Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 25

கள்வன் – 25

 

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் விழிமணிகளில் விழிப்பு தட்ட, மென்னிமைகளை மெல்ல பிரித்தவள் வதனத்திலும் உள்ளத்திலும் இரவு இருந்த குழப்பங்கள் முற்றிலும் விலகி, தெளிந்த அமைதி மனதை ஆக்கிரமித்திருந்தது. தந்தை தந்த யோசனை வேலைசெய்ய, உறக்கத்தில் வேலைநிறுத்தம் செய்து ஓய்வெடுத்த மூளை, தன் வேலையைத் தொடர, சிந்தையில் மெல்லிய மின்னல்வெட்டு. 

 



Advertisement

தாமதியாமல் மெத்தையில் உருண்டு பக்கவாட்டில் இருந்த மேசையிலிருந்த தன் அலைபேசியை எடுத்தவள் கைகள் அனாயசியமாக கூகிளின் உதவியை நாடியது. சிகிச்சை முறைகள் பற்றிய அவளின் தேடலுக்கு அதுவும் பந்தா செய்யாமல் பதில்களை வாரி இறைத்திருந்தது.

 

‘என்னடா இவ்வளவு லிங்க்ஸ் காட்டுகிறது? இதையெல்லாம் படித்து தெரிந்துகொள்ள லீவு எடுக்கணும் போலிருக்கே!’ என்று மனதிற்குள் முணுமுணுத்தவள் முதல் லிங்கை சொடுக்க, கவனமாக அதில் இருந்தவற்றை படித்தாள். புரிதலை விட சந்தேகங்களே மேலெழும்ப, உடனே கிளம்பிவிட்டாள் இதயனின் வீட்டிற்கு… 

Advertisement

 

Advertisement

இரவு மனதில் குடியேறிய வைராக்கியமும், காலை எழும்பிய சந்தேகங்களுமே அவளை சூழ்ந்திருக்க, அவளின் மனநலம் வேண்டிய தந்தையின் பார்வையும், தம்பியின் கூறுபோடும் பார்வையும் அவளை ஒன்றும் செய்யவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாய் கிளம்பும் மகளைப் பார்த்த கீதாவுக்குமே அவளின் நடவடிக்கையில் சந்தேகம் எழத் துவங்கியது. சில நாட்களாகவே அவளின் வாய்சவடால்களும், சோம்பலும் அடங்கி அமைதியாய் ஏதோ யோசனையிலே இருப்பதும் மனதில் அந்நேரம் நினைவு வர, அதை மறைக்கவெல்லாம் இல்லை உடனே கேட்டுவிட்டார்.

 

“ஏய் இனியா என்ன ஆச்சு உனக்கு? ஏன் அமைதியாக இருக்க? எதுவும் பிரச்சனையா? எதையாவது எங்களிடம் சொல்லத் தயங்கி மறைக்கிறாயா?” என்றதுமே மூவரின் பார்வையும் அச்சுபிசகாது கீதாவிடம் சென்று பின் மற்ற மூவரின் பார்வையும் இனியாவின் மீது படிந்தது.

Advertisement

 

‘இப்போது என்ன செய்யப் போகிறாய்?’ என்பது போல இனியன் புருவம் உயர்த்தி அவளைக் காண, 

 

‘என்னனு இப்போவாவது சொல்லுவாளா?’ என்று தந்தையும் மகளை யோசனையுடன் பார்க்க,

 

தந்தை, தாய் மற்றும் தம்பியின் முகத்தை ஒருமுறை பார்த்தவள் பின் இமைகளை மெல்ல தாழ்த்தி தன் பார்வையை அலைபேசியில் புதைத்திருப்பது போன்ற பாவனையில், “எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்குனு சொன்னால் என்ன செய்வீங்க?” மறைமுகமாக சொல்லியே விட்டாள் பாவை. 

 

இப்படி சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவள் எண்ணவே இல்லை. அன்னை கேள்வி எழுப்பவும் திடீர் என்று வார்த்தைகள் அவளையும் மீறி, அவள் உணரும் முன்னமே வந்துவிட்டது. நீ எந்த முடிவெடுத்தாலும் அது சரியாக இருக்கும் என்று தந்தை கொடுத்த தைரியமா அல்லது தம்பிக்கு தெரிந்துவிட்டதால் அவன் வீட்டில் எப்படியும் சொல்லிவிடுவான் என்ற அவன் மீதான கணிப்போ ஏதோ ஒன்று அவளை இப்படி சொல்ல வைத்தது.  

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“ஏய் என்னடி?” கீதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகள் இப்படியெல்லாம் கேட்பாள் என்று எண்ணியிருக்கவும் இல்லை. எவ்வளவு சுதந்திரம் கொடுத்திருப்பினும் மகள் தனக்கென்று ஒரு துணையை அவளாகவே தேடிக்கொள்ள மாட்டாள் என்பதில் மிகவும் உறுதியாக இருக்க, அவர் எதிர்பாராத ஒன்றை சொல்லியிருந்தாள் இனியா. அவள் யாரை பிடித்திருக்கிறது என்று சொல்கிறாள் என்று தெரிந்தால் இன்னும் என்ன சொல்வாரோ?

 

ஆனால் கீதாவிற்கு நேர்மாறாக இன்முறுவலுடன் மகளை கண்ட ரமேஷ் இதை எதிர்பார்த்திருந்தாரோ என்னவோ…!

 

“நாங்கள் சொல்வது இருக்கட்டும். நீ சொல்லு, உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா?” என்று மகள் போல போட்டு வாங்க முற்படாமல் நேராகவே கேட்டுவிட்டார். இப்படித்தான் நடக்கும் என்று அவர் தான் முன்னரே கணித்திருந்தாரே… 

 

தந்தையின் கேள்வியில் இதயம் வேகமாக அடித்துக் கொண்டாலும், இதயன் மேலிருந்த பிரியம் அவளை உந்தியது. பத்து விரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து, பிரித்து மனதில் இருக்கும் பதட்டத்தை தணித்துக் கொள்ள முற்பட்டு, பின் மெல்ல இமையை மட்டும் மேல் உயர்த்தி,

 

“பிடிச்சிருக்கு… ஆனா… கல்யாணம் செய்யும் அளவுக்கு பிடிச்சிருக்கானு தெரியல…” என்றாள் வார்த்தைகளை மென்று விழுங்கி… ஆழ்மனதில் இருந்தவை எல்லாம் வார்த்தைகளாய் வர…  பிடித்தம் இருக்கிறதா இல்லையா என்று தொங்கிக் கொண்டிருந்தவள் பிடித்தம் உறுதியானதும் அசட்டுத் தைரியத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டாள்.

 

தந்தை மகளின் கேள்வி பதிலில் தலைசுற்றியது கீதாவிற்கு. நிதானமாக இருக்கும் கீதாவை நிதானமிழக்க செய்ய வழக்கம் போல இனியாவால் மட்டுமே முடிந்தது.

 

“என்ன விளையாடுறீங்களா ரெண்டு பேரும்? அவள் என்னவோ எனக்கு ஒருத்தனை பிடிச்சிருந்தா என்ன செய்வீங்கன்னு கேக்குறா நீங்க என்னவோ சாவுகாசமா பிடிச்சிருக்கானு கேட்டுட்டு இருக்கீங்க?” மகளுக்கு விழவேண்டிய வசவுகள் தந்தைக்கு முன்னுரிமை கிடைத்து விழுந்தது.

 

“இரு கீதா… அவளுக்கு யாரையோ பிடிச்சிருக்குனு தானே சொல்கிறாள். என்னனு அமைதியா கேட்போம்.” என்று மனைவியை தன்மையாய் அடக்கியவர் மனக்கண்ணிலோ வேறு கணக்கு. இனியாவின் விருப்பத்தை பற்றி நேரடியாக கேட்டவர் அதையும் கேட்டிருந்தால் பின்னர் வரப்போகும் அதிர்ச்சியையும், விழப்போகும் விரிசலையும் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் மகளை சங்கடப்படுத்த விருப்பமின்றி அவளே வரட்டும் என்றளவில் அவளுக்கு சுதந்திரம் கொடுத்து சற்று ஒதுங்கியதே தவறு என்று அவர் உணரப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

“என்ன அமைதியா இரு? உங்க காலேஜில் நிறைய காதல் ஜோடிகளை பார்த்து பழகி அது பெரிய விஷயமாக தெரியவில்லையோ?” என்று கீதா குரலை உயர்த்த ரமேஷ் கண்கள் இடுங்க, “சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாத கீதா. இனியா மேல உனக்கு இருக்கும் அக்கறைக்கு ஒருபடி மேலேயே எனக்கு இருக்கு. நம்மை மதித்து, நமக்கு மரியாதை தந்து நம்ம பொண்ணு நம்மிடம் ஒரு விஷயம் சொல்லும் போது அது என்னவென்று முதலில் கேட்கணும். அதை விட்டுட்டு தாம்தூம்னு குதிச்சா?”

 

“அப்பா…” அமைதியாக இந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்த இனியன் இனியா புறம் ஒரு முறைப்பை பரிசாக வழங்கிவிட்டு தந்தையை அழைத்தான்.

 

“நீ இதில் தலையிடாதடா. உனக்கு நேரமாகும் நீ கிளம்பு.” 

 

“நான் கிளம்புறேன். ஆனால் அம்மா சொல்வது சரிதான். பாப்பா பாப்பானு நீங்க அவளுக்கு அதிகமா செல்லம் குடுக்குறீங்க. அதையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அவளை ஒழுங்கா விசாரிங்க.” என்றுவிட்டு அவன் எழுந்துகொள்ள, இப்போது முறைப்பது இனியாவின் முறை. விட்டால் அவனே சென்று இதயனிடம் பேசிவிட்டு வந்துவிடுவான். ஆனால் ஏற்கனவே இனியா இழுத்து வைத்திருக்கும் பிரச்சனையை இவனும் இவன் போக்கில் பெரிதுபடுத்தி விடக்கூடாது என்றே இனியாவிடம் பேசியது, இப்போதோ தந்தையை உசுப்புவது.

 

“அதெல்லாம் எனக்கு தெரியும் பெரிய மனிதரே… நீங்க கிளம்புங்க…” என்று ரமேஷ் முறைக்க, அவனுக்குப் புரிந்தது இனி அவனோ, அம்மாவோ சொல்வது அவர் காதிலும் ஏறாது, மூளையிலும் பதியாது. அவர் ஒன்றை மனதில் வைத்து முடிவு செய்துவிட்டால் அதை மாற்றுவது கடினம். இப்போதும் அவர் ஏதோ ஒரு முடிவில் தான் இருக்கிறார் என்று புரிந்தது. மனிதர் சற்று தெளிந்தபின் இனியாவை பற்றி பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு அவன் கல்லூரிக்கு சென்றுவிட்டான்.

 

இங்கு கீதா தன் பேச்சு எடுபடாத கடுப்பில், ரமேஷ்  எப்போது கிளம்புவார் எப்போது இனியாவை காய்ச்சலாம் என்று இனியா அருகிலேயே  அமர்ந்துவிட்டார்.

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“சொல்லு பாப்பா… என்ன செய்யலாம்?”

 

தயக்கத்துடன் தாயின் முகம் பார்த்தவள், எச்சில் கூட்டி விழுங்கி, “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என்க, கீதாவின் கரங்கள் தன்னாலே இனியாவின் காது மடலை பிடித்திருந்தது.

 

“என்ன பேச்சு பேசுற நீ? எங்ககிட்டேயே டைம் கேக்குற… எங்கிருந்து உனக்கு இந்த தைரியம் வந்தது இனியா?” என்று பற்களை கடிக்க, ரமேஷ் அவர் கையை தட்டிவிட்டார்.

 

“என்ன பழக்கம் இது கீதா?”

 

“பின்ன என்ன என்றைக்காவது இவளையோ இனியனையோ அடிச்சிருப்போமோ இல்லை இவங்க கேட்டதை தான் மறுத்திருப்போமா? ஆனா இன்னைக்கு என்ன பேச்சு இதெல்லாம்?”

 

“நீ இப்போ சொன்னியே அதுதான் சரி. நம்ம அவங்க விருப்பத்திற்கு தடை சொல்லவில்லை என்பதால் தான் பாப்பா இதையும் நம்பிக்கையோட நம்மிடம் சொல்கிறாள். மேற்கொண்டு என்ன செய்யணும்னு தான் பார்க்கணும்.” மனைவியை மடக்கியவர் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

 

“அதெல்லாம் என்னால முடியாது. யாரோ ஒருவனை பிடிச்சிருக்குனு சொன்னால் நான் உடனே ஒத்துக்கொள்ளணுமா?”

 

“நேரமாகுது கீதா. பாப்பாவும், நானும் வேலைக்கு போகணும். மாலை இதைப்பற்றி பேசலாம். பாப்பா நீ கிளம்பு,” என்று மகளை முதலில் போகச்சொல்லி சைகை செய்ய, விட்டால் போதுமென்று தன் பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டாள் இனியா.

 

“இப்போ எதற்கு அவளை அனுப்புனீங்க?” கீதா முறைத்துக்கொண்டே கேள்வி எழுப்ப, மகள் சென்றுவிட்டாளா என்று உறுதிபடுத்திக் கொண்டு, “பாப்பா சொல்றவன் அஜயா தான் இருக்கும்,” என்றார் மகிழ்ச்சி கொப்பளிக்க… அவரின் மகிழ்ச்சி கீதாவை தீண்டுவதற்கு மாறாக அதிருப்தியே தோற்றுவித்தது.

 

◆◆◆

 

விட்டால் போதுமென்று வெளியே வந்தவள் தெரு முனையில் தன் வண்டியை நிறுத்தி, ஆழ்ந்த மூச்செடுத்து வெளியேற்றி குதிரைவேகத்தில் ஓடும் இதயத்தை நிதானத்திற்கு கொண்டுவர முயன்றாள்.

 

‘வாயை அடக்காமல் லூசு மாதிரி இப்படி தான் சொல்லுவியா? அதென்ன கல்யாணம் பண்ணும் அளவுக்கு பிடிச்சிருக்கானு தெரியல என்று எந்த தைரியத்தில் உளற? அவ்ளோ தெளிவாக உன் மனசு உனக்கு புரிஞ்சிடுச்சா? என்னவோ அவருடன் பழகினால் தான் உன்னோட எதிர்காலம் குறித்து முடிவெடுக்கலாம்னு யுக்தாவிடம் வீம்பாக பேசிவிட்டு இப்போது என்ன எல்லாம் முடிவான மாதிரி வீட்டில் இப்படி கேட்டிருக்க?’ இதயத்தின் பிடியில் சிக்கியிருந்த மனதை மூளையிலிருந்து ஒருகுரல் கேள்விகளை தொடுத்து மனதை தெளிவிக்க முயன்றது.

 

‘நான் உண்மையை தானே சொன்னேன்?’ என்று மனம் வாதிட்டது.

 

‘என்ன உண்மை? நாளைக்கே அவருக்கு உன்னை பிடிக்கலைன்னு சொன்னால் என்ன செய்வ? அதைவிடு வீட்டில் யாருனு கேட்டால் என்ன சொல்லுவ? இதயன்னு சொன்னால் அப்படியாமானு உடனே வரவேற்று திருமணம் செய்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க,’ யதார்த்தத்தையும் மனமே அலசியது.  

 

‘ச்ச… ஏற்கனவே யுக்தா கூட சண்டை, இப்போ வீட்டில் இப்படி சொல்லியிருக்கேனு அவளுக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் முதலுக்கே மோசமாகிவிடும்.’ 

 

“இனியா என்னாச்சுமா? ஏன் இங்க நிற்கிற? வண்டியில் எதுவும் பிரச்சனையா?” என்ற அருகில் ஒலித்த குரலில் தனக்குள் நடக்கும் விவாதத்தை ஒத்திவைத்தவள் ஒருவித அமைதியின்மையில், “ஒன்னும் இல்லை அங்கிள், நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் சொல்லியபடியே அங்கிருந்து நகர்ந்து இதயன் வீடு நோக்கி சென்றாள்.

 

‘இப்படி நமக்கு பக்கத்து தெருவிலேயே அவரோட வீடு இருப்பதால் தான் நம்ம சீக்கிரமே இனியன்கிட்ட மாட்டிகிட்டோம்.’ என்ற புலம்பலை உருபோட்டுக்கொண்டே அவன் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்தினாள்.

 

“மணியாச்சே இனியா, ஆபீஸ் போகமா இங்க வந்திருக்க?” அலுவலகம் செல்ல தயாராக வெளியில் வந்த இன்பனை கண்டவள் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாள், ‘ச்ச… ஆபீஸ்னு ஒன்று இருப்பதையே மறந்துவிட்டோமே. பழக்கத்தில் வழக்கமா வர இடத்திற்கு வந்துட்டோம். ஏதாவது சொல்லி சமாளிப்போம், மறந்துட்டோம்னு சொன்னா இமேஜ் டேமேஜ் ஆகிடும். ஏற்கனவே வீட்டில் சொதப்பியது போதும். இவங்களையும் குழப்ப வேண்டாம். கொஞ்ச நேரத்திற்கு நமக்குள் எழும் குழப்பத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட வேண்டியதுதான்,’ என்று நினைத்தவள்,

 

“நீங்க கிளம்புங்க. நான் ஆன்டிகிட்ட பேசிட்டு வந்துறேன்,” என்றாள் இன்முறுவலுடன். முன்னர் என்றால் ஏன் இப்படிச் செய்கிறாள் என்று யோசித்திருப்பான் இப்போதோ இயல்பாய் ஏற்றுக்கொண்டு, ஆமோதிப்பதாய் தலையசைத்தவன் இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

 

“சாப்பிட்டு தான் வந்தேன் ஆன்ட்டி.” என்று தான் கேள்வி எழுப்பும் முன்னே பதில் கூறுபவளை கண்ட சிவகாமியின் முகம் பிரகாசமாய் மலர்ந்தது.

 

“இதுதான்டா… நீ வந்தாலே தானா சந்தோசம் வந்து ஒட்டிக்கொள்கிறது.” என்று வாஞ்சையுடன் அவள் கன்னத்தை பிடித்து திருஷ்டி கழித்தவர், அவள் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.

 

உள்ளே நுழைந்தவள் பார்வை தன்னாலே முதல் அறைக்கு சென்றது. அவளின் பார்வை சென்ற திசையை கண்டவர், “இப்போதெல்லாம் இதயன் எங்ககூட ஒன்றாக அமர்ந்து சாப்பிடறான்டா… முன்பெல்லாம் முகத்தை எப்போதும் தூக்கி வைத்துக்கொண்டு விட்டத்தை வெறித்து வெறுமையா பார்த்துட்டு இருப்பான். நேற்று அஜய் தம்பி சொன்னதை கேட்டு மீண்டும் பழையபடி கூட்டுக்குள் ஒடுங்கிவிடுவானோனு நினைத்தோம். ஆனால் எதையோ நினைத்து சந்தோசமா சிரிச்சிட்டு இருக்கான்டா… முகத்திலும் அது வெளிப்பட்டு பார்க்க நல்லாத் தான் இருக்கு… ஆனாலும் இவன் என்ன நினைக்கிறானே எனக்கு புரியல,” என்று சிவகாமி அடுத்த புலம்பலை முன்வைக்க, ‘சிடுமூஞ்சு ஏன் திடீரென்று சிரிச்ச மூஞ்சா மாறிடிச்சி?’ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டவள், “நான் அவரை பார்த்துட்டு வரேன் ஆன்ட்டி.” என்றுவிட்டு அவர் பதிலுக்கெல்லாம் காத்திருக்கவே இல்லை… 

 

இன்முகமாய் இதயன் அறையுள் நுழைந்தவளை வழக்கத்திற்கு மாறாக விரிந்த அதரங்களுடன் வரவேற்றான் இதயன். இவளின் குரல் செவியில் விழுந்த நொடியிலிருந்து இவளின் தரிசனத்தை எதிர்நோக்கியிருக்க புன்னகை தானாக வந்து ஒட்டிக்கொண்டது.

 

“என்ன அதிசயம், சார் ஸ்மைல் பண்ணிட்டு இருக்கீங்க?” தயக்கமின்றி வந்தது வார்த்தைகள்.

 

அவளின் கேள்வியில் அவன் நகை இன்னுமே பெருகியது.

 

“ப்பா… என்ன வெளிச்சம், என்ன பிரகாசம்… வெயிட்… வெய்ட்… ஒரு போட்டோ எடுத்துக்குறேன்,” என்று தன் பையிலிருந்து அலைபேசியை எடுக்க, அவனின் அதரங்கள் சுருங்கி யோசனையுடன் அவளை கண்டான்.

 

“என்ன செய்றா இவனு பார்க்குறீங்களா? உங்களை போட்டோ எடுத்து ஆதாரத்தோட உலக அதிசயம் பட்டியலில் சேர்க்க அப்ளிகேஷன் போடப் போகிறேன்.” என்று அவனின் கேள்விக்கு மொழியும் கொடுத்து பதிலும் அளித்தாள்.

 

அந்த விளக்கத்தை கேட்டவன் அவளை முறைத்து வைக்க, அந்த முறைப்பில் துளியும் கோபமில்லை… 

 

“நாங்க எல்லோரும் அடுத்து என்ன செய்வதுனு தலையை பிச்சிட்டு இருக்கோம்… உங்களுக்கு இதெல்லாம் சிரிப்பா இருக்கு,” என்று பதிலுக்கு அவளும் போலியாக சலித்துக் கொள்வது கூட அவனுக்கு பிடித்திருந்தது. அந்த பிடித்தம் அவன் இதழ்களில் வெளிப்பட,

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

“என்ன சும்மா சிரிச்சிட்டே இருக்கீங்க?” என்று முறுக்கிக்கொண்டு அவன் அருகில் கட்டிலில் அமர்ந்தாள். ஓசையுமின்றி, சைகை மொழியுமின்றி அதரங்களின் அசைவுகள் வழியே மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்கிற சூழலில் அவனால் வேறெதுவும் சொல்லவும் முடியவில்லை, செய்யவும் முடியவில்லை. ஆனால் அவன் மனம் என்னவோ சிறகு இல்லாமல் பறக்கும் நிலை தான். 

 

ஓரிரு நொடி அமைதி காத்தவள் அவனை பார்ப்பதுமாய் பின் ஏதோ யோசிப்பதுமாய் மேலும் சில நொடிகளை கடத்த, அவனுக்குத் தான் தொல்லையாகிப் போனது. என்னவென்று கேட்க அவன் மனம் விழைந்தாலும், வாய் பரபரத்தாலும் உடல் ஒத்துழைக்கவில்லை.

 

“உங்களை நம்பி நான் என் வீட்டில் ஒரு விஷயம் சொல்லிட்டு வந்திருக்கேன். எல்லாம் சரியானதும் அதற்கு நீங்க ஓகே சொல்லணும் நியாபகம் வச்சிக்கோங்க.” என்க, அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதை சரியாக கணித்தவள் அவனிடம் தெளிவுப்படுத்தவும் விரும்பவில்லை. ஏதோ அவன் எதிர்பேச்சு பேசாததால் இவ்வளவு பேசுகிறாள். இல்லையென்றால் யாரிடமும் சுலபமாக பழகிவிட மாட்டாள். இதயனும் அவன் குடும்பம் மட்டுமே அதில் விதிவிலக்காய் இருக்க… அவளின் அந்த குணத்தினாலோ என்னவோ அவள் தந்தையும் வேறொன்றை மனதில் வைத்து மகளின் எதிர்காலம் குறித்து கனவுக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். இங்கு மகளோ தன் எதிர்காலத்தை வளமையாக்க உறவுகளை வளர்த்துக் கொண்டிருந்தாள்.

 

“எதற்கு ஓகே சொல்லணும்னு என் பையனை மிரட்டிட்டு இருக்கடா?”

 

நாக்கை கடித்துக்கொண்டவள், “சும்மா பேசிட்டு இருந்தேன் ஆன்ட்டி,” என்று சிவகாமியிடம் திடமாய் சொல்ல, வடிவேலு மாடுலேஷனில் இதயனுக்கு கேட்டுவிட்டது போல… அவன் இதழ் விரிந்து வெண்பற்கள் வரிசைகட்டி பளபளப்பாய் ஒளிரும்படியாய் பெருநகை ஒன்றை சிந்த, அவனின் மரத்த கையில் லேசாக அடிபோட்டாள் இனியா.

 

“பாருங்க ஆன்ட்டி எது சொன்னாலும் இவங்களுக்கு கிண்டலாக தெரியுது போலிருக்கு… ஈனு பல்லை காட்டி சிரிச்சிட்டு இருக்காங்க.” என்று குறை படித்தாள் அவள். அதற்கும் தலையை சிலுப்பி மனம்கொள்ளா உற்சாகத்துடன் இதழ் கடித்து வசீகரிக்கும் புன்னகையையே உதிர்த்தான்.

 

அவனின் அந்த பிரத்யேக வசீகரத்தில் வசியப்பட்டு மனதில் தோன்றியவற்றை இடம் ஏவல் பார்க்காமல் அப்படியே வெளிப்படுத்தினாள், “நீங்க சிரித்த முகமாய் இருந்தால் அழகா இருக்கீங்க. இப்படியே இருங்க,” என்று அவன் கண் பார்த்து சொல்ல, அவனும் சம்மதமாய் தலையை இடமும் வலமும் ஆட்டி கண்சிமிட்டினான்.

 

இவர்களின் இந்த சிறிய பரிமாறல்களை கண்டதும் சிவகாமிக்கு ஏதோ புரிவது போல இருந்தது. தொடர்ந்து வந்த இனியாவின் வார்த்தைகளில் ஏறத்தாழ அதை உறுதியே செய்துவிட்டார் அவர்.

 

“இந்தா இந்த ஜூசை குடி இனியா. இதை கொடுக்கத் தான் வந்தேன்.  ஆனால் நீ பேசி அவன் சிரித்த அழகில் உங்க வாய் பார்த்துட்டு நின்றுவிட்டேன்.” என்று அவள் கையில் ஒரு தம்ளரை திணிக்க, “இப்போது தான் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வந்தேன் ஆன்ட்டி… வேண்டாமே.” என்று சிணுங்கினாள் பதிலுக்கு.

 

“அதெல்லாம் முடியாது. அதென்ன வீட்டுக்கு வந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாம போறது? குடி.”

 

“அதெல்லாம் விருந்தாளியாக வந்தால் சரி, ஆனால் எனக்கு எதற்கு இந்த சிறப்பு கவனிப்பெல்லாம்? எனக்கு தேவையென்றால் நானே கேட்க மாட்டேனா? இதை அவருக்கு கொடுங்க… எப்போதும் உர்னு இருப்பவர் வாயெல்லாம் இன்றைக்கு சிரித்தே வலி வந்திருக்கும்.” என்று மறைமுகமாக அவளின் உரிமையை நிலைநாட்டியவள் அவனையும் கேலி செய்ய தவறவில்லை.

 

அவளின் பதிலுக்கு மனதில் சபாஷ் போட்டுக்கொண்டவர் அவள் பேச்சை தட்டாது அந்த தம்ளரை மேசையில் வைத்துவிட்டு இதயன் தலையை தன் மடியில் ஏந்திக் கொண்டார். இனியா எழுந்து அதை தன் வசப்படுத்தி, இதயனின் தாடையை பிடித்துக் கொண்டு மெல்ல அதை அவன் இதழ்களுக்கு இடையில் சாய்த்தாள். சிவகாமி அதை நிறைவோடு பார்த்துக் கொண்டிருக்க, இவள் இப்படிச் செய்வாள் என்று எதிர்பாராத இதயன் விரிந்த விழிகளுடன் தனக்கு வெகு அருகில் தெரிந்தவளை கண் இமைக்காமல் தனக்குள்ளே அவளின் பிம்பத்தை பதித்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன வேடிக்கை ம்? முழுங்குங்க…” அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை அவள் ஒரு அதட்டல் போட, அவனும் சிறிது சிறிதாய் பருகினான்.

 

அந்த தம்ளர் காலியானதும் வெகு இயல்பாய் தன் ஸ்டோல் கொண்டு அவன் தாடையை துடைத்துவிட்டாள். முன்பைவிட வெகு நெருக்கமாய் அவள் முகம் விழிகளில் விழ, அவன் இதயம் தடதடப்பதெல்லாம் அவனால் உணர முடியவில்லை. ஆனால் அவன் நாசி, அவளின் நறுமணத்தை நன்கு உள் இழுத்துக்கொண்டது. அவன் விழிகளோ முதன்முதலாய் அவளின் புறத்தோற்றத்தை தாய்க்கு தெரியாமல் அவசர அவசரமாய் கவனித்து நினைவு அடுக்குகளில் சேகரித்துக் கொண்டது.

 

எளிமையுமின்றி, பந்தாவுதுன்றி மிதமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு குர்த்தி, அதற்கேற்ற ஒரு ஜீன்ஸ், கழுத்தை சுற்றி ஒரு ஸ்டோல். கிளிப்பிற்குள் அடங்கிய கருந்தோகை, திருத்தப்பட்ட புருவங்களுக்கு இடையில் சிறு பொட்டு, அதற்கு கீழ் இருபக்கமும் வெண்மைக்குள் உணர்வுகளுக்கு ஏற்றவாறு நயனமாடும் கருத்த உருண்டைகள், சற்று உள்ளடங்கிய மூக்கு அதற்கு கீழே விழிகள் இறங்கியதும் மூளையில் அபாயமணி ஒலிக்க சுதாரித்து பார்வையை உயர்த்தினான் இதயன். 

 

“என்ன ஸ்கேன் பண்ணியாச்சா?” என்ற அவளின் திடீர் கேள்வியில் வியர்வை அரும்புகள் அவன் நெற்றியில் ஊர்வலம் நடத்தின. விழிகளில் பதற்றம் வந்து ஒட்டிக்கொள்ள, பார்வை அவளைத் தவிர்த்து  நாலாபுறமும் சூழன்றன.

 

“ஆன்ட்டி ஏசி போட்டுவிடவா உங்க மகனுக்கு வியர்த்து ஊத்துது.” அவள் குரலில் வெளிப்பட்ட கேலியை எதிர்கொள்ள முடியாது படக்கென்று கண்களை மூடிக்கொண்டான். இருப்பினும் மூடிய இமைகளுக்குள் அமைதியின்றி அவனின் கருவிழிகளில் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. வசமாய் சிக்கிக்கொண்டதில் அவன் மனம் அமைதியடைவே இல்லை. ஏதோ பதின்பருவத்தில் வேண்டாதவற்றை செய்து சிக்கிக்கொண்டது போல் படபடத்துக் கொண்டிருந்தது அவனின் இதயம்.

 

“அதுதானே… இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்த… இப்போது என்ன ஆச்சுடா?” என்று சிவகாமி பதறி அவன் நெற்றியை துடைக்க, நமட்டு சிரிப்புடன் இனியா ஏசியை போட்டுவிட்டாள். 

 

எங்கே அவனுக்கு தன்னை பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது. இனி அவனை சரி செய்து வீட்டினர் முன் நிறுத்துவிட்டால் போதும்… எல்லாம் சுபமாக நடக்கும். தந்தை தான் ஏற்கனவே இவள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரியாக இருக்கும் என்று அச்சில் எழுதிக் கொடுக்காத குறையாக சொல்லிவிட்டாரே… அதனால் எப்படியும் அவர் இதற்கு சம்மதித்து விடுவார், அவரே அன்னையையும் சம்மதிக்க வைத்துவிடுவார்… இவர்கள் இருவரும் சரியென்றுவிட்டால் இனியனால் ஒன்றும் செய்ய முடியாது. பின்னர் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தான் என்று அவள் உள்ளம் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க…  

 

நடப்பவற்றையோ, நடக்கப்போவதையோ யாராலும் மாற்ற முடியாது. பிடித்தாலும் சரி… பிடிக்காவிட்டாலும் சரி… 

 

*^*^*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!