Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் – 4

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

4. பச்சை விழி பவள முல்லை……

ஏஜியன் நீலக்கடலில் நிலவின் ஒளிப்பட்டு மின்னிய நீரை கத்திப்போல கிழித்துக்கொண்டு பாயும் ஸ்கேட் என்னும் பெயருடைய மரக்கலனின் வேகத்தில் இருபுறமும் பாய்ந்து பிரியும் கடல்… விண்ணிலிருந்து பார்க்கும் போது அந்த மரக்கலம், நிலத்தில் இரு கணவாய்களிடையே பாய்ந்து செல்லும் பெரிய ரதமாக காட்சி தந்தது.



Advertisement

தெளிந்த வானத்தில் ரோகிணி நட்சத்திர கூட்டம் முளைத்து மின்னிக் கொண்டிருக்க, சிறிதும் பெரிதுமான புகை மண்டலங்களாக மேகங்களின் அணிவகுப்பு நிலவின் ஒளியில் ரம்மிய நிறமெழுப்பி நகர்ந்து கொண்டிருந்தது…

ஸ்கேட் என்னும் அந்த ராட்சத மரக்கலம் அசுர தேவதையின் சிறகுகள் போல தன் பாய்களை விரித்துக்கொண்டு மாலித்தீவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க அதன் மேல்தளத்தின் முகப்பில் நின்று கொண்டிருக்கும் அந்த பெண்ணின் முகத்தில் மதிவதனமும், மல்லிகையின் நிறமும் அப்பிக் கிடந்தது… அவளின் பச்சை நிற கண்கள் இந்த இரவிலும் மினுமினுத்துக் கொண்டிருக்கின்றன. நெற்றியின் நடுவில் அவள் இட்டிருந்த பிறை நிலவுத் திலகம் அவளின் வட்ட முகத்திற்கு வஞ்சனையின்றி பொழிவை வார்த்திருந்தது. நீண்ட மெல்லிய கரங்கள் பெண்மையின் தன்மை காட்டினாலும் அது அவசியத்தில் வாளோடு சுழன்றால் இருபது தலைகளை கொய்துவிடும் என்பதை பறைசாற்றின. விரல்களின் நீளமும் அதில் இருந்த நளினம் கலந்த துல்லியமான அசைவுகளும் வீணையின் நரம்புகளை சுருதியூட்டி ராகம் மட்டுமல்ல, அம்பாராத்தூணியின் கணைகளை மூன்றாகவும், நான்காகவும் எடுத்து எதிரிகளின் விழிகளுக்குள் செலுத்திவிடும் அளவிற்கு பண்பட்டவை….என்பதை உணர்த்தின.

ஆலிமா ஸ்கேட் மரக்கலத்தின் முகப்பில்

ஆலிமா… ஆபத்தான கடல் சுறா வாலில் விஷம் வீசும் என்று பொருள் கொண்ட “ஸ்கேட்” என்னும் அந்த மரக்கலத்தின் தலைவி… இரு நவ வயதில் இந்த பொறுப்பு இவளுக்கு கொடுக்கப்பட்டது… ஆறு வயதில் மரக்கலனில் பயணம் தொடங்கியவள்.. பருவ வயது பெண்கள் பலரும் தங்களின் எண்ணங்களில் காதலை பருகிய வேளையில் கடலின் உப்புக்காற்றில் மரக்கலம் ஓட்டவும், நுணுக்கங்கள் பழகவும் தன்னை அர்பணித்தவள்… ஆழக்கடலின் சுழற்சியையும், காற்றின் போக்கையும் சுவாசம் மூலமே உணர்ந்து கொள்ளும், இந்த பேரிளம் பெரும் அழகியின் வாழ்வில் சோகங்கள் ஆயிரம். வெற்றிகள் பல்லாயிரம்.

Advertisement

அரபுநாட்டின் அடிமைத்தாய்க்கும், கிரேக்கத்து கடற்படையின் தலைவன் செலுக்கியசுக்கும் பிறந்த இந்த மல்லிகை பேரழகி, துவக்கம் முதல் ஆதிக்க வெறியர்களால் பலவாறு சோகங்கள் சுமந்தவள். செலுக்கியஸ் செய்த காதல் லீலையில் இவள் கருவாக உருவானபோது அடிமைகள் இங்கே உரிமைக்கு குரல் கொடுக்க கூடாது என்று இவள் தாயை மாலித்தீவில் மரகத மணிகளுக்காக விற்றான் அடிமைகள் தலைவன். பெற்றேடுத்த பின் தன்னை வளர்க்க தாய் சந்தித்த வலிகளை பால பருவத்திலேயே பார்த்து வளர்ந்த ஆலிமா, கடற்கொள்ளையனால் தாயுடன் ரினியா தீவுக்கு கடத்தப்பட்டு, கடற்கொள்ளையனின் ஆசை நாயகியாக மாறிய தாயின் தத்துவங்களை பிடிக்காமல் அடிமைகளோடு அடிமையாக வாழப் பழகிக்கொண்டாள்.

Advertisement

செலுக்கியசால் ஆறுவயதில் ரினியா தீவிலிருந்து மீட்கப்பட்டாள். செலுக்கியசிடம் இவளை ஒப்படைத்த தாய் மரணித்து போக, செலுக்கியசின் மகளாக கடலில் வாழ்க்கையை துவங்கினாள். ஒரு வீரமிக்க கடல் இளவரசியாகவே செலுக்கியஸ் இவளை வளர்த்தார். அடிமை என்று சொல்லி நிலத்தில் உரிமை மறுக்கப்பட்ட ஆலிமா கடல் தாயின் செல்வ மகளாகவே வளர்ந்து பருவமெய்தினாள்…

ஒட்டுமொத்த கடற்போரின் கலைகளையும் செலுக்கியசிடம் கற்றுக்கொண்ட ஆலிமா கடலின் அத்துணை போக்குகளையும் அறிந்தவள்… அதிகாரப் போட்டியில் கிரேக்கத்தில் நடந்த பெரும் போரில் செலுக்கியசின் கடற்படையிடம் தோற்றுப்போன அகோட்டஸ் வஞ்சகமாக செலுக்கியசை மாலிதீவில் வெட்டி வீழ்த்திய போது அலறி துடித்த அவளின் உணர்ச்சிகளை செலுக்கியசின் வார்த்தைகள் இரும்பு தகடுகளில் பொரித்த அச்சாக இதயத்தில் எழுதி வைத்தது…

ஆலிமா.. நீ அடிமை இல்லை,வஞ்சகத்தில் எனக்கு முடிவு கட்டிய அகோட்டஸை கடலின் எந்த மூலையிலும் நீ ஆதிக்கம் செலுத்த விடாதே… அகோட்டஸ் வீழும் வரை அவனுக்கு கடலில் நீ தான் எதிரி… அவனின் இதயத்தை உன் குருவாள் குத்திக் கிழிக்கும் அன்று… என் ஆன்மா கடலின் தாய்க்குள் அமிழ்ந்து போகும்… நீ இனி கடலின் இளவரசி இல்லை… கடலின் ராணி… உடனே ரினியாவிற்கு சென்று சீன வணிகன் பாஹலாசை சந்தி… உனக்கு அவன் செய்ய வேண்டியவற்றை சொல்வான் என்று உயிர் நீத்தார்.

Advertisement

பச்சை கண் பேரழகி இப்போது தன் இமைகளை மூடித்திறக்க கடந்த காலத்தின் காட்சிகள் மாறி நிகழ் காலத்திற்கு வந்தாள்… அவளின் நாசியிலிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட இளமை பூத்து விம்மிய இடங்கள் உயர்ந்து தாழ்ந்தன… கண்களில் இருந்து வெளிப்பட்ட இரு நீர் துளிகள் மரக்கலனிலிருந்து கடலில் விழுந்து கரைந்தது….

ஆலிமா வில் எய்வத்தில் வல்ல செயல்கள் செய்பவள்

ஆலிமா… என்னும் குரல் கேட்டு திரும்பியவளின் பின்னால் சுமார் பத்து அடி தூரத்தில் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் பாஹலாஸ்… சிறிய அகன்ற முகம்… கண்களில் துருத்துருப்பு, குள்ளமான அதே வேளையில் உறுதியான தேகம். நீளமாக தரை நோக்கி நீண்டிருந்த மீசை, வளமாக வளர்ந்திருந்த கேசத்தை சுருட்டி கொண்டையாக உச்சியில் முடிந்திருந்த பாஹலாஸ் சீன தேசத்தவன். பிழைப்பு தேடி கடலில் பயணம் தொடங்கியவன். ரினியாவில் வணிகம் செய்து கொண்டே செலுக்கியசுக்கு ஒற்று வேலை செய்தவன். செலுக்கியசால் வளர்க்கப்பட்ட தேர்ந்த மாலுமி. அற்புதமான மனிதன். விசுவாசம் என்றால் பாஹலாஸ்…. என்பது செலுக்கியஸ் புராணத்தில் பொறிக்கப்பட்ட வாசகம்…

ஆலிமா பாஹலாசை நெருங்கி வந்தாள்… சகோதரா.. ரினியாவை நாளை உச்சிப் பொழுத்திற்குள் அடைந்து விடுவோம் என்றாள்.

ஆம் ஆலிமா… நம் குறிக்கோளின் துவக்கம் அற்புதமாக அமைந்து உள்ளது. காற்றும் கடலும் நமக்கு சாககமாக கைகோர்த்து உள்ளன. மேலும் பவளத் தீவிலிருந்து தூதுப்புறா வந்துவிட்டது. இதோ என்ற பாஹலாஸ் தன் நீண்ட அங்கியில் மறைத்து வைத்திருந்த வெள்ளையும் சாம்பல் நிறமும் கலந்த புறாவை நீட்டினான்.

அந்த புறாவை தன் அழகிய கரங்களில் வாங்கிய ஆலிமா அதன் உடலை மூன்று முறை தடவி கொடுக்க அவள் முகத்தை உற்று நோக்கிய புறா மெல்ல தன் வலது இறக்கையை மேலே தூக்கியது… அங்கே சிறிய செப்புக் குழலில் சேதி மறைந்து இருந்தது. அதை எடுத்த ஆலிமா புறாவை நாவாயின் மேல்தளத்தில் சுதந்திரமாக உலாவ விட்டுவிட்டு, குழலை லாவகமாக திறந்தாள். உள்ளே இருந்த ஓலையை பாய்மர கம்பத்தின் கீழே இருந்த விளக்கின் அருகில் சென்று படித்தாள்….

ஸ்கேட் என்னும் ராட்சத மரக்கலம்

அவளின் முகம் பிரகாசத்தில் தீச்சுவாலயாய் மின்னியது. அகன்று சற்று பருத்த ஆரஞ்சு சுளை வடிவ உதட்டில் புன்னகை பூத்து குலுங்கியது. சகோதரா உங்கள் நண்பன் காரியத்தை நிறைவேற்றி விட்டான். பவளத்தீவு இப்போது பரபரப்பு தீவாக மாறியுள்ளது… அக்கோடஸ் உன் எந்த ஆசையும் நான் இருக்கும் வரை இந்த கடலிலும், கடல் தாண்டியும் நிறைவேறாது என்ற ஆலிமா..

சகோதரா… உடனே ரினியாவிற்கு தூதனுப்புங்கள். நம்முடைய மற்ற மரக்கலங்களும் தயாராக இருக்கட்டும்… நமது மரக்கலனுக்கு தேவையான பொருட்களும் துறையில் சேமித்து வைக்க கூறுங்கள் என்றாள்…

ஆலிமா… உன் சொல்படியே செய்கின்றேன் என்று கூறிய பாஹலாஸ்.. கீழ்தளத்தில் உள்ள தன் அறைக்கு சென்றான்…

ஆலிமா… உள்ளத்தில் பூரிப்பும் வன்மமும், வைராக்கியமும் கலந்த உணர்வில், பாய் மரத்தின் நடுவே அமைந்து இருந்த மாடத்தை நோக்கி கயிற்று ஏணியில் ஏறினாள். அவளுக்கு பிடித்த இடம் அது…

அதே வேளையில் பவளத்தீவில்….

மொத்த அரண்மனை கோட்டையும் சலித்து எடுக்கப்பட்டது. கோட்டையின் வெளியே இருந்த நகரும், நகருக்கு வந்திருந்த மற்ற நாட்டவரும் கடுமையாக விசாரிக்கப்பட்டு அவர்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டது…

அகோட்டஸ் கண்களில் வெறியும், உணர்வில் தன் மருமகனை குறித்த கவலையும் மேலோங்கி காணப்பட்டான். டையோனிஸ் நடப்பவற்றை ஒரு கனவு போல உணர்ந்தான் என்றாலும், தனக்கு இருக்கும் எதிரிகள் குறித்தும் அவர்களின் பலங்களையும் குறித்தும் கணக்கீடுகளை உள்ளத்தில் உருவாக்கி வைத்துக் கொண்டான்…

அகோட்டஸ் கண்கள் திடீரென அரண்மனையை ஒட்டி வளர்ந்திருந்த பேரீச்சம்பழ மரத்தை நோக்கிப் பயணப்பட்டு நின்றது. இந்த மரம் தான் இளவரசன் மீது கத்தியெறிய பயன்பட்டிருக்க வேண்டும் அப்படியென்றால் இந்த மரத்தின் உயரத்தில் யார் ஏறி இருக்க முடியும். தவிர இந்த மரம் கடலை ஒட்டிய பகுதியில் இருந்து வளர்ந்துள்ளது. இவ்வளவு உயரத்தில் சராசரியாக யாராலும் ஏறி விட இயலாது. அப்படி ஏறினால் கண்காணிப்பு வீரர்கள் கண்ணில் படாமல் எப்படி சாத்தியம் என்று எண்ணியபடி நின்று கொண்டிருந்தான்…

அப்போது துறைமுக பகுதியில் சேமிப்பு கூடாரங்களில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. வீரர்களும் கப்பல்களின் மாலுமிகளும் தீயை அணைக்க முயன்று கொண்டிருப்பது தெரிந்தது… அகோட்டஸ் உடனே மாடத்திலிருந்து இறங்கி துறைமுகம் நோக்கி விரைந்தான்….

அதே வேளையில் மூன்றடி உயரத்தில் பொதி மூட்டை போல உடலமைப்புடன் இரு உருவங்கள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாவாய் ஒன்றை நோக்கி சிறிய படகில் சென்று கொண்டிருந்தனர்.. அடுத்த சில நிமிடங்களில்…. அவர்கள் நாவாயின் பின் புறமாக ஏறத் துவங்கி இருந்தனர்….

தொடரும்……

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!