Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 35.2

தாடை எலும்புகள் புடைக்க, பற்களை அழுந்த கடித்தவன் தன் அலைபேசியை எடுத்து வேகமாக அழைத்தான். மறுமுனையில் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கான அரவம் விழவும், “என்ன மிஸ்டர். அஜய் எப்படி இருக்கீங்க?” சிங்கமென கர்ஜித்தது இதயனின் குரல்.

“ஹலோ யார் பேசுறது?” இதயனின் குரலை இனம்காணத் தெரியாதவன் கேள்வி எழுப்ப, நக்கலாய் பதில் கொடுத்தான் இதயன்.

“அதுதானே என் குரல் எப்படி நியாபகம் இருக்கும் மிஸ்டர். அஜய்?”

“புல்ஷிட்.”



Advertisement

“ஆறு வருடம் ஆச்சே எப்படி என் குரல் எல்லாம் நியாபகம் இருக்கும்.” என்று வஞ்சம் வைத்து இதயன் பேச, மறுபுறம் அஜய்யின் முகம் இறுகியது.

“என்ன சத்தத்தையே காணோம்? என்னடா திடீர்னு கூப்பிட்டு இருக்கேனு பார்க்குறீயா? எல்லாமே உங்க சித்து விளையாட்டு தான் மிஸ்டர். அஜய்.”

“என்ன உளறுகிறாய் இதயன்?”

Advertisement

“என்னைக்கும் இல்லாமல் ரெண்டு வாரமே ஒருத்தன் என் ரூம் பக்கமே சுத்திட்டு இருந்தான். என்ன தான் செய்யுறானு நானும் அமைதியா இருந்தேன். இன்னைக்கு பார்த்தால் நான் தூங்குறேன்னு நினைத்து என் அறையில் இருக்கும் மருந்து பாட்டில்களை உருட்டிவிட்டு எதையோ புதிதாக வைத்துவிட்டு போயிட்டான்.”

Advertisement

“அதற்கு எதற்கு எனக்கு போன் பண்ணியிருக்க?”

“நன்றி சொல்லத்தான் மிஸ்டர். அஜய். உங்கள் மேல் இதுவரை எனக்கு சந்தேகம் தான் இருந்தது. ஆனால் அது இப்போது உறுதியாகிடுச்சு. நீ அனுப்பி வைத்த ஆள் சிசிடிவியில் சிக்கிட்டான்.” என்று சிரிக்க, அஜய் அங்கு சென்னையில் அதிர்ந்து விழித்தான்.

“என்ன?” அஜய் குரலில் மெலிதாய் பதட்டம் எட்டிபார்த்தது.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

“நீ அமைதியாக இருந்தால் நானும் அமைதியாகவே இருப்பேன். இல்லை என்னை சும்மா விடமாட்டேனு கங்கணம் கட்டிக்கிட்டு வேற எதுவும் சதி செய்தால் நானும் சும்மா இருக்க மாட்டேன், என்னிடம் இருக்கும் ஆதாரமும் சும்மா இருக்காது.” இதயனின் குரலில் எச்சரிக்கை கூடியிருக்க விழி இனியா வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே இருந்தது. மருந்துகளை மாற்றி வைத்த விஷயம் அவளுக்கு தெரிந்தால் துடுத்துவிடுவாள், தேவையில்லாத மனக்கஷ்டம் என்று அவன் மறைத்திருக்க, இனி எதையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற குருட்டு தைரியமும் வந்திருந்தது.

“என்ன நீயா போன் செய்து என்னவோ உளறிக்கிட்டு இருக்க? மூளையும் குழம்பிவிட்டதா கார்டியாலாஜிஸ்டுக்கு?” முதலில் சரிந்தவன் பின் சுதாரித்துக்கொண்டு மீசையில் மண் ஓட்டாத குறையாய் எதிர்கேள்வி எழுப்பினான்.

“குழம்பிய குட்டை தெளிவாகிடுச்சு மிஸ்டர். அஜய். என்னை சீண்டினாலோ இல்லை என்னை ஒரேடியாக தீர்த்துக்கட்ட முயன்றாலும் உன்னைப் பற்றிய ஆதாரம் எல்லாம் போலீசிடம் போகாது நேராக மீடியாவுக்கு போயிடும். அப்புறம் எல்லாம் தானாக நடக்கும். சோ எது உனக்கு வசதியோ அதை பாலோ பண்ண பழகிக்கோ.” என்றவன் சட்டென அழைப்பை துண்டித்துவிட்டான்.

“என்ன ஆதாரம்?” சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்து ஒன்றும் புரியாது இனியா கேள்வி எழுப்ப,

“அஜய்யிடம் தான் பேசினேன். ஆதாரம் எல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா மிரட்டினேன்.”

“இதெல்லாம் அவன் எப்படி நம்புவான்? அவனே சரியான கேடி.” இதயனின் யோசனையில் அதிருப்தி அவளிடம்.

“அது எனக்கும் தெரியும். ஆதாரம் உண்மையாகவே நம்மிடம் இருக்கா இல்லையா என்றாவது குழம்புவான் தானே? நன்றாக குழம்பட்டும் இல்லைனா குழப்பி விடுகிறேன். குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும்.” என்று சபதம் பூண்டவன் மனதில் அஜயை ஒழித்துக்கட்டுவதற்கான வெறி இருந்தது.

“அவன் மீன் இல்லை திமிங்கலம்.” என்று அவள் எச்சரிக்க,

“மீனோ திமிங்கலமோ தப்பு செய்கிறவனிடம் கண்டிப்பாக பயம் ஒளிந்துக்கொண்டிருக்கும். அதை தூண்டிவிட்டால் போதும் அவங்களே அவங்களை காட்டிக்கொடுத்துடுவாங்க. இது சும்மா ஒரு ட்ரை தான் மற்றபடி அவனைப்பிடிக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டு தான் இருக்கு.”

“என்னமோ செய்யுங்க. நீங்க திரும்ப பிரச்சனையில் போய் மாட்டிக்காதீங்க.”

“டாக்டர் வரல?”

“வரேன்னு சொன்னாங்க.” என்றவள் அவனது உடைகளை சரிசெய்து அவனை நேராய் படுக்க வைக்க, மருத்துவரும் வந்து சேர்ந்தார்.

 

[the_ad id=”6605″]

 

 

அவனை சோதித்துவிட்டு சிலபல சிகிச்சை முறைகளில் மாற்றம் கொண்டுவந்து, தொடர் உடற்பயிற்சிகள் மூலம் சீக்கிரமே எழ முடியும் என்று சொல்லிவிட்டு செல்ல, இனியா பறக்காத குறைதான். இந்த மகிழ்ச்சியான செய்தியை உடனே குடும்பத்திற்கு கடத்திவிட, மூன்று நாளில் அந்த மருத்துவமனைக்கு வந்திறங்கினர் இன்பனும், யுக்தாவும்.

“என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கீங்க?”

“நீங்க  ஹனிமூன் போகச் சொன்னீங்க, அதுதான் வந்துட்டோம்.” என்று இன்பன் கைவிரித்துவிட்டு அண்ணனை செல்லம் கொஞ்ச சென்றுவிட, யுக்தாவை முறைத்தாள் இனியா.

“நான் என்ன சொன்னேன், நீ என்னடி செய்து வச்சிருக்க? பேக் எல்லாம் எடுத்துக்கிட்டு இங்கேயே தங்க வந்துட்டீங்க? அட்லீஸ்ட் வேற இடத்திலாவது தங்கி இருக்கலாம். இங்கே படகு இல்லம் நல்லாயிருக்கும்.”

“இது ஹாஸ்பிடல் மட்டும் இல்லை, இயற்கையோட இணைந்த ரெசார்ட்டும் தான் பேபி. அதுதான் இங்கேயே வந்துட்டோம். உங்களுடனே இருந்த மாதிரியும் ஆச்சு நாங்க வெளியேப்போன மாதிரியும் ஆச்சு.” என்றுவிட இனியாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில் யுக்தா சொன்னது போலவே அது மருத்துவமனை மட்டுமல்ல ஆர்பாட்டமற்ற இயற்கையை ஆராதித்து ஓய்வு எடுப்பதற்கான விடுதியையும் தன்னகத்துள் சேர்த்தே வைத்திருக்கிறது. எண்ணை குளியலுக்கு மட்டும் அதற்கான இடத்திற்கு செல்ல வேண்டும் மற்றபடி பார்வைக்குக்கூட அவ்விடம் மருத்துவமனை போலத் தெரியாது.

ஒருவாரம் உடன் இருந்து அந்த வளாகத்துக்குள்ளே இருக்கும் தோட்டங்கள், ஜிம், நீச்சல் குளம் என்று அதற்குள்ளேயே சுற்றி சுற்றி வந்தனர் இளையத் தம்பதியர். இதில் சொல்லச்சொல்ல கேட்காது இனியா அலுவலகம் கிளம்பிச் செல்லவும் இதயனையும் சக்கரநாற்காலியில் அழைத்துக்கொண்டு சுற்றினார்கள்.

“எவனும் இந்த மாதிரி ஒரு ஹனிமூன் போயிருக்க மாட்டான் இன்பன். நீ சொல்பேச்சையே கேட்க மாட்டேங்குற.” என்று இதயன் தன் தம்பியை கடிந்துகொண்டும் எந்த பயனில்லை. இன்பனின் செயலில் யுக்தாவை காணத்தான் தயக்கமாய் இருந்தது இதயனுக்கு.

ஒருவழியாக அவர்கள் கிளம்பிச்சென்ற மாதம் கழித்து இதயன் மெல்ல தானாக எழத் துவங்கினான். கால்களை கீழே இன்னும் ஊன்ற முடியவில்லை என்றாலும் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டான். இதயனின் முன்னேற்றம் ஒவ்வொன்றையும் தன் இருவீட்டிற்குமே உடனே உடனே தெரியப்படுத்தினாள் இனியா.

“நீங்க எப்போ எழுந்து நின்று நடப்பீங்கனு ஆர்வமா இருக்கு?” மேவாயை அவன் நெஞ்சினில் பதித்து ஆவலுடன் அவள் ஆசையை பகிர்ந்துகொள்ள, தன் இருகரம் கொண்டு அவள் கன்னத்தை பிடித்து தன்னருகில் இழுத்து, அவள் நாசியோடு நாசி உரசியவன், “ஏனாம்?”

“இதென்ன கேள்வி? எவ்வளவு நாளா எதிர்பார்க்கிறோம். இங்கே வந்தே மூன்று மாதம் ஆகப்போகுது.”

“நான் எழுந்து நடந்தால் என்ன தருவ?” கட்டைவிரல் அதன்போக்கில் அவள் கன்னத்தில் கோலமிட்டுக் கொண்டிருந்தது.

“நீங்க தான் எனக்கு ஒன்னு தரணும்,”

“என்ன தரணும்?” என்ன கேட்கப்போகிறாள் என்ற ஆவல் அவனிடத்தில் வெளிப்பட, அவன் விழிகளோடு விழி கலந்தவள், “என் பக்கத்தில் நெருங்கி வந்து…” வேண்டுமென்றே சன்னமாய் மொழிந்தவள் தேவையான இடத்தில் இடைவெளிவிட்டு அவனை உசுப்ப, அவன் எண்ணங்கள் சிதறியது.

“வந்து?”

“அப்படியே உங்க கையை…”

“என் கையை?”

“என் தோள் மேல போட்டு ஒரு போட்டோவுக்கு போஸ் தரணும்.” என்று சிரியாமல் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல, தலையை உயர்த்தியவன் முன்னறிவிப்பு இன்றி அவளது கன்னங்களை வலிக்காதவாறு கடிக்க, அவனது புஜத்தில் ஒரு குத்து விட்டவள் மீண்டும் அவனது நெஞ்சத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

“என்னை உங்களால உணரமுடியுதுன்னு தெரியும்போதே சிலிர்ப்பா இருக்கு. நீங்க எப்போ எழுந்து என் கை பிடித்து நடப்பீங்கனு ஆசையா இருக்கு.”

“அப்போ ஆசையை நிறைவேற்றிவிட வேண்டியது தான்,” என்றவன் அவளை எழுப்பிவிட்டு தானும் கைகளை மெத்தையில் வைத்து ஊன்றி எழ,

“அச்சச்சோ சும்மா இருங்க. அவசரப்பட்டு நடந்து எங்கேயாது நரம்பு பிடிச்சுக்க போகுது.” என்று பதறியவள் அவன் தோள்களை பற்றி அவனை மெத்தையில் தள்ள முற்பட அவளைத் தடுத்தான் இதயன்.

“அப்பப்போ கொஞ்சம் நடக்க சொல்லி இருக்காங்க இனியா. கொஞ்ச கொஞ்சமா நடந்தால் தான் கால்கள் பலப்படும்.” என்றவன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு நடுங்கும் கால்களை மெல்ல தரையில் பதித்து கீழே இறங்க, அவனின் கனத்தை தாங்கமுடியாமல் தடுமாறிப்போனாள் இனியா. அதற்குள் அவன் மேல்மூச்சு கீழேமூச்சு வாங்கியிருக்க, வலியை பொறுத்துக்கொண்டு ஓரிரு நொடி மெத்தையிலேயே அமர்ந்து, “இத்தனை வருடமா படுத்தே இருந்தததால் உணர்வு வந்தவுடன் ரொம்ப வலிக்குதுடா.”

“நீங்க அமைதியா படுங்க. இதெல்லாம் அப்புறம் செய்யலாம்.”

“இல்லை இல்லை… இனியும் தாமதிக்க கூடாது. நீ என்னை சுத்தி கைபோட்டு பிடிச்சிக்கோ அப்போ தான் பேலன்ஸ் வரும். இல்லைனா போய் வாக்கர் வாங்கிட்டு வா.” என்க, அவள் மறுப்பாய் தலையசைத்துவிட்டு தன் கைகளை அவன் இடைசுற்றி போட்டுக்கொண்டு அவனை தாங்கிக்கொள்ள, அவளை மட்டுமே பற்றுகோலாய் வைத்து அடி மேல அடி எடுத்துவைத்து சிறுகுழந்தை போல நடை பயின்றான் இதயன். இனியாவுக்கு அதிக சிரமம் கொடுக்கிறோம் என்ற யோசனை அவ்வப்போது எழுந்தாலும், தம்பியிடம் சொன்னது போல இனியாவிடமும் வருத்தத்தை வெளிப்படுத்தி அவளின் அன்பை கொச்சைபடுத்த விரும்பவில்லை. அது உண்மையிலேயே ஆறுதலாய் இருந்தது இனியாவுக்கு. தங்களின் உறவில் என்றுமே  அவனுக்கு தாழ்வுணர்ச்சி வந்துவிடக் கூடாதென பார்த்துபார்த்து நடந்துகொண்டாள் அவளும்.

அவர்களின் உழைப்பிற்கான பலன் மூன்றாம் மாத இறுதியிலேயே கிடைத்தது. வாக்கர் வைத்து நடந்து கொண்டிருந்தவன் அதன் துணையின்றி மெதுவாய் நடக்கத் துவங்கினான்.

அவன் உயரத்திற்கு நெடுவென உசந்து நிற்பவனை அவள் நிமிர்ந்து தான் பார்க்க வேண்டியதாய் இருந்தது.

“இவ்வளவு உயரமா யார் உங்களை வளரச் சொன்னா?” என்று அவனிடம் சண்டை வேறு…

“நீ வளராம இருந்துட்டு என்னை வளர்த்தினு சொல்லு,” என்று அவனும் சீண்ட, அவன் நடக்கத்துவங்கிய மறுநாளே இன்பன் குடும்பத்துடன் அவனைக் காண வந்துவிட்டான்.

“இப்போ தான் பெத்தவ மனசு குளிர்ந்திருக்கு,” கண்கள் கலங்க தன் முழு உயரமும் உசந்து நின்ற மகனின் கைகளை பிடித்துக்கொண்டு அவனைவிட்டு நகரவே இல்லை சிவகாமி.

 

[the_ad id=”6605″]

 

 

“அம்மா அழாத. அதுதான் எல்லாம் சரியாகிடுச்சே,” என்றவனும் அன்னையை தன்னுடன் அணைத்துக்கொள்ள, இன்பன் ஒரு இறுகிய அணைப்பை இதயனுக்கு கொடுத்துவிட்டு தான் அன்னைக்கே வழிவிட்டிருந்தான்.

“எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி இனியா அலுவலகம் பக்கமே வீடு பார்க்கச் சொல்லியிருக்கேன். நீ வந்து பைனல் செஞ்சா இப்போவே முன்பணம் கொடுத்திடலாம் இனியா.” இதயன் அருகிலேயே அமர்ந்துகொண்டு இனியாவை நோக்கி கேள்வியை முடித்தான் இன்பன்.

இன்பனின் கேள்வியில் அதிருப்தியுற்ற சிவகாமி, “அங்க நம்ம வீடு இருக்கும் போது எதற்குடா இங்கே வீடு பார்த்து வச்சிருக்க?”

“இங்கே மாற்றல் கிடைத்து மூன்று மாதம் தானே ஆகுது அத்தை. உடனே எல்லாம் திரும்ப சென்னைக்கு மாற்றல் வாங்க முடியாது. இன்னும் ஒரு வருடமாவது இந்த ஊரில் தான் இருக்குற மாதிரி வரும். இங்கே மருத்துவமனையிலும் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொல்லிட்டாங்க.” இன்பனுக்கு முன்னே இனியாவே பதில் கூறினாள்.

“இன்னும் ஒரு வருடமா? அதுவரை இதயனும் இங்கே தான் இருக்கணுமோ… நீ வேலையை விட்டுட்டு அங்கேயே வந்துருங்களேன் இனியா.” ஆறு வருடமாய் அருகிலேயே இருந்த மகன் இப்போது குணமாகிவிட்ட மகிழ்ச்சி இருந்தாலும், இனியும் அவனை பிரிந்திருக்க மனமில்லை அவருக்கு. விட்டால் இதயனை தன்னுடனே அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார். ஆனால் இப்போது மகன் வாழ்க்கையில் மருமகள் நுழைந்துவிட்டாளே… அவளையும் அல்லவா பார்க்க வேண்டும்.

சிவகாமியின் வேண்டலில் இனியா அதிர்ந்தது உண்மை. அவள் சொன்ன அனைத்திற்கும் இதுவரை மறுப்பு சொன்னதில்லை அவர், அப்படியிருக்கையில் மகன் சரியானதும் மாமியார் கொடி உயர்த்துகிறார்களோ என்றே தோன்றியது அவளுக்கு.

“இந்த காலத்தில் வேலை கிடைப்பதே அரிது. இப்போது போய் வேலையை விடச்சொல்ற? அவளுக்கு வேலைக்கு போகத்தான் விருப்பம். அவள் விருப்பத்துக்கே விட்டுருங்க. நீ எங்ககூடவே இங்கேயே இரு.” மனைவியையும் விடவில்லை, அன்னையையும் விடவில்லை அவன்.

இனியா வேலைக்கு செல்வது அவள் விருப்பம் என்று மேலோட்டமாக சொல்லிவிட்டாலும் உண்மையாகவே அவள் இப்போது வேலைக்குச் சென்றால் தான் தங்கள் குடும்பம் ஓடும் என்ற நிர்பந்தம் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது. இனியா வேலையை விட்டுவிட்டால் இருவருமே சில நாட்களுக்காவது இன்பனையும், யுக்தாவையும் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் வரும். அவன் நிலையாக நின்று ஒரு வேலையை தேடிக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் ஓட ஒரு வருடமாவது ஆகும் அதுவரை இன்பனின் தயவிலேயே வாழ்வது உசிதமாகப்படவிலை. நாளையே இன்பன் குடும்பம் வளரும், அவன் குழந்தைகளுக்காக அடுத்து அவன் ஓடத்துவங்க வேண்டும் இதில் தானும் வேறு சேர்ந்துகொள்வதா என்ற நெருடல் இதயனை வெகுவாய் தாக்க, அவன் தான் இன்பனிடம் சொல்லி கொச்சியிலே இனியா அலுவலகத்திற்கு அருகில் வீடு பார்க்கச் சொல்லியிருந்தான். 

“என்னவோ செய்யுங்க, ரெண்டு பசங்களும் ஒரேவீட்டில் இருந்தால் நல்லாயிருக்கும்னு பார்த்தேன்.” வேறு வழியின்றி சிவகாமி ஒப்புதல் தர,

“இதெல்லாம் கொஞ்ச நாள் தாம்மா. நீ எதையாவது நினைச்சுகிட்டு இருக்காத.” இன்பனும் தன்பங்கிற்கு சொல்லிவிட, ஒருவழியாய் அவரை சமாதானப்படுத்தினர்.

அடுத்த வாரமே புதுவீட்டில் பால்காய்ச்சி குடிபோக, இனியாவின் குடும்பமும் வந்திருந்தது.

“உங்களை இப்படி பார்ப்பது ரொம்ப  சந்தோசம்  மாப்பிள்ளை. இப்போது தான் என் மகள் முகத்தில் பொலிவே வந்திருக்கு.”   என்று கீதா பேச, ரமேஷ் அவனை மேலும்கீழும் பார்த்தார்.

முதல் முறை பார்த்ததற்கு நேர்மாறாய், மருந்துகளாலும் உடல் உழைப்பின்றி நிலையாய் இருந்தாலும் வேகமெடுத்து பெருகிப் போயிருந்த தேவையற்ற கொழுப்புக்களும், நச்சுக்களும் வெளியேறி உடல் மசாஜ் மற்றும் தொடர் பயிற்சியாலும் சிக்கென்று மாறியிருந்தான் இதயன். மகளின் அருகே அவன் நிற்கையில் பார்க்க நன்றாகவும் இருக்க, மெச்சுதல் வந்தது அவரிடம்.

“மாம்ஸ் கலக்கிட்டீங்க.” என்று அவனை கட்டிக்கொண்டது வேறு யாராக  இருக்கும்  இனியனைத்  தவிர… 

“டேய் அவர் என் வீட்டுக்காரர்டா… எல்லாம் சரியானதும் நானே இன்னும் அவரை…” தம்பியின் கொஞ்சலைக் கண்டு ஏதோ ஒருவேகத்தில் என்பதைவிட பொறாமையில் இனியா பொங்கிட, இதயன் பதறிப்போய் அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.

“நீயே இன்னும் கட்டிப்பிடிக்கலையா… இந்த  நல்லா கட்டிக்கோ உன் வீட்டுக்காரரை.” என்று இனியனோ நகைப்புடன்  இனியாவை இதயனிடம் தள்ளிவிட, இதயன் தன் கரத்தினுள் அவளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அதுவே அவர்களின் முதல் அணைப்பாய் இருந்தது.

இதற்கு முன்னர் பலமுறை அவன் உடல் உபாதையால் அவதிப்பட்டபோது அவனை தொட்டு எல்லாம் செய்திருக்கிறாள், அணைவாய் தாங்கிப்பிடித்து நடைபயில உதவியிருக்கிறாள் தான். ஆனால் குணமான பின்போ அந்த மருத்துவமனையில் இருந்து கிளம்புவது, புது வீட்டிற்கு தேவையான அனைத்தும் வாங்குவது, சிகிச்சை முடிந்திருந்தாலும் வீட்டிலும் இதயனுக்கு இன்னுமே சில உடற்பயிற்சிகளும் இன்னபிற விஷயங்களையும் தொடரச் சொல்லியிருக்க அதனை தெரிந்துகொள்ளவும் நேரம்  சென்றுவிட உடல் களைப்பில் வேறெதுவும் நினைவிலேயே இல்லை. இப்போது குடும்பம் சூழ்ந்திருக்க இனியன் செய்து வைத்த காரியம் அவளுக்கு கூச்சத்தை கொடுக்க, இதயன் அணைப்பிலிருந்து பட்டென்று வெளிவந்தாள் இனியா. இதயனோ அசடு வழிந்தபடி நிற்க, அவர்களின் இந்த நிலைமையைக் கண்ட அனைவருக்குமே மனம் நிறைந்து போனது.

“எல்லோரும் சாப்பிட வாங்க…” கீதா நிலைமையை கலைக்க,

“மாம்ஸ் இப்போவே நல்லா சாப்பிட்டுக்கோங்க. நாங்க எல்லோரும் கிளம்புனதும் உங்க அருமை மனைவி சமைக்குறதுக்கு பெயர் தான் சாப்பாடுனு கண்டுபிடிப்பதே கஷ்டம். உங்கப்பாடு  திண்டாட்டமா தான் இருக்கப்போவுது…” என்று இனியன் இதயனின் காதைக் கடிக்க இதயனுள் வேறு யோசனைகள். 

குடும்பம் முழுதும் ஒரேஇடத்தில்  கூடியிருக்க தைரியமாய் அவர்களுடன் இனியாவை விட்டுவிட்டு, நிறைய வசவுகளை வாங்கிக்கொண்டு இன்பனோடு காரில் எங்கோ அன்று இரவே புறப்பட்டுச் சென்றான்.

 

[the_ad id=”6605″]

 

 

“என்னமோ மாப்பிள்ளை நல்லத்தம்பி தங்கக்கம்பினு புகழ்ந்து என்னையும் இங்கே இழுத்துட்டு வந்தீங்க அம்மாவும் பையனும். பாரு நாம வந்திருக்கோம் அதைக்கூட மதிக்காமல் எங்கேயோ கிளம்பி போயாச்சு. எங்கன்னு பாப்பாவுக்குக்கூட தெரியல. இதுதான் புருஷ லட்சணமா?”  என்று ரமேஷ் மறுநாள் நடுவீட்டில் நின்று சத்தம்போட மெளனமாய் கண்ணீர் மட்டுமே சிந்தமுடிந்தது இனியாவால்… 

தந்தை இறங்கி வந்துவிட்டார் இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பில் இருக்க, இதயன் இப்படி திடுமென எங்கே என்று கூடச்சொல்லாமல் கிளம்பியது அவன் மேல் கட்டுக்கடங்காத ஆத்திரத்தை  ஏற்படுத்தியது இனியாவுக்கு. அவனுக்காக தந்தையையே எதிர்த்து நின்று திருமணம் செய்திருக்க, அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்காமல் சென்றவனுக்கு எப்படி வக்காலத்து வாங்குவாள் அவள் குடும்பத்தினரிடம்?

“ஏதாவது காரணம்  இருக்கும்ப்பா. இந்த  நிலைமையிலும் மாமா கிளம்பி  போயிருக்காங்கன்னா ஏதாவது விஷயம்  இருக்கும்.” சிவகாமியால் கூட தன் மகன்  சார்பாய் பேச முடியவில்லை. இனியன்  தான் பேசினான்.

“சும்மா சமாளிக்காடா…” ரமேஷின்  வார்த்தைகளில் கடுமை கூடியிருந்தது. இத்தனை நாள் அமைதியாக இருந்த மனிதர் இன்று ருத்திரத்தாண்டவம் ஆடக் காத்திருந்தார்.

அதுவரை அமைதியாக இருந்த யுக்தா தன் அலைபேசியில் குறுஞ்செய்தி வரவும், அதை படித்துவிட்டு வேகமாக புதிதாய் மாட்டியிருந்த டீவியை உயிர்பித்து தமிழ் செய்தி சானலை வைத்தாள்.

“ஆளுங்கட்சி பிரமுகரும், முன்னாள் மத்திய மந்திரியுமாகிய திரு. ரத்தினத்தின் மகன் அஜயரத்தினம் கைது. அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனையை கைப்பற்றி சீல் வைக்கும் வேலைகள் மும்மரம்.” என்ற செய்தி யாருக்கு அதிர்ச்சியோ இல்லையோ ரமேஷிற்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. 

*^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!