Skip to content
Post Views: 1,158
“ஏண்ணே… இது சுத்தமான பாலா?” இதோடு மூன்றாவது முறையாகக் கேட்டுவிட்டான் கார்த்தி.
“டேய் பாய்லர தூக்கி மூஞ்சில ஊத்திட போறாரு சும்மா இருடா” வழக்கமான அதிகாரத்தைக் கொண்டு அவனை அடக்க முயன்றான் ப்ரேம்.
ஆனால் அந்த டீ கடைக்காரரோ சிறிதும் கோபமின்றி இன்னொரு டீ குவளையை அவன் முன் வைத்து, “நிஜமா தான்பா தம்பி. ஏற்கனவே பால் காரன் தண்ணி கலந்து தான் தருவான், இதுல நான் எதுக்கு இன்னும் தண்ணி கலந்து குடுக்கணும்?” என்றவர் வேலையில் கண்ணாக இருந்தாலும் அவனுக்கும் பதில் கொடுக்க தவறவில்லை.
“அண்ணே, இது மாதிரி பால் நான் குடிச்சதே இல்ல… மாட்டுல இருந்து பால் கறந்த ஒடனே குடிக்கிற மாதிரி இருக்குண்ணே. பேசாம ஏங்க ஊருக்கு வந்துடுங்க… நாம சேந்து பிசினஸ் பண்ணிடலாம்” இது ஹரி… அவர் கொடுத்த இரண்டாவது கிளாஸ் தேநீரை ரசித்து ருசித்து குடித்துக்கொண்டிருந்தான்.
Advertisement
“டேய் மாடு களனி தண்ணி குடிக்கிற மாதிரி இருக்குடா… மெதுவா சவுண்ட் வராம தான் குடியேன்” பிரைமரி ஸ்கூல் குழந்தைகளை மேய்ப்பது போல் இருந்தது ப்ரேமுக்கு.
“குடிக்கட்டும்பா தம்பி… ஒருத்தர் நம்மள மனசார பாராட்டுறப்ப கிடைக்கிற சந்தோசமே தனி” அவரை பார்த்தவுடன் அவர்கள் நால்வருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
பேச்சில் ஒரு சிரிப்பு, நாள் முழுதும் நின்றாலும் கோவம் சிறிதும் வேலையில் காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் தந்தை வயது இருக்கும், அந்த முதிர்ச்சியே அவர் பேச்சிலும் மனிதனை இடைப்போடும் பார்வையில் தான் என்பதைப் பார்த்தனர்.
Advertisement
“தம்பி இதே டீ பவுடர் எந்த ஊருக்கு போனாலும் வாங்கலாமுங்க, ஆனா இந்த பால் இருக்கு பாருங்களேன் அது நம்ம ஊருல இருக்குற நாட்டு மாட்டுக்கு மட்டும் தான்பா வரும். இளவட்ட பசங்க கண்டது கழுத்தையும் சாப்டுட்டு என்னோட சாதாரண இந்த டீ காப்பீ உங்களுக்கு தேனா இருக்கு. காலைல வாங்கையா நீங்க ஆசையா குடிக்கிறத பாத்து நல்ல டீ போட்டு குடுக்கணும் போல இருக்கு. மாட்டுல இருந்து கறந்த ஒடனே ஒரு கிளாசு டீய போட்டு தந்தர்றேன்” அவரின் வெள்ளந்தியான பேச்சு அவர்களுக்குச் சிரிப்பைத் தான் கொடுத்தது.
Advertisement
“அண்ணே சொல்றத பாத்தா அண்ணனுக்கு மாடு எல்லாம் இருக்கும் போலயே…” அவன் நூல் விடுவதை நண்பர்கள் மூவரும் புரிந்து அமைதி காத்தனர்.
“ஆமாங்க தம்பி விக்கிற விலை வாசில அடுத்தவனை நம்பி எதுவும் பண்ண முடியல, அது தான் நாட்டு மாடு ரெண்டை வாங்கி விட்டுட்டேன் ஆனா நாட்டு மாட்டு பாலு நம்ம நினைக்கிற அளவுக்கு பால் வராதுங்க, அதுக்கு தான் கடனை உடன வாங்கி ரெண்டு மாடு வாங்கி போட்டு மிச்சம் தான் பண்ணைல இருந்து வாங்குவோம். அந்த மாட்ட கட்டி போடவே ஒரு சின்ன தோட்டம் கூட வாங்குனேன் அது கூட இப்போ மாசம் ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் கைக்கு வரும்”
இருப்பதற்கு ஒரு இடத்தை தேட அந்த சிறு ஊரை ஹரி ஒரு முறைக் கையில் கேமராவுடன் புகைப்படக்காரரைப் போலச் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு உதவுவதாக ஒருவர் கூட அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் டீயாவது குடிக்கலாம் என்று வந்த இடம் தான் இந்த கடை. இப்பொழுதே மணி இரவு ஏழைத் தாண்டி இருந்ததால் கடையில் கூட்டமும் அதிகம் இல்லை.
Advertisement
“தென்னந்தோப்பா கலக்குறீங்க அண்ணே” என்றவன் டீ கிளாஸை அங்கே வைத்து, “எவ்ளோ ஆச்சுண்ணே?”
“ஆமாங்க தம்பி தென்னை தான் ஏதோ கடவுள் புண்ணியத்துல நமக்கு பக்கத்துல இருக்க தோட்டத்துல இருந்து தண்ணி வெலைக்கு கொடுக்குறாக. இல்லனா கஷ்டம் தான் தம்பி இந்த ஊருல. அறுவது ருபாய் ஆச்சுயா” அவருடன் இவர்களுடன் பேசிக்கொண்டே அவரும் கடையிலிருந்த பொருட்களை எடுத்து வைக்கத் துவங்கினார்.
“எண்ணனே அதுக்குள்ள கடைய சாத்துறீங்க?”
“ஆமா தம்பி என் வீட்டுக்காரம்மா தனியா அங்க தோட்டத்துல இருக்கும் அது தான்… இதுல வர்ற வரைக்கும் லாபம் போதும்னு நான் ஏழு, ஏழ்றைக்கு எல்லாம் கடைய சாத்திட்டு வீட்டுக்கு கெளம்பிடுவேன்”
“ரொம்ப நன்றிண்ணே அப்டியே இங்க பக்கத்துல ஏதாவது ஹோட்டல் மாதிரி இருந்தா சொல்லுங்க”
‘அடி போட்டுட்டான்’ என்று கார்த்தியும் ப்ரேமும் நினைத்து தயாராகி இருக்க சிவாவோ, “டேய் இந்த ஊர்ல எப்டிடா ஹோட்டல் எல்லாம் இருக்கும்? கூறு கெட்டவனே” கார்த்தி அவனைப் பார்த்து நாக்கை மடித்து தலையில் அடித்தான்.
“ஆமா தம்பி இந்த ஊர்ல வந்து ஹோட்டல் எடுத்து தங்க இது என்ன டூரிஸ்ட் இடமாபா”
“ஆமால்ல? சரி இங்க கிராமத்துல எல்லாம் ஊருக்கு நடுல எங்களை மாதிரி ஆளுங்க படுத்து தூங்க ஒரு குட்டி மண்டபம் மாதிரி இருக்கும்ல அது இருக்கா?” ப்ரேமுக்கு அடுத்த கட்ட நடவடிக்கையைச் சிந்தித்தாக வேண்டும் அதற்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் அதனால் தான் திண்ணையில் கூட படுக்கத் தயாராக இருந்தான்.
அனைத்தையும் அனுபவித்துவிடும் எண்ணம் தான் அவர்களுக்கு, இது போன்ற சந்தர்ப்பம் அமைவதெல்லாம் மிகவும் அரிது ஆதலால் சிவாவின் பெயரை வைத்து அனைத்தையும் அனுபவிக்க முடிவெடுத்திருந்தனர்.
வாய்விட்டு சிரித்தவர் ஒரு துண்டு பீடியைப் பற்ற வைத்து, “அதெல்லாம் இன்னேரம் நிறைஞ்சிருக்கும் தம்பி. இங்க பஞ்சம்ன்னு சொல்லாட்டியும் வாழுறது கொஞ்சம் கஷ்டம் தான், அதுனால ஜனங்க சிலர் அந்த இடத்தை தான் வீடா வச்சுக்குறாங்க. நீங்க பட்டணத்துல வளந்த பசங்க, அந்த இடமெல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு வராது, கொசு ஆஞ்சிடும் தம்பி. நமக்கு தான் தோட்டம் இருக்கே, வாங்க சுத்தி கொஞ்சம் புகைய மூட்டி விட்டா கொசு கூட கடிக்காது, குளிக்கக் கூட அங்க சௌரியமா இருக்கும்”
உடனே ஹரி, “ஐயோ நாங்க எல்லாம் வாரத்துல மூணு நாள் தான் குளிப்போம், இன்னைக்கு தான் குளிச்சோம் சோ நாளைக்கு லீவு”
கார்த்தியும் அவனை ஆமோதிக்கும் விதமாக, “ஆமா ரொம்ப குளிச்சா உடம்புக்கு நல்லது இல்லயாம் அதுவுமில்லாம தண்ணி மிச்சம் படுத்தனும்லண்ணே” நால்வரும் அவர் பின்னாலே நடந்து ஊரைத் தாண்டி சென்றனர், செல்லும் வழி எங்கும் ஹரியும் ப்ரேமும் அந்த ஊரை நோட்டமிட்டுக்கொண்டே வந்தனர்.
“நல்லா சொன்னிங்க போங்க, இந்த பசங்க எல்லாம் தன்னோட சோம்பேறித்தனத்தை மறைக்கச் சமுதாயத்தை கை நீட்டிரிங்க… போங்க தம்பி” என்று அவர்களைச் சிரிப்புடன் ஜாடையாக தாளித்துவிட்டார்.
பேசிக்கொண்டே செல்கையில் ஒரு சிறிய மண் சாலையில் இருட்டாக இருக்க கார்த்தி பயத்துடன், “அண்ணே பாம்பு எதுவும் சைடுல வந்து கொத்திடாதுல?”
“ஆள் நடமாட்டம் இருக்கறப்ப அதிகமா வராது தம்பி, தைரியமா வாங்க”
ஹரியோ அவரிடம் மேலும் பேச்சுவார்த்தையை வளர்க்க எண்ணி, “ஊர்ல எதுவும் திருவிழாவா, ஒரே சீரியல் செட்டா தொங்குது”
“திருவிழா கூட இவ்ளோ ஜெகஜோதியா நடக்காதுயா நம்ம எம்.பி நெடுஞ்சேரன் இருக்காரு தெரியுமா?” ஹரியும் தெரியும் என்று தலையை ஆட்டினான்.
“ம்ம்ம் அவரோட பொண்ணுக்கு கல்யாணம். அதுக்கு தான் இவ்ளோ ஆர்ப்பாட்டம். அஞ்சு நாள் இங்க எந்த வீட்டுலையும் சோறு பொங்கல, எல்லாருக்கும் ஊருல இருக்குற மண்டபத்துல தான் மூணு வேளையும் சாப்பாடு… ஹ்ம்ம் எங்க போய் சொல்றது?” சலித்துக்கொண்டவர் ஒரு குறுகிய பாதையில் நடந்தார்.
“ஊர்ல இருக்க எல்லாரும் அப்ப கல்யாணத்துக்கு வருவாங்களா என்ன?” ஹரி அவருடன் நடக்க மற்ற மூவரும் பின்னால் வந்தனர்.
“ஆமா தம்பி கல்யாணத்துக்கு அவரு பசங்களே வந்து ஊர்ல இருக்க எல்லாருக்கும் பத்திரிகை வச்சிட்டு போனாங்க. ஆனா சொல்ல கூடாது மினிஸ்டர் எப்டியோ பிள்ளைங்க எல்லாம் தங்கம் தான்”
ஆக, நெஞ்சேரனை இந்த ஊர் மக்கள் சிலருக்கு பிடிக்கவில்லை… அவர் பேச்சும் அதை தான் கூறியது.
“ஓஓ மினிஸ்டர்க்கு ஒரு பையன் வேற இருக்கானா?” சந்தேகமாய் அவரிடம் கேட்டான்.
“ஒன்னு இல்ல தம்பி, ரெண்டு பசங்க. ஆனா பாருங்களேன் ரெண்டுபேரும் அப்பா வழிய பின்தொடரல வேற வேற சோழிய பாக்குறாங்க”
ஹரி வேகமாகத் திரும்பி சிவாவை ஆச்சிரியமாக பார்த்தான், ‘நாதாரி இத சொல்லலையேடா நீ’ என்று.
அங்கு கார்த்தியோ நேரடியாக அவனைத் தாக்கினான் இரண்டடி பின்னால் தள்ளி வைத்து, வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தி, “அட கிறுக்கு மூதேவி என்னடா? ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு ட்விஸ்ட் வக்கிர, ஒரு அண்ணன் இருந்தாலே பில்லர் மாதிரி முன்னாடி நிற்பானே, இதுல ரெண்டு வேற இருக்காங்களே… ஐயோ என்ன பண்ண போறோமோ”
சிவாவோ வயிற்றைப் பிடித்து பேச்சு வராமல் இரும, முன்னாள் சென்று கொண்டிருந்த ஹரி, “இருமல் வருது பாரு தண்ணி குடு”
“இப்ப தான் மாப்பிள்ளை தண்ணி குடுத்தேன்… சரியாகிடுவான்”
“எனக்காக இன்னும் கொஞ்சம் குடுடா” சூசகமாக தன் சார்பாக இன்னும் இரண்டு மிதியைத் தருமாறு கூற அதையும் செல்வனே செய்யத் துவங்கினான்.
“டேய் விடுடா கல்யாணம் ஆக போறவன் படக்கூடாத இடத்துல எதுவும் பட்டுட போகுது…” கார்த்தியைப் பிடித்த முயன்ற ப்ரேம் அந்த பெரியவரின் காதில் விழாமல் கூறினான்.
“அங்க படணும்னு தானடா நான் மிதிக்கிறதே…”
“டேய்…” சிவா பதற, “நீ தான கல்யாணம் பண்ணி வைங்கன்னு கெஞ்சுனா குழந்தை வேணும்னு சொல்லவே இல்லையே…”
அந்த பெரியவரோ பின்னால் திரும்பப் போக அவரின் தோளைப் பிடித்துத் திருப்பிய ஹரி, “என்ன ஆச்சுண்ணே?”
“இல்ல பா உன் தோஸ்துக சத்தம் கேக்கல அது தான் திரும்பி பாத்தேன்…”
“அவிங்க அவரசரத்துக்கு ஒதுங்கிருக்காங்க. நீங்க வாங்க” என்று பேச்சுவாக்கில் தனக்குத் தேவையான அணைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டான்.
பேச்சுவாக்கில் அவர் தோட்டத்திற்கு வந்துவிட அங்கு அவர்கள் கண்ணில் பட்டது ஒரு சிறு ஓட்டு வீடு தான். வீட்டை சுற்றி கட்டைகளாலும் கூரையாலும் தடுப்பு சுவர் போல் கட்டி வீட்டின் பின் பகுதியை மறைத்திருந்தது. வீட்டின் வாசல் கதவு கூட ஒரு தகர கதவு தான், தேவையே இல்லை என்பது போல் தான் இருந்தது அதுவும். ஆனால் அதற்குப் பின்னால் இருந்த தோப்பு குளுமையைக் காற்றில் வாரி இறைத்தது. இருளில் அதன் முழுத்தோற்றம் தெரியாவிடினும் காற்றின் பலத்தால் அதிலிருந்து வந்த சத்தம் நிச்சயம் அதற்கான மாய தோற்றத்தை அவர்கள் மன கண்ணில் படமெடுத்து காட்டியது.
அவர் வந்த அரவம் கேட்டு அவர் மனைவி, “சரியா சோறு பொங்கி முடிச்சேன் வந்துட்டீங்க” என்றார் உள்ளிருந்தே.
“ஏத்தா மயிலு நம்ம வீட்டுக்கு விருந்தாளிக வந்துருகாகமா” மனைவியிடம் பேசிக்கொண்டே வெளியிலிருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து அவர்களுக்குப் போட்டார்.
“உள்ள வேக்காடா இருக்குயா நீங்க இங்கையே உக்காருங்க”
அவர்கள் நால்வரும் அதில் அமர்ந்த நொடி உள்ளிருந்து பதட்டமாக வந்த அவர் மனைவி இவர்களைப் பார்த்து வர அமர்ந்த வேகத்தில் நால்வரும் எழுந்து நின்றனர்.
“ஏன்மா மெதுவா தான் வாயேன்” கணவரின் சொல்லை காதில் வாங்காமல், “வாங்க தம்பி…” என்றார் நால்வரையும் பார்த்து பொதுவாக.
“ஏங்க மொததையே சொல்லிருக்கலாமே சாப்பாடு சேந்து ஆக்கிருப்பேன். தம்பி இருங்க பத்தே நிமிசத்துல சோறு வச்சிர்றேன்”
அவர்கள் யார் என்ன எதுவும் கேட்கவில்லை கணவன் அழைத்து வந்திருக்கிறார் அது போதாதா என்ற எண்ணத்தில் அவர்களை உபசரிக்கத் துவங்கிவிட்டார்.
“ஐயோ அம்மா எதுக்கு இவ்ளோ பதட்டம், வீட்டுல இருக்குறத போடுங்க. சந்தோசமா சாப்புடுவோம்”
ப்ரேம் கூற அவனைத் தொடர்ந்து கார்த்தி, “ஆனா நாளைக்கு ஒரு நாட்டுக்கோழி வச்சிடுங்க” என்றான் வேகமாக.
அவனை முறைத்த ப்ரேம், “வாய மூடு சரியா?” என்றான் தீவிரமாக.
அவனைப் பார்த்து முகம் சுளித்த ஹரி, “அய்யா நாங்க ஒக்காரட்டுமா?” என்றான் கையை மடித்து வாத்தியாரிடம் அனுமதி கேட்பது போல் கலாய்ப்பதற்காகக் கூற தலையில் அடித்து ப்ரேம் உட்கார மற்ற மூவரும் உடன் அமர்ந்தனர்.
“ஏன் தம்பி உரிமையா கேக்குறாக செஞ்சிட்டா போச்சு” அவர் மனைவி கூறி வீட்டிற்குள் சென்று நால்வருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“இவுக நாலுபேரும் நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்காங்க ஏதோ நம்ம ஊற படம் பிடிக்கணுமாம்”
“ஏன் தம்பி உங்களுக்கு வேற ஊரே கிடைக்கலையா இந்த ஊருல விவசாயமே ரொம்ப கம்மி தம்பி…” வெளிப்படையாக கூறினார் அவர்கள் ஊரில் ஒன்றும் இல்லை என்று.
“ஏன்மா ஊருக்கு படம் பிடிக்க வந்தா ஊற மட்டும் தாணு இல்லையே ஏன் உங்கள மாதிரி மனுஷங்களையும் நாங்க தெரிஞ்சுக்கலாமே” நண்பர்களிடம் கண்ணடித்து அவரிடம் கூற அவருக்கோ முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. இங்கு ஒரு பக்கம் கார்த்தி நெளித்துக்கொண்டே இருந்தான் அவனைப் பார்த்து மீண்டும் அந்த பெண்மணியிடம் பேசத் திரும்பினான் ஹரி.
“அண்ணே உங்க பேர் என்னனு கேக்கல பாருங்களேன்…”
“முத்துமாணிக்கம் தம்பி” என்றார் இவர்களுக்கு வசதியாக ஒரு போர்வையை வீட்டின் வெளியில் விரித்து அதன் அருகில் ஒரு கம்பு ஊன்றி அதில் ஒரு வெள்ளை நிற பல்பை மாட்டிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சிவாவிடம், “டேய் யமுனாகிட்ட நாம வந்த விசையத்தை சொல்லிட்டியா?”
அவனோ திரு திருவென முழித்து, “இல்லடா…” என்றான் தயக்கமாக.
“வெண்ணை அத சொல்லி தொலை” என்கவும் எழுந்து சென்றவன் கையை பிடித்து மீண்டும் இழுத்து, “இந்த அபர்ணா பத்தியும் ஒரு வார்த்தை கேட்ரு” அவனுக்குத் தலையை ஆட்டி சிவா எழுந்து வேறு பக்கமாகச் செல்ல, பக்கத்தில் கார்த்தியோ கை கால்களை ஆட்டிக்கொண்டே ஹரியை சுரண்டினான். அவனைக் கீழிருந்து மேல் வரை பார்த்து அவன் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்தவன்
அனைத்து பற்களையும் காட்டி, “என்ன மச்சி கக்கா போகணுமா?”
கார்த்தி இயலாமையில் எல்லா பக்கமும் தலையை ஆட்ட, “முத்துண்ணே கக்கூஸ் எங்க இருக்குனு சொல்லுங்க இவன் ரொம்ப நேரமா அவஸ்தை படுறான்”
கார்த்தியோ முத்துவின் மனைவியைத் தர்ம சங்கடத்தோடு பார்த்து சிரித்து வைத்தான், “நாதாரி இத ஏண்டா இவ்ளோ டீட்டைலா சொல்ற?”
“தம்பி இந்த பக்கம் இருக்குப்பா”
வீட்டின் பின் புறம் இருட்டாக இருந்த இடத்தை கை நீட்டிக் காட்டினார் முத்து. அந்த இடமும் தென்னை மரத்திலிருந்து வரும் சத்தமும் அருந்ததி படத்தில் வரும் அரண்மனை போலே காட்சியளிக்க துணைக்கு ஒருவரை அழைத்துச்செல்ல முடிவெடுத்தான். ஹரியைப் பார்க்க அவன் மேல் சுத்தமாக நம்பிக்கை வரவில்லை, உள்ளேயே வைத்து பயம் காட்டிவிடுவான்.
இதற்கெல்லாம் ப்ரேம் மட்டுமே சரிப்பட்டு வருவான் என்று அவன் கையை பிடித்து, “மச்சி வாயேன் வீட்டை சுத்தி பாத்துட்டு வரலாம்”
அவன் கையை உதறி அவனுக்கு மட்டும் கேட்டுமாறு, “மூடிட்டு போ” என்றான் ஆணையாய்.
“ஓ உனக்கும் கக்கூஸ் வருதா, இத ஏண்டா மெதுவா காதுல சொல்ற வா…” சத்தமாகப் பேசி அவனையும் அழைக்க வேறு வழியே இல்லாமல் கார்த்தியுடன் நடந்தான் ப்ரேம்.
கார்த்தி சென்று அடுத்த நிமிடம் அவன் அலைபேசிக்கு அபர்ணா என்ற எண்ணிலிருந்து அழைப்பு வர, அதைப் பார்த்த ஹரி அவன் கைப்பேசியை எடுத்து, “என்ன?” என்றான் குரலில் திமிரை வைத்து.
“டேய் நீ ஏண்டா கார்த்தி மொபைல் எடுத்த, அவர்கிட்ட போன் குடு” எப்படி அவளுக்கு அவன் குரல் உடனே பொறி தட்டியதோ தெரியவில்லை.
“அவன் கக்கூஸ் போயிருக்கான் என்ன போய் குடுக்கவா?” கழிவறை நோக்கி ஒரு அடி நடக்கவே சென்றான்… கதவைத் தட்டிக் கொடுக்கும் ஆள் தானே அவன்…
“யோவ் நில்லுயா. ச்சை. மேன்னர்ஸ் உனக்குக் கொஞ்சம் கூட இருக்காதா?? அவர் போன் அடிச்சா ஒடனே நீ எடுத்துடுவியா”
“உன் புருஷன் போன்ன எடுத்த மாதிரி இந்த கத்து கத்துற அவன் ஃப்ரன்ட்டி. நான் அவன் போன் எடுக்காம நீயா வந்து எடுப்ப”
“டேய் டி போட்டு பேசாதேன்னு சொல்லிருக்கேன் வந்தேன்னு வை பாம்ப எடுத்து வாய்க்குள்ள விட்ருவேன்”
“நான் அதோட விஷத்தை எடுத்து உன் வாய்க்குள்ள விட்ருவேன். ஸ்பாட் அவுட்” என்றான் சிரித்துக்கொண்டே.
“ஆமா இவரு விஷம் கொடுப்பாரு நாங்க ஆ-னு வாய தொறந்து என்ன சாகடிங்க சொறி முத்து அய்யனார்ன்னு சொல்லி நிப்பேன்”
“ஏய் ரொம்ப பேசாதடி நேர்ல இல்லற தைரியத்துல பேசுறியா”
“வேப்பமரத்துக்கு சட்டை பாண்ட் போட்ட மாதிரி இருக்க உன்முன்னாடி இருந்தாலும் நான் இதே தான் சொல்லுவேன்”
“அப்ப தைரியம் இருந்தா வாடி”
“உன்கிட்ட இதெல்லாம் பேசுற நிலமைல நான் இல்ல, நான் மட்டும் பிரீயா இருந்தா உன்ன வேற மாதிரி பாத்துருப்பேன். டேய் ஒழுங்கா காது குடுத்து கேளு யமுனா ஊர் எல்லைல இருக்க கோவிலுக்கு இன்னும் அரை மணிநேரத்துல இருப்பா… கூட அவளோட அண்ணா மட்டும் தான் போறானாம். ஒழுங்கா போய் தூக்கிடுங்க. வசதியா ஊருக்கு வெளிய இருக்க கோவில். சொதப்பிடாதிங்கடா” அங்கு ஹரியோ அருகிலிருந்த மரத்தில் சாய்ந்து அதன் சிறு குச்சியை எடுத்து காதில் விட்டு குடைந்துகொண்டிருந்தான்.
தனக்கு அமைதியே பதிலாய் கிடைக்க, “யோவ் நான் பேசுறது கேக்குதா…??”
“ஆஹ்… கேக்கல” என்றான் நன்றாக சுகமாய் காதைக் குடைந்து.
அபர்ணா மீண்டும் ஒருமுறை சத்தமாகக் கூறவும் முடியாமல் பல்லைக் கடித்துக்கொண்டே, “யமுனா ஊர் எல்லைல இருக்க கோவிலுக்கு இப்ப கெளம்புறா… போய் தூக்குடா நொண்ண” உதட்டைச் சுளித்து அவள் கூறியதை உதாசீனம் செய்தான், அவனுக்குத் தான் வேறொரு எண்ணம் தலையில் ஓடிக்கொண்டு இருக்கிறதே எப்படி அவள் கூறுவது கேட்கும்?
“டேய் டோங்கிரி தலையா பொண்ண போய் கடத்துங்கடா…” ஒரு நிமிடம் நின்றவள் மீண்டும், “உனக்கு கேட்டுச்சு தான?” என்றால் பற்களை நறநறவென கடித்து.
“தெரியிதுல வை” என்று இணைப்பைத் துடிக்க அடுத்த நொடியே மீண்டும் அழைத்தாள்.
உச் கொட்டி அழைப்பை ஏற்று, “ஏய் அது தான் சொல்லிடல்ல நாங்க பத்துக்குறோம்” அவளுக்கு மேலும் பேசக் கூட இடம் கொடுக்காமல் கார்த்தியின் கைப்பேசியை சுவிட்ச் ஆப் செய்து வைத்தான், “தொல்ல ஒழிஞ்சது” என்று.
இவன் திரும்பி வந்து கட்டிலில் மீண்டும் அமர ப்ரேமும், கார்த்தியும் வந்தமர்ந்தனர். அதன் பிறகு முத்துவின் மனைவி கைப்பக்குவதில் வடித்த சோறும், ரசம், தேங்காய் துவையல் தான் வைத்திருந்தார். ஆனால் அதுவே நண்பர்கள் நால்வருக்கும் அவ்வளவு பிடித்திருந்தது. துவையல் அம்மியில் அரைத்தது. ரசத்திற்கு மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய் அம்மியில் அரைத்தது, ஆக ருசி இருக்காதா பின்ன?
“ஏன்மா ரசமே இப்டி வைக்கிறிங்களே நீங்க எல்லாம் நாட்டுக்கோழி கொளம்பு வச்சா எம்புட்டு ருசியா இருக்கும்?” வயிற்றில் இடம் இல்லை என்றாலும் அவரை பார்த்து சங்கடம் படாமல், “இன்னும் கொஞ்சம் சாதம் இருக்கா?” என்று சாப்பாட்டுச் சட்டியை எட்டிப் பார்த்தான் ஹரி.
“தம்பி சாப்பாடு சாப்புட என்னைக்குமே சங்கட்ட படக்கூடாதுன்னு என் அய்யா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு, கூச்ச படாம கேட்டு வாங்கி சாப்புடுங்க” என்று ஹரியின் இலையில் இன்னும் கொஞ்சம் சாப்பாட்டை வைத்தார்.
“மா இது எப்படி வக்கிறதுன்னு இங்க நெறையபேர் கத்துக்கணும்” நேரடியாக ப்ரேமை பார்த்து குற்றம் சாட்டினான் கார்த்தி, “உப்பு இருக்க மாட்டிக்கிது, காரம் இருக்க மாட்டிக்கிது கேட்டா இதெல்லாம் சரியா போட்டா ஒடம்பு ருசி கண்டுடுமாம். எங்க போய் இந்த கொடுமையை எல்லாம் சொல்ல?” என்றான் சலித்தபடியே.
அங்கு முக்கால்வாசி நேரம் சமைப்பது ப்ரேம் தான். கார்த்தியோ, சிவாவோ செய்தால் அன்று முழுதும் அவன் தானே பட்டினியாக இருக்க வேண்டும்? அதற்காகவே பயத்தில் அவனே அமைத்துவிடுவான். தினசரி வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருப்பவன் உணவில் மட்டும் அந்த கட்டுப்பாடை விட்டு வைப்பானா?
“அங்க வந்து மறுபடியும் என் கைல தாண்டா சாப்புடனும் அப்ப இருக்கு” என்றான் சிரித்துக்கொண்டே, அதிலே கார்த்திக்கு உதறியது. சிவா எப்படியும் தப்பித்துவிடுவான், இனி அவனிடம் இவன் ஒருவன் தானே தனியாக இருந்து அல்லோல பட வேண்டும்?
“மச்சி அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுன்னு சொன்னேன்டா. நீ வக்கிர ரசம் முன்னாடி இதெல்லாம் எம்மாத்திரம்? பாரு, காரம் எவ்ளோ இருக்குன்னு. நீ தான் மச்சான் கரெக்ட்டு” அந்தர் பல்டி அடித்தான் கார்த்தி, ப்ரேமுக்கு மட்டும் கேட்கும் வகையில்.
“மூடிட்டு நக்கி சாப்புடு, நீ எவ்ளோ பெரிய மொள்ளமாரின்னு எனக்கு தெரியும்”
“ஆமா தம்பி உங்க பேர் எல்லாம் சொல்லவே இல்ல” என்று அந்த பெரியவர் கேட்க, அனைவரையும் முந்திக்கொண்டு ஹரி, “இவன் கல்லணை” என்றான் கார்த்தியை கை நீட்டி.
அவர்கள் உரையாடலைச் சரியாகக் கேட்காமல் உணவில் குறியாய் இருந்த கார்த்தியோ தன் காலை குனிந்து பார்த்து, “இல்லையே மாப்பிள்ளை எனக்கு கால் ஆணி எல்லாம் இல்லையே” என்றான்.
அதற்குச் சிரிக்காமல் ஹரி, “இல்ல மாப்பிள்ளை நான் உன் பேர் சொன்னேன் கல்லணை-னு… நாங்க கல்லு கல்லுன்னு தான் கூப்புடுவோம்” என்கவும் தான் கார்த்திக்கு உரைத்தது.
கார்த்தியின் அகல விரிந்த கண்களைக் காணாதது போல் ப்ரேமை காட்டி, “இது பிச்சைமணி… செல்லமா பிச்சன்னு கூப்புடுவோம்” இந்த இடத்தில் முறைப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்?
“அப்றம் இவன் மாத்ரு பூதம். நாங்க பூதம்ன்னு கூப்புடுவோம்” சிவாவுக்கு தன் பெயர் தேவலை என்று தான் எண்ணம். சிரித்துக்கொண்டே அதையும் பெற்றுக்கொண்டான்.
“அப்றம் என் பேரு… தோனி” என்றான் சட்டை காலரைச் சற்று தூக்கிவிட்டு.
அவனை இடைமறித்த கார்த்தி, “அப்டி தாண்ணே இவன் சொல்லுவான் ஆனா இவன் உண்மையான பேரு… செட்டப் செல்லப்பா” என்று கார்த்தியும், “பச்சைக்கிளி” என்று ப்ரேமும் ஒரே நேரத்தில் வடிவேலுவின் பெயரை கூறி ஹரியின் காலை வாரினர். அவர்கள் கூறிய இரண்டு பெயரையும் கேட்டு முத்து மாணிக்கமும் அவர் மனைவியும் சத்தமாகச் சிரித்துவிட்டனர்.
“ஆஹ்… அதாவது முழுப்பேர் பச்சைக்கிளி செட்டப் செல்லப்பா தான் நான் அவனை செட்டப்பு செட்டப்பு னு கூப்புடுவேன் இவன் பச்சை பச்சைன்னும் ஆசையா கூப்புடுவான்…”
தன்னை தீயாய் முறைத்துக்கொண்டிருந்த ஹரியின் தோளில் கை போட்டு, “என்னடா செட்டப்பு… பாருங்க நாங்க அப்டி சொன்னாவே இந்த பயலுக்கு ரொம்ப புடிக்கும்… அது தான் காலைல இருந்து அப்டி கூப்புடவே இல்லனு பீல் பன்றான்?” வீம்பிற்காகவே கார்த்தி இழுக்க அவனை அசராமல் பார்த்து நின்றான் ஹரி.
“கள்ளு குடிக்க இடம் பாத்து வச்சிட்டேன். இருடா விட்டுட்டு போறேன்” என்று சிரித்துக்கொண்டே ஹரி கூற கார்த்திக்குத் திக்கு திசை தெரியவில்லை, வானில் தான் பறந்தான்.
“ஐயோ மச்சி இப்ப பேர் மாத்த முடியாதேடா… மச்சி கள்ளு என் காசு. ஐ ப்ராமிஸ்”
இதற்கு தானே அமைதி காத்தது அவன்? ஆனாலும் உடனே ஒத்துக்கொண்டால் சந்தேகம் வேறு வருமே, “அதெல்லாம் முடியாது. நீங்க தூங்குங்க நான் போறேன்”
“மச்சி மச்சி ப்ளீஸ் டா என்னோட புது பாஸ்ட்ராக் கூலர்ஸ் (Fastrack Coolers) உனக்கு தர்றேண்டா, விட்டுட்டு போய்டாத”
கிராமங்களில் சுத்தமான கள்ளு கிடைக்கும் என்று தெரிந்து தான் விமானநிலையத்தில் இருந்து முதலில் கார்த்தியை அவன் சமாதானப்படுத்தி அழைத்து வந்ததே. உயிரையே பணயம் வைத்து வந்தவன் இந்த இரண்டாயிரம் கண்ணாடியையா கொடுக்காமல் இருப்பான்?
“பேச்சு மாற கூடாது” எதற்கும் ஒரு உறுதி தான்…
ஹரியின் கையை எடுத்து உள்ளங்கையில் சத்தியம் வைத்து, “ப்ராமிஸ்” என்றான் ஒரு கெஞ்சலுடன்.
“சரி அப்டியே நைசா இவிங்கள ஏமாத்திட்டு வா”
“தோ இப்ப எப்படி வர்றேன்னு மட்டும் பாரு” என்று ஹரியை முன்னாள் நடக்கக் கூறி, “முத்து அண்ணே உங்க ஊர்ல எந்த மண்டபத்துல சாப்பாடு போடுறாங்கன்னு சொன்னிங்க?”
“ஏண்டா அடுத்த ரவுண்டு மொக்க போறியா?” முத்துவை பேச விடாமல் சிவா முந்தினான்.
“எப்பயும் நீ பேச மாட்டியே பூதம் டா, நாங்க சாப்புடுறது உங்களுக்குக் கஷ்டமா இருந்தா சொல்லுங்க அப்டியே ஊர் கெளம்புறோம்” என்றான் கார்த்தி உள்ளூர ஒரு மிரட்டல் விடுத்து. பதில் பேசாமல் மீண்டும் தன் கைப்பேசிக்குள் நுழைந்தான் சிவா.
“வந்துட்டாரு பெரிய கவர்னரு…” நொடித்துக்கொண்டு முத்துவைப் பார்த்தான்.
“தம்பி ஊருக்குள்ள போய் கேளுங்க நான் வழி சொன்னாலும் உங்களுக்கு புரியாது” என்றார் ஒரு இளநகையோடு. அவருக்குத் தெரியாதா இவர்களின் எண்ணம்? வரும் வழியிலேயே ஹரி கள்ளு செய்யும் இடத்தை பற்றி அவரிடம் கேட்டான் சூசகமாக.
“சரிண்ணே நாங்க பாத்துக்குறோம். டேய் தூங்குங்க காலைல பாக்கலாம் வேலை இருக்கு”
“நில்லுங்க கல்லு நாங்களும் வர்றோம்” ஒரு விஷம சிரிப்போடு ப்ரேம் அவர்களுடன் கிளம்ப வேறு வழியே இல்லாமல் சிவாவும் வந்தான், “அண்ணே நீங்க வரல?” என்று முத்துவையும் அழைத்தான்.
“இல்ல தம்பி நீங்க போய்ட்டு பத்தரமா வாங்க” மூவரும் நடக்க அங்குச் சற்று தொலைவில் கைப்பேசியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்த ஹரி இவர்கள் மூவரையும் பார்த்து கார்த்தியை முறைத்தான்.
“முடியலடா, ஹனுமன் வாலுல புடிச்ச தீ மாதிரி கூடயே ஒட்டிக்கிறாய்ங்க” என்றான் ஹரியின் காதை கடித்து.
“எனக்கு பிரச்னை இல்ல மச்சி நீ தான் காசு குடுக்க போற” என்று அவர்கள் நால்வரும் வேறொரு புதர் பக்கம் சென்றனர் ஹரியைத் தொடர்ந்து.
“என்னடா பாத்ரூம் போகுறதா இருந்தா அங்கையே போயிருக்கலாம்ல, எதுக்கு இந்த இருட்டுல வர்ற?” சுற்றிலும் ஒரு மனிதர் கூட இல்லை, தூரத்தில் ஏதோ ஒரு மின்மினி பூச்சி போல் ஒரு சிறு வெளிச்சம் அவ்வளவே.
“கக்கூஸ் போறதுக்கா இந்த நேரம் இங்க சுத்துறோம். வாடா” அடுத்த சில நிமிடங்களில் நால்வரும் அந்த சிறு தோட்டத்தின் முன்னாள் நின்றனர்.
*********************
“ப்பா ப்ளீஸ் ப்பா புரிஞ்சுக்கோங்க எனக்கு இந்த கல்யாணம் வேணாம்” மகளின் கண்ணீரில் எப்பொழுதும் கரையும் தந்தையின் மனது இந்த முறை கொஞ்சம் கூட கரையவில்லை. மகளுக்கு எதிராக ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு யமுனாவையே தீவிரமாக பார்த்திருந்தார் கண் கூட சிமிட்டாமல்.
“ஏதாவது பேசுங்க ப்பா” என்றாள் கண்களில் கண்ணீருடன்.
“பாப்பா அப்பா என்ன சொன்னாலும் அது நல்லதுக்குத் தான் மா இருக்கும், அப்பா சொல்றத கேளு” என்றான் யமுனாவின் மூத்த அண்ணன் அன்பு.
“அண்ணா அவர் சொல்றத தான் நான் இத்தனை நாள் கேட்ருக்கேன், இந்த ஒரு விசியம் எனக்காக விட்டு குடுக்க முடியாதா?” என்றாள் ஆற்றாமையுடன்.
“ஏன்மா உன் விருப்பத்துக்கு நான் இது வரைக்கும் எதுவும் செஞ்சதே இல்லையா?” என்றார் நெடுஞ்சேரன் கூர்மையாக.
“செஞ்சிருக்கீங்க ப்பா, நிச்சயம் செஞ்சிருக்கீங்க. என்னோட டிகிரி என்ன இருக்கணும்னு என்ன முடிவு பண்ண விட்ருக்கீங்க, இந்த வீடு என் இஷ்டம் தான். அதையும் நீங்க இன்னும் ரெண்டு தடவ நானே பாத்துக்குறேன்னு சொல்லிருந்தா உங்க கட்டளை அதுன்னு விட்ருப்பேன் ப்பா”
“அப்ப அப்பா மேல உனக்கு நம்பிக்கை இருக்கு தான பாப்பா?” அவர் விடுவதாக இல்லை.
“இருக்கு ப்பா தாராளமா இருக்கு. இப்ப நீங்க பாத்துருக்க பையன் கூட கண்டிப்பா நல்லவனா தான் இருப்பான். ஆனா ஒரு பொண்ணுக்கு அவ வாழ்க்கைல உரிமையா தேர்ந்தெடுக்குற ஒரே ஒரு விசியம் அவளோட லைப் பார்ட்னர் தான். அத என்கிட்டே இருந்து நீங்க பறிச்சு வேற எது குடுத்தாலும் எனக்கு சந்தோசம் இருக்காது ப்பா” கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது யமுனாவிற்கு.
“சரி மா நீ சொல்ற பையன உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு என் கட்சி காரங்ககிட்ட நான் என்னனு சொல்லி அந்த பையன அறிமுகம் குடுக்கணும்? ஒரு கம்பெனில அடிமட்டத்துல வேலை பாக்குறான்னா?” மகளின் கண்ணீர் வதைக்கிறது தான் ஆனாலும் அவர் நிலையில் இருந்தும் அவரால் இறங்கி வர முடியவில்லை.
“எப்பயும் பணம் பணத்தோட மட்டும் தான் சேரணுமா ப்பா? எனக்கு நான் விரும்புன வாழ்க்கைல பத்து ருபாய் வச்சு கூட சந்தோசமா இருக்க முடியும். ஆனா நீங்க வற்புறுத்தி செய்ய சொல்ற விசயத்துல ஒரு செகண்ட் கூட என்னால சிரிக்க கூட முடியாது” என்றாள் முடிவாக, பிடிவாதமாக.
“அப்பா இடத்துல இருந்து தான் கொஞ்சம் யோசிச்சு பாரேன் பாப்பா, நல்ல வசதி, நல்ல குடும்பம். ஆனா நீ அந்த பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த சந்தோசம் எல்லாம் இருக்காது, இப்ப பேச நல்லா தான் இருக்கும் ஆனா போக போக காசு தான் வாழ்க்கைன்னு ஆகிடும்டா. அப்ப வந்து கண்ண கசக்கிட்டு எங்க முன்னாடி நீ வந்து நின்னா எங்களால தாங்கிக்க முடியாது” சகோதரனாக தங்கையின் வாழ்க்கையை பத்திரப்படுத்த விரும்பினான் அன்பு.
“அப்பா இடத்துல இருந்து யோசிக்கணும், அப்பக்காக யோசிக்கணும்… ஏன் யாரும் என் இடத்துல இருந்து எனக்காக யோசிக்க மாட்டிங்களா?” ஆவேசமாகக் கத்தினாள், “நான் ஒன்னும் ரோட்டுல போற ரோமியோவ லவ் பண்ணல, அவரும் நல்லா தான் இருக்காரு, மாசம் அறுபதாயிரம் சம்பாதிக்கிறார். எனக்கு அது போதும் ண்ணா. இங்க கோடி கோடியா காசு இருந்தாலும் சாப்பாடு சாப்புடுறப்ப டைனிங் டேபிள்ல நான் மட்டும் தான் இருப்பேன்.
ஒரு நாள் என் அப்பாகூட என்னால சந்தோசமா வெளிய போக முடியல, என் அண்ணனுக அவங்க பிசினஸ் பாக்க போயிறாங்க. ரெண்டு நாள் எல்லாரும் வர்றிங்க, என்ன என்ன சந்தோசத்தை தர முடியுமோ அது எல்லாம் குடுக்குறீங்க, அப்றம் அடுத்த நாள் மொத்தமா எல்லாம் காணாம போயிடுது, அடுத்து அதே ரெண்டு நாளுக்காக நான் ஒரு வருஷம் வெயிட் பண்றேன் ப்பா.
அமைதியும், வெறுப்பும் மட்டும் தான் இங்க எனக்கு இருக்கும். இனியும் இந்த வி.ஐ.பி வாழ்க்கை எனக்கு வேணாம். சாதாரண மனுசியா நான் வாழணும்னு ஆசைப்படுறேன். விட்ருங்க என்ன. இல்ல உங்க இஷ்டம் தான் நான் இருக்கணும்னா அதுக்கு நா ஆள் இல்ல, இந்த கல்யாணத்த எப்படி நிறுத்தணும்னு எனக்கு தெரியும்” என்றவள் சகோதரன், தந்தையின் முகத்தைக் கண்களாலே எரித்து வேகமாக அறையை விட்டு வெளியில் நடந்தாள்.
“யமுனா…” சகோதரி பின்னால் செல்லவிருந்த அன்பை நெடுஞ்சேரன் தடுத்தார்.
“என்ன ப்பா பண்றது இப்ப?” என்றான் இயலாமையில்.
அவள் கூறுவதும் சரி தானே, அவர்கள் குடும்பமாய் நேரம் கழிப்பது மிகவும் குறைவு, இவர்கள் ஆண்கள் அதிகம் வெளியில் இருப்பார்கள் ஆனால் அவளுக்கு மேற்படிப்பு வேண்டாம் என்று தந்தை கூற, வேலைக்கும் போக முடியாமல் வீட்டிலே எந்நேரமும் அடைந்து கிடப்பாள். ஆனால் அவனால் அவன் தந்தையின் வார்த்தையை மீறி எதுவும் செய்ய மாட்டான் அது சகோதரியின் விருப்பமாக இருந்தாலும் சரி.
“எந்த வேலையும் நிக்க கூடாது அன்பு, எல்லாம் அதுவாவே நடக்கட்டும். யமுனா கல்யாணம் நாம நெனச்ச மாதிரி நாடாகும். வெற்றிக்கு விசியம் தெரியவே கூடாது” அவனும் சரி என்றான் தீவிரமாக யோசித்துக்கொண்டே.
****************
“Welcome to the village illegal heaven” என்றான் ஹரி ஆனந்தமாய் கால்களை துள்ளிக் குதித்து.
அவர்கள் முன்னாள் ஒரு பெரிய இடத்தில் பெரிய பெரிய பானைகளில் சுடச் சுட கள்ளு காய்ச்சிக்கொண்டிருந்தனர். பலர் அதற்குச் சற்று தொலைவிலிருந்த காலி இடங்களில் போர்வை, பெரிய பெரிய கட்அவுட்களை விரிப்பாய் விரித்து ஆனந்தமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னால் ஏதோ தமிழ்ப் பாடல்கள் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது.
“டேய் டேய் உன் அப்பாகிட்ட சொல்லி எனக்கு ஒரு பாட்டில் வாங்கி தாடா”
அவர்கள் பின்னால் ஒரு சிறு குரல். ஹரி எங்கே என்று தேட அவர்கள் பக்கவாட்டில் இரு சிறுவர்களின் சட்டை மட்டுமே தெரிந்தது. அதுவும் பள்ளி சீருடை. வயது நிச்சயம் பன்னிரண்டைத் தாண்டாது போல் தான் இருந்தனர்.
“டேய் என் நைனா வீட்டுக்கு வரட்டும்டா, இப்ப வா யாரவது பாத்தா அடிவாங்குவோம், போலாம்டா” என்றான் ஒருவன் பயத்துடன்.
“போடா போ… என்னோட நண்பன் நீ இல்லனு நாளைக்கு ஸ்கூல்ல சொல்றேன், இனி உனக்கு நான் ஸ்கூல் வெளிய வாங்குற அப்பளம் கூட தர மாட்டேன்” என்று அந்த சிறுவனை மிரட்டினான்.
“இந்த வயசுல பட்டாசு மிட்டாய் சாப்பிட்டு போதைல இருந்தேண்டா நான். இவன் என்னடா இப்பயே சரக்கு கேக்குறான். நாம வயசுக்கு எல்லாம் வந்தா மொடா குடிகாரனா மாறிடுவான் போலயே” கார்த்தி புலம்பினான்.
நேரத்தை வீணடிக்க விரும்பாமல் அவர்கள் நின்ற திசை நோக்கி நடந்த ஹரி அவர்கள் முன்னாள் நின்று, “என்னடா சரக்கு வேணுமா?” என்றான் திமிராக அதட்டும் குரலில்.
திடீரென தங்கள் முன்னாள் வந்து நின்ற ஒரு ஆணை பார்த்ததும் அவர்கள் இருவருக்கும் உதறல் எடுத்தது. ஓட பார்க்க இருந்த இருவரின் கைகளைப் பற்றி அவர்களை மேலும் கீழும் ஆராய்ந்தான். சட்டையில் முழுதும் புழுதி தான்.
“என்னடா சண்டை போட்டீங்களா?”
“ண்ணே நான் சண்டை போடல இவன் தான் சண்டை போட்டான்”
“இவன் என்கிட்ட சரக்கு கேட்டான்…”
அந்த சிறுவனைப் பேச விடாமல், “சும்மா இருடா” என்றான் இன்னொருவன்.
“டேய் என்ன உனக்கு சரக்கு தான வேணும்? வா…” அவன் சட்டையைப் பிடித்து அந்த கூட்டத்திற்கு இழுத்துச் செல்ல இங்கு இவனுக்குப் பயத்தில் ஈரக்குலையே நடுங்கியது.
“ஹரி…” நண்பர்கள் கூட அவன் அதிரடியில் பதறினர். ஹரியின் கையை பிடித்து காலை தரையில் அழுத்தமாக ஊற்றினாலும் ஹரியின் பலத்தில் அந்த சிறுவன் எம்மாத்திரம்?
சிறு புழுதிகூட பறக்க அங்கு இருந்த ஒரு மரத்தை அவன் பிடித்து, “ண்ணா… ண்ணா ப்ளீஸ் ண்ணா” என்றான் மெதுவாகக் கெஞ்சும் குரலில்.
“டேய் நீ மட்டும் இத குடிச்சு பாரு, உன் அம்மா உன்ன பாத்து சதோஷம் பாடுவாங்க, வா நீ காசு கூட குடுக்க வேணாம் நானே உனக்கு கொடுக்குறேன்”
அவன் கையை அந்த மரத்திலிருந்து பிரிக்க முயன்றான். அந்த சிறுவன் கன்னத்திலிருந்து கண்ணீர் வர துவங்கியது, அவனுடன் வந்தவனோ பயத்தில், “அண்ணா அப்பாக்கு தெரிஞ்சா தோலை உரிச்சிடுவாங்க. ப்ளீஸ் அவனை விடுங்க”
“ண்ணா நான் இனிமேல் இந்த பக்கமே வர மாட்டேன் ப்ளீஸ் விடுங்க… ஐயோ சங்கரு என்ன கூட்டிட்டு போடா”
அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அடிவிட்டு, “சாவடிச்சிடுவேன் இனி இந்த பக்கம் வந்தா… ஓடிரு” என்று மிரட்ட தான் அந்த சிறுவர்கள் அவ்விடத்தை விட்டு பின்னங்கால் புடணியில் பட தெறித்து ஓடினர்.
நண்பர்களைப் பார்த்து சிரித்த முகமாய், “Shall we start?”
“என்ன கேள்வி இது? வாங்க மிஸ்டர் செட்டப்” என்று ஹரியிடம் அடி வாங்கியே முதலில் கார்த்தி நுழைந்தான். உள்ளே சென்றவர்கள் அவர்களுக்கான பணத்தை முதலில் கூறி அந்த கூட்டத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்தனர்.
வந்த சில நொடிகளில் மதுவும் வந்துவிட முதலில் குடிப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் போகப் போக பழகியது அந்த சுவை.
“டேய் எந்த சுச்சுவேஷன்ல இப்டி குடிக்க வந்துருக்கீங்க ஒரு நியாயம் வேணாமா?” மற்ற மூவரும் குடிக்க ப்ரேம் மட்டும் அமைதியாக அவர்களை வாட்டிக்கொண்டிருந்தான் அடுப்பே இல்லாமல். அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலா அவர்கள் இருந்தார்கள்?
“மச்சி எனக்கு ஒரு டவுட்… எல்லா சோப்பு விளம்பரத்துல பொண்ணுங்க குளிக்கிற மாதிரியே காமிக்கிறாங்களே… எதுக்கு மச்சி நம்மள பாத்தா குளிக்காத பன்னாடை மாதிரி தெரியுறோமா?” தீவிரமாகக் கேட்டான் ஹரி.
“நான் குளிச்சா நீ பாப்பியா மச்சி?”
“ச்சீ உன் மொகரையவே என்னால பாக்க முடியல இதுல நீ குளிக்கிறத வேற நான் பாக்கணுமா?” என்றான் ஹரி முகத்தைச் சிங்கப்பூர் வரை தூக்கி வைத்து.
“தெரியிதுல மிஸ்டர் சொறி மூடிட்டு கூல் குடிங்க…”
அவனோ யோசனையில், “யா நான் அந்த ஆங்கில்ல யோசிக்கல மிஸ்டர் கல்லு” என்றான். அடுத்த அரை மணி நேரத்தில் மூவருக்கும் நிதானம் சற்று அதிகமாகவே தப்பி இருந்தது.
“டேய் உன் தலை கொப்பர தேங்காய் மாதிரி இருக்குடா…” என்றான் ஹரி, கார்த்தியின் தலையில் ஒரு கொட்டி.
“உன் முகமே முத்துன மாங்காய் மாதிரி இருக்கு நான் ஏதாவது சொல்றேன்னா மாப்பிள்ளை?” என்றான் கார்த்தி காரணமே இல்லாமல் சிரித்துக்கொண்டே.
“மச்சி எனக்கு ஒரு டவுட்”
“மறுபடியுமா… பரவால்ல கேளு மச்சி” என்றான்.
“அந்த கப்பக்கிழங்கு மேல உனக்கு என்ன மச்சான் அப்டி ஒரு கண்ணு?”
கார்த்தி, “யாரு மச்சி சொல்ற?”
“ஒன்னு ரெண்டு இருந்தா அவனுக்கு புரியும், ஊர்ல இருக்க எல்லா பொண்ணுக்கிடையும் நூல் விட்றான் அப்றம் எப்படி அவனுக்கு புரியும்?” கார்த்தியை பார்த்து சலித்துக்கொண்டான் ப்ரேம்.
“அது தாண்டா அந்த அபர்ணா”
“பெருசா கண்ணு எல்லாம் இல்ல மச்சான் சும்மா பொழுது போக்குக்கு ஒரு பொண்ணு சைட் அடிச்சேன்… இப்ப நீ ஒரு பொண்ணு வேஷம் போட்டு ஒக்காரு உன்னையும் சைட் அடிக்கிறேன்” என்றான் உண்மையாக.
“ஹாஹா… ஹாஹா… அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு?” ஹரிக்கு அடக்க முடியாத சிரிப்பு, அது போதையாலா இல்லை கார்த்தியின் பதிலா என்று தெரியவில்லை அவனுக்கே.
“யமுனாவை கடத்த முடியலனா என்னடா பண்றது?” சிவா வேதனையுடன் கேட்டான். கேள்வி எல்லாம் சரி தான் கேட்கும் ஆட்களும் நேரமும் தான் சரி இல்லை.
“நீ பீல் பண்ணுவேன்னு எனக்கு தெரியும் அதுக்கு தா கோவா பிளான் இன்னும் ஆக்ட்டிவா இருக்கு”
“இன்னும் நீ அத விடலையா?” என்றான் ப்ரேம் கோவமாக.
“எனக்கும் ஒரு டவுட்” என்று மூன்று விரலை காட்டினான் கார்த்தி.
“ப்ரோசீட் யுவர் ஆனந்த்…” போதை தலைக்கு ஏறியது என்று அவர்கள் பேச்சிலே தெரிந்தது.
“இப்டியே குடிச்சிட்டே இருந்து நமக்கு கேன்சர் வந்து இது தான் உங்க லாஸ்ட் ஸ்டேஜ்ன்னு சொல்லி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்ட என்ன மாப்பிள்ளை பண்றது?” என்றான் கார்த்தி கண்கள் கலங்கி உதட்டை சிறுபிள்ளை போல் பிதுக்கி.
“ஐ ஹவ் சொலுஷன் போர் ஆல் ப்ரோப்லேம்ஸ்” என்று அவன் அலைபேசியை எடுத்து…
“நம்ம வசூல் ராஜா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிடலாம்…”
“அப்றம்?” – கார்த்தி.
சிரிச்சி சிரிச்சி வந்தா
சீனா தானா டோய்
சிறுக்கி சிறுக்கி மக
தேனா போனா டோய்
விடிய மட்டும் விடிய மட்டும்
தேனா போனா டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே
காணா போன டோய்
கைபேசியில் ஹரி பாட்டு போட அமர்ந்திருந்த இடத்திலே ஹரியும் சிவாவும் ஒரு ஆட்டத்தை போட்டனர்.
“எவ்விடத்தில்
காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம்
இட்டா பிடிச்ச நோய்
ஓடி போகும்” – ஹரி பாடினான் திக்கி திணறி
உச்சியிலே துடி
துடிச்சா உடம்புகுள்ளே
உடுக்கடிச்சா பிடிச்ச பேய்
ஓடி போகும்
“ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சிட்டு சாவுக்கு ஆட்டம் போடுது பாரு இவனுக கூட சேந்து” தலையில் அடித்து சிவாவை திட்டினான் ப்ரேம்
“தம்பி பாட்ட சத்தமா போட்டா நாமளும் ஆடுவோம்ல” பின்னாலிருந்து ஒரு குரல். “போட்டுட்டா போச்சு…” என்று ப்ரேமிடம் தன் கைப்பேசியைக் கொடுத்து பின்னாலிருந்த ஸ்பீக்கர்ரில் போட கூறினான். இவர்களை முறைத்துக்கொண்டு அவன் சென்று பாட்டையும் போட்டுவிட்டான்.
“தம்பிக யாரு? ஊருக்கு புதுசு மாதிரி இருக்கே…” மற்றொரு குரல் கேட்டது.
“ஆமா நாங்க தூக்க வந்துருக்கோம்” என்றான் கார்த்தி போதையில் பாதி கண்களை மூடியபடியே. அவன் கூறியதில் சற்று நிதானம் இல்லாமலிருந்த சிவாவிற்கு முழுவதும் போதை இறங்கிப்போனது.
பயந்த விழிகளுடன் நண்பனைப் பார்த்தான் ஆனால் என்ன கூறி சமாளிப்பது என்று தெரியவில்லை, “நம்ம எம்.பி நெடுஞ்சேரன் இருகாருல… அவர் பொண்ணு…”
“அவர் பொண்ணு கல்யாணத்துக்கு ஏதோ பல்லக்கு செஞ்சிருக்காங்களாம்ல அத தூக்க வந்துருக்கோம்” ஹரியின் வார்த்தையைக் குறுக்கிட்டு ப்ரேம் வேகமாகக் கூறினான்.
“இல்லங்க நாங்க பொண்ண தூக்க தான் வந்துருக்கோம்…” மீண்டும் ஹரி தொடங்க, “நான் சொல்லிட்டேன்டா நீ அமைதியா குடி…” அவன் இடுப்பில் கிள்ளி வைத்தான் ப்ரேம்.
“ஐயோ என்ன அடிக்கிறாங்களே… யாரவது காப்பாத்துங்க” ப்ரேம் கிள்ளியதில் அந்த இடத்திற்கே கேட்கும்படி ஹரி கத்தினான்.
“இப்டி தான் தம்பி என் பொண்டாட்டி என்ன அடிக்கிறா… அவளுக்குப் பயந்து தான் இந்த பழக்கம். ராத்திரி என் கை ஓங்கி நிக்கிறது ஆனாலும் காலைல கரண்டி அடி தான்” ஒருவர் கண்ணீர் விட்டுக்கொண்டே கூறினார்.
அவ்வளவு நேரம் கத்திக்கொண்டிருந்தவன் உடனே அமைதியாகி, “என்ன ண்ணே கரண்டி ஆம்ப்லேட் மாதிரி அசால்ட்டா சொல்ற… அப்டி என்ன தப்பு பண்ணுன?” என்றான் ஹரி.
“நான் சொல்றேன், உன் பொண்டாட்டி முன்னாடி வேற ஒரு ஆண்ட்டிய சைட் அடிச்சியா?” அவர் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்டிச் சிரித்தான் கார்த்தி.
அவரோ வெட்கத்துடன், “அதெல்லாம் தெரியாம நடந்துச்சு தம்பி ஆனா ஒரு தடவ ஊர்க்கு வெளிய வச்சு அவளுக்கு ஒரு முலம் மல்லியப்பூ வாங்கி குடுத்தேன், அதை நான் பெத்த சீமை மவன் பாத்து அவன் ஆத்தா காரிகிட்ட சொல்லிட்டான்…”
நண்பர்கள் நால்வரும் விழுந்து விழுந்து சிரித்தனர், “அன்னைக்கு ஆரமிச்சது ரெண்டு வருசமா நடக்குது” என்றார் வேதனையாக.
“அண்ணே ரொம்ப சோகமா இருக்க, வா நாம ஒரு குத்தாட்டம் போடலாம்” அவரை எழுப்பி நிற்க வைத்து, “அண்ணே இறங்கிகிகி… ஆடுற சரியா?”
நிற்கவே முடியாமல் தள்ளாடிக்கொண்டிருந்தவர் எப்படி இறங்கி ஆடுவார்? “இப்ப பாரு தம்பி எப்படி ஆடுறேன்னு…”
கட்டி இருந்த கைலியைத் தூக்கி நெஞ்சோடு கட்டி, “தம்பி பாட்டு போடலையாாா…?”
அவரை பின்னால் பிடித்த ப்ரேம், “யோவ் ஒழுங்கா நில்லுயா முதல…” பருத்திவீரன் ஊரோரம் புளியமரம் பாட்டு பின்னால் சத்தமாக ஒலிக்க துவங்கியது.
நாடறிஞ்ச அழகிகளா
நீங்க எங்க ஜோடி
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா
சொல்லிப்புடுங்கடி
கத்தரிப்பூ ரவுக்க போட்ட
சின்னப்பைங்கிளி
கத்தரிப்பூ ரவுக்க போட்ட
சின்னப்பைங்கிளி
உன்னை கோட்டர்க்கு
ஊறுகாயா தொட்டுக்கவாடி
உன்னை கோட்டர்க்கு
ஊறுகாயா தொட்டுக்கவாடி
குத்துன்னா இப்படித்தான் குத்தனும்…
ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா
காலு ரெண்டும் நோகுதடா
பாட்டை இடையிலிருந்து போட அதன் பின்னணி இசைக்காகவே கால்கள் தன்னால் ஆட துவங்கியது… அந்த மனிதருடன் இவர்கள் ஆட, இவர்களைப் பார்த்து அங்கிருந்த இன்னும் சிலரும் ஆட இடமே சில நொடிகளில் ரணகளமானது. சிலர் சட்டை, லுங்கி என்று அனைத்தையும் காற்றில் பறக்கவிட, ஒருசிலர் அதற்கும் மேல் சென்று உடன் இருந்த ஆண்களையே தங்கள் ஜோடிகளாக நினைத்து ஆட்டம் போட்டனர்.
அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு
உனக்கு காலு ரெண்டும்
இப்போ நொந்தாலென்ன
இந்த பருவமுள்ள பையங்கிட்ட
நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி
இவை அனைத்தையும் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ப்ரேம் தன் அருகில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சிவாவிடம், “எனக்கு என்னமோ இவிங்க உன் கல்யாணத்த நடந்த வந்த மாதிரி தெரியல…” என்கவும் துணைக்கு வைத்திருந்த இன்னொரு பெரிய குவளையை எடுத்து வேக வேகமாகக் கள்ளு குடித்தான் சிவா.
அடி மாடிமேலே மாடிவெச்சு
மாரளவு ஜன்னல் வெச்சு
அப்டி போடு சித்தப்பு
எட்டி எட்டிப் பாத்தாலுமே
எரவப்பொண்டாட்டி நீதான்டி
ஆஹா ஆஹா ஆஹா
இவை எதையும் கண்டு கொள்ளாத ஹரி, “மச்சி சட்டையை கலட்டிக்கவா ஒரே ஸ்வேட்டிங்கா இருக்கு…”
“Permission granted நண்பரே…” வாய் கூறினாலும் வெடிப்பு வந்த காக்காவைப் போலக் கையையும் காலையும் உதறி உதறி ஆடிக்கொண்டே தான் இருந்தான் கார்த்தி.
அதற்கு ஒருவனோ, “தம்பி நீங்க நல்லா ஆடுறிங்க…” என்றான்.
“யா பிரபு தேவா தெரியுமா? அவரு என்னோட கொள்ளு தாத்தாவோட சித்தப்பா பசங்களோட ஒன்னு வீட்டு பையன் தான்… அது தான் நமக்கும் அதே ஆட்டம் வரும்”
“தம்பி எனக்கும் ரெண்டு ஆட்டம் சொல்லுப்பா என் பொண்டாட்டிய என் கைக்குள்ள வச்சுக்கணும்…”
“So simple man…” என்று மூன்வாக் என்னும் பெயரில் தரையைத் தேய்த்துத் தேய்த்து கையையும் ஏதேதோ செய்தான். அவன் ஆட்டத்தைப் பார்த்து தரையில் விழுந்து சிரித்த ஹரிக்குப் பின்னால் ஒரு குவளை இருக்க யோசிக்காமல் அதை எடுத்துக் குடித்தான்.
குடித்து முடித்துத் திணறித் திணறி எழுந்து கார்த்தியின் கையை படிக்க, “கை எடுடா அயோக்கிய ராஸ்கல்” என்றான் கார்த்தி.
“மச்சி போதை ஓவர் ஆகுற மாதிரி இருக்கு வா வீட்டுக்குப் போகலாம்” வம்படியாக அவனை இழுத்து.
“ஏக் மினிட்…” என்று இன்னும் கொஞ்சம் கள் குடித்து பணம் செலுத்தப் போக அங்கிருந்த ஒருவன், “தம்பி இன்னைக்கு அய்யா யார்கிட்டயும் காசு வாங்க கூடாதுனு சொல்லிட்டாரு, அவர் பொண்ணு கல்யாணத்துக்காக”
‘ச்சா என்ன மனுஷன் யா” என்று தான் தோன்றியது கார்த்திக்கு. பணம் மிச்சம் அல்லவே…
பிறகு நண்பர்கள் நால்வரும் வந்த வழியே செல்ல ஒரு இடத்தில் ஒரு புத்தரின் பின்னால் மூவரையும், “இங்க குந்துங்கோ” என்றான் ஹரி.
“கிராமம் கிராமம்ன்னு நீ ரொம்ப அலும்பு பண்றடா, என்ன வெட்ட வெளில கக்கூஸ் போகணும்னு ஆசை இருக்கா?” என்றான் ப்ரேம் கோவமாக.
“ஆமாடா போதை கண்ண மறைச்சிட்டே வருது” சற்று சத்தமாகப் பேசிய கார்த்தியின் வாயைப் பொத்தி அமர்த்த சரியாக அந்த நேரம் சத்தமே இல்லாமல் ஒரு போலீஸ் வண்டியும், இரண்டு இரு சக்கர வாகனங்களில் நான்கு கால்வளத்துறையினரும் அவர்களை கடந்து சென்றனர்.
அவர்கள் தொலைவில் சென்றதை உறுதி செய்து பெருமூச்சுவிட்டு முகமெல்லாம் பல்லாக எழுந்த ஹரி, “இப்ப தான் முழு போதை ஏறுன மாதிரி திருப்தியா இருக்கு…” என்ற புன்சிரிப்போடு நடந்த நண்பனைப் பார்த்த மூவருக்குமே ஆச்சிரியம், இவன் தானே காவல்துறைக்கு தகவல் கொடுத்ததே…
– தூக்றோம்
error: Content is protected !!