Skip to content
Post Views: 10,213
சாரதா வீட்டின் உள்ளேயும் வெளி வாசலுக்கும் நில்லாமல் நடந்து கொண்டிருந்தார். முகம் பார்க்க டென்ஷனாக இருந்தது. இவ்வளவு நேரம் கிட்சனில் இருந்து வேலை செய்ததற்கான அடையாளமாக உடலெல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது.
அவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொல்லியும் இப்படி டென்ஷன் பண்றாளே. போன் கூட ஸ்விட்ச் ஆஃப்னு வருது. பிள்ளையாரப்பா அவங்க வரதுக்குள்ளாற இவள் வீட்டுக்கு வந்திடனும் என கைகூப்பி கண்மூடி நின்ற இடத்திலிருந்தே மனதில் வினாயகப் பெருமானை நினைத்து வேண்டுதல் வைத்தார்.
கனிமொழி பஸ்சிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள். முதுகில் புத்தகப் பையை மாட்டிக்கொண்டு, கையில் லன்ச் பேக்கை ஆட்டியபடி வாயில் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டே ஆடி ஆடி நடந்து வந்தவளின் பார்வை வீட்டு வாசலில் நின்றிருந்த சாராதாவின் மேல் நிலைகுத்தி நின்றது.
வீட்டின் காம்ப்பௌன்ட் கேட்டைப் பிடித்துக் கொண்டு தெருவையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த சாரதாவைப் பார்த்து முகம் யோசனையானது.
Advertisement
ஏன்? அம்மா வெளியே நின்னிட்டிருக்காங்க. யாருக்காக வெயிட் பண்றாங்க? எனக்காகவா..? என நினைத்து நடையை வேகப்படுத்தினாள்.
சாரதா பூபதி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். முதல் பெண் அமுதினி, இரண்டாவது பூங்குழலி, மூன்றாவது கனிமொழி. அமுதினிக்கு அடுத்து ஆண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டு அடுத்த பிறந்த இரண்டும் பெண் குழந்தைகளாக போனதில் பூபதிக்கு ஏக வருத்தம்
கனிமொழிக்கும் அவள் சகோதரிகளுக்கும் இடையில் வயது வித்தியாசம் அதிகம். அமுதினியும் பூங்குழலியும் அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளியில் பிறந்தவர்கள். இருவருக்குள் நெருக்கமும் அதிகம். அவர்களுக்கும் கனிமொழிக்கும் நிரம்ப வயது வித்தியாசம் இருந்தது.
Advertisement
கனிமொழியை பார்த்தால் பதினேழு வயது என யாராலும் சொல்ல முடியாது. நல்ல வளர்த்தி. பள்ளி இறுதி ஆண்டில் இருந்தாள்.
Advertisement
குடும்பத்தின் மீது பாசமுள்ள பெண். அதுவும் அன்னையின் மீது அவ்வளவு பிரியம். தந்தையைவிட அன்னையிடம் நெருக்கமும் கூட. எப்போதும், வீட்டிலிருக்கும் சமயங்களில் எல்லாம் சாராதாவின் பின்னாடியேதான் சுற்றிக் கொண்டிருப்பாள்.
தாயின் முகம் வாடினால் கூட பொறுக்க முடியாது. இரவு தூங்குவதும் அவரை இறுக்கிக் கொண்டுதான். மொத்தத்தில் சாரதாவின் செல்லப் பெண் என்பதைவிட, கனிமொழியின் செல்ல அம்மா என்று சொல்வது சாலச் சிறந்ததாக இருக்கும்.
இதோ சாரதாவை வீட்டின் வெளியே பார்த்ததும், என்னவாக இருக்கும் என யோசனையாக நடையை எட்டிப் போட்டாள் வீட்டை நோக்கி.
Advertisement
கனிமொழி, ‘’ஏன் ம்மா……வெளிய நிக்கற ?’’.
“அக்காவுக்காக வெயிட் பண்றேன் டா. அவள் இன்னும் வரலை”.
“இன்னும் வரலையா…? போன் பண்ண வேண்டியது தான? அதுக்கு ஏன் வெளியவே நின்னுட்டு இருக்க வா உள்ள” என கைப்பிடித்து அழைத்துச் சென்றாள்.
“அக்காவுக்கு போன் பண்ணும்மா…?”
“நான் போன் பண்ணேன். நாட் ரீச்சபிள்னு வருது. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன். என்ன பண்றதுன்னே தெரியலை. சரி நீ போடா. அப்பாவும் வர நேரம் ஆச்சு. டிரஸ் மாத்திட்டு வா…”.
“ஹாஸ்பிட்டல் நம்பர்க்கு ட்ரை பண்ணியா… ம்மா..?
“பண்ணேன்டா. சரியா சொல்ல மாட்டேன்றாங்க”.
“இரு. நான் பண்ணி பார்க்கறேன்” என அமுதினி வேலை செய்யும் ஹாஸ்பிட்டல் நம்பருக்கு போன் செய்து பேசினாள். ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனுக்கு தான் போன் செய்தாள். எதிர்முனையில் என்ன சொன்னார்களோ, போனை கட் செய்துவிட்டாள்.
சாரதா இவளை கேள்வியாக பார்த்தார்.
‘’என்ன சொன்னாங்க…?’’.
“அம்மா… அக்கா கிளம்பிட்டாளாம். அவள் கிளம்பி ஒன் ஹவர்க்கு மேல ஆகுதாம். அப்புறம் ஏன் இன்னும் வரலை” என்றாள் யோசனையாக தலையை மொபைலால் தட்டிக்கொண்டே.
“இந்த மாதிரி டென்ஷன் வேணாம்னுதான் லீவ் போட சொன்னேன். அவங்க வரதுகுள்ள வந்தா நல்லாயிருக்கும். சரி, நீ போய் கைகால் கழுவிட்டு வா. டிபன் எடுத்து வைக்கறேன்”.
அந்த நேரம் வீட்டினுள் நுழைந்த பூபதியைப் பார்த்த கனிமொழி சத்தமாக கிட்சனைப் பார்த்து, “ம்மா… அப்பா வந்துட்டாங்க. அவருக்கும் சேர்த்து எடுத்துட்டு வா…” என சோபாவில் உட்கார்ந்து கொண்டே கூறினாள்.
அலுவலகத்திலிருந்து வந்த பூபதி, மகளைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவளது பக்கத்தில் சோபாவில் அமர்ந்தவர், ‘’எனக்கு காப்பி மட்டும் போதும் சாரு” என குரல் கொடுத்தார்.
மகளைப் பார்த்து, “என்னடா இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இல்லையா? சீக்கிரம் வந்துட்ட” என்றார் கனிமொழியிடம்.
“இல்லப்பா… மிட்டெர்ம் வருதுல்ல. படிக்கறதுக்காக விட்டுட்டாங்க”.
சாரதா கனிமொழிக்கு ஒரு கையில் அவளுக்கு பிடித்த வெங்காய பக்கோடாவும், ஸவீட்டும், இன்னொரு கையில் காப்பியும் எடுத்துக் கொண்டு வந்தார். காப்பியை பூபதியிடம் கொடுத்தவர்,
கனிமொழியிடம் “இன்னும் யூனிபார்ம் கூட மாத்தலையா… நீ?” என அவளை முறைத்தவர், “போய் மாத்திட்டு, கைகால் கழுவிட்டு வந்து எடுத்துக்கோ” என வெங்காய பக்கோடா தட்டை அவளிடம் கொடுக்காமல் டீபாய் மேல் வைத்தார்.
“அம்மா… அநியாயம் பண்ற. டையர்டா இருக்கு. சாப்பிட்டு போய் டிரஸ் மாத்த கூடாதா” என சிணுங்கினாள்.
சாரதா அவளை முறைப்பதைப் பார்த்ததும். ஏற்கனவே அம்மா… அக்கா வராம கோவமா இருக்காங்க, இப்ப பேசுனா இன்னும் ஏதாவது சொல்வாங்க என அதற்கு மேல் ஏதும் வாயடிக்காமல், உடை மாற்ற எழுந்து சென்றுவிட்டாள்.
“அனி வந்துட்டாளா?” என்றார் பூபதி மனைவியைப் பார்த்து.
“இன்னும் இல்லங்க. போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது” என்றார் வருத்தத்துடன்.
“போன்ல சார்ஜ் இல்லையோ, என்னமோ. அவள் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டு பார்த்தியா..?”
“ம்ம்… பேசினேங்க. கனிகூட இப்ப வந்து போன் போட்டு பேசுனா. அங்கிருந்து கிளம்பிட்டான்னுதான் சொல்றாங்க. ஆனால் இன்னும் வீட்டுக்கு வரல”.
“அவகிட்ட எத்தனை மணிக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து வராங்கன்னு சொல்லிட்டல்ல”.
“ம்ம்…”
“அப்புறமென்ன. வந்துருவா. நீ வேலை இருந்தா பாரு. குழலி என்ன பண்றாள்…?”
“தூங்கிட்டிருக்காங்க”.
சற்று நேரம் பொறுத்து “அம்மா மணி நாலாயிடுச்சு. இன்னும் அக்காவ காணோம்” என்றாள் கனிமொழி.
“நானே டென்ஷனா இருக்கேன். நீ வேற பயமுறுத்தாத. இன்னொரு தரம் அவங்க ஹாஸ்பிட்டலுக்கு போன் போட்டு பார்க்கிறயா..?”
“எத்தனை தடவமா கேட்கறது? நீயும் பேசி, நானும் பேசி…, அவங்கதான் அக்கா அங்கயிருந்து கிளம்பிட்டான்னு தெளிவா சொல்றாங்களே”
“இன்னும் வீட்டுக்கு வரலையேடா” என பதைபதைத்தார் சாரதா.
இவ்வளவு நேரம் என்ன பண்றா…? என பூபதிக்கும் பயம் வர ஆரம்பித்தது அமுதினியை நினைத்து. என்னைக்கும் இத மாதிரி லேட் பண்ணதில்லையே. இன்னைக்கு ஏன் இப்படி பண்றாள்.
அமுதினி பல்லாவரத்தில் சமீப காலமாக புகழ் பெற்று வரும் பெரிய மருத்துவ மனையில் நர்ஸாக பணிபுரிகிறாள். நான்கு வருடமாக அந்த மருத்துவ மனையில் வேலை செய்கிறாள்.
வேலையில் திறமையானவளும்கூட. அவள் விரும்பிதான் இந்த துறைக்கு வந்தது. சிறு வயதிலிருந்தே மருத்துவதுறையில் ஆர்வம் அதிகம்.
அமுதினிக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசை. நீட் தேர்வில் தகுதி பெறாததால், வேறு வழியின்றி நர்சுக்கான கோர்ஸை தேர்ந்தெடுத்து படித்திருந்தாள்.
வேலையில் சின்சியர் என சொன்னால்கூட பொருந்தும். அப்படிதான் அவள் கூட வேலை செய்பவர்கள் எல்லாம் அவளை கிண்டல் செய்வது. சமயத்தில் இரவுபகல் என சேர்ந்தாற்போல கூட ட்யூட்டி பார்ப்பதுண்டு. இந்த துறையில் நேரம்காலம் பார்க்கமுடியாதே.
அவளது சிரத்தையான வேலையினாலேயே எல்லாருக்கும் அவளை பிடிக்கும். ஹாஸ்பிட்டலில் டாக்டர்கள் இடத்தில் அமுதினிகென்று நல்ல பெயர் உண்டு.
இன்று அவளை பெண் பார்க்க வருகிறார்கள்.
காலையில் இவள் வேலைக்கு கிளம்பும்போதே சாரதா “வேலைக்கு செல்லவேண்டாம் லீவ் சொல்லிவிடு” என்றிருந்தார்.
“இல்லம்மா. மாப்பிள்ளை வீட்டுல இருந்த சாயந்திரம்தான வராங்க. நான் மதியம் வந்துடறேன். லன்ச்கூட வேணாம்” என கிளம்பியிருந்தாள்.
முதன் முதலில் பெண் பார்க்க வரும் போதுதான் படபடப்பு, பரபரப்பு எல்லாம் இருந்தது பெண்ணுக்கு. போக போக அது தொடர் கதையானதும் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள முடியவில்லை.
இது எத்தனாவது மாப்பிள்ளை? பெண் பார்க்க வருவது என கேட்டால் அவளுக்கே தெரியாது. லீவ் எடுத்து வீட்டில் வெறுமனே இருக்க முடியாமல் வேலைக்கு கிளம்பியிருந்தாள்.
ஒரு சில சமயம் அவளுக்கு தோணுவதுண்டு. எவன்டா…? இந்த பொண்ணு பார்க்கறது எல்லாம் கண்டுபிடிச்சது என.
பூபதிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. நேரில் சென்றெல்லாம் பார்த்து வர நேரமில்லை. இன்னும் அரைமணிநேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிடுவார்கள். இதுவரை இதுமாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதில்லை.
ஒரு பக்கம் அமுதினியை நினைத்து குழப்பம் பெற்றவர்களுக்கு. பெண்ணுக்கு இந்த வரனில் விருப்பமில்லையோ என. அதனால்தான் வீட்டிற்கு வரவில்லையோ என பதட்டமாக இருந்தது.
அப்படி எதுவும் இருந்தாலும் தைரியமாக சொல்லக் கூடிய பெண். பெண்களை அப்படிதான் வளர்க்கின்றனர் சாரதாவும் பூபதியும். அமுதினியும் ஒளிந்து மறைத்து செய்யக் கூடியவள் இல்லை.
இன்னொரு பக்கம் அவளுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ என பயம் பிடித்து ஆட்டியது. ஏன் இன்னும் வரவில்லை? மொபைல் வேறு ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் இவ்வளவு குழம்பி தவித்தனர். வேலை செய்யும் இடத்தில் கேட்டால் மதியமே கிளம்பியிருந்ததாக சொல்லிவிட்டனர்.
சாரதாவும் என்ன செய்வது என புரியாமல் திகைத்திருந்தார். இப்பொழுதுதான் ஓரு நல்ல வரன் வந்து இருக்கிறது அமுதினிக்கு என சந்தோஷப்பட்டார்.
வசதியான இடம். கேள்விப்பட்ட வரை மாப்பிள்ளைப் பையன் நல்ல மாதிரி என சந்தோஷமாக இருந்தவருக்கு பெண்ணை நினைத்து வருத்தமானது.
அவர்கள் வரும் பொழுது அமுதினி இல்லையென்றால் என்ன சொல்லுவார்களோ என பதற்றமாக இருந்தது.
வரவைத்து அவமதித்துவிட்டதாக நினைப்பார்களோ என அச்சமாகவும் இருந்தது. வரவேண்டாம் என தடுக்கவும் மனம் வரவில்லை.
உறக்கத்திலிருந்து எழுந்து வந்த பூங்குழலி “ம்மா… பசிக்குது” என்றாள் சாரதாவைப் பார்த்து.
அமுதினியைப் பற்றி குழப்பத்திலிருந்த சாரதா இரண்டாவது மகளை நிமிர்ந்து பார்த்தார்.
மூன்று பெண்களில் நல்ல அழகி பூங்குழலி. செதுக்கியது போன்ற முகம். நல்ல உயரம். இடுப்பைத் தாண்டும் கூந்தல். சிவந்த நிறம். அளவான உடல்வாகு என அழகாக இருப்பாள். பெண்களே பார்த்தால் இன்னொரு முறை திரும்பிப் பார்க்கத் தூண்டும் வகையில் நல்ல அழகி.
சாரதாவுக்கு மனதில், ம்ம்… பெரியவளுக்கு முடிச்சுட்டு அடுத்து இவளுக்கு ஆரம்பிக்கனும் எனதான் இருந்தது.
error: Content is protected !!