Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 10

அரவிந்தன் கனியின் மீதான தனது பிடித்தத்தை ஒவ்வொரு செய்கையின் மூலமும் தெரிவித்துக் கொண்டிருக்க, மணப்பெண்ணான அமுதினியோ மனவாட்டத்தில் இருந்தாள்.  இன்று கௌதமை வெகுவாக எதிர்பார்த்திருந்தவளுக்கு, அவனது வருகையின்மை ஏமாற்றத்தோடு மனச் சுணக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

சாரதாவுக்கும் மாப்பிள்ளை வராதது குறையே.  ஷ்யாமளா அமுதினியின் முக மாற்றத்தை கவனித்துக் கொண்டுதானிருந்தார்.  அவரும் கௌதமை இங்கு வருவதற்கு முன் அழைத்திருந்தார்.  “நீங்களே பார்த்துக்கோங்க ம்மா…. என்னை எதுக்கும் கூப்பிடாதீங்க” என மறுத்துவிட்டவனை என்ன செய்ய முடியும்.  இதற்கு மேல் பேசினால் எங்கே முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என பயந்து வந்து விட்டார்.

அமுதினியின் மனது அவருக்கு புரிந்தது.  கல்யாணம் முடிந்ததும் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தார்.  சாப்பிட்டு ஷ்யாமளா கிளம்ப தயாரானதும் கார் எடுக்க சென்றிருந்தான் அரவிந்தன்.

சாரதாவும் ஷ்யாமளாவுடன் பேசியபடியே அவரை கார் எற்றி விட சென்றார்.  அவருக்கு பின்னாலேயே அவரது மக்களும் பூபதியும் பேசிக் கொண்டே வந்தனர்.



Advertisement

அரவிந்தன் கார் எடுத்து வந்து நிறுத்தியதும், ஷ்யாளாவும் கீதாவும் எல்லோரிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தனர்.  அரவிந்தும் எல்லோரிடமும் போய் வருகிறேன் என சொல்லுவது போல கனியிடமும் தலையசைத்து விடை பெற்றான்.

கனிமொழி யாருமறியாமல் அவனை முறைத்தாள்.  ஒரே நாள்ல எவ்வளவு அலப்பறை பண்றான் என்று கண்களை உருட்டி மிரட்டினாள்.  அதையெல்லாம் அவன் அசால்ட்டாக உதறிவிட்டு, அவளைப் பார்த்து கண்களைச் சிமிட்டி, புன்னகைத்துவிட்டு சென்றான்.

கனிமொழிக்கு ப்பா… கண்ணைக் கட்டுதுடா சாமி என மானசிகமாக தலையில் கையை வைத்துக் கொண்டாள்.

Advertisement

நாட்களும் விரைவாக ஓடி விடிந்தால் திருமணம் என வந்திருந்தது.  வீடு முழுக்க உறவினரின் வருகையால் நிரம்பியிருந்தது.  சாரதா அமுதினியை உண்ண வைத்து சீக்கிரமே தூங்கச் சொல்லி அனுப்பியிருந்தார்.

Advertisement

கோயிலில் திருமணம் என்பதால், விடியற் காலையிலேயே எழுந்து புறப்பட வேண்டும் என எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டிருந்தார்.

அமுதினியின் கூடவே கனியும் பூங்குழலியும் இருந்தனர்.  இவ்வளவு நேரம் வாய் வலிக்க கதையளந்துவிட்டு இப்பொழுது தான் உறங்கியிருந்தனர் இருவரும்.  குழலியின் கணவன் தீபக் காலையில் நேராக கோவிலுக்கு வருவதாக சொல்லியிருந்தான்.

அமுதினிக்கு தூக்கம் வருவேனா என்றிருந்தது.  அவளுக்கு திருமணம் நெருங்க நெருங்க மனதில் கலக்கம் ஏற்பட்டது.

Advertisement

இதுவரை பெரிதாக தெரியாத விஷயமெல்லாம், இன்று பூதாகரமாகி அவளை அச்சுறுத்தியது.  அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ, அதனால்தான் தன்னிடம் பேசவில்லையோ?  ஒரே இடத்தில் வேலை செய்தும் அவனைக் காண்பது கூட அரிதாக இருந்ததே.

இவளே போய் பேசலாம் என சில முறை முயற்சித்த போதும் பார்க்காதது போல சென்றுவிடுவான்.  இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து மனம் அல்லல்பட்டது.

கல்யாணத்துக்கு பிறகும் இதுவே நீடித்தால் என்்ற பயம் அவளை பிடித்துக்கொண்டு ஆட்டியது.  இதை வெளிப்படையாக யாரிடம் பேசுவது என அவளுக்கு தெரியவில்லை.  இல்லை தான்தான் தேவையில்லாததை எல்லாம் நினைத்து டென்ஷனாகிறோமோ என்று குழம்பினாள்.

கல்யாணப் பெண்ணிற்கான கனவுகளோ, பூரிப்போ எதுவும் இல்லை அவளிடம்.  கண்டதையும் மனதில் போட்டு உழப்பிக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என அவளுக்கே தெரியாது.

காலையில் சாரதா வந்து எழுப்பும் போது தான் விழிப்பு வந்தது. அமுதினியையும், பூங்குழலியையும் எழுப்பிவிட்டவர், கனியையும் எழுப்பினார்.

அவள் “ம்மா… பைவ் மினட்ஸ்.  அவங்க முதல்ல குளிச்சு ரெடியாகட்டும்.  நான் அதுக்குள்ள எழுந்துடுவேன்” என்றாள் போர்வையை இழுத்து தலையை உள்ளே விட்டுக் கொண்டே.

“கும்பகர்ணி எழுந்திருடி.  இன்னைக்கும் என்னை டென்ஷன் பண்ணக் கூடாது”.

“ம்ம்…” என முனகிவிட்டு திரும்பவும் படுத்துவிட்டாள்.  அமுதினியும், குழலியும் கனியைப் பார்த்துச் சிரித்தனர்.

ஆம்.  கும்பகர்ணியே தான்.  கனிமொழியை தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்குள் அவருக்கு கண்ணைக் கட்டிவிடும்.  தினமும் சாரதா அவளை காலையில் எழும்ப வைப்பதற்குள் பாடாய் படுத்தி விடுவாள்.  பைவ் மினட்ஸ்,  பைவ் மினட்ஸ் என்று சொல்லி சொல்லியே அவரை டென்ஷனாக்கி விடுவாள்.

இன்றும் அதுபோல செய்யக் கூடாது என நேற்று நைட் வந்து எச்சரித்து விட்டுதான் சென்றிருந்தார்.  இருந்தும் அவள் எப்பவும் போல் பைவ் மினட்ஸ் என்றதும் அவருக்கு கோவம் வந்தது.

அதனைப் பார்த்து தான் குழலியும் அமுதினியும் சிரித்தனர்.  எதை வேண்டும் என்றாலும் மாற்றி விடலாம் இவளோட இந்த பைவ் மினட்ஸை மாற்ற முடியாது என்று சிரித்துக் கொண்டனர்.  அவர்களது சிரிப்பைக் கண்டு சாரதாவுக்கும் சிரிப்பு வந்தது.

குழலிதான் “ம்மா… நீங்க போங்க.  நான் குளிச்சிட்டு வந்து அவளை எழுப்பி விடுறேன்” என்றாள்.  சாரதாவம் சரி என்று தலையசைத்து, “லேட் பண்ணாதீங்கடா.  சீக்கிரம் ரெடியாயிடனும்.  பார்த்துக்கோடா அவளை” என்று சென்றுவிட்டார்.

பெண்கள் எல்லாம் ரெடியாகி வந்ததும், அங்கிருந்த உறவினரில் மூத்தப் பெண்மனி ஒருவர், “சாரதா விளக்கேத்தி சாமி கும்பிட வை பிள்ளையை” என்றார் அமுதினியைப் பார்த்து.

சாரதா பூஜை அறையில் விளக்கேற்றி தீபாராதனைக் காட்டினார்.  அமுதினி சாமி கும்பிட்டு ஆரத்தியைத் தொட்டு வணங்கியவள், அம்மா அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

சாரதாவும் பூபதியும் உள்ளம் நெகிழ மகளை ஆசிர்வதித்து, விபூதி, குங்குமம் பூசி விட்டனர்.  அங்கிருந்த பெரியோர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கியவள் எல்லோருடனும் சேர்ந்து கோவிலுக்கு புறப்பட்டாள்.

அங்கு இவர்களுக்கு முன்பே கௌதம் வீட்டினர் வந்து கல்யாணத்திற்கான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  கோவிலின் உள்ளே நுழையும் போதே அமுதினியின் கண்கள் கௌதமைத் தேடியது.

அவன் இவர்களுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு அரவிந்துடன் பேசிக் கொண்டிருந்தான்.  அண்ணன் தம்பி இருவருமே பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தனர்.

அமுதினி சாரதா, பூங்குழலியுடன் முன்னே சென்றாள்.  பின்னாடியே கனிமொழி உறவுக்கார பாட்டியை கைப்பிடித்து அழைத்து வந்தாள் மெதுவாக.

பூபதி வேனில் உறவுக்காரர்களோடு வந்திருந்தார்.  எனவே அவர்களை வேனில் இருந்து இறக்கி அழைத்து வருவதற்காக அவர் அங்கே தேங்கியிருந்தார்.

அரவிந்தன் கோவிலின் வாசலைப் பார்த்தபடி நின்று கொண்டு கௌதமுடன் பேசிக் கொண்டிருந்தான்.  கனியின் உடன் வந்த பாட்டி கௌதம் அரவிந்தன் அருகே வந்தவுடன், “சின்னக்குட்டி இதுல மாப்பிள்ளை யாரு?” என்றார் சத்தமாக.  அவருக்கு காது சரியாக கேட்காது என்பதால் கொஞ்சம் கத்திதான் பேசுவார்.

அய்யோ இந்த பாட்டி கரெக்டா இங்க வந்து மானத்த வாங்குதே என நினைத்தவள், “வாங்கப் பாட்டி சொல்றேன்” என கையைப் பிடித்து இழுத்தாள்.  எங்கே கௌதம் அரவிந்தன் காதில் விழப் போகிறதோ என்ற சங்கோஜம் வந்திருந்தது.

அவரோ இவளை நகரவிடாமல் கௌதம் அரவிந்தன் பக்கத்திலேயே நின்று, அவர்கள் இருவரையும் பார்த்தபடி, “இரண்டு பேருமே பார்க்க மாப்பிள்ளையாட்டம் தான் இருக்காங்க.  இதுல யார் சின்னக்குட்டி மாப்பிள்ளை” என்றார் இன்னும் சத்தமாக.

அவர் கேட்டது தூரத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த உறவினர்களுக்கே கேட்டது.  பக்கத்தில் இருப்பவர்களுக்கா கேட்காது.  கௌதம் அரவிந்தன் இருவருக்கும் சிரிப்புதான்.

அச்சோ இந்த பாட்டி இங்க வந்தா இப்படி பேசனும் என வறுத்துக் கொண்டிருந்தாள் மனதில்.  அரவிந்தனே முன் வந்து “இவர்தான் மாப்பிள்ளை பாட்டி.  மாப்பிள்ளை நல்லாயிருக்காரா…?” என்றான் அவரைப் பார்த்து.   பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் பார்வை கனியிடம் இருந்தது.

“ஓஹ் இந்த தம்பிதான் மாப்பிள்ளையா…?மாப்பிள்ளைகென்ன ராஜாவாட்டம் இருக்கார்” என திருஷ்டி எடுத்தார் அவரது கைகளாலேயே.  அவரது செய்கையில் கௌதமிற்கே வெட்கம் வந்தது.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் “பாட்டி வாங்க போலாம்” என்று அவர் கையைப் பிடித்து நடத்தி கூட்டிச் சென்றாள்.  “இரு.  ஏன்? இழுத்துட்டு போற.  பொறுமையா போ” என புலம்பிக் கொண்டே அவள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்றார்.

அரவிந்தன் சிரித்து கொண்டு கனியைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.  அன்று அவன் தேர்வு செய்து கொடுத்த மாம்பழ கலர் புடவையில்தான் வந்திருந்தாள்.  தலைக்கு குளித்து, தளர பின்னிய கூந்தலில் குண்டுமல்லி சரத்தை நீளமாக தொங்க விட்டிருந்தாள்.

கண்கள் அவள் மேலேயே அலைபாய்ந்தது.  யாரின் கவனத்திலும் வராதவாறு அவளின் பார்வை வட்டத்திற்குள் வந்து நின்று கொண்டான்.  அவள் இவனைக் கண்டு கொண்டாலும் பார்ப்பேனா என அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தாள்.

ஷ்யாமளா, அமுதினியிடம் வந்து “அழகாயிருக்கடா” என அவள் கைகளைப் புன்னகையுடன் பிடித்துக்கொண்டார்.  பார்க்க வேண்டியவன் பார்க்கவில்லையே என அவளுக்கு மனம் ஆர்ப்பரித்து அலைபாய்ந்தது.

வந்ததிலிந்து அமுதினியின் பார்வை கௌதமைதான் சுற்றிக் கொண்டிருந்தது.  வெங்காய நிறப் பட்டு புடவையில், உடல் முழுதும் தங்க நிறத்தில் ஜரிகையிட்டு, அதற்கேற்றவாறு டிசைன் செய்த ப்ளவுஸ், காதில், கழுத்தில், கையில் என்று தங்க நகைகள் அணிந்து, பார்லர் பெண்களின் கைவண்ணத்தில் மணப்பெண்ணுக்கான அழகுடன் இருந்தவளை திரும்பிக் கூட பார்க்காமல் கையிலிருந்த போனில் தலையை புதைத்துக் கொண்டிருந்தவனை, அவளது கண்கள் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்துதான் ஷ்யாமளா அவளின் அருகே வந்திருந்தார்.

அவரும் என்ன செய்வார்?  அமுதினியின் ஏக்கங்கள் அவருக்கும் புரிந்தது.  இவனை… என்ன செய்ய என அவரால் பல்லை மட்டும்தான் கடிக்க முடிந்தது.

அமுதினியின் வாட்டத்தை பார்த்தவர், அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளது மனநிலையை மாற்ற முயன்று கொண்டிருந்தார்.  அதற்குள் புரோகிதர் மணமக்களை அழைக்கவும் இருவரும் அங்கே சென்றனர்.

கோவிலில் கல்யாண விசேஷங்களுக்கு என இருந்த மண்டபத்திலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.   மணமக்களை உட்கார வைத்து புரோகிதர் திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்.   அவர் வந்ததே லேட் என்பதால், “முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள தாலி கட்டிடனும் சாமி” என அங்கிருந்த பெரியவர்கள் அவரைத் துரிதபடுத்தினர்.

“ஆச்சு ஆச்சு.  நல்ல நேரத்துல ஜம்முன்னு பேஷா பண்ணிடறேன், கவலைப் படாதேள்” என பேசிக் கொண்டே மந்திரங்களை ஓத ஆரம்பித்தார்.

அமுதினிக்கு முதல் முறையாக கௌதமுடன் நெருக்கமாக பக்கத்தில் உட்கார்ந்திருந்தது மனதுக்குள் இதமாக இருந்தது.  அவனது முகத்தை பார்க்க ஆசையிருந்தாலும், எல்லோர் முன்னும் நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு புரோகிதர் சொல்லும் சாங்கியத்தை செய்துகொண்டு  தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.

பக்கத்தில் ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாள் என்ற உணர்வேயில்லாதவனாக இயந்திரம் போல புரோகிதர் சொல்வதை கர்ம சிரத்தையாக செய்து கொண்டிருந்தான்.  ஷ்யாமளாவும், அரவிந்தும் இவனையேதான் பார்த்திருந்தனர்.

போட்டோ எடுப்பவர் “பாஸ் கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க.  இங்கப்…, இப்படிப் பார்த்து…” என சொல்லியும் கௌதம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தான்.

அரவிந்தன், “அவன் கல்யாண டென்ஷன்ல இருக்கான்.  அவனை டிஸ்டர்ப் பண்ணாம எடுங்க பாஸ்” என்றான் போட்டோ எடுப்பவரிடம்.

அவருக்கோ பொண்ணே நல்லா தைரியமா உட்கார்ந்திருக்கு.  இவருக்கு என்ன டென்ஷன்?  அப்புறம் இது நல்லாயில்ல.  அது நல்லா வரலன்னு நம்ம உயிர எடுப்பாங்க என நொந்துக் கொண்டார்.

புரோகிதர் தாலியை எடுத்து நீட்டியதும் கௌதம் கையில் வாங்காமல் தயக்கமாக அதையே சில நொடி பார்த்திருந்தான்.  ‘‘கையில் வாங்கி கட்டுங்கோ.  நாழியாறது…” என்ற புரோகிதரின் குரலைக் கேட்டு, குனிந்திருந்த அமுதினி நிமிர்ந்து அவனைத்தான் பார்த்தாள்.

மஞ்சள் கயிறை கையில் வாங்கியவன் திரும்பி அமுதினியின் கண்களைப் நேருக்கு நேர் பார்த்துகொண்டே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தனது மனைவியாக்கினான்.

திருமணம் பேசிய நாளாக இன்றுதான் முதன் முதலாக அவனை நேர் கொண்டு பார்க்கிறாள்.  இருவரது பார்வையும் ஒன்றுடன் ஒன்று மோதிய போதும் அங்கே எந்த மின்சாரமும் பாயவில்லை.

ஷ்யாமளாவுக்கும், அரவிந்துக்கும் கௌதம் அமுதினியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு முடித்ததும்தான் மூச்சே வந்தது.  எங்கே அவன் பாதியில் ஏதாவது கலாட்டா செய்துவிடுவானோ என பயந்திருந்தவர்களுக்கு இப்போது தான் நிம்மதி.

திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து பெண் பார்க்க சொல்லியிருந்தாலும் அவன் இதுவரை எந்த சுப காரியத்திலும் கலந்துகொள்ளாமலும், எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருந்ததை பார்த்து இருவருக்கும் உள்ளுக்குள் உதைப்பு இருந்தது.  இப்பொழுதுதான் ஆசுவாசமானது.

தாலி கட்டி முடித்ததும் கையில் இருந்த அட்சதையை தூவி எல்லோரும் ஆசிர்வதித்தார்கள்.  கனிமொழியும் தாலிகட்டின அந்த நிமிடம் அமுதினியை மனம் நெகிழ பார்த்திருந்தாள்.

அவளுக்குப் பக்கத்தில் நின்றிருந்த அரவிந்தனும் கை நிறைய அள்ளி வைத்திருந்த பூக்கள் கலந்த அட்சதையை அண்ணன் அண்ணியின் மேல் போட்டான் சந்தோஷமாக.

அமுதினிக்கு திருமணம் இத்தனை நாள் தள்ளிப் போனதில் வீட்டில் இருந்த எல்லோருமே மன வருத்தத்தில் இருந்தனர்.  குழலிக்கு கல்யாணம் நடந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியும் இவளுக்கு ஏதும் கூடாமல் இருந்ததால் வீட்டில் எல்லோருக்கும் வருத்தம் இருந்தது.

அவளுக்கு திருமணம் நடந்திராதா என ஏங்கியிருந்த குடும்பத்தினர் எல்லோரின் கண்களும் ஆனந்தத்தில் கசிந்திருந்தது.  கனிக்குப் பக்கத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

கூட்டத்தின் நெரிசலில், இவன் வந்து நின்றதை அவள் உணரக்கூட இல்லை.  அவளது சிந்தனை முழுக்க அமுதினியிடம் இருந்தது.  தாலி கட்டும் சில நொடிகளில் யாரின் கவனத்தையும் கவராது இவள் பக்கம் வந்து நின்றவன், இவளுடன் சேர்ந்து மணமக்களின் மேல் அட்சதைப் பூக்கள் தூவியிருந்தான்.

இவள் முகம் கவங்கி நிற்பதைப் பார்த்தவன்,  நெருங்கி நின்று இடிப்பதுபோல் அவளது கையைப் பற்றி அழுத்தினான்.  யார் இடிப்பது என திரும்பியவளுக்கு இவனைப் பார்த்ததும் எந்த விகல்பமும் தோன்றவில்லை.

அந்த நேரம் அவள் இருந்த மனநிலையில் தனது சந்தோஷத்தை பகிர்வதுபோல் தெரிந்தவன் என்ற உணர்வில் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.  அவள் பார்வை மட்டும் அரவிந்தனிடம் இருந்தது.  கவனம் எல்லாம் அக்கா அமுதினியிடமே இருந்தது.

இவனை அவள் கருத்தில் கொள்ளவேயில்லை.  அவனுக்கும் ஆச்சர்யமே, என்னடா…?  கையைப் பிடிச்சதுக்கு முறைப்பானு பார்த்தா, சிரிக்கிறா என பார்த்து நின்றான்.

இவனைப் பார்த்து புன்னகைத்து திரும்பவும் மணமக்களைப் பார்த்தவள் கருத்தில் மின்சாரம் பாய்ந்தது போல் அப்போதுதான் கையைப் பிடித்து நிற்பது அரவிந்தன் என பதிந்தான்போல.

டக்கென்று கைகயை அவனிடம் இருந்து உருவியவள், சுற்றும்முற்றும் திரும்பி பார்த்துவிட்டு அவனை கண்களால் எரித்தாள்.

அதானே நம்ம ஆளாவது நம்மள பார்த்து சிரிக்கறதாவது.  ஏதோ ஞாபக மறதில இருந்திருப்பா.  அதான் சிரிச்சிட்டா என நினைத்துக் கொண்டவனுக்கு முகத்தில் புன்னகை வந்தது.

யாராவது பார்த்து விடப் போகிறார்கள் என பயந்து அங்கிருந்து நகர்ந்து சென்று குழலி சாரதாவுக்கு பக்கத்தில் நின்றவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை அவன் செய்த வேலையில்.  திரும்பவும் அவனைப் பார்த்து முறைத்து நின்றாள்.

ப்பா.. கண்ணாலயே எரிக்கிறாடா.  போடி என நினைத்தவன் அவனும் நகர்ந்து கௌதமின் அருகில் சென்று நின்று கொண்டான்.

மணமக்களை மாலை மாற்றி கொள்ளச் சொன்ன புரோகிதர், அவர்கள் மாலையை மாற்றிக் கொண்டதும், ‘’கௌதமிடம் குங்குமத்தை எடுத்து மாங்கல்யத்தில வைச்சு விடுங்கோ’’ என்றார்.

அப்படியே அவங்க ‘’நெத்திலயும் குங்குமம் வைச்சு விடுங்கோ’’ என்றார். அவளது முதுகுப் பக்கமாக கையை எடுத்துச் சென்று, அவளது தோள்களை தொடாமல் வைக்க முயன்றும், அவனது கைகள் அவளது தோள்பட்டையை தீண்டியிருந்தது.

கணவனின் முதல் ஸ்பரிசம் அவளுள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.   நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் வெட்கமாக இருந்தது.  “அப்படியே எழுந்து நின்னு ஆத்துக்காரிக்கு கால்ல மெட்டி போட்டு விடுங்கோ” என்றார் புரோகிதர் கௌதமைப் பார்த்து.  அவர் சொன்னது போலவே எழுந்து நின்றவன், அவளுடைய கால் விரல்களைப் பற்றி மெட்டியை அணிவித்தான்.

புது மணமகனுக்கான பொலிவுடன் பட்டு வேஷ்டி சட்டையில் பாந்தமாக இருந்தவனைக் கண்களால் ரசித்துக் கொண்டிருந்தாள்.  கணவன் என்ற உரிமையோ அல்லது இத்தனை நாள் அவனது பார்வை கூட தன் மேல் படாமல் இருந்த ஏக்கமோ, அவன் மேலிருந்த கண்களை அவளால் அகற்ற முடியவில்லை.

“மாப்பிள்ளையையும் பொண்ணையும் சாமி தரிசனம் பண்ண அழைச்சிட்டு போங்கோ” என்ற புரோகிதர், மணமக்களைப் பார்த்து, “ஐயனையும், அம்பாளையும் தரிசிட்டு, கோவிலை சுத்தி வந்து கொடிமரத்துக்கிட்ட விழுந்து சேவிச்சுக்கோங்க” என்றார்.

சாரதா அமுதினியுடன் குழலியையும், தீபக்கையும் அனுப்பிவைத்தார் சாமி தரிசனத்திற்காக.   பூபதி வந்திருந்தவர்களை கவனிப்பதில் பிஸியாக இருந்தார்.

ஷ்யாமளாவுக்கு  நிறைவாக இருந்தது.  மகன் எங்கே ஏதாவது ஏடாகூடம் செய்துவிடுவானோ என பயந்து இருந்தார்.  திருமணத்திற்கான எந்த உற்சாகமும், ஆர்வமும் அவனிடத்தில் அவர் பார்க்கவில்லை.

பத்திரிக்கை செலக்ட் செய்யவோ, துணிமணி எடுக்கவோ என திருமணத்திற்கான எந்த நிகழ்வுகளுக்கும் அவனிடமிருந்து ஆர்ப்பாட்டமோ ஆர்ப்பரிப்போ எதுவுமே இல்லை.

அமுதினி தான் அவனுக்காகப் பார்த்திருக்கும் பெண் என்று நன்றாகத் தெரிந்தும், அவளைப் பார்க்கவோ பேசவோ என எதுவும் செய்யவில்லை.  சில சமயம் இவன் என்ன சாமியாரா என எரிச்சலாககூட இருந்தது அவருக்கு.

எதையும் வெளிக்காட்டாமல் கல்யாணம் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதில் அமைதியாக இருந்தார்.  ஏதாவது அவனிடம் பேசப்போய் அதுதான் சாக்கு என்று கல்யாணம் வேண்டாம் என சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும் என பயந்து பொறுமையாக இருந்தார்.

இவனது ஒதுக்கத்தை கண்டு அமுதினியின் வீட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் எழும் கேள்விகளுக்கு எல்லாம், பதில் சொல்லி சமாளித்த கஷ்டம் எல்லாம் அவருக்குத்தானே தெரியும்.

அமுதினியும் இவனும் ஒரே இடத்தில் வேலையில் இருப்பதால், அவர்களுக்கு சந்தேகம் வராத வண்ணம் சொல்லி சமாளித்திருந்தார்.  திருமணத்தின் போதான சாஸ்திர சம்பிரதாயங்களை எந்த முகச் சுளிப்பும் இல்லாமல், புன்னகை முகமாக அவன் செய்திருந்ததை பார்த்தவருக்கு நிம்மதியானது.

மகனைப் பற்றிய சுயசிந்தனையில் இருந்தவரது கைகளை சாரதா வந்து பற்றி கொண்டார் சிரித்துக் கொண்டே.

சாரதா, “இனி அனிய நீங்கதான் பார்த்துக்கனும்” என்றார் கலங்கிய கண்களுடன்.   இவ்வளவு நாள் மகளுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலை இருந்தது.  இப்போது அவளது பிரிவை நினைத்து அவரது மனது கலங்கியது.

ஷ்யாமளா, சாரதாவின் கைகளை ஆதுரமாக தனது இன்னொரு கையால் பற்றி கொண்டவர், “இத நீங்க சொல்லனுமா?  இனி அவள் எங்க வீட்டு பொண்ணு.  அவள் எனக்கு மருமகள் மட்டும் இல்லை.  கௌதம், அரவிந்த் போல அவளும் எனக்கு பொண்ணு.  இதை நினைச்சு நீங்க வருத்தப்படாதீங்க.  அவள் சந்தோஷமா இருக்கறத நீங்க பார்க்கதான போறீங்க” என ஆறுதல் படுத்தினார்.

அக்கா இருக்க தங்கைக்கு திருமணம் நடத்திவிட்டோமே.  அதனால்தான் இவளுக்கு வரன் ஏதும் அமையவில்லையோ என குற்றவுணர்ச்சியில் தவித்திருந்தார்.  பூங்குழலி கல்யாணத்துக்கு முன்னும் பின்னும் என அத்தனை வரன்கள் பார்த்தும் அவளுக்கு எதுவும் தகையாமல் இழுத்தடித்தில் மனதில் வேதனையுடன் இருந்தார்.

குலதெய்வ கோவில் போய் வந்த சில நாட்களிலேயே தெய்வ சங்கல்பமாக தேடி வந்து தகைந்திருந்த வரனை நினைத்து மனதில் செல்லொணா உவகை.

அக்கா இருக்க தங்கைக்கு முதலில் செய்ததால், அது அமுதினியின் மனதில் எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என உணர்ந்தவர், குழலியைவிட அமுதினிக்கு சிறப்பாக திருமணம் அமைய வேண்டும் என நினைத்திருந்தார்.

அமுதினிக்கு அமைந்த சம்மந்தம் படிப்பு, வேலை, குணம், அழகு, வசதி என எல்லாம் அவர் எண்ணியது, எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே அமைந்திருந்தது.   கல்யாணத்திற்கு வந்திருந்த உறவினர்கள்கூட  “உனக்கென்னடிம்மா இரண்டு பொண்ணுக்கும் பெரிய இடமா பிடிச்சிட்ட” என்றிருந்தனர்.  இதையெல்லாம் நினைத்திருந்தவருக்கு அவள் கஷ்டப்பட்டதெல்லாம் போதும்.  போற இடத்திலாவது சந்தோஷமா இருக்கனும் என வேண்டுதல்தான் மனதில்.

இப்படி இருவரும் அவரவர் எண்ணங்களின் பிடியில், உணர்வுகளின் தாக்கத்தில் சிக்குண்டு நின்றிருந்தார்கள்.  இவர்களின் அருகே வந்த கனிமொழி அவர்களின் வாயில் லட்டைத் திணித்து “ஹேப்பி மொமண்ட்ஸ்” என்றாள் கண்களைச் சிமிட்டி சிரித்துக் கொண்டே.

இவளது செய்கையில் சிரித்துவிட்டனர் இருவரும்.  :”ஹேய்.. வாலு” என அவள் தலையில் வலிக்காமல் கொட்டினார் சாரதா சிரித்துக்கொண்டே.

ஆனால் “அழகான வாலு…” என அவளது தோளைச் சுற்றி அணைவாக கையைப் போட்டு இறுக்கிக் கொண்ட ஷ்யாமளா “கண்டிப்பா இது ஹேப்பி மொமண்ட்ஸ் தான்டா” என்றார் அவளைப் பார்த்து முறுவலுடன்.

தூரத்தில் நின்று இவர்களைப் பார்த்திருந்த பூபதிக்கும் மனதெல்லாம் நிறைவாக உணர்ந்தார்.  பெண்ணின் தகப்பன் இல்லையா?  சாரதா போல் அவரால் எதையும் வெளிப்படையாக காட்டமுடியவில்லை என்றாலும் உள்ளுக்கள் வலியும் வேதனையும் நிறையவே இருந்தது.

மகளுக்கு நல்ல வரனாக அமைந்ததில் மகிழ்ச்சி இருந்தாலும்  ஆரம்பத்தில் இருந்து மாப்பிள்ளையின் ஒதுக்கத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்.  அது அவரது மனதில் நெருடலை ஏற்படுத்தியிருந்தது.  அவசரப்பட்டுட்டோமோ, தீர விசாரிச்சு இருக்கனுமோ என்று கலங்கியிருந்தார்.

இந்த திருமணத்தில் அமுதினியின் பிடித்தத்தை கண்ணால் பார்த்திருந்தவருக்கு அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை தகப்பனால்.  மகளின் விருப்பம் முதன்மையாக போனதால் மாப்பிள்ளையை பற்றிய சிந்தனையை ஒத்திவைத்திருந்தார்.

அப்படி மாப்பிள்ளைக்கு பிடித்தம் இல்லையென்றாலோ, வேறு எதுவும் இருந்தாலோ அவளுக்கு தெரிந்திருக்காதா?  இத்தனை வருடமாக அங்கேதானே வேலை செய்கிறாள்.  அவளுக்கு தெரியாமல் இருக்காது என நம்பினார்.

பெண்ணும் மாப்பிள்ளையுடன் தானே வேலை செய்கிறாள்.  அங்கே பார்த்து பேசிக் கொள்வார்கள்போல என நினைத்திருந்தார்.   இன்னும் அவரிடம் ஏன் வீட்டினர் யாரிடமும் அவன் சரியாக முகம் கொடுத்து பேசாததை நினைத்து வருத்தத்தில் இருந்தவருக்கு, பெண்ணின் மணவாழ்க்கை சரியாக அமைய வேண்டும் என்ற நினைப்பு மேலோங்கியிருந்தது.

இதில் இன்று முதல் அவள் புகுந்த வீட்டிற்கு சென்று விடுவாள் என்னும் பிரிவுத்துயர் வேறு அவரை கலக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.

அங்கிருந்து அப்பாவைப் பார்த்த கனிமொழி அவரிடம் வந்து “என்னப்பா?” என்றாள், அவர் முக வாட்டத்தை பொறுக்காமல், “ஒன்னும் இல்லடா.  நீ அக்காவோட சாமி கும்பிட போகலையா?” என்றார்.

“இல்லப்பா.  குழலி க்காவும் தீபக் மாமாவும் போயிருக்காங்க.  நான் இங்க அம்மாவுக்கு துணையா இருந்துட்டேன்”. குழலி கூப்பிட்டும், அரவிந்தன் அவர்களோடு செல்வதைப் பார்த்தவள், அங்கே அவன் ஏதாவது சேட்டை செய்வான் என பயந்து கொண்டு நின்றுவிட்டாள்.

“சரிடா எனக்கு தெரிஞ்சு எல்லாரையும் சாப்பிட அழைச்சிட்டு போய் விட்டுட்டு வந்திருக்கேன்.  இன்னும் யாராவது இருக்காங்களான்னு பார்த்துட்டு போகத்தான் வந்தேன்.  நான் அங்க போறேன்.  நீ இங்க யாராவது சாப்படாம இருக்காங்களான்னு பார்த்து அனுப்பிவிடு”.

“யாரையும் விட்டுடாம எல்லாரையும் சாப்பிட வைச்சுதான் அனுப்பனும்.  இல்ல கோச்சுப்பாங்க கவனிக்கலன்னு.  நீயும் இங்க சாமி கும்பிட போனவங்க வந்ததும் அழைச்சிட்டு வாம்மா.  மறக்காம அம்மாகிட்ட சொல்லி தாம்பூலப் பை மிஸ் பண்ணாம குடுக்க சொல்லு.  யாருக்கும் குடுக்காம மிஸ்ஸாகிடப் போகுது” என்று சென்றுவிட்டார்.

சாமி தரிசனத்திற்கு உள்ளே சென்ற அமுதினியும் கௌதமும் அம்பாளின் முன்பு நின்றிருந்தனர்.  புதுமணத் தம்பதிகள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இறைவியின் முன்பு கைகூப்பி நின்றிருந்தனர்.

அமுதினிக்கு மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து வழிந்தது.  அகத்தின் நிறைவு முகத்திலும் பூரித்திருந்தது.  அவளது ஆசை கொண்ட நெஞ்சத்தின் விருப்பத்தை நிறைவேத்தி தந்திருந்த அம்பாளுக்கு கண்கள் கசிய நன்றி சொல்லிக் கொண்டிருந்தாள் மனதால்.

திருமணம் பெரியவர்களின் விருப்பத்தின்படி ஏற்பாடாகியிருந்தாலும் இந்த இடைப்பட்ட நாட்களில் கௌதமின் மீது பிடித்தம் உருவாகியிருந்தது.  கணவனாகப் போகிறான் என்ற உரிமையோ, இல்லை அவனை தினமும் நேரில் காண்பதால் வந்த ஈர்ப்போ ஏதோ ஒன்று அவளை அவன்பால் இழுக்கச் செய்தது.  அவனது பாராமுகம்தான் அவளை இத்தனை நாள் வாட்டிக் கொண்டிருந்தது.

இப்போது சற்றுமுன் திருமணத்தில் அவன் கையால் தனது கழுத்தில் மாங்கல்யம் ஏறியதும் இத்தனை நாட்கள் இருந்த சுணக்கம் எல்லாம் மாயமாகியிருந்தது.

கௌதமிற்கு பெரிதாக எந்த வேண்டுதலும் இல்லையென்பதால் கைகூப்பி நின்றிருந்தான்.

அர்ச்சகர் காட்டிய தீபாராதனையை தொட்டு வணங்கியவர்கள், அவர் கொடுத்த குங்குமப் பிரசாதத்தை, பூவையும் பெற்றுக் கொண்டு, மூலவர் தரிசனத்தையும் முடித்து. கோவிலைச் சுற்றி வந்து விழுந்து நமஸ்கரித்து வீட்டிற்கு புறப்பட்டார்கள்.

திருமணம் முடிந்து நேராக மாப்பிள்ளையின் இல்லத்திற்கு செல்வதே அவர்களது முறை என்று புதுமண தம்பதியர்களை கௌதம் வீட்டிற்கு அனுப்பியிருந்தனர்.

அவர்களுடன் பூங்குழலி, தீபக், அரவிந்தன் எல்லோரும் உடன் சென்றனர்.  வந்திருந்தவர்களை எல்லாம் சாப்பிட வைத்து வேனில் ஏற்றி வீட்டுக்கு அழைத்துகொண்டு புறப்பட்டார் பூபதி.

சாரதாவும், கனியும் திருமணத்திற்காக கொண்டு வந்த சாமான்களை எல்லாம் உறவு பெண்களின் உதவியோடு பேக் செய்து எடுத்துக் கொண்டு அவர்கள் வந்திருந்த வாகனத்தில் வீட்டுக்குப் கிளம்பினார்கள்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!