Skip to content
Post Views: 4,868
வீட்டிற்குள் வந்ததும் தேசிகன் வீட்டில் சொந்தங்கள் இருக்க இப்போது வெளியே செல்வது அவசியமா என சத்தமிட ஆழியன் எதுவுமே பேசவில்லை.
தன் தோளில் உறங்கியிருந்த மகளைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றவன், பிள்ளையை படுக்க வைத்து விட்டு “சாப்பிட எடுத்து வை ரதி வர்றேன்”என்றிட அவளும் ஆடை மாற்றி விட்டுச் சென்றாள்.
தேசிகன் வளர்மதி பொன்னி மூவர் மட்டும் அமர்ந்திருக்க அவர்கள் பக்கம் செல்லாமல் நேரே சமையலறை சென்று பார்த்தாள்.
பாத்திரம் எல்லாம் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருக்க ‘போச்சுடா’என்று முனகியபடி அவசரமாக குளிர்சாதன பெட்டியை திறந்து பார்க்க அங்கே மாவும் இல்லை.
Advertisement
உப்புமாவை கிண்டி தேங்காய் சட்னி தயார் செய்து எடுத்து வந்தாள்.
“என்ன ரதி உப்புமா?”என்று சலிப்பாக கேட்க
“வேறெதுவும் இல்லை ங்க”என்றாள் மெல்லிய குரலில்.
Advertisement
“வெளியே போனவங்க சாப்பிட்டு வருவீங்க னு நினைச்சோம். அதான் மிச்ச மீதியை எல்லாம் சமையல் பண்ண வந்தவங்களை எடுத்து போக சொன்னேன்.”என்ற வளர்மதி “ஏன் ஒரு ஃபோனை போட்டு சாப்பிடலைனு சொல்ல வேண்டிய தானே?!”என்றார்.
Advertisement
“அப்பா வரச் சொல்லி கூப்பிட்டார் அதான் சாப்பிட டைம் இல்லாம வந்துட்டோம் “என்றவன் “நீயும் உட்கார் நேரம் ஆகுது பாரு”என்று மனைவியையும் உணவருந்த வைத்தான்.
“நாளைக்கும் எங்காவது கிளம்பிடாம இங்கே இருக்க வழியை பாருங்க”என்று வளர்மதி நொடிப்பாய் சொல்லவும் ஆழியன் கோபத்தில் சட்டென எழப் போக வேண்டாமென்று மறுத்து விட்டாள் நீரதி.
“இப்போ எதுக்கு வளரு திட்டுற?, ஏதோ போயிட்டாங்க அதான் வந்தாச்சுல்ல. நேரமா போய் படுங்க, காலையில் கொல்ல வேலை கிடக்கு”என்ற பொன்னி “நீரா பால் காய்ச்சி குடுத்துட்டு போய் நீயும் படு”என்றார்.
Advertisement
“ஹ்ம்ம் சரி பாட்டி”என்றவள் சாப்பிட்ட பாத்திரங்களோடு உள்ளே சென்று விட்டாள்.
பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தவளிடம் “சொந்தக்காரங்க முன்னாடி இது மாதிரி எல்லாம் கெளம்ப கூடாது நீரா. செல்வத்து கிட்ட சொல்லி புரிய வை. உன் பேரை நீயே கெடுத்துக்காத அதுவும் வளரு அண்ணன் வீட்டில் எல்லாரும் ஏற்கனவே காதல் கல்யாணம் எல்லாம் தேவையானு பேசிட்டு கெடந்தாங்க. அவ அண்ணனுக்கு ரெண்டாவது மகளை எப்படியாவது செல்வத்துக்கு கட்டி வைக்கணும் னு ஆசை. அது நடக்காம போகவும் இன்னும் உன் மேல அவங்களுக்கு கோவம் இருக்கு. பொதுவுல வச்சு எதுவும் பேசிடுவானுக சூதானம்”என்றார் பொன்னி.
“ஹ்ம்ம் சரி பாட்டி”என்றவளுக்கு மனதில் அத்தனை ஆயாசம். இன்னும் எத்தனை வருடங்கள் தான் இதே பேச்சு வரும். திருமணம் ஆகி ஆறேழு வருடங்கள் ஆகிறது. இதற்கும் ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள் வேறு. இதற்கு பிறகும் இந்த பேச்சா என்ற எரிச்சல் அவளிடம்.
************
“இந்த நீரா பாருங்க, ஜாக்கெட் எடுத்ததை கொண்டு வந்து காட்ட கூட இல்லை”என்று அமுதனிடம் பேசியபடியே தரங்கினி தலையணைக்கு உறை மாற்றினாள்.
“நீ உன் புடவையை காட்டுனியா தரு?”என்றதும் புருவம் முடிச்சிட அவனைப் பார்த்தாள்.
“இல்லை உனக்கு புடவை நெய்ய தந்து வாங்கிட்டு வந்தோமே அதை காட்டுனியானு கேட்டேன்”என்றதும்
“என்ன மாமா குத்தி காட்டறீங்களா என்னை?”என்றாள் ரோஷமாக
“ப்ப்ச், நீ மறந்த மாதிரி அந்த பொண்ணும் மறந்து போயிருக்கும் னு சொல்ல வந்தேன். அதுவும் அப்பா வேற சத்தம் போட்டாங்கள்ள அதனால பதட்டத்தில் போயிருக்கும்”என்றான் சமாளிப்பாக.
ஒரு வார்த்தை சொல்லி விட்டால் தான் முகத்தை தூக்கி வைத்து கொள்வாளே பிறகு சமாதானம் வேறு செய்ய வேண்டும் அதுவும் அவளின் வீட்டார் வந்திருக்கும் நேரத்தில் கோபித்துக் கொண்டால் தன் அம்மாவே தன்னிடம் சண்டை போடுவார் அதை யார் சமாளிக்க? அதனால் தான் இந்த சமாதானப் பேச்சு.
“அதான பார்த்தேன். நான் கூட குத்தி காட்டுறீங்களோனு நினைச்சேன்.”என்றவள் “சரி சரி தூங்குங்க நான் போய் அம்மா கிட்ட பேசிட்டு வர்றேன்”என்று நடக்க
“ஏன் டி இது அநியாயமா இல்லை உனக்கு. இன்னைய பொழுதுக்கும் பேசின, நாளைக்கும் பேசுவ அப்புறம் என்ன ராத்திரியில் பேச்சு இங்கேயே படு தரு. “என்றான் சலிப்பாக.
“ம்ம்க்கும், அவங்களே எப்பவாவது தான் வர்றாங்க அப்படி வந்ததும் பேசலாம்னா உங்க கிட்ட முடியுதா காலம் முழுக்க இங்கே உங்க கூட தானே இருக்கேன். ஒரு ராத்திரி நான் போகக் கூடாதா?”என்று சண்டைக்கு நின்றவளை எதுவும் சொல்லிடாமல்,’ சரி கிளம்பு ‘என்று சைகை காட்ட அவள் போய் விட்டாள்.
“தினமும் பேசுறா. மாசம் ஒரு தடவை ஊருக்கு போயிடுறா, அவங்க கொண்டு வந்து விடுறேன்ற சாக்குல நாலு நாள் இங்கே தங்கறாங்க இன்னும் இவளுக்கு என்ன பேச இருக்குமோ தெரியலை. எல்லாம் என்னை பெத்ததை சொல்லணும். ” என்று நொந்து கொண்டு படுத்தான் அமுதன்.
மறுநாள் அதிகாலையில் இருந்தே அத்தனை பரபரப்பு. அதிசயமாக தரங்கினி நிலா இருவரும் எழுந்து வந்திருந்தனர். அவ்வளவு சீக்கிரம் எல்லாம் இருவரும் இதுவரை எழுந்ததில்லை.
நீரதி கோலம் போட்டு விட்டு காஃபி கலக்கும் போது தான் இருவருமே வெளியே வருவர். பிள்ளைகளுக்கு காலை உணவில் இருந்து மதிய உணவு வரைக்கும் கூட ஒரு சில நேரங்களில் தயாராக இருக்கும் அதன் பிறகு தான் அவர்களுக்கு பள்ளியெழுச்சியே ஆகும்.
“நீரா ஏதாவது காய்கறி அரியனுமா?”தரங்கினி வந்து கேட்க, அதில் இன்னும் ஆச்சரியம் நீரதிக்கு. கூப்பிட்டு வேலை சொன்னால் கூட முகம் மூன்று முழத்திற்கு இருக்கும் இப்போது என்ன இது புதிதாக என்று யோசித்தவள் நமக்கேன் என்று ஒதுக்கினாள்.
“இட்லி சாம்பார் வைக்க காய் அரியணும் கூடவே மிளகாய் சட்னிக்கு வெங்காயம் உரிக்கணும்”என்றாள்.
“நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?”என்று நிலா கேட்கவும் யாத்தே என்று நெஞ்சில் கை வைக்காத குறை தான் நீரதிக்கு. சிரிப்பு வேறு பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
அதனை சிரமப்பட்டு அடக்கியவள் “இந்த தேங்காய் துருவிடு நிலா”என்று நாலைந்து உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளை வைத்தாள். கொஞ்சம் அதிர்வு தான் நிலாவுக்கு ஆனாலும் வெளிக்காட்ட முடியவில்லை. நிலாவின் மாமனார் மாமியார் காலையில் தான் பிரவேசித்திருந்தனர். அவர்கள் நீதி நேர்மை பார்ட்டிகள். நிச்சயம் நீரதி மட்டும் வேலை செய்து கொண்டிருந்தால் அங்கே எதுவும் கூற மாட்டார்கள். ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவர்கள் மகள் வரும் போது அவளுக்கு பணிவிடை செய்ய வைத்து விடுவார்கள். எதிர்த்து கேட்டால் ,’ஏன் உங்க அண்ணி உன்னை உட்கார வச்சு செஞ்ஞாங்க நீ உன் நாத்தனாருக்கு செய்ய மாட்டீயா?’ என்ற கேள்வி வெடுக்கென்று அவளின் மாமியாரிடம் இருந்து வரும். தேவையா இதெல்லாம்.
அதுதான் இந்த பதவிசு. ஆனால் இந்த தரங்கினிக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடி ஒரு அடுப்பில் பருப்பும் மறு அடுப்பில் இட்லிக்கு பானையும் ஏற்றினாள் நீரதி.
அது மாமியாரின் கைங்கர்யம் என்று நீரதிக்கு அப்போதைக்கு புரியவில்லை.
” கல்யாணம் முடியற வரைக்கும் சொந்த பந்தம் யார் கிட்டயும் நீ எந்த வேலையும் செய்யலைன்ற மாதிரி பேச்சு வாங்கிடாத தரு. அப்பப்ப ஏதாவது வேலையும் பாரு” என்றதில் மாமியாரிடம் முகத்தை சுருக்கி,” அப்போ நான் எதுவும் செய்யறதில்லைனு சொல்றீங்களா அத்தை?” என்றாள் சுணக்கத்துடன்
“நான் எப்போ அப்படி சொன்னேன். அந்த நீரா அங்கே இங்கே அலைஞ்சு வேலை செய்ற மாதிரி காட்டிட்டா உன் மதிப்பு கீழே இறங்கிடும்னு சொல்றேன்.”என்று விளக்கம் தந்தாலும் மாமியார் மீது சிறு கடுப்புடன் தான் தன் அம்மாவோடு சென்று படுத்தாள். விடியும் வரை என்ன பேசினார்களோ தரங்கினி உதவி செய்கிறேன் என்று நீரதியிடம் வந்து நின்றாள்.
எப்படியோ விசேஷம் நடந்தால் சரி தான் என்ற அளவில் வளர்மதியும் அப்போதைக்கு எதுவும் பேசிடவில்லை. ஆனாலும் அவ்வபோது அவருக்கு தோன்றுவது இவளுக்கு ஓவரா இடம் கொடுத்து நானே கெடுத்து வைக்கிறேனோ என்பது தான்.
கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து யாருக்கு பலன்.
அன்று மதியம் அமுதனும் ஆழியனும் மண்டபத்திற்கு சென்றிருக்க மற்றவர்கள் எல்லாம் நல்ல நேரம் பார்த்து கிளம்பி விட்டனர்.
பவ்யாவையும் அவள் வீட்டினரையும் அழைத்து வர நிலாவும் அவள் கணவனும் கூடவே தரங்கினியின் அம்மாவும் ஒரு ட்ராவலரில் கிளம்பி இருந்தனர்.
அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கள் பொருட்களை வைக்க பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். நீரதி அப்பாடா என்று வந்து அமர்ந்து விட்டாள். இனி பெண் வீட்டார் வந்தால் வரவேற்க சென்றால் போதும் கொஞ்ச நேரம் ஓய்வில் இருப்போம் என்று தான் ஆசுவாசம் கொண்டாள்.
“நீரா இந்த மண்டபத்தோட லாஸ்ட் ல சாரி ஷேல் போட்டு இருக்காங்க போல நான் அம்மா கூட போய் பார்த்துட்டு வர்றேன் நீ தம்பியை பார்த்துக்கறியா”என்று வந்து தரங்கினி நிற்க சுள்ளென்று ஏறியது நீரதிக்கு. ஏன் இவள் மட்டும் தான் அதை எல்லாம் பார்க்க போவாளா எங்களுக்கு எல்லாம் ஆசை இருக்காதா பார்க்க பிள்ளையை பார்த்துக்கணுமாம் என்று உள்ளூர நொடித்துக் கொண்டவள் சரியென சொல்ல வரும் முன்பே ஆழியன் அங்கே வந்து விட்டான்.
“ரதி ஒரு நிமிஷம் வாயேன்”என்று அழைக்க
“செல்வா மாமா நான் நீராவை தம்பியை பார்த்துக்க சொன்னேன் ஏதாவது வேலை இருந்தா வேற யார் கிட்டயும் சொல்லுங்களேன்”என்று கேட்டு வைக்க
“தம்பியை அவ கிட்ட தந்துட்டு நீங்க எங்க போறீங்களாம்”என்று சிறு கேலி கலந்த வார்த்தையாகவே கேட்க
“இந்தா இங்கே துணிக்கடை போட்டு இருக்காங்க செல்வம் அதுக்கு தான் போறோம் தம்பிக்கு அங்கே ஏசி ஒத்துக்காது”என்றார் தரங்கினியின் அம்மா.
.
“அடடா பாருங்களேன் நானுமே ரதியை அதுக்கு தான் கூப்பிட வந்தேன் அத்தை. அப்புறம் வேலை அது இதுன்னு பிஸி ஆகிடுவேன். இப்போ பார்த்தா தான் உண்டு. பேசாம நீங்க தம்பியை அம்மா கிட்ட குடுத்துட்டு போங்களேன்”என்றவன் மனைவியை கையோடு அழைத்துச் சென்று விட்டான்.
இதென்னடா இவனுக்கு வந்த வாழ்வு என்று நொடித்த தரங்கினியின் அம்மா வளர்மதியைக் காண சென்றார்.
இங்கே நீரதியோ”ஏங்க நிஜமாவே சேலை பார்க்க போறோமா”என்று கேட்க
“உனக்கு போகணுமா”என்று அவன் பதில் கேள்வி கேட்க
“இல்லை கேட்டேன்”சுதி இறங்கி விட்டது அவள் குரலில்.
“எக்ஸ்போ பத்து மணி வரையும் இருக்கும் போல . அதுக்கு அப்புறமும் பார்க்க ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிப்போம். இப்போ போய் மூணாவது மாடியில் இரு லிஃப்ட் இங்கே இருக்கு பாரு”என்று அனுப்ப முயல சட்டென்று அவள் வதனம் சுருங்கியது.
“பொண்ணு வீட்டுக்காரங்க வந்ததும் அவங்களுக்கு பந்தி பரிமாறியதும் போவோம் போ ரதி”என்றான் ஆழியன்.
“ஹ்ம்ம்”என்றவளை கையோடு மீண்டும் மூன்றாவது தளத்திற்கு அழைத்துச் சென்று விட்டான். பிடித்த கையை விடவில்லை அது தான் நீரதிக்கு ஆச்சரியம்.
விழி விரித்து அவனைப் பார்த்து வைக்க அவனோ முட்டக்கண்ணி பாக்குறதை பாரு என்று முணுமுணுத்துக் கொண்டே மூன்றாம் தளத்தில் ஒரு ஓரத்தில் இருந்த அறையை திறந்து விட்டான்.
“இங்கேயே தூங்கு நான் ஏதாவது வேணும்னா கூப்பிடுறேன்”என்று சொல்லி விட
“பாப்பா”என்று அவள் இழுக்க “நான் பார்த்துப்பேன்”என்றவன் அவள் நெற்றியில் முட்டி விட்டு செல்ல அதுவே நீரதிக்கு பெரும் அதிசயம் தான். காதலித்த போது இப்படி செய்தது என்று நினைத்துக் கொண்டாள்.
…… தொடரும்
error: Content is protected !!