Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 31

கள்வன் – 31 

தன் செவியைத் தேடி வந்த ஒலியை நம்பமுடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் திணறித்தான் போனாள் இனியா. வழக்கம்போல மாலை அலுவலகம் முடித்து கேபில் ஏறியவுடன் அன்னையை அழைத்து தன் வேலை முடிந்து அலுவலகத்தைவிட்டு புறப்பட்டுவிட்டதை தெரிவிக்க, ஒட்டாத தன்மையுடனே பேசினார் கீதா.

“நல்லா சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோ. ஒரு மாசமாகுது நீ அங்கே போய்… ஆனால் எங்களை வந்து பார்க்கணும்னு கூட உனக்கு தோணல, வீடியோ காலாவது பேசுவேன்னு பார்த்தான்,”

அவர் குரலில் இருந்த பேதமை மகளின் தொண்டைக் குழியை அடைத்தது, “அம்மா,”



Advertisement

என்னதான் பெண் குழந்தைகள் அப்பா செல்லம் என்றாலும் பதின்வயதிற்கு பிறகு தாய் நெருக்கமாகிவிடுவார். தந்தை அளவு வெளிப்படையாக செல்லம் கொஞ்சவில்லை என்றாலும் பிணைப்பு இறுகியிருக்கும் தாய்க்கும், மகளுக்கும். அதேநிலை தானே இங்கேயும்…

“அம்மா தான்டி… எங்களை விட்டு முதல்முறையா அதிகநாள் பல மைல் தாண்டி தனியாக இருக்க, அம்மா நியாபகம் வரல தானே உனக்கு? அந்த பையனை வேண்டாம்னு சொல்லிட்டோம்னு இவ்வளவு வீம்பா இருக்க ஆனால் எங்களுடைய வருத்தம் உனக்கு புரியல. என்னவோ போடி, எங்களை விட்டு மனசளவுல தூரமா போயிட்ட, இந்த பல மைல் கொச்சி எல்லாம் எம்மாத்திரம்… நான் தான் இங்க உட்கார்ந்து உன்னோட எதிர்காலம் என்ன ஆகப்போகுதோ, நீ அங்கே தனியா என்ன கஷ்டப்படுறீயோ, சரியா சாப்பிட்டியா தூங்குனியா, உன்னோட வேலைகளை அங்கே தனியாக எப்படி பார்த்துக்குறேன்னு நினைச்சி பயந்துட்டு இருக்கேன்.”

“அம்மா ஏன் இப்படி பேசுற… நீ தான் என்கூட முன்ன மாதிரி பேச மாட்டேங்குற… போன் பண்ணா சாப்பிட்டியான்னு மட்டும் கேட்டுட்டு வச்சிடுற. அப்பா நான் சொல்றதை மட்டும் காதில் வாங்கிட்டு பதில்கூட பேச மாட்டேங்குறார்.” குரலில் நடுக்கம் ஓடி, நாசி விடைத்தது. 

Advertisement

“நாங்க வச்சா… நீ திரும்ப கூப்பிடமாட்டியா? என் அம்மா அப்பா தானே, என்ன நடந்தாலும் அவங்க கூட இருப்பாங்கன்னு உன் விருப்பத்திற்கு நடந்துக்குற, அதை என்னவோ சொல்லுவீங்களே, ஹாங்… டேக்கன் பார் கிராண்டட்.”

Advertisement

அவரை விட்டு தூர இருப்பதாலோ இல்லை குற்றவுணர்ச்சியோ ஏதோ ஒன்று அவளது அழுகையைத் தூண்ட, சிணுங்களை வெளிப்படுத்தி, “ஆமா அப்படித்தான். நீ என் அம்மா. என்கூடவே தான் இருக்கனும். நான் உனக்கு பிடிக்காததை செய்யுறேன்னு என்னை அப்படியே விட்டுருவியா நீ?” 

பெற்ற தாயிற்கு எப்படி தன் பிள்ளை எந்த வயதானாலும் எவ்வளவு உயரம் போனாலும் எப்போதும் சிறுகுழந்தையோ, அதேபோலத் தான் இந்த உலகில் பிறப்பெடுத்த அனைவருக்கும் பிறப்பை கொடுத்தவள் எல்லா நேரத்திலும் உசத்தியே. அந்த குழந்தையின் மனதில் பெற்றவளின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது, அது எந்த காலகட்டமானாலும்… 

“இருக்க மாட்டேன், விட்டிருவேன் என்றெல்லாம் சொல்லல. உன்னை நீயே ஒருமுறை திரும்பிப் பாருன்னு தான் சொல்றேன். உன்னை நீயே புதுப்பிச்சுக்கோ. என்னோட பழைய இனியாவா இங்க கிளம்பி வா… நானும் அப்பாவும் உனக்காக எப்போதுமே காத்திட்டு இருப்போம்.” என்றவர் அழைப்பை துண்டித்துவிட, பாரம் ஏறிய உள்ளதுடன் மருத்துவமனை சென்றடைந்தாள் இனியா.

Advertisement

தூய்மையான காற்று தேகத்தை வருடி, நாசியில் புகுந்தாலும் இயந்திரக்கதியாய் நடந்தவள், இதயனின் அறைக்கு வந்து, அவனை கவனியாமல் முகம் கழுவி தன்னை தூய்மைப்படுத்திவிட்டு, அங்கிருந்த கண்ணாடி முன் யோசனையுடன் நின்று சிகையை சரி செய்யும் போது செவியில் விழுந்தது அந்த அழைப்பு.

“இனியா…” சற்று திணறலுடன் அவளது பெயர் ஆடவன் குரலில் ஒலிக்க, யாரோ தன்னை அழைக்கிறார்கள் என்ற எண்ணத்திலே அறையை விட்டு வெளியேறி வெளியே எட்டிப்பார்த்தாள். வெளித்திண்ணை அரவமற்று, எவரும் அங்கு வந்ததற்கான சுவடு இல்லாமல் இருக்க, குழப்பமாய் கண்களை சுருக்க, மறுநொடி சுருங்கிய கண்கள் பெரிதாய் விரிந்தது.

“கல்யாணம் பண்ணிக்கலாமா?” மீண்டும் அதே குரலில் ஒலித்த கேள்வி அவள் உயிர்வரை சென்று தாக்கி, நங்கூரமிட்டது போல அவளை அதே இடத்தில் நிற்க வைத்தது. பார்வை எல்லாம் வெளியே இருக்க, அவள் உள்ளம் உள்ளேயும் வெளியேயும் போக்குகாட்டி குதித்துக் கொண்டிருந்தது.

அறையின் வாயிலிலேயே ஆணி அடித்தது போல அவள் முதுகை காட்டி நின்றுகொண்டிருக்க மீண்டும் அவளை நோக்கி வந்தது அதே கேள்வி, “பதில் சொல்லு. கல்யாணம் பண்ணிக்கலாமா?”

 

[the_ad id=”6605″]

 

 

“இங்கே திரும்பி என்னை பாரு இனியா.” பொறுமையின்றி அவளை நோக்கி அறையின் உள்ளிருந்து கட்டளை பாய, அறை வாயிலேயே மடங்கி விழுந்தவள் பார்வை மட்டும் அறையின் உள்ளே நடுநாயகமாய் வீற்றிருந்த மஞ்சத்தில் படுத்திருந்தவன் மேல் நிலைத்திருந்தது.

“ஏன் பேச மாட்டேங்குற?”

அவளின் அமைதி அவனை தாக்க, அவளோ அவனுக்கு குரல் வந்துவிட்டதை நம்பமுடியாமல் உணர்ச்சியின் பிடியில் சிக்கி அதீத அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள்.

“எப்போதும் ஓயாம பேசுவ, இப்போ ஏன் அமைதியா இருக்க?”

அவளின் விழிகள் அங்குமிங்கும் அலைபாயது ஓரிடத்தில் நிலைகுத்தி, அவன் இதழ் அசைப்பை உண்ணிப்பாய் கவனித்து, “நீங்க பேசுறீங்க!” பிரம்மை பிடித்து அதிலிருந்து வெளிவந்தவள் போல கலைந்த நினைவுகளுக்கு இடையிலிருந்து பேசினாள் இனியா.

அவளின் உணர்ச்சிகள் மட்டுப்பட்டிருந்த அவனின் ஆழ்ந்தவற்றை தூண்டிவிட, அவனது உதடுகள் உணர்ச்சிகளின் உச்சத்தில் நடுங்கியது. நடுங்கிய அதரங்களுக்கு இடையில் மெல்லிய முணுகலாய் அவன் ம் கொட்ட…

அந்த ஓசை அவள் செவியில் விழ, உதறல் எடுத்தது அவளது உடல். நிலையில்லாமல் அதீத உணர்ச்சிகள் கட்டுப்பாட்டை மீற, நடுங்கிய விரல்களை கொண்டு வெளிவரத் துடித்த உணர்ச்சிக்குவியலை அடக்கும் விதமாய் இதழ்களை மூடினாள் அவள். அதையும் மீறி பல்லிடுக்கில் இருந்து மீண்டும் நம்பாமல் ஒலித்தது அவள் குரல், “நீங்க பேசுறீங்க! நான் உங்க குரலை கேட்டுட்டேன்!”

தகிடத்தம் போடும் உதடுகளை இழுத்துப்பிடித்து ஈரமான விழிகளுடன், “போச்சு… அதையே இப்போ தான் கண்டுபிடிக்கிறாயா நீ?” என்று இதயன் நகைக்க, அவளின் விழி ஓரம் கசிந்தது ஈரம்.

“ஏய் ஏன் அழற? நான் சும்மா சொன்னேன்.” முதலில் சற்று குழறிய பேச்சு, பேச பேச அழுத்த திருத்தமாய் கணீரென ஒலித்தது.

“எனக்கு ஏதோ கனவு மாதிரி இருக்கு. உண்மையாவே நீங்க தான் பேசுறீங்களா?” என்று சந்தேகமும், தவிப்புமாய் கேட்ட இனியாவை காண வருத்தமாய் இருந்தது அவனுக்கு. மனதில் எவ்வளவு பாரத்தை சுமந்திருந்தால் இப்படி அவள் கண்முன்னே தான் பேசுவதை கூட நம்பமுடியாமல் தவித்துப் போயிருப்பாள் என்று மனம் அவளுக்காய் யோசிக்க, தன்னுடைய நடுங்கிய விரல்களால் அவளை அருகே வரச்சொல்லி சைகை செய்தான்.

அவனின் விரல் அசைப்பில் இன்னும் அதிர்வுற்றவள் அவனின் விரல் அசைப்புக்கு ஏற்ப, மெல்ல சுவரை பிடித்துக்கொண்டு எழுந்து அடி மேல் அடி எடுத்து அவனை நெருங்கினாள்.

“இதுக்கு தானே நீ ஆசைப்பட்ட? நான் பேசனும்னு. இப்போ நீ ஏன் ஊமையா நிற்குற?” 

அதற்கும் அவள் வாய் திறவாது தலையை மட்டும் மறுப்பாய் அசைக்க, அவனது முகம் சுருங்கிவிட்டது.

“பிடிக்கலையா?” என்ற அந்த ஒற்றை வார்த்தையை அவன் சொல்லி முடிக்கும் முன்பே பாய்ந்து வந்து அவன் நெஞ்சில் சாய்ந்து அவனை கட்டிக்கொண்டவள், “பிடிக்காம தான் இதெல்லாம் செய்றேனா?” என்று சீறிய பதிலோடு கேவலும் வெடித்தது.

“அப்புறம் ஏன் அழற?” 

பதிலாய் அவள் அழுகை கூடியதே தவிர குறையவே இல்லை. பெரும் அழுகை. இத்தனை நாளாய் அமிழ்த்தப்பட்டிருந்த பாரம் அனைத்தும் உப்பு நீராய் வெளியேற அவள் உடல் அழுகையில் குலுங்கியது.

அவளின் குலுங்களை அவனால் உணர முடியவில்லை என்றாலும் அவளின் ஓசை கொண்டு தன் மேல் சாய்ந்து உடைந்து அழுகிறாள் என்று மட்டும் புரிந்தது. அந்த புரிதல் அவனின் கண்களிலும் நீரை வரவழைக்க, குரலும் நடுங்க, இன்னும் முழுதாய் குணமாகாத தன் விரல்களை கொண்டு அவளை அணைக்க எண்ணி தோற்றுப்போனவன், “நீ இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் அழாத.”

அவனின் குரலில் தெரிந்த பேதத்தை உணர்ந்தாலும் அவளால் எளிதில் அழுகையை நிறுத்த முடியவில்லை. மாதங்கள் சிலதான் என்றாலும் மனதில் இருந்த பாரம் எண்ணிலடங்காதவை. முதலில் ஈர்ப்பு என்று அவனை வண்டாய் மொய்த்ததில் துவங்கி இப்போது பெற்றோரின் மனசஞ்சலத்தை வாரியிறைத்துக் கொண்டதுவரை எத்தனை போராட்டம். அனைத்தையும் உறுதியுடன் இன்முகமாகவே கடந்து வந்திருக்க, நிறைவை அடைந்த திருப்தியில் அமிழ்ந்திருந்தது வெடித்துக் கிளம்பியது.

“என்னடா இப்படி அழற? என்னனு சொன்னால் தானே தெரியும்.” அவனின் குரலுமே உடைந்து வெளிவர, பாரம் பாதி அவன் நெஞ்சில் கண்ணீராய் கரைந்திருக்க, மீதத்தை குறைக்கவென வார்த்தைகளை கையில் எடுத்தாள்.

“இவ்வளவு நாள் முடிவெடுக்க முடியாம அவ்வளவு குழப்பம். எல்லாத்துக்கும் குழப்பம், ஆனால் இன்னைக்கு நீங்க கேட்டது அதை அடியோட தகர்த்துடுச்சு. இப்போது நினைத்துப் பார்த்தால் என்னவோ உங்களோட இந்த வார்த்தைக்காகத்தான் மனசு ஏங்குன மாதிரி இருக்கு…”

“அப்படி என்ன குழப்பம்?” குழப்பமாய் குழப்பத்தை நிவர்த்தி செய்யவென அவன் கேட்க, அவன் நெஞ்சிலிருந்து தலையை உயர்த்தியவள், அவன் கன்னத்தில் தன் விரல்களை பதித்து அதனைத் தாங்கி, விழி கலந்தவள், அனைத்தையும் கொட்டிவிடும் நோக்கில்,

“நீங்க என்னை கண்டுக்காத போதும் உங்களையே ஏன் சுத்தி சுத்தி வந்தேன்னு குழப்பம். அது தெளிவானதும் நம்ம ரெண்டு பேரும் வாழ்க்கையில் சேர முடியுமான்னு சந்தேகம். என்னோட உணர்வுகளுக்கு பெயர் கொடுத்தாலும், நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியாமல் தவிச்ச தவிப்புனு உங்கள் உடல்நிலையும் சேர்ந்துகொள்ள என்னால எதையும் தெளிவா உடனே முடிவெடுக்க முடியல. உங்க மேல இருந்த பிரியம் எதுவரைன்னு நான் வரையருப்பதற்குள் நிறைய நிறைய குழப்பங்கள். அதையும் தாண்டி நமக்குள் ஒத்துவருமானு குழப்பம். நாம பேசி பழகிறாதது தான் என்னை ரொம்பவே தவிக்கவிட்டுச்சு.” இனியாவின் அகம் திறக்கப்பட, அவனின் முகம் கனிந்தது. இதுவரை பேசி பழகிடவில்லை என்றாலும் மனம் ஒத்திருக்க, இப்போது பேச தயக்கமெல்லாம் இல்லை. நெடுநாளாய் பழகியது போன்று உரிமையுடன் தொடர்ந்தது பேச்சுக்கள்.

அழுது சிவந்திருந்தவளை மேலும் உணர்ச்சிவசப்படுத்த விரும்பாதவன் அவளை திசைதிருப்பும் நோக்கில், “சரி இப்போ கண்டுபிடிச்சிட்டியா? இருக்கா இல்லையா?”

“இருக்கு ஆனா இல்லை…” அழுகையின் சுவடு மீதமிருக்க, அதனின் இடையில் கலகலவென்று நகைத்துக் கொண்டே வம்பிழுத்தாள் அவன் எண்ணத்திற்கு தோதாய்.

“ஏய், அப்போ எனக்குள்ளும் காதல் இருக்கா இல்லையானு குழப்பமா இருக்கே. யோசிச்சி கேள்வி கேட்டிருக்கனுமோ?” என்று பதில் பேசினான் அவனும் சளைக்காமல்.

விரல்களை மடக்கி அவன் கன்னத்திலேயே வலிக்காமல் ஒரு குத்து விட்டவள் முறைத்தபடியே, “சாருக்கு குழப்பம் வேற வருதோ?”

“ஏன் உனக்கு மட்டும்தான் குழப்பம் வரணுமா என்ன? நானும் தான் உன்கூட பேசி பழகல,”

சூழ்நிலை இயல்புக்கு திரும்ப, இனியாவுமே சற்று தெளிந்திருந்தாள். “அய்ய… நீங்க வழிஞ்ச வழிசலை தான் நான் பார்த்தேனே, இதில இவருக்கு சந்தேகம் வேற?” என்று நொடித்தாள் இனியா. தன்னுடைய அசட்டையை அவள் வழியாய் கேட்கவும் கூச்சம் தான் வந்தது அவனுக்கு. அதை மறைக்க முடியாமல் வழக்கமான பழக்கத்தில் அவன் கண்களை மூடிக்கொள்ள,

அவனின் இரண்டு கன்னத்தையுமே ஒரேநேரத்தில் பிடித்துக் கிள்ளியவள், “இந்த வேலையெல்லாம் இனி வேண்டாம். ஒழுங்கா கண்ணைத் திறங்க.”

அவளின் செயல்கள் அவனுள் சிரிப்பை ஏற்படுத்த விரிந்த அதரங்களுடன் அவளின் சேட்டைகளை ரசித்துக்கொண்டே அவளை வம்பிழுத்தான், “ஏய் தூக்கம் வருது எனக்கு.”

“நான் இருக்கும் போது என்ன தூக்கம் உங்களுக்கு? ஒழுங்கா என்கூட பேசுங்க.” என்று மிரட்டித்தான் அவனை தன்வசப்படுத்தினாள் இனியா.

 

[the_ad id=”6605″]

 

 

“ரொம்பத்தான் மிரட்டுற என்னை…”

“அத்தையே என் பையனை மிரட்டிக்கோன்னு அனுமதி கொடுத்தாங்க.” ஆன்ட்டி அத்தையாகியதை இருவருமே உணர்ந்திருந்தனர்.

“ஓனர் அம்மா சொல்லிட்டா சரிதான்.”

“ஹலோ… ஹலோ… இந்த பீசுக்கு ஓனர் மாறி அஞ்சு நிமிஷம் ஆச்சு.” என்றாள் அவனை கைக்காட்டி.

அவளின் வார்த்தை பிரயோகத்தை உணர்ந்து சிலிர்த்தவன், உணர்ச்சியின் பிடியில் இருந்து விடுபட்டுவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டே மேலும் தொடர்ந்தான்.

“இதுக்கு மேல உனக்குள் எந்த குழப்பமும் இருக்கக்கூடாது இனியா. இதுதான் நம்ம வாழ்க்கை. ஈர்ப்பா, விருப்பா, காதலானு நாம குழப்பிக் கொண்டதெல்லாம் போதும்.” என்று அவன் பேச குறுக்கிட்டாள் இனியா, “அப்போ உங்களுக்கும் குழப்பம் இருந்ததா?”

“தேடலின் போது குழப்பம் வருவதெல்லாம் இயல்பு தான்.”

“குழப்பம் இருந்ததுன்னு நேரா சொன்னால் என்ன? அப்படியே சுற்றி வளைத்து பேசுறது.” அவனுடம் சரிக்கு சரி பேசுவது பிடித்துப்போய் இருக்க, அவனுடன் பேசியிராத ஏக்கத்தை அந்த ஒரேநாளில் தீர்த்துக்கொள்ள பேராவல் கொண்டு அவனிடம் வேண்டுமென்றே பேச்சை வளர்த்தாள்.

“எல்லாத்தையும் நேரா பேசணும்னா அப்படியே செஞ்சிரலாம்.” அவளுக்கு கட்டுப்பட்டு இருக்கவே மனம் விழைய பந்தா செய்யாமல் அவள் பேச்சை ஏற்றான்.

“நமக்குள் இருந்த பெருங்குழப்பமே பலகீனமான நேரத்தில் ஏற்பட்ட இந்த உறவு, ஈர்ப்பாய் இருந்து நாளையே நமக்குள் சண்டை வந்து ஒத்துவரவில்லை என்றால் என்ன செய்றதுன்னுதான்.” அவள் அகத்தை படித்தாற் போல அவன் பேச, அவன் அகத்திலுமே இந்த பயம் தான் இருந்தது.

“ஆனால் அந்த பயம் இப்போ எனக்கு இல்லை.” என்றவள், அவனின் கால் பகுதியை குனிந்து பார்க்க,

அவளின் கேள்வி உணர்ந்தவன், “பேச்சு மட்டும் தான் வந்திருக்கு. இரண்டு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து விரல்கள் வரை உணர்வு இருக்கு. ஆனால் எதையும் அழுத்தி பிடிக்க முடியாது. கழுத்துக்கு கீழ இன்னும் உணர்வு திரும்பல.” என்றான் பதிலாய்.

சரியாவதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட தெம்பாய் உணர்ந்தவள், மஞ்சத்தின் மேலிருந்த அவன் நெஞ்சத்தில் வாகாய் தலைவைத்துக் கொண்டாள்.

அவன் தன்னை உணரவேண்டும் என்ற நோக்கில் கனம் குறைந்து போயிருந்த அவனது கரத்தை எடுத்து தன்னை சுற்றி போட்டுக்கொண்டு, அவனது கரம் சமனின்றி தன்னைவிட்டு கீழே விழாது இருக்க அவன் முழங்கையை இறுக பற்றிக்கொண்டாள். விரல்களை பதித்து எதையும் பிடிக்கும் நிலைக்கு இன்னும் வரவில்லை எனவும் தனது நடுங்கும் விரல்கள் கொண்டு அவளின் தேகம் உணர, அவனது கரம் சமனின்றி தொய்ந்து சரிந்தது. அதை பெரிதுபடுத்தாமல் அவனது கரத்தை அவனின் பக்கமே வைத்துவிட்டு எழுந்தவள் அவன் தலையை தன் மடிதாங்கிக் கொண்டாள்.

“பயம் இல்லைன்னு சொன்னேனே… ஏன்னா நமக்கு வந்த ஈர்ப்புகூட அழகால் வந்தது இல்லை. காரணம் கண்டறியமுடியாத ஏதோவொன்று தான் நம்மை முடிச்சி போட்டிருக்கு. உங்களை இந்த நிலையில் பார்த்த பின்பு என்னால் மூன்றாம் நபர் போல கடந்து போகமுடியல. ஏதாவது செய்னு எனக்குள் இருந்து ஏதோ ஒரு குரல் என்னை உந்தியது.”

தன் விழியை நிமிர்த்தி அவளின் விழிகளை நேராய் எதிர்கொண்டவன், “ஆரம்பத்தில் அனுதாபப்பட்டு எனக்காக எல்லாம் செய்றேன்னு நினைச்சேன்.”

“இன்னொரு முறை இந்த வார்த்தைகூட உங்க வாயிலிருந்து வரக்கூடாது. அனுதாபம் இருந்திருந்தால் இப்படி அலைஞ்சி திரிஞ்சி தினமும் ஏதாவது முன்னேற்றம் வராதான்னு ஏங்கி இருக்க மாட்டேன்.” என்று இனியா உரிமையாய் கடிந்துக்கொள்ள, முறுவல் மட்டுமே பதிலாய் அவனிடம்.

“இன்னும் என்ன சிரிப்பு? இனி எப்போதும் ஒழுங்கா வாயைத் திறந்து தான் பதில் சொல்லணும்.” என்று செல்ல மிரட்டல் வேறு அவளிடமிருந்து.

“வாழ்ந்து பார்ப்போம் இனியா…” என்றான் பட்டென்று.

 

[the_ad id=”6605″]

 

 

“இல்லைனா விட்டிருவேனா?” என்று இனியா மீண்டும் மிரட்ட, இருவரின் சிரிப்புச் சத்தமும் இணைந்து அவ்வறையை நிறைத்தது.

களிப்போடு களிப்பாய் அவளின் நாசியோடு நாசி வைத்து அவன் உரச, அவனது சிகைக்குள் விரல்களை படரவிட்டு விளையாடிவள் கவனமாய், “உங்களுக்கும் அஜய்க்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்க,

அவளின் கேள்வியில் அவனது முகம் கறுத்து விலகல் வந்தாலும் சரியான பதில் தான் வரவில்லை, “எதுவும் இல்லையே.”

கருவண்டுகளை வெண்மைக்குள் சுழற்றி அழுத்தமாய் அவனை முறைத்தவள், “பொய்.” என்றாள் தீர்மானமாய்.

“சரி பொய் தான் ஒத்துக்குறேன்.” பாசாங்கின்றி சட்டென அவளிடம் சரணடைந்தவன், “என்ன பிரச்சனைன்னு உனக்கு தெரியவந்தாலும் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் தான் நாம இருக்கோம். அஜய் அப்பாக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நாம செல்லாக் காசாகிடுவோம். கவனமா தான் இதில் இறங்கனும். அதற்கான நேரம் இதில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நானே என்னனு சொல்றேன், அதுவரை அஜய் பற்றிய சிந்தனை எல்லாம் ஒதுக்கித் தள்ளு.” என்று காரணம் கூறாது அந்த பேச்சையே ஒதுக்கித்தள்ள, அவள் விடுவதாய் இல்லை.

“அது எப்படி சும்மா இருக்க முடியும்? இங்க டாக்டர் சொன்னாங்க, உங்க உடலில் நச்சு இருக்காம். அது தான் உங்களை இப்படி ஆக்கி இருக்கு. அது என்னவென்று தெரிந்தால் சீக்கிரமே சரிசெய்திடலாம்.” என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளிடம் இருக்க, அவளின் அனைத்து விருப்பத்திற்கும் செவி சாய்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தவன் இந்த விஷயத்தில் மட்டும் பிடிவாதமாய் இருந்தான்.

“நான் தான் இப்போ பேசுறனே. நானே டாக்டரிடம் பேசிக்கிறேன்.”

அவனின் பதில் அவளை மேலும் குழப்பத்தான் செய்தது, “அப்போ உங்களுக்கு எதனால் இப்படி ஆச்சுனு தெரியுமா?”

“ஸ்ப்பா… ஒன்றை வேண்டாம்னு சொன்னா விடமாட்ட போலிருக்கே.”

“ஆமா விடமாட்டேன். என்ன பிரச்சனை என்று சொன்னால் நான் சரிசெய்ய முடியுமான்னு பார்ப்பேன்.”

“உன்னால சரிசெய்ய முடியும் சொல்ல ஆசைதான் ஆனால் இது விஷப்பாம்பு. அதன் வழியில் யார் வந்தாலும் கொத்திட்டு போயிடும். உன்னை பலிகடா ஆக்க எனக்கு விருப்பம் இல்லை. இதை தனியாளாக செய்யவும் முடியாது. கொஞ்ச நாள் போகட்டும்.” என்று அவன் மறுக்க ஆர்வம் கூடியதே தவிர குறையவே இல்லை இனியாவுக்கு.

“அதெல்லாம் நான் செஞ்சிடுவேன். என்னனு சொல்லுங்க…”

“எப்படி எனக்கு அஜய் மீது கோபமோ அதேபோல எனக்கு உன் மேலும் கோவம் இருக்கு.” பேச்சை சாமர்த்தியமாய் அவன் மாற்றிவிட அவளும் அவனின் உக்தி புரியாமல் அவன் விரிக்கும் வலையில் விழுந்தாள்.

“என்ன கோவம் என்மேல?”

“அதெப்படி நீ என்னை பற்றி ஒன்னும் தெரியாமல் பிடிச்சிருக்குனு என் பின்னாடி சுத்தலாம்? இது எவ்வளவு பெரிய பின்விளைவை தரும்னு தெரியுமா? தவறானவர்களிடம் மாட்டியிருந்தால் என்ன செய்வ? பார்த்தவுடன் பிடித்து அவங்க தான் வாழ்கைன்னு நினைச்சி தன்னையே ஏமாற்றிகிட்டு சுத்துவது முட்டாள் தனம்.” கோபம் இருந்தாலும் கட்டுப்படுத்திய குரலிலேயே வந்தது அவனின் வார்த்தைகள்.

“உங்களுக்கு என்ன பிடிக்கலையா என்ன?” பதில் கூறாது இடக்காய் கேட்டாள் இனியா.

“என் மேல பித்து பிடிச்சி ஒருவள் சுற்றுகிறாள்னு நினைக்கும் போதே போதை ஏறுதுதான். இல்லைனு சொல்லல. ஆனால் அது உனக்கு பாதுகாப்பானது இல்லை இனியா. இது மட்டும் எதிர்மறையா முடிஞ்சிருந்தா உன்னோட நிலைமையை யோசிச்சு பாரு. உன் வீட்டில் உள்ளவர்கள் உன்னை பற்றி எவ்வளவு கவலைப்படுவார்கள்.” தன்மையாய் எதார்த்தம் விளக்க, இதழ் விரித்தவள்,

“இதோ இப்படி பேசுறீங்கலே இது தான் என் சாய்ஸ் கரக்ட்னு சொல்லுது. பெண்களுக்கு எப்போதுமே உள்ளுணர்வு உஷாரா இருக்கும். தங்களுக்கு வர ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்து சொல்லிடும். அது பேச்சை கேட்டு நடந்தால் சுதாரிப்பா இருக்கலாம். நான் அது பேச்சை தான் கேட்டேன். நீங்க தான் எனக்குன்னு தோணிச்சு. முடிவு பண்ணிட்டேன்.”

“வசனம் எல்லாம் நல்லா பேசுற இனியா.”

“என்ன எல்லோரும் அதையே சொல்றீங்க?”

“ஏன் வேற யார் சொன்னா?”

“அம்மாவும் இதே தான் சொன்னாங்க.” அம்மாவை பற்றி பேசும் போதே அவள் குரல் உள்ளே சென்றது.

“நீ இன்னும் உன் வீட்டை பற்றியும் சொல்லல, என் கேள்விக்கு பதிலும் சொல்லல.”

“என்ன பதில் சொல்லல?”

“கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டேன்?”

“ஆசைபடாம தான் இதெல்லாம் செய்றேனாக்கும்?” என்று கழுத்தை வெட்டினாள் இனியா.

“அதை வாயை திறந்து நேரா சொல்றதுக்கு என்ன? என் மச்சான் எப்படி சிக்சர் அடிச்சான் பார்த்தில்ல, மாமானு ஒரே வார்த்தையில் கவுத்துட்டான்.” என்று இதயன் சிரிக்க, அதன் பிறகு என்னென்னவோ பேசினார்கள் ஆனால் எதுவும் நினைவில் தங்கவில்லை. 

விரல்களும் வார்த்தைகளும் தன் இணையோடு பின்னிப்பிணய, மனங்கள் இடைஞ்சலின்றி உறவாட, அவர்களுக்கான இடைஞ்சல் இன்பன் மற்றும் சிவகாமி ரூபத்தில் இனியா வீட்டில் வந்திறங்கியிருந்தது அதே நேரம் சென்னையில்… 

*^*^* 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!