரையில் அமர்ந்து அழ, “அம்மாடி!!!” என்று பதறிய பார்வதி, பேத்தியை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அவளது உச்சந்தலையில் இதழ் பதித்தவர், அவளது தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தார்.

“இத்தனை நாளா உன் கஷ்டத்தை மனசுகுள்ள போட்டுக்கிட்டு உள்ளுக்குள்ள புழுங்கிட்டு இருந்துருக்கியே கண்ணு. உன் நல்ல மனசை பார்த்தும் அந்தக் கடவுளுக்கு இப்படிச் செய்ய எப்படி மனசு வந்துது? இப்படி நீ கஷ்டபடுறத என்னால பாக்க முடியலையே கண்ணு. ஆண்டவா என் பேத்திக்கு ஏதாவது நல்லவழி காட்டுயா!!” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்து வேண்டுதலில் முடித்தார் அந்த வயதான தாய்.

பின் மிருதுளாவின் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவர், “உன்னை நான் தடுக்கல கண்ணு. உனக்கு எது சந்தோஷமோ அதைச் செய். எலியும் பூனையுமா இருக்கிற எத்தனையோ மிருகங்க, அடுத்தக் குட்டிய தன் குட்டிபோலப் பால் கொடுத்து, பாசத்தோட வளர்க்கும்போது, அம்மா இல்லாத இந்தக் குழந்தைக்கு நீ அம்மாவா இருக்றதுல தப்பில்லை கண்ணு.” என்றார் அவளுக்கு ஆதரவாக. மிருதுளாவும், நன்றியுடன், “ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் ஆச்சி.” என்றவள் மனநிறைவுடன் அவரை அணைத்துக் கொண்டாள்.

இந்தக் காட்சியை மற்றொருவரும் பார்க்க நேர்ந்தது. சம்பளம் வாங்க அப்பொழுது தான் அவர்கள் பிளாக்கிற்கு வந்த பொன்னம்மா, கருகும் வாடை அடிக்கவும், வேகமாக மிருதுளாவின் வீட்டிற்கு வந்தவரின் காதுகளில், கடைசியாக மிருதுளா தன் மனதில் இருப்பதைச் சொல்லிவிட்டு அழுததும், பார்வதி அவளைச் சமாதனம் செய்ததும் காதுகளில் கேட்டது. ஹாலில் நின்று கொண்டிருந்தவர் அப்போதைக்கு அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து, ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டார்.

போகும் அவரின் மனதில் உதித்த எண்ணம் இதுதான், ‘இந்த மிருதுளா பொண்ணு எவ்ளோ நல்ல பொண்ணா இருக்கு. இந்தக் காலத்தில கல்யாணம் ஆகி வர்ற பொண்ணுங்களே மூத்த தாரத்துப் பசங்களை ஒழுங்கா கவனிக்க மாட்டேங்குதுங்க. இதுல இந்தப் பொண்ணு என்னடானா, கெளதம் தம்பி குழந்தை மேல உசுரையே வச்சுருக்கு. அடுத்த வீட்டு புள்ளையைத், தன் புள்ளையா நினைக்க எவ்ளோ பெரிய மனசு வேணும். இப்படிப்பட்ட நல்ல பொண்ணுக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு வாழ்கையைக் கொடுத்தான்?!!’ என்பதே.

தான் பார்த்ததை அவர் யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏன் இப்படி என்று மிருதுளாவிடமும் கேட்கவில்லை. பாவமாகக் கூட அவளை ஒரு பார்வை பார்க்கவில்லை. தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

இத்தனை நாள் பெறாத பிள்ளையாக இருந்த தேஜா, அன்றில இருந்து மிருதுளாவிற்கு பெற்ற பிள்ளையாகவே மாறிபோனாள். குழந்தை பசிக்கு என்று சேகர் உணவு அனுப்பி வைக்க, அதை வேண்டாம் என்று தடுத்துவிட்டவள், “குழந்தைக்கு ஒருவேளை சப்பாடு கூட எங்களால கொடுக்க முடியாதா அங்கிள்?!” என்று கேள்வி கேட்டே அவரின் அந்தச் செயலை தடுத்துவிட்டாள்.

நாட்கள் கடந்துகொண்டிருக்க ஆராவிற்கு இந்த விஷயம் தெரிய வந்த பொழுது, ‘இதை! இதைத் தானே நான் எதிர் பார்த்தேன். இந்த நெருக்கம் வரவேண்டும் என்றுதானே கனவு கண்டு கொண்டிருந்தேன்.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், மனநிறைவுடன் கண்டும் காணாதது போல விட்டுவிட்டாள். கூடுதலாக, இந்த நெருக்கம் குழந்தையோடு நிற்காமல் அதன் தந்தையிடமும் உண்டானால் நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் அவளுக்கு எழுந்தது.

இரவு உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்கள் அனைத்தும் தாயும் மகளும் ஒன்றாகவே இருந்தனர். அதனாலையே அவர்களுக்குள் உருவான பந்தம் நாளுக்கு நாள் உறுதியாகி கொண்டே சென்றது. பகல் முழுவதும் தேஜாவுடன் இருந்துவிட்டு, இரவில் அவள் இல்லாமல் இருப்பது மிருதுளாவிற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

கண்ணத்து குழியுடன் பொக்கை வாய் தெரிய அழகாகச் சிரிப்பதும், எச்சில் ஒழுகும் வாயில் விளையாட்டு பொருளை வைத்துக் கடித்துக்கொண்டே இவளை பார்த்து, “ங்கே!!” என்ற சத்தத்துடன் கைகளைத் தரையில் அடிப்பதும், கைகளைத் தரையில் ஊனி தவழ்ந்து இவளை நோக்கி வருவது என்று தேஜா செய்யும் ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்கள் எல்லாம் மிருதுளா கண்முன் வந்து அவளைத் தூங்கவிடாமல் செய்யும். அவள் நினைவுடனே புரண்டு கொண்டிருப்பவள் வெகு நேரம் கழித்தே தூங்கிப் போவாள்.

அப்படித் தான் அன்றொரு நாள், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு உணவு ஊட்ட என, கிண்ணத்தில் சாதம் பிசைந்து எடுத்து வந்தவள், தேஜாவை மடியில் தூக்கி வைக்க, அப்பொழுதுதான் உணர்ந்தாள் குழந்தையின் உடல் லேசாகச் சுடுவதை. அந்தக் குறைந்த சூட்டிற்கே பதறியவள், உடனே தனது பாட்டியை அழைத்து விஷயத்தைக் கூற, அவரோ தொட்டு பார்த்துவிட்டு, “பயப்பட ஒன்னும் இல்ல கண்ணு. ஓடி ஆடி விளியாடுதுல, யார் கண்ணாவது பட்டிருக்கும். இதோ வரேன்.” என்றவர் உப்பு, மிளகாயை எடுத்து வந்து குழந்தையை மூன்று முறை சுற்றியவர், அதில் துப்புவிட்டு ஏற்கனவே பற்ற வைத்திருந்த மரக்கட்டை நெருப்பில் கொண்டு போய்ப் போட்டவர், திரும்பி வந்து, “எல்லாம் ஊர் கண்ணு. எவ்ளோ சத்தம் தெரியுமா. புள்ள அழகா இருக்குல. அதான் கண் திருஷ்ட்டி பட்டிருக்கு.” என்று கூறியவர் தனக்குத் தெரிந்த கைவைத்தியத்தைக் குழந்தைக்குச் செய்தார். அதன் பிறகு மாலை நேரம் குழந்தை உடல் சுடவில்லை. அந்த நிம்மதியில் இரவு உறங்கியும் போனாள் மிருதுளா.

தேஜாவை பற்றியே நினைத்துக்கொண்டு தூங்கியவளுக்கோ, மனம் சமன் அடையாமல், ஏதேதோ கனவுகள் வர, தூக்கத்திலேயே முனங்கிக் கொண்டிருந்தவள் ஒருகட்டத்தில் அடித்துபிடித்து எழுந்தாள். கனவுகளின் தாக்கமோ என்னவோ, அவளுக்கு இருதயம் பாரமாக இருந்தது. குழந்தைக்கு ஏதோ சரியில்லை என்று நெஞ்சம் அடித்துக் கொண்டது. ஒருவித பயம் அவளுக்குள் பரவி இருக்க, இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. குழந்தையைக் கண்ணால் பார்த்துவிட்டால் தேவலாம் என்று தோன்ற, திரும்பி கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் நடு இரவு ஒன்று முப்பது என்று காட்டியது.

இந்த நேரம் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டுமா?! காலை பார்ப்போமா?! என்று ஒரு பக்கம் எண்ணம் எழுந்தாலும், அவளின் உள் மனம் சொன்ன செய்தியில், அவளால் அதற்கு மேல் நிம்மதியாக உறங்க முடியாது என்று தோன்றியது. உடனே எழுந்து ஆராவின் அறைக்குச் சென்றவள் அவளை எழுப்பினாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!