Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்24

      மகிழின் தலைமுடியைப் பற்றியபடி அந்தச் சரிவில் நின்றபடி அவன் பேசப்பேச.. இங்கு மூவருக்கும் உயிரே நின்றுவிட்டது.. மகிழ் அவன் கையில் இருந்து விடுபடப் போராட.. சமதளமற்ற மண் தரையில் சரித்து கீழே விழ.. முழங்கையில் நல்ல அடி.. அப்போதும் அவள் கூந்தலை அவன் இறுகப் பிடித்திருக்க.. அது வேறு வலி உயிர் போனது.

      ரகு கோபாவேசமாய் “டேய் ஒழுங்கா கண்ணாளை விட்ரு.. இல்லை” என நெருங்கவும்.. குமரன் வேண்டுமென்றே அவளை கீழே தள்ளுவது போல செய்ய.. அவன் பின் வாங்கினான்.

      “இவளுக்கு ஒன்னுன்ன உடனே எல்லாரும் குதிக்கறிங்க.. நீங்க எல்லாம் எப்பவும் இப்படி ஒன்னா இருந்து எங்களை மட்டும் பிரிச்சுப் பாத்திங்க தானே.. ஒரு விதவை மறுகல்யாணம் பண்ணிக்கிறது தப்பா.. இவன் அவங்களை கால் காசுக்குக் கூட மதிச்சது இல்ல” என ரகுவை முறைத்தவன்..

     பின்னர் “நாங்க உங்க வழிக்கு வந்தோமாடா.. பின்ன ஏன்டா நீங்க மட்டும் என் வழியில வந்து என்னைத் தொல்லை பண்றிங்க.. நான் யாரைக் கொன்னு.. யாரைக் கல்யாணம் பண்ணிகிட்டா உங்களுக்கு என்னடா.. வேலையைப் பாத்துட்டுப் போக வேண்டியது தானே.. நான் நினைச்சது மட்டும் சரியா நடந்திருந்தா.. எங்களை கேவலமா நினைச்ச உங்க கண்ணு முன்னாடி.. எனக்குன்னு மரியாதையாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்” என்று இரைந்தான். இயலாமையில்.



Advertisement

      ரகு “நீ கேட்பார் பேச்சுக் கேட்டு புத்தி கெட்டு அலைஞ்சா அதுக்கு யார் என்னடா செய்வாங்க.. உங்கம்மாவை நான் சொந்த ரத்தமாத்தான் பாத்தேன்.. ஆனா நீ உன் பாட்டி மாதிரி எல்லார் மேலையும் பொறாமையோட வளந்துருக்க.. இப்பக்கூட பொறாமையில என்ன பண்றோம்னு தெரியாம பண்ணிட்டு இருக்க” என எச்சரித்தான்.

       “நான் என்ன பண்றேன்னு எனக்குத் தெரியும்டா.. எனக்கு வாழ்க்கையில இவ்வளவு பெரிய நஷ்டத்தைக் கொடுத்த உங்களுக்கு ஒரு சின்ன இழப்பையாவது கொடுக்கனும்.. இப்போதைக்கு என் எண்ணம் அவ்வளவு தான்.. இதுக்கப்புறம் என்ன வந்தாலும் நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்டா” என தன் பிடியிலேயே நின்றான் குமரன்.

மங்கையின் தவறான வளர்ப்பு.. ஒரு பொறுப்பான வேலைக்குச் சென்ற பின்பும் அவனை குறுக்கு வழியில் முன்னேறவே தூண்டியது.. குணத்தால் கிடைக்க வேண்டிய மரியாதையை.. பணத்தை வைத்து எடையிட அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்க.. இன்று அவன் திட்டங்கள் அனைத்தும் வீணாய்ப் போக.. அந்த ஆத்திரத்தில் அறிவிழந்து என்ன செய்வது எனப் புரியாமல் கத்திக் கொண்டிருந்தான் குமரன்.

Advertisement

      ரகு மீண்டும் ஏதோ பேச வர.. அதற்குள் நந்தா “டேய்.. நீ நிஜமாவே படிச்சுத்தான் போலீஸ் வேலை வாங்கினியா.. ஏன்டா இப்படி அமெச்சூரா வில்லத்தனம் பண்ற” என அவனைக் கேலி செய்ய..

Advertisement

     அவனை ஏளனமாகப் பார்த்த குமரன் “என்னடா என்னை டைவர்ட் பண்ணி இவளை காப்பாத்தப் பாக்கறியா.. இவ சாகலைன்னாலும் கடைசிக்கு கை காலாவது முறியும்ல.. என் ப்ளான் எல்லாம் மொத்தமா ஊத்திகிச்சு.. அதுக்கு குறைஞ்சபட்ச அளவுலயாவது நீங்க அனுபவிக்க வேண்டாமாடா” என தெளிவாகவே பேசினான்.

      ‘இந்த மண்டைப் பயலுக்கு நேரங்கெட்ட நேரத்துல அறிவு வேலை செய்யனுமா கடவுளே’ என மனதில் அவனைத் தாளித்தவன்.. அதை முகத்தில் காட்டாமல் “அடேய்.. இவ்வளவு தெளிவா இருக்க.. மதியம் தோப்புக்குள்ள வந்த ஸ்பாட்டை ஏன் கவனிக்கலை.. அப்பவே நீ அவனைப் பாத்திருந்தா இந்நேரம் உன் ப்ளான் அத்தனையும் சமத்தா நடந்திருக்கும்” என வெறுப்பேற்ற..

    முகிலும் “என்ன லுக்கு.. நீங்க ரெண்டு பேரும் பேசினதை அவன் தான் எங்களுக்கு கேட்டு சொன்னான்.. அதை வீடியோ கூட எடுத்தான்.. அதெல்லாம் ஆல்ரெடி போக வேண்டிய இடத்துக்குப் போயாச்சு.. இனி நீ காலம் முழுசும் உள்ள தான்டி” என இன்னும் கொஞ்சம் அதில் எண்ணெயை ஊற்றினான்.

Advertisement

      சொத்துக்கள் அனைத்தும் ரகுவின் அப்பா பெயரில் இருக்க.. அவனுக்கென இருந்தது இந்த வேலை மட்டுமே.. இன்று அவசரப்பட்டு அதையும் கெடுத்துக் கொண்டேமே.. அடுத்து என்ன செய்வது என அவன் படுவேகமாக யோசிக்க ஆரம்பிக்க.. அதை உணர்ந்த முகில்.. அவனை உதைத்து மகிழைப் பிடித்து இழுக்க..  நந்தா நொடியை வீணாக்காமல் சரிவில் விழப் போன குமரனின் கையைப் பற்றி மேலே இழுத்துவிட்டான்.

     சரியாக அந்த நேரம் நந்தா ஏற்பாடு செய்திருந்த போலீஸ் வர.. அவர்கள் அருகில் வரும் முன்.. மகிழின் கேசத்தைப் பற்றியிருந்த கையை பின்னால் திருப்பி முறித்துவிட்டான்.. குமரனால் கத்தக் கூட முடியாத அளவு வலி எடுக்க.. நந்தாவை நிமிர்ந்து பார்க்க.. அதில் அவ்வளவு ரௌத்திரம்.

      “உன்னை நாங்க பிரிச்சுப் பாத்தோமா.. போய் உன் அம்மத்தாட்ட கேளு.. அதுக்குத் தான் இந்த வேலையெல்லாம் தெரியும்.. வேலைக்காரியா சேர்ந்த வீட்ல வீட்டுக்காரியாக ஆசைப்பட்டு.. நல்லா இருந்த மனுசியை கைக்குழந்தை இருக்குன்னு கூடப் பாக்காம மருந்து வச்சுக் கொன்னுட்டு.. இன்னைக்கு அவங்களோட இடத்தில இருக்கு” என இளக்காரமாகச் சொல்லவும்.. இது ரகுவிற்கே புதிய செய்தி தான்.

      அவன் அதிர்ந்து நிற்கவும் “ஆமா மாமா.. உங்கம்மா நோய் வந்து சாகலை.. அவங்களை இவன் பாட்டி தான் மருந்து வச்சு கொன்னுடுச்சு.. உங்கம்மா செத்த அப்புறம் அங்க வேலை செஞ்ச இன்னொருத்தங்க சொல்லித் தான் அப்பத்தாக்குத் தெரியும்.. அவங்க சுதாரிக்கிறதுக்குள்ள உங்கப்பா அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டாங்க” என விளக்கினான் நந்தா.

     ரகு அசைவில்லாமல் நிற்கவும்.. முகில் தான் “இது சின்னத்தாத்தாவுக்கு” எனத் தயங்கவும்.. ‘தெரியாது’ என்பதாய்த் தலையசைத்தான்.. முகில் ‘சித்து’ என அவன் தோள் மேல் கை வைத்து அழுத்தினான்.

        அறிவழகன் இத்தனை நாள் குருட்டு அதிர்ஷ்ட்டத்தில் அனைத்திலும் தப்பி வந்திருக்க.. இன்று மொத்தமாய் மாட்டிக் கொண்டு.. மீள வழி தெரியாமல் விழித்தார்.. இருந்தாலும் மனதில் ஏதோ கணக்கிட்டபடி மனைவியிடம் முனுமுனுத்துவிட்டு காவலர்களுடன் நடந்தார்.. சிலர் என்றும் திருந்திவிடப் போவதில்லை.

      பின் அந்தக் காவல்துறை நண்பரிடம் குமரனனின் வாய்மொழியாய் வந்த அனுவின் கணவன் அசோக்கின் விபத்து பற்றிய பேச்சையும்.. சற்று நேரம் முன் நடந்த நிகழ்வுகளுக்கான காணொலியையும் கொடுத்து அவர்களுக்கு நன்றி சொல்லி.. நாளை போலீஸ் ஸ்டேஷன் வருவதாகச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

       ரகு அந்த அனுவிடம் சென்று “ம்மா.. இந்த சின்ன வயசுல உனக்கு நடந்தது அநியாயம் தான்.. ஆனா நீ காலத்துக்கும் இப்படியே இருக்கனும்னு அவசியம் இல்லை.. உன் மனசு மாற எவ்வளவு காலம் வேணா எடுத்துக்கோ.. நல்லாப் படி.. வேலைக்குப் போ.. உங்கம்மாவைப் பாத்துக்கோ.. உங்கப்பாவால மறுபடியும் பிரச்சனை வந்தா எதிர்த்து நில்லு.. எந்த உதவி வேணாலும் கட்டாயமா எங்களைக் கூப்பிடு” என புத்தி சொல்லி அவர்களின் டிரைவரோடு அனுப்பி வைத்தான்.

     இனி அவர்கள் வெளியே வந்தாலும்.. எதுவும் செய்ய இயலாத நிலைமையில் தான் இருப்பர்.

     நந்தா புன்னகை முகமாய் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு திரும்பியவன்.. முகிலின் கைகளுக்குள் இன்னும் நடுங்கியபடி நின்றிருந்த மகிழை முறைத்தான்.

     “உனக்கு ஏன்டி இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம்” என கடுகடுக்க.. அவன் திட்டுவதை கண்டு கொள்ளாமல்.. அவன் அருகில் நெருங்கியவள்.. அவன் இடது கையில் முழங்கைக்கு மேலே இரத்தம் கசிந்த இடத்தை அவள் அந்தக் கையைத் தூக்கி ஆராய “வலிக்குது டி.. மெதுவா” என வலியில் முகம் சுளித்தான் நந்தா.

     “என்னைத் திட்ட மட்டும் வாய் நீளுது.. பாருங்க எவ்வளவு இரத்தம் வருது” என கண் கலங்கியவளை.. ஆறுதலாக அணைத்து “ஒன்னுமில்லைடி சின்னக் காயம் தான்” என அவன் சொல்ல.. நால்வருமாகக் இறங்க.. அவர்களின் மொத்தக் குடும்பமும் கீழே நின்றிருந்தது.

       ஸ்பாட் அவர்களிடம் நடந்ததை கூறிக் கொண்டிருக்க.. ‘எங்கோ நடக்கும் வரை அனைத்தும் தகவலே.. தங்கள் அருகாமையில் நடக்கும் வரையில் நமக்கு சில விஷயங்களின் வீரியம் புரிவதில்லை’.. அவர்களால் நம்பவே முடியவில்லை.

       அடுத்து அனைவரும் மகிழைத் திட்டத் துவங்க.. ராகவன் இம்முறை நந்தாவை முந்திக் கொண்டு அவளை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றி.. ஒரு மிதப்பான பார்வையை மருமகன் மீது வீச.. நந்தா சிரித்துக் கொண்டான்.

       ஒருவழியாக வீட்டுக்குச் செல்ல.. தூக்கம் வருமா என்ற கேள்வி இருந்தாலும்.. அவரவர் அறையில் சென்று முடங்கினர்.. மகிழ் குளித்துவிட்டு வெளியே வர.. நந்தா தன் கைக் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தான்.

      அவளை அருகில் அமர வைத்தவன் முழங்கையில் இருந்த காயத்திற்கு மருந்து பூசியவன்.. ஒன்றும் பேசாமல் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.. அதுவே அவன் உள்ளத்தின் அமைதியின்மையை உரைக்க.. அவன் அணைப்பில் இருந்து விலகினாள்.

      கேள்வியாய்ப் பார்த்தவனைக் கண்டு பார்வையைத் தழைத்தவள்.. அவன் அதரங்களைத் தன் இதழ் கொண்டு தீண்ட.. இன்பமாய் அதிர்ந்து விழி விரித்தவன்.. அவள் அன்பின் சாரலில் இதமாய் நனையத் துவங்கினான்.

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

என்பதைப் போல.. அவளால் உண்டான மனவுளைச்சலுக்கு அவளே மருந்தாகிப் போக.. அன்பின் திறவுகோலான அம்முத்தம்.. கூடலின் ஆதிப்புள்ளி ஆகாமல்.. ஊடலின் முற்றுப்புள்ளி ஆகியது.. முத்தத்தின் முற்றில் இருவரின் மனமும் அமைதியடைந்து இருக்க.. இருவரும் உறங்கத் துவங்கினர்.

     அடுத்த நாள் காலை.. நந்தாவை வற்புறுத்தி மருத்துவமனை அழைத்துச் சென்று பரிசோதனை முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தாள் மகிழ்.. இரண்டு நாளும் அவனை நன்றாக கவனித்துக் கொண்டவள் மூன்றாம் நாள் பள்ளி செல்ல.. நந்தாவும் அவன் விடுபட்ட வேலைகளை கவனிக்கச் சென்றான்.

      ஒரு வார விடுப்பிற்குப் பின்.. அவள் பள்ளி செல்ல.. அவளது தோற்ற மாற்றம் அனைவரின் மண்டையைக் குடைந்தாலும்.. யாரும் எதுவும் கேட்கவில்லை.. பள்ளி அலுவலகத்தில் வேலை செய்யும் அவர்கள் ஊர் பணியாட்களால் மகிழ் யாரெனத் தெரிந்துவிட.. வினிதா ஒட்டுமொத்தமாக வாயை மூடிக் கொண்டார்.

     முத்து கூட அவர் செய்கையை சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்.. மகிழுக்கு இவர்களைக் கவனிக்கவெல்லாம் நேரம் இல்லை.. விடுபட்ட பாடங்களை நடத்துவதிலேயே பொழுது செல்ல.. மிச்சம் இருந்த பொழுதுகள் முத்துவை ஓட்டுவதிலேயே சென்றது.

      அன்றும் அவள் இந்த ஒரு வாரத்திய டெஸ்ட் மார்க்ஸூடன் ப்ரின்சிபல் அறையை நோக்கிச் செல்ல.. அவள் புடவையைப் பிடித்து யாரோ இழுக்க.. திரும்பினால் குட்டி நந்து நின்றிருந்தான்.

      அவளிடம் கடலைமிட்டாய் பாரை நீட்டியவன் “எனக்கு ஆப்பி பர்த்டே” என்க.. அதில் மகிழுக்கு சிரிப்பு விரிய.. அவன் தலையைக் கலைத்தவள் “தமிழ் போல் வாழ்க” என்றான்.

      “ஸ்கூல் கேம்பஸ்க்குள்ள இங்லிஷ் தான் பேசனும்ன்றது ரூல்.. மறந்து போச்சா மிசஸ் மகிழ்” என்ற நந்தாவின் குரலில் மகிழ் அதிர்ந்து திரும்ப.. குட்டி நந்து வகுப்பிற்குள் ஓடிவிட்டது.. அவள் பதிலாய் ஏதோ கூற வருவதற்குள் அவன் ஃபோன் அலற.. மகிழ் அவனிடம் தலையசைத்துவிட்டு விலகி நடந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!