Ennadi Maayaavi Nee 13
மாயாவி 13 ::
உன் வெறுமைகளுக்கு
பின்னால் இருக்கும் வலிகளுக்கு
Advertisement
நான் மருந்தாக மாட்டேனா!
உந்தன் இறுக்கங்களுக்கு
பின்னால் இருக்கும் வருத்தங்களுக்கு
Advertisement
நான் வடிகாலாக மாட்டேனா !
Advertisement
என்று என்னை காத்திருக்க வைக்கிறாயே!
என்னடி மாயாவி நீ!
Advertisement
முந்தைய நாள் வந்த பெரியவர் சொல்லிவிட்டு போன செய்தியையே பெற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க, மறுநாள் மாலையே மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கியதும் பானுமதிக்கோ ஒன்றும் புரியாமல் தன் கணவருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அவரும் பரபரப்பாக வீடு வந்து சேர்ந்தார்.
“வாங்க ! வாங்க !” என்று ரங்கன் வரவேற்றதும்,
“வேலையில இருக்கும் போது தொந்தரவு பண்ணிட்டோமா ரங்கா? தப்பா எடுத்துக்காதீங்க…. சொல்லாம வேற வந்திருக்கோம்…நல்ல விஷயத்தை தள்ளி போட கூடாதுன்னு தான் உடனே கிளம்பி வந்தோம்…” என்று மாப்பிள்ளையின் தந்தை விஜயன் சொல்ல,
“தொந்தரவுலாம் இல்லைங்க… நீங்க எங்க வீட்டிற்கு வந்ததே சந்தோசம் தான்…” என்ற ரங்கனைப் பார்த்தவர்,
“பெரியப்பா உங்க விவரம் எல்லாம் சொல்லி நீங்க யோசிக்கறதையும் சொன்னாரு… அதான் எதுக்கும் ஒரு முறை நேரிலேயே பேசிக்கலாம்னு வந்துட்டோம்…
“இல்லைங்க பொண்ணு இப்ப தான் காலேஜ் முத வருஷம் படிக்கறா…” என்று தயங்கியவரைப் பார்த்து,
“இதுல என்ன இருக்குங்க… கல்யாண ஆனதும் அங்க வெளிநாட்டிலேயே படிக்கட்டும்… விருப்பம் இருந்தா அங்கேயே வேலையும் பார்க்கட்டும்… படிப்பு முக்கியம் தான் அதுக்காக நடக்கற நல்லதை தடுக்க வேணாமே…” என்று வியாபாரியாக காய்களை நகர்த்தியவர்,
“இதோ இவன் தான் என் ஒரே பையன்… பையனையும் நேர்ல பார்த்தா நீங்க முடிவெடுக்க சுலபமா இருக்கும்னு தான் அவனையும் அழைச்சுட்டு வந்தேன்…” என்று அவர் அரவிந்தை அறிமுகப்படுத்தவும்,
“வணக்கம் அங்கிள் !” என்று பளீரென புன்னகைத்தவனைப் பார்த்து ரங்கனுக்கும் பானுமதிக்கும் பிடித்து போக,
“உங்க கூட சம்மந்தம் பண்றதுல எங்களுக்கு சந்தோசம் தானுங்க… ஆனால் நாங்க இன்னும் பொண்ணுகிட்ட விஷயம் சொல்லல… வீட்ல போர் அடிக்குதுன்னு அவங்க பிரெண்ட் வீடு வரைக்கும் போயிருக்கா… அவ வந்ததும் குடும்பமா பேசிட்டு சொல்றோம்…” என்று அவர்களுக்கு மறைமுகமாக அவர்களின் விருப்பத்தை சொல்லியதை கவனித்த விஜயன்,
“பொண்ணு விருப்பமும் முக்கியம் தானே… அப்ப பேசி முடிவு பண்ணிட்டு எங்களுக்கு ஒரு நல்ல சேதி சொல்லுவீங்கன்னு நம்பறோம்… அப்ப நாங்க கிளம்பறோம்….” என்று அவர்கள் கிளம்பியதும், பானுமதி தான் ஆரம்பித்தார்.
“என்னங்க… என்ன யோசிக்கிறீங்க? நம்மையே தேடி வந்திருக்க வரன் அதுவும் நம்ம எதிர்பார்க்க முடியாத இடத்துல இருந்து வந்து இருக்கு… பையனும் பார்க்க நல்லா லட்சணமா இருக்கான்… இது எல்லாம் விட வெளிநாட்டு மாப்பிள்ளை…” என்று மகிழ்ச்சியாக சொல்லி கொண்டிருக்க,
“இல்ல பானு… அவங்க நம்ம எட்ட முடியாத உயரத்துல இருக்காங்க… நம்ம பொண்ணும் சந்தோஷமா தான் இருப்பா…அவங்களா தேடி வந்து சம்மந்தம் பேசறது சந்தோசம் தான் ஆனா பையனுக்கு முப்பது வயசு… அவருக்கு அது சரியான கல்யாண வயசு தான் இருந்தாலும் நம்ம பொண்ணுக்கு இன்னும் மூணு மாசம் போனதும் தான் பதினெட்டு ஆக போகுது… வயசு வித்தியாசம் அதிகமா இருக்குமே…” என்று தயங்கியவரைப் பார்த்து,
“இதெல்லாம் ஒரு விஷயமாங்க… உங்களுக்கும் எனக்கும் கூட தான் பத்து வயசு வித்யாசம்… நம்ம நல்லா வாழலையா…” என்று அவரின் அந்த எண்ணத்தையும் பானுமதி தவிடு பொடியாக்க,
“ம்ம்ம் நீ சொல்றதும் சரி தான்… காரும்மா கிட்ட பேசி புரிய வைச்சு அவளை சம்மதிக்க வைக்கணுமே….” என்று ரங்கன் சொன்னதும்,
“அதெல்லாம் சம்மதிப்பா… நீங்க கவலைப்படாதீங்க…” என்று பானுமதி கூறவும், இருவரும் மகளுக்காக காத்திருக்க அவளும் வந்து சேர்ந்தாள்.
“அம்மா ! என்னம்மா கேசரி எல்லாம் செஞ்சு இருக்கீங்க… வீட்டுக்கு யாரும் விருந்தாளி வந்தாங்களா? இல்ல மாறன் மாமா வந்தாரா?” என்று ஆர்வமாக வினவிய குழலியிடம்,
“ஆமா! காரும்மா விருந்தாளிக்கு தான் செஞ்சது… நீ சாப்பிடு வா…” என்று அவளுக்கு உணவை பரிமாறியவரிடம் பேசியபடியே சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு சென்றவளை தாயும் பின்தொடர்ந்தார்.
“காரும்மா! இன்னைக்கு நம்ம வீட்டுக்கு யார் வந்திருந்தாங்க தெரியுமா?” என்று கேட்க,
“யாரும்மா?” என்று யோசனையோடு மகள் கேட்டதும், விஜயன் மற்றும் அரவிந்தின் பெருமைகளை பானுமதி சொல்ல தொடங்கினார்.
“அம்மா போதும்… என் காதுல ரத்தம் வருது… அவங்களை பத்தி அவங்களே இப்படி புகழ்ந்திருக்க மாட்டாங்க… நீ தான் அவங்களுக்கு இலவசமா இப்படி ஒரு படம் ஓட்டற…” என்று கிண்டலோடு பேசியவளை பார்த்து பானுமதி முறைக்கவும்,
“சரிம்மா ! அவங்க திடீர்னு ஏன் நம்ம வீட்டுக்கு வந்தாங்க?” என்று கேட்டாள்.
“அவங்க உன்னை பார்க்க தான் வந்தாங்க…” என்றதும்,
“என்னையா?”
“ஆமா! காரும்மா… அவங்க பையன் அரவிந்தனுக்கு உன்னை பொண்ணு கேட்டு வந்திருந்தாங்க…” என்று தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்தவள்,
“என்னம்மா சொல்றீங்க?”
“ஆமாடா… அவங்க ரொம்ப பெரிய இடம் தெரியுமா… நம்ம குடும்பத்தை பத்தி விசாரிச்சுட்டு நேரிலேயே பேச வந்தாங்க… நீ மட்டும் அவங்க வீட்டுக்கு மருமகளா போனா நமக்கு எவ்வளவு கௌரவம் தெரியுமா?” என்று பெருமையாக பேசியவரை எரிச்சலாக பார்த்தவள்,
“அம்மா ! சும்மா அவங்க புராணம் பாடாதீங்க… எனக்கு என்ன வயசாச்சுன்னு இப்ப கல்யாணத்தைப் பத்தி பேசறீங்க? இதெல்லாம் தேவை இல்லாத விஷயம்… நான் நல்லா படிச்சு வேலைக்கு போகணும்.. என்னோட எண்ணத்துல இப்போதைக்கு அது மட்டும் தான் இருக்கு…” என்று முடிவோடு சொன்னவளை பார்த்தவர்,
“இல்லைடா… அவங்களே உன்னை படிக்கச் வைக்கறேன்னு சொல்லியிருக்காங்க… அதுவும் இங்க இல்லை.. வெளிநாட்டில…நீ அங்கேயே உன் விருப்பப்படி படிக்கலாம் வேலைக்கு போகலாம்…” என்றதும்,
“அப்பா ! இந்த அம்மா அம்மாவை பாருங்கப்பா என்னென்னவோ சொல்றாங்க என்னன்னு கேளுங்க…” என்று கத்தியவாறு தந்தையை நோக்கி சென்றவளிடம்,
“அம்மா எல்லாம் சரியா தான் சொல்லியிருக்காடா… எனக்கும் அம்மாவுக்கும் இந்த வரன் ரொம்ப பிடிச்சிருக்குடா.. உனக்கு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கற அளவுக்கு அவங்களுக்கு வசதியும் இருக்கு… அவங்க குடும்பத்துக்குன்னு வெளிய ஒரு பேரும் இருக்கு…”
“நீ அங்க வாழ போனா எங்களுக்கு சந்தோசம் தான்டா… உன் படிப்பு இதை எல்லாம் நினைச்சு நீ கவலைப்பட வேணாம்… இங்க படிக்க போறதை அங்க போய் செய்ய போற… அவ்வளவு தான் வித்யாசம்…” என்று மகளின் மனதை படிப்படியாக கரைக்க ஆரம்பித்தனர்..
ஒரு வாரம் சென்ற நிலையில் விஷயம் கேள்விப்பட்ட மாறன் அதிர்ந்து தன் மச்சானை சந்திக்க சென்றார்,
“மச்சான்! கேள்விப்பட்ட விஷயம் எல்லாம் உண்மையா? ஏன் மச்சான் ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி திடீர்னு முடிவெடுத்திருக்கீங்க?” என்று இறுக்கமாகவே கேட்டார்.
“ஆமா ! அவங்களா தேடி வரும் போது வேணாம்னு சொல்ல காரணம் எதுவுமில்லையே… அதான் முடிக்கலாம்னு…..” என்று தயக்கமாகவே ரங்கன் சொன்னதும்,
“ஏன் மச்சான் ? வயசு பொண்ணு வீட்ல இருந்தா இப்படி கேட்பாங்க தான்… அதுக்காக நீங்க இப்படி ஒரு முடிவை எப்படி எடுக்கலாம்…” என்று கேட்டும் ரங்கன் அமைதியாக இருக்க,
“நான் நேரிடையாவே கேட்கிறேன் என் பையனுக்கு நம்ம கருத்தமாவை கட்டிக்கொடுங்க… அது கூட இப்ப இல்ல… ஒரு ஐஞ்சு வருஷம் கழிச்சு இரண்டு பேரும் படிச்சு முடிச்ச அப்புறம் பண்ணலாம்…” என்று மாறன் சொன்னதும், ஒரு நொடி அதிர்ந்த ரங்கனின் பார்வை அடுத்த நொடி அவரை எள்ளலாக பார்த்து,
“நான் கூட ஏதோ உங்ககிட்ட சொல்லலைன்னு பேச வந்திருக்கீங்கன்னு நினைச்சா இப்படி ஒரு முடிவோடு தான் வந்து இருக்கீங்களா? உங்களுக்கு மட்டும் தான் இந்த எண்ணமா இல்ல என் தங்கச்சிக்கும் உங்க புள்ளைக்கும் அந்த எண்ணம் தானா?” என்றவரைப் பார்த்து,
“என் புள்ளைக்கு இது தெரியாது… அப்படியே கேட்டாலும் இதுல என்ன தப்பிருக்கு… அவன் தாய் மாமன் பொண்ணை தானே கட்டிக்க போறான்…” என்று மாறனும் கொஞ்சம் அழுத்தமாக கேட்க,
“உங்க கிட்ட என்ன இருக்குன்னு என் பொண்ணை கேட்கறீங்க? நீங்களே தின கூலியா தனியார் கம்பெனியில வேலை செய்யறீங்க… சொந்தமா வீடு கூட இல்லாம வாடகை வீட்ல இருக்கீங்க… அப்ப இருந்த காலத்துக்கு எங்க அப்பா எதுவும் பெருசா யோசிக்காம என் தங்கச்சியை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த மாதிரி நானும் என் பொண்ணையும் கட்டி குடுக்க முடியுமா என்ன?” என்று கேட்டவரின் குரலில் துளியும் உறவுக்கான மரியாதை இல்லை.
“நீங்க கேட்கற எல்லாமே வாஸ்தவம் தான் இல்லைன்னு சொல்லல… பொண்ணை பெத்தவரா அவ சந்தோஷத்துக்கு நீங்க கேட்கறது எல்லாமே சரி தான்… நானும் இப்பவே கல்யாணம்னு சொல்லலையே… அவங்க படிச்சு முடிச்சு வேலைக்கு போய் ஒரு நிலைக்கு வந்த அப்புறம் தானே பண்ணி வைக்கலாம் சொல்றேன்…” என்று மாறன் தன்மையாக சொன்னதும்,
“நீங்க நிலையில்லாத ஒன்னை பத்தி பேசறீங்க… உங்க பையன் படிக்கற லட்சணத்திலேயே அவன் எதிர்காலத்துல எப்படி இருப்பான்னு தெரியுது… என் தங்கச்சி உங்க கூட கஷ்டப்படறதே போதும்…”
“நீங்க ஐஞ்சு வருஷம் கழிச்சு நடக்கும்னு சொல்ற விஷயம் இப்ப வந்திருக்க வரன்ல ஏற்கனவே நிறைவா இருக்கு குறைன்னு ஒன்னு இல்லவே இல்ல…” என்ற ரங்கனை பார்த்து ,
“சரி நீங்க என் பையனுக்கு கட்டி கொடுக்க வேணாம்.. ஆனால் கருத்தம்மா குழந்தை அவளுக்கு இப்பவே ஏன் கல்யாணம் பண்ணனும்…” என்றவரை இடைமறித்து,
“எங்க வீட்டு மாப்பிள்ளையா உங்களுக்கு எப்பவும் அந்த மரியாதை கிடைக்கும்… என் பொண்ணு வாழ்க்கையை பத்தி பெத்தவங்க எங்களை விட அப்படி என்ன உங்களுக்கு பெரிய அக்கறை இருக்க போகுது…” என்றவரின் குரலில் இருந்த மரியாதையின்மையை உணர்ந்த மாறன் வருந்தியவாறு அங்கிருந்து வெளியேறினார்.
குழலிக்கோ கத்தியை கழுத்தில் வைக்காத குறையாக பெற்றவர்கள் கெஞ்ச, கோபப்பட, என்று ஏதேதோ செய்து அவளை சம்மதிக்க வைத்தனர்.
மாறன் அப்படியும் தன் முயற்சியை கைவிடாமல் குழலிக்கு அழைத்து பேச,
“எனக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லை தான் மாமா… ஆனால் அப்பா அம்மா கேட்க மாட்டேங்குறாங்க… அவங்க எனக்கு நல்லது தானே பண்ணுவாங்க அதுவுமில்லாம என் படிப்புக்கு எந்த பாதிப்பும் வராதுன்னும் போது எனக்கு வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை மாமா…” என்றவளின் வயதின் அறியாமையை நினைத்து கலங்கினார்.
