Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 9ம் அத்தியாயம்

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

9. துரோகியா? நண்பனா?…

“கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதி….”
என்ற அகநானூற்றுப் பாடல் புகழும் குடந்தை. வானை முட்டும் கோபுரங்களும், ஒவ்பொறு கோபுரங்களையும் அனைத்து அமைந்த கோவில்களும், வீதி தோறும் கோவில் நாயகர்களை வரவேற்க போடப்படும் கோலங்களும், தெப்பக்குளங்கலில் வீசும் பேரலையும், குடந்தையில் குளிர்ந்த காட்சிகள். கருக்கல்லில் தொடங்கும் வேத மந்திரங்கள் உச்சர்ப்பின் ஒலி.. இரவில் முதல் சாமம் முடியும் வரை ஓங்கி ஒலித்து பரவசம் தரும் அற்புதமான வேதப்பாட சாலைகளும், அணையாத யாக குண்டங்களும் குடந்தையின் சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும். சோழத்து கருவூலம் நிறைந்து திரண்டு இருப்பதால், அரசனின் அகக்கண் குடந்தையை நோக்கி எப்போதும் திறந்தே இருக்கும் என்பர். அத்தகைய சிறப்புமிக்க குடந்தையின் நகர வீதியில் சோழ இளவல் வந்த ரதம் புயலென புகுந்தது…



Advertisement

சோழ ஆபத்துதவிகள் புடைசூழ, புலியின் கொடி தாங்கி வந்த சிறு படை சீத்தலை பெரும்நம்பி வீட்டை அடைந்து நின்றது. வெளியே கேட்கும் பரபரப்பின் சப்தங்களும், புரவிகளின் குளம்படி ஓசைகளையும் வைத்து சோழ இளவலின் வருகையை புரிந்து கொண்ட சீத்தலை பெரும்நம்பி சட்டென்று கதவை திறந்து வெளியே வந்தார்.

வாருங்கள்…!! வாருங்கள்… சோழத்து நம்பிக்கையே!… வருங்கால சோழ பேரரசே…. என்று நெடுங்கிள்ளியை, குழவி குழைந்து வரவேற்றார்… சீத்தலை பெரும்நம்பி…

சோழ இளவல் முகத்தில் பெரும் பிரகாசம்… மிகவும் மகிழ்ச்சி ஆஸ்தான ஜோதிடரே… எப்படி இருக்கின்றீர்கள்… குடந்தையின் குடிகள் நலமா? என்றான் நெடுங்கிள்ளி.

Advertisement

குடந்தை நகர்

தங்கள் மாமன் மாசில்லா மாணிக்கம் இரும்பிடை வல்லவரின் ஆசியில், தங்களின் அருளில் மிகவும் சுகம் இளவரசே என்றார் ஜோதிடர்.

Advertisement

அனைவரும் மாளிகைக்குள் நுழைந்தவுடன்… அனைவரையும் அமர்வதற்கு ஆசனத்தைக் காட்டினார் ஜோதிடர்…. பெரும் ஜோதிடரே இப்போது நான் உங்களை காண வந்தது எதற்கு என்றால்… என்று நெடுங்கிள்ளி வாக்கியத்தை முற்று படுத்தும் முன்…. “தங்களின் பட்டாபிஷேகம் குறித்தும், எதிர்கால ஆட்சியில் தங்களின் உடல், ஆன்ம, குடிகள் நலன் குறித்தும் அறிந்து கொள்ள”… என்று ஜோதிடர் முடித்தார்.

நெடுங்கிள்ளிக்கு வியப்பிலும் வியப்பு. அதெப்படி ஜோதிடரே! என்னை கண்டதும் இதையெல்லாம் சட்டென்று கணித்து கூறினீர்கள் என்றான். இது தானே இளவளே என்னுடைய பணி. ஈசன் அளித்திருக்கும் அபூர்வ ஆற்றல் என்றார் பெரும் தொந்தி சீத்தலை ஜோதிடர்.

மிகவும் நல்லது… ஜோதிடரே.. என்னுடைய வருகையின் நோக்கத்தை காலதாமதமின்றி செய்ய ஆரம்பிக்கலாமே என்றான், நெடுங்கிள்ளி.
இவற்றையெல்லாம் அருகில் அமர்ந்தபடி கவனித்துக் கொண்டிருந்த இளமாறனுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. இது அத்தனையும் பிதற்றல். ஜோதிடம் ஏதோ ஒரு பெரிய மீனுக்கு தூண்டில் போடுகின்றான் ஜாக்கிரதை என்றது உள்மனம்.

Advertisement

ஜோதிடர் மாளிகையின் நடுநாயகமாக இருந்த ஒரு அறையை திறந்தார். அங்கே பளிங்கு கல்லில் செதுக்கப்பட்டு, மலர்களாலும், நறுமண புகையாலும் சூழப்பட்டு, தீபஒளியில் பிரகாசித்துக் கொண்டிருந்த சிவலிங்கம் அற்புதமாக காட்சியளித்தது. ஜோதிடர் தீபாராதனை செய்தார். மலர்களால் அர்ச்சனை செய்தார். பின் சிவலிங்கத்தை தாள் பணிந்து வணங்கியவர், எழுந்து அங்கே போடப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து, அருகிலிருந்த பெட்டியைத் திறந்தார். அதிலிருந்த மரசட்டத்திலான பலகையை விரித்து வைத்தவர், நெடுங்கிள்ளியை எதிரில் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமரச் சொன்னார். கண்ணை மூடி வாய் திறவாமலே ஏதோ சில மந்திரங்களை உச்சரித்துவிட்டு, சோழ இளவளே! நன்றாக ஈசனை தியானித்துக் கொள்ளுங்கள் என்றார்.

நெடுங்கிள்ளி மனம் உருகி ஈசனை வேண்டினான். அவன் இதயம் சோழ அரியணையையும், குடிமக்களையையும் தாண்டி வேல்விழி தனக்கு சொந்தமாக வேண்டும் என்பதிலேயே நிலைத்து நின்றது. இளமாறனோ சுற்றிலும் கண்களை சுழற்றி ஏதேனும் தனக்கு உபயோகமான விடயம் கிடைக்குமா என்று நின்றிருந்தான். ஜோதிடர் கையில் வைத்திருந்த சோழியை குலுக்கி கட்டத்தின் மீது போட்டார். அவரின் முகம் மாறியது. பின் நெடுங்கிள்ளியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் கூறினார். இளவரசே!.. தங்களுக்கு சாதகமாக சூழல்கள் இல்லையே…!! உங்களை உடனிருந்தே உருக்குலைக்க ஆட்கள் கங்கணம் கட்டித் திரிவதாக கட்டம் கூறுகின்றது. மேலும் தங்களின் மனத்திற்கு இனிமையானவர்களை கூட அவர்கள் உங்களிடமிருந்து பிரித்து விடுவார்கள், என்று தூபத்தை மெல்ல தூவத் தொடங்கினார்.

மனதிற்கு இனியவர் என்ற வார்த்தையை கேட்டதும், நெடுங்கிள்ளியின் கண்ணிலும் இதயத்திலும் வேல்விழி ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். ஜோதிடரே இதற்கு பரிகாரம் என்ன? எப்படி நான் என்னுடனே இருந்து என்னை வீழ்த்த நினைப்பவரை அடையாளம் கண்டு கொள்வது என்றான்? நெடுங்கிள்ளி.

யுவராஜனே!… வரும் வழியில் ஏதேனும் அமங்களமான நிகழ்வுகளை காண நேர்ந்ததோ? நீங்கள் சுத்த எமகண்டத்தில் பிரயாணம் தொடங்கி உள்ளீர்கள் போல… இருங்கள் அதையும் பார்த்து விடுவோம் என்ற சீத்தலை தொந்தி ராஜன் தன் பூசணி வயிற்றை எக்கி சோழிகளை மீண்டும் வாரினார். பின் மீண்டும் ஜெபித்துவிட்டு கட்டங்களின் மீது வீசிவிட்டு அவற்றை எண்ணினார். அதற்குள் சோழ இளவல்….

இரும்பிடைவல்லன்

ஆம் ஜோதிடரே வரும் வழியில் என்னுடைய சோழத்து ஆபத்துதவிகள் இருவரின் கொலை செய்யப்பட்ட உடல்களை காண நேர்ந்தது… ஆனால் அவர்கள் தவறுதலாக என்னுடைய உயிர் நண்பனும் உடன் பிறவா சகோதரன் போன்றவனுமான இளமாறனால் நிகழ்ந்தது. என்றான்.

ஜோதிடர் ஒன்றும் அறியாதவராக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார் யார் அது? என்று.
இதோ இவர் தான் அது என்று இளமாறனை சுட்டிக் காட்டினான் இளவரசன்.இளமாறனை உற்று நோக்கிய ஜோதிடர்… சூட்சுமம் ஏதோ உள்ளது போல கட்டம் கூறுகின்றதே என்னும் அதே வேளையில் கழுத்திலும், உடலிலும் வெட்டுக்ககாயங்களுடன் தட்டுத்தடுமாறி உள்ளே வந்தான் சாந்தப்பன். சாந்தப்பனை கண்டு ஜோதிடர், சோழ இளவல் இருவரும் அதிர்ந்தனர் என்றால் இளமாறன் சுத்தமாக துவன்றே போனான்.

ஆம்,… இளமாறனின் வாளுக்கு கொலைக்குன்றில் காயம் பட்டு ஓடிய அதே ஆபத்துதவிகள் தலைவன்.
நெடுங்கிள்ளி அவனை நெருங்கி… சாந்தப்பா இதென்ன உடலெல்லாம் காயம்?. என்னவாயிற்று? வேல்விழி எங்கே ? என்று கேட்க சாந்தப்பன் இளமாறனை சுட்டிக்காட்டி மொத்த விவரத்தையும் சொல்லிவிட்டு மயங்கி விழுந்தான்.

நெடுங்கிள்ளியின் முகமும் உள்ளமும் இருகத் தொடங்கியது. ஜோதிடரின் வார்த்தைகள் பழம் நழுவி பாலில் விழுந்த கதையானது. தூபத்தை அள்ளி கனன்று கொண்டிருந்த நெடுங்கிள்ளியின் உள்ளத்தில் வீசி நெருப்பை பற்ற வைத்தார்.

அப்படியென்றால் இதெல்லாம் இவராலா நடந்தது? சிவனின் லீலையே லீலை. உங்கள் கேள்விக்கு பதிலை பட்டவர்த்தனமாக காட்டிவிட்டார் என்றார். இளமாறன் ஏதோ சமாதானம் கூற நெடுங்கிள்ளியை நெருங்க….

தன் கையை நீட்டி அவனை தடுத்தவன்…. இதுதான் உன் விசுவாசமோ? இதற்குத்தான் என்னை விடாது உடன் வந்தாயோ? நம்பிக்கை துரோகியே எங்கேயடா என் வேல்விழி என்று பொங்கி வார்த்தைகளை கொட்டினான். இளமாறன் தெரியாது என்று ஒற்றை சொல்லை மட்டும் உதிர்த்து கொண்டு எதற்கும் தயாராக நின்றான்.

ஜோதிடர் உடனே… என்ன ஆணவமான பதில் இது? கொலை செய்துள்ளாய்? கோமகளை கடத்தி ஒளித்து வைத்துள்ளாய்!!! ஆனால் கொஞ்சமும் உனக்கு துரோகம் செய்த உணர்வு வரவில்லையே? என்று நெடுங்கிள்ளியின் சீற்றத்தைத் தூண்டிவிட,….

யாரங்கே? இந்த துரோகியை சிறை பிடியுங்கள். பழையாறை இருட்டுச் சிறையில் இரும்பு சங்கிலிகளில் கட்டி வையுங்கள். குடிக்க தண்ணீர் கூட கொடுக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டான்.
அடுத்த கணம் சோழ ஆபத்துதவிகள், படை வீரர்கள் உள்ளிட்டோர் இளமாறனை சூழ்ந்து கொண்டனர். இடையிலிருந்த வாளை உருவ சென்ற கரங்களை கட்டுப்படுத்திக் கொண்ட இளமாறன்… இப்போதைக்கு சிறை செல்வதே நலமென்று பொறுத்தான். அதற்கு காரணம் இருந்தது. ஜோதிடர் சீத்தலை பெரும்நம்பி சூதில் தன்னை சிறைவைக்க செய்துவிட்டதாகவும், உந்துருவை சிறைக்குள் போட்டு சித்திரவதை செய்ய வாய்ப்பு கிடைத்து விட்டதென்றும் இறுமாந்தார்.

சோழ இளவலுக்கு சீத்தலை பெரும்நம்பி ஏற்பாடு செய்த அறை

உண்மையில் சீத்தலை தொந்தியார் தான் இளமாறனிடம் சிக்கிக்கொண்டார். இளமாறனுக்கு அவரை குறித்து உண்மை தெரிய வேண்டும்.அதற்கு இந்த கைதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே அமைதி காத்தான்.

நெடுங்கிள்ளிக்கு கோபம் உச்சத்தில் ஏறி உச்சாடனை செய்து கொண்டிருக்க, இளமாறனை கைது செய்வதை நியாயப்படுத்தியது. இளமாறனை சூழ்ந்து இருந்த வீரர்கள் அவனது உடைவாள், குறுங்கத்தி போன்றவற்றை பிடுங்கினர். பின் இளமாறன் கைகளை கட்டியவர்கள் அவனை பழையாறைக்கு கொண்டு சென்றனர். நெடுங்கிள்ளி சோர்ந்து போய் ஆசனத்தில் அமர ஜோதிடர் அவனுக்கு நீர் கொடுத்துவிட்டு சாமரம் வீசுபவர்களை கொண்டு அவனுக்கு காற்று வர செய்தார்.

மீண்டும் தூபமிட்ட ஜோதிடர்… இளமாறனின் கைதை கொண்டு வேல்விழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை சோழ இளவளிடம் கூறினார்… பின் அவன் ஓய்வு எடுக்க மாளிகையின் மேல் மாடத்தில் ஏற்பாடு செய்தவர்… அமைதி கொள்ளுமாறு கூறினார்.
மேல்மாடத்தில் நெடுங்கிள்ளி அமைதியற்றவனாக உலாவிக் கொண்டிருந்தான்.

இளமாறனை எப்படி என் தந்தை நம்பினார்? நானும் அல்லவா நம்பி விட்டேன்? வரும் வழியில் இனிக்க இனிக்க பேசினானே? வேல்விழியை ஒளித்து வைத்துவிட்டு நாடகமாடி இருக்கின்றான்… நன்றி கெட்டவன்… இவனிடமிருந்து வேல்விழியை மீட்க வேண்டும். பின் இவனை அணு அணுவாக கொன்று தின்ன பசி அடங்கா அரிமாவின் கூண்டில் இட்டு இவனை அது கொல்வதை ரசித்து காணவேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டான் சோழ இளவல். வரும் வழியில் பாசத்தில் திளைத்தவன் இப்போது வேல்விழியின் மோகத்தில் பாசக்கயிற்றை வீசும் அளவிற்கு எதிரியாக மாறிப் போனான்.

அதே வேளையில் அங்கு நடந்து கொண்டிருந்த அத்தனை நிகழ்வுகளையும் மாளிகையை ஒட்டி இருந்த வேப்பிலை மரத்தில் இருந்து ஒரு உருவம் பார்த்துக் கொண்டிருந்தது. ஆரவாரங்கள் சற்று அடங்கியதும் மெல்ல மரத்தில் இருந்து இறங்கிய அந்த உருவம் பழையாறை சிறையை நோக்கி நடந்தது.

மாளிகையின் உள்ளே…. சிவலிங்கம் வைத்திருந்த பூஜை அறைக்குள்…. !!?? சிவலிங்கத்தின் பின்பிருந்த ஒரு பொறியை திருகிக் கொண்டிருந்தார் சீத்தலை பெரும்நம்பி…

அருகில் இருந்த ஆதிரை நம்பி என்னும் அந்தண வேடமிட்டிருந்தவன் இப்போது முழுமையாக குடியானவன் உடையில் எதற்கோ தயாராக நின்று கொண்டிருந்தான். பொறி திருகி முடிக்க உள்ளே சுரங்கப்பாதை தென் பட்டது…. அருகில் இருந்த எண்ணை நிரம்பிய விளக்கை பற்ற வைத்துக் கொண்ட ஆதிரை நம்பி… சுரங்கத்தின் படிக்கட்டுகள் வழியே இறங்கத் தொடங்கினான்.

ஆதிரை நம்பி… என்ற சீத்தலை பெரும்நம்பி குரல் கேட்டு நிமிர்ந்தவனிடம் கூறினார்…. பனைப்பூ பேரழகனை நாளை இரவில் சந்திப்பேன் என்று கூறு… முடிந்தால் சோழ ரத்தத்தையும் நஞ்சில் நனைத்து பாண்டியன் மீது அம்பாக தொடுத்து எய்து விடுவேன் என்று கூறுவிடு… என்றார்….

அவரின் வார்த்தைகளை உள்வாங்கி கொண்ட ஆதிரை நம்பி அடுத்தடுத்த படிகளின் வழியே சென்று மறைய…. மீண்டும் பொறியை திருகலானார் சீத்தலை பெரும்நம்பி…..

தொடரும்….

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!