Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Greakka Manimagudam

கிரேக்க மணிமகுடம் ( வரலாற்றுத் தொடர்) அத்தியாயம்-10

கிரேக்க மணிமகுடம்

(வரலாற்று நெடும்தொடர்)

10. சவ்ஜித்தாவின் சாணக்கியத்தனம்…

“வான்மகள் மேனி மூடிய நீலப் பட்டாடையில், வெண்மையும், கருமையுமாக, மேகங்கள் பொன்னெளில் வடிவங்கள் சூடியிருந்த மாலை நேரம்”.



Advertisement

“கடலரசி,… சூரிய தேவனின் சுடரொளி மங்கும் நேரத்தில் வர்ணக் கலவையாய் காட்சித் தந்தாள்”.

“நீலக்கடலில் சிகப்பும், மஞ்சளும் கொட்டி, காரிருள் சூழும் கருமையில் கோடுகளிட்டு, நிலவின் வெண்மையை சிறிது பூசிவிட்டதாலும், கரை ஒட்டி நின்ற மரக்கலங்களும், கரையை ஒட்டி எழும்பியிருந்த கட்டிடங்களும் சேர்ந்து, முத்துத்தீவின் கடல்வெளியெங்கும், ஆயிரம் ஓவியர்கள்… ஒருங்கே வரைந்த ஓவியம் போல காட்சித்தந்தன”.

“தகிப்பின் குணம் மாறி, மென்மையின் மனதிற்கு வரும் காதலன்” போல, பகலின் வெப்பம் குறைந்து நிலவின் குளுமை பூக்கத் தொடங்கிய நேரம்.

Advertisement

சவ்ஜிதா… குடியிருப்புகள் இருந்த பகுதி நோக்கி நடந்தவள் சட்டென்று மனம் மாறி மீண்டும் விடுதி பகுதி நோக்கி நடக்கலானாள். அவளின் எண்ணங்களும், மூளையும் மளமளவென திட்டங்கள் தீட்டின. அக்கோட்டஸ் தன்னுடைய வார்த்தைகளை நம்பியதில் அவளுக்கு அவ்வளவு திருப்தி ஏற்படவில்லை. “தன் நிழலையே நம்பாதவன், தன்னை நம்பிவிட்டான்” என்றால் அது நிச்சயமாக பொய். “அவன் நிச்சயம் தன்னை கண்காணிக்க கூடும்” என்று நினைத்த மறுகணமே, அவள் நடக்கும் பாதையில் அவள் முன்னே ஒரு நிழல் விழுவதை கவனித்தாள்.

Advertisement

விடுதியின் வாசல்

உடனே அவளின் மூளை சுறுசுறுப்படைந்தது. சட்டென்று தன்னுடைய பாதையை மாற்றியவள், நேரே விடுதியை நோக்கி நடக்கலானாள். அந்த உருவமும் அவளை பின் தொடர்ந்து வந்தது. விடுதியை அடைந்தவள், அங்கிருந்த ஒரு மாலுமி கூட்டத்துடன் இணைந்து உட்கார்ந்து கொண்டு வருபவனை எதிர் நோக்கலானாள்.

விடுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. மது அருந்திக் கொண்டும், பரமபதம் விளையாடிக் கொண்டும், அழகிகளிடம் பேரம் பேசிக்கொண்டும் இருந்தவர்களை கடந்து கிரேக்க போருடையில் ஒருவன் உள்ளே நுழைந்தான். விசாரணை நடந்து கொண்டிருந்த போது, அக்கோட்டஸின் பின்பு சற்று தூரத்தில் நின்றவனென்று உடனே புரிந்துகொண்ட சவ்ஜித்தா… தன்னுடைய புத்திசாலித்தனத்தை உபயோகிக்க தீர்மானித்தாள்.

வந்த கிரேக்க போர்வீரன் நேராக சென்று ஒரு குவளை மது வாங்கினான். பின் சில துண்டு மீன்களை வாங்கிக்கொண்டு, விற்பவனிடம் பத்து பொற்காசுகளை கொடுத்தான். பின் ஒரு மேசையில் சென்று அவற்றை வைத்தவன் சுற்றிலும் கண்களை ஓடவிட்டான். சுற்றிலும் சுழன்ற அவன் கண்கள் சவ்ஜிதா இருந்த இடத்தை அடைந்ததும், குத்தி நின்றது. சவ்ஜித்தாவும் அவனையே பார்த்தாள். அவள் தன்னை கவனிக்கின்றாள் என்பதை உணர்ந்த அந்த வீரன் சட்டென்று பார்வையை மாற்றிக்கொண்டு குவளையில் இருந்த மதுவை பருகத் தொடங்குவது போல பாசாங்கு செய்தான்.

Advertisement

இதை எதிர்பார்த்த சவ்ஜித்தா ஒன்றும் தெரியாதவள் போல மெல்ல எழுந்து கைதட்டி விடுதி பணியாளனை அழைத்தாள். அவனிடம் ஏதோ கூறியவள் அருகில் இருந்த மேடையை நோக்கி அன்னம் போல, உடலை வளைத்து வளைத்து நடந்து சென்றாள்.

பாலிக் குள்ளர்கள் இருவர் கையில் வைத்திருந்த வாத்தியங்களை அடிக்க, அராபியன் ஒருவன் யாழ் ஒன்றை இசைக்கத் தொடங்கினான். மேடை ஏறிய சவ்ஜித்தா இசைக்கேற்ப இடுப்பை நெளித்து, உடலை வில்லென்று வளைத்து, ஆடத் துவங்கினாள். விடுதியில் இருந்த ஓட்டுமொத்த ஆண்களும், பெண்களும் அந்த மேடையை சுற்றி நின்றுக்கொண்டு குரல் எழுப்பினர். உற்சாகம் கரை புரண்டோடியது.

முத்துத்தீவின் படம்

சவ்ஜித்தா ஆட ஆட பலமாக கைதட்டல் எழுந்தது. சிலர் பொற்காசுகளை அவள் மீது வீசினார். சிலர் போதையில் அவளுடன் இணைந்து ஆட மேடையேறினர். இத்தனையும் நடந்தாலும் கிரேக்க வீரன் மட்டும் அசையாமல் அங்கேயே உட்காந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் அவளை, விட்டு அகலாமல் கவனித்ததே ஒழிய அவள் நடனத்தில் லயிக்கவில்லை. இதை சவ்ஜித்தாவும் கணிக்க தவறவில்லை. ஆட்டம் உச்சத்தை எட்டத் தொடங்கியது, சவ்ஜித்தாவின் ஆட்ட வேகம் கூடியது. சுற்றி நின்றவர்கள் குரலும் கூடியது, சிலர் சவ்ஜித்தா மீது பொற்காசுகளை வீசி எறிந்தனர். சிலர் கழுத்தில் அணிந்திருந்த மாணிக்க மாலைகளை கழற்றி வீசினார்.ஆனால் இசையும்,ஆட்டம் நிற்கும் நொடியில் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

போருடையில் மது அருந்திக் கொண்டிருந்தவன் நொடிப்பொழுதில் தன் உடைவாளை உருவிக்கொண்டு சவ்ஜித்தாவை நோக்கிப் பாய, அவனை நோக்கி ஐந்து பேர் பாய்ந்தனர். ஏதோ செய்ய முயன்ற போர்வீரனை, சட்டென்று ஐவர் சூழ்ந்து கொண்டு மார்பில் வாளை வைத்து மடக்கினர். கூட்டம் பயத்தில் கலைந்து விலகி நிற்க சாவகாசமாக சவ்ஜித்தா மேடையில் இருந்து இறங்கி வந்தாள்.

அந்த போர்வீரன் கையிலிருந்து வாளை பிடுங்கியவள், அவன் கழுத்தில் வாளை வைத்துக்கொள்ள.. மற்ற ஐவரும், அந்த போர்வீரன் கரங்களை பின்புறமாக கட்டினர். அவன் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தியபடி, சவ்ஜித்தாவும், மற்ற ஐவரும் விடுதியை விட்டு வெளியேறி இருட்டில் மறைந்தனர். இருட்டில் மறைந்தவர்கள், தீவின் மறுபகுதியில் இருந்த சிறு படகு குழாமுக்கு, அந்த போர்வீரனுடன் விரைந்தனர். அந்த போர்வீரன் சிக்கிக்கொண்டது பரபரப்பாக விடுதியில் பேசப்பட்டது, “சிலர் நமக்கேன் வம்பு” என்று மீண்டும் களியாடங்களில் திளைக்க தொடங்கினர். சிலர் இது குறித்து நீண்ட விவாதம் செய்தனர். சிலர் இதுகுறித்து உடனே தீவின் நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றனர். ஒருவன் மட்டும் யோசித்துவிட்டு சட்டென்று விடுதியில் இருந்து கரைக்கு ஓடினான்.

அதே வேளையில் கடற்கரையில் இருந்த துறைமுகத்தில் இருந்து வெளியேற, அக்கோட்டஸ் தீர்மானித்து படகில் ஏறினான். அதே வேளையில் கடற்கரை விடுதியில் இருந்து ஓடியவனும், பவழத்தீவில் இருந்து ஒருவனும், அக்கோட்டஸிடம் விரைந்து வந்தனர். பவழத்தீவிலிருந்து வந்தவன் “கோட்டைத் தலைவன்”. அவன் கண்களில் அதிர்ச்சியும் பயமும் தொற்றியிருக்க, அக்கோட்டஸிடம் நெருங்கினான்…. அவன்!!!.

“கிரேக்கத்து பெரும் தலைவருக்கு வணக்கம். ஆபத்து…!! அரண்மனையில் இளவரசரை காணவில்லை. முழுமையாக தேடிவிட்டோம்!!!. துறைமுகத்தில் சிலர் இளவரசர் முத்துதீவிற்கு, படகில் வந்ததாக கூறினார் என்றான்.

அக்கோட்டஸிற்கு மொத்த ஆற்றலும் தீர்ந்து போனது. என்ன சொல்கிறாய் நீ? உங்களிடம் எத்தனை முறை இளவரசரை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்தேன்? நீங்கள் எல்லாம் எதற்காக இருக்கின்றீர்கள்? என்றான் கோபம் தலைக்கு ஏற…

 
தலைவரே, இளவரசர் இரவெல்லாம் அரண்மனை உப்பரிகையில் இருக்கும் அறையில்தான் இருந்தார். காலையில் வெகு நேரமாக அவர் பஞ்சனையில் இருந்து எழவில்லை. உச்சிவேளை கடந்த பிறகே எழுந்து உணவருந்தினார் என்றான் கோட்டை தலைவன்.

அதற்குள் விடுதியில் இருந்து வந்தவன் அக்கோட்டசை நெருங்கி இருந்தான். ஓடிவந்தவன், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். அக்கோட்டஸிற்கு ஏதோ விபரீதம் என்பது புரிந்தது. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் கூறலானான்…

தலைவரே! விடுதியில் கலவரம்!!!???… ஒரு பெண்ணும், ஐந்து ஆண்களும் உங்கள் படை வீரன் ஒருவனை சிறைபிடித்து இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண்தான் உங்களிடம் மாலையில் விசாரணையின் போது உரையாடியவள். அவளுடன் ஐந்து பேர் இருந்தனர். அவளை நாங்கள் இங்கே சில நாட்களாக தான் பார்க்கின்றோம், என்றான் ஓடிவந்தவன்.

அடேய்..!!.. இதை அவளோடு நான் உரையாடிக்கொண்டிருந்த போது என் கூறவில்லை? அப்போதே சொல்லி இருக்க வேண்டாமா? எங்கே சென்றனர் அவர்கள் என்று கோபமாக கேட்ட அக்கோட்டஸிற்கு அவன் நடுங்கியபடி பதிலளித்தான்.
“மன்னிக்கவேண்டும் தலைவரே! உங்களிடம் எப்படி எதிர்த்து பேசுவது? உங்களின் வினாக்களை அவள்தான் சுலமமாக எதிர்கொண்டாளே”? என்றான்.

அக்கோட்டஸிற்கு தான் ஏமாற்றப்பட்ட விஷயம் புரிந்தது. யாரங்கே? உடனே என்னோடு வாருங்கள் என்று அழைத்தான்? பத்து போர்வீரர்கள் புடை சூழ கோட்டை தலைவனும் அக்கோட்டசுடன் விடுதி நோக்கி ஓடினர். அங்கே சென்று விசாரணை செய்த போது, போர்வீரனை கடத்தியவர்கள் சிறுபடகு துறை சென்றது தெரிய வந்தது. அவர்கள் சிறு படகு துறையை அடையும் நேரம் ஒரு பாய்மரம் கொண்ட படகு கடலின் ஆழத்திற்கு பயணம் செய்வது தெரிந்தது.

உடனே படகை கொண்டு வாருங்கள்!!!… என்று அக்கோட்டஸ் கூறினான். ஆனால், கரையில் இருந்த படகுகள் அங்கே இல்லை. துறைமுகத்தின் காவலர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். படகுகள் இழுத்து செல்லப்பட்டு கடலின் ஆழத்தில், அவற்றின் கயிறுகள் வெட்டி விடப்பட்டிருந்தன. அக்கோட்டஸிற்கு ஆத்திரம் கண்களை மூடியது. அக்கோட்டஸ் துடுப்பு போடும் குட்டியான, “ஒருவர் மட்டும் செல்லும் படகு ஒன்றை கண்டான்”. அதில் ஏறியவன், கோட்டை தலைவனையும், பிற வீரர்களையும் துறைமுகப் பகுதியில் இருக்கும் படகுகள் மூலம், கடலின் ஆழப்பகுதிக்கு வருமாறு உத்தரவிட்டுவிட்டு,  துடுப்பை வலித்தவாறு படகை ஆழம் நோக்கி செலுத்தினான்.  

அதற்குள் போர்வீரனை ஏற்றி சென்ற பாய்மர படகு, நாவாய் ஓன்றை நெருங்கி இருந்தது. நூலேணி மூலம் போர்வீரனும், மற்ற ஐவரும் மரக்கலனின் மீது  ஏறினர். சவ்ஜித்தா இறுதியாக ஏறத் துவங்கினாள். அதற்குள் மரக்கலனை நெருங்கிக்கொண்டிருந்த அக்கோட்டஸ், நச்சு சக்கரம் ஒன்றை எடுத்து சவ்ஜித்தா மீது எறிந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் படகிலிருந்து இரண்டு குறும் வாள்கள் அக்கோட்டஸ் மீது வீசப்பட்டன. அக்கோட்டஸ் வலது தோளில் ஒன்றும், இடது புருவத்தின் மீதும் குத்திய கத்திகளால் நிலைகுலைந்து அந்த மாமிசமலை கடலுக்குள் விழுந்தது.

சவ்ஜித்தா மரக்கலனின் நின்றுகொண்டு இளவரசனிடம் பேசும் படம்

இதையெல்லாம் மரக்கலனிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த போர்வீரனிடம் சவ்ஜித்தா கூறினாள்… “ இளவரசர் டையோனிசிற்கு, மாமாவை கடலில் மூழ்கடித்துவிட்ட அதிர்ச்சியோ” என்று…..!!?

ஆகட்டும் மரக்கலன் புறப்படட்டும். “ரினிவாவை விடிவதற்குள் அடையவேண்டும்” என்றாள் சவ்ஜித்தா… ஆகட்டும் சவ்ஜித்தா என்ற பாலிக் குள்ளர்கள் இருவரும் விறு விருவென்று உத்தரவுகள் பிறப்பிக்க, மரக்கலனின் பாய்கள் விரிந்து கடலில் ரினிவாவை நோக்கி பயணம் செய்யத் தொடங்கியது

அதே வேளையில்…. மாலித்தீவை கடந்த “ஸ்கேட்ஸ்” மரக்கலம், “அராபிய கடலின் அசுர சீற்றத்தை தன் எடையால் அடக்கி, பாதி விரிந்த பாய்மர சிறகுகளால்” அனாயாசமாக சமாளித்தபடி ரினிவாவை நோக்கிப் பயணித்தது. மரக்கலத்தின் முகப்பில் இருந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த “பச்சைக்கண் பேரழகி ஆலிமா” எண்ணமெல்லாம் “களவரம்” கொண்டுவந்த தகவலில் இருந்தது.

அக்கோட்டஸும், இலவரசனும் கடல் கடந்த ராஜ்ஜிய விஸ்தரிப்புக்கு திட்டமிட்டு உள்ளனர். மிளகும், நெல்லும், முத்தும் கொள்ளையடித்து, அவற்றை கொண்டு சென்று மேற்கு தேசங்களிலும், பிற பகுதியிலும் விற்க பேராசை கொண்டுள்ளனர். அதற்கு முன்னேற்பாடே “மீர்காலீஸ்”… இவர்களின் கூட்டாளியை கண்டுபிடிக்க வேண்டும். அவன் தான் இவர்களுக்கு ஊக்கம் தருபவன். எக்காரணம் கொண்டும் அக்கோட்டஸ் வெற்றிபெற விடக்கூடாது.

ஆலிமா

இவ்வாறு சிந்தனை வயப்பட்டு நின்று கொண்டிருந்த ஆலிமாவின் கண்களில் அந்த மரக்கலம் தட்டுப்பட்டது. வில்கொடியை ஏந்தி கிழக்கு நோக்கி சென்றுக்கொண்டிருந்த அந்த மரக்கலத்தின் உள்ளே வணிகர்கள் நிறைந்து இருப்பதாக ஆலிமாவின் உள்ளம் உரைத்தது. மின்னலென ஏதோ அவள் மூளையில் வெளிச்சம் பாய்ச்ச…

சகோதரா “பாஹ்லாஸ்” என்று உரக்க கூவினாள். சுக்கான் பிடித்துக்கொண்டிருந்த மாலுமியிடம் பேசிக்கொண்டிருந்த பாஹலாஸுக்கு ஆலிமாவின் குரல் கேட்டது. திருப்பிப் பார்த்தவனை சைகை மூலம் வரச் சொன்னாள் ஆலிமா.

அடுத்த நொடியே விறுவிறுவென ஆலிமாவை நோக்கி நடந்த பாஹ்லாஸ் ஆலிமாவை நெருங்கினான்.

என்ன ஆலிமா? ஏன் இந்த பதட்டம்? என்றவனை கையமர்த்திவிட்டு பக்கவாட்டில் பயணித்துக் கொண்டிருந்த வில்கொடி ஏந்திய மரக்கலனை காட்டினாள். பாஹலாஸுக்கு புரிந்தது. அடுத்த நொடி “ஸ்கேட்” அறைவட்டமடித்து திரும்பி வில்கொடி தாங்கிய மரக்கலனை நெருங்கியது.

அந்த மரக்கலனில் இருந்தவர்கள் அனைவரும் பீதியில் உறைந்தனர். “ஒருவனை தவிர்த்து”. சீன வணிகன் போல வேடமிட்டு இருந்தவன், சட்டென்று புரிந்து கொண்டான். “வருவது ஆபத்து மட்டுமல்ல, நம்மிடம் இருக்கும் ரகசியத்தை திருட வரும் பருந்து” என்று.

மரக்கலனின் தலைவன் வெள்ளைக் கொடியை ஏற்றி சமாதானத்தை வெளிப்படுத்தினான் என்றாலும், “ஸ்கேட்டின்” நெருங்குதல் குறையவில்லை. அதே வேளையில் “யாரும் தன்னை கவனிக்கவில்லை” என்று தீர்மானித்துக் கொண்டு, மரக்கலனின் பக்கவாட்டில் ஒரு நூலேணியை, கடலை நோக்கி வீசிய  சீன வணிகன் உருவத்தில் இருந்தவன், அதை பிடித்துக்கொண்டு இறங்கத் தொடங்கினான்.

அவன் இறங்குவதை ஸ்கேட்டின் பாய்மர கண்காணிப்பு மாடத்தில் இருந்து ஆலிமா பார்த்துவிட்டாள். ஸ்கேட்டும், வில்கொடியேந்திய மரக்கலனும் நெருங்கி நிற்க, கடலில் குதித்தவனை ஐந்து படகுகளில் வந்தவர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.

ஆலிமா புன்னகைத்தாள்… “ரகசியம்” இப்போது அவள் முன், பாஹ்லாசின் கத்தி முனையில் நின்றுக் கொண்டிருந்தது…..!!!???

தொடரும்….

Bharathipriyan

I am an experienced story writer, script maker, poet and trainer for life skills.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!