Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே 27-1

கள்வன் – 27

 

அந்தி நேரம் நெருங்க, வேலை முடிந்து அந்த நாளின் சோர்வையும் மீறிய களிப்பு வெளிப்படையாக அங்கிருந்த அனைவர் முகத்திலும் தெரிய, இருவர் மட்டும் உர்ரென்று முகத்தை வைத்திருந்தவர்கள் இனியாவையும், யுக்தாவையும் தவிர வேறு யாராக இருக்க முடியும்? 

 



Advertisement

யுக்தா குழப்பிய குட்டையில் இனியா கலங்கி, கனன்று கொண்டிருக்க, இரு தினங்கள் கழித்துக் கிடைத்த இன்பனின் தரிசனத்தில் யுக்தா கடுப்பின் உச்சத்தில் இருந்தாள். அவன் வந்து பேசியிருந்தால் சற்று தெளிந்திருப்பாளோ என்னவோ? அவனோ அப்படி ஒருவள் அங்கிருப்பதை பற்றிய எவ்வித யோசனையும் இன்றி அவளை கவனியாது தன் வாகனத்தை உருமவிட்டு கிளம்பிவிட்டான். அவனை வழிமறித்து அவன் சட்டையை பிடித்து ‘அப்படி நான் என்ன கேட்டுவிட்டேன் என்று நீ என்னை கண்டுகொள்ளாமல் போகிறாய்?’ என்று கேள்வி எழுப்ப வேண்டும் என்ற ஆவேசம் பிறந்தாலும், தானே வலியப்போய் முதல் அடியை எடுத்து வைப்பதா? அப்படி செய்ய நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே… தவறாகவும் பேசவில்லையே… என்ற எண்ணம் அவளிடம். அவனின் சுமையை குறைக்கவென இவள் நினைக்க அவனோ இல்லாத ஒன்றை இருவர் நடுவிலும் இழுத்து விட்டதோடு நில்லாமல் அதை நீடித்துக் கொண்டும் இருக்கிறான் என்ற நிதர்சனம் அவளை முன்னேற விடவில்லை. அவன் தானே தப்பர்த்தம் கற்பித்துக்கொண்டு விலகி இருக்கிறான் அவனாகவே வரட்டும் என்று இவள் பிடியில் வீம்பாய் இருக்க… யார் இறங்கிப்போவது என்றதொரு யுத்தம் மெளனமாய் நிகழ்ந்தேறிக் கொண்டிருந்தது.

 

“சம்பந்தி அம்மா பேசுனாங்க யுக்தா… நாளைக்கு கல்யாணப்பட்டு எடுக்க போகலாமானு கேட்டிருந்தேன்… போகலாம்னு சொல்லிட்டாங்க… நீ லீவ் சொல்லிடு. அவங்க வீட்டு வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டில் தான் புதுத்துணி எடுக்கணுமாம்… நீ இப்போதே எந்த மாதிரி டிசைனில் எடுக்கணும், எந்த விலையில் எடுக்கணும்னு முடிவு செய்து மாப்பிள்ளையின் காதில் போட்டு வை… அப்போதுதான் கஞ்சத்தனம் செய்யாமல் நம் தகுதிக்கு ஏற்றமாதிரி எடுக்க தயாராக வருவார்கள்.” என்று மகள் வேலை முடித்து உள்ளே நுழைந்ததும் ஒரே மூச்சில் தகவலை கடத்திவிட, யுக்தாவினுள் இத்தனை நேரம் உருண்டு கொண்டிருந்த நெருப்புருண்டை வந்த தடம் தெரியாது மறைந்துவிட, புதிதாய் தலைதூக்கி இருக்கும் பிரச்சனைக்கு வழியை தேடி மனம் அலைப்பாய்ந்தது.

Advertisement

 

Advertisement

இவர்கள் தகுதிக்கு ஏற்றமாதிரி என்றால் இவளுக்கும், இன்பனுக்கும் மட்டுமேயான உடுப்புகள் லட்சத்தை தாண்டிவிடும்… இப்போது இருக்கும் சூழலில், இன்பன் ஒருவனின் சம்பாத்தியத்தில் உடை மட்டுமே லட்சத்தை தாண்டினால் அதுவும் இருவருக்கு மட்டுமே என்றால்… மற்றது?… வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு காசையும் எண்ணி செலவு செய்து சேமித்துக் கொண்டிருப்பவன் எப்படி சமாளிப்பான்? அதற்கு முன் இருக்கும் இதயனின் மருத்துவ செலவு? திருமணச் செலவு? பந்தல், பத்திரிகை, உணவு? இவ்வனைத்தையும் தாண்டி பல சிற்சில செலவுகள் இருக்கிறதே… அதை எல்லாம் சமாளிப்பது  சிரமமே… 

 

புகுந்த வீட்டின் நிலையை தன் வீட்டில் எடுத்துச் சொல்லி எதிர்பார்ப்பை மட்டுப்படுத்த முயலலாம்தான் ஆனால் ‘இது போன்ற வசதி குறைந்த இடத்தில் உன்னை கட்டிக்கொடுப்பதே பெரிய காரியம். இதில் உனக்காக ஒரு துணி அதுவும் வாழ்க்கையின் முக்கிய நாளிற்கு கூட நன்றாக எடுத்துக் கொடுக்க முடியாதா? அப்படி ஒன்றும் நீ அங்கு சென்று கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. மாப்பிள்ளையின் அண்ணனை வெட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். இல்லையா மாப்பிள்ளையை  பேசி கரைத்து இங்கே கூட்டிவந்துவிடு, நாம பார்த்துக்குவோம். பிக்கல் பிடுங்கல் எதுவும் இருக்காது. நீ தான் யதார்த்தம் புரியாமல் உன் கொழுந்தனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க.’ என்று புராணம் பாட ஆரம்பித்து விடுவார்கள்… 

Advertisement

 

இதயனின் தலையீடு இன்றி அவனின் இருப்பால், அவனுக்கான செலவீனங்களால் இன்பனுக்கும் அவளுக்கும் பிணக்கு வந்திருந்தாலும், இன்பன் இதயன் மீது காட்டும் பாசத்தினாலும், அக்கறையினாலும் இதயன் மீது துளிர்விட்ட பொறாமை ஏற்படுத்திய வெற்றுவெறுப்பு அப்படியே ஒருபுறம் இருந்தாலும், ஒருபோதும் இன்பனை அவர்கள் வீட்டிலிருந்தோ, அவன் அண்ணனிற்கு செய்யும் கடமையில் இருந்தோ அவனை பின்வாங்கச் சொல்லும் எண்ணம் இல்லை யுக்தாவிற்கு. அவள் அளவில், அவளுக்கான உரிமையிடத்தில் இன்பன் சரியாக இருந்தால் போதும் வேறெதுவும் தேவையில்லை என்ற எண்ணமே அவளுடையதாக இருந்தது.

 

இப்போது  தன்வீட்டில் தான்  எதுவும் செய்யமுடியாது… சரி, வீட்டிற்கு தெரியாமல் தன் சம்பாத்தியத்தில் ஒரு பங்கை கொடுத்து இன்பன் வீட்டில் எடுத்துக் கொடுத்ததாய் சொல்லி சமாளித்துவிடலாம் என்றால் இன்பனின் தன்மானம் சீண்டப்பட்டுவிடும். அதுதானே இப்போது இவர்களுக்குள் இருக்கும் பிணக்கை கொம்பு சீவிக் கொண்டிருக்கிறது.

 

எந்தப் பக்கமும் இறங்கிப் பேச முடியாமல் மென்னிழையில் சிக்கிக்கொள்ள, இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரச்சனையோ, மனத்தாங்களோ எப்புறமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தவள், தன் ஆசைகளை சுருக்கிக் கொள்ள முடிவெடுத்தாள். அதுவே சரியான தீர்வாக இருக்கும் என்றே தோன்ற மனதில் பல கணக்கிடல்… 

 

யாரோ செய்த பிழையில் இதயன் மாட்டி வாழ்க்கையை தொலைத்தது மட்டுமில்லாமல் பல்வேறு விதத்தில் அவனின் நிலை அவன் குடும்பத்தின் சுமூக சூழ்நிலையை பாதித்தது. அவனுக்கு மட்டும் அந்த சோகம் நிகழாமல் இருந்திருந்தால்… தற்பெருமையை தம்பட்டம் அடித்துக் கொள்ளவும், தங்கள் வீட்டு விழாக்களுள் தராதரம் புரியாது தடுக்கி விழுந்தால் பேனர் என்ற அந்த கலாசாரத்தை ஊக்குவிக்காமல் கட்டுப்படுத்தி இருந்திருந்தால்… இதயன் நிலைமையே வேறு… இன்பனும் சுட்டியாய் திரிந்திருப்பான்.

 

“என்னடி நான் பாட்டிற்கு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன யோசனையில் இருக்க?” என்று மகளின் கையை சுரண்ட, சிந்தனையில் இருந்து வெளிவந்தவள் சுதாரிப்பாய்,

 

“விலையை பற்றி எல்லாம் கவலைப்படத் தேவையில்லை அம்மா. எனக்கு பிடிச்சிருந்தா அவங்க கண்டிப்பா வாங்கித் தருவாங்க. அவங்க முன்னாடி நீ தேவையில்லாமல் ஏதாவது பேசிவைத்து கலகம் பண்ணிடாத. நான் வாழப்போகிற குடும்பம் அது. சிக்கல்கள் இல்லாம நிம்மதியாக வாழணும்னா சில விஷயங்களை பொறுத்துத்தான் ஆகணும். அது நமக்கு மனஅமைதி தான் தரும்.” நிச்சயத்தன்று ஏற்பட்ட அனுபவம் நல்ல பாடம் புகட்டிச் சென்றிருந்தது.

 

“கல்யாணத்திற்கு முன்னரே அவங்களுக்கு நல்லா வக்காலத்து வாங்குற.” என்று சடைத்துக் கொண்டவர் தன் வேலை பார்க்கச் சென்றுவிட்டார். அவர் செல்வதையே பார்த்தவள் நாளை என்ன நடக்கப் போகிறதோ என்ற நினைப்புடன் தன்னறைக்கு சென்று மெத்தையில் விழுந்து, தங்களின் நிச்சயத்தின் போது பதிந்த நிழல் படத்தை அலைபேசியில் எடுத்துப் பார்த்தாள்.

 

சிரித்த முகத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவி, காதல் பார்வை பரிமாறிக் கொண்டிருக்க, ஏக்கம் பிறந்தது அவளிடத்தில். 

 

நிச்சயம் முடிந்து மாதத்திற்கும் குறைவாகவே இருக்கும், அதற்குள் எங்கு சென்றது அந்தப் புன்னகை? எங்கே ஒளிந்திருக்கிறது அந்தக் காதல் பார்வை? காதல் பேச்சுக்களாவது உண்டா? 

 

இன்பனின் இரவு நேரம் என்பது இதயனுக்கே உரித்தாகிப் போனதால் அலைபேசியில் காதல் மொழிகள் கூடக் கிடையாது. ஆனால் காதல் திருமணம் செய்யப் போகிறவர்களாம்! இதைச் சொன்னால் யாரேனும் நம்புவார்களா? 

 

அப்படியொன்றும் அவன் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை வளர்த்திருப்பவள் அல்ல அவள். இருந்தது! அவன் தன்னை உள்ளங்கையில் தாங்கிட வேண்டும், கொஞ்சி கொஞ்சி பேசிட வேண்டும், எள் என்றால் எண்ணையாகிட வேண்டும் என்றெல்லாம் திகட்ட திகட்ட ஆசைகள் இருந்தது. அது அனைத்தையும் இன்பனின் சூழல் கருதி, யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவளாகவே சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டாள். கற்பனையும் நிஜமும் வேறல்லவா… அது நன்றாகவே தெரிந்திருந்தது அவளுக்கு. ஆனால் அவன்? அப்படியேத் தான் இருக்கிறான்… வேலை விட்டால் அண்ணன், அண்ணன் விட்டால் வேலை… அவள் கோபித்துக் கொண்டு வந்ததற்கு சமாதானமாய் இதுவரை எந்தவொரு எதிர்வினையும் அவன் செய்யவில்லை. 

 

அண்ணனும், குடும்பமும் முக்கியம் என்று அவன் முன்னரே சொன்னது தான். ஆனால் அவள்? அவள் எந்த அளவிற்கு அவனுக்கு முக்கியம் என்பதை இந்த சிறு பூசலிலே காட்டிவிட்டானே… 

 

இதுவே அவன் அண்ணனோ, தாயோ கோபித்துக் கொண்டு அவனிடம் பேசாமல் இருந்தால் இப்படித் தான் அமைதியாக இருப்பானா? நிலைமையை சரியாக்க முயற்சி செய்ய மாட்டான்? 

 

அவனின்றி அவளாய் முதலில் தேடிச் சென்று விருப்பத்தை தெரிவித்ததால் வந்த அலட்சியம் தான் அவனை இதெல்லாம் செய்ய வைக்கிறதா? என்று விபரீதமான சிந்தனையெல்லாம் அவள் மனதை போட்டு அழுத்த, அந்த அழுத்தத்திற்கு காரணமான அழுத்தக்காரனே அவளை அலைபேசியில் அழைத்திருந்தான். 

 

‛நீ சண்டை போட்டு இரண்டு நாட்கள் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டு இப்போது கூப்பிட்டால் நான் உடனே பேசிட வேண்டுமா?’ என்று வீம்புடன் அவனின் அழைப்பை துண்டித்தாள்.

 

அவன் விடாமல் திரும்பத் திரும்ப அழைக்க மீண்டும் மீண்டும் அவன் அழைப்பை துண்டித்து மனதில் இருந்த கோபத்தை தணித்துக்கொள்ள, ஒருகட்டத்திற்கு மேல் அழைப்பு நின்றுவிட்டது. நின்றப் பின்னோ திரும்ப வருமா என்ற ஆவல், ஏக்கம்… அவளே திரும்ப அழைக்கலாம் என்றால் தடுத்தது தயக்கமும், சுயமும்… 

 

உள்ளம் ஏக்கத்திற்கும், சுயமரியாதைக்கும் இடையில் அல்லாட, அவள் அலைபேசியை ஆக்கிரமித்திருந்த அவர்களின் நிழல்படமே ஆறுதலாகிப் போனது.

 

◆◆◆

 

மறுபுறம் இவளோடு ஒன்றாய் கிளம்பிய இனியா எங்கே வீடு சீக்கிரம் வந்துவிடுமோ என்ற பீதியில் மெல்ல வாகனத்தை உருட்டிக் கொண்டிருந்தாள். யுக்தாவின் அதிரடியில் நாள் முழுதும் அவளை திட்டித் தீர்ப்பதிலே பொழுது ஓடிவிட, வீட்டிற்கு கிளம்புகையில் தான் காலையில் அவள் உளறிவைத்த களேபரம் இப்போது கணைகளை தொடுக்கத் தயாராக இருக்குமே என்ற யோசனை எழுந்தது. யோசியாமல் பேசிவைத்த பேச்சுக்கு என்ன பதில் கூறுவதென்றே விளங்கவில்லை இப்போது. என்னவென்று சொல்லுவாள்? அவளே சுழலில் சிக்கிய பந்தாய் சுழல் இழுக்கும் இழுப்புக்கு சென்று கொண்டிருக்க, அவளின் மனதை இந்த நேரத்தில் தெள்ளத்தெளிவாய் விளக்க முடியுமா என்பது ஐயமே. அப்படியே விளக்கினாலும் புரிந்து கொள்வார்களா? மற்றவர் பார்வையில் அபாண்டமாய் தெரியாது அவளின் விருப்பம்? 

 

எண்ணங்கள் அலைபாய, உள்ளம் ஊஞ்சலாட, வண்டியும் ஊஞ்சலாடி பின் சுதாரித்து நின்றது. யோசனையுடன் தன் முன் சரசரவென குழுமிய கூட்டத்தை கண்டு பதட்டமானவள், சைட் ஸ்டான்ட் போட்டு வண்டியை நிறுத்திவிட்டு கூட்டத்தை நோக்கி விரைந்தாள். கூட்டத்தை நெருங்க நெருங்க இதயம் பதட்டத்தில் தாறுமாறாய் எகிறியது. குருதி வாடை வீச கலவரம் கூடியது.

 

“என்னாச்சு?” கூட்டத்தின் வெளிவட்டத்தில் இருந்து எட்டிப்பார்த்து கேட்டாள் இனியா.

 

“எவனோ அடிச்சி போட்டு போயிட்டான்…” என்ற யாரோ பதில் கூற, இனியாவின் விழிகள் ஏற்கனவே பயத்தில் வெளிறியிருந்தது. குருதிக் கடலின் நடுவே வலியில் உயிரை பிடித்துக்கொண்டு துடித்துக் கொண்டிருந்த உயிரை கண்டதும் இதயனின் நினைவு தான் வந்தது… ஏதோ இதயனே வலியின் வீரியத்தில் துடித்துக் கொண்டிருந்தது போல தெரிந்த பிம்பம் கண்களில் நீரை நிரப்ப, தெளிவற்ற பிம்பமாய் குருதிக்கு நடுவே தெரிந்த உருவம் தற்போது மறைந்தது. கரங்களும், கால்களும் பதட்டத்தில் நடுங்க… வீலென அலறியபடி வந்த ஆம்புலன்ஸ் அவளை அச்சப்படுத்த, அவள் சுதாரிக்கும் முன் அந்த உயிரை காக்கவென தாமதியாது தன்னுள் சுமந்து கொண்டு சென்றது. கால்கள் தள்ளாட தன் வாகனத்தை அடைந்தவள் அதிலே சாய்ந்து தன்னை நிலைப்படுத்த முயல அது அவ்வளவு எளிதானதாக இல்லை. 

 

இதயனை அந்த கோலத்தில் நினைக்கும் போதே மனம் வலிக்க, அந்த நேரம் அவன் எப்படி துடித்திருப்பான் என்ற எண்ணம் அவள் உயிர் வரை சென்று தாக்கியது. இவள் நிலைகுலைந்து தடுமாற்றத்துடன் நிற்பதை கண்டு அவளை நெருங்கிய ஒருவர், “பதட்டப்படாதமா… ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்காங்கல்ல… நல்லதே நடக்கும்னு வேண்டிப்போம். ஏதோ கெட்ட நேரம் இந்த மனுஷன் ஒழுங்கான வழியில் போனாலும் பின்னாடி வந்தவன் ஒழுங்கா வரல. இப்படித் தான் பலது நடக்குது இப்போ. நேற்று கூட கோவை பக்கம் விபத்தாம். ஒரு லாரி ஓட்டுநரோட தூக்கமோ இல்லை போதையோ என்ன எழவோ தெரியல அப்பாவியான இருபது உயிரை காவு வாங்கிடுச்சு.” என்றுவிட்டு அவர் சென்றுவிட இதயனின் நினைவுகள் பேயாட்டம் இவளுள் ஆடியது. அவனை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் புயலென எழுந்து ஆழியாய் மேலோங்க, எப்படித் தான் தன்னை சமன் செய்துகொண்டு வண்டியை கிளப்பினாலோ தெரியாது நேரே இதயன் வீட்டு வாயிலில் தான் சென்று நின்றாள்.

 

இறங்கியவள் அங்கு யார் இருக்கிறார், இல்லை என்றெல்லாம் பார்க்கவில்லை நேரே இதயன் அறைக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவன் கையை கெட்டியாக தன் உள்ளங்கைக்குள் பிடித்துக் கொண்டாள். மனம் ஆறாமல் குருதியையே நினைவுபடுத்த, அவள் விழிகள் அவனின் உருவத்தை மீண்டும் மீண்டும் வருடி அவனின் நலனை மனதில் பதித்துக் கொண்டது. அவளின் தொடுதலை உணராதவன், அவளின் சுகந்தம் தந்த சுகத்தில், அவளின் இருப்பை உணர்ந்து இமைகளை பிரிக்க, தவிப்பையும், பயத்தையும் ஒருசேர தாங்கி தன்னை அவசரத்துடன் நோக்கும் அவளின் விழிகளை கண்டு துணுக்குற்றான். அவன் விழித்தது கூட அவள் கருத்தில் பதியவில்லை. அவன் விழித்ததும் தன் அருகில் நிற்கும் இன்பனை கேள்வியாய் பார்த்ததும், அவனோ பதிலுக்கு காத்திருந்து இவளைக் காணவும்… என இது எதுவும் தெரியாமல் இதயனை வெறித்து நோக்குபவளிடம் என்ன கேட்பது என்ன சொல்வது என்று ஒன்றும் விளங்கவில்லை.

 

அப்போது தான் உள்ளே நுழைந்த சிவகாமி இந்த மூவரின் முக்கோண பார்வையை விசித்திரமாய் கண்டவர், “இனியா எப்போ வந்த?” அவர் கேள்வி பதில் கிடைக்காமல் காற்றில் கலந்துவிட, இப்போது அவரும் அந்த பார்வை பரிமாற்றத்தில் நுழைந்து விழிபிதுங்கி நின்றார்.

 

“இனியா எதுவும் பிரச்சனையா?” இன்பன் இம்முறை வாய் திறக்க,

 

“இன்னைக்கு ஆக்சிடென்ட் ஒன்னு பார்த்தேன்.” என்று சன்னக்குரலில் பதில் ஒருவழியாய் வந்தது. அதன் பிறகு ஒருவரும் வாய் திறக்கவில்லை. அவளின் மனப்போராட்டம் புரிந்தது. இன்பன் மெளனமாய் வெளியேறிவிட, சிவகாமி இதயனின் மறுபுறம் அமர்ந்து அவன் சிகையை மெல்ல வருடினார்.

 

“நிறையா இரத்தம் ஆன்ட்டி. வலியில் அப்படி துடிச்சாங்க. கை, கால் எல்லாம் ஒவ்வொரு பக்கம் இழுத்துட்டு இருந்துச்சு. எனக்கு…  இவங்க நியாபகம் தான் வந்தது.” வார்த்தைகள் நடுக்கத்துடன் வெளிவர, அவளின் மென்விரல்கள் பாறையாய் இறுகி உணர்வின்றி இருந்த அவனின் கரத்தை மென்மையாய் தடவிக்கொடுக்க, அகம் முழுதும் தவிப்பு மண்டிக்கிடந்தது. அவள் அகம் தெரிந்து கொண்டவன் அகத்திலும் இப்போது வேதனை குடிகொள்ள, அவன் இருதயம் அவளுக்காய் துடித்தது. விசித்திரமாய், அவன் உடல் படுத்தும் வேதனையைவிட இனியாவின் துயர் கண்டு அவன் உள்ளம் உணர்ந்த வருத்தம் தான் பெரிதாய் தெரிந்தது. ஏனோ, அவளுக்காகவாவது குணமாகிவிட வேண்டும் என்று மனம் விழைய, அவன் உள்ளம் செல்லும் திசையை உணர்ந்து அதிர்ந்தான். இதுவரை பெற்றவருக்காகவோ, உடன்பிறந்தவனுக்காவோ சரியாகிவிட வேண்டும் என்று என்றுமே எண்ணியதில்லை. என் விதி இதுதான் என்று ஒருவித விரக்தியில் இருந்தான். ஆனால் இன்று… மனம் அதற்கு மேல் சிந்திக்க விழையாமல் நிறுத்திக்கொள்ள, அவளை வெறுமென வெறித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!