Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோUncategorized

ஜீவ தாளம் : 19

அத்தியாயம் : 19

நிகழ்ச்சிகள் யாவும் முடிந்து வீட்டிற்கு வரும்போது மணி மூன்றாகிவிட்டது! அனைவரும் அதிகாலையில் எழுந்தது முதல் வேலைகளில் மூழ்கி இருந்ததால், வீட்டிற்கு வந்ததும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். ஆனந்தியும் தனது அறைக்குள் புகுந்து புடவையை மாற்றிவிட்டு, இரவு ஆடையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தாள்.

பின்னர், சுடிதாரை அணிந்துகொண்டு வெளியே வந்து சூடாக ஒரு கப் காஃபியை வாங்கி அருந்தினாள். தங்கை, தம்பிகள் யாரையும் காணவில்லை; வீடே வெறிச்சோடிப்போயிருந்தது! இனி தனது வீட்டிற்குச் சென்ற பிறகும் இப்படித்தானே இருக்கும் என்று நினைத்து, கண்களை மூடி சோஃபாவில் சாய்ந்திருக்கும்போது, அவளைப் பார்த்துவிட்டு நகுலன் ஓடி வந்து அக்காவின் மடியில் படுத்துக்கொண்டான். அவளும் கண்திறந்து அவனைப் பார்த்துவிட்டு, முதுகுப் பகுதியில் இதமாக வருடிக் கொடுத்தாள்.

“சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?”



Advertisement

“காஃபி வேணும்!”

அவனை சோஃபாவில் படுக்க வைத்து, தான் மட்டும் எழுந்து சென்று சன்ரைஸ் காஃபியுடன் வந்தாள். அதன் நறுமணத்தை நாசியால் உள்வாங்கிக்கொண்டு, “அக்கா… இந்தக் காஃபியின் வாசனையில தூக்கமெல்லாம் போயே போச்சு!” என்று விளம்பர பாணியில் அவன் கைகளை விரிக்க, புன்னகையுடன் தம்பியின் அருகில் அமர்ந்தாள் ஆனந்தி.

அப்போது அங்கு வந்த ஆனந்த், “எனக்கும் ஒரு கப் காஃபி கிடைக்குமா?” என்றான்.

Advertisement

“ஹாய் அத்தான்! ரெஸ்ட் எடுத்து முடிச்சுட்டீங்களா?”

Advertisement

“ஆமாடா!”

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் ஆனந்தி. சூடான காஃபியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகரவும், “இப்படி உட்கார்!” என்ற அவனது குரலில் அங்கேயே அமர்ந்தாள்.

“இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று அவன் உரிமையுடன் கேட்க, “ம்ம்… ஓகே” என்று முணுமுணுத்தாள் ஆனந்தி.

Advertisement

“உடம்புக்கு ஏதாவது முடியலையா சொல்லு, ஒருமுறை ஆஸ்பிட்டல் போயிட்டு வரலாம். இல்லைன்னா மாத்திரை ஒண்ணு போட்டா சரியாகிடும்!”

அவனது கரிசனையுடன் கூடிய வார்த்தைகள், தன்னிடம் பேசுவது நிஜமாகவே ஆனந்த் தானா என்று அவளை வியக்க வைத்தது!

அவள் வெறுமனே தலையை மட்டும் அசைக்க, அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தான் ஆனந்த். மற்றவர்களும் வந்து சேர்ந்துகொள்ள, அனைவருக்கும் சூடாகக் காஃபியை எடுத்து வந்து பரிமாறினாள் ஆனந்தி.

சின்னச் சித்தப்பா அறிவழகனின் புன்னகையை ஏற்று, பதிலுக்கு ஒரு மெல்லிய புன்சிரிப்பை உதிர்த்தாள்.

“என்னம்மா… வெளியூரிலிருந்து வந்திருக்கும் உனக்குக் கிராமத்துப் பழக்கம் ஒத்து வருதா? வீடு எல்லாம் பிடிச்சிருக்கா?”

சிவச்சந்திரன் அவளுக்கு ஆசி வழங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்ததோடு, தங்களது பிள்ளைகளிடம் அவள் காட்டிய அக்கறையும் பாசமும், அறிவழகனுக்கும் அவளிடம் பேசும் ஆசையைத் தூண்டியது. எப்போதும் மற்றவர்கள் அருகிலேயே இருப்பதாலும், அவளைத் தனிமையில் சந்திக்க வாய்ப்பு அமையாததாலும் இவ்வளவு நேரம் பேச முடியவில்லை. இப்போது அவர் முன்பு காஃபியை கொண்டு வந்ததால் வாங்கியபடி கேட்கிறார்.

இளையச் சித்தப்பாவின் கனிவான பேச்சில் அவள் முகம் மலர, “ரொம்ப நல்லா இருக்கு சித்தப்பா!” என்று சட்டெனப் பதிலளித்துவிட்டாள்.

அவர் சிரித்த பிறகுதான், அவசரப்பட்டு ‘சித்தப்பா’ என்று அழைத்துவிட்டோமே என நினைத்துத் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

“சாரி…” என்று அவள் இழுக்க, “அதனால் என்னம்மா? என் மகன்களை விடவும் நீ பெரியவள்தானே! முறைப்படி பார்த்தா நான் உனக்குச் சித்தப்பாதான் வேணும். தம்பிகள் இருவரும் உன்னைப் புகழுறதைப் பார்த்தா, நீ அந்தப் பாராட்டுக்கெல்லாம் தகுதியானவள்தான்!” என்று மனதாரச் சொன்னார்.

நகுலனின் அப்பா இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவார் என்று எதிர்பார்க்காத ஆனந்தி, அவரின் வார்த்தைகளில் கண்கள் கலங்க நின்றாள்.

அப்பாவும் அக்காவும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் நகுலனும் கண்ணனும் ஓடி வந்து, “அப்பா! இந்த அக்காவை நாமளே வச்சுக்கலாம்ப்பா… எங்களுக்கு இவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்றார்கள் உற்சாகமாக.

“அப்போ அவங்க வீட்டு ஆளுங்களுக்கு வேண்டாமா?” என்று அறிவழகன் கேட்க, “அதான் ஒரு நல்ல ஐடியா இருக்கே! அதன்படி நடந்துக்கிட்டா முடிஞ்சது!” என்று சொன்னான் நகுலன்.

​அவர் ஆச்சரியமாகத் தன் மகனை நோக்க, “அதான்பா! நம்ம அத்தானுக்கே அக்காவைக் கல்யாணம் பண்ணி வச்சுட்டா, கடைசி வரைக்கும் நம்ம கூடவே இருப்பாங்கல்ல!” என்று அவன் ஆலோசனை சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போனாள் ஆனந்தி!

“அடடா! நல்ல ஐடியாவா இருக்கே… ஆனா இதுக்கு உங்க அத்தான் சம்மதிக்க வேண்டாமா?”

அறிவழகன் குறும்பாகக் கேட்க, “அத்தானைச் சம்மதிக்க வைக்கிறது எங்க பொறுப்பு! இன்னைக்குக் காலையில அக்காவுக்கு உடம்பு முடியாம இருந்தப்போ, அத்தான் எவ்வளவு அக்கறையா பார்த்துக்கிட்டார் தெரியுமா? கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் பாசமா பார்த்துப்பாரு. நாமளும் பார்த்துக்க மாட்டோமா?” என்று பெரிய மனிதத் தோரணையில் பேசினான் நகுலன்.

ஆனந்தி விக்கித்துப் போய் நின்றாள்! அப்பாவிடம் சொன்னது போதாது என்று, அத்தான் அருகில் ஓடிச் சென்ற நகுலன், “அத்தான்! அபியை விட ஆனந்தி அக்காதான் உங்களுக்கு ரொம்பவும் பொருத்தமா இருக்காங்க. நீங்க அவங்களையே கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அக்கா நம்ம கூடவே கடைசி வரை இருப்பாங்க அத்தான்!” என்று சொல்ல, அவன் முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது.

அபிநயா அங்கு நிற்பதைக் கண்டதும், “ஏய் அபி! நம்ம அத்தானுக்கு நாங்க ஆனந்தி அக்காவைக் கல்யாணம் செய்து வைக்கப் போறோம். நீ இடையில் புகுந்து ஏதாவது கலாட்டா செய்தா, உன்னைத் தூக்கிக் குளத்துக்குள்ள போட்டுருவேன்!” என்றான்.

அங்கிருந்த அனைவரும் நகுலனின் மழலைப் பேச்சைக் கேட்டுச் சிரித்துவிட, அபிநயா தம்பியைத் துரத்திக்கொண்டு ஓடினாள். அவர்கள் இருவரும் ஓடுவதைக் கண்ட மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

அனைத்தையும் பார்த்து நின்ற ஆனந்திக்கு திக்கென்றது

‘சிறு பிள்ளையின் தமாசான பேச்சு’ என்று அவர்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்வார்களா? அல்லது தன்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்களா?” எனப் பதற்றத்துடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.

“அப்பா! பத்தாம் வகுப்புப் பரிட்சையில் நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரணும்னு அக்கா சொல்லியிருக்காங்க. நானும் அதுக்காக இப்பவே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அக்கா நம்ம கூடவே இருந்தா நிறையச் சொல்லித்தருவாங்கப்பா…” என்றான் நகுலன் ஆசையாக.

அறிவழகன் சிரித்த முகத்துடன், “உங்க அக்கா இங்கவே இருக்க சம்மதிச்சா எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனா, நீ இங்கே தான் இருக்கணும்னு கண்டிப்புடன் சொல்ல எங்களுக்கு உரிமை இல்லையேப்பா! அவளுக்கும் அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் இருப்பாங்க இல்லையா? உன்னைப் போலத்தானே அவர்களும் பாசம் வச்சிருப்பாங்க!” என்க, நகுலனின் முகம் சுணங்கியது.

தன் மீதான தம்பியின் பாசத்தில் நெகிழ்ந்து விம்மிய ஆனந்தி, அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்த்துப் பூரித்துப் போனாள்! ஆனந்தின் பார்வை தன்னையே துளைப்பதைக் கண்டு, அவன் முன்பு நிற்க முடியாமல் மெதுவாக நழுவி பால்கனி பக்கமாக வந்தாள்.

அவனுடன் தன்னை இணைத்துப் பேசிய நினைவில் இதயம் வேக வேகமாக அடித்துக்கொண்டது. ஆனந்துக்கு அவளைப் பார்த்தாலே பிடிக்காது என்று அவளுக்குத் தெரியும். அப்படியிருக்க, நகுலன் இப்படிச் சொன்னதும் அவன் காட்டிய அந்தச் சிரிப்பும், அவளைப் பார்வையால் வீழ்த்திய விதமும் மனதிற்குள் ஒருவிதச் சஞ்சலத்தை உருவாக்கியது.

அமெரிக்காவிற்குச் செல்ல இன்னும் சில நாட்களே இருக்கின்றன; அதற்குள்ளாக வேறு எந்தப் பிரச்சனைகளும் வந்துவிடக் கூடாது! அபிநயாவிற்கும் அவனுக்கும் ஏற்கனவே திருமணம் செய்து வைப்பதாக வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்திருக்க, தன்னால் எந்தவிதமான குழப்பமும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். அதுமட்டுமல்ல, அபிநயாவும் அவளிடம் எத்தனைப் பாசத்துடன் நடந்து கொள்கிறாள்! தன்னால் அவள் வாழ்க்கை பாதிப்படையக் கூடாது. அன்றொரு நாளில் நடந்த சம்பவங்கள் எதுவும் மீண்டும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உறுதியாக எண்ணினாள்.

ஆனந்தவல்லிக்குக் காலையில் எழுந்த முதலே மனம் சரியில்லாமல் இருந்ததால், மதிய நேரம் படுக்கையில் சாய்ந்தவர் அதற்குப் பின்பு எழவே இல்லை. அவரது கணவரின் இறந்த நாளான இன்று, அவர் இருந்தபோது நடந்த யாவும் மீண்டும் மீண்டும் மனதிற்குள் வந்து நிம்மதியைப் பறித்தன. பழைய நிகழ்வுகளிலிருந்து விடுபட முடியாமல் அவர் தத்தளித்தார்.

அதே நேரம், வீட்டிற்குப் புதியதாக வந்திருக்கும் பெண் மற்ற எல்லோருடனும் இணக்கமாக நடந்து கொள்வதும், அவரை மட்டும் ஒதுக்கி வைப்பதும் ஏன் என்று புரியாமல் தவிப்புக்கு உள்ளானார். தனது அறையிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுபவர், இன்று வெளியே வந்திருந்தபோது ஆனந்தியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க நேர்ந்தது.

அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த பலவிதமான உணர்வுகள், அவள் இந்த வீட்டிற்கு வந்தபோதும் இதேபோலவே இருந்ததாக அவருக்குப் பட்டது. சமாதியை நோக்கிக் கைகுவித்து அவள் வழிபட்ட விதம், ‘அவள் யார்?’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை அவருக்குள் அதிகரிக்கச் செய்தது. ஆனால், யாரிடம் சென்று எப்படிக் கேட்பது என்று தெரியாமல் ஆனந்தவல்லியின் உள்ளம் தடுமாறியது.

வீட்டுப் பெண்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள், தான் எதற்கு அவர்களுக்குத் தொந்தரவாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலும் அறைக்குள்ளேயே முடங்கிவிடுபவர், தன் மனதில் இருக்கும் ஏக்கங்களை யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை.

அதிலும் மருமகன் ராஜேந்திரன்! ஒற்றைப் பார்வையில் அனைவரையும் அடக்கி வைத்துவிடும் திறமை படைத்தவன். தன்னுடைய வார்த்தைகளால் மகளின் வாழ்க்கை அழிந்துவிடக் கூடாது என்றுதான், இத்தனை வருடங்களாக மனபாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார். இன்றைக்கு அந்த இடத்தில் இரண்டு சமாதிகளில் நடந்த பூஜைகளும், பழைய நினைவுகளும் அவர் மனதைப் போட்டு அறுத்தன!

நடந்து முடிந்த சம்பவங்களுக்கு யாரும் காரணம் இல்லையென்றாலும், அதை அப்படியே மறந்துவிட்டுவிட இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மனம் வரவில்லை. உணவு தொண்டைக்குள் இறங்க மறுக்க, ஏக்கம் நிரம்பிய மனதுடன் படுக்கையிலேயே கிடந்தார் ஆனந்தவல்லி.

இரவு நேரம், புத்தகமும் கையுமாக ஓடிவந்த கண்ணன் ஆனந்தியின் அருகில் அமர்ந்துகொள்ள, அவன் கையில் இருப்பது என்ன பாடப்புத்தகம் என்று ஆர்வத்துடன் பார்த்தாள். தமிழ்நாட்டுப் பாடப்புத்தகத்தை முதல்முறையாக எடுத்து வாசித்துப் பார்த்தபோது, அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை பரவியது. சிவனேஷ் மற்றும் நகுலனும் வந்து அவர்கள் அருகில் அமர்ந்துகொள்ள, அபிநயாவும் அங்கே வந்துவிட்டாள்.

ஒரே வீட்டுப் பிள்ளைகள் போல அவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை, பெரியவர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

மூன்று ஆண்களும் உணவருந்த வரும்போது மற்றவர்களையும் அழைக்க, அவர்கள் பின்னர் உண்பதாக சொல்லி விட்டனர். ராஜேந்திரன் அதிகப் பேச்சு இல்லாமல் உணவை முடித்து விட்டு எழுந்து சென்று விட, அண்ணன் தம்பி இருவரும் நாற்காலியில் சென்று அமர்ந்தார்கள்.

அவர்கள் சென்ற பின்னர் நேரம் ஆவதாக சொல்லி அம்மாக்கள் குரல் கொடுக்க, அவர்கள் அனைவரும் எழுந்து அங்குச் சென்றனர். அத்தனை நேரம் தானும் மடிக்கணினியில் மூழ்கிவிட்டு, சாப்பாட்டு அறைக்கு வந்தான் ஆனந்த்.

ஆனந்தி வேண்டாம் என்று மறுத்தும் கேளாமல் அவளையும் அமரச் சொல்லிவிட்டு, அவர்களே மற்றவர்களுக்கு உணவு பரிமாறினர். ஆனந்தின் இடைவிடாத பார்வை அவளைச் சங்கடப்படுத்தியது! ‘ஏற்கனவே இவனையும் என்னையும் இணைச்சுப் பேசிக்கிட்டு இருக்காங்க; இந்த நேரத்துல இவன் இப்படிப் பார்த்தா இன்னும் அதிகமா இல்ல கேலி செய்வாங்க? இவனாலதான் வந்த வேலையே கெட்டுப்போயிருமோ?’ என்று சலிப்பாக உணர்ந்தாள்.

இரவு உணவை அனைவரும் முடித்த பிறகுதான், ஆனந்தவல்லி தனக்கு உணவு வேண்டாமென்று சொன்ன விஷயம் தெரியவந்தது.

“மதியம் சாப்பிட்டது ஜீரணமாகாம இருக்கும். வயசாகுது இல்லையா? நாளைக்குக் காலையில லேசா ஏதாவது ஆகாரம் கொடுங்க…” என்று சொல்லிவிட்டு ஆண்கள் இருவரும் எழுந்து சென்றனர்.

என்னதான் அவர் மீது கோபம் இருந்தாலும், தனது பாட்டி ஆயிற்றே என்று மனம் வருந்திய ஆனந்தி, “ஒரு டம்ளர் பாலாவது அவருக்குக் கொடுக்கலாம்” என்றாள். உடனே அவர்கள் சரி எனச் சொல்ல, அபிநயாவையும் அழைத்துக்கொண்டு ஆனந்தவல்லியின் அறைக்கு நடந்தாள்.

அவர் கண்ணீரும் கவலையுமாக இருப்பதைக் கண்டு, செய்வதறியாமல் திகைத்து நின்றாள் ஆனந்தி. இரு பெண்களையும் ஒருசேர பார்த்ததும் கண்களைத் துடைத்துவிட்டு, அங்கு கிடந்த நாற்காலியில் அமரச் சொன்னார் ஆனந்தவல்லி.

முதலில் பேத்தி அபிநயாவிடம், “எல்லாரும் சாப்பிட்டீங்களா? அவங்க என்ன செய்றாங்க?” என்று விசாரித்துவிட்டு, பின்னர் ஆனந்தியைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“நீ சாப்பிட்டியாம்மா? இந்த வீடும், வீட்டுல இருக்கிற மனுஷங்களையும் உனக்குப் பிடிச்சிருக்கா? உன்கிட்ட பேசணும்னு எனக்கு எவ்வளவோ ஆசை… ஆனா உடலும் மனமும் ஒத்துக்கல. கொஞ்ச நாளாவே எல்லாப் பொறுப்பையும் மருமகள்கிட்டயும் மகள்கிட்டயும் ஒப்படைச்சுட்டு, இந்த அறைக்குள்ளேயே ஒடுங்க ஆரம்பிச்சுட்டேன். அந்த ஆண்டவர் என்னை அழைச்சுட்டுப் போற நாளைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்!”

அவரது வார்த்தைகளில் விரக்தி மேலிட்டது.

அபிநயா அவரைத் தடுக்க முயல, கசந்த புன்னகையுடன், “அதை விடும்மா… நீ யாரு? உன் வீடு எங்க இருக்கு? உன் பெற்றோரைப் பத்திச் சொல்வியா?” என்று ஆனந்தியிடம் விசாரித்தார். பாட்டியின் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்ட ஆனந்தி, அவரது மனதில் தீர்க்கப்படாத சோகம் நிறைந்திருப்பதைப் புரிந்துகொண்டாள். ‘ஒருவேளை அதற்குக் காரணம் தனது அப்பாவா? அல்லது இன்று நினைவு நாள் கொண்டாடப்பட்ட அவரது கணவரா?’

எப்படி அவரிடம் சென்று, “நான் உங்களது மகனின் வாரிசு” என்று சொல்ல முடியும்? அதோடு, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரிடம் கடுமையாகப் பேசவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவளது மௌனத்தைப் புரிந்துகொண்ட அபிநயா, “பாட்டி, நீங்க சரியா சாப்பிடாம எப்பவும் கவலையிலேயே இருக்கீங்க. அதனால இப்போ அதிகமா பேசாம இந்தப் பாலைக் குடிச்சுட்டு ஓய்வெடுங்க. அக்கா இந்த வீட்டுலதானே இருப்பாங்க… நிதானமா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்” என்றாள்.

அவரும் சரி என்பது போலத் தலையாட்ட, பெண்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பினர். அபிநயா தனது அறைக்குச் சென்று விட, பால்கனி பகுதியில் தனியாக நின்றிருந்த ஆனந்தியின் செவியில், அண்ணனும் தம்பியும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது விழுந்தது.

“எனக்கு இந்தப் பெண்ணைப் பார்க்குறப்போ பெரிய அண்ணனோட ஞாபகம் அதிகமா வருது… இன்னைக்கு அவரும் நம்மளோட இருந்திருந்தா, அவரோட வாரிசுக்கும் இதே வயசுல பிள்ளைகள் இருக்கும் இல்லையா?” என்று சிவச்சந்திரன் ஆதங்கப்பட்டார்.

அறிவழகன் அதைக்கேட்டு, “ஆமாம்! ஆனா அவர்தான் நம்ம யாருமே வேண்டாம்னு உதறித் தள்ளிட்டுப் போயிட்டாரே! அத்தனைப் பாசமா இருந்தவரால் எப்படி நம்மை வேண்டாம்னு விட்டுப் போக முடிஞ்சது? காதலித்த பெண் மட்டும்தான் முக்கியமா போயிற்றா? இத்தனை வருஷத்துல ஒருமுறை கூட அவர் எட்டிப் பார்க்கலையே!” என்றார் வருத்தத்துடன்.

“அண்ணன் வந்திருந்தா மட்டும் அவரை நம்ம வீட்டுல சேர்த்திருப்பாங்கன்னு நீ நினைக்கிறியா? அப்பா, ‘இந்த ஊருக்குள்ளேயே அவர் வரக்கூடாது’ன்னு சொல்லிட்டாரு… அத்தான் ராஜேந்திரன் அவர் சொன்னதை வேதவாக்கா நினைச்சுச் செஞ்சுட்டு வர்றார். நாமளும் அவரை எதிர்த்துப் பேச முடியாம அடங்கியே இருக்கோம். இதுல அண்ணனைக் குறை சொல்ல என்ன இருக்கு?” என்று சிவச்சந்திரன் வேதனையுடன் கேட்டார்.

அறிவழகன் மௌனமாக இருக்க, “நம்ம அம்மா மனசுல ஆயிரம் கவலைகள் சூழ்ந்திருக்கு. அதனாலதான் அவங்க யாருக்கூடவும் முன்னாடி மாதிரிப் பேசுறதே இல்லை. வாய் திறந்து கேட்டாலும் எதுவும் நடக்காதுன்னு தெரிஞ்சதால, மொத்த கவலையையும் உள்ளேயே போட்டு முழுங்குறாங்க. எனக்கு என்னமோ இந்தப் பொண்ணைப் பார்த்ததுல இருந்து அண்ணன் ஞாபகம் அதிகமாவே வருது! அவர் மறுபடியும் நம்மைப் பார்க்க வரமாட்டாரான்னு ஆசையா இருக்கு” என்று அன்புச்செல்வன் மீதான பாசத்தில் உருகினார்.

“அண்ணன் இப்போ எங்கே, எப்படி இருக்காரோ? அவருக்கு எத்தனை குழந்தைகள்? என்ன தொழில் செய்றார்? அவரோட குடும்பத்தைப் பத்தி நமக்கு எதுவுமே தெரியலையே! இத்தனை வருஷத்துல அவரைப் பத்தின பேச்சே இந்த வீட்டுல இல்லை. அன்னைக்கு அவர் செஞ்ச தப்பால நாமளும்தான் தண்டனை அனுபவிச்சுட்டு வர்றோம். அந்தக்கோபம்தான் அவரை மறுபடியும் நினைக்க முடியாத அளவுக்கு வச்சிருக்கு… சுத்துப்பட்டியில் உள்ளவங்க நம்மளை மோசமானவங்கன்னு கருதுற அளவுக்கு அவர் நடந்துக்கிட்டார். நாம ஏதோ முரடர்கள் மாதிரியும், அடுத்தவங்களை அடிமைப்படுத்தி அரசாங்கம் நடத்துற மாதிரியும் சிலர் பேசுறதைக் கேட்குறப்போ அவமானமா இருக்கு! இதெல்லாம் செய்றது அத்தான்னு இவங்களுக்குத் தெரியாதா? நம்ம பிள்ளைகளும் நாளைக்கு இதே மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் வாழணுமான்னு எண்ணுறப்போ கஷ்டமா இருக்கு அண்ணா!”

“உண்மைதான்! என் மகள் அபிநயா கூட அடிக்கடி இதைப் பத்திக் கேட்கவே செய்வாள். அவளோட கல்லூரியில் படிக்கிற மாணவிகள், ‘உங்க வீட்டுக்கு வரோம், உங்க ஊரைச் சுத்திப் பார்க்க ஆசையா இருக்கு’ன்னு கேட்பாங்களாம். ஆனா அத்தானுக்கு மத்தவங்க நம்ம வீட்டுக்கு வர்றது பிடிக்காதுங்கிறதால, அவ யாரையும் இங்க அழைச்சுட்டு வர்றதில்லை. பக்கத்து ஊர்ல இருக்கிற பிள்ளைங்க, நம்ம ஊர்ல நடக்குறதைச் சொல்லி அவளை மட்டம் தட்டிப் பேசுறதா சொல்லி வருத்தப்படுறா… இதுக்கெல்லாம் என்னைக்கு விடிவுகாலம் வரும்னு தெரியல!” என்று பெருமூச்சு விட்டார் சிவச்சந்திரன்.

ஆனந்தியின் மூளைக்குள் ஏகப்பட்ட கேள்விகள் ஆக்கிரமித்திருந்தன. இந்த வீட்டில் மற்றவர்கள் அறியாத மர்மங்கள் நிறைந்திருப்பதும், சொந்த வீட்டிலேயே அவர்கள் சுதந்திரமில்லாமல் வாழ்ந்து வருவதும் அவளுக்குப் புரிந்தது. ‘அனைத்துக்கும் காரணமான அந்த மாமாவை என்ன செய்யலாம்?’ என்று அவள் தீவிர யோசனையில் இருக்க, அந்த நேரம் அவளுக்குப் பின்புறமாக வந்தான் ஆனந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!