Skip to content
Post Views: 758
காதல் தேவன் சன்னதி
அத்தியாயம் -3
இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. தன் கண்களைத் தன்னால் நம்பவே முடியவில்லை. யாரை இனி தன் வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்று எண்ணினாளோ, யாரை மறக்க முடியாமல் அனுதினம் தவித்தாளோ அவனே அவள் எதிரில்.
விழியகற்றாது அவனையே பார்த்தாள். உடை, தோற்றம், பேச்சு போன்ற எதிலும் கச்சிதமாக இருப்பவன் இன்று ஏனோதானோ என்றிருந்தான்.
Advertisement
முகம் முழுவதும் தாடி, சரியாக வெட்டப்படாத வாரப்படாத தலை முடி, நேர்த்தியில்லாத உடை, சிவப்பேறிய கண்கள், கண்களைச் சுற்றி கருவளையம், உடலில் ஏதோ ஒரு தடுமாற்றம் என முற்றும் முழுவதுமாக மாறியிருந்தான் அர்ஜுன்.
அவனைப் பார்க்கப் பார்க்க அதிதியின் நெஞ்சம் வலித்தது. ‘இதற்காகவா… இப்படியொரு வாழ்வு வாழ்வதற்காகவா அவன் அவ்வாறு நடந்துக் கொண்டான்’ என்று நினைக்கையில் அவளின் நெஞ்சம் துண்டானது.
‘குபுக்’ என விழிநீர் கண்களைத் தாண்டிக் கீழே விழ, நொடியில் தன்னை சமாளித்து கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
Advertisement
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளின் கண்ணீர் ஒருவித வலியைத் தந்தது. இருந்தும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தவாரே ஏதோ பேச முயல, சட்டென அவனைக் கை நீட்டித் தடுத்திருந்தாள் அதிதி.
Advertisement
“நான் எதுக்காக வந்தேன்னு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். சோ, என்னோட வேலைய பாக்க விடுங்க, இல்ல நீங்க வேற ஏதும் ட்ரை பண்ணா இப்போவே நான் கிளம்பி போய்டுவேன்” என்றாள் கறாரான குரலில்.
வலி… வலி… வலி… மட்டுமே அவன் முகத்தில். முயன்றும் புன்னகைக்க முடியவில்லை, அவளை ஒரு வெறித்த பார்வை பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.
தனது பேச்சும் செய்கையும் அவனை எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், ஏற்கனவே அடிப்பட்ட அவளின் மனது, மீண்டும் பழைய காயங்களை எண்ணி அவளை எச்சரித்தவாரே இருந்தது.
Advertisement
அதன் பிறகு இருவரிடமும் பலத்த மௌனம் மட்டுமே. வீடு வந்து சேரும் வரை இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தின் பிறகு பங்களாவை அடைந்தது அந்த ஆடி க்யூ 8 ரக கார்.
‘மார்த்தாண்டம் கேஸ்டில்” என்று ஆங்கிலத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டு மின்னியது.
பேருக்கேற்றார் போலக் கோட்டை வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடு தான் அது. கிட்டதட்ட ஆறேழு மாடிகளைக் கொண்டது. வெளிவாயிற்கதவு தொடங்கி வீட்டுவாசல் வரை பிங்க் விஸ்டரியா (Pink wisteria) மரங்கள் வரிசையாக அமைந்திருக்க அதில் பிங்க் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கின. தூரத்தில் நிஜ அருவிப்போலச் சலசலக்கும் செயற்கை அருவியும் அதையொட்டி நீச்சல்குளமும் அமைந்திருக்க சுற்றிலும் பல்வேறு செடிக்கொடிகள் மற்றும் விதவிதமாகப் பூத்துக் குலுங்கும் மலர்களைக் காண்கையில் அந்த இடத்தை ஒரு ‘குட்டிக்காடு’ என்றே அழைக்கலாம். அவ்வளவு ரம்மியமான இடமாக இருந்தது.
வேண்டா வெறுப்பாக வந்தாலும் அந்த வீட்டைப் பார்த்தவுடனே அதிதிக்கு ஒருவகை உற்சாகம் பிறந்தது. தான் ரசித்த ரசிக்கும் இடம் அதன் தன்மை மாறாமல் அதேப் பொலிவுடன் இருக்க, அவள் முகம் புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.
நேராக வாகனம் வீட்டு வாசலின் முன்நிற்க, ஒரு சிறு தயக்கத்துடன் அதிலிருந்து இறங்கினாள் அதிதி.
அவளை வரவேற்க்க வீட்டின் மொத்த உறுப்பினர்களும் வாசலில் வந்து நின்றிருக்க, இருந்த கொஞ்ச நஞ்ச இளகுத்தன்மையும் மறைந்து முகம் இறுக்கமானது.
அவளைத் தொடர்ந்து இறங்கிய அர்ஜுனும் அவளையே பார்த்தப்படி நின்றிருந்தான்.
ஒரு பலத்த மௌனம் அங்கே நிலவ, அதை உடைக்கும் வண்ணம் சாரதா பேச்சைத் துவங்கினார்.
“ அதிதிம்மா நல்லாருக்கியாடா?” என்று துவங்க, அவரை ஒரு கசந்த பார்வை பார்த்தாள் அவள்.
அந்தப் பார்வையின் அர்த்தத்தை நன்கு உணர்ந்த சாராதாவுக்கு என்னவோ போல் ஆகியது.
இருந்தும் எதையும் வெளிக்காட்டாதவர், தன் கையிலிருந்த ஆரத்தி தட்டை எடுத்து அவளுக்குச் சுற்ற முயல, அதில் கடுப்பான அதிதி அதைத் தட்டிவிட்டுருந்தாள்.
தட்டிவிட்ட வேகத்தில் அதிலிருந்தவையெல்லாம் அருகிலிருந்த அர்ஜுன் மீதுபட்டுத் தெறிக்க, நடக்கும் அனைத்தையும் சுற்றி நின்ற அனைவரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன் முகம் மற்றும் உடையெங்கும் ஆலம் கரைத்த நீர் பட்டுக் கறையாகி போயிருக்க, அதைத் துடைக்கும் எண்ணம் கூட இன்றி அப்படியே நின்றிருந்தான் அர்ஜுன்.
“ இந்த ட்ராமாலாம் என்கிட்ட வச்சுக்காதீங்க… நான் என் மாமாவைப் பார்க்கத் தான் வந்தேன். அப்புறம் இன்னொரு விஷயம் நான் பழைய அதிதி கிடையாது. சோ பார்த்து நடந்துக்கோங்க” என்று கர்ஜித்தவாறு விருவிருவென உள்ளே நுழைந்தாள்.
மனம் கட்டுக்கடங்கா கோபத்தில் இருக்க, அதைக் குறைக்கும் விதமாக அங்கு வந்து சேர்ந்தான் அர்ஜுனின் தம்பியும் அவ்வீட்டின் இளைய வாரிசுமான ஆதித்தியன் மார்த்தாண்டம்.
அவனைக் கண்டவுடன் அத்துனை நேரமிருந்த இறுக்கம் மறைந்து சட்டென ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள் அதிதி.
“டேய் எரும! எப்படிடா இருக்க?” என்று அவனை அணைத்தபடி கேட்டாள் அதிதி.
“வெல்கம் ஹோம் மை பிரின்சஸ்” என்றவன் அவளின் தலையை வருடியபடி “என் பொண்டாட்டி இருக்கப்போ எனக்கு என்ன குறைச்சல், நான் செம்மையா இருக்கேன்” என்று அருகிலிருந்த தன் மனைவி சுஷ்மிதாவை பார்த்தவாரே கூறினான் ஆதி.
அவன் விளித்த ‘ பொண்டாட்டி’ என்ற வார்த்தையில் அருகிலிருந்த சுஷ்மிதாவை திரும்பிப் பார்த்தாள் அதிதி.
இவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்தவளை கேலியான ஒரு பார்வை பார்த்தவளோ, “என்ன லுக்கு? இவன் என்னோட மாமா. இவன கட்டிப்பிடிக்கிற உரிமை எனக்கு இருக்கு. நீ இருக்கங்கிறதுக்காகலாம் என்னால தள்ளிப் போயிட முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என அசட்டையாகக் கூறியவளை முறைத்துப் பார்த்தாள் சுஷ்மிதா.
அவளின் கேலியில் சட்டெனத் தன் மனைவியைப் பார்த்த ஆதியோ மானசீகமாகத் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
அவனை முறைத்துக் கொண்டே நின்றவளைக் கண்டவனோ, “போச்சுடா… இவ வேற ஒருத்தி. நேரம் காலம் தெரியாம உரிமை போராட்டம் நடத்திட்டிருக்கா. ஏன்டி வந்தோன உன்னோட வேலைய ஆரம்பிச்சிட்டியா? இப்போ அவ மலை ஏறினா அவள இறக்க நான் என்னென்ன பண்ணனும் தெரியுமா?” என்று புலம்பியவனைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தாள் அதிதி.
இதோ இந்தச் சிரிப்பு சத்தமும் கேலியும் கிண்டலும் இல்லாமல் தானே இத்தனை நாட்களாக
இந்த வீடு மயானம் போல் கிடந்தது என்று ஆதியால் நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை.
“சரி சரி உன்ன பாத்ததுல நான் எதுக்கு வந்தேன்னே மறந்துட்டேன் பாரு. மாமா எங்க இருக்காங்க?” என்று கேட்டவாறு தன் கண்களை அவ்வீட்டைச் சுற்றி ஓடவிட்டாள் அதிதி.
அவளின் தேடலை உணர்ந்த ஆதியோ அர்ஜுனைப் பார்த்துக் கண்ணசைக்க, அவனோ “அப்பா இப்போ சாப்பிடற டைம் ஆதி. நீ புட் எடுத்திட்டு வா. நான் அவர் ரூம்க்கு போறேன்” என்று விட்டு வேகமாக மாடி ஏறினான் அர்ஜுன்.
செல்லும் அவனையே பார்த்தவள் என்ன நினைத்தாளோ, அவளும் வேகமாக அவன் பின்னே சென்றாள்.
அவன் படிக்கட்டில் செல்ல, அவள் மின்தூக்கியில் ஏறியிருந்தாள்.
சரியாக ஐந்தாவது தளத்தை அடைந்தபோது அங்கு வந்து சேர்ந்திருந்தான் அர்ஜுன்.
அவளை ஒரு பார்வை பார்த்தபடி அறையின் உள்ளே நுழைந்தான்.
உள்ளே…
சர்வ மருத்துவ உபகரணங்களாடும், மருந்து மாத்திரை நெடியோடும், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடியபடி படுத்திருந்தார் அந்த வீட்டுப் பெரிய மனிதர் கேசவன் மார்த்தாண்டம்.
உள்ளே நுழைந்த தன் மகனுடைய கோலத்தைக் கண்டவர் புருவங்கள் சுருங்க, அவரை வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்திருந்தான் அர்ஜுன்.
அச்சமயம் ‘மாமா’ என்றழைத்தபடி உள்ளே நுழைந்தாள் அதிதி.
அந்தக் குரலைக் கேட்டவுடன் சரசரவென அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
தட்டுத் தடுமாறி பார்வையை அக்குரல் கேட்ட திசையில் திருப்பினார் கேசவன்.
“அம்மாடி…. வந்திட்டியா கண்ணு, நான் சாகுறதுக்குள்ள வந்தியே அதுவே போதும்மா. இந்த மாமானோட கட்டை இனி வெந்திரும்மா” எனத் தழுதழுத்தவரை நோக்கி ஓடி வந்தவள் அவரின் மார்பில் சாய்ந்து அழுதாள்.
“ஏன் மாமா இப்படியெல்லாம் பேசுறீங்க…. உங்களுக்கு ஒன்னும் ஆகாது. அதான் நான் வந்துட்டேன்ல… உங்களுக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் மாமா” என்று துடித்து அழுதாள் அதிதி.
அதுவரை அவள் இறுக்கி பிடித்திருந்த கோபம் யாவும் மறைந்து இப்போது கண்ணீராக வெளியேறிக் கொண்டிருந்தது.
“மாமா! மாமா!” என அவள் சத்தம் போட்டு அழ, அவளைத் தேற்றும் வழியறியாது வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
பின்னே, அவளும் அழாமல் என்ன செய்வாள், சிங்கம் போன்று ஆளுமையான தோற்றம் கொண்டு கம்பிரமாக வலம் வந்த தன் தாய்மாமனை படுத்த படுக்கையாகப் பார்த்த போதே பாதி உயிர் போனது.
அவரின் இந்த நிலைமைக்கு அவளும் ஒரு காரணம் என்று நினைக்கையில் மீதி உயிரும் போய்விடும் போல இருந்தது.
என் நேரமும் தன்னிடம் கனிந்த முகத்தோடும் அளவில்லா பாசத்தோடும் நடக்கும் தன் மாமனை இப்படியொரு நிலைக்கு ஆளாக்கி விட்டோமா என்ற குற்ற உணர்வு வேறு அவளைப் பிடுங்கித் தின்றது.
துடைக்கத் துடைக்க நிற்காமல் கண்ணீர் வழிய, அவளின் கண்ணீர் முகத்தைப் பார்த்த கேசவனுக்கோ இன்னும் வேதனையாக இருந்தது.
“எ… எனக்கு ஒன்னும் இல்லடா அதிம்மா… உன்ன பார்த்துட்டேன்ல மாமாவுக்கு உடனே சரியாகிடும்” என்று அவளின் கண்ணீரைத் துடைக்க, அவரின் இந்தப் பாசத்தில் மேலும் அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அந்நேரம் பார்த்து உள்ளே வந்த ஆதியும் இந்தக் காட்சியைக் கண்டு கண் கலங்கினான்.
சிறிது நேரம் இப்படியே சென்று விட, முதலில் சுதாரித்த அர்ஜுன் தன் குரலைச் செருமியபடி, “ஆதி சாப்பாட்ட குடு நானே ஃபீட் பண்ணுறேன்” என்றபடி அவன் கையிலிருந்த உணவுப் பாத்திரத்தை வாங்க முற்பட, சட்டெனத் திரும்பிய அதிதி, அர்ஜுனை முறைத்துவிட்டு அதனை வாங்கியிருந்தாள்.
இருவரும் திகைத்தபடி அவளையே பார்க்க, அவளோ அதனைச் சட்டை செய்யாமல் கேசவனுக்கு கொடுக்க ஆயுத்தமானாள்.
ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்தவளோ அவருக்கு ஊட்டிவிட்டாள். சாப்பட்டை உண்டவுடன் கேசவனுது முகம் சுருங்கிட, யோசனையாகக் கொஞ்சம் உணவை எடுத்துச் சுவைப்பார்த்தாள்.
வாயில் வைத்ததுதான் தாமதம் உடனே வாஸ்பேசனில் துப்பியவள், இருவரையும் முறைத்துப் பார்த்தாள்.
“தடிமாடு மாதிரி இருந்தா மட்டும் பத்தாது. கொடுக்குற சாப்பாடு எப்படி இருக்குன்னு ருசிச்சிப் பார்த்து அவருக்குக் கொடுக்கனும். இந்தச் சாப்பாட்ட தினமும் சாப்பிட்டே தான் அவருக்கு முடியாம போயிருக்கும் எனக் குற்றப்பத்திரிக்கை வாசித்தவள், “கொஞ்சம் இருங்க மாமா வரேன்” என்று கூறி, ஆதியையும் அர்ஜுனையும் முடிந்த மட்டும் முறைத்துவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள் அதிதி. செல்லும் அவளையே குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அண்ணன் தம்பி இருவரும்.
error: Content is protected !!