Skip to content
Post Views: 2,817
பித்தளை டிபன் கேரியரில் அவசரமாய் டிபன் அயிட்டங்களை அள்ளி திணித்து மூடிய சுப்பு டேய் கோகுல் இங்கே வா….நான் வெளியே போய் காம்பவுண்டுக்கு வெளியில் நிற்கிறேன் நீ இந்த டிபன் கேரியரை யாருக்கும் தெரியாம கொல்லைப் புறமா வந்து கொடு!
யாருக்கு அண்ணையா? ஆர்வமுடன் கேட்டான் கடை குட்டி கோகுல்.
கேள்வி கேட்காதே… சொன்னதை செய்! யாருக்கும் தெரியக்கூடாது. கட்டளை பிறப்பித்து விட்டு அமைதியாக வெளியில் வந்தான்.
சுப்பு… அத்தம்மா, ஷியாமளா வந்திருக்காங்க பாரு! ராமகிருஷ்ணாவின் குரல் ஓங்கி ஒலித்தது.
மரியாதை நிமித்தம் “வாங்க அத்தம்மா என்றான் சுப்பு…”அருகில் நிற்கும் ஷியாமளாவை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
ஆனால் ஷியாமளாவின் பார்வை சுப்புவில் தான் நிலைத்திருந்தது.
முன்பு பாலகன் போல் இருந்த சுப்பு இப்போது அரும்புமீசை வைத்த அழகிய இளைஞனாக இருந்தான். சற்று மாநிறமாக இருந்த சுப்பு இப்போது வெளுத்து மெறுகேறி இருந்தான். வாலிபனுக்கு உரிய துறு துறுப்பு அவன் கண்களில் மிஞ்சியே இருந்தது.
இவ்வளவு அழகா மிடுக்கா இருக்கானே… பெரிதாய் விரிந்தது ஷியாமளாவின் விழிகள்.
புவனேஸ்வரி கண்களும் சுப்புவின் மீது தான்.
பெண்களுக்கு பிறந்த வீட்டில் தன் கெத்தை கடைசி வரை காட்ட ஒரு வாய்ப்பு பிறந்த வீட்டில் பெண் கொடுக்க விரும்புவது.
புவனேஸ்வரியின் நோக்கம் அதில் தான் இருந்தது. எங்கேயோ ஒரு நல்லவனை ஏன் தேட வேண்டும்? கண்முன்னே அண்ணன் மகன் இருக்க…?
அத்தம்மா போய் சாப்பிடுங்க இதோ வந்துடறேன்… லாவகமாய் கழண்டு வெளியில் வந்தவன் மதில் சுவரின் மறுபக்கம் வீதியில் நின்றவாறு தன் வீட்டை எக்கி எக்கி பார்த்து நின்றான்.
பத்து நிமிடத்திற்கு மேல் நகம் கடித்து நின்றபிறகு தான் சிறிய ஏணியின் மீது ஏறி நின்று குரல் கொடுத்தான் கோகுல்.
இவ்வளவு நேரம் என்னடா பண்ண? எள்ளும் கொள்ளும் வெடித்தது சுப்பிவிற்கு.
அத்தம்மா பிடிச்சு வச்சு அன்புமழை பொழிஞ்சுட்டாங்க!
என்னடா உன் மேல அவ்வளவு பாசம்?
என் மேல இல்ல… உன் மேல….
என்ன சொல்ற?
அப்புறம் சொல்றேன்… நக்கலாய் சிரித்தான் கோகுல்
சரி டைமாகுது கேரியரை கொடு! வாங்கி கொண்டவன் விறு விறுவென்று தெருமுனையில் நடக்க தொடங்கினான்.
வயசுக்கு வந்த பொண்ணுக்கு ஒரு கஞ்சி வைச்சு குடிக்க கூட சொல்லி தரலையா உங்கம்மா? நொடித்துக் கொண்ட சகுந்தலா அவ்வா இரு நான் போய் சாப்பிட கொண்டு வரேன் என்று எழுந்து போனார்.
அவ்வா எனக்கு பசியில்லை… சாப்பாடு வேண்டாம்! முகத்தை முறுக்கிக் கொண்டாள்.
இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல… கொணட்டிக் கொண்டு போனார் அவ்வா.
பெரிய வீட்டு மகன் சாப்பாடு கொண்டு வரேன்னு சொன்னாரே…. லேசாய் வயிற்றிக்குள் உருளும் சத்தத்திற்கு கட்டுப்பட்டு கொய்யாபழம் எடுத்து கழுவி அருவாமணையில் அறிந்து கொண்டிருந்தாள்.
கதவை நாசுக்காய் தட்டிவிட்டு உள்ளே வந்தான் சுப்பு.
சுப்புவின் கரத்தில் சாப்பாடு கண்டவுடன் தாருவின் முகத்தில் பளிச்சென்ற மின்னல் கீற்று.
ரொம்ப காக்க வச்சிட்டேனா? வருத்தமுடன் கேட்டான்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல என்று கிச்சனுக்கு போய் இரண்டு தட்டும் சொம்பில் தண்ணீரும் கொண்டு வந்தாள்.
எதுக்கு ரெண்டு பிளேட்?
உங்களை பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே… அழகாய் அக்கறை எடுத்துக் கொண்டு சிரித்தாள்.
பரவாயில்லையே… அம்மாயி என் முகம் பார்த்தே அகம் கண்டுணர்கிறாளே…
என்னை பார்த்தால் வேறெப்படி தெரியுது தாரு? கண்களில் எதிர்பார்ப்பு மின்ன ஆவலுடன் கேட்டான்.
ரொம்ப நல்ல மாதிரி தெரியுது! குழந்தையாய் சிரித்தாள்.
அகமகிழ்ந்து போனான் என்றாலும் இன்னும் எதிர்பார்த்தான்.
என் கண்ணில் உனக்கான காதல் தெரியவில்லையா என்று….
அந்த மாயவன் உணர்வு அந்த மழலைக்கு புரியவில்லையே….
தாரு உனக்கு கூட பிறந்தவங்க எத்தனை பேரு? சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
எனக்கு ஒரு அண்ணா அடுத்து நான் எனக்கு ஒரு தம்பி.
அம்மா,நானா …?
நானா ஜவுளிக்கடையில் சூப்பர்வைசர்.
அம்மா டெய்லர். பெரிய அளவில் இல்லை… ஆனா எங்க கிராமத்து பொம்பளைகளுக்கு எங்கம்மா தான் பெரிய டெய்லர். அம்மாக்கு ஆம்பளைங்க உடுப்பு எல்லாம் தைக்க தெரியாது. ரவிக்கை, பாவாடை இப்படி தான் தைப்பாங்க. விகல்பம் இல்லாமல் இயல்பாய் பேசிக் கொண்டிருந்தவளை இன்னும் இன்னும் பிடித்தது அவனுக்கு.
நீ அடுத்து படிக்க போறியா? ஆர்வமாய் கேட்டான்.
ம்ம்ம்ம்….+2 வரைக்கும் படிப்பேன். சற்று சோகமாகவே கூறினாள்.
ஏன் காலேஜ் போக மாட்டியா?
மாட்டேன்… என்பதாய் உதடு பிதுக்கினாள்.
ஏன்? புருவம் சுருக்கினான்.
அதுவரைக்கும் படிச்சுட்டு அப்புறம் கல்யாணம் செய்து வைக்க போறாங்களாம்.
யாரு சொன்னது?
அம்மா!
ஓ என்றான். அன்றைய காலத்தில் அது தான் நடைமுறை.
பெண் பிள்ளைகளுக்கு பதினேழு பதினெட்டு வயதில் மணமுடித்து வைத்து விடுவார்கள்.
சொந்தத்தில் மாப்பிள்ளை இருக்கா? பதை பதைப்புடன் கேட்டான்.
எனக்கு தெரியாதே என்று உதடு பிதுக்கியவளை பார்த்து சிரிப்பு பொங்கியது.
சரி நீ பத்திரமா இரு! சகுந்தலா அவ்வா வீட்டுக்கு போக வேண்டாம்.
ஏன்?
அவங்க பேரன் ஒரு மாதிரி கேசு?
ஒரு மாதிரின்னா? நெற்றியில் தட்டிக் கொண்டாள்.
இவ வேற… சலிப்புடன் முறைத்தவன். அவன் பொம்பளை பிள்ளைகளை பார்க்கிற பார்வையே சரியா இருக்காது.
ஓ… என்றாள் விழி விரித்து. என்ன புரிந்ததோ… அவளுக்கே வெளிச்சம்.
சரி நான் ஹாஸ்பிடல் போய் அவங்களை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வரேன். உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கோ!
ம்ம்ம்ம்ம் என்று தலை அசைத்தவளை ரசனையுடன் பார்த்து சென்றான்.
“——————-“
எங்கே சுப்பு போயிட்டு வர…? கேள்வியுடன் நோக்கினார் லீலா.
ராகவலு மாமய்யா பாரியாளை டிஸ்சார்ஜ் பண்ணி விட்டுட்டு வந்தேம்மா….
கணக்குப்பிள்ளை வைஃப்புக்கு நாம போகணுமா? முகம் சுழித்தாள் ஷியாமளா.
ஏன் கணக்குப்பிள்ளை அவ்வளவு இளப்பமா? நம்ம வீட்டில் வேலைபார்க்கிறவங்களும் நம்ம வீட்டில் ஒருத்தவங்க தான்! கடுப்பாகி போனான் சுப்பு.
ச்ச… ச்ச.. அவள் முகம் அஷ்டகோணலாகியது.
என்ன ச்ச…. ராகவலு மாமய்யாவோட நானா கூட நம்ம தாத்தையாட்ட வேலை பார்த்தவர். ராகவலு மாமய்யா கொடுக்கு நம்ம மில்லில் தான் வேலை பார்க்கிறாரு.
இவர்கள் வாதத்தில் பெரியவர்கள் தலையிடவில்லை.
சுப்பு அடுத்து என்ன பண்ணப் போற? பேச்சை மாற்றினார் புவனா.
PG பண்ண போறேன் அத்தம்மா என்றான்.
அப்ராடா? ஆர்வமாய் கேட்டாள் ஷியாமளா.
இல்ல இங்கே தான் என்றான் விறைப்பாய்.
ஷியாமளா கூட இங்கே தான் படிக்க போறா! உங்க மாமய்யாவிற்கு இவளை டாக்டருக்கு படிக்க வைக்க தான் ஆசை. வெளிநாட்டுக்கு அனுப்ப பிளான் பண்ணினாரு.
இவ உன்னை மாதிரி எக்கனாமிக்ஸ் தான் படிக்கணும்னு ஆசைப்படறா… அவ்வளவு குழைச்சல் புவனா குரலில்
படிக்கட்டுமே… நான் என்ன எக்கானாமிக்ஸ் க்ரூப்பை குத்தகைக்கா எடுத்திருக்கேன்… நொந்து கொண்டவன் தன் அறைக்கு சென்று விட்டான்.
டிபன் நல்லா இருந்துச்சாமா? சிரித்துக்கொண்டே கோகுல் வந்தான்.
என்னடா சொல்ற? தலை கோதிக் கொண்டான் சுப்பு.
அது கணக்குப்பிள்ளை வீட்டுக்கு போன டிபன் நல்லா இருந்துச்சாமா? கண் சிமிட்டினான்.
டேய் வயசுக்கு தகுந்த மாதிரி பேசு…! திக்கென்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு குரலை உயர்தினான்.
அண்ணையா… உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்ல தான் வந்தேன்.
என்ன? பக்கென்று இருந்தது உள்ளுக்குள்.
ஷியாமளாவை உனக்கு தான் விவாகம் செய்ய போறாங்களாம்.
யாரு சொன்னது? இதயத்திற்குள் சுருக்கென்ற வலி அவனுக்கு.
டிபன் டைமில் பேச்சு வார்த்தையே அது தான்
அத்தம்மாக்கு அது தான் ஆசையாம்… உடனே நம்ம நானாவும் எனக்கும் இதே ஆசை தான் என்றார். அம்மாக்கு கூட ஓகே தான். டிபன் டைமிலே ஒரு சம்மந்தமே பேசி முடிச்சுட்டாங்க போ!
சுப்புவிற்கு முகம் இருண்டு விட்டது.
யாரை கேட்டு முடிவு பண்ணிணாங்க?
அய்யோ அண்ணையா சத்தம் போடாத ப்ளீஸ்.
விவாகம் இப்போ இல்லையாம். ஷியாமளா டிகிரி முடித்த பிறகு தானாம்.
கோகுல் எளிதாக கூறி சென்று விட்டான். சுப்புக்கு தான் உதறல்
நின்றபாடில்லை.
“——————“
தாரு சின்ன பிள்ளையாக இருக்கிறாளே…
நம் வீட்டில் தாருவை கண்டிப்பாக ஏற்கப் போவதில்லை. அவள் வீட்டில் சென்று நான் தனியே பெண் கேட்க முடியாது…. நிச்சயம் பெரியவர்கள் சம்மதிக்காமல் அவள் வீட்டில் பெண் கொடுக்க மாட்டார்கள்.
பல குழப்பங்களுக்கு மத்தியில் தாரு பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்தான்.
அதுவரை வீட்டில் இருப்பது சரியல்ல என்று உணர்ந்தவன் PG படிக்க முடிவு செய்தான்.
நாளை விஜயதாரணி ஊருக்கு செல்ல போகிறாள் என்று ராகவலு பேச்சுவாக்கில் சொல்லிக்கொண்டிருந்தார். சுப்புவின் மனம் தவியாய் தவித்தது.
பெருமாள் கோயிலுக்கு மாலை நேரம் அவள் வருவாள் என்று தெரியும். அவளுக்காக காத்திருந்தான்.
அவளும் வந்தாள். பக்கத்து வீட்டு பெண்ணுடன் வந்திருந்தாள். எதேச்சையாய் பார்ப்பது போல் பார்த்து நலம் விசாரித்தான்.
நாளைக்கு உங்க ஊருக்குப் போறியா? வலி நிறைந்த கண்களுடன் கேட்டான்.
ஆமா என்றாள்!
ஊருக்கு போயிட்டா என்னை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருப்பியா? உடைந்து விட்டது குரலும் மனதும்.
ஏன் ஞாபகம் இருக்காம? கண்டிப்பா ஞாபகம் வைத்திருப்பேன். நீங்க பெதம்மாக்காக எவ்வளவு மெனக்கிட்டிங்க… உள்ளார்ந்து கூறினாள்.
நல்லா படி! வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம்… கண்கள் கலங்கியே விட்டது அவனுக்கு.
நீங்க கூட மேற்படிப்பு படிக்கப் போறீங்களாம் பெதநயனா சொன்னாரு. நீங்களும் நல்லா படிங்க! அவனுக்கு வாழ்த்து கூறி விடைபெற்றவள் ஒரு நிமிஷம் நின்று திரும்பி பார்த்து சிரித்து விட்டு சென்றாள்.
தன் உயிரை உருவி எடுத்துக் கொண்டு சென்று விட்டதாய் உணர்ந்தான் சுப்பு.,
“—————-“
UG படித்த விஜயவாடா ALC கல்லூரியிலே PG சேர்ந்து விட்டான் சுப்பு.
மும்பையில் உள்ள பிரபல கல்லூரியில் சேர்ந்து விட்டாள் ஷியாமளா.
பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள் தாரு. அதே பள்ளியில் +1 கணக்கு,உயிரியல் பாடப் பிரிவு தேர்ந்தெடுத்திருந்தாள் தாரு.
ஊருக்கு வரும்போது ராகவலு மூலம் செய்தி அறிந்த சுப்பு அவளை பார்க்க ஆவலுடன் குச்சனப்பள்ளிக்கு சென்றான்.
மாலை அவள் பள்ளி முடிந்து வரும் நேரம் பார்த்து வாயிலில் காத்திருந்தான்.
கருநீல நிற பாவாடை அதே நிற தாவணி, வெள்ளை ரவிக்கை என்று சீருடை அணிந்து இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டியிருந்தாள்.
திடீரென்று சுப்புவை பார்த்தவள் திகைத்து நின்றாள்.
ஹை நீங்களா? நீங்க எப்படி இங்கே? துள்ளளுடன் கேட்டாள்..
அவள் மகிழ்ச்சி அவனுக்குள் ஆனந்த பேரலையை உண்டாக்கியது.
உங்க சொந்தகாரங்க யாராவது இங்கே இருக்காங்களா? மகிழ்ச்சியுடன் கேட்டாள்.
எனக்கு சொந்தமாக போறவங்க இங்கே இருக்காங்க! இதழ் கடித்து சிரித்தான்.
அவளுக்கு எதுவும் விளங்கவில்லை.
error: Content is protected !!