கள்வனே கள்வனே – 35.1
கள்வன் – 35
கிளம்பும்போது செல்வியாக சென்றிருக்க திரும்பி அந்த மண்ணில் கால்பதிக்கும் போது திருமதியாக வந்திறங்கினாள் இனியா. முதல் முறை வந்தபோது இருந்த நெருடல், குழப்பம், பயம் என்று எதுவுமின்றி உற்சாகமாய் இறங்கியவளை அந்த மண்ணும் வாஞ்சையாய் தன்னகத்தே வரவேற்றுக்கொண்டது.
“இன்னைக்கும் மருத்துவமனை காரையே வரச்சொல்லி இருக்கியா?” தங்களை அழைக்க ஏற்பாடு செய்திருந்த வண்டி வரத்தாமதமாக, ரயில் நிலையத்தின் வெய்டிங் ஹாலில் இருவரும் அமர்ந்திருக்க கேள்வி எழுப்பினான் இதயன்.
“ஆமா, அவங்க காரே வந்தால் அறைக்கு நேரே இறக்கி விட்டிருவாங்க, வெளியே சொன்னால் நாம தான் ரெண்டு வண்டி மாறனும்,” அவனை ஒட்டி அவன் தோளோடு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
Advertisement
அவளை ஒருமுறை தயக்கத்துடன் பார்த்தவன் கேட்கலாமா வேண்டாமா என்று குழம்பி பின் தெளிந்து, “எப்போ ஆபீஸ் போகணும் நீ? இன்னைக்கு ஒருநாள் என்கூடவே இருந்துட்டு, நாளைக்கு உன் ரூமுக்கு போறியா?” ஏக்கம் குரலில் தெரிந்துவிடக் கூடாதென அவன் சிரத்தை எடுத்து குரலை சாதாரணம் போல வைத்துக்கொண்டு வேண்ட, அவனின் ஏக்கம் அப்பட்டமாய் தெரிந்தது. சென்ற முறை அவளை தன்னுடனே இருக்கச் சொல்ல அவனால் முடியவும் இல்லை அதற்கான உரிமையும் அவனிடத்தில் இல்லை. ஆனால் இப்போது உரிமையான மனைவியாகிட அவளை பிரிவது முன்பைவிட கடினமாகத் தான் தெரிந்தது.
அவனின் ஏக்கம் புரிந்ததும் அவனுடனே இருந்துவிட மனம் துடிக்க, முகத்தை சோர்வாய் வைத்துக்கொண்டவள், “நான் இன்றைக்கே ஆபீஸ் போகணும். ஒரு வாரம் லீவ் போட்டிருக்கேனே. இந்த இடத்திற்கு இப்போ புதிது என்பதால் நினைத்த நேரத்திற்கெல்லாம் விடுப்பு எடுக்க முடியாது. உங்களை அறையில் விட்டுவிட்டு நான் கிளம்பனும்,” என்ற பதில் வர அவனது முகம் தொய்ந்து விட்டது. ஒருவாரம் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததும் சேர்ந்துவிட உள்ளம் பலமடங்கு தேடியது அவளின் அருகாமையை. அது கிடைக்காத பட்சத்தில் லேசாக சினம் கூட எழுந்தது. ஒரு வாரம் விடுப்பு எடுத்தாகிவிட்டது இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமாவது விடுப்பு சொல்லிவிட்டு என்னுடன் இருக்க வேண்டியது தானே… என்று எண்ணம் தோன்ற தானாக வதனம் உர்ரென்றானது.
கூடவே வீம்பும் அவன் வார்த்தைகளில் விளையாடியது, “என்னோட அறை வரைக்கும் வந்துட்டு நீ திரும்ப போகணும்னா நேரமாகிடும். நான் இப்படியே காரில் போயிடுறேன். நீ வேறு டாக்சி பிடித்துக்கொண்டு உன்னோட அலுவலகத்திற்கு கிளம்பு.” என்று முறுக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான் இதயன்.
Advertisement
“இதுவும் நல்ல யோசனை தான். நான் இப்போதே எனக்கு கார் புக் செய்திடுறேன்,” என்றவள் தன் அலைபேசியை எடுத்து நோண்ட, அதை பிடுங்கி தூர எறியும் அளவுக்கு எரிச்சல் வந்தது அவனுக்கு. ஆனால் எறியவா முடியும், அவன் கைகள் இன்னமும் வேகமாக செயல்படத் துவங்கவில்லையே.
Advertisement
“ஏன்டி என்னை படுத்துற? நான் வேணாம்னு இருந்தபோது வம்படியாய் எனக்காக எல்லாம் செஞ்ச, இப்போ நானே என்னுடன் இருன்னு கேட்கிறேன். போறேன்னு சொல்ற?” கடுப்பும், சலிப்பும் பேதம் கண்டுகொள்ளும் அளவிற்கு வெளிப்பட, சத்தமாகவே சிரித்தாள் இனியா.
அது அவனது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது, “ஏய் என்னடி?”
“நான் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா?” என்று இனியா தலையை சாய்த்து கேலிப்பார்வையோடு குறுநகை சிந்த, அவனை ஆட்கொண்டிருந்த எரிச்சல் கொஞ்ச கொஞ்சமாய் விலகியது.
Advertisement
அறிவை மறைத்துகொண்டிருந்த எரிச்சல் அகலவும் அவளின் சீண்டல் புரிந்தது.
ஆசுவாசமாய் சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேற்றியவன், “ஒரு நிமிடத்தில் என்ன பாடுபடுத்திட்ட… நான்கூட என்னை விட்டுட்டு உடனே கிளம்பிடுவியோனு பயந்துட்டே இருந்தேன்.”
[the_ad id=”6605″]
“அதெப்படி உங்களை தனியா விட்டுட்டு கிளம்பிடுவேன்னு நீங்க நம்பலாம். போன முறையே தான் பார்த்தேனே, நான் கிளம்புறேன்னு சொன்னதும் டாக்டர் சார் நல்லா மூக்கை உறிஞ்சி உறிஞ்சி அழுதீங்க, அதுதான் போனால் போகுதுனு உங்ககூடவே இருந்திடலாம்னு என் ஹாஸ்டலை காலி செய்யப்போறேன்.” பெருந்தன்மையாய் சொல்வது போலவே பந்தா செய்துகொண்டு சொல்ல, அவளை முறைத்தவன், “நீயும் தான் அழுத, அழுமூஞ்சி.”
“பின்னே உங்களை தனியா விட்டுட்டு போவது எப்படியோ இருக்குள்ள.” என்று அந்த நாளை நினைவு கூர்ந்து அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டாள் இனியா.
“எனக்குமே அன்னைக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நீ எனக்கு எந்தளவுக்கு முக்கியம்னு புத்தி உணர்ந்துச்சு. அடுத்தவர்கள் உதவியின்றி வாழ்க்கை கிடையாதுன்னு முன்னரே தெரியும் ஆனால் நீ இல்லாமல் இனி வாழப் பழகுவது கொடுமையாய் இருக்கும்னு புரிந்தது. அதோட எனக்கு குணமாகாமல் போயிட்டா உன்னோட வாழ்க்கை என்ன ஆகும் என்ற பயம் வேறு… எதையுமே என்னால யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாததும் ரொம்பவே படுத்தியது.”
“அதுதான் தெரியுமே, நீங்க வாசித்த வயலினைப் பார்த்து ரெண்டே நாளில் மருத்துவமனையிலிருந்து எனக்கு அடித்துபிடித்து போன் செஞ்சாங்க.” என்று அலட்டலாகவே இனியா மொழிய, அவனின் தேடலுக்கு மொழி கொடுத்து முதன்முதலாய் தன்னை எவ்வளவு தேடியிருக்கிறான், தன்னை எந்தளவு விரும்பியிருக்கிறான் என்று அவன்வழியாய் கேட்கவும் காதல் கொண்ட மனதின் கர்வம் பெருகத்தான் செய்தது.
ஆனால் அவனுக்கோ துக்கம் பெருகி தொண்டையை அடைத்தது, “ஆனால் அன்றைக்கு நீ கொடுத்த ஆறுதல் அணைப்பை கூட என்னால உணரமுடியல இனியா. இப்போவும் நீ என்மேல சாஞ்சிட்டு இருக்க, என்னால அதை பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிகிறதே ஒழிய, உணர முடியல. உன்னோட அன்பை உணரனும்னு மனசு கிடந்து தவிக்குது.” தவிப்பும், ஏக்கமும், இயலாமையும் அவனை விட்டு அகல மறுக்க, உள்ளமோ சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு ஏங்கியது.
“இதெல்லாம் தற்காலிகம் என்று நீங்க தானே சொன்னீங்க. இவ்வளவு வருடம் அமைதியாக எல்லாத்தையும் சகித்துக்கொண்டு கடந்து வந்துட்டீங்க, இன்னும் கொஞ்சமே கொஞ்ச நாள் பொருத்துக்கோங்க நாம ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழலாம்.” இனியாவின் நம்பிக்கை வார்த்தைகள் அவனுக்குள் மாயம் செய்ய அவனது முகம் சற்று தெளிந்தது.
“இன்னமுமா அந்த கார் வரல, என்னனு போன் போட்டு கேளு இனியா.” என்று அவளை உந்த அவள் அழைக்கும் முன்பே அவளுக்கு அழைப்பு வந்தது கார் டிரைவரிடமிருந்து…
போர்டரின் துணைகொண்டு அனைத்து உடமைகளையும் காரில் ஏற்றியவள், பின்புறம் இதயன் விரல்களோடு விரல் பிணைத்து அமர்ந்துகொண்டாள். வழி நெடுக இனியாவின் மனம் நிர்மலமாகவும், இதயனின் எண்ணங்கள் பல சிக்கல்களையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தது. யோசனையினூடே தலையை அவள் புறம் திருப்பி, “நீ கண்டிப்பா ஹாஸ்டலை காலி செய்துதான் ஆகணுமா? இன்றைக்கு ஒருநாள் மட்டும் என்னுடன் இருந்துவிட்டு நாளையிலிருந்து அங்கேயே தங்கிக்கோ,”
“இப்போ தானே அதை பேசி முடித்தோம். திரும்ப என்ன உல்டாவாக ஆரம்பிக்குறீங்க?” அவனை நன்றாக முறைத்தவள் அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.
“இல்லை இனியா, நீ ஹாஸ்டலில் இருந்துகொண்டே வேலைக்கு செல்வது தான் சரிவரும்.” என்று அழுத்தமாய் கூறியவன் அதற்கான காரணத்தை கூறாமல்விட, அவள் சந்தேகமாய் அவனைப் பார்த்தாள்.
“இப்போ தான் என்னைவிட்டு தனியாக இருப்பது கொடுமையாக இருக்குனு சொன்னீங்க. அதற்குள் என்ன ஆச்சு? சலிச்சிடேனா?” என்றாள் ஒருமாதிரி குரலில்.
பதறியவன், “ஏய் என்ன வார்த்தை சொல்லிட்ட? ஏற்கனவே என்னோட சிகிச்சைக்கு மட்டுமே அங்கே அதிக செலவாகிறது. இதில் நீயும் அங்கே வந்து தங்கினால் செலவு எகிறும். இன்னும் எத்தனை நாள் அங்கே இருக்கணும்னு தெரியல, இருக்கும் பணத்தை எல்லாம் அவரசப்பட்டு செலவு செய்திடகூடாது.” என்று கவலையுடன் மொழிய அவள் முகம் கனிந்தது.
“அதெல்லாம் சமாளிச்சுக்கலாம். தேவைப்பட்டால் பணம் எளிதாக புரட்டிடலாம், நாம அவ்வளவு மோசமான நிலைமையில் இல்லை. அதையும்விட உங்களுடன் இருப்பதுதான் நம் இருவருக்குமே மனநிறைவாய் இருக்கும். இப்போதைக்கு அதுதான் தேவை.”
“எல்லாத்தையும் எளிதாக பேசிடுற, ஆனால் அந்த கடினத்தை கடந்துவருவது அவ்வளவு எளிதானதாய் தோணல…”
“நீங்க எதைத்தான் நேர்மறையாக யோசித்து இருக்கீங்க? எதை எடுத்தாலும் முடியாது, எனக்கு இது சரிவராது அப்படியே ஆறு வருடம் ஓட்டிட்டீங்க.” என்று எகிறினாள் இனியா.
மனைவி என்றானபின் சண்டையிடுவது கூட எளிதாய் வந்துவிடுமோ என்னமோ! அவனுக்கு அப்படித்தான் தோன்றியது. யோசியாது பேசி வாங்கிய திட்டை மனம் ஏற்க மறுக்க, தணிந்து போனான் அவன், “உன்னை கல்யாணம் செய்யணும்னு நினைத்தது கூட எதிர்மறையான யோசனைன்னு இப்போ தான் தெரியுது. கொஞ்சம் யோசித்திருக்கலாம். என்ன செய்ய காலம் கடந்துபோச்சு…”
[the_ad id=”6605″]
இந்த மனுஷன் ஒன்னு ஓவரா வருந்தி உருகுறாரு இல்லையா லெக்சர் அடிக்குறாரு அதை விட்டால் கேலி பேசுறாரு வேற எதுவும் செய்யுறது இல்லை என்று அவளது மனம் நினைத்துவைக்க, வெளியில் அவனை முறைத்துவிட்டு திரும்பி அமர்ந்துகொண்டாள்.
“நீ அங்கே வந்தால் எனக்கு கொடுக்கும் சாப்பாடே சாப்பிடுவ. அது வேணாம் இனியா உனக்கு.” அவளை தன்னுடன் வைத்துக்கொள்ள முரண்டும் மற்றொரு விஷயமாக அவளின் உணவு பழக்கம் இருந்துவிட, அவனது உணவான பத்திய சாப்பாட்டை அவளும் உண்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“அந்த சாப்பாட்டிற்கு என்ன எல்லாம் சத்தான ஆரோக்கியமான சாப்பாடு தான்.” ஓரிரு நாள் மட்டுமே அவனுக்கு செய்வது போன்ற உணவையே எடுத்துக்கொண்டிருக்க, இப்போது அதுவே தனக்கும் சிறந்தது என்றே தோன்றியது. முன்னர் பகட்டு உணவை மென்று விழுங்கியவையெல்லாம் இப்போது உடலுக்கு தீங்குள்ளதாய் தெரிய, அவனுக்கென்று தயாரிக்கப்படும் சத்தான தானிய கஞ்சியே அவளுக்கு அமிர்தமாகியது.
அவளை ஒருமுறை அழுத்தமாய் பார்த்தவன் வேறெதுவும் சொல்லவில்லை. அவனுக்குள் இருக்கும் மருத்துவன் விழித்துக்கொள்ள சத்தான உணவு என்று அவள் சொல்லிய பின்பும் அதை தவிர்த்துவிட்டு நாவிற்கு பிடித்த உணவுகளை எடுத்துக்கொள்ளச் சொல்லவும் மனம் வரவில்லை.
இதற்கு மேல என்ன சொல்ல என்ற குழப்பத்தில் அவன் மெளனமாகிவிட அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை, “என்ன அமைதியாகிட்டீங்க?”
“நான் என்ன சொன்னாலும் அதற்கு ஏதுவாக ஒரு பதில் வைத்திருப்ப, இறுதியில் உன்னோட வாதம் தான் வெல்லும். முடிவு தெரிஞ்சே எதற்கு சண்டையை வளர்க்கணும்?”
“இப்போ தான் என்னை சரியாக புரிஞ்சிருக்கீங்க,” என்று சிரித்தவள் அவன் கன்னத்தை கிள்ள, அவனுமே அவளுடன் சேர்ந்து இனிய நினைவுகளை சேகரித்துக் கொண்டான்.
நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர, இனியாவுக்கு இதயனின் உடல் வலிகளும் நடைமுறை சிக்கல்களும் புரியத்துவங்கியது. அவனுக்கு செய்யும் எண்ணை மசாஜ் கைகளில் கட்டுகடங்கா வலியைத் தர, அதை போக்க மென்மையான மசாஜ்களும் கொடுக்கப்பட்டாலும் அருகிலிருந்து அனைத்தையும் பார்க்கும் போது மனம் கனத்துப் போனது. இன்னும் எத்தனை வலியை அவன் தாங்கிட வேண்டும் என்ற எண்ணம் அவளை அவ்வப்போது துவலவும் செய்தது. கைகளுக்கு உடற்பயிற்சிகள் கொடுக்கவும் இப்போது நன்றாகவே எல்லாவற்றையும் பிடித்துப்பார்த்து உணரமுடிந்தது. சுலபமாக கைகளை அசைக்கவும் வர, இனியா அவனுக்கென்று ஒரு அலைபேசியை வாங்கிக் கொடுத்திருந்தாள். வீட்டில் உள்ளவர்களிடம் இப்போது அவனால் நினைத்த நேரத்திற்கு பேச முடிந்தது. சிவகாமியோ இந்த உலகத்திலேயே இல்லை, மகனின் முன்னேற்றத்தில் வேண்டுதல் வைத்திருந்த கோவிலுக்கு எல்லாம் சென்று வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இனியாவுக்கு தெரியாமல் அஜயை நோட்டம்விடும் வேலையும் நடந்துகொண்டிருந்தது.
“அஜய் எந்த நோயாளியையும் பார்ப்பது கிடையாது மிஸ்டர். இதயன். ஹீ ஈஸ் க்லவர். மனநல ஆலோசனை மட்டும் தான் கொடுக்கிறான். மற்ற எந்த நோயாளி வந்தாலும் சாமர்த்தியமாய் வேறு மருத்துவரிடம் அனுப்பிவிடுகிறான். நாங்களும் முயற்சி செய்துட்டு தான் இருக்கோம் ஆனால் அவனுடைய சொந்த மருத்துவமனை என்பதால் அவன் தப்பிடுறான்.” என்று உளவாளியிடம் இருந்து செய்தி வர, மண்டை காய்ந்தது இதயனுக்கு. என்ன செய்து அஜயை மாட்டவைப்பது என்று புரியாமல் குழம்பிப்போய் இருக்க, தானே களத்தில் இறங்கினால் தான் இது நடக்கும் என்று புரிய, சரியாகிட வேண்டும் என்ற வெறி அவன் குருதியில் ஊறி கொதித்துக் கொண்டிருந்தது.
“என்ன பலமான யோசனையில் இருக்கீங்க? யார் போன் பண்ணாங்க?”
இரவு வேலை உணவு முடிந்திருக்க இருளின் ஏகாந்தத்தை ரசிக்கவென மென்மையான பாடல்களை பின்னணியில் இசைக்க விட்டிருந்தாள் இனியா. முன்னர் தன்னிலை இழக்கச் செய்து ஒரு வித போதையை கொடுத்த ராப் மற்றும் அதிவேக மெட்டுக்கள் உள்ள பாடல்கள் அனைத்தும் தற்போது மனதின் அமைதியை குலைப்பவையாகியது. அவன் மனம் எப்போதும் நேர்மறையாய், தன்னம்பிக்கை மிக்கதாய் இருக்கவேணுமென இப்போது ஒலிக்க விடும் பாடல்கள் அனைத்துமே மெல்லிசைக் கானமாகிப்போகின அவளுக்கு.
[the_ad id=”6605″]
“இந்த அஜய் மண்டைக்குள் குடஞ்சி இம்சை செய்கிறான் இனியா. ஒருவிதத்தில் அவன் மருத்துவம் பார்க்காதது பல உயிர்களை காப்பவையாக இருந்தாலும் அவனைப் போன்றவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து மக்கள் சேவையாற்ற அனுமதிப்பது தீவிரவாதத்திற்கு சமம்.”
“என்ன சொல்றீங்க? புரியல?”
“சரியான ஆதாரம் இல்லாதவரை என்னுடைய யூகமே உண்மையாக இருக்கும்னு சொல்ல முடியாது.”
“அப்படி என்ன சந்தேகம்னு சொல்லவே மாட்டேங்குறீங்க.” மீண்டும் குறைபட்டுக் கொண்டே அவன் கால்களை இதமாய் பிடித்து விட்டாள் இனியா.
“நேரம் வரும்போது கண்டிப்பா சொல்றேன். என் இடக்காலை கொஞ்சம் பிடித்துவிடேன் லேசாக வலிக்குற மாதிரி இருக்கு.” என்கவும் துள்ளிக்குதித்து எழுந்தவள் அவனை ஆவலாய் நோக்கி,
“உண்மையாகவே வலிக்குதா உங்களுக்கு?” அவள் கேள்வி ஆர்வமாய் வர, வலி இருக்கிறதா என்பதை எவ்வளவு ஆனந்தமாய் கேட்கிறாள் என்ற சிந்தை தான் எழுந்தது அவனுக்கு.
“வலிக்குதுன்னு சொல்றேன். நீ என்ன சந்தோஷமா என்னிடம் கேள்வி கேட்டுட்டு இருக்க. நீவிவிடு இனியா.” அஜய் பற்றிய யோசனையைத் தவிர வேறெதுவும் அவன் மனதில் இல்லை என்பதால் அவளின் உவகைக்கான காரணம் புலப்படவில்லை.
அவனின் அசிரத்தையில் அவளது மனம் ஒருநொடி துவண்டு பின் மீண்டது. அவனது எண்ணம் முழுதும் வேறிடத்தில் இருக்க, தன் நுனிவிரல் கொண்டு அவன் உள்ளங்காலில் கூச்சத்தை மூட்ட வெளிப்படையாய் வெளிப்பட்டது அவனது எரிச்சல்.
“இனியா என்னடி செய்யுற? வலிக்குதுன்னு சொன்னால் கூச்சமூடிட்டு இருக்க. உன்னால முடியலைன்னா ஹெல்பரை கூப்பிடு அவங்க நீவிவிடுவாங்க.” என்று அவன் எரிச்சலாய் குரலை உயர்த்த சினம் கொண்டவள் அவன் கணுக்காலை நன்றாக கடித்து வைத்தாள்.
ஆவென்று அலறியவன் அனிச்சையாய் கைகளை கால்களுக்கு கொண்டுசெல்ல அவனது உடல் அசைவு கொடுப்பது போன்ற உணர்வை உணரமுடிய, மின்சாரம் பாய்ந்தது அவனிடத்தில்.
“இனியா எனக்கு… என்னால உணரமுடியுது. நீ என் காலை கடிச்சதானே? வலிக்கூட தெரியுது இனியா.” உணர்ச்சிகள் ததும்ப, அவன் குரலில் நம்பகத்தன்மை குறைந்தே காணப்பட்டது.
உடல் வலி எவருக்கும் இத்தனை ஆனந்தத்தை கொடுத்திருக்காது. வலியை எவரும் இத்தனை ஆர்வமாய் வரவேற்றும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த தம்பதியர் உவகையுடன் அதனை கொண்டாடினர். அவனின் உணர்ச்சிகளற்ற நிலையை கண்டு மனம் பலமுறை வலித்திருக்க, இன்று இதயனின் கால்கள் வலிப்பது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது இனியாவுக்கு.
அந்த மகிழ்ச்சி அவள் வதனத்தில் ஒளிர, ஆர்வமாய் மேலேறி அவனை நெருங்கியவள் அவன் கன்னத்தை தன் இருக்கரங்களிலும் தாங்கிக் கொண்டு, “உங்களால உணர முடியுதுங்க. உங்களுக்கு உணர்வு வந்துடுச்சு.”
கண்களில் நீர் தழும்ப தன் முகத்தை தாங்கியிருந்த அவளது கரத்தினை அழுந்தப் பிடித்தவன் அதில் நீண்டதொரு முத்தம் வைத்து, “உன்னை இவ்வளவு நெருக்கமாய் பார்க்கும் போது உன்னை வேற என்னன்னம்மோ செய்யணும்னு கூட தோணுது இனியா.” கிசுகிசுப்பாய் அவன் குரல் ஒலிக்க, நாணியது அவளுடள்.
இதயனின் பேச்சுக்களில் இதயம் தடதடக்க வறண்ட தொண்டையை ஈரப்படுத்தியவள், “நான் என்ன பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன பேசுறீங்க?”
“எனக்கு உண்மையாவே இப்போ என்னவோ செய்யத் தோணுது,” என்க, இம்முறை பதறி விலகிவிட்டாள் அவள்.
அவளின் வேகத்தை கண்டு சத்தமாய் நகைத்தவன், “கால்களை அசைக்க முடியுதான்னு பார்க்கணும்னு தோணுது, வேற ஒன்றும் இல்லையே.” என்று அவன் தோள்களைக் குலுக்க, இதை நான் நம்பணுமா என்ற பாவனையே அவளிடத்தில்.
“நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன். அதுவரை பொறுமையா இருங்க. அவசரப்பட்டு நாமே எதையும் முயற்சி செய்துபார்க்க வேண்டாம்.” என்று அவனை எச்சரித்துவிட்டு அவள் வெளியேற, அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தவன் தன்னருகில் மேசையில் இருக்கும் இரவுக்கான மருந்துக் குடுவையை தட்டிவிட்டான்.
