Skip to content
Post Views: 14,012
அத்தியாயம் 6
செந்தமிழ் இரவு இல்லத்திற்குள் நுழையும் பொழுது, நிசப்த போர்வை போர்த்தி இருந்தது.
Advertisement
பொதுவாகவே வீட்டில் தந்தையையும் மகளையும் தவிர எவரும் கலகலவென்று சிரித்துப் பேச மாட்டார்கள். சவிதாவின் மகிழ்ச்சி எல்லாம், இதழோரம் விரியும் மௌனப் புன்னகையிலேயே உறைந்து விடும். பெரியவர்களும் அப்படியே!
Advertisement
அதனால் பெரும்பாலும் சற்று அமைதியாகத்தான் இருக்கும் வீடு. அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளாய், மௌனத்திற்கு மறுபெயராய் மாறிவிட்டது அவ்விடம்.
Advertisement
ஜெயராம் இருக்கும் பொழுது, எப்பொழுதுமே பேச்சொலி தான். தந்தையும் மகளும் இணைந்து விட்டால், ஒருசில தருணங்களில் சுவரில் பட்டு எதிரொலிக்கும் அளவிற்குச் சிரிப்புச் சத்தம் கேட்கும்.
Advertisement
இன்று மின்விசிறி, சமையலறை சத்தம், தொலைக்காட்சி என எல்லாமுமே இருப்பை வெளிப்படுத்தாத.. மூச்சடைக்க வைக்கும் அளவிற்கான அமைதியை உணர்ந்த தமிழிற்கு, எதுவோ சரியில்லை என மனம் எடுத்துரைத்தது.
“அம்மா..” என்றவளின் குரலிற்கு வெளியே வந்த சவிதா, “கைக்கால் கழுவிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!” எனச் செல்ல, சிந்தனையுடனே பின் தொடர்ந்தாள்.
உணவைப் பரிமாறிய அன்னையிடம், “ஆச்சி, தாத்தா எங்கமா.?”
“தூங்கிட்டாங்க.”
“அதுக்குள்ளயா.?”
“மணி பத்தரை ஆச்சு!”
“ஹோ.. ஆமால்ல? என்னை ஏன் எதுவும் சொல்லல நீயி?”
“என்ன சொல்லணும்கிற.?”
“பொம்பளைப் பிள்ள எவ்வளவு லேட்டா வந்திருக்க? உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? போற வீட்டுல எப்படிக் குப்பைக் கொட்டப் போற.? அப்புறம் அப்புறம்னு பத்து நிமிசத்துக்கு நீளுமே.?”
சவிதா புன்னகைக்க, “என்னாச்சு மா.?”
“என்ன என்னாச்சு?”
“என்னோட சவி மம்மி, இது இல்லையே?”
“ஏன்.. மூஞ்சி, வேற யாரோ மாதிரி இருக்குதா.?”
அவள் சிரித்து, “எவ்வளவு லேட்டானாலும், நான் வராம ஆச்சியும் தாத்தாவும் தூங்க மாட்டாங்க. ஏதோ நடந்திருக்கு வீட்டுல. என்ன விசயம்.?”
“ஒண்ணுமில்ல. வயசாகுதுல பெரியவங்களுக்கு. அதான் படுத்திட்டாங்க.”
“ஓஹோ! நானு சின்னப் பிள்ள இல்லம்மா. நீயி சொல்லுறதை அப்படியே நம்புறதுக்கு.”
“அது போகுது. உனக்கு நானு கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன், என்ன சொல்லுற.?”
அவள் திகைப்புடன், “ம்மா, காலையில ஏதோ விளையாட்டுக்குச் சொல்லுறனு நினைச்சா, அதுக்குள்ள எனைய மாட்டிவிடப் பார்க்கிற.?”
“மாட்டி எல்லாம் விடல. மாமியார் இல்லேனா, உனக்குப் பிரச்சனை இல்லேல.?”
“ம்மா, ஆர் யூ சீரியஸ்.?”
“ம்ம்..”
“என்ன திடீர்னு?”
“ஒரு பையனைப் பார்த்தேன். உனக்குச் சரியா இருக்கும்னு தான்.”
“வேணாம்.”
“நானு சரினு சொல்லீட்டேன்.”
“ம்மா..?”
“கங்கா மகன் தான், மாப்ள!”
அவள் அதிர்ச்சியாய்ப் பார்க்க, “உங்க அப்பாவோட கடைசி ஆசை!”
“ஹோ.. சென்டிமென்டா லாக் பண்ணப் பார்க்கிறியா?”
சவிதா அமைதிக் காக்க, “இல்லாத அப்பாவைப் பத்திப் பேசாத. இப்ப, இது யாரோட முடிவு.?”
“என்னோட முடிவு தான்!”
“ஏன், உனக்கு வேற மாப்ளயே கிடைக்கலயா? அந்தக் கறிகடைக் காரனைப் பிடிச்சிருக்க?”
“அப்ப, வேற மாப்ள பார்த்தா சம்மதமா உனக்கு.?”
“பேச்சை மாத்தாத மா!”
“நீதான்டி பேச்சை மாத்துற.”
“உண்மையைச் சொல்லு, இது உன்னோட முடிவா? ஆச்சி, தாத்தாவுக்குத் தெரியுமா.? அவங்க என்ன சொன்னாங்க.?”
“எனக்கு விருப்பம். தாத்தாக்குச் சம்மதம். ஆச்சிக்கு இஷ்டமில்ல. ஆனா, நடந்தா நல்லா இருக்கும்னு நானு நினைக்கிறேன். அவசரம் இல்ல, யோசிச்சுச் சொல்லு!”
உணவுத் தட்டை விரல்களால் அலைந்தவள், “சரி!” என்றிட, இம்முறை சவிதாவிற்கு அதிர்ச்சியானது.
“தமிழ் நிஜமாவா?”
“ம்ம்..”
“நம்ப முடியலயே.?”
“அதுக்கு நானு என்ன செய்யிறது.?”
“இப்ப சரினு சொல்லீட்டு, எல்லாம் ஏற்பாடு ஆனதும் கல்யாண மண்டபத்துல இருந்து ஓடி எதுவும் போயிட மாட்டியே.?”
“அம்மா?”
“கேட்டு, உறுதி படுத்திக்கிறேன்டி. பின்னாடி, நாங்க அசிங்கப்பட முடியாது!”
அவள் முறைக்க, “அப்ப உண்மையாவா.?”
“மம்மி பிராமிஸ், போதுமா.?”
“இப்ப நம்பித்தான் ஆகணும், வேற வழியில்ல!”
செந்தமிழ் சிரித்து, “நானுதான் சரினு சொல்லீட்டேனே? எனக்கு ஒரு விபரம் தெரியணும், சொல்லுறியா ம்மா.?”
“என்ன விபரம்.?”
“இந்தக் கல்யாண முடிவு, நிஜமாவே உன்னோடதா.?”
“ஏன், உனக்கு இந்தச் சந்தேகம்.?”
“என்கிட்ட கேட்ட சரி, உன்னோட மருமகன்கிட்ட பேசுனியா..?”
“அவனுக்குச் சம்மதம் தான்!”
“எப்பப் பேசுன?”
“நேத்து!”
“அப்ப.. நீ, அவன்கிட்ட பேசல. அவன்தான், உன்கிட்ட கல்யாண பேச்சை ஆரம்பிச்சிருக்கான். என்ன சரியா.?”
செந்தமிழ் இளஞ்சேரலை மணந்து கொள்ளச் சம்மதித்த மகிழ்ச்சியில்.. தன்னை அறியாமலேயே உண்மையை உடைத்து விட்ட முட்டாள் தனத்தை எண்ணி சவிதா பாவமாய்ப் பார்க்க, அவள் முறைத்து விட்டுச் சென்றாள்.
அதன் பின்னர் அன்னையானவர் பேச முயற்சித்தது எல்லாம்.. விழலுக்கு இறைத்த நீராய் வீணாய்ப் போக, இளையவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
மறுநாள் வேணுகோபாலனிடம் தமிழ் சம்மதித்ததைத் தெரிவிக்க, அவரிற்குமே வியப்பு தான்.
“என்னமா சொல்லுற.?”
“ஆமா மாமா.”
“ஆச்சரியமா இருக்கு. இவ, அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிற ஆள் இல்லயே.?”
சவிதா சிரித்து, “எனக்கும் அதே சந்தேகம் தான் மாமா. இருந்தாலும் அவ சரினு சொன்னதே பெரிசு. அதான், மேல எதுவும் கேட்டுக்கல நானு. கல்யாணத்தை நடத்தி வைப்போம், மத்ததைச் சேரல் பார்த்துப்பான்.”
“ம்ம்..” என அவர் பெருமூச்சு ஒன்றை வெளிவிட, “நேத்துச் சாயங்காலம் பேசினதுக்கு அப்புறம், அத்தை எதுவும் சொன்னாங்களா மாமா.?”
“வேணாம்னு சாதிக்கிறா. ஆனா, இப்பதான் தமிழ் சரினு சொல்லிட்டாளே? பேத்தியோட விருப்பத்துக்கு மறுப்பு சொல்லீடுவாளா நாராயணி.?”
“ரெண்டு பேரும், ஒரே குணம் மாமா. ஒரு முடிவு எடுத்தா, எடுத்தது தான். பிடிவாதம் பிடிச்சா, பிடிச்சது தான்!”
“அது பிறப்பால வந்த குணம், மாத்துறது சிரமம். சரி, அடுத்துச் செய்ய வேண்டியத பார்க்கலாம்.”
“அத்தையோட சம்மதம், மாமா?”
“நானு பேசிக்கிறேன்!”
“சரி!” என்ற சவிதா, சேரலிடம் உரைப்பதற்காக நகர்ந்தார்.
* * *
சட்.. சட்.. என்ற தொடர்ந்த ஒலியில்.. வெள்ளிக் கடைக்குச் சென்று கொண்டிருந்த கீதா, அவ்விடம் நோக்கி நகர்ந்தாள்.
“அண்ணே.. வலிக்கிதுண்ணே.. விடுண்ணே..” எனக் குமார் தெருவில் உருண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, இளஞ்சேரலின் கையில் இருந்த கம்போ இடைவெளி இன்றி அவனது தேகத்தைப் பதம் பார்த்தது.
கீதா, “டேய்.. டேய்.. என்னத்துக்குடா இந்த அடி அடிக்கிற? கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்குடா அவனுக்கு, இப்பப் போயி அடிச்சிக்கிட்டு இருக்க.? ஊர்க்காரவங்களோ, அந்தப் பிள்ள வீட்டுலயோ யாரும் பார்த்தா.. என்ன நினைப்பாங்க? நாளப்பிள்ள பொண்டாட்டிக்காரி மதிப்பாளா.?”
“பொண்டாட்டி மதிக்கணும்னா, அதுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கணும் அக்கா.”
“அதுசரி! இப்ப என்னத்துக்கு இந்த அடி?”
“கல்யாண மிதப்புல திரியிறான் போல? சொன்ன, ஒத்த வேலையைக் கூடச் செய்யல. அதை என்கிட்டயும் சொல்லல.”
கீதா, குமாரைக் கேள்வியாய் நோக்கினாள்.
அவன், “ஏன்டா நாயே.. நேத்து என்னடா சொன்னேன் உன்கிட்ட? சாயங்காலம் பண்ணைய ஒருஎட்டுப் பார்த்து, கோழிகளுக்குத் தீவனம் போட்டுட்டு போடானா.. புது மாப்பிள்ள ஜோரா புல்லட்டுல கிளம்பிப் போறீங்களோ.? தண்ணி வைக்கலாம்னு ராத்திரி போறேன்கா, எல்லாக் குஞ்சும் சோர்ந்து போயிக் கிடக்குது!”
கீதா, “ஏன்டா?” என்றபடிக் குமாரைப் பார்க்க, “சரி போகல. அதை எனக்குச் சொல்லணுமா, இல்லையா? விசாரிக்கிறதுக்காக ஃபோனைப் போட்டா, எடுக்கவே மாட்டிறான். துரை இன்னைக்குக் காலையிலயும் கடைக்கு வரல. இப்பவும் கூட.. நானுதான் வீட்டுக்குப் போயிப் பார்த்து இழுத்துட்டு வந்திருக்கேன். நல்லா மூக்கு முட்ட குடிச்சிட்டுப் படுத்துக் கிடக்கான்.” எனும் பொழுதே,
கூலி வேலைக்குச் சென்றிருந்த குமாரின் அன்னை.. மகனிற்குச் சமைத்து வைப்பதற்காக இல்லத்திற்கு வந்த போது, அக்கம் பக்கம் வீட்டார் உரைத்ததைக் கேட்டு, பதறியபடி வந்தார்.
“ஐயோ என்பிள்ள! உன் கையி கட்டையா போக! விளங்குவியா நீயி?” என்றபடி மகனைத் தூக்க, “நானு விளங்குறது இருக்கட்டும். நீயி, என்ன சொல்லி என்கிட்டக்க இவனை வேலைக்கு அனுப்புன?”
கருவிழிகளை அங்கும் இங்குமாய் உருட்டியவர் அமைதிக் காக்க, “ஆத்தாளும் மகனும் கூட்டுக் களவாணிங்க. இனிமேலு, இவன் கடைப் பக்கம் வந்தியான் துணிய கழட்டிட்டு ஓட விட்டுடுவேன். ஒழுங்கா, வாங்குன காசு பத்தாயிரத்தை இன்னும் ஒரு வாரத்துல கொண்டு வந்து தந்துடணும். இல்ல, மறுநாளு வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்.”
“அண்ணே.. வேலை இல்லேனா, கல்யாணம் நின்னுப் போவும்..” என அவன் பாவமாய் உரைக்க, “நிக்கட்டும். உருப்படியா வேலை செஞ்சு சம்பாதிக்கத் துப்பு இல்லாதவனுக்கு, கல்யாணம் ஒண்ணுதான் குறை! நானே அந்தப் பொண்ணோட அப்பனை பார்த்து, ஆகாத பயலுக்கு என்னத்துக்குப் பொண்ணைக் கொடுக்குறீங்க? வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்கனு சொல்லீட்டு வந்திடுறேன்!” என்று விட்டு நகர,
குமார், “அக்கா.. அக்கா.. அசிங்கமா போவும். நீயாவது அண்ணங்கிட்டச் சொல்லுக்கா.” எனக் கீதாவிடம் கெஞ்சினான்.
“அவனுக்குத்தான் வேலையில சுத்தம் இல்லேனா, பழியா கோவம் வரும்னு தெரியும்ல? தெரிஞ்சிருந்தும்.. வருசத்துக்கு நாலு தடவை இதுமாதிரி ஏதாவது குரங்குச் சேட்டை செஞ்சு, மிதி வாங்கணுமா உனக்கு? ஏன்டா? முன்னாடி சரி, இப்ப உனைய நம்பி ஒரு பொண்ணு வேற வரப் போறா. கொஞ்சமாது திருந்துறியா? சரி, ரெண்டு நாளு கழிச்சு வா. நான் அவன்கிட்ட பேசி வைக்கிறேன்!” என்றவள், “சேரா, நில்லுடா..” என அழைத்த படியே பின் தொடர்ந்தாள்.
தமக்கையின் குரலிற்குச் செவி சாய்க்காது நடந்தவன், “காலு நோகுது, நில்லேண்டா!” என்ற ஒற்றைச் சொல்லில் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
“நீயி என்னத்துக்கு இப்படி ஓடிவார?”
“இம்புட்டுக் கோவம் ஆகாது, வேணாம்டா!”
“இதுக்கே அடங்க மாட்டிறான். எவ்வளவு வாங்குனாலும், அவன் செய்யிறதைத்தான் செய்யிறான்.”
அவள் சிரிக்க, இளஞ்சேரலின் இதழ்களும் அனிச்சையாய் மலர்ந்தன.
“கொலுசு அந்துப் போச்சுடா, பத்த வச்சுக் கொண்டு வர்றியா?”
“கொடு!” என வாங்கிச் சட்டைப் பையில் போட்டவன், “புதுசா வாங்குறது தான?”
“என் புருசனோட வருமானம், அதுக்குக் கட்டுபடி ஆகாது!”
“உனைய யாரு, மாமாக்கிட்ட கேட்க சொன்னா? நான் வாங்கித் தர்றேன்.”
“எனக்கு அவரு வாங்கித் தர்றதே போதும். நீயி, உன்னோட பொண்டாட்டிக்குச் சேர்த்து வையி!”
அவன் சிரித்து விட்டு நகர, “ராத்திரிக்குச் சாப்பிட வந்திடுடா.”
“சரிக்கா..” என்றவன் நில்லாது நடக்க, வீட்டிற்குச் சென்றாள் கீதாராணி.
கடையில் கொலுசைக் கொடுத்து, “பத்த வச்சு, மெருகு போட்டுடுங்க. அப்படியே புதுசு மாதிரி ஜொலிக்கணும்!” என்றவனைப் பார்த்துச் சிரித்தவர், “அதுக்கு, புதுசே வாங்கலாமே.?”
“சொன்னேனே! அக்கா தான் கேட்க மாட்டிது. சரி, எப்ப வந்து வாங்கிக்கட்டும்.?”
“ரெண்டு நாளுல வாய்யா!” என்றவரிடம் நூறு ரூபாயை முன் பணமாய்க் கொடுத்துவிட்டுக் கிளம்பியவனின் கைப்பேசி ஒலித்தது.
எதிர்புறம் சவிதா தான் பேசினார். சொன்ன செய்தியில் அகமும் முகமும் மலர்ந்திட, இல்லத்தை நோக்கி நடந்தான் இளஞ்சேரல்.
error: Content is protected !!