Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

kaatril un vaasam

காற்றின் உன் வாசம் -11

25 வருடங்களுக்கு முன் …… 

அரண்மனை வீதி (bungalow நகர் ),  

                  திருநெல்வேலியில் உள்ள அனைவருக்கும் அதிக பிரசித்தி பெற்ற வீதி. கட்டிடம் அதிகம் இல்லாத வீதி. ஏனென்றால் அந்த வீதியை முக்கால் வாசி ஆக்கிரமித்திருந்தது அந்த பெரிய அரண்மனை.

              ஆம், அரண்மனை தான் S.M. Palace. முழுக்க முழுக்க வெள்ளை  நிறத்தால் ஆன அரண்மனை,அந்த கால கட்டிடம். அந்த வெள்ளை நிற பெரிய இரும்பு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றால் ஒரு நீண்ட சாலை இரு பக்கமும் மரங்களின் அணிவகுப்பு.சாலை முடியும் இடத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு வட்டமான தோட்டம்.தோட்டம் முழுவதும் புல் தரை.நடுவில் செயற்கை நீரூற்று.நீரூற்றை சுற்றி ரோஜா செடிகள் பூத்து குலுங்கியது. அரண்மனை சுற்றியும் எண்ணில் அடங்கா மரங்கள்.அரண்மனை பார்ப்பதற்கு ஒரு குட்டி ஊட்டி போலே காட்சி அளித்தது.

அரண்மனைக்கு இடதுபுறம் கார் ஷெட் உலகத்தில் உள்ள அனைத்து தரமான கார்களும் அங்கு நின்றிருந்தது. அரண்மனைக்கு வலதுபுறம் அன்னதானக்கூடம் யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் சாப்பாடு போட்டு  அனுப்புவதற்கு சமையலறையுடன் கூடிய  கூடம்.  

அதோ இப்போதும் அங்கு அந்த வீட்டின் பணியாட்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அதே வரிசையில் பைஜாமா அணிந்து கையில் காப்பு  கழுத்தில் உத்திராட்சையும் ஒரு தங்க ஜங்கிலியும் அணிந்து நெற்றியில் விபூதி பட்டையிட்டு பார்ப்பதற்கு தெய்வகடாச்சத்துடன் கூடிய கம்பிர பார்வையுடன் அமர்ந்து உணவருந்துகிறாரே அவரே அருண்மொழி வர்மன் இந்த அரண்மனையின் சொந்தக்காரர். 
S.M. Groups of Companies ன் ஒரே வாரிசு.ஆனால் ஒரு நாளும் ஆணவமோ கர்வமோ அவர் கண்ணில் இருந்தது இல்லை. காலை நேர உணவை தன் பணியாளர்களுடன் உண்பார். இன்றும் அதுபோல தன் உணவை முடித்தவர் நேராக அரண்மனையின் உள்ளே சென்றார். எதிர்ப்பட்ட பணியாளர்களின் வணக்கத்தை இன்முகத்துடன் பெற்றுகொண்டே அரண்மனையின் வாசலை கடந்து அந்த பெரிய ஹாலை தாண்டி பூஜை அறைக்குள் நுழைந்தார்.அங்கு எப்படியும் ஒரு நூறு பேர் நிற்கலாம் அவ்வளவு பெரிய அறை .அறையின் நடுவில் கோவில் போன்ற அமைப்புடன் கூடிய மாடம் அதனுள் ஒரு பெரிய சிவலிங்கம் வீற்றிருந்தது இன்னும் ஏகப்பட்ட ஸ்வாமி சிலைகளும் படங்களும் இருந்தது. அதற்கு பூஜை செய்துகொண்டிருந்தார் அருண்மொழி வர்மனின் தாயார் அகிலாண்டேஸ்வரி

அவருடன் அகிலாண்டேஸ்வரியின் தங்கை மகன் பார்த்திபனும் அவரது மனைவி காயத்ரியும் 5 வயது மகன் விதுனும் நின்றிருந்தனர்.( பார்த்திபனின் தாய் தந்தை அவரது சிறு வயதிலே இறந்துவிட அனாதையாகிய பார்த்திபனை தன்னுடனே அழைத்து வந்துவிட்டார் அகிலாண்டம்.அவர் வந்தபின் தான் தனக்கு குழந்தை பிறந்ததால் அவரின்மீது அகிலாண்டதிற்கு தனி பாசம் உண்டு).

பூஜை முடிந்ததும் ஆரத்தி தட்டை எடுத்து கொண்டு ஒவ்வொருவரிடமும் காட்டினார்.பிரசாதம் கொடுக்கும் பொழுது விதுன் , பாத்தி  பாத்தி  எக்கு நெந்து தா என்று தன் மழலை மொழியில் கேட்க யாருக்குத்தான் கொடுக்க மனம் வராது இரண்டுக்கு நான்காகவே கொடுத்தார் அகிலாண்டம் . 

அனைவரும் சாப்பிட அமர அருண்மொழி வர்மன் மட்டும் மாடியில் இருக்கும்  தனது  அறைக்கு சென்றார். அதுவே ஒரு பெரிய வீடு போல் இருந்தது. இருவர் படுக்கக்கூடிய ஒரு படுக்கை ஒரு பக்கம் அலுவலக அறை தனியாகவும் இன்னொரு புறம் ட்ரெஸ்ஸிங் அறை , குளியலறையுடன் இருந்தது.படுக்கைக்கு நேராக சுவற்றில் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அதற்கு சந்தன மாலையிட்டு குங்குமம் வைத்து விளக்கேற்றி வைத்திருந்தது. 

அதனை பார்த்த அருண்மொழியோ கண்கள் கலங்கி நின்றார். ஆம் அது அவரின் மனைவி வேதிகா அருண்மொழிவர்மன். தனது பிரெசவத்தின் போது இறந்துவிட்டார். 
அவரின் புகைப்படம் முன் கண்மூடி நின்றார் அருண்மொழி வர்மன். 

அவரின் கண்களுக்குள் அவரின் முன்னோர்கள் செய்த பாவமும் அதற்கு கிடைத்த சாபமும் காட்சிகளாக விரிந்தது.

(வாருங்கள் நாமும் அகக்கண் வழியே அகத்திற்குள் சென்று பெரியாச்சியின் வரலாற்றை பார்ப்போம்……)  

14-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி பாண்டிய நாடுகளுள் ஒன்று.அப்போது வல்லாளன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.அவனின் கொடுங்கோல் ஆட்சியில் மக்கள் எப்போதும் அதிர்ச்சியிலும் பயத்துடனுமே வாழ்ந்தனர். எப்போதும் என்ன நடக்கும் என்ற பயத்திலே இருந்தனர்.

அவனுக்கு  நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அதற்கு காரணம் அவனது இரக்கமற்ற குணங்கள் என்று அறிந்திருந்த போதிலும் மேலும் மேலும் பாவங்களை சேர்த்து கொண்டிருந்தான்.அப்போது ஒரு நாள்  வேட்டைக்கு சென்ற வல்லாளன் ஒரு முனிவரின் தவத்தினை கலைத்ததின் பலனாக அவரிடம் சாபத்தை பெற்றான்.அது என்னவென்றால் உனக்கு பிறக்கும் உன் குழந்தையால் உனக்கு அழிவு வந்து சேரும் என்பதே.சற்று கலங்கிய வல்லாளன் சாபத்திற்கான தீர்வை அவரிடம் கேட்க . அதற்கு அந்த முனிவரோ உன் குழந்தை பூமியை தொடாமல் பிறந்துவிட்டால் நீ பிழைத்துக்கொள்வாய் என்று கூறி சென்றிவிட்டார்.

சங்கடத்துடன்  அரண்மனை திரும்பிய வல்லாளனிற்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருந்தது.ஆம் வல்லாளனின் மனைவி கற்பமுற்றிருந்தாள்.என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல வல்லாளனிற்கு பயம் அதிகரித்தது. எப்படியாவது குழந்தை தரையை மிதிக்காமல் பிறந்துவிட்டால் தாம் பிழைத்துக்கொள்வோம் என்று நம்பியவன்.நாடு முழுவதும் ஒரு திறமையான மருத்துவச்சியை தேட வீரர்களை அனுப்பினான்.அவரால் மட்டுமே தன்னை காப்பாற்ற முடியும் என்று நம்பினான்.பிரசவ நாளும் நெருங்கியது.மருத்துவச்சியை தேடி சென்ற வீரர்கள் வெறுங்கையோடு திரும்பி வர அப்போது வல்லாளன் தானே  தேடி செல்வதாக கூறி கிளம்பினான்.அப்போது பெரியாச்சி அம்மன் மருத்துவச்சி உருவில் அவன் முன் வந்தார்.அவரை பார்த்த வல்லாளன் தனக்கு இருந்த சாபத்தை கூறி உதவி கேட்டான்.அவரும் ஒரு நிபந்தனையுடன் ஒப்பு கொண்டார்.அந்த நிபந்தனைப்படி அவனுக்கு பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக்கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்கள் தருவதாக உறுதி அளித்தான்.குழந்தை பிறந்தது . குழந்தையின் பாதம் தரையில் படாமல் கவனமாக பிரசவம் பார்த்தார் பெரியாச்சி.எல்லாம் முடிந்து குழந்தையை பார்க்க வந்த  மன்னன் குழந்தையை கேட்க அதற்கு ஆச்சியோ தனக்கு கொடுக்கவேண்டிய பொருட்களை கேட்க ஆணவம் கொண்ட வல்லாளனோ பொன்னும் கிடையாது பொருளும் கிடையாது குழந்தையை கொடுக்காவிடில் உன்னை கொன்று விடுவேன் என்று கோபமாக கூறியவன் வாளை உருவி கொண்டு முன்னே சென்றான்.  

அவ்வளவுதான் கோபம்கொண்ட பெரியாச்சி நான்கு கைகளுடன் 
கோரமான உருவில் பயங்கரமான கண்களுடன் தன்  சுய உருவை காட்டியபடி நின்றார் . ஒரு கையில் குழந்தையை உயர்த்தி பிடித்து இன்னொரு கையினால் மன்னனுக்கு உதவ வந்த வல்லாளனின் மனைவியை தூக்கி தன் தொடைமீது வைத்து கொண்டு அவள் வயிற்றை கிழித்து அவள் உடலின் உட்பாகங்களை கடித்து தின்றாள்.அதற்கிடையில் தன் அருகில் வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்தி கொன்றாள் . 

இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை முடித்ததும் ஆக்ரோஷமாக நின்றவளை அந்த ஊர் மக்கள் அவள் கோவம் தணிந்து தம்மை காக்குமாறு வேண்டிக்கொள்ள அன்னையும் தன்னை தனித்து கொண்டு தன்னை பற்றிய உண்மையை கூறினாள். 

தானே காளியின் அவதாரம் எனவும் , இனி தன்னை துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரை காப்பேன் எனவும்.அவரவர் வீடுகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும் , அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள் . 

இப்படியாக தன்னை அடையாளம் காட்டி கொண்டவள் , வல்லாளனின் தந்தையை நோக்கி , எப்போது உன் மகன் மக்களை கொடுமை படுத்தி அவர்களின் பயத்தில் சந்தோஷப்பட்டானோ அப்போதே உன் வம்சத்தின் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது. அதை அவனுக்கு சுட்டி காட்டவே அவன் குழந்தை மூலம் அவனுக்கு ஆபத்து என்னும் சாபத்தை கிடைக்க செய்தோம் ஆனால் அவன் அப்போதும் திருந்தவில்லை ஆணவம் கொண்டான் பின் அந்த ஆணவத்தாலே அழிந்தும் போனான். நீ செய்த தர்மத்தினால் மட்டுமே இந்த குழந்தை பிழைத்தது. ஆனால் அவன் செய்த பாவம் சாபமாய் உன் வம்சத்தை தொடரும்.இனி உன் வம்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின்  பெற்றோரும் குழந்தையின் வளர்ச்சியை பார்க்கும் முன் அழிந்து போவர் என்று கூறி மறைந்துவிட்டாள்.

பெரியாச்சி கூறியதை கேட்டு பதறிய வல்லாளனின் தந்தை ராஜநாராயணன். நாட்டில் உள்ள எல்லா ஜோசியர்களையும் முனிவர்களையும் அழைத்து அதற்கான தீர்வினை கேட்டார்.அந்த சக்தி தேவியே கொடுத்த சாபம் என்பதால் யாருக்கு என்ன சொல்லவது என்றே தெரியவில்லை. அனைவரும் அமைதியாக இருந்தனர். அப்போது அவைக்குள் சிவனடியார் ஒருவர் நுழைந்தார். காவி உடுத்தி சடாமுடி வளர்த்து உடல் முழுவதும் விபூதி பூசி பார்ப்பதற்கே தெய்வகடாச்சத்துடன் இருந்தார்.அவரை பார்த்த அனைவரும் எழுந்து நின்றனர். அவையின் முன் வந்தவர், என்ன பாண்டிய மன்னா சாபத்தை போக்க வழி தேடுகிறாயோ??? சக்தி அவளிட்ட 

சாபத்தை தடுக்க சிவனன்றி வேறெவரால் முடியும் என்றார். 

அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க , சிவனடியார் தொடர்ந்தார் , என்ன பாண்டியா இன்னும் விளங்கவில்லையா ?? சிவனை நோக்கி கடுந்தவம் புரிய வேண்டும்….உன் தவம் வெற்றி பெற்றால் அந்த எம்பெருமான் ஈசன் உன் முன் தோன்றி வரம் அருள்வார் ஆனால் அது அவ்வளவு எளிது அல்ல ஆயிரம் இன்னல்கள் வரும் அதை மீறி நீ தவத்தை முடிக்க வேண்டும் என்றார். 

ராஜநாராயணன் , ஐயா என்னுடைய வம்சத்திற்காக நான் இதை கண்டிப்பாக செய்கிறேன் என்று உறுதியாக கூறினார். 

அதனை கேட்ட சிவனடியார் , வெற்றி கிட்டட்டும் மகனே என்று கூறி அவையை விட்டு வெளியேறி விட்டார். 

ராஜநாராயணனும் குழந்தையை தனக்கு நம்பிக்கையான மந்திரி ஆதிரையானிடம்  ஒப்படைத்துவிட்டு தன் ராஜா அலங்காரங்களை களைத்து காவி உடுத்தி கானகம் நோக்கி பயணமானார். கானகத்தின் நடுவில் இருந்த சிவலிங்கத்தின் முன் அமர்ந்து தனது  தவத்தினை ஆரம்பித்தார். நாட்கள் மாதங்களாகியது மாதங்கள் வருடங்கள் ஆகியது , வருடங்கள் போய்கொண்டே இருந்தது.காற்று , மழை , வெப்பம், குளிர் என பருவ நிலை மாற்றங்களையும் தாண்டி தவம் நீண்டு கொண்டே சென்றது.பல நூற்றாண்டுகள் கடந்தும் சிவன் அவர் முன் தோன்றவில்லை. ஆனால் எந்த நிலையிலும் அவருடைய தவத்தையும் நம்பிக்கையும் கைவிடவில்லை. தவம் தொடர்ந்தது. இவரின் நம்பிக்கையை கண்ட  சிவனின் மனம் குளிர்ந்ததோ என்னவோ ஒரு சித்ரா பௌர்ணமி அன்று அவரின் முன் தோன்றினார்.

ஈசன் , நாராயணா கண்களை திறந்து பார் .
அவர் கூறியதும் கண்களை திறந்த 
நாராயணன் , ஐயா !! ஈசனே என்று உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் போங்க அந்த ஈசனின் பாதத்தில் விழுந்து வணங்கினர். 

ஈசன் , நாராயணா உன் தவத்தினை கண்டு மனம் குளிர்ந்தது யாம்  மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.என் மனதினை குளிர்வித்த உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். 

நாராயணன் , தங்களை பார்த்ததே எமக்கு பெரிய வரம் ஐயனே ஆனால் என் வம்சத்தின் சாபம் போக்க வேண்டியே இத்தவத்தினை மேற்கொண்டேன் பரம்பொருளே என்றார் . 

அதனை கேட்டு சிரித்த ஈசன் , என் தேவி இட்ட சாபத்தை என்னை கொண்டு போக்க நினைக்கிறாய் சரி கேள் உன் வரத்தினை. 

நாராயணன் , ஈசனே என் வம்சத்தில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் அவர்களின் வளர்ச்சியை பார்க்கும் முன்னே இம்மண்ணை விட்டு மாண்டுபோவர் என்ற காளிதேவியின் சாபம் நீங்கி  என் வம்சம் நலமாக வாழ்வதை என் கண் குளிர காணும் வரத்தை தரவேண்டும் ஐயனே என்றார் பணிவுடன். 

அதற்கு ஈசனோ , நாராயணா என் சரிபாதி சக்தியின் சாபத்தை என்னால் அழிக்க இயலாது ஆனால் எப்போது உன் வம்சத்தில் இரட்டை பெண் குழந்தைகள் அவர்களின் வலது கையில் சிவலிங்கத்தினை மச்சமாககொண்டு பிறக்கிறதோ  அப்போது உன் வம்சத்தின் சாபம் விலகி போகும் அவர்கள் வாழ்வதை நீ மகிழ்வுடன் என்று காண்கிறாயோ அன்று நீ சொர்க்கத்திற்கு வந்து சேர்வாய்  என்று ஆசிகள் கூறி மறைந்துவிட்டார்.

ஈசன் கூறி சென்றவற்றை நினைத்து மகிழ்வதா?? இல்லை கவலை கொள்வதா??? என்று ராஜநாராயணனுக்கு தெரியவில்லை . ஆனால்  தன் வம்சத்தின் சாபம் நீங்கும் என்ற செய்தி சந்தோசத்தை ஏற்படுத்தியது.பின்னர் அவர் அரண்மனைக்கு செல்லாமலே கானகத்திலே வாழ தொடங்கிவிட்டார். மந்திரி ஆதிரையானிடம் மட்டும் சில விஷயங்களை செய்தியாக அனுப்பியிருந்தார்.அதுபோல் ஒவ்வொரு முறை குழந்தை பிறக்கும் பொழுது பெற்றவர்கள் இறந்தார்களா என்ற செய்தி அவருக்கு ரகசியமாக வந்து சேர்ந்தது. பல நூற்றாண்டுகள் கடந்தும் அவருக்கான நல்ல செய்தி மட்டும் வரவே இல்லை. 

ஆதிரையான் குடும்பத்தில் பிறக்கும் நம்பகமான ஒரு வாரிசுக்கு மட்டும் அரண்மனையின் ரகசியங்கள் சொல்லி வளர்க்கும் பழக்கத்தை ஆதிரையான் செய்தார். அதே போல் அரண்மனை வாரிசுகளுக்கும் ரகசியங்கள் சொல்லியே வளர்க்கப்பட்டனர் ஆனால் ராஜநாராயணன் உயிரோடு இருக்கும் விஷயத்தை மட்டும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. 

காலங்கள் மாறியது மன்னர் ஆட்சி மக்கள் ஆட்சியாக மாறியது. ஆதிரையானின் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது. ரகசியங்களும் சில  காலங்களுக்கு பின் யாரிடமும் கூறப்படவில்லை . ஆனால்  அது பற்றிய குறிப்பு மட்டும் ஒரு ஓலை சுவடியில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அவர்களுடனே இருக்கிறது. 

அரண்மனையின் வாரிசு சோமசுந்தரம் மட்டுமே கடைசியாக அந்த வம்சத்தில் மிஞ்சியவர்.அவர்களின் சொத்து அவரை வளர்த்தது. அவரே S.M.Group of companies உருவாக  காரணமாக இருந்தவர் . அவர் மீனாட்சி என்பவரை கரம் பிடித்தார். அவர்களுக்கு ஒரு ஆண் வாரிசு பிறந்தது. அதனால் தான் அந்த கம்பெனிகளுக்கு S.M. என்ற பெயர் வந்தது. அதாவது S-சோமசுந்தரம், M-மீனாட்சி..அதன்பின் குழந்தை பிறந்த சில காலங்களிலே இருவரும் இறந்தனர். சோமசுந்தரரின் பேரன் தான் இந்த அருண்மொழி வர்மன். அவரின் மனைவி வேதிகா அருண்மொழி வர்மன்.பல நூற்றாண்டுகள் கடந்து இத்தம்பியருகே இரட்டை பெண் குழந்தைகள் வலது கையில் சிவலிங்கத்தினை மச்சமாக கொண்டு பிறந்தது. அதை நினைத்து மகிழ்ந்த வேளையில் வேதிகா இறந்துவிட்டார் என்ற செய்தியும் வந்து சேர்ந்தது.அதனை கேட்டு அருண்மொழி வர்மன் பெரிதும் அதிர்ந்து கதறினார். இந்நிகழ்வு நடந்து சில மாதங்கள் கடந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி அருண்மொழி வர்மனை வேறு கல்யாணம் செய்துகொள்ள எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் ஒப்பு கொள்ளவில்லை. பின்னர் அவரின் போக்கிலே விட்டுவிட்டார் அகிலாண்டம். 

இவை  அனைத்தையும் தனது அகக்கண் வழியே  நினைத்து பார்த்த அருண்மொழி வர்மன் தனது கண்களை திறந்து பார்த்தார்.அப்போது , ப்பா…. ப்பா என்ற குரல் கேட்க  திரும்பி பார்த்தார் . 

அங்கு இரட்டை ரோஜாக்கள் மொட்டவிழ்ந்து செடியில் இருந்து கீழே குதித்து ஓடிவருவது போல் இரண்டு குழந்தைகள் ஓடி வந்து அருண்மொழி வர்மனின் காலை கட்டி கொண்டனர். 

தனது  நினைவுகளில் இருந்து வெளி வந்த அருண்மொழி வர்மன் தனது இரண்டு குழந்தைகளையும் தனது இரு கைகளிலும் அள்ளிக்கொண்டார். ஆமாங்க வந்தது அவர்களின் மகள்கள் சாய்ப்ரியா மற்றும் சாய்லஷ்மி தான். 

அவர்களை பார்த்து , என்னம்மா ?? ஏன் இப்படி ஓடி வரீங்க ??? என்றார் அன்பொழுக .

அதற்கு குட்டிஸ் இருவரும் ஒருசேர , ஸ்கூல் டைம் ஆச்சுப்பா வாங்க என்றனர். 

ஓஹ் குட்டிஸ் கு டைம் ஆச்சா சரி சரி வாங்க போகலாம் அம்மாவை கும்பிட்டிக்கோங்க போகலாம் என்று அவர் கூறியதும் இருவரும் தங்கள் கைகளை குவித்து கண்களை மூடி வேண்டி கொண்டனர் . பின்னர் இருவரையும் கீழே அழைத்து வந்தவர் இருவருக்கும் உணவை ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது அகிலாண்டம் , ஐயா வர்மா குழந்தைகளை கூட்டிட்டு மதுரைக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டியே??? என்றார் வருத்தத்துடன். 

அருண் , ஆமாம்மா மதுரையில இருக்கிற நம்ம trust  அ  விரிவு படுத்தனும் அதுக்கு எப்படியும் ஒன்னுல இருந்து ரெண்டு வருஷம் ஆகிடும் நான் அங்க இருந்தாதான் சீக்கிரம் வேலை முடியும் அதுக்குதான்ம்மா அங்க போறேன் என்றார். 

அகிலாண்டம் , அதுக்கு என்னப்பா போயிட்டு வா ஆனால் குழந்தைங்க இங்கையே இருக்கட்டுமே நாங்க பார்த்துகிறோம் என்றார். அதைக்கேட்ட பார்த்திபன் , ஆமாம்டா  நாங்க குழந்தைகளை பார்த்துக்கொள்ள மாட்டோமா???  அவங்களை எங்ககிட்ட  விட்டுட்டு போடா  என்றான் . 

அருண் , இல்ல பார்த்திபா என்னால அவங்களை பிரிஞ்சி இருக்க முடியாது இங்க அடிக்கடி வந்து அவங்களை பார்த்திட்டு போகவும் நேரம் இருக்காது அதனால நான் கூட்டிட்டு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன் அவங்களை அங்க நம்ம ஸ்கூல சேக்குறதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன்   இனி யாரும் இதை பத்தி பேச வேண்டாம் என்றவர் பேச்சு முடிந்தது என்பது போல குழந்தைகளை தூக்கி கொண்டு சென்றுவிட்டார். 

அதுவரை அமைதியாக இருந்த காயத்ரி , சரி விடுங்க வேதிகா போனதுக்கு அப்பறம் குழந்தைகள் தான் அவரோட வாழ்க்கைனு வாழ்த்திட்டு இருக்காரு அவரே கூட்டிட்டு போகட்டும் என்று கூறி கணவனையும் மாமியாரையும் சமாதான படுத்தினார். 

மறுநாள் அருள்மொழிவர்மன் சாய்ப்ரியா மற்றும் சாய்லஷ்மியுடன் மதுரைக்கு கிளம்பினார். 

தொடரும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!