Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 26

கள்வன் – 26

 

“தூங்கிட்டான்… வா நாம் வெளியில் போய் பேசலாம்,” தன் மடியில் கண்மூடி படித்திருப்பவனை காட்டி சிவகாமி சொல்ல, ஓசையின்றி நகைத்தவள், “ஆமா ஆமா… நல்ல்லா தூங்கிட்டாங்க…” என்று அழுத்திச் சொல்லி எழுந்துகொள்ள, புரியவேண்டியவனுக்கு புரிந்தது. விரியத் துடிக்கும் அதரங்களையும், இமைகளுக்குள் விளையாட முயலும் கருவிழிகளையும் அடக்கி அமரவைக்கவே சிரமமாய்ப் போனது அவனுக்கு.

 



Advertisement

சிவகாமி அதிர்வின்றி மென்மையாய் இதயனின் தலையை தலையணையில் வைத்தவர் போர்வையை கழுத்துவரை இழுத்து போர்த்திவிட்டு வெளியேற, பின்னேயே தேங்கி நின்றுகொண்டாள் இனியா. ஓரிரு நொடிகள் கழித்து இவர்கள் சென்றுவிட்டார்கள் என்றெண்ணி இமைகளை மெல்ல கள்ளத்தனத்துடன் பிரித்த இதயனின் பார்வையில் திடீரென தோன்றி அவனைப் பார்த்து கண்ணடித்துவிட்டு சிட்டாய் பறந்தாள் இனியா.

 

தன் அசட்டையை உணர்ந்து மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டவன், கண்களை மீண்டும் இறுக மூடிக்கொள்ள, எவ்வளவு முயன்றும் வதனத்தில் படரும் வெட்கத்தை தவிர்க்க முடியவில்லை. இருந்தும் இதழ்களை கடித்து அதில் படர்ந்திருந்த வெட்கச் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றவன் தலையை மறுபுறம் திருப்பிக்கொண்டான்.

Advertisement

 

Advertisement

கதவின் அருகே ஒளிந்து நின்று இந்த கூத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இனியா அந்த நேரம் மீண்டும் உள்ளே ஓடிவந்து, “நீங்க வெட்கப்படும் போதுகூட அழகா தான் இருக்கீங்க,” என்று அவன் செவிகளில் மொழிந்துவிட்டு சன்னச் சிரிப்புடன் வெளியே ஓடியேவிட்டாள். அவன் எதிர்மொழி பேசியிருந்தால் இப்படியெல்லாம் அவனை கேலி செய்வாளா என்பதெல்லாம் ஐயமே… உரையாடலும், பரிமாற்றங்களும் ஒரு வழிப்பாதையாய் இருக்க, அவனுடன் பழகுவது எளிதாகிப்போனது. ஒருவேளை அவன் நல்ல நிலையில் இருந்திருந்தால் அவனை ஏறெடுத்தும் பார்த்திருப்பாள் என்பது சந்தேகமே…

 

இந்த அனுபவம் இருவருக்குமே புதிதாய் இருக்க, இருவருமே சொல்லனா உணர்ச்சிப் பிடியில் சிக்கி தங்களின் இயல்பையும் மீறி ஒருவித பரவசத்தில் திளைத்திருந்தனர். 

Advertisement

 

மையல் இருவரையுமே சூழ்ந்துகொள்ள… மேனி சிலிர்த்து… உள்ளம் நெகிழ்ந்து… இதயம் இரண்டும் ஒன்றாகிவிட… இதயனின் இயலாமை எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை… 

 

அவள் சென்ற திசையையே மலர்ச்சியுடன் ரசித்துக் கொண்டிருந்தவன் ரசனை எல்லாம் அவளின் அருகாமையையே வேண்டியது. அதற்கேற்றாற் போல் அவளது சுகந்தம் அவ்வறையில் வீசிக் கொண்டிருக்க, மருந்துகள் வெளியிடும் வாடையையும் மீறி அந்த ஏகாந்தத்தில் அவளின் மணம் அவன் மனம் முழுதும் நிறைந்திருந்தது.

 

மேனியெங்கும் பரவசம் பரவி மிளிர்வுடன் இதயன் அறையிலிருந்து வந்தவளை குறுநகையுடன் எதிர்கொண்ட சிவகாமி, “முடிச்சாச்சா?” என்றார் வெளிப்படத் துடிக்கும் பெருநகையை அடக்கி.

 

சிறகின்றி பறந்து கொண்டிருக்கும் மனதிற்கு இடைவெளி விட்டு கீழ் இறங்கியவள், புருவங்கள் முடிச்சிட, “என்ன கேட்கிறீங்க ஆன்ட்டி? புரியல,” என்று வினவ,

 

“விளையாடி முடிச்சிட்டீங்கனா உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்று சொல்லணும், அதுதான் கேட்டேன்.” என்ற அவரின் பதிலில் கூச்சம் வந்து ஒட்டிக்கொண்டது பெண்வளிடம்.

 

‘ச்ச… இன்றைக்கு உனக்கு நேரமே சரி இல்லைடி இனியா. கொஞ்சம் அடக்கியே வாசி.’ மனம் கடிந்துகொள்ள, இதழ்களை இழுத்து பிடித்து நிறுத்தி அசட்டு சிரிப்பை உதிர்க்க,

 

“சும்மா விளையாடிட்டு இருந்தோம் ஆன்ட்டி, அதுதானே சொல்லப்போற?” என்று அவள் சொல்லப்போகும் பதிலை யூகித்து சிவகாமி கேலியில் இறங்க, மாட்டிக்கொண்ட பதட்டத்தில் சொல்வதறியாது கையை பிசைந்து நின்றாள். அவளின் இன்ப அவஸ்தையை கணித்து, அவளின் மெளனத்தை விரும்பாதவர் கிண்டலை கைவிட்டு இயல்பாய் பேச்சை துவங்கினார்.

 

“கல்யாண பட்டு எடுக்க நாளைக்கு நல்ல நாளாக இருக்குனு யுக்தா வீட்டிலிருந்து தகவல் வந்துச்சு இனியா. நானும் நாள் பார்த்தேன் நல்லாயிருக்கு. நாளை காலை பத்து மணிக்கு மேல் உன்னால் வரமுடியுமானு சொன்னால் அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிவிடலாம். நம்ம வழக்கப்படி நாம் தான் பொண்ணுக்கு பட்டு எடுக்கணும். இன்பனுக்கும் எடுக்கணும்.”

 

“நானா? நான் எதற்கு ஆன்ட்டி? நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க.” இதுவரை இவள் செய்தது, முடிவெடுத்தது எல்லாம் இவர்கள் குடும்பம்… குறிப்பாக இதயன் மட்டுமே சம்மந்தப்பட்டது. இன்பனின் திருமணம் என்று வரும்போது இவர்களுடைய சொந்தங்களும் யுக்தாவின் குடும்பமும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களும் அல்லவா அங்கு வருவார்கள். பிரென்ட் என்ற முறையை வைத்துக்கொண்டு இவர்களுடன் அங்கு செல்வது முறையாய் இருக்காதே… கேள்விகள் எழுமே… என்னவென்று பதில் சொல்லுவாள்… என்று இனியா தயங்க, அவள் வார்த்தைகளை வைத்தே அவளை மடக்கினார் சிவகாமி.

 

“இப்போது தானே கொஞ்சம் நேரம் முன்னால் நான் என்ன வெளியாளானு கேட்ட? பின் இப்போது இது என்ன கேள்வி?” அவள் தயக்கத்தின் பின் இருக்கும் காரணத்தை கணித்தவர், இந்த குடும்பத்தின் மீது உனக்கும் உரிமை இருக்கிறது என்பதை குறிப்பாய் உணர்த்த முயன்றார்.

 

“அதில்லை ஆன்ட்டி…” மனம் ஒப்பாமல் இழுக்க,

 

“அதெல்லாம் இருக்கு. நீ தான் முன்னே நின்று எல்லாம் செய்யணும். இங்கே இப்போது நானும் இன்பனும் தான் எல்லாம்… இன்பனோட அத்தை, மாமா, சித்தப்பா, சித்தினு எல்லோரையும் திருமணத்திற்கு தான் அழைக்கப் போகிறோம். அவங்க எல்லாம் முன்னரே வந்து எல்லா சடங்குகளிலும் கலந்து கொண்டால் இதயனை பற்றிய பேச்சு தான் அவலாய் அவங்க வாயில் மெல்லுப்படும். அவங்களும் இதயனுக்கு இப்படி ஆனப்பிறகு உறவை குறுக்கிக் கொண்டனர். அதற்கேற்றாற் போல் தான் நாமும் நடந்துகொள்ளணும். இப்போது தான் இதயனே  தெளிஞ்சிருக்கான். திரும்ப அவன் மனம் நோகும்படி எதுவும் நடந்துவிடக் கூடாதுனு இன்பன் உறுதியாக இருக்கான். எனக்கும் அதுதான் சரினு தோணுது.” குடும்ப விவரங்கள் சாதாரணமாய் பேச்சோடு பேச்சாய் பகிரப்பட, அப்போதும் நெருடலாய் உணர்ந்தாள் இனியா. தனித்து இதயனுக்கு செய்வது வேறு. உறவுகள் சூழ்ந்திருக்க இன்பன் திருமணத்திற்கு முன்னின்று செய்வதென்பது அவளுக்கே அதிகப்படியாய் தான் தோன்றியது. எந்த உரிமையில் அவள் முன் நிற்பாள்?

 

“இன்னும் என்ன யோசனை இனியா? எனக்கு ஒரு பொண்ணோ இல்லை மூத்த மருமகளோ இருந்திருந்தால் அவள் தானே எல்லாம் முன்னின்று செய்திருப்பாள்.” என்று மடக்கிப் பேச இனியாவிற்கு மறுக்க காரணமின்றி போயிற்று. தன்னிச்சையாய் தலை சம்மதமாய் அசைய, இப்போது என்னை அவருடைய பெண் என்று கூறுகிறாரா? இல்லை அவருடைய மருமகள் என்று கூறுகிறாரா? என்ற விடையறியா சந்தேகம் ஒன்று மனதில் தொக்கி நின்றாலும் அதை கேட்க நா எழவில்லை.

 

“அப்போது நாளைக்கு போகலாம்னு சொல்லிவிடவா?” உறுதியாய் கேட்க,

 

“போகலாம் ஆன்ட்டி.” என்று அவள் வாய் மொழியாய் சொன்னதும் தான் அந்த பேச்சையே விட்டார்.

 

சிறிது தயங்கியவள், சில நொடிகள் அவகாசம் விட்டு, “நான் ஒன்று கேட்பேன். நீங்க தப்பாக நினைக்கக் கூடாது ஆன்ட்டி,” என்று பீடிகை வைத்து பேச்சை துவக்கிய இனியா அவரின் சைகை மொழி பதில் தந்த உந்துதலில், “முதலிலேயே கேட்கணும்னு நினைத்தேன். இப்போது தான் நியாபகம் வருது. நீங்க ஏன் ஆன்ட்டி உங்க மூத்த மகனை நிச்சயதார்த்ததிற்கு அழைத்து வரவில்லை?” 

 

கேள்வி செவியை எட்டியதுமே குடிகொண்டிருந்த இலகுத்தன்மை விலகி, அதிருப்தி புகுந்துகொள்ள, பெருமூச்சு வெளியேற்றியவர் முகம் எல்லாம் சுருங்க, “எனக்கும் ஆசைத் தான் அவனை கூட்டிட்டுப் போகணும்னு. இருப்பது ரெண்டே பசங்க. அவங்க ஒன்னுக்குள்ள ஒன்னா எல்லா விழாவிலும் சேர்ந்திருக்கணும்னு நான் விருப்பப்பட்டால் மட்டும் போதுமா இனியா? அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கனும். இப்போதாவது அவன் சிறிது நேரம் நாற்காலியில் அமரவைத்தால் அமர்கிறான். முன்பெல்லாம் கண்ணை மூடினால் திறக்கக்கூட மாட்டான். பிடிவாதம் அதிகம். எங்களுக்குமே இப்போது இருக்கும் நம்பிக்கையும், தைரியமும் அப்போது இல்லைடா. எங்கே அங்கு அழைத்து வந்தால் எல்லோரும் துக்கம் விசாரிப்பாங்க, பெண் வீட்டில் எதுவும் அபசகுனமாக நினைக்கலாம்…”

 

“என்ன அபசகுனம்?” என்று குறுக்கிட்டாள் இனியா.

 

“பெண்களுக்கு மட்டுமில்லை, நலிந்து சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இல்லாத ஆண்களுக்கும் மதிப்பு கிடையாது. இவனோ இப்படி இருக்கையில் இவனை முன்னிறுத்தி எதுவும் செய்யமுடியாத நிலை. ஏற்கனவே இந்த பேச்சையெல்லாம் ஆரம்பத்தில் கேட்டு தான் அவனை அதிகம் வெளியிலே அழைத்துச் செல்லவதில்லை.”

 

“இனி அப்படி இருக்கத் தேவையில்லை ஆன்ட்டி.” இனி அப்படி இருக்கக்கூடாது என்று கட்டளையிட முடியாத காரணத்தால் இப்படி கூறியவள் மேலும் தொடர்ந்தாள்.

 

“மற்ற விழாக்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்த வாய்ப்பிருக்கிறது ஆன்ட்டி. ஆனால் இது உங்கள் வீட்டு விசேஷம்… உங்களை மீறி யார் என்ன சொல்லிவிட முடியும்? சொல்லத்தான் இடம் கொடுத்து விடுவீர்களா? தம்பி திருமணத்தின் ஒவ்வொரு விழாவிலும் பங்கெடுக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கும் இருக்கும் அல்லவா… இப்படி நீங்களே சுற்றத்தாருக்கு பயந்து அவரை இந்த திருமண விசேஷங்களில் இருந்து தள்ளிவைத்தால் நாளை எப்படி மற்றவர்களோ இல்லை யுக்தா வீட்டிலோ அவரை ஒரு பொருட்டாக மதித்து இந்த வீட்டில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணருவார்கள்? பெற்ற தாயும், உடன்பிறந்தவருமே அவரை முன்னிறுத்தாமல் விட்டால் இரத்த சொந்தத்திற்கே அவர் ஒரு பொருட்டில்லை நமக்கு எதற்கு வீண் சுமை என்று அவரை ஓரங்கட்டத்தானே நினைப்பார்கள்?” இவர்கள் இடம் கொடுத்ததால் தான் யுக்தாவின் அம்மா நிச்சயத்தன்று இதயனை கழட்டிவிடுவதை பற்றி பேசினார் என்பதில் அவளுக்கு வருத்தமே. அன்றிலிருந்து இந்தக் கேள்வியை கேட்டுவிட வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவள் இன்று அதற்கான நேரமும், உரிமையும் கிட்டவும் கேட்டுவிட்டாள். 

 

அவள் கூற்றின் சாராம்சத்தை மெச்சிக் கொண்டவர், “நீ சொல்றது ரொம்பவே சரிதான். இன்பன் நிச்சய படங்களை ஆர்வமாய் பார்த்தான். அவனுக்கும் ஆசை இருந்திருக்கும்ல… ஆனால் நான் இருந்த நிலைமையில் இதெல்லாம் யோசிக்கவில்லை இனியா. எனக்கு தோன்றவும் இல்லை. இன்பனுக்கும் இவ்வளவு தூரம் யோசிக்கத் தெரியாது. ஏதோ இதயன் வெளியே வர விருப்பப்படவில்லை என்று தெரிந்ததும் நாங்களும் அவன் விருப்பிற்கு விட்டுவிட்டோம். எதற்கு அவனும் சஞ்சலப்பட்டு நாங்களும் நிம்மதியிழக்க வேண்டும் என்று விட்டுட்டோம்.”

 

“நல்லா விட்டீங்க… நீங்கள் கொடுக்கும் இடம் தான் அவர் முறுக்கிக்கிட்டு இருக்காரு. ரெண்டு அதட்டல் போட்டு கிளப்பி தூக்கி உட்கார வைத்து கூட்டிட்டு போனால் என்ன செய்ய முடியும்? வாயை மூடிட்டு வந்திருப்பார்.” இனியா உரிமையாய் அலட்ட,

 

“அதுதான் அதட்ட நீ வந்துட்டியே. இனி அவன் கேட்பான்… கேட்டுத் தானே ஆகணும்.” என்று சிவகாமியும் சலுகையாய் சொல்ல இனியா அதை காதில் வாங்காதது போல் காட்டிக்கொண்டு, “அப்போ நான் கிளம்புறேன் ஆன்ட்டி. ஆபீஸ்க்கு நேரம் ஆகுது.”

 

“பார்த்து போ… மணியாகிவிட்டதுனு வேகமா போகாத.” என்ற அறிவுரையையும் சேர்த்தே எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் இனியா. தன் வீட்டில் கிளம்பியதற்கு மாறாய் இங்கிருந்து நிறைவான மனதுடன் அலுவலகம் புறப்பட்டாள்.

 

ஒருமணி நேரம் தாமதமாக அலுவலகம் வந்திருந்தாலும் எவ்வித பதட்டமுமின்றி லிப்ட்டில் ஏறி அங்கு ஏற்கனவே நின்றிருந்த ஹச்.ஆரிடம் சில பல பொய்களை அவிழுத்துவிட,

 

“நல்லாவே சமாளிக்கிறீங்க இனியா.” என்று அவர் பதிலுக்கு மூக்குடைக்க, மனதிற்குள் மீண்டும் ஒருமுறை அந்த நாளை எண்ணி நொந்துகொண்டாள்.

 

“நம்ம கொச்சி அலுவலக கிளையில் யாரோ மாற்றலுக்கு கேட்டிருக்காங்க. உங்க டீமில் யாராவது அங்கு செல்ல விருப்பப்பட்டால் டீடெயில்ஸ் குடுங்க… இன்றைக்கு அதைப் பற்றிய மெயிலை டீம் லீட்க்கு பார்வேர்ட் பண்ணிவிடுறேன்.” என்ற ஹச்.ஆரின் தகவலை நமக்கு தேவையில்லாதது என்று அலட்சியமாக காதில் வாங்கி வெளியே காற்றில் பறக்கவிட்டவள், லிப்ட் அவளின் தளத்தை அடைந்ததும் தப்பித்தோம் என்று தன் இடம் நோக்கி விரைந்துவிட்டாள்.

 

நிம்மதி பெருமூச்சுடன் தன் மானிட்டரை உயிர்பித்தவள், அன்றாட பழக்கத்தில் தன் இடப்புறம் திரும்பி,

 

“யுக்தா…” என்று தோழியை அழைத்த பின்பே அவளிடம் நேற்று சண்டையிட்டது எல்லாம் நினைவு வந்தது. 

 

‘ஷிட்… காலையில் இருந்து எல்லாமே சொதப்பலாகவே நடக்குதே…’ என்று மனது குட்டிக்கொள்ள, இவளின் அழைப்பில் ஏற்கனவே திரும்பியிருந்த யுக்தா முகத்தில் எவ்வித உணர்வுமின்றி,

 

“உனக்கு  என்னிடம் பேச விருப்பம் இல்லாமல் இருக்கலாம். நானும் நீ ஏன் லேட், எங்கே போன என்றெல்லாம் கேட்டு என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நேராக விஷயத்திற்கே வருகிறேன், கொச்சி ஆபீசில் ரீப்பிலேஸ்மென்ட் கேட்டிருந்தார்கள். நம் டீமிலிருந்து உன்னுடைய பெயரை பரிந்துரைத்து ஹெட்க்கு அனுப்பியிருக்கிறோம். எதற்கும் தயாராய் இரு.” என்றுவிட்டு திரும்பிவிட, இனியாவின் மனம் உலக்கலமாய் கொதிக்கத் துவங்கியது.

 

“என் அனுமதி இல்லாமல் என் பெயரை எப்படி ரெஃபர் பண்ணுவீங்க? என்னிடம் ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. ஹச்.ஆர் இனி தான் மெயில் அனுப்புவேன்னு சொன்னாங்க. நீங்க எப்படி முன்னாடியே என் பெயரை அனுப்புனீங்க?” என்று கொதித்தவள் மனதில் பொறித்தட்ட சற்று நிதானித்தவள் கண்கள் இடுங்க, “இதெல்லாம் உன் வேலை தானே யுக்தா? தேவையில்லாமல் நீ ஏன் திரும்பத் திரும்ப என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாய்? உன்னோட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு என்னால் வாழமுடியாது யுக்தா. முதலும், கடைசியுமாக சொல்கிறேன்… என்னுடைய விஷயங்களில் குறுக்கே வராதே…” என்று பொரிந்தவள் அதே குமுறலோடு அவர்களின் லீடை பார்க்கச் சென்றாள்.

 

மனம் முழுதும் இதயனை பிரிய நேரிடுமோ என்ற அச்சம் பல்கிப் பெருகி மண்டிக்கிடக்க, அந்தக் கலக்கம் அவளின் வார்த்தைகளிலும், வதனத்திலும் நன்றாகவே வெளிப்பட்டது. அதை எதிர்பார்த்து தான் யுக்தா காத்திருந்தாலோ என்னவோ அவள் முகத்தில் வெற்றிக்கான நிம்மதி நிரம்பியிருந்தது.

 

“என்னைக் கேட்காமல் என் பெயரை எப்படி ஃபைனல் செய்து அனுப்புவீங்க? இது தான் உங்கள் கார்ப்பரேட் சட்டமா?” தோழியிடம் பேசியபோது இருந்த அதே சூடு கொஞ்சமும் குறையாமல் அனலடித்தது.

 

“இது நான் மட்டும் எடுத்த முடிவில்லை இனியா. நம் டீம்மேட்ஸ் எல்லோரும் கலந்து பேசி ஒருமனதாய் எடுத்தது.” அலட்சியமாய் வந்தது அந்த டீம்லீட்டின் பதில். 

 

“நான் இல்லாத போது முடிவெடுத்துவிட்டு எல்லோரும் கலந்து எடுத்த முடிவுனு எப்படி சொல்வீங்க?” சீற்றம் குறையாமல் வந்த அவளது குற்றச்சாட்டு அவளின் ஆதங்கத்தை வெளிப்படுத்த… நாம் எதிர்பார்ப்பது எல்லாம் நடந்துவிடுவது இல்லையே.

 

“அதற்கு நான் பொறுப்பல்ல இனியா. தாமதமாக வந்தது நீங்க. அதுவும் எந்த ஒரு முன்அனுமதியும் பெறாமல் உங்க விருப்பத்திற்கு ஆபீஸ் வந்திருப்பதற்கே உங்கள் மேல் கம்ளைண்ட் செய்ய வேண்டும் இனியா.” அலட்சியம் ஓடி, வார்த்தைகளில் கடினம் குடிகொள்ள, அவளுள்ளும் கடினம் ஏறியது.

 

“செய்யுங்களேன்… யார் வேண்டாம் என்றது? நானும் பதிலுக்கு என்னை ஆலோசிக்காமல் என் மாற்றல் சம்மந்தப்பட்ட முடிவை எடுத்துவிட்டீர்கள் என்று நானும் உங்கள் மேல் புகார் கொடுப்பேன்.” 

 

“லுக்… இங்கு மேலிடம் என்ன சொல்கிறார்களோ அதுதான். நானோ, நீயோ எதுவும் செய்ய முடியாது. இப்போது போய் உன் பெயரை நீக்கச்சொன்னால் அது உன்னுடைய அப்ரைசலை பாதிக்கும். இது சம்மந்தமாக வேறு எது கேட்க வேண்டுமென்றாலும் யுக்தாவை கேள். அவங்க தான் உனக்காக மெனக்கெட்டு இதை செய்திருக்காங்க. இது ஒரு புது அனுபவமா இருக்கும். நீயே பின்னால் இதற்காக யுக்தாவிற்கு நன்றி சொல்லுவ இனியா,” என்றதோடு லீட் இறங்கிவந்து நிறுத்திக்கொள்ள, யுக்தாவின் மேல் கட்டுக்கடங்கா கோபம் கொப்பளித்தது. 

 

கடுகடுவென லீடை பார்த்துவிட்டு எதுவும் செய்யமுடியாமல் வந்த இனியாவின் பாவனையில் யுக்தாவிற்கு மகிழ்ச்சியே… இனியாவுடன் சண்டை என்பதற்காக அவளை அப்படியேவிட மனமின்றி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் வந்தது இந்த கொச்சி ஆஃபர். இவள் டீமிலிருந்து இவளைத் தான் முதலில் கேட்டார்கள், திருமணம் நெருங்குகையில் இவள் இடம் மாறுவதை விட இனியா அங்கு சென்றால் இது ஒரு முக்கிய திருப்பமாக அமையும். நினைத்த நேரத்திற்கு இதயனை சந்திக்க முடியாது. அவனை மறந்து இந்த காதலை எல்லாம் தூக்கிப் போட்டுவிடுவாள். வாழ்க்கையில் இன்னுமே தெளிவு கிடைக்கும் என்றெண்ணி இனியாவின் பெயரை இவள் தான் முன்வைத்தாள். இனியாவிடம் ஒருமுறை கேட்டுவிட்டு மேலிடத்திற்கு அனுப்பலாம் என்ற டீம் லீடையும் அப்படி இப்படி என்று ஏதேதோ பேசி மேலிடம் வரை கொண்டு சென்றுவிட்டாள். இனி இதுபோன்று மற்ற டீம்களில் இருந்து எவரும் விருப்பு தெரிவிக்கவில்லை என்றால் இனியா கொச்சி செல்வது நிச்சயம்… என்ற மகிழ்வில் யுக்தாவின் மனம் தெளிவாகிவிட, பிரிவை எண்ணி இனியாவின் மனம் ஒருபுறம் விம்மலோடும், மறுபுறம் யுக்தா மீது சினம் கொண்டு அனலாகவும் தகித்துக் கொண்டிருந்தது.

 

*^*^*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!