Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 13

அமுதினிக்கும் கௌதமுக்கும் திருமணம் முடிந்து ஒரு வாரம் சென்றிருந்தது.  மறுவிருந்து, கோயில் வழிபாடு என எல்லா களேபரங்களும் முடிந்து நார்மல் வாழ்க்கை திரும்பியிருந்தது அவர்களிடையே.

காலையில் எழுந்து குளித்து, கீழே சென்றவள் டிபன், லன்ச் என சமையல் வேலையை முடித்து வந்து அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.  காலை எட்டு மணிக்கு அவள் ஹாஸ்பிட்டலில் இருக்க வேண்டும்.  அதனால்தான் இந்த அவசரம்.

“சமையலுக்கு ஆள் இருக்கும் போது நீ ஏன் இதையெல்லாம் செய்யறே?” என ஷ்யாமளா கேட்டும்  “இருக்கட்டும் அத்தை.  டைம் இருக்கும் போது நான் பண்றேன்” என சொல்லி செய்திருந்தாள்.

சாரதா மகள்களுக்கு எல்லா வேலைகளையும் பழக்கியிருந்தார்.  மூன்று பேருமே வீட்டில் இருக்கும் ஓய்வு நேரங்களில் அன்னைக்கு உதவியாக இருப்பர். இதில் அமுதினியின் சமையல் அப்படியே சாரதாவைப் போல் கைப்பக்குவத்துடன் நன்றாக இருக்கும்.



Advertisement

கௌதம் அவனது அறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவனுக்கு, மனைவியின் மீதும் கண் பதிந்திருந்தது.  அவளையும் ஓரக் கண்ணால் அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

காலையில் கீழே போய் அவள் கிட்சனுக்குள் சமைத்து கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு இவள் ஏன் சமைக்கிறாள்?  அதான் குக் இருக்காங்கல்ல என்ற எண்ணம் எழுந்தாலும் வாயைத் திறந்து அவளிடம் எதுவும் பேசவில்லை.

அவனும் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஹாஸ்பிட்டலுக்கு செல்ல ஆரம்பித்திருந்தான்.

Advertisement

திருமணத்திற்காக எடுத்திருந்த விடுமுறை முடிந்து அமுதினி இன்றுதான் வேலைக்கு கிளம்புகிறாள்.  கிளம்பி முடித்தவள் அவனிடம் சொல்லிக் கொண்டு செல்ல அவனை திரும்பி பார்த்தாள்.

Advertisement

இவள் பார்வையை உணர்ந்தாலும் திரும்பாமல் அமர்ந்திருந்தான்.  சற்று நேரம் நின்று பார்த்தவள், அவன் அருகில் வந்து “ம்க்கும்” என தொண்டையைக் கனைத்து நின்றாள்.

இவளது சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவனிடம் வரேன் என தலையசைத்தவள் இவன் பதிலுக்குகூட நிற்காமல் சென்றுவிட்டாள்.

வாயைத் திறந்து சொல்லமாட்டாளாமா என சுணங்கியது அவன் மனம்.  இருந்தும் அவள் மதித்து வந்து தன்னிடம் சொல்லிவிட்டு சென்றது மனதிற்கு இதமாக இருந்தது.

Advertisement

எப்படி போகப் போறா…?  அம்மா கிளம்பறதுக்கு இன்னும் டைம் இருக்கே என நினைத்தவன் எழுந்து சென்று பால்கனியில் நின்று பார்த்தான்.

வேலைக்கு செல்ல தயாராக மாடியிலிருந்து கீழே இறங்கிய மருமகளைப் பார்த்த ஷ்யாமளா, “சாப்பிட்டு போ அனி.  டைம் ஆனா பரவாயில்லை” என சொல்லிக் கொண்டிருந்தார்.

“இல்ல த்தை.  லேட்டாயிடும்.  டிபனும், லன்ச்சும் பேக் பண்ணி எடுத்துகிட்டேன்.  அங்க போய் சாப்டுக்கறேன்”.

“எப்படி போவ?  இரு.  அவனை ட்ராப் பண்ண சொல்லவா?”

“ம்கூம் வேணாம் த்தை.  நான் ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்” என சென்றுவிட்டாள்.

ஷ்யாமளாவும் முதல்ல இவளுக்கு ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு வரதுக்கு ஏதாவது வண்டி ஏற்பாடு பண்ணனும் என நினைத்துக் கொண்டார் மனதில்.

வீட்டிலிருந்து வேகமாக வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவளை நெற்றி சுருக்கி பார்த்திருந்தான்.  ஏன் நடந்து போறா…?  கார் எடுத்துட்டு போய் இருக்கலாமே என நினைத்துகொண்டு போகும் அவளையே யோசனையோடு பார்த்து நின்றான்.

அம்மாகிட்ட பேசனும் என நினைத்துக் கொண்டே அவனும் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்ப ஆயத்தமானான்.

திருமணத்திற்கு முன்பு தாம்பரத்திற்கு வேலைக்கு வரும்போது பம்மலில் இருந்து பஸ்ஸிலோ, ஸ்கூட்டியிலோ தான் வருவாள்.  இப்போது அவள் புகுந்த வீடும் தாம்பரத்திலேயே இருந்ததால் வீட்டிற்கும் ஹாஸ்பிட்டலுக்குமான தூரம் குறைவாகவே இருந்தது.

ஆதலால் தினமும் ஆட்டோவிலேயே சென்று வரலாம் என முடிவு செய்திருந்தாள்.

சாரதா அவர்கள் வீட்டிலிருந்த ஸ்கூட்டியை எடுத்துச் போக சொல்லியிருந்தும் “கனிக்கு தேவைப்படும் மா” என மறுத்திருந்தாள்.

ஹாஸ்பிட்டலுக்குள் அமுதினி நுழைந்ததும், இவளை பார்த்த சரளா.  “ஹேய் புதுப் பொண்ணு எப்படியிருக்க?  இனிமே வேலைக்கு வரமாட்டேனு நினைச்சேன்” என ஆச்சர்யமாக வந்து கட்டிக்கொண்டாள்..

அமுதினி சரளாவுக்கு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே  “நல்லாயிருக்கேன்.  டைமாயிடுச்சு.  அப்புறம் பேசலாம்” என தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

எதிரில் வந்த செவிலியர் பத்மாவும் “ஹே… வா..  வா,,,  என்ன அதுக்குள்ள வேலைக்கு வந்துட்ட?  முகமெல்லாம் ஜொலிக்குது. கல்யாணத்துக்கப்புறம் இன்னும் அழகாயிட்ட” என்றாள் அமுதினியைப் பார்த்து முறுவலுடன்.

அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் அப்புறம் பேசலாம் என சைகை செய்து புன்னகையுடன் வேகமாக நகர்ந்து விட்டாள்.

அமுதினி எப்போதுமே யாரும் குறை சொல்லாதவாறு வேலையில் கவனமாக இருப்பாள்.  உடன் வேலை செய்பவர்களாயிருந்தாலும் அதிகப்படியான பேச்சுவார்த்தை எல்லாம் இருக்காது.

இன்று திருமணமாகி முதல் நாள் வேலைக்கு வருவதால் மனதில் கொஞ்சம் பரபரப்பு இருந்தது.  எங்கே கௌதம் தான் இங்கு வேலை பார்ப்பதற்கு மறுத்து விடுவானோ என்ற அச்சமும் உள்ளுக்குள் இருந்தது.

திருமணத்திற்கு பின் அமுதினி இங்கு வேலைக்கு வருவதைப் பற்றி ஷ்யாமளாகூட  எதுவும் சொல்லவில்லை.  அதில் அமுதினிக்கு மிகுந்த சந்தோஷம்.

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து மனதின் ஓரத்தில் சின்ன உறுத்தல் இருக்கதான் செய்தது.  திருமணத்திற்கு பின்பு தன்னை இங்கு வேலை செய்ய அனுமதிப்பார்களோ என.  அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதால் அவளுக்குள் சின்ன உற்சாகம்.

ஏற்கனவே அவ்வளவு கவனமாக இருப்பவள், இப்பொழுது இந்த ஹாஸ்பிட்டலின் உரிமையாளர் ஷ்யாமளாவின் மருமகள்.  கௌதமின் மனைவி.  தன்னால் அவர்களுக்கு எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் இன்னும் கவனமானாள்.

பத்மா ரிசப்ஷனுக்கு வரவும் அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு பெண் பணியாளர் “ஹ்ம்ம்… ஏற்கனவே நான்தான் உலக மகா சின்சியர்னு சீன் போடுவாள்.  இப்ப இந்த ஹாஸ்பிட்டல் ஓனர வேற கல்யாணம் பண்ணியிருக்காள்.  இனிமே நாமல்லாம் அவளுக்கு கண்ணுக்கே தெரியமாட்டோம். நம்மள எல்லாம் மதிச்சு பேசனாளே… அதிசயந்தான்..?  நீ பேசுனதுக்குகூட பதில் சொல்லாம கையாட்டிட்டு சிரிச்சுட்டு போறா” என்றார்.

“சும்மா பேசனும்னு ஏதாவது பேசாதீங்க.  அனி எப்பவுமே வொர்க்ல சின்சியர்.  வேலை நேரத்துல யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டாள்.  ஏன் அது உங்களுக்கு தெரியாதா?”

“உன் பிரண்ட் ஆச்சே.  நீ விட்டுக்குடுப்பியா…?”

“நான் என் பிரண்டுன்றதுக்காக  சொல்லல.  அவள் எப்பவுமே அப்படிதான்.  இனிமே அவளைபத்தி குறை சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க.  ஷ்யாமளா மேடம்கு தெரி்ஞ்சதுனா என்ன ஆகும்னு தெரியும்ல.  அதுவும் கௌதம் சார் பத்தி கேட்கவே வேணாம்”.

அந்த பெண் பணியாளருக்கும் பத்மா கூறியது புரிந்தது.  தேவையில்லாதது எதுவும் பேச போய், நமக்கு எதுக்கு வீண் வம்பு என வாயை அடக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அமுதினிக்கும் கௌதமுக்கும் திருமணமாகி இரண்டு மாதம் முடிந்திருந்தது.

அமுதினிக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்காக இன்று அனைவரும் அமுதினியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.  சிம்பிளாக செய்யலாம் என முடிவு  செய்து யாரையும் அழைக்கவில்லை.  இரு வீட்டார் மட்டும் இருந்தனர்.  வந்தவர்களுக்கு காலை சிற்றுன்டி காபி எல்லாம் சாரதா தயார் செய்து கொண்டிருந்தார்.

முதலில் கௌதம் இது பெண்கள் விசேஷம் தானே நான் எதற்கு என மறுத்துவிட்டான்.  ஷ்யாமளா எவ்வளவு சொல்லியும் வர ஒத்துக் கொள்ளவில்லை.  வேறு வழியில்லாமல் அமுதினியே அவனை வாய் திறந்து அழைத்திருந்தாள்.

இன்னும் இருவரிடையே சரளமான பேச்சு வார்த்தைகள் இல்லை.  தாமரை இலை தண்ணீர் போலதான் அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

ஒரே அறையில் இருந்தாலும் ஒட்டாமல்தான் இருந்தனர்.  அவன் அவளிடம் பேச நெருங்க  தயக்கம் காட்டியதில் அவளும் அவனை புரிந்துகொண்டதுபோல  தள்ளியிருந்தாள்.  அமுதினிக்கு கணவனுடன் பேசி பழக ஆசை இருந்தாலும் கௌதமின் நடவடிக்கையிலே அவனது எண்ணம் புரிந்ததுபோல.  அதனால் தானாகவே அவனிடமிருந்து ஒதுங்கியிருந்தாள்.

ஒருவேளை லைப்பை ஸ்டார்ட் பண்ண டைம் வேணும்னு நினைக்கறாங்களோ?  இல்ல இரண்டு பேருக்குள்ள அன்டர்ஸ்டேன்டிங் வந்ததுக்கு அப்புறம் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்காங்களோ என அவளுக்குள்ளே காரணங்களை கற்பித்து பொறுமையாக இருந்தாள்.

அவளுக்கிருந்த ஒரே ஆசுவாசம் அவனுடன் ஒன்றாக ஒரே அறையில் இருக்கிறோம் என்பதே.  புதுமணத் தம்பதியர்களுக்கே உரிய பார்வை கொஞ்சல், கேலி, கிண்டல், நெருக்கம் தேடல் இப்படி எந்த இணக்கமும் இல்லையென்றாலும், அவனது வாசத்தை சுவாசித்து, அவன் முகத்தை பார்த்துகொண்டு அவன் பேசுவதை கேட்டுகொண்டு கணவனின் அருகாமையில் இருப்பதை நினைத்து திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாள்.

தாலி பிரித்துக் கோர்ப்பதை பற்றி சாரதா ஷ்யாமளாவிடம் போனில் பேசும் போது அமுதினியும் பக்கத்தில் இருந்தாள்.  “நேர்ல வந்துதான் பேசனும்னு நினைச்சேன் அண்ணி.  இவரும் லீவு எடுக்க முடியல.  நீங்களும் பிசியா இருக்கீங்கன்னு அனி சொன்னா.  அதான் போன்லயே பேசறேன்.  கோச்சுக்காதீங்க”.

“மாப்பிள்ளைகிட்டயும் பேசனும்னா சொல்லுங்க.  இவரைவிட்டு பேச சொல்றேன்”.

“அதெல்லாம் வேணாம் அண்ணி.  என்ன பண்ணனும்னு சொல்லுங்க.  நீங்க நாள் எதாவது குறிச்சிருக்கீங்களா…?”

“இரண்டு மூனு நாள் பார்த்து வச்சிருக்கேன்.  அதுல உங்களுக்கு எது தோதுப்படுதுன்னு சொல்லுங்க” என அவர் குறித்திருந்த தேதியை ஷ்யாமளாவிடம் கூறினார்.

“சரி நானும் இங்க பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்” என கூறியவர் அன்று இரவே கௌதமிடம் இதைப்பற்றி பேசினார்.

“ம்மா… நான் எதுக்கு ம்மா?  நான் அங்க வந்து என்ன பண்ண போறேன்? இது லேடீஸ் ஃபங்ஷன் தான.  நீங்க எல்லாம் போயிட்டு வாங்களேன்”.

“என்ன கௌதம் இப்படி சொல்ற.   யார் பங்ஷன் மாதிரியோ பேசற.  உன் பொண்டாட்டிக்கு தாலி பெருக்கி போடப் போறோம்.  கண்டிப்பா நீ இருக்கனும்.  நீங்க இரண்டு பேரும் ஒன்னா இருந்துதான் இதை பண்ணனும்.  முக்கியமான விசேஷம் இது, தடங்கல் பண்ணாம கிளம்பி வா”.

“ம்ப்ச் சொன்னா புரிஞ்சுக்கோங்க மா.  கம்பெல் பண்ணாதீங்க”.

“ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேன்ற? அங்க வரவங்க எல்லாம் பொண்ணோட புருஷன் எங்கன்னு கேட்க மாட்டாங்களா?  அதுக்கு என்ன சொல்றது?” என அவனை முறைத்தார்.

“உடனே முறைக்காதீங்க.  வர முடியுமான்னு பார்க்கறேன்” என எழுந்து சென்றுவிட்டான்.

என்ன இவன் பார்க்கறேன்னு சொல்லிட்டு போறான்.  சரியான அழுத்தக்காரனா இருக்கான்.  இவன் பொண்டாட்டி தாலி பிரிச்சு போடற பங்ஷனுக்கு கூட வரமாட்டானா என எரிச்சலானது ஷ்யாமளாவுக்கு.

இவர்கள் பேசும்போது அமுதினியும் அங்கேதான் இருந்தாள்.  கௌதம் பேசியதை கேட்டு அவளுக்கு முகம் சுருங்கிவிட்டது.

இவங்க ஏன் இப்படி இருக்காங்க.  ஒரு சமயம் நல்லா இருக்காங்க.  ஒரு சமயம் யாரோ மாதிரி பிகேவ் பண்றாங்க.  என்னை பிடிச்சுதான கல்யாணம் பண்ணாங்க.  அப்புறம் ஏன் எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்லாத மாதிரி இருக்காங்க.  எதையும் வாயை திறந்துகூட பேச மாட்டேன்றாங்க.

அத்தைகிட்ட  இவங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு கேட்கலாம்னா, அதுக்கும் அவங்க ஏதாவது நினைச்சிப்பாங்களோன்னு தயக்கமாயிருக்கு.  யார்கிட்ட என்னன்னு கேட்பேன் என குழம்பி நின்றாள்.

ஒருவேளை என்னை கல்யாணம் பண்ணதுல இவங்களுக்கு இஷ்டம் இல்லையோ?  நான் இவங்களுக்கு மேட்ச் இல்லைனு நினைக்கறாங்களோ?  ஏன் இப்படி எப்ப பார் யாரோ மாதிரி ஒட்டாம நடந்துக்கறாங்க.  இப்படியிருக்கவங்க ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கனும் என யோசித்து யோசித்து தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு.

பேசாம அவங்ககிட்டயே கேட்டுடுவோமா என யோசித்தவள், “ம்கூம்.   இப்ப அவங்க இருக்கற மூட்ல அவங்ககிட்ட பேசனோம்னா…, ம்ப்ச் வேணாம்.  அவங்களுக்கு எப்படியோ?  வீட்ல பார்த்து, நான் இவங்கள பிடிச்சுதான் கட்டிகிட்டேன்.

முதல்ல இந்த பங்ஷன் நல்லபடியா நடக்கனும்.  அம்மா அப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சா சங்கடப்படுவாங்க.  இவங்கள எப்படியாவது பங்ஷனுக்கு கூட்டிட்டு போகனும்.  இங்க நடக்கறது எதுவும் அவங்களுக்கு தெரியகூடாது.  அப்புறம் அவங்களும் என்னை நினைச்சு சங்கடப்படுவாங்க.

இவங்க இந்த பங்ஷனுக்கு வரலன்னா நிச்சயம் அம்மால்லருந்து எல்லாரும் என்னைதான் கேள்வி கேட்பாங்க.  என்ன பண்ணலாம் என சிந்தித்தவள் அவங்ககிட்டயே பேசிப் பார்ப்போம் என முடிவு செய்துகொண்டாள்.

அன்று இரவு வேலை எல்லாம் முடிந்து படுப்பதற்காக அறைக்கு சென்றவளுக்கு அவன் இன்னும் உறங்காமல் முழித்திருப்பதைப் பார்த்ததும் கேட்டுவிடலாம் என அவன் அருகில் சென்று நின்றாள்.

அருகில் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்த கௌதமிடம் “அ…து தாலி பெருக்கி போடற பங்ஷனுக்கு நீங்களும் வரீங்களா…?”

“கம்பெல் பண்றன்னு நினைக்காதீங்க.  நீங்க வந்தீங்கனா நல்லாயிருக்கும்.  இல்லனா வீணா அம்மாவுக்கு.., அங்க.., எங்க வீட்டுல  இருக்கறவங்களுக்கு எல்லாம் மனசு கஷ்டமாயிடும்.  வெளிய இருந்து வரவங்க கேட்கறதுக்கும் பதில் சொல்ல முடியாது”.

அம்மா அப்பா எல்லாம் நமக்குள்ள என்னவோ சண்டைன்னு நினைச்சு பீல் பண்ணுவாங்க.  குழலி வீட்ல இருந்தும் வருவாங்க.  நீங்க வரலன்னா, அவங்களும் நீங்க ஏன் வரலன்னு கேள்வி கேட்டு குடைவாங்க.  ப்ளீஸ்… ஜஸ்ட் ஹாப் டே தான்.  போயிட்டு வந்துடலாமே” என்றாள் கெஞ்சலாக முகத்தை வைத்துகொண்டு.

மனைவியையே கண் எடுக்காமல் பார்த்திருந்வனுக்கு என்ன தோன்றியதோ… சரி என தலையசைத்துவிட்டான்.

கௌதம் இலேசாக மேலும் கீழும் தலையசைத்ததில் அவளுக்குதான் குழப்பமாக இருந்தது.

இப்ப இவங்க என்ன பண்ணாங்க?  போலாம்னு சொன்னாங்களா…?  வேணாம்ணாங்களா…? என குழம்பியவள் தயக்கமாகவே “வரீங்களா? அம்மாகிட்ட ஓகே சொல்லிடவா…?”என திரும்பவும் கேட்டாள் அவனிடம்.

அதுவரை சீரியசாக அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அமுதினி குழப்பத்துடன் திரு திரு என முழித்துகொண்டு திரும்ப கேட்டதில் முறுவல் வந்தது.  திரும்பவும் சரி என சம்மதமாக தலையசைத்தான்.

இன்னும் நம்ப முடியாமல் “நிஜமாவா சொல்றீங்க?  உங்களுக்கு சம்மதமா?  அப்ப எங்களோட வரிங்களா நீங்க? என கண்களை விரித்து ஆச்சர்யப்பட்டுகொண்டே “ஹப்பாடா… பிராப்ளம் சால்வ்ட்.” என நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப்பட்டாள்.

அவளது பாவனையைப் பார்த்து அவனுக்கு குறுஞ்சிரிப்பு வந்தது.

அவனது சிரிப்பைப் பார்த்ததும்தான் தன்னை மறந்து தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்ததை புரிந்து அச்சோ இப்படியா இவங்க எதிர்ல பண்ணி வைப்பேன் என கூச்சப்பட்டு முகத்தை சுருக்கி அவனைப் பார்த்தாள்.

“அ….து  நீ….ங்க அத்தைகிட்ட பேசனத வச்சி வரமாட்டீங்கன்னு நினைச்சிருந்தேன்.  இப்ப நீங்க வரேன்னு சொன்னதும் ஒரு எக்சைட்மன்ட்ல….” என அவனைப் பார்த்து சிரித்து சமாளித்தவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் சென்று படுத்துவிட்டாள்.

கட்டிலில் படுத்தவாறு நெடு நேரம் அவள் பேசியதை அசை போட்டுக் கொண்டிருந்தவனுக்கு அவளது பேச்சும் செயலும் புன்னகையை வரவைத்திருந்தது.

திரும்பி அவளைப் பார்த்தான்.  சோபாவில் படுத்திருந்தவள் அதற்குள் உறங்கியிருந்தாள்.  எழுந்து அவளிடம் சென்றவன் கைகளை கட்டிக்கொண்டு தூங்கும் அமுதினியையே புன்னகையுடன் பார்த்து நின்றான்.  சற்று முன் அவனிடம் பேசும் போது அவள் முகத்தில் தெரிந்த பாவனைகள் எதுவும் இல்லை.  முகம் நிர்மலமாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் மனைவி உறங்கும் நேரத்தில் அவள் அறியாதவாறு அவளை பார்த்து ரசிக்க ஆரம்பித்திருந்தான்.  அதில் அவன் மனசாட்சி கூட கேலி செய்தது.  இப்படி பார்த்தே காலத்தை ஓட்டறடா நீ… என.  முகத்தை இடமும் வலமும் அசைத்து புன்னகைத்து கொண்டவனுக்கு மனம் இதமாக இருந்தது மனைவியை நினைத்து.

இவனது ஒதுக்கத்தையோ, பேசாமல் இருப்பதையோ அவள் கேட்டு சண்டை பிடிப்பாள்.  ஷ்யாமளாவிடம் சொல்லி ஏதாவது பிரச்சினை செய்வாள் என எதிர்பார்த்தவனுக்கு அவளது இந்த அமைதியான அணுகுமுறை அவனை அசைக்கதான் செய்தது.

அவனை சீண்டாமல் சண்டை பிடிக்காமல் பொறுமையாக அவனை அனுசரிப்பது போல புரிந்து நடப்பவளை பார்த்து அமுதினியின் மீதான அபிமானம் உயர ஆரம்பித்திருந்தது.

இந்த இரண்டு மாதத்தில் அவனையறியாமல் அவன் மனம் அவள் பக்கம் சாயத்தான் செய்தது.  அவளுக்கே தெரியாமல் அவள் பேச்சு, செயல், நடத்தை என ஒவ்வொன்றையும் கவனிப்பதோடு ரசிக்கவும் செய்தான்.

பேசவில்லை பழகவில்லையே தவிர அவளது அருகாமையை விரும்ப ஆரம்பித்திருந்தான்.  மெல்ல மெல்ல அவன் உள்ளம் அவள் பக்கம் திரும்ப தொடங்கியிருந்தது.

அமுதினி வீட்டில் இருக்கும் நேரங்களில் எல்லாம் இவன் பார்வை முழுதும் மனைவியின் மீதுதான் படிந்திருக்கும்.  தெரிந்தோ தெரியாமலோ அவனை அவள் பக்கம் ஈர்க்க துவங்கியிருந்தாள்.

ஏதோ கண்ணுக்கே தெரியாத நுண்ணிய மெல்லிழை அவர்களை கட்டி இணைப்பது போன்ற மாயை அவனுக்குள் உருவாகியிருந்தது.

கணவன் தன்னை ரசிப்பது தெரியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருப்பவளை கண்களில் நிறைத்துக் கொண்டு சென்று படுத்துவிட்டான்.

இது கூட அழகான உணர்வுதான்போல.  பிடித்தத்தை வாய் விட்டு சொல்லி ரசித்து, மகிழ்ந்து, கூடி களிப்பது ஒரு வகை என்றால்,  தூர இருந்தே தன் இணையை கண்களால் ரசிப்பதும், மொழியில்லாமல் உணருவதும் ஒரு வகை போல.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!