Skip to content
Post Views: 5,213
தேசிகன் மன்னிப்பு கேட்க சொன்னதுமே “உங்க பொண்ணு பேசினதை சொல்ல சொல்லுங்க மாமா அப்புறம் பேசலாம்”என்று நின்றாள் நீரதி.
ஆழியன் அமைதியாக நின்றாலும் தன் மனைவி கேட்பதில் தவறில்லை என்ற எண்ணம் வியாபிக்கத் தான் நின்றான்.
Advertisement
“மன்னிப்பு கேளு இல்லை வீட்டை விட்டு போ”என்று அவரும் பிடிவாதமாக பேச
Advertisement
“நான் ஏன் போகணும் இது என் புருஷன் வீடு. உங்க மக என்னைப் பத்தி என்னவோ பேசி இருக்கட்டும் ஐ டோன்ட் கேர். பட் என் பொண்ணைப் பார்த்து அந்த வார்த்தையை சொல்லி இருக்க கூடாது. அதுக்காக உங்க பொண்ணுக்கு நீங்க சப்போர்ட் பண்றீங்கன்னா உங்களை விட மோசமானவங்க இந்த உலகத்திலேயே கிடையாது”என்றாள்.
Advertisement
“நீரதி என்னம்மா பேச்சு இது. என்ன நடந்தது னு சொல்லவும் மாட்டேங்கிறீங்க. மன்னிப்பு கேட்க சொன்னா அதையும் பண்ண மாட்டேங்கிற என்ன பிரச்சினை உனக்கு”என்று அமுதனே சலிப்பாக கேட்க
Advertisement
“ஏதாவது நடந்தா தானே ண்ணா சொல்லுவாங்க. எதுவும் நடக்கலை. அவங்க பொண்ணை என் மருமகள் னு சொல்லிட்டேனாம் அதுக்கு தான் இந்த மாதிரி பேசுறாங்க. ஏற்கனவே இவங்களுக்கு என்னைப் பிடிக்காது இதுல இப்படி பேசினா அதான் கோவப்படுறாங்க.”என்ற நிலா “உன் தங்கச்சிக்கு இவங்க கிட்ட கிடைக்கிற மரியாதை இது தான் செல்வண்ணா”என்றாள் கண்கள் கலங்க.
“மரியாதையா”என்று நக்கலாய் சிரித்த நீரதி”நீ என்னைக்காவது அந்த மரியாதையை எனக்கு தந்திருக்கியா என்ன”என்றாள்.
“இப்போ என்ன என் பொண்ணு உன்னை மரியாதை இல்லாமல் பேசிட்டா.”என்று வளர்மதி கேட்க
“அவளுக்கு நான் என்ன உறவு வேணும். என்னை அண்ணின்னு என்றைக்காவது கூப்பிட்டு இருக்காளா…இவ எல்லாம் மரியாதையை பத்தி பேசலாமா முதலில்.”என்றவளைப் பார்த்து கேலியாய் சிரித்து “அதெல்லாம் தானா வரணும். கேட்டீ வாங்கக்கூடாது”என்றாள் நிலா.
“கேட்டு வாங்கி… நான் உன்னை கேட்டேனா என்ன.. நீ என்னை அண்ணினு கூப்பிடணும்னு என்றைக்காவது சொல்லி இருக்கேன். நல்லா நினைவு படுத்தி பாரு.”என்றவள் “இதுக்கு மேல உங்க கிட்ட பேச எதுவும் கிடையாது.”
ஆழியன் ஏதோ பேசவர “இப்பவும் மன்னிப்பு கேட்க சொல்வீங்களா நீங்க. மன்னிப்பு கேட்டு தான் இங்கே வாழணும்னா அந்த அவசியமே கிடையாது எனக்கு. இப்போ மட்டும் என்னத்த வாழ்ந்து கிழிச்சுட்டேன்”என்று சலிப்பாக பேசியவள் “நான் வீட்டை விட்டு போகணும் அவ்வளவு தானே போறேன்”என்று விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள்.
அவள் பின்னோடு சென்ற ஆழியன்”ஏய் என்னடி பேசற நீ…? ப்ப்ச் ரதி இப்போ எதுக்கு பேக் பண்ற விடுடி ஸ்வரு மிரண்டு பார்க்கிறா பாரு”என்று அதட்டிபடி பையை பிடுங்கி எறிந்தான். ஸ்வர்ணிகா தாயைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“இப்போ நான் என்னங்க செய்யணும் சொல்லுங்க மன்னிப்பு கேட்கணுமா நான்?. “
“பேசாம அமைதியா இரு அது போதும். என் பேச்சைக் கேளு ரதி.”
“இதுநாள் வரையிலும் அதைத் தானே செய்றேன்”என்று விரக்தியாக சிரித்தவள் “இதுக்கு மேலேயும் இங்கிருந்தா என் தன்மானம் சுத்தமா செத்துடும். உண்மை ஒரு நாள் புரிஞ்சா என்னைத் தேடி வாங்க இல்லாட்டா பரவாயில்லை என் காதலும் நீங்களும் வெறும் கானல் நீர் னு நினைச்சுக்கிறேன்.”என்று தூக்கி எறியப்பட்ட பையை கையில் எடுத்துக் கொண்டாள்.
“கொஞ்சம் பொறுமையா இரு ரதி. அவங்க நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு ரதி”என்றவனை பார்த்து பொறுமையிழந்து விட்டாள் நீரதி.
“நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெருசு இதையே எத்தனை தடவை தான் சொல்வீங்க நீங்க.? அப்படி என்ன தப்பு செஞ்சோம்?, நாம காதலிக்க தானே செஞ்சோம் வேறெந்த தப்பும் செஞ்சுடலையே நாம. முறையா வீட்டில் சம்மதம் கேட்டு காத்திருந்து தானே கல்யாணம் பண்ணோம், ஓடி எதுவும் போகலையே…அப்புறம் ஏன் என் கிட்ட மட்டும் இப்படி பாரபட்சம் காட்டறாங்க. உங்க வீட்டில் நான் சாதி கூட வேற இல்லையேங்க அப்படி இருந்தும்…” என்று அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீரில் வெதும்பியவளை ஆழ்ந்து பார்த்தான் ஆழியன். மறந்தும் நிலா பேசிய கேவலமான வார்த்தைகளை அவள் சொல்லிடவில்லை.
“இதுக்கு மேல தெம்பு இல்லை எனக்கு. நான் பேசவே விரும்பலை இதுவரைக்கும் அவ என்ன சொன்னான்னு கேட்கலை ஏன் இவ்வளவு கோவப்பட்டேன்னு கேட்கலை. ஆனா மன்னிப்பு மட்டும் கேட்க சொல்றீங்க ல்ல”என்று வேதனையாய் கூறி விட்டு இரு பிள்ளைகளையும் பார்த்தாள்.
“உன் இஷ்டம் போல செய்”என்று விலகி நின்று கொண்டான்.
ஸ்வர்ணிகாவை கையில் பிடித்தபடி ஸ்வாதியை தூக்கிக் கொள்ள “அவ்வளவு தான் ல என் மேல வச்ச காதலும் நம்பிக்கையும்”என்று வெறுமையான குரலில் கேட்க
“இதை உங்க மனசாட்சியை பார்த்து கேளுங்க அது பதில் சொல்லும்”
“ரதி”என்று அணைக்க வந்தவனை தடுத்து,’ வராதே’ என்பது போல நிறுத்தியவள் “என் மேல ஆறேழு வருஷம் முந்தி இருந்த காதல் கொஞ்சமாவது மிச்சம் இருந்தா என்னை விட்டுடுங்க ப்ளீஸ்”என்று கையெழுத்து கும்பிட்டு விட்டு தன் மகளோடு வெளியேறி விட்டாள் நீரதி.
ஆழியன் மனைவி செல்வதையே வெறுமையாக பார்த்திருக்க பொன்னி அவனிடம் ஓடி வந்தார்.
“ஏ செல்வம்! என்ன அவ பாட்டுக்கு போறா நீ மரமாட்டம் நிற்கற. இப்போ என்ன நடந்துச்சுனு இவ்வளவு ஆர்பாட்டம் பண்றா அவ”என்று திட்ட
“அதானே!? “என்று வளர்மதியும் ஒத்தூத
“எதுவும் நடக்கவில்லை மா அதான் போறா”என்றவன் தந்தை ஏதோ சொல்ல வரும் முன்பே “மில்லுக்கு கிளம்பிட்டேன் ப்பா. இதுக்காக எல்லாம் தொழிலை பார்க்காம இருக்க முடியுமா?”என்றவனின் குரலில் அமுதன் தம்பியை அதிர்ந்து பார்த்தான்.
தேசிகனோ”ப்ம்ச் இப்ப என்ன போய் உன் பொண்டாட்டிய பாரு. மன்னிப்பும் கேட்க வேணாம் ஒரு எழவும் வேணாம் பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வா நாளைக்கு கூட மில்லுக்கு போகலாம்”என்று சொல்லி விட ஆழியன் எதுவும் பேசாமல் உள்ளே போய் விட்டான்.
“ஏய் என்னடா ஆளாளுக்கு மரியாதை இல்லாம நடந்துக்கிறீங்க. ஓவியமா தான் பேசுறா உன் பொண்டாட்டி. அதை நீயும் கேட்டுட்டு அடங்கி இருக்க. என்ன சொக்குப் பொடி போட்டாளோ காதல் கீதல்னு வந்து நின்ன எதையும் யோசிக்காமல் மகன் ஆசை தான் முக்கியம் னு கல்யாணம் பண்ணி வச்சோம்ல அதுக்கு இப்ப நல்ல பேர் சொல்லிட்டு போறா உன் பொண்டாட்டி”என்று வளர்மதி கத்தும் போதே ஆவேசமாக வெளியே வந்து விட்டான் ஆழியன்.
“காதல் காதல் காதல் அந்த கண்றாவியை தான் ஏன் செஞ்சோம் னு ஒவ்வொரு நாளும் சாவுறேன் நான். காதல் கல்யாணம் எல்லாம் ஒத்து வராதுடி நீ வேற எங்கேயாவது போய் நல்லா இரு னு சொல்லாமல் அவளை கல்யாணம் பண்ணி நரகத்துல குடி வச்ச அந்த காதலை ஏன் பண்ணோம் னு நொந்து போறேன்”என்று அவருக்கு மேல் கத்தினான் ஆழியன்.
“டேய் என்னடா அம்மா கிட்ட?”என்று தேசிகன் கோபமாய் எழ
“தப்பு தான் ப்பா எப்போதும் போல ஊமையா இருந்திருக்கணும் இன்னைக்கு ரொம்ப கோபப்பட்டு பேசுறேன்ல. பாருங்களேன் சூடு சொரணையே இருக்க கூடாது னு தான் நினைக்கிறேன் ஆனா முடியல. அதான் கத்துறேன்”என்றதும் ஆழியனை பிடித்துக் கொண்டான் அமுதன்.
“ஏன்டா செல்வா?. ப்ப்ச் விடேன்”என்று தணிவாய் பேச
“விட்டுட்டேன் ண்ணா. அவளை அப்படியே விட்டுவிட்டேன் நான். பெரிய குடும்பத்தையே உனக்காக தருவேன் ரதி. அவங்கள மாதிரி அன்பானவங்களை நீ பார்க்க முடியாது னு சொல்லி பொய் சத்தியம் பண்ணி இந்த நரகத்தில் விட்டுட்டேன் நான்”என்றான் தளுதளுத்த குரலில்.
“என்னடா நரகம் அது இதுன்னு ஓவரா பேசுற. என்ன உன் பொண்டாட்டிய கொடுமையா படுத்தினோம் நாங்க எது செய்யாம விட்டோம் நீ பேசுறது சரி இல்லை செல்வம். இப்போ கூட என் பொண்ணை அடிச்சும் அமைதியா தான் இருக்கேன் நான்”என்று சண்டைக்கு நின்றார் வளர்மதி.
“எல்லாமே செஞ்சுட்டீங்க ம்மா அதைத்தான் எங்களால ஏத்துக்க முடியலை எங்க தப்பு தான்”என்றவன் அங்கே நிற்கவில்லை மில்லுக்கு சென்று விட்டான்.
ஆழியனின் கோபத்தையோ நீரதியின் ஆதங்கத்தையோ யாரும் பொருட்படுத்தியது போல தெரியவில்லை. எங்கே போகப் போகிறாள் போவதற்கு இடமா இருக்கிறது அவளுக்கு ஆழியனும் அவளை விடுவானா என்ன கோபம் குறைந்ததும் போய் அழைத்து வருவான் என்று எண்ணி அவரவர் வேலையை கவனிக்க சென்று விட்டனர். தரங்கினி ஏனோ அன்று வேடிக்கை மட்டும் பார்த்தாள். எதையுமே பேசவில்லை.
அமுதன் தான் மனம் கேளாமல் தம்பியைப் பார்க்கச் சென்றான்.
**********
இங்கே நீரதி பிள்ளையோடு கிளம்பி இருந்தவள் தன் வீட்டிற்கு சென்றாள். அவளிடமும் ஒரு சாவி எப்போதும் இருக்கும். அதைக் கொண்டு திறந்தவள் மகளை அமர்த்தி விட்டு தனியே அந்த அழுகை அழுதாள்.
ஸ்வர்ணிகா அம்மா ஏன் அழுதாள் எதற்காக அங்கிருந்து அழைத்து வந்தாள் என எதுவும் புரியாமல் பரிதாபமாக விழிக்க மகள் தனியே இருப்பாளே என்ற எண்ணத்தில் வெளியே வந்த நீரதி”குட்டிமா”என அழைக்கவும் வேகமாய் ஓடி வந்து தன் அம்மாவை கட்டிக் கொண்டாள்.
“நாம ஏன் அம்மாச்சி வீட்டுக்கு வந்திருக்கோம் மா?”என்றாள் பிள்ளை.
“நாம மூணு பேரும் இங்கேயே இருந்துக்குவோமாடா?, அம்மா உன்னை பார்த்துப்பேன்.”என்று சொல்ல பிள்ளையோ “அப்பா?!”என்று வெள்ளந்தியாக கேட்டது.
“அப்பா!!”எனும் போதே நீரதிக்கு இன்னும் அழுகை வந்தது.
பிள்ளையிடம் வேறு என்ன கூறுவது என்று புரியாமல் தவித்தவள் “வருக்குட்டிக்கு ஏதாவது சமைக்கட்டுமா?”என்று கேட்டதும் சரியென தலையாட்டவும் டிவியை போட்டு மகளை அமர வைத்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.
எதுவும் இல்லை அங்கே என்ன சமைப்பது எதுவும் புரியவில்லை.
“வருக்குட்டி அம்மா நூடுல்ஸ் வாங்கி வர்றேன் சாப்பிடலாம் பாப்பாவை பார்த்துக்கிறியா”என்று கேட்க அவளும் தலையாட்டினாள்.
மனதே பாரமாகிப் போன உணர்வு தான் வேதனையை வேப்பங்காயாய் விழுங்கிக் கொண்டவள் மகளுக்கென தன் உணர்வுகளை மறைத்தாள்.
பிள்ளைக்கு சமைத்து கொடுத்து விட்டு ஸ்வாதிக்கும் பசியாற்றி உறங்க வைத்தாள்.
அன்று இரவே அண்ணன் அண்ணிக்கு அழைத்து விஷயத்தை கூறியவள் “நான் இங்கே இருக்கட்டுமா அண்ணி”என்று கேட்டதில் மனமுடைந்து போனாள் ஜனனி.
“என்னடி இப்படி கேட்கிற அது உன் வீடு.உனக்கு இல்லாத உரிமையா…”என்ற ஜனனி “உன் அண்ணனை வேணும் னா வரச் சொல்லவா நீரு.”என மனம் தாளாமல் கேட்க
“நான் சமாளிச்சுப்பேன் அண்ணி. உங்க கிட்ட விஷயத்தை சொல்லணுமேன்னு தான் கால் பண்ணேன்.”என்றாள்.
“நீ செஞ்சது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன் நீரு. ஆனா உன் வீட்டுக்காரர் கிட்ட ஒரு தடவை பேசு. அங்கே நடக்கிறதை பேசிப் புரிய வை. இல்லையா உன் அண்ணனை பேசச் சொல்லவா”என்று கேட்க
“இல்லண்ணி நான் பார்த்துக்குவேன். அவர்”என்றவள் சற்று தயக்கமாக “நான் பேசறேன் அண்ணி” என்று இணைப்பைத் துண்டிக்க வெளியே கதவு தட்டும் ஓசை கேட்டது.
வெளியே ஆழியன் கசங்கிப் போய் நின்றிருந்தான். அவனைக் கண்டதும் திடுக்கிட்டு நிற்க “பசிக்குதுடி ரதி”என்றான் பரிதாபமான தோற்றத்தில்.
….. தொடரும்.
error: Content is protected !!