Skip to content
Post Views: 714
அத்தியாயம்- 23
கிரகம் : கயா
இடம் : வெலாரிஸ் கோட்டை
Advertisement
ப்ரொமேத்தியஸ் அந்தக் கோட்டையில் இருந்த தோட்டத்தில் தனித்து அமர்ந்திருந்தான். ஆனால், அவனது முக பாவனைகளை வைத்துப் பார்த்தால், அவன் அதற்காக வருத்தப்படுவது போலத் தெரியவில்லை. மாறாக அவன் கண்கள், அவன் ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பதைக் காட்டியது.
எவ்வளவு நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தானோ தெரியவில்லை. திடீரென்று அவன் தோள் மீது ஒரு கை படவே டக்கென திரும்பிப் பார்த்தான். அங்கு அவனை விட மூத்த பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவளைக் கண்டவுடன் ப்ரொமேத்தியஸ் புன்னகைக்க, அந்தப் பெண்ணின் முகத்தில் அனைத்து உணர்ச்சிகளும் கலந்து தென்பட்டது.
Advertisement

Advertisement
ப்ரொமேத்தியஸ், “உனக்காக எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது மினர்வா ?” என்று கேட்டான்.
அதற்கு மினர்வா, “உனக்கென்ன உனது தந்தையும் அண்ணனும் உன்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் ? ஆனால், நான் என்னுடைய தமையனிடம் இருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும்னு ஆயிடுது. அதோட விட்டதா தொல்லை, அடுத்து பேரரசருக்கும் தெரியக் கூடாது” என்றவள்,
“சரி அதை விடு, நீ கேட்ட உதவியை இந்த ஒரு தடவை மட்டும் தான் பண்ணுவேன். தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து உனக்கு அப்படி என்ன புத்தகம் தான் வேண்டும் ?” என்று கேட்டாள்.
Advertisement
ப்ரொமேத்தியஸ், “பிரம்ம கிரந்தம்” என்றான். மினர்வா அதிர்ச்சி அடைந்ததை அவள் முகமே காட்டியது.
“அது எதற்கு உனக்கு ? உனக்கு வேண்டியது ஏழு சிற்றரசர்கள் வரலாறு தானே ? அதற்கு முதலாம் பொசய்டன் எழுதிய The Ancient Seven புத்தகம் போதாதா ?” என்று கேட்டாள் மினர்வா.

ப்ரொமேத்தியஸ், “ஆனால், அந்தப் புத்தகங்கள் எதிலும் டைட்டனைப் பற்றி இருக்காதே” என்று கூற, மினர்வாவின் கண்கள் கோபத்தைக் காட்டின.
அதைக் கண்ட ப்ரொமேத்தியஸ், “நீ மட்டும் தான் என்னை டைட்டனாக பார்க்காமல் ப்ரொமேத்தியஸாக பார்க்கும் ஒரே ஆள். இப்போ நீயுமா ?” என்று கேட்க,
“மேத்தியு ! உன்னுடைய ஆர்வம் எனக்குப் புரிகின்றது. ஆனால், என்னால் அதைச் செய்ய முடியாது. உன்னை யாரும் நம்பவில்லை என்று நினைக்காதே. உனக்காக நாங்கள் அனைவரும் இருக்கோம்” என்று மினர்வா கூற,
அப்போதைக்கு அவளது வாயிலிருந்து வந்த மேத்தியு என்ற வார்த்தையைக் கேட்டதும், “சரி” என்று ஒத்துக் கொண்டான் ப்ரொமேத்தியஸ்.
திடீரென்று காட்சி மாறியது. சீரஸூம் மினர்வாவும் தங்கள் உடலை விட்டு வெளியேறி தங்கள் குழந்தையைக் காப்பாற்ற வந்தனர்.
மினர்வா ப்ரொமேத்தியஸைப் பார்க்கும் போது, அவள் பார்த்த பார்வை அவன் மனதில் ஆழப் பதிந்தது. அந்தக் கண்கள், “உன் தோழியின் குழந்தையை நீ இப்படி தான் கொல்ல முயற்சி செய்வாயா ?” என்று கேட்பது போல இருக்க, ப்ரொமேத்தியஸ் படாரென எழுந்தான்.
அவனுக்கு அருகில் Torc – கும், பிரம்ம கிரந்தமும் இருந்தன.
கடந்த சில நாட்களாக அவனது நேரத்தில் பெரிய பங்கை பிரம்ம கிரந்தம் ஆக்கிரமித்திருந்தது. அதன் விளைவால் அவன் மனதில் அடி ஆழத்தில் புதைத்து வைத்திருந்த நினைவுகள் அடிக்கடி எழுந்து அவனைத் துன்புறுத்தின. இந்த நிகழ்வுகள் எல்லாம் பழக்கப் பட்டது போல ப்ரொமேத்தியஸ் அதனைக் கண்டு கொள்ளாது, தனது போர்த் திட்டங்களை வகுக்கத் தொடங்கினான்.
******
இடம்: இன்டர்ஸ்டெல்லர்
நந்தினியும், ஆரியனும், ஆதித்யனும் அந்த பார்ச்மென்டை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர்.
“எனக்கென்னமோ இந்த பார்ச்மென்ட்ல முழு க்ளூவும் இருக்குற மாதிரி தெரியல. ஒருவேளை இதுல ஏதாச்சும் க்ளூவ மறைச்சு வச்சிருப்பாங்களோ ? ஆங்… இப்பதான் ஞாபகம் வருது. இது மாதிரி பழைய பார்ச்மென்ட்ட Heat treatment பண்ணா ஏதாச்சும் க்ளூ கிடைக்கலாம்” என்றான் ஆரியன்.
ஆதி அவனை முறைத்துப் பார்க்க, நந்தினி, “இந்த ஒரு லைன் என்னைய ரொம்ப குழப்புது. We are the friends who don’t argue. இதுல தான் ஏதோ பெரிய க்ளூ இருக்கு” என்றாள்.
ஆதி, “சரி, ஆறாவது லைன்ல Sum-னு ஒரு வார்த்தை இருக்கே, அதுக்கு என்ன அர்த்தமா இருக்கும் ?“ என்று கேட்டான்.
ஆரியன், “Sum-னா கணக்கு, பணம், Add பண்றது, இப்படி ஏதாச்சும் ஒரு அர்த்தம் தான் இருக்கும். அப்படின்னா எப்படிப் பார்த்தாலும், இது ஒரு நம்பரா தான் இருக்கும்” என்றான்.
“இருக்கலாம்” என்று கூறிய நந்தினி, திடீரென்று, “சண்டையே போடாமல் எப்பவுமே அமைதியாய் இருக்குறது, அதாவது பார்ச்மென்ட்ல இருக்குற மாதிரி பாத்தோம்னா argue பண்ணாம இருக்குறதுனு சொல்லலாம். இத வச்சு தேடுனா, நமக்கு தேவையான வார்த்தை Amicable தான்” என்றாள் குதூகலத்துடன்.
“அதுக்கு என்ன ?” என்பது போல ஆரியன் நந்தினியைப் பார்க்க, “அது தான் இந்த விடுகதைக்குப் பதில்” என்றாள் நந்தினி.
ஆதி, “ Amicable… Amicable…” என்று கூறிப் பார்த்தவன், “எனக்கு அப்படி ஒன்னும் தோனலயே” என்றான்.
நந்தினி, மற்ற இருவரிடமும், “Maths-ல நிறைய இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் இருக்கு. ஆனா, நாம அதை எல்லாத்தையும் பாக்குறது இல்ல. இப்ப இந்த விடுகதையை பார்த்தோம்னா நான் முன்னாடி சொன்ன மாதிரி Friends who don’t argue அப்படின்றத Amicable friends–னும் சொல்லலாம். அதே மாதிரி Amicable numbers–னா, அது ரெண்டு நம்பர்ஸ குறிக்கும். அந்த ரெண்டு நம்பர்ஸும் எப்படி இருக்கணும்னா, ஒரு நம்பரோட divisors –அ add பண்ணா, இன்னொரு நம்பர் கிடைக்கணும். அப்படி இருக்கிற நம்பர்ஸ் தான் Amicable numbers” என்றாள்.
ஆதி, “ஓ ! இப்ப புரியுது. அதனால தான் பார்ச்மென்ட்ல, He can be made from me, I can be made from him –னு இருக்கா ?” என்று வியப்புடன் கூறினான்.
ஆரியன், “அது ஓகே ! ஆனா Just need a sum and proper way அப்படின்னா ?” என்று கேட்டான்.
நந்தினி, “நீ சொன்ன மாதிரி Sum–னா இந்த இடத்துல, add பண்றது தான். இந்த இடத்துல Proper அப்படின்ற வார்த்தை Proper divisors–அ குறிக்குது. உதாரணத்துக்கு ஏதாச்சும் ஒரு நம்பர் சொல்லு” என்று கேட்டாள்.
ஆரியன், “பத்து” என்று கூற, பத்துக்கு divisors –னு பார்த்தா, 1,2,5,10. ஆனா Proper divisors–னா, எந்த நம்பர எடுக்குறோமோ அதே நம்பர் divisors –ஆ இருக்கக்கூடாது. இன்னும் தெளிவா சொல்லனும்னா 220–யும் 284–வும் Amicable numbers. 220 நம்பரோட Proper divisors 1,2,4,5,10,11,20,22,44,55, 110. அதாவது 220–அ நம்ப divisor –ஆ எடுக்கக் கூடாது. இதே 284–க்கு பார்த்தா, 1,2,4,71,142. இப்ப 220–யோட Proper divisor–அ add பண்ணா (1+2+4+5+10+11+20+22+44+55+110= 284), 284 வரும். அதே மாதிரி 284 –வோட Proper divisors–அ add பண்ணா (1+2+4+71+142= 220) 220 வரும். இத தான் Amicable numbers -னு சொல்லுவோம்” என்று விளக்கமாகக் கூறினாள்.
வழக்கம் போல ஆரியன், “நமக்கு இதெல்லாம் செட் ஆகாது” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
ஆதி, “அப்ப Poorest friends–னா ?” என்று கேட்டான்.
நந்தினி, “Amicable நம்பர்ஸ்லயே நிறைய Pairs இருக்கு. (1184 ,1120) (2620, 2974 ) இப்படி நிறைய இருக்கு. அதுல இருக்கிறதுலேயே கம்மினா அது, (220, 284) இதுதான். அப்படின்னா இந்த விடுகதைக்கான பதில் 220284” என்றாள் நந்தினி.

அவள் சொன்னதைக் கேட்டதும், ஆரியன் அந்த எண்ணை Morse Code–இல் பார்ச்மென்டில் பதித்தான். சிறிது நேரத்தில் எழுத்துக்கள் மறைந்து எண்கள் தோன்றின. ஆதி அதை அந்த வாகனத்திலிருந்த Database –இல் கொடுத்தான்.

சிறிது நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ‘மெராடஸ்’ என்ற பெயர் மிளிர்ந்தது. அந்தக் கிரகத்திற்கு ஆதி அந்த விண்கலத்தைத் திருப்பி விட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

அவன் வரும்போது கையோடு ஒரு ட்ரோனையும் கொண்டு வரவே, ஆரியனும் நந்தினியும் அவனைப் புரியாமல் பார்த்தனர்.
ஆதி, “போன தடவை மாதிரி, மறுபடியும் space ship–அ தேடி அலைய முடியாது. அதான் சும்மா என்னோட வாட்சுல அந்த ட்ரோனோட டிராக்கிங் டிவைச பொருத்த போறேன். அதை வச்சு எந்த இடத்தில space ship இருந்தாலும் ஈஸியா கண்டுபிடிக்கலாம்” என்றான். அதற்கு இனி தேவை இருக்காது என்பதை அறியாமல். ஆதியை மெச்சுதலாக பார்த்தாள் நந்தினி.
பிறகு, அவர்களுடைய பேச்சு, அடுத்த கிரகத்தில் என்ன பிரச்சனை இருக்குமோ என்பது பற்றித் திரும்பியது.
ஆரியன், “இந்த தடவை நாம யாரோட லெவலுக்கு போவோம்னு ஏதாச்சும் ஐடியா இருக்கா ?” என்று கேட்டான்.
நந்தினி, “இல்ல அவங்களுக்குள்ள யாராச்சும் நெருங்கின நண்பர்களா இருப்பாங்கன்னு தெரிஞ்சா சொல்லலாம். ஆனா பொசய்டன் அதை நமக்குக் காட்டவில்லையே” என்று கூறினாள்.
ஆதி, “இன்னும் நம்ம அஞ்சு பேருடைய லெவல்ஸ தாண்டணும். அவங்க வைக்கிற ஒவ்வொரு கட்டத்துலயும் நாம ஜெயிச்சே ஆகணும்” என்றான். நந்தினிக்கு அப்போது தான் மற்றொரு விஷயம் தோன்றியது.
இதுவரைக்கும் எப்படி இதை யோசிக்காமல் விட்டோம் என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு, “நான் இப்ப சொல்லப் போறத கேட்டு ரெண்டு பேரும் ஷாக் ஆகாதீங்க. இப்ப பார்ச்மென்ட்லாம் கண்டுபிடிக்கிறதுக்கு நாம அட்லீஸ்ட் ஒரு சிற்றரசர்களையாவது இல்லனா அவங்க வக்கிற லெவலையாச்சும் ஜெயிக்கணும். அப்புறம் எப்படி ப்ரொமேத்தியஸூக்கு முதல் பார்ச்மென்ட் கிடைச்சிருக்கும் ? அப்படியே கிடைச்சு இருந்தாலும், அவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச பார்ச்மென்ட்ட ஏன் பொசய்டனை பத்தி நல்லா தெரிஞ்சும் அவர்ட்ட கொடுக்கணும் ?” என்று கேட்டாள் நந்தினி.
அவள் கேள்வியிலிருந்த உண்மை புரிய, “அப்படினா… அப்படினா…” என்று மற்ற இருவரும் தடுமாற,
நந்தினி, “ஒன்னு, இது ப்ரொமேத்தியஸ் என்னைக் கண்டுபிடிக்கிறதுக்கு பொசய்டனை உபயோகப்படுத்திப் போட்ட வலையா இருக்கணும், இல்லன்னா ப்ரொமேத்தியஸால அடுத்தடுத்த கட்டத்துக்குப் போக முடியாம இருந்திருக்கணும். ஒருவேளை ப்ரொமேத்தியஸ் டைட்டனோட வாரிசாக இருந்தா, அவனால அந்த சிற்றரசர்கள் போட்ட பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இருக்க முடியாது. எப்படி இருந்தாலும் பொசய்டன்ட இந்த பார்ச்மென்ட்ட கொடுக்குறதுல ப்ரொமேத்தியஸுக்கு லாபம் தான்” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டுத் திகைத்த இருவரில், முதலில் தெளிந்த ஆதி, “அப்படின்னா, ப்ரொமேத்தியஸ் நம்ம கிட்டயிருந்து அந்த கல்ல எடுக்குறதுக்கு ஏதோ ஒரு திட்டம் போட்ருக்கணும்” என்றான்.
அவன் கூறியதைக் கேட்ட நந்தினி, தனது யோசனையில் ஆழ்ந்தாள். அவள் அமைதியானதும் அவளைத் தொந்தரவு செய்யாமல் தத்தமது வேலைகளில் மூழ்கினர் ஆரியனும், ஆதித்யனும்.
சிறிது நேரம் கழித்து அவர்களது கவனத்தைத் திருப்பியது, அந்த விண்கலத்தின் எச்சரிக்கை ஒலி. அவர்கள் மூவரும் அதிர்ந்து control room–க்குச் செல்ல, அங்கு இருந்த ஹோலோகிராம் திரையில் தெரிந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை அவர்கள் பார்த்த கிரகங்கள் அனைத்தும், கடினமாக இருந்தாலும், முழுமையாகவாவது இருந்தன. ஆனால், இந்த முறை அந்தக் கிரகமே பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு அந்தக் கிரகத்தின் நடு மையத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஏதோ ஒரு பொருளோடு இணைக்கப்பட்டிருந்தன. அந்த உடைந்த பாகங்களும் சமச்சீராக அடுக்கப்படாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக, பல ஏற்ற இறக்கங்களுடன், அடுக்கடுக்காக இருந்தன.
ஆபத்துக் கால எச்சரிக்கையை முன்னிட்டு விண்கலத்தை நிறுத்தினான் ஆதி. ஆரியன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. இந்தக் கிரகத்தில் எப்படி அந்த பார்ச்மென்டைத் தேடுவது என்று மூவருக்கும் புரியவில்லை.
பின், ஆதி வழக்கம் போல அந்த விண்கலத்தின் டிரோன்களை அனுப்ப, மூவருக்கும் இடையில் ஒரு கனத்த அமைதி நிலவியது. யார் பேச்சைத் தொடங்குவது என்று குழப்பமாக இருந்தது மூவருக்கும்.
நந்தினி ஒரு முடிவோடு, “இந்த கிரகத்துக்கு நான் மட்டும் போய் பார்ச்மென்டை எடுத்துட்டு வர்றேன். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க” என்றாள்.
ஆதி, “நீ சொல்றத நாங்க ரெண்டு பேரும் கேட்க மாட்டோம்னு தெரிஞ்சும், நீ இத சொல்ற பாத்தியா ? உன்னோட கான்ஃபிடன்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு, சனா. ஆனா, என்னால கண்டிப்பா உன்னைத் தனியா அனுப்ப முடியாது” என்றான்.
நந்தினி மறுத்துக் கூறுவதற்குள், “நீ இல்லாம இந்த மிஷனே ஒன்னும் இல்லாம போயிடும், நந்து. அதுக்கப்புறம் நாங்க தனியா இருந்து என்ன செய்யப் போறோம் ? முக்கியமான நேரத்தில எமோஷனலா முடிவெடுக்காதே, நந்து” என்றான் ஆரியன்.
“இருந்தாலும்” என்று கூறத் தொடங்கியவள்,
“சரி, நாளப் பின்ன இது மாதிரி ஒரு தடவையாவது நீ கேட்ருக்கலாம்னு சொல்லிற கூடாது இல்லையா ? அதான் கேட்டேன். நீங்க ரெண்டு பேரும் பெருசா எதுவும் நினைச்சுக்காதீங்க” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற,
“அசிங்கப்பட்டான் ஆரியன்” என்று தலையில் அடித்துக்கொண்டான் ஆரியன். ஆதி வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்திருந்தான்.
அதற்குள், அந்த அதி நவீன ட்ரோன்கள் வந்துவிட, ஆதி சுறுசுறுப்பானான். அந்த டிரோன்களில் இருந்த தரவுகளைத் திரையில் பார்த்தனர் மூவரும். அந்தக் கிரகத்தின் சிதறிய பாகங்கள் அனைத்தும் பல பிரிவுகளாகப் பிரிந்து, பல பாதைகளை உருவாக்கி இருந்தன.
இன்னும் சொல்லப்போனால் இரண்டு பரிமாணத்தில் செடிகளை வைத்துப் பல அடி உயர maze-களைப் போல, மூன்று பரிமாணங்களில், அந்த கிரகத்திலிருந்த பாகங்கள் அடுக்கப்பட்டிருந்தன.
நந்தினி, “இது ஒரு Three dimensional illusion (முப்பரிமாண திரிவு தோற்றம்). முதல்ல நாம போற வழி சரியா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா, நாம ஏதாச்சும் ஒரு இடத்துல குழம்பிப்போய் தொலஞ்சிருவோம். இது ரொம்ப ஆபத்தானது. நாம எவ்ளோ நேரம் நடந்துக்கிட்டே இருந்தாலும் நடுப்பகுதிக்குப் போக முடியுமானு தெரியல. இன்னும் தெளிவா சொல்லணும்னா, நாம திரும்ப திரும்ப ஒரே பாதையில சுத்திகிட்டே இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல” என்றாள்.
ஆதி, “இதே பிரச்சினை பூமியில இருந்திருந்தா நம்மளால தீர்க்க முடியாது. ஆனா, நாம இப்ப இருக்கிறது ஒரு Ultra Modern Space Ship. நாம அறிவியலோட உச்சக்கட்டம்னு நினைக்கிற Artificial Intelligence இதோட அடிப்படை டெக்னாலஜி. அதனால நாம இதுல அந்த கிரகத்தோட data–வை குடுத்தோம்னா, கொஞ்ச நேரத்திலேயே ஒரு துல்லியமான பாதைய நமக்குக் காட்டும். அத தொடர்ந்து போனோம்னா, நாம கண்டிப்பா இந்தக் கிரகத்தோட நடுப்பகுதிக்கு போயிடலாம்” என்றான்.
அவன் கூறியதில் ஆரியனுக்கும், நந்தினிக்கும் நம்பிக்கை ஏற்பட, ஆதி, தன் வேலையைத் தொடங்கினான். சிறிது நேரத்தில் பல்வேறு Possibilities –ஐ ஆராய்ந்து ஒரு வழியைக் காட்டியது அந்தத் திரை. அந்தப் பாதையை நன்றாக மனதில் பதித்து வைத்துக் கொண்டனர் மூவரும்.
பிறகு, மூவரும் விண்கலத்திலிருந்து, அந்தக் கிரகத்தின் ஒரு பெரிய பகுதியில் இறங்கிக் கொண்டனர். அதற்குப் பிறகு அவர்கள் மூவரும் வெகு ஜாக்கிரதையாக நடக்க ஆரம்பிக்க, சில நொடிகளில் அந்தப் பாகங்கள் முழுவதும் நகரத் தொடங்கின.
நந்தினி, ஆதி மற்றும் ஆரியன், மூவரும் ஒரு நொடி அதிர்ந்து விட்டனர். இவ்வளவு தூரம் திட்டமிட்டு வந்த செயல் இப்போது திடீரென்று தங்கள் கையை விட்டு நழுவியதைப் போல உணர்ந்தனர். பாகங்கள் நகரும் வேகம் நொடிக்கு நொடி அதிகமாகவே, யோசிக்க நேரமில்லாமல்,
நந்தினி, “இந்த பாகங்களோட சேர்ந்து ஓட ஆரம்பிப்போம். ஒருத்தர ஒருத்தர் கெட்டியா புடிச்சுக்கோங்க. யாரும் வழிமாறி போயிடாதீங்க” என்று கத்தியவள், ஆதியைப் பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
ஆதியின் மற்றொரு கையைப் பிடித்தவாறு ஆரியனும் அவர்களைப் பின்தொடர்ந்தான். பாகங்கள் நகரும் வேகம் இன்னும் அதிகரிக்க, அவர்களால் மற்றவர் கையைப் பிடித்துக் கொண்டு ஓட முடியவில்லை.
மெல்ல நந்துவும், ஆதியும் பிரிய, அதற்குப் பின்னர் ஆதியும், ஆரியனும் பிரிந்தனர். என்ன தான் ஒருவரை ஒருவர் தொடர முயன்றாலும், அவர்களது பாதை வேறு மார்க்கத்தில் செல்ல மூவரும் மூன்று பாதைகளில் செல்ல ஆரம்பித்தனர்.
வெகு நேரமாக இப்படியே ஓடிக்கொண்டிருக்க, மெதுவாக அந்தப் பாகங்கள் நகர்வதை நிறுத்தின. மூவரும் வெவ்வேறு இடங்களில் தனித்து விடப்பட்டனர். மூவரும் எந்த விஷயத்திற்காகப் பயந்தனரோ அது நடந்து விட்டது.
நந்தினி, “ஆதி ! ஆர்யா !” என்று கத்த, எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.
இனி அடுத்து என்ன செய்வது என்று யோசித்த நந்தினிக்கு, “இந்த இடத்தில் உட்கார்ந்து காத்திருப்பதில், எந்தப் பிரயோஜனமும் இல்லை. அதற்குச் சிறிது நேரம் நடந்தாவது பார்க்கலாம்” என்று தோன்ற, அவள் நடக்கத் தொடங்கினாள்.
சுற்றி சுற்றி செல்லும் அந்தப் பாதையில் நீண்ட நேரம் நடந்தாள். மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு வருவது போல தோன்ற, அந்தப் பாகங்களைப் பார்த்தாள். அதில் ஏதோ அச்சு தெரிவது போல இருக்க உற்றுநோக்கினாள். அது அவளது காலணியின் தடம் தான் என்று தெரிந்ததும் சோர்வடைந்தாள்.
இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே சுற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அப்போது ஒரு மெல்லிசை ஒலிப்பதைப் போல உணர்ந்தாள். சிறிது சிறிதாக அந்த இசை அவளது மூளையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. பிறகு நந்தினி தனது கட்டுப்பாட்டை இழந்தாள்.
வெவ்வேறு இடங்களிலிருந்த ஆரியனுக்கும் ஆதிக்கும் இதே நிலைமை ஏற்பட்டது. மெதுவாக அவர்களது எண்ணங்களைக் கட்டுப்படுத்திய அந்த இசை, அவர்களது மனதில், புது தோற்றங்களை உருவாக்க ஆரம்பித்தது.
நந்தினியின் மனதில், கனவுகளில் ஏற்படுவது போல, அந்தகாரத்தில் மிதந்தாள் அவள். சிறிது சிறிதாக அவளைச் சுற்றி காட்சிகள் கட்டமைக்கப்பட்டன. அது எந்தக் காட்சி என்று நினைவுக்கு வந்ததும், அவள், “நோ” என்று கத்தினாள்.
அவளது தந்தையையும் தாயையும் கொன்ற ப்ரொமேத்தியஸ், நந்தினியின் முன் வந்து, “உன்னால் என்னைத் தோற்கடிக்க முடியும் என்று நினைக்கிறாயா ? அனைத்துச் சக்திகளைப் பெற்றிருந்த உன் தந்தையாலேயே என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீ என்ன செய்து விடுவாய் ? இப்போது உன் முன்னால் தானே நிற்கின்றேன். முடிந்தால் என்னைத் தாக்கு பார்க்கலாம்” என்றான். நந்தினியால் தனது கை சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.
ப்ரொமேத்தியஸ் கேலியாகச் சிரிக்க, அந்தக் காட்சி மாறியது. அடுத்த காட்சியைக் கண்டு அவள் விதிர் விதிர்த்துப் போனாள். தன் தாய் துர்கா தனக்கு எதிரே நிற்பதைக் கண்டு, அது உண்மையா ? பொய்யா ? என்று தலை சுற்றியது அவளுக்கு.
துர்கா நந்தினியிடம் வந்து, “இந்த அம்மாவ விட்டுட்டு போக உனக்கு எப்படி நந்து, மனசு வந்துச்சு ?” என்று அழத் தொடங்க, நந்தினியால் தனது தாயை கட்டியணைத்து சமாதானம் கூடச் செய்ய முடியவில்லை.
அடுத்து அவளது அத்தை சித்ரா வந்து கோபமாக, “என் மகனை என்னை விட்டுப் பிரித்து விட்டாயே ? இது உனக்கே நியாயமா இருக்கா ?” என்று திட்ட, நந்தினி கூறிய பதில்கள் அனைத்தும் ஒலி வடிவம் பெறாமல், அவள் மனதுக்கு மட்டுமே கேட்டன.
அடுத்து காட்சிகள் மாற ஆரியன் தோன்றினான். நந்தினி ஏதோ சொல்வதற்குள், “உனக்கு எப்பவுமே நீ மட்டும் தான் பெரிய அறிவாளினு நினைப்பு. அதான் உன்ன சுத்தி இருக்கிறவங்கள உனக்கு மதிக்கத் தெரியல” என்று கூற, நந்தினி வேதனையின் உச்சிக்கே சென்றாள்.
அடுத்து பொசய்டன் தோன்றி, “உன்னை கயா கிரக வாரிசு என்று எல்லாரும் நம்பிட்டு இருக்காங்க. ஆனா, உனக்கு அதற்கான தகுதியே இல்ல. இல்லனா செலினா இன்னும் உனக்குச் சக்திகளைக் கொடுக்காமல் இருப்பாரா ? உன்னை நம்பி நேரத்தை வீணடித்து விட்டேன்” என்றார்.
நந்தினி அடுத்து யோசிப்பதற்குள், ஆதித்யன் தோன்றினான். அதுவரை நடந்த அனைத்துக் காட்சிகளும் மறந்து விட, அவள் மனது லேசானது. ஆனால், அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் அவள் மனதில் யாரோ எரிமலைக் குழம்பை ஊற்றியதைப் போல உணர்ந்தாள்.
“உன்னால் ஒரு நாளாவது சாதாரண பெண்ணைப் போல நடந்துகொள்ள முடியுமா ? ஒரு நாளென்ன, ஒரு மணி நேரம் ? ஹ்ம்ம்… முடியாது… என்னோட குடும்பத்துல இருக்கிறவங்களுக்காக தான் நான் உன்ன காதலிக்கிறேன். இல்லனா, உன்னைய போய் ? உன்ன காதலிக்கிற மாதிரி நடிக்கிறதுக்கே நான் வெட்கப்படுகிறேன்” என்று ஆதி கூற, அவளது இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது.
பிறகு ப்ரொமேத்தியஸ், துர்கா, சித்ரா, ஆரியன், பொசய்டன் மற்றும் ஆதித்யன் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஏதோ சரமாரியாக் கேள்வி கேட்க, நந்தினி அலற ஆரம்பித்தாள்.
அப்போது எங்கிருந்தோ ஒரு குரல், “Reveal yourself and believe your friends” என்று கூற, அதனை தொடர்ந்து ஆதித்யன் குரலில், “என்னோட காதல் உன்னோட தனித்தன்மையை அழிக்கக்கூடாது, சனா” என்று கேட்க, நந்தினியின் மனதில் ஒரு தீப்பொறி தோன்றியது.

இதுவரை அவள் வாழ்க்கையில் நடந்த அனைத்து இனிமையான நினைவுகளும் ஞாபகம் வர, அவள் மனதில், “நான் தான் க்ரிசான்டா” என்ற வார்த்தைகளே எதிரொலிக்க, அவளது விழிகள் தங்க நிறத்துக்கு மாறின. அவளது உடலைச் சுற்றி சக்தி வளையங்கள் உருவாக ஆரம்பிக்க, இறுதியில் அவளைச் சுற்றி இருந்த காட்சிகள் அனைத்தும் உடைந்தன.
அவளைச் சுற்றி இருந்த சக்தி வளையங்கள் மெல்ல குறைந்து பழைய நிலைக்குத் திரும்பினாள் நந்தினி.
தன்னைச் சுற்றி பார்த்த போது தான், அவளுக்கு நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது. பிறகு, பொறுமையாக யோசித்த போது தான், அவளுக்கு அனைத்தும் விளங்கியது.
“இது க்ரோனனோட லெவல் போல அதான் நினைவுகளை வைத்து சோதனை செய்து இருக்கிறார்” என்று நினைத்துக் கொண்டாள்.

இப்போது கூட அந்த நினைவுகள் ஞாபகம் வந்ததும், அவள் உடல் சிலிர்த்தது. அப்போது தான் அவளுக்கு ஆதியும், ஆரியனும் நினைவுக்கு வர, “Oh My God !” என்று கத்திவிட்டாள்.
தனக்கே இவ்வளவு பாதிப்புனா, அவங்களுக்கு என்ன ஆகியிருக்குமோ என்று பயம் வரத்தொடங்க, மறுபடியும் அந்தப் பாகங்கள் அதி வேகமாக நகரத் தொடங்கின. நந்தினி அதைப் பொருட்படுத்தாமல், அந்தப் பாகங்களை ஒவ்வொன்றாக தாண்டிக் கொண்டு வேகமாக ஓடினாள்.
இறுதியில் அவள் அந்தக் கிரகத்தின் மையத்திற்கு வந்து சேர, அங்கு ஆதியும் ஆரியனும் நினைவிழந்து கிடந்தனர். பின்னர் அந்தப் பாகங்கள் அசையாது நின்று விட, நந்தினி வேகமாக அவர்களை நோக்கிச் சென்றாள்.
அவர்கள் உடலில் நாடித் துடிப்பினை பரிசோதித்துப் பார்க்க, அதில் அவளால் எவ்வித துடிப்பையும் உணர முடியவில்லை. அவளுக்கு மனதளவில் துன்பம் ஏற்பட்டாலும், அவளுடைய அறிவு அங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த பொருளைப் பார்க்கச் சொன்னது.
அவள் அந்தப் பொருளை ஒரு நொடி பார்த்து விட்டு, மற்ற இருவரையும் ஒரு கையால் சேர்த்துப் பிடித்துக் கொண்டு, மறு கையால் அந்தப் பொருளைத் தொட்டாள். மெல்ல மெல்ல நந்தினி தன் நினைவை இழந்தாள்.

error: Content is protected !!