Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 10

தமிழிசை 10

“பொட்டைக் கழுதை… நான் அவ்வளவு சொல்லியும் அப்பன் பேச்சைக் கேட்காம, என் கண்ணை மறைச்சு ஆம்பளை தேடிப் போயிருக்கா ****”



Advertisement

மகளைத்தான் பேசுகிறோம் என்ற அறிவு கொஞ்சம் கூட இல்லாமல், காது கூசும் வார்த்தைகளைத் துப்பிக் கொண்டே மூக்கைத்தாண்டி மூளை வரை ஏறி விட்ட போதையின் விளைவாகத் தன் நடை கொண்டு தெருவில் தொடர் இசட் வரைந்து கொண்டே வீட்டை நோக்கி வெறி  கொண்டு நடந்து கொண்டிருந்தார், செல்வநாயகம்.

இதில் எதிரில் இடைப்பட்டோர்களிடம் எல்லாம், “ஏ…ஏய்ய்… எல்லாரும் எங்க போறீங்க? எல்லாரும் என் பின்னாடி  வாங்க. இன்னைக்கு என் வீட்டுல மூணு பொணம் விழப்போகுது. எல்லாரும் வந்து துக்கம் கொண்டாடிட்டுப் போங்கடா..” என்று அழைப்பு வேறு…

Advertisement

Advertisement

“உங்கப்பன் நேத்து காலைல கிளம்பிப்  போனான். இன்னும் ஆளைக் காணோம். யாருகிட்ட பொறுக்கிக் குடிச்சிட்டு எந்த தெருவுல விழுந்து கிடக்கிறானோ?”

தமிழ் அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்டே புலம்பிக் கொண்டிருந்தார், பார்வதி.

Advertisement

ஆனந்தன் இன்று வழமைக்கும் முன்னதாகவே வேலைக்கு சென்று விட்டிருந்தான். அவன் இருந்திருந்தால்…

“ஏன், அந்த மனுஷன் இல்லாம வீடு அமைதியா இருக்கிறது உனக்குப் பிடிக்கலயா?” என்று கேட்டுத் தாயை முறைத்திருப்பான்.

ஆனால் தமிழ், “அதெல்லாம் அவரு  வந்திடுவாரு மா. நீங்க புலம்பாம இருங்க.” என்று ஆறுதல் சொன்னவள், கையில் மொபைலை எடுத்து, பார்த்திக்குத் தான் வேலைக்குக் கிளம்பி விட்டோம் என்று மெசேஜ் செய்தவள்,

“நான் வரேன் மா.” என்று தாயிடம்  சொல்லிக் கொண்டே வாசலுக்கு வர, சரியாக செல்வம் வாசலில் அவளை எதிர் கொண்டார்.

“எங்கடி மினுக்கிட்டு ஊர் மேயக் கிளம்பிட்ட?” என்றார் பற்களை வெறுவி.

குப்பென்று அடித்த சாராய வாடையில் அருவருத்த தமிழ், தன்னால் பின்னெட்டு எடுத்து வைத்தாள். அதை விட அருவருக்கத்தக்க வகையில் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகளில் முகம் சுழித்தாள்.

“உன்னைத்தான்டி கேட்கிறேன், எங்க ஊர் மேய கிளம்பிட்ட?”

“நான் வேலைக்குத்தான் போறேன். வேற எங்கேயும் போகல. நீங்க வழிய விடுங்க எனக்கு நேரமாச்சு!”

“ஓஹ்… நேரமாகுதோ? அவ்வளவு அவசரமோ அவனோட போக?” என்று அவர் இன்னும் அசிங்கமாகப் பேச, பார்வதி மகளைப் பின்னுக்கு இழுத்துவிட்டுத் தான் முன்னே வந்தவர்,

“யோவ்.. பெத்த பொண்ணுகிட்ட பேசுற மாதிரியாயா பேசுற? ஒழுங்கு மரியாதையா வழிய விடு, அவ வேலைக்குப் போகட்டும். வந்துட்டாரு, எவன்கிட்டயோ இரந்து குடிச்சிட்டு வீரத்தை வீட்டுல காட்ட! தள்ளிப் போய்யா!” என்றவாறே போதையில் தள்ளாடி நின்றவரை இலகுவாகத் தள்ளி நிறுத்தி விட்டு மகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஏற்கனவே கொல்லும் வெறியில் வந்திருந்த செல்வத்துக்கு மனைவியின் இத்தகைய அவமதிப்பான செயல், இன்னும் வெறியை ஏற்றியது.

தன் பலம் மொத்தத்தையும் திரட்டி அவரை வெளியில் இழுத்தவர்,  பார்வதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைக்க பார்வதி தலை சுற்றித் தரையில் விழுந்தார்.

அதிர்ந்து போன தமிழ், “அம்மா!” என்று அலறியபடி ஓடிவந்து தாயைத் தூக்கப் போக, பார்வதிக்கு விழ வேண்டிய உதை தமிழின் முதுகில் விழுந்தது. துடித்துப் போனாள் பெண்.

போதையில் இருந்த செல்வத்துக்கு மகளை மாறி உதைத்து விட்டோமே என்றெல்லாம் தெரியவில்லை. தெரிந்தாலும் குற்ற உணர்ச்சி கொள்ளப்போகும் ஆளும் அவர் இல்லை.

““**** **** புருஷன்னு ஒரு மரியாதை இல்லாம என் கையைப் புடிச்சு இழுத்து வெளியவா தள்ளுற? இது என் வீடு டி. எங்க அம்மா கட்டின வீடு. என் வீட்டை விட்டு என்னை வெளிய தள்ளுறியா நீ? சாவு டி.” என்று கொண்டே பார்வதியின் முடியை பிடிக்கப் போக,

“அப்பா! விடுங்கப்பா. எதுவா இருந்தாலும் வீட்டு உள்ள போய் பேசிக்கலாம் பா. எல்லாரும் பார்க்கிறாங்க.”

வலியும் அவமானமும் தாக்கினாலும் அழுத்தமாக அவரை நோக்கி உரைத்த  தமிழ், அவரின் கையைப் பிடித்துத் தடுத்தும் இருந்தாள். அவரின் ஆத்திரத்துக்குத் தீனியாகியும் போனாள்.

“நான் போட்ட பொட்டை நாயி. என் பேச்சைக் கேட்காம நேத்து அந்த ரத்தினம் மகன் வீட்டுக்குப் போய் அவன் கூட **** வந்ததும் இல்லாம, இப்போ என்னை அடிக்கக் கையை வேற பிடிக்கிறியா?” என்று பாரபட்சம் பார்க்காமல் அவளையும் அறைந்து தள்ளினார்.

உள்ளிருந்த அல்கஹால் சாத்தான், அவரின் மனித இயல்பை மொத்தமாக முழுங்கி ஏப்பம் விட்டிருந்ததில், தன் வீட்டுப் பெண்களின் மனத்தைத் தானே கேலிக்கூத்தாக்குகிறேன் என்று அவருக்குத் தெரியாமலே போனது.

“உங்க எல்லாருக்கும் எவ்வளவு  கொழுப்பு இருக்கும்டி? நானும் பார்த்துட்டே இருக்கேன், வர வர  புருஷன்னும் மரியாதை இல்ல, அப்பன்னும் மரியாதை இல்ல. எனக்கு மரியாதை தராத நீங்கள்லாம் இருந்து எனக்கு என்ன இதுக்கு? இருங்கடி **** இன்னைக்கே உங்களை உயிரோட கொளுத்திடுறேன்.”

தடுமாறிக் கொண்டே அவர் வீட்டுக்குள் நுழைய, பார்வதி வலித்த குறுக்கைப் பிடித்துக் கொண்டே எழுந்தவர் இறுக்கத்துடன் மண்ணில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த மகளை வேதனையோடு பார்த்தார்.

ஆனாலும் இது வேதனைகளை எண்ணிக் கலங்கும் நேரமல்ல என்று,

“தமிழ்! எழுந்திருடி. உங்கப்பன் வழமைய விட நல்லா போதையேத்திட்டு வந்திருக்கான். உண்மைக்கும் எதுவும்  பண்ணித் தொலைச்சிடப் போறான்டி. எந்திரிச்சு வா. நாம பாக்கியம் வீட்டுல  இருப்போம். உங்க அண்ணனுக்கு ஃபோன் பண்ணி அவன் வந்ததும் வீட்டுக்கு வருவோம்.” என்று உலுக்க அவளோ ஜடமாக சிறு அசைவு கூட இன்றி இருந்தாள்.

வீட்டுக்குள் சண்டை நடந்தாலே ஏதாவது கேட்குமா என்று காதைக் கொடுத்துக் கேட்கும் அயலவர்கள் மத்தியில் தன்னைத் தெருவில் தள்ளித் தந்தையானவர் தனக்கு சூட்டிய பட்டத்தை நினைத்து நினைத்து மனதை சிதைத்துக் கொண்டிருந்தவளை இன்னும் இன்னும் மண்ணுக்குள் தள்ளிப் புதைத்தது, சுற்றியும் கூடிவிட்ட சிறு கூட்டத்தில் இருந்து வந்த முணுமுணுப்புகளும் சங்கேத சிரிப்புகளும்.

இந்த உயிர் இன்னும் வேண்டுமா என்ற விரக்தியில் இருந்தவளின் உயிரைக் காப்பாற்ற, பார்வதி மீண்டும் அவளை அதட்டி உலுக்கினார்.

அதற்குள் கிருஷ்ணாயில் கேனைத்  தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு  வந்து கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அதைப் பார்த்து அதிர்ந்த பார்வதி, “ஏய் தமிழ் எந்திரிடி. உங்கப்பனுக்கு  மனநோய் முத்திருச்சுடி. இவளோ நாளும் கொளுத்துறேன்,  கொளுத்துறேன்னு சொன்ன ஆளு, இன்னைக்கு மண்ணெண்ணெய கையில எடுத்துட்டான். எந்திரிடி. நீயும் என்னை சாகடிக்காம எந்திருச்சு வாடி..”

என்ன சொல்லியும் அவள் அசையவில்லை என்றதும் அவள் முதுகில் அடித்து எழுப்பப் பார்த்தார்.

ம்ஹூம்.. அசையவே இல்லை அவள்.

“இனியும் நான் இருந்து என்ன ஆகப் போகுதுமா? இவருக்குப் பொண்ணாப் பொறந்து தினம் தினம் அசிங்கப்பட்டு வாழுறதுக்கு ஒரேடியா எரிஞ்சு  போறேன். என்னை விட்டுட்டு நீங்க தள்ளி நில்லுங்க. அவரு ஆசைக்கு என்னைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடிக்கட்டும்.”

“கொண்டாடுறேன் டி. கொண்டாடுறேன். இப்ப உங்க ரெண்டு பேரையும்  எரிச்சிட்டு, அப்புறம் நான் பெத்தனே ஒரு தறுதலைய… கூடப் பிறந்தவளுக்கு மாமா வேலை பார்க்கிறவனை… அவனையும் எரிச்சிட்டு மொத்தமா திவசம் கொண்டாடுறேன்.”

போதை கண்ணை மின்ன கேனின் மூடி எங்கே இருக்கிறதென்று தெரியாமல் எங்கெங்கோ பிடித்து சுழற்றியவாறு வீர வசனம் பேசிக் கொண்டிருந்த செல்வம், அருகில் நின்றிருந்த ஒருவனை,

“டேய் தியாகு! இந்த மூடியைக்  கொஞ்சம் திறந்து குடுடா. சீக்கிரம் இவளுகளை முடிக்கணும்.” என்று அழைக்க அந்தத் தியாகு எனப்பட்டவன் அரண்டு விட்டான், வேடிக்கை பார்க்க வந்தவனைக் கொலைக்குக் கூட்டு சேர்க்கிறானே என!

அதன் பின்தான் நிலைமை தீவிரமாக செல்வதை உணர்ந்த வேடிக்கை பார்க்க வந்த ஆண்களில் சிலர், திமிறத் திமிற செல்வத்தைப் பிடித்துக் கொள்ள,

அதில் ஒருவன், “டேய்! யாராச்சும் ஒருத்தன் ஆனந்தனுக்கு ஃபோன் பண்ணுங்க.” என்று குரல் கொடுத்தான்.

“டேய் நாற ***** நாய்களா, எதுக்குடா என்னைப் பிடிக்குறீங்க? இவளுகளை  நான் அடிச்சா உங்களுக்கு என்னடா? நான் இல்லாத நேரம் நீங்களும் இவளுககிட்ட வந்து போறீங்களா? அதுல வந்த பாசமாடா உங்களுக்கு?” என்று பேசப் பேச பார்வதி,

“ஐயோ! ஐயோ! பாவி எப்பிடிலாம் அபாண்டமா பேசுறான். இப்பிடிலாம் பேசுனேனா, உன் நாக்கு அழுகிதான் போகும்.” என்று தங்களின் ஒழுக்கத்தை சந்தி சிரிக்க வைக்கும் கோபத்தில் மண்ணை வாரித் தூற்றினார்.

தமிழுக்கோ இப்போது குனிந்து தரையைப் பார்க்கக் கூட அசிங்கமாக இருந்தது. பூமாதேவி கூடத் தன்னைக் கேலி செய்து சிரிப்பது போலான பிரம்மை.

கண்ணைக் கரித்துக் கொண்டு வர, விறுவிறுவென எழுந்தவள் தந்தையைப் பிடித்து வைத்திருந்தவர்களைப் பார்த்து…

“அவரை விடுங்க…” என்றாள் அழுத்தமாக.

அவர்கள் தயங்க, “நீங்க உதவினு நினைச்சுதான் செய்றீங்கனு  எங்களுக்குப் புரியுது. ஆனா அதைப் புரிஞ்சிக்குறளவுக்கு எங்கப்பா இல்ல. இன்னும் நீங்க நிக்க நிக்க இதைவிட அசிங்கமாதான் பேசுவாரு. அதான் உங்களைத் தயவு பண்ணிக் கேட்டுக்கிறேன், இனி உங்க கண்ணு முன்ன இவர் எங்களைக் கொலையே பண்ணாலும் பார்த்துட்டுப் பேசாம போயிடுங்க. முடிஞ்சா எங்களை மன்னிச்சிடுங்க.” என்று கையெடுத்துக் கும்பிட அவர்களுக்கும் அவள் மன வேதனை புரிய செல்வத்தை விட்டு நகன்றனர்.

அடுத்து அவர், “என்னடி நான் சொன்னப்போ யாரும் நகரல, நீ சொன்னதும் கேட்டுக்குறாங்க. அவ்வளவு பழக்கமோ?” என்று கேட்பதற்குள் தமிழ் தானே மூடியைக் கழற்றி விட்டு,

“இந்தாங்க, நானே தொறந்து வச்சிட்டேன். உங்க ரொம்ப நாள் ஆசையை நிறைவேத்துங்க. உங்களை மாதிரி ஒரு ஆளுக்குப் பொண்ணாப் பொறந்த பாவத்தை உங்க கையாலேயே போக்கிக்கிறேன்.”

துளி கூட கலக்கம் இல்லாமல் சொன்னவள், நெருப்புக் குளியலுக்குத் தயாராக கண் மூடி நின்றாள்.

“தமிழ், உனக்கென்ன பைத்தியமாடி பிடிச்சிருக்கு?” என்று பார்வதி அவளை நெருங்க…

“நீ இப்பிடி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேன்னு நினைச்சியா? நான் சொல்லிக் கேட்காத பிள்ளை எனக்குத் தேவையில்லை.” என்று செல்வம் மகளுக்கு மண்ணெண்ணெய் அபிஷேகம் செய்யும் நோக்கில் கேனைத் தூக்கிக் கொண்டு கையை உயர்த்த…

இருவர் கைகளுக்கும் கிடைக்காமல் அவளைத் தன் கரங்களுக்குள் எடுத்துக் கொண்டிருந்தான், பார்த்தி.

பார்த்தியின் வேகத்தைப் பார்த்த பின்னே, நடக்கவிருந்த விபரீதம் உணர்ந்து கொண்ட ஆனந்தனும் திகைத்துப் போய், பைக்கை நிறுத்திய பாதி நிறுத்தாத பாதி என்று ஓடி வந்தவன், கோபமாகத் தந்தையின் கையில் இருந்த கொள்கலனைத் தட்டி,  மண்ணுக்கு மண்ணெண்ணெயைத் தாரை வார்த்தான்.

பார்த்தியின் உடலில் இன்னுமே நடுக்கம் மிச்சம் இருந்து கொண்டுதானிருந்தது. தாங்கள் இன்னும் கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் தமிழின் கதி? நினைவே பதறியது.

அச்சம் ஒருபுறம் என்றால் அதன் ஆயிரம் மடங்கு தமிழ் மேல் ஆத்திரம் பொங்கி வந்தது.

‘அவர் தான் போதையில் அறிவிழந்து நடந்து கொள்கிறார் என்றால், இவளும் முட்டாள் மாதிரி அசையாமல் நின்று கொண்டிருக்கிறாளே’

மனதில் அவளைக் கருவிக் கொண்டே தன்னில் இருந்து அவளைப் பிரித்து நிறுத்தியவன், பார்வையில் அவளிடம் அனலைக் கடத்தினான்.

தந்தை இப்படிப் பேசி விட்டாரே என்று உணர்ச்சி வேகத்தில் தன்னுணர்வின்றி செயலாற்றிக் கொண்டிருந்த தமிழுக்கும் பார்த்தியையும் அவன் கோபத்தையும் கண்ட மாத்திரம்தான், தன் உயிர் தன்னுடையது இல்லை, அவனுடையது என்றும் அதைத் தியாகம் செய்யத் தனக்கு உரிமை இல்லை என்பதும் புரிந்தது.

தான் அவனுக்குப் புரிய இருந்த அநியாயத்துக்காக அவன் கோபத்தைத் தாங்கி தலை குனிந்து நின்று கொண்டாள்.

“நல்ல நேரத்துக்கு வந்தீங்கப்பா  ரெண்டு பேரும். இல்லனா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்? அப்பனுக்கும் பொண்ணுக்கும் இன்னைக்கு ஒட்டுக்கா பைத்தியம் முத்திப் போச்சு. என்னால சமாளிக்கவே முடியல.” என்று அரற்றிய தாயை,

“அழாதீங்கம்மா.” என்று ஆறுதல் படுத்திய ஆனந்தன் தங்கையை ஒரு முறை முறைத்து விட்டுத் தகப்பனிடம் திரும்பினான்.

“குடிச்சா கையைக் காலை வச்சுக்கிட்டு  உங்களால சும்மா இருக்க முடியாதா? இவ்வளவு நாள் வீட்டுக்குள்ள கூத்துக் கட்டினது போதாதுனு இன்னைக்கு தெருவுக்குக் கொண்டு வந்துட்டீங்கல, குடும்ப மானத்தை!” என்றவன் உறும அவர் அவனை அலட்சியமாகப் பார்த்தவர்,

“நீயில்லாம இவங்களை மட்டும் மேல அனுப்புறமேனு கவலைல இருந்தேன். என் கவலையைத் தீர்க்க நீயே வந்துட்ட! இன்னைக்கே மூணு பேரையும் முடிச்சிட்டு நான் ஜெயிலுக்குப் போறேன்.” என்றவர் ஞாபகம் வந்தவராக…

“ஆமா.. இவன் யாரு புதுசா? உன் தங்கச்சியை அந்த ரத்தினம் மகனுக்கு விட்ட மாதிரியே இவனுக்கும் விட்டுக் காசு பார்க்கிறியா?” என்று பார்த்தியை அடையாளம் தெரியாமல் பேசிக் கொண்டு போக…

“அப்பாஆஆஆ!!” என்று கத்தியிருந்தான் ஆனந்தன்.

பார்த்தி அவர் பேச்சில் உச்சபட்சமாய் அதிர்ந்தவன், திரும்பி தமிழைப் பார்க்க, அவள் முகம் செத்துவிட்டிருந்தது.

ஆனாலும் தன் கவலையைப் பின்னுக்குத் தள்ளியவள், பார்த்தியை யார் என்று அறிந்து கொண்டால் தந்தை அவனை இதை விட மோசமாகப் பேசுவார் என்று அறிந்து அவனை முதலில் இங்கிருந்து அனுப்ப முடிவு செய்தாள்.

“நீ…நீங்க தயவு செய்து இங்க இருந்து போயிடுங்க. இனி நாங்க பார்த்துக்கிறோம்.” என்றாள், அவமானத்தில் நலிந்து வந்த குரலில்.

பார்த்தி அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,

“உன்னை இந்த நிலைமையில விட்டுட்டுப் போய் என்னை வீட்டுல சொகுசா தூங்க சொல்லுறியா?” என்றான் வார்த்தைகளை மென்று.

தமிழ் அயர்ந்து போய்ப் பார்த்தாள் அவனை.

“சொன்னா கேளுங்களேன். அவருக்கு நீங்க யாருனு தெரிஞ்சா ரொம்பப் பேசுவாரு. உங்களுக்கு இதெல்லாம் தேவையா? அதான் அண்ணா வந்துட்டாரே. அவரு பார்த்துப்பாரு. நீங்க கிளம்புங்க பார்த்தி பிளீஸ்.” என்ற,  பார்த்திக்கு சினமேறியது.

“வாயை மூடு தமிழ்! நான் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். ஏற்கனவே நீ பண்ண வேலைக்கு உள்ள அப்டியே பத்திட்டு எரியுது. மேல மேல இப்பிடிப் பேசி என்னை இன்னும் வெறியேத்தாத.”

இதுவரை தமிழ் அறிந்திராத பார்த்தியின் கடும் குரல் அவளைக் கொஞ்சம் அடங்க வைத்தது.

அடுத்து தந்தையை முறைத்துக் கொண்டு நின்ற ஆனந்தனைப் பார்த்த பார்த்தி,

“அண்ணா! இதுக்கு மேல இங்க நின்னு எதுவும் பேசிக்க வேணாம்ணா. உள்ள போலாம் வாங்க.” என்றான் தங்களை சுற்றிலும் நின்ற கூட்டத்தைப் பார்த்து.

ஆனந்தனுக்கும் அது புரியவே செய்தது. ஆனால் செல்வம்…

“ஏய்! நீ யாருடா, என் வீட்டு உள்ள வந்து பஞ்சாயத்துப் பேச? உன் பழக்கத்தை எல்லாம் அவ கூட வெளிய வச்சுக்கோ. வீடு வரைக்கும்லாம் வந்தா வெட்டிப் போட்டுடுவேன். இந்த செல்வத்துக்கு மானம் மரியாதைதான் ரொம்ப முக்கியம்!” என்றார், அவிழ்ந்து விழக் காத்திருக்கும் வேஷ்டியை இறுகக் கட்டக் கூட தெம்பின்றி ஆடியபடி!

“வீட்டுக்குத் தெரியாம ரகசியமா  எல்லாம் வச்சிருக்கிற அளவுக்கு எங்க உறவு தப்பானதோ, தரங்கெட்டதோ இல்லை மாமா. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்குயிரா விரும்புறோம். கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்னு நாலு வருஷம் முன்னாடியே பகிரங்கமா சொல்லிட்டேன். இதுல எங்க ரகசியம் இருக்கு சொல்லுங்க?” என்று பார்த்தி நேருக்கு நேர் கேட்டு விட…

அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டிருந்த செல்வம், அதன் பின்னே விழிகளை சுருக்கி நெற்றிக்கு நேரே கைகளை வைத்து என்று பார்வையைக் கூர்மையாக்கும் அத்தனை உத்திகளையும் செய்து பார்த்தார்.

அதன் பின்னே ஒன்றோடு ஒன்றைப் பொருத்தி எதிரில் நிற்பது சாட்சாத் ரத்தினம் மகன் என்பதை சரியாகக் கண்டு பிடித்தார். அதன் பின் சொல்ல வேண்டுமா?

“டேய்… நீ அந்த ரத்தினம் மகன்தான? என் வீடு வரைக்கும் வந்து என் முன்னால பேச உனக்கு எவ்வளவு  தைரியம் இருக்கணும் டா? உன்னை இன்னைக்கு என்ன பண்ணுறேன் பாருடா.” என்று கோபத்தை அவன் மேல் மடை மாற்றி, சீறிக் கொண்டு அவர் அவனை நெருங்க ஆனந்தன் தந்தையைப் பிடித்துக் கொண்டான்.

தமிழுக்கே பார்த்திக்குத் தந்தை செய்யும் அவமரியாதையில் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

ஆனால் பார்த்தி நிதானமாக நின்றவன்,

“உள்ள போய் பேசலாம் மாமா.” என்றான் பொறுமையாக.

“யாரு யாருக்குடா மாமா?” தான் விரோதியாக நினைக்கும் ஒருவன் தன்னை உறவு சொல்லி அழைத்தால் முதலில் நா உதிர்க்கும் அக்மார்க் கேள்வியில் ஆரம்பித்து, அதன் பின் எந்தத் துறவிக்கும் கோபம் வரக் கூடியவாறு நான்கு கெட்ட வார்த்தைகளைப் போட்டுத் திட்டி முடித்தவர்,

“என் வீட்டுக்கு முன்னாடி வந்து நிக்கக் கூட உனக்கு யோக்கியதை கிடையாது. இதுல என் வீட்டுக்குள்ள வந்து பேசப் போறியாடா, பொறுக்கி நாயே!” ஆனந்தன் தடுத்தும் கேளாமல் கண்டமேனிக்கு வார்த்தைகளை வாரி இறைக்க, தமிழின் பொறுமை உடைந்தே போனது.

“போதும் நிறுத்துங்க. யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுறீங்க? அவரு முன்ன நின்னு ஒரு எழுத்தை  உச்சரிக்கக் கூட உங்களுக்குத்தான் அருகதை இல்ல. நீங்க அவரைப் பேசுறீங்களா?” என்று வெடித்து விட்டாள்.

தன்னைப் பேசிய போது பெற்ற கடமைக்கு என்று பொறுத்துக் கொண்டாள். அதற்காக பார்த்தியை எல்லாம் இவர் பேசக் கேட்டுக் கொண்டிருப்பாளா?

ஆனால் பார்த்தியால்தான் அவளின் இந்தத் தனக்கான ஆதரவுப் பேச்சை ரசிக்க முடியவில்லை.

அவர் இங்கே நின்று கொண்டு அவள் மேல் தொடர்ந்து சேற்றை வாரி இறைக்கக் கூடாது என்றுதான் அவனே பொறுமையாக அவரை உள்ளே நகர்த்திச் செல்லப் பார்க்கிறான்.

அப்படியிருக்க பேசிப் பேசியே அவரின் ஆவேசத்தை அதிகரிக்கும் அவளை எப்படி ரசிப்பான்?

அடுத்து செல்வம் தமிழை நோக்கி வார்த்தை எனும் அமிலங்களைக் கக்கும் முன், தான் முந்திக் கொண்ட பார்த்தி,

“தமிழ்! நான்தான் பேசிட்டு இருக்கேன்ல? நீ எதுக்கு குறுக்க பேசுற? எதுவும் பேசாம உள்ள போறியா, இல்லையா நீ?” என்றான் அதட்டலாக.

அதற்கும் செல்வத்திடமிருந்தே பதில் வந்தது.

“என் வீட்டுக்குள்ள யாரும் போகக் கூடாது. இனி இங்க நான் மட்டும்தான் இருப்பேன். எல்லாரும் வெளிய போங்கடா. இல்ல கொன்னு போட்டுடுவேன்.”

அவர் அடங்குவதாகவே இல்லை என்றதும் பார்த்திக்கும் சலித்துப் போனது.

“அண்ணா! அவரை விடுங்கண்ணா.” என்றான் ஆனந்தனை நோக்கி.

“வேணாம் பார்த்தி. இவரு இப்போதைக்கு அடங்கவே மாட்டாரு. நீ இங்க இருந்து கிளம்பு. இது எங்களுக்குப் பழக்கம்தான், நாங்க பார்த்துக்கிறோம்.”

“நான்தான் சொல்றேன் இல்ல அண்ணா? அவரை விடுங்க. நான் பேசிக்கிறேன்.”

“ப்ச்!” என்ற ஆனந்தனும் அவன் பிடிவாதத்தில் தந்தை மீதிருந்து பிடியைத் தளர்த்தவும் “டேய்!” என்று கொண்டு தன் இலக்கை நோக்கிப் பாய்ந்தார் அவர்.

அதற்குள் பார்த்தி அவர்களின் வீட்டுப் படிக்கட்டில் ஏறிக் கொண்டவன், “எது பேசுறதா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசுங்க, மாமா!” என்று விட்டு உள்ளே திரும்பி நடந்தான்.

வீதியில் நடந்த நாடகத்தை முடித்து வைப்போம் என்றுதான் அவன் நினைத்தது. உள்ளே வந்து பேசப் போவதும் அதே செல்வம்தான் என்பதை அவன் நினைக்கவில்லையே!

விளைவு… தமிழின் வீட்டை விட்டு வெளியில் வரும் போது, இந்த மாதத்துக்குள் தங்கள் திருமணம் நடந்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை நெஞ்சிலும் தமிழ் வீட்டினரின் முன்னிலும் உறுதியாகப் படித்து விட்டு வந்தான்.

எல்லாம் சரி…

திருமணம் குறித்த தமிழின் முன்னைய நிபந்தனைகள் அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டனவா? இல்லை, செல்வத்தின் நிந்தனைகளை முன்னிறுத்தி நிராகரிக்கப்பட்டனவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!