Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 26 (நிறைவுப் பகுதி)

பூபதியும், சாரதாவும் அந்த பிரமாண்டமான மண்டபத்தின் வாயிலில் நின்று வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

அதிகாலையில் மங்கள இசை வாத்தியங்கள் இனிமையான நாதத்தை எங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.  மண்டபத்தில் பல்வேறு மலர்களால் செய்யப்பட்ட அலங்காரம் பார்ப்பவரின் கண்களையும். நாசிகளையும் நிறைத்திருந்தது.

கலவையான பூக்களின் நறுமணமும், சுகந்தமும் அங்கிருந்தவர்களின் உள்ளத்தில் இன்ப ரசத்தை கூட்டியது.

அரவிந்தனின் நீண்ட நாளைய ஆசை, ஏக்கம், கனவு, விருப்பம், எதிர்பார்ப்பு இன்று ஈடேறப் போகிற ஆனந்தத்தில், முகமெல்லாம் பூரிப்புடன் மணமேடையில் புரோகிதர் சொல்லும் மந்திரத்தை சொல்லிக்கொண்டு, மனம் முழுதும் கனிமொழியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான்.



Advertisement

கௌதமும், அமுதினியும் தான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர்.  ஷ்யாமளாக்கு கௌதமின் மாற்றம் எல்லையில்லா உவகையைத் தந்திருந்தது.  இதைத் தானே அவரும் எதிர்பார்த்திருந்தார்.  மகன் மனைவியுடன் சேர்ந்து இணக்கமாக வாழ்வதை எண்ணி அவருக்கு ஆனந்தம் மட்டுமில்லை, நிம்மதியும் கூட.

தனக்கும் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு மகனது மனதில் பெரிய தாக்கத்தையும், காயத்தையும் ஏற்படுத்தி, அவனுக்கு திருமண வாழ்வின் மீதான பற்றே இல்லாமல் போனதை எண்ணி வருந்தாத நாளில்லை.  அமுதினியை திருமணம் செய்த பிறகும் இல்லற வாழ்வில் ஒட்டுதல் இல்லாமல் இருந்தவனைப் பார்த்து அவருக்கு வருத்தம் ஏற்பட்டது.

அவசரப்பட்டு அவனை வற்பறுத்தி அமுதினியை திருமணம் செய்து வைத்துவி்ட்டோமோ?  இதனால் அமுதினியின் வாழ்க்கையும் சேர்த்து அழித்துவிட்டோமோ? என வருத்தப் பட்டவருக்கு, சமீப காலமாக மகனின் மாற்றம் பெரும் நிம்மதியையும் ஆசுவாசத்தையும் கொடுத்திருக்கிறது என சொன்னால் மிகையாகாது.

Advertisement

கௌதம் அரவிந்தனின் திருமணத்தை வெகு விமரிசையாக செய்ய எண்ணி, அதற்கென உள்ள வெட்டிங் பிளானர்ஸ் வைத்து எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருந்தான்.  மண்டபத்திலிருந்து சமையல் வரை எல்லாவற்றையும் பெஸ்ட்டாக இருக்கும்படி பார்த்துக் கொண்டான்.

Advertisement

கௌதமும் அமுதினியும் பத்திரிக்கை வைப்பது முதல் பந்தக்கால் நடுவது வரை எல்லா வேலைகளையும் அவர்களே செய்தனர்.  ரக்‌ஷியின் வீட்டிற்கும் கௌதமும் அமுதினியுமே நேரில் சென்று பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்தனர்.  இவர்கள் செல்லும் போது ரக்‌ஷியும் இருந்தாள் வீட்டில்.  ரக்‌ஷியால் அமுதினியிடம் முகம் மாறாமல் சகஜமாக பேச முடியவில்லை.  இருந்தும் அமுதினி அவளிடம் எந்தப் பகைமையும் பாராட்டாமல் சகஜமாகத்தான் பேசினாள்.

ரக்‌ஷியும் நேரிடையாகவே தன்னால் திருமணத்திற்கு வர இயலாது என கூறியிருந்தாள்.  தனக்கு பெங்களூர் ஐ.ஐ.எம்மில் சீட் கிடைத்து உள்ளதாகவும், கல்லூரியில் அந்த வாரமே சேர இருப்பதால் திருமணத்திற்கு வர இயலாது எனக் கூறியிருந்தாள்.

அவள் கூறிய காரணம் உண்மை என்றாலும் அரவிந்தன் கனியின் கழுத்தில் தாலி கட்டுவதை பார்க்க விரும்பாததால், அதை தவிர்க்கவே திருமணத்திற்கு வர இயலாது என மறுத்திருந்தாள்.

Advertisement

அமுதினியும் அவளை வற்புறுத்தாமல், அவளுக்கு ஐ.ஐ.எம்மில் சீட் கிடைத்ததற்கு வாழ்த்து கூறினாள்.  கௌதமுக்கு வருத்தமே அமுதினியை எண்ணி, அவளிடமும் கேட்டு விட்டான்.

கௌதம், “அம்மு நீ இவ்வளவு இறங்கி அவள் கிட்ட பேசனும்னு அவசியம் இல்லை.  ஏன்? உன் மரியாதைய நீயே குறைச்சுக்கற?” என குறைபட்டான்.

“விடுங்க.  முதல்ல அவள் மேல இருந்த கோவம் எனக்கு இப்ப இல்ல.  அவள் வேணும்னு எல்லாம் பேசியிருக்க மாட்டாள்.  அவளும் சின்ன பொண்ணுதான.  ஏதோ ஆத்திரத்துல அறிவிழந்து பேசிட்டாள்.  யோசிச்செல்லாம் பேசிருக்கமாட்டாள்”.

“என்கிட்ட பேசும்போது அவள் மூஞ்சை பார்த்தீங்கல்ல.  என்கிட்ட நேரிடையா பேச முடியாம தடுமாறுனத.  அவளுக்குள்ளயும் செஞ்சத நினைச்சு குற்றவுணர்ச்சி இருக்கும்.  அதனாலதான் என்னை நேராவே பார்க்க முடியல”.

“அரவிந்தன் மேல இருந்த அன்பு, அது கிடைக்கலன்ற ஏமாற்றம் அந்த நேரத்தில எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம தப்பு பண்ணிட்டாள்.  அவள் அதை மறக்கனும்னு முயற்சி பண்ணும் போது நாமளும் அதையே பிடிச்சு தொங்கிட்டிருக்க வேணாமே…” என்றாள்.

“அம்மணிக்கு மகாத்மான்னு நினைப்பா மனசுல….”.

“மகாத்மான்னு இல்ல.  அவள என்னால சரியா புரிஞ்சுக்க முடியுதுன்னு கூட சொல்லலாம்”.

“என்ன அப்படி பார்க்கறீங்க?  நான் சொல்றது உண்மைதான்.  ஒருத்தர் மேல உண்மையா அன்பு வச்சிட்டு அது கிடைக்குமா… கிடைக்காதா…?  அவங்க நம்மள ஏக்துக்க மாட்டாங்களான்னு தவிக்கற தவிப்பு இருக்கே… அதை வார்த்தையால சொல்ல முடியாது.  அதை அனுபவிச்சவங்களுக்கு தான் அதனோட வலி தெரியும்”.

“ஏன்னா..?  நானும் ஒரு காலத்துல உங்க அன்புக்காக ஏங்கியிருக்கேன்?  நீங்க என்னைப் பார்க்க மாட்டீங்களா…? இரண்டு வார்த்தை ஆசையா அன்பா பேசிறமாட்டீங்களா..? அட்லீஸ்ட் என்னைப் பார்த்து ஒரு ஸ்மைல் பண்ண மாட்டீங்களான்னு தவிச்ச காலங்கள் உண்டு” என்றாள் கண்கள் மூடி அந்த உணர்வில் ஆழ்ந்து.

கௌதமுக்கு இது புதிய செய்தி.  இவள் என்ன சொல்றாள் என்று அமுதினியையே பார்த்திருந்தான்.  அவனைத் திரும்பி பார்த்தவள்  “என்ன பார்க்கறீங்க?  இதை சொல்றதுல எனக்கு எந்த வெக்கமும் இல்ல.  யெஸ் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே உங்களை எனக்கு பிடிக்கும்”.

“அது லவ்வான்னு கேட்டீங்கன்னா எனக்கு சொல்லத் தெரியல.  உங்களை தவிர வேற யாரையும் என்னால நினைச்சிகூட பார்க்க முடியாதுன்னு டயலாக் எல்லாம் பேச மாட்டேன்.  நீங்களா வந்து என்கிட்ட பேசனும் என்னை ஏத்துக்கனும்னு நிறைய எதிர்பார்த்தேன்”.

“நீங்க இல்லாம போயிருந்தா வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் தெரியல.  ஒருவேளை அதை அடாப்ட் பண்ண போராடியிருப்பேனோ என்னவோ?  அதுதானே நிதர்சனம்”.

“நானே வாய்திறந்து என் விருப்பத்தை உங்ககிட்ட சொல்ற தைரியம் எனக்கு இல்ல.  அப்படி சொல்லி நீங்க மறுத்திட்டா அதை என்னால ஏத்துக்க முடியாதுன்னு, உங்ககிட்ட சொல்ற ஐடியாவையே விட்டுட்டேன்”.

“நீங்க எனக்கு கிடைக்காம போயிருந்தா எத்தனை நாள் நான் அதையே நினைச்சுட்டு உட்கார்ந்திருக்க முடியும்”.

“எனக்காக இல்லைனாலும் என் குடும்பத்துக்காக அவங்க சொல்ற மாப்பிள்ளைய நான் கல்யாணம் பண்ணி வாழ்ந்துதான இருக்கனும்.  கடவுள் கிருபையால எனக்கு அப்படி எதுவும் நடக்கலை”.

“நூத்துல ஐம்பது பேர் மனசுல ஆசைபட்டவங்களோட சேர முடியாமதான் போகுது”.

“எனக்குள்ள உங்க மேல விருப்பம் இருக்குன்றத தெரிஞ்சுக்கவே  ரொம்ப நாள் ஆச்சு.  அதெல்லாம் தாண்டி அதை உங்ககிட்ட மட்டும் இல்ல, யார்கிட்டயும் வெளியில சொல்லவே பயமும் தயக்கமும் மனசு முழுக்க.  இதுல நான் எங்க உங்ககிட்ட பேசி, என்னை புரியவச்சி… ம்கூம்… சான்சே இல்ல.  அப்படி நான் என்னோட ஆசைய உங்ககிட்ட சொல்லியிருந்தாலும்…”

“அதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டா?  ஒருவேளை உங்க அஸ்தஸ்து வசதி இதுக்காகதான் உங்கள விரும்பறேன்னு நினைச்சிட்டா.  அதான்…”

“படிப்பு, அந்தஸ்து, வசதி எல்லாத்துலயும் எனக்குள்ளயே உங்களோட கம்பேர் பண்ணி நானாவே என் ஆசைய மறைக்கதான் நினைச்சேன்”.

“தெய்வாதீனமா நான் விரும்புன நீங்களே எனக்கு புருஷனா வந்துட்டீங்க. அதனால தான், நீங்க என்னை எத்தனை உதாசீனப் படுத்தினாலும் உங்களையே சுத்தி சுத்தி வந்தேன்” என்றாள் கண்களில் நீருடன் தன்னை கணவன் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கத்தில்.

“தெரிஞ்சோ தெரியாமலோ, நான் அந்த உணர்வுகளை கடந்து வந்ததால ரக்‌ஷியோட வலியை சரியா புரிஞ்சுக்க முடியுதுன்னு பீல் பண்றேன்”.

“பாவம்.  என்னைய விட அவளுக்கு வலியும் வேதனையும் அதிகம்தான. எனக்கு அமைஞ்ச மாதிரி அவளுக்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கை அமையல இல்ல.  அது அவளுக்கு எவ்வளவு ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்திருக்கும்.  அதனாலதான் அவள்கிட்ட நான் என் கோவத்தை எதுவும் காமிக்கல” என்றாள் அழுகையும் சிரிப்புமாக கண்களில் நீருடன்.

திருமணத்திற்கு முன்பே தன்னை விரும்பியிருக்கிறாள் என்பதே அவனுக்கு இன்ப அதிர்ச்சி என்றால், அவளது புரிதலும், பெருந்தன்மையான, பக்குவமான பேச்சும் ,அவனுக்கு அவளின் மீதான மதிப்பையும் மரியாதையையும் அதிகப்படுத்தியிருந்தது.

இன்னும் இன்னும் அவளின் மேல் அன்பு பெருக்கெடுத்தது அவனுக்கு.

ரக்‌ஷியின் வீட்டில் பத்திரிக்கை வைத்துவிட்டு காரில் திரும்பும் வழியில்தான் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.  ஒரு கையால் கார் ஓட்டிக் கொண்டிருந்தவன், மறு கையால் மனைவியை இழுத்து தன் தோளில் வாகாக சாய்த்து உச்சி முகர்ந்தான்.

கணவன் தன்னை சரியாக புரிந்து கொண்டதிலும், தன் மீதான அன்பிலும் உள்ளம் உருகி, அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் யாரும் எந்த குறையும் சொல்லாத வண்ணம் பார்த்து பார்த்து செய்திருந்தான் ஒவ்வொன்றையும்..  திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் திருமண ஏற்பாடுகளைக் கண்டு மனதார பாராட்டினர்.

குழலி தன் கைக்குழந்தையுடன் முன் வரிசையில் அவர்களது குடும்பத்தாருடன் அமர்ந்திருந்தாள்.  அவளது உடல்நலனை முன்னிட்டு தீபக் அவளை எந்த வேலையும் செய்ய விடவில்லை.

அமுதினி கனிமொழியை அழைத்து வந்தாள் மணமேடைக்கு.  மயில் பச்சை கலரில் நேவி புளூ பார்டரில் பட்டுச் சேலையும், நேவி புளூ கலரில் திரட் வொர்க் செய்திருந்த ப்ளவுசும் அணிந்திருந்தாள்.  அரவிந்தன் தான் இந்த சேலையை பார்த்து தேர்ந்தெடுத்திருந்தான் முகூர்த்தத்திற்கென்று.

கழுத்தின் இருபுறமும் மல்லகை சரங்கள் தவழ்ந்தாட, காதில் குடை ஜிமிக்கி அசைந்தாட, கழுத்திலும், கையிலும் தங்க நகைகள் ஜொலி ஜொலிக்க, காலில் முத்துசரங்கள் பதித்த கொலுசு அவள் பாதத்தின் அசைவிற்கேற்ப ஒலியெழுப்ப, முகத்தில் மணப்பெண்ணுக்கான நாணத்தில் கன்னங்கள் இரண்டும் செம்மை படரந்து மெல்ல மணவறையை நோக்கி நடந்து வந்தாள்.

அரவிந்தனுக்கு அவளது முகத்தைவிட்டு கண்களை எடுக்க முடியவில்லை.  அவளது அழகையும் நாணத்தையும், முக பூரிப்பையும் கண்களால் களவாடிக் கொண்டிருந்தான்.

அரவிந்தனின் பக்கத்தில் வந்து அமர்ந்தவள், நிமிராமல் வெட்கத்தால் தலை குனிந்திருந்தாள்.

இத்தனை நாட்கள் தன்னை, மிரட்டி, உருட்டி, முறைத்து என அவளது பல பரிணாமங்களைப் பார்த்தவனுக்கு, அவளது இந்த நாணத்தைக் கண்டு சிரிப்புதான்.

ராட்சஷி என்னை இத்தனை நாள் என்ன பாடுபடுத்திட்டு, இந்த பூனையும் பால்குடிக்குமான்னு எப்படி வெட்கப்பட்டுட்டு பதுவிசா உட்கார்ந்திருக்கா பாரு என அவனுக்கு சிரிப்பு வந்தது.

மாலையை சரி செய்வது போல அவள் காது பக்கம் குனிந்தவன், “ஹேய் என்னைப் பாருடி…” என்றான் கிசுகிசுப்பாக கரகரத்த குரலில் உணர்வு பொங்க.

அவனது வார்த்தைகளில் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தவன், மெல்ல அவளை நெருங்கி அவளுக்கும் மட்டும் கேட்கும்படி “கொல்றடி….” என்றான் ரசனையாக கண்களை சிமிட்டி.

அவன் சொன்னதைக் கேட்டு  காது மடல்கள் சூடாகி இன்னும் கன்னங்கள் சிவந்து வெட்கச் சிரிப்பில் உதடு நெளிய… கூச்சத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஷ்யாமளா, சாரதா, பூபதி, அமுதினி மற்றும் கௌதம் என நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் மணமக்களுடன் நின்றிருந்தனர்.

கூடியிருந்த எல்லோரின் ஆசிர்வாதத்துடனும் வாழ்த்துடனும் மனம் கவர்ந்தவளே மனைவியாகும் மனநிறைவுடன் திருமாங்கல்யத்தை கனிமொழியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான் அரவிந்தன்.

அரவிந்தன் மங்களநாணை கழுத்தில் கட்டும்போது அவனையே விடாது பார்த்திருந்தாள் கனிமொழி.

இருவரின் பார்வையும் சில நொடிகள் தழுவி மீண்டது காதலில்.

அதன்பிறகான சம்பிரதாங்கள் எல்லாம் முடிந்ததும் வாழ்த்து கூறவும், பரிசு கொடுக்கவும் என மணமக்களைச் சுற்றி வந்திருந்தவர்கள் சூழ்ந்து கொண்டனர்.

நிற்கவும் நேரமில்லாமல் வந்திருந்தவர்களை கவனிக்க கௌதமும், பூபதியும், அமுதினியும், சாரதாவும் சுழன்று கொண்டிருந்தனர்.

பூபதி வேலை செய்யும் கம்பெனியின் முதலாளியான மகேஷ்வரன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்திருந்தார்.  பூபதி அவரை வரவேற்று மணமக்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி போட்டோ, வீடியோ எடுத்து, அவர்களை சாப்பிடுவதற்காக கையோடு அழைத்துச் சென்றார்.

சித்தார்த் அவர்களது கம்பெனியின் மார்கெட்டிங்கிற்காக சிங்கப்பூர் சென்றிருந்தான்.  சித்தார்த்துக்கும் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.

மகேஷ்வரன் எதிர்பார்த்தது போலவே அவர்களது சமூகத்தில் நல்ல வளமையான இடத்திலேயே பெண்ணைப் பார்த்து சித்தார்த்துக்கு முடித்திருந்தார்.

கனிமொழியின் மீது விருப்பம் இருந்தாலும், தந்தையை குடும்பத்தை எதிர்த்து நின்று திருமணம் செய்து கொள்ளும் அளவு மனமும், துணிவும் இல்லையென்பதால் நிதர்சனத்தை புரிந்து தந்தையின் விருப்பத்திற்கு சம்மதித்திருந்தான்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எத்தனை பேருக்கு ஆசைப்பட்டபடி, விருப்பப் பட்டபடி வாழ்க்கை அமைகிறது? நூற்றுக்கு பாதி சதவிகிதம் பேருக்கு அவர்கள் எண்ணியபடி திருமண வாழ்க்கை அமைவதில்லை.

கதைகளிலிலும், சினிமாக்களிலும் வேண்டுமானால் காதலர்கள் சேர்வது போலவும், சந்தோஷமான வாழ்க்கை வாழ்வது போலவும் வரலாம்.

உண்மையில் எத்தனை காதலர்கள் நிஜத்தில் சேர்கிறார்கள்.  திருமணம் செய்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்கு பின் எத்தனை காதலர்கள் அதே அன்பு மாறாமல் காதலுடன் மனம் இணைந்து வாழ்கிறார்கள்.  நம்மால் சொல்ல முடியுமா?

நூற்றில் ஒருத்தருக்கு, ஆயிரத்தில் ஒருத்தருக்குத்தான் அது அமையும்.  அதுக்கு பூர்வ ஜென்ம புண்ணியுமும் துணை புரிய வேண்டும்.

இங்கே விதிக்கப்பட்டது அத்தனையும் இறைவனின் ஆணை.  அவனின்றி அசையாது எதுவும்.

அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்தவளை கைப்பிடித்து மெல்ல அழைத்து வந்து ஃபேனுக்கு கீழ் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார வைத்தான் கௌதம்.

“எனக்கொன்னுமில்லங்க.  இன்னும் கொஞ்சம் நேரந்தான.  அப்புறம் புல்லா ரெஸ்ட்தான் எடுக்கப்போறேன்” என்றாள் சிணுங்கலாக.

“மூச்… நேத்திலேர்ந்து இதையே சொல்லிட்டிருக்க என்கிட்ட.  கல்யாணம் முடியனும்னு பொறுமையா இருந்தேன்.  அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது இல்ல.  இனி நான் பார்த்துப்பேன்… இந்த இடத்தை விட்டு எழுந்திருக்கக் கூடாது” என அவளை அதட்டியவனைப் பார்த்து சிரித்து விட்டாள்.

அவளது சிரிப்பைப் பார்த்தவனுக்கும் சிரிப்பு வந்தது.  வர வர கனியோட சேர்ந்து நீயும் சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்ட என்று அவளது முகத்தில் வழிந்த வேர்வைத் துளிகளை தன் கையில் இருந்த கர்சீப்பால் துடைத்து விட்டான்.

“சொன்னா கேட்கனும் அம்மு.  அப்புறம் அலைச்சல்ல கால் வலிக்குதுன்னு நைட்லாம் தூங்கமாட்ட” என மனைவியை வார்த்தைகளால் கொஞ்சி கொண்டிருந்தவன், கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அமுதினி “தாகமா இருக்கு” என்றாள் கணவனைப் பார்த்து.

கௌதம், “நீ இங்கேயே இரு.  நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என்று எழுந்து சென்றான்.

அமுதினி நாற்காலியில் வசதியாக சாயந்தமர்ந்தவள் செல்லும் கணவனையே கண் கொட்டாது பார்த்திருந்தாள்.  கணவனது அன்பிலும் அக்கறையிலும் மனம் நிறைந்திருந்தது அவளுக்கு.

ஆம்.  அமுதினிக்கு இது நான்காவது மாதம்.  வயிறு லேசாக மேடிட்டிருந்தது.  தாய்மையின் பூரிப்பிலும், கணவனின் அன்பிலும் வாழ்க்கை அவளுக்கு வசந்தத்தைக் காட்டியிருந்தது.

கௌதம் கையில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்து வந்து கொடுத்தான் அருந்துவதற்காக.  அதனை கையில் வாங்கிக் கொண்டே “நீங்களும் கொஞ்ச நேரம் உட்காருங்க.  டையர்டா தெரியறீங்க…” என்றாள் கணவனைப் பார்த்து.

மனைவி விடமாட்டாள் என அறிந்தவன், “அம்மா தனியா இருப்பாங்கடா..”. என சொல்லிக் கொண்டே அவள் பக்கத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“சர்க்கரை போடலையா?  ஒரே புளிப்பாயிருக்கு…” என்றாள் முகத்தைச் சுருக்கி.

“இல்லையே.  லைட்டா சுகர் போட சொல்லிதான வாங்கிட்டு வந்தேன்”.

“குடிச்சுப் பாருங்க.  நான் என்ன சும்மாவா சொல்றேன்” என்று அவனது கையில் திணித்தாள்.  அவனுக்கும் யோசனையானது. சுகர் போடலையோ? போட சொல்லிதான வாங்கிட்டு வந்தேன் என அவள் கொடுத்த பழச்சாற்றை குடித்துப் பார்த்தவன், அவளைத் திரும்பி முறைத்தான்.

அவனைப் பார்த்து அசடு வழிந்துகொண்டே சிரித்தவள், “பாதியாவது குடிங்க. நேத்துலேர்ந்து சரியாகூட சாப்பிடல நீங்க.  இதுல சரியான தூக்கமும் இல்ல.  உங்களைப் பார்த்தாலே அவ்வளவு டையர்டா தெரியறீங்க” என்றாள் கரிசனமாக அவன் கையிலிருந்த ஜூஸை அவனது உதட்டருகில் பிடித்து வைத்து.

“ம்ப்ச்… உனக்கு கொண்டு வந்தா நீ எனக்கு பார்ப்பியா…” என சலித்தவன், குடிக்காமல் விடமாட்டாள் என பாதியை குடித்து விட்டு மீதியை அவளிடம் தந்தான்.

“ஹ்ம்ம்… இப்பதான் ஸ்வீட்டா….யிருக்கு” என சப்புகொட்டி ரசித்துக் குடித்தாள் அந்த ஜூஸை.

“வாலு…. சேட்டை அதிகமாயிடுச்சு உனக்கு” என கூச்சப்பட்டு கொண்டே அவள் காதைப் பிடித்து திருகினான்.  அங்கேயே அவளை அமர்ந்திருக்கும்படி கூறி வந்தவர்களை கவனிக்க எழுந்து சென்றிருந்தான்.

இரண்டு மாதங்கள் கழித்து.

“ஏய்… மொழி எழுந்திருடி.  எவ்வளவு நேரம் எழுப்பறது உன்னை…” என சலித்துக் கொண்டான் அரவிந்தன்.

“ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்… அர்வி, ப்ளீஸ்…”  என கண்களைத் திறக்காமல் கெஞ்சியவள், போர்வையை இழுத்து தலையை மூடிக் கொண்டாள்.

அவளது செய்கையில் சிரிப்பு வந்தது அவனுக்கு.  “சரியான கும்பகர்ணி டி நீ.  உன்னை எப்படிதான் உங்க அம்மா சமாளிச்சாங்களோ…?  எப்படி? எழுப்பினாலும் கொஞ்சம் கூட அசரமாட்றாளே.  இதையேதான் அரைமணி நேரமா சொல்லிட்டிருக்கா.  இவளை…” என அரவிந்தனும் அவளது போர்வையின் உள்ளே புகுந்திருந்தான்.

“போங்க போங்க…” என சிணுங்கியவள், “இது எல்லாம் டூ..மச்.  நைட் முழுக்கவும் தூங்க விடல.  இப்பவும் என் தூக்கத்தை கெடுக்கறீங்க” என சிணுங்கினாள்.

“அச்சோ கத்தாதடி வெளிய கேட்கப் போகுது” என அவள் வாயைப் அவனது கைகளால் பொத்தினான்.

“உன் மேலதான் தப்பு.   எழுப்பின உடனே எந்திரிச்சு இருக்கனும்.  நீ எழுந்திருக்கல.  நான் ஒன்னும் பண்ண முடியாது” என அவளை இறுக்கிக் கொண்டான்.

“இன்னிக்கும் காலேஜ் லீவ் போட முடியாது.  நான் கிளம்பனும்” என அவனை உதறி தள்ளி விலகியவள் அவசரமாக பாத்ரூம் நோக்கி ஓடினாள்.

ஓடும் அவளை பார்த்து சிரித்தவன் உன்னையெல்லாம் இப்படிதான்டி எழுப்பனும் என பெருமைபட்டுக் கொண்டாலும் கடைசில நம்மள உசுப்பேத்திட்டு ஒடறாளே ராட்சஷி என புலம்பினான்.

கனி குளித்து முடித்து வந்து அவசரமாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

நேரமாகிவிட்டதால் இட்லியைத் தட்டில் வைத்து எடுத்து வந்தவன் அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.

கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டே அரவிந்த் ஊட்டியதை வாயில் வாங்கிக்கொண்டவள் “ம்ப்ச்… வெறும் இட்லியை வாயில திணிக்காதீங்க.  சின்ன சின்னதா புட்டு நல்லா சாம்பார்ல தொட்டுக் குடுங்க”.

“அடியேய் ரொம்ப பண்றடி நீ.  போனா போகுது காலேஜ்கு  லேட்டாகுதேன்னு ஒரு நாளைக்கு ஊட்டி விட்டா, அதையே தினமும் என்னை பண்ண வச்சிட்டுருக்க.  இதுல உனக்கு சின்னதா புட்டு சாம்பார் முக்கி வேற தரனுமா” என அலுத்துக் கொண்டான்.

அவனை முறைத்தவள், “நீங்க ஒன்னும் ரொம்ப அலுத்துக்க வேணாம். நானா இப்பவே கல்யாணம் பண்ணிக்கனும்னு பிடிவாதம் பிடிச்சேன்.  நான்தான் என் பிஜி முடிச்சதும் பண்ணிக்கலாம்னு சொன்னேன் இல்ல.  நீங்கதான் மாமன் இருக்கேன்.  மச்சான் இருக்கேன்னு உருகி உருகி டயலாக் பேசிட்டு இப்ப என்னை குறை சொல்றீங்களா..?” என முறுக்கிக் கொண்டாள்.

அச்சோ கோச்சிக்கிட்டான்னா மலையிறக்கறது கஷ்டமாச்சே என பதறியவன், “டேய் செல்லம், என்னைப் பார்த்தா பாவமா தெரியலையாடா?.  கல்யாணத்துக்கு முன்னாடி நான் வீட்ல ஒரு வேலைப் பார்த்தது இல்ல. இப்ப என்னடான்னா எல்லாரும் என்னைப் பார்த்து கிண்டல் பண்ற அளவுக்கு வேலை வாங்கறடி.  உனக்கே ஓவரா தெரியலையா?” என்றான் பாவமாக முகத்தை வைத்து.

“ம்ப்ச்.  சும்மா பேசிட்டிருக்காதீங்க.  அந்த நோட்புக்க எடுத்து என் பேக்ல வைங்க.  டைம் ஆயிடுச்சு.  ஈவ்னிங் வந்து பேசிக்கலாம்” என துப்பட்டாவை எடுத்து தோள் மேல் போட்டுக் கொண்டவள் கண்ணாடி முன் நின்று தன்னை சரி பார்த்தாள்.

தினமும் அரவிந்தன் வேலையிலிருந்து வரவே இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்.  முக்கால்வாசி நாட்களில் கனிமொழி அவன் வருவதற்குள் உறங்கியிருப்பாள்.

பகல் நேரத்தில் அவனுக்கு முன் இவள் காலையிலேயே கல்லூரிக்கு கிளம்பியிருப்பாள்.  எங்கே அவர்களுக்கு பேச நேரம் இருந்தது.  அவனுக்கும் தெரியும்.  அவளது கஷ்டம்.  படிப்பு முடித்துதான் திருமணம் என உறுதியாக இருந்தவளை, இவன்தான் மாற்றியிருந்தான்.  நிதர்சனம் புரிந்தாலும், அவ்வப்போது தம்பதியரிடையே ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்தது.

காரில் அரவிந்தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவள், அவனைப் பார்த்து, “நானே ஸ்கூட்டில காலேஜ் போயிக்கறேன்னா கேட்கறது இல்ல.  அப்புறம் உங்களை வேலை வாங்கறேன்னு குறை சொல்ல வேண்டியது” என அலுத்துக் கொண்டாள்..

“நான்தானடி கொண்டு வந்து விடறேன்.  உனக்கென்னடி கஷ்டம் இதுல?” என முறைத்தான்.

“எனக்கென்ன கஷ்டம்.  டெய்லி ஈவ்னிங் ஆட்டோக்கு வேற காசு வேஸ்டுதான.  ஸ்கூட்டில வந்தா நான் அதுலேயே திரும்பி வந்துடுவேன் இல்ல”.

அவள் சொல்வது புரிந்தாலும் பேச்சை மாற்ற எண்ணி “ஒழுங்கா லேட் பண்ணாம ஈவ்னிங் சீக்கிரம் வந்து சேரு வீட்டுக்கு” என்று காரை அவள் கல்லூரியின் முன்னே நிறுத்தினான்.

அவன் நிறுத்தியதும் அவசரமாக கதவைத் திறந்து இறங்கப் போனவளை, “மொழி…” என குரல் கொடுத்தான்.  அவனது குரலைக் கேட்டு திரும்பி அவனைப் பார்த்தவள், “ஸாரி டைம் ஆயிடுச்சுன்னு டென்ஷன்ல….” என வேகமாக அவனை நெருங்கியவள் நொடி நேரத்தில் அவனை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்து விலகினாள் புன்னகையுடன்.

ஓகேவா என கேட்டுக் கொண்டே கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள்.  அவளைப் பார்த்து சிரித்தபடி தலையசைத்தான்.  இதற்காகவே மனைவியை தினமும் அலுப்பு பார்க்காமல் கல்லூரிக்கு கொண்டு வந்துவிடுவான்.

கனிமொழி கல்லூரிக்குள் சென்று மறையும் வரை பார்த்திருந்தவன், புன்னகையுடன் காரை ஸ்டார்ட் செய்தான்.

பிள்ளையை ஸ்கூலுக்கு கொண்டு வந்து விட வேண்டிய வயசுல பொண்டாட்டிய காலேஜ்கு கூட்டிட்டு வந்து விடறேன் நான் என தன்னை நினைத்து சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான்.

அவர்களது இல்லறம் நல்லறமாக சிறக்க இறைவனை வேண்டி நாமும் விடைபெறுவோம். நன்றி.

சுபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!