Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️42

அவளோடு பேசி மகிழ்ந்து தான் வாங்கி வந்த பரிசை கொடுத்தான்.

எனக்கா? தடுமாறினாள் வாங்கிக்கொள்ள.

ஏன் நான் கொடுத்தா வாங்க மாட்டியா? ஆழ்ந்து நோக்கினான்.

அது…அம்மாக்கு தெரிந்தால் அவ்வளவு தான்… இமைகள் மட்டுமல்ல இதயமும் பட படத்தது அவளுக்கு.



Advertisement

அப்போ வீட்டில் சொல்லாதே…!

தப்பு… ரொம்ப தப்பு… நான் அம்மாக்கு தெரியாம எதுவும் செய்ய மாட்டேன்.

சரி நான் வாங்கி கொடுத்தேன்னு சொல்லு! பல்லை சற்று அழுத்தி கடித்தான்.

Advertisement

என்னன்னு சொல்லணும்? பாவமாய் கேட்டவளை மிரட்டவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை.

Advertisement

இதில் ஒன்னும் இல்லை காஸ்ட்லியான பேனா தான் இருக்கு. உன் பிரண்ட் கொடுத்ததா சொல்லு! அவளிடம் ஆசையாய் நீட்டினான்.

இல்ல… வேண்டாம்! தயங்கினாள்.

உன்னை பார்க்க ஆசையாய் ஓடி வந்த எனக்கு இது தான் மரியாதையா? முகம் சுருங்கினான்.

Advertisement

சரி கொடுங்க! அவன் முகவாட்டம் அவளுக்கு பொறுக்கவில்லை.

“——————–“

அடிக்கடி பார்க்காவிட்டாலும் மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறை பார்க்க வந்து விடுவான் சுப்பு.

எது நடந்தபோதும் தாரு தான் தனக்கு என்பதில் அவ்வளவு உறுதியாக இருந்தான் சுப்பு.

இன்னும் தன் மனதை திறக்கவில்லை. அவள் போக்கில் சென்று தன் மனதை உணர்த்துவோம் என்ற எண்ணம் அவனுக்கு.

சுப்பு வருகிறான் என்று தெரிந்தால் ஷியாமளாவும் ஆஜராகி விடுவாள்.

வலிய வலிய சென்று அவள் பேசினாலும் சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை சுப்பு பேச மாட்டான்.

உறவும் உரிமையும் தனக்கு இருக்கிறது என்ற எண்ணம் ஷியாமளாவிற்கு. அவளுடன் நமக்கென்ன பேச்சு என்ற எண்ணம் சுப்புவிற்கு.

நாட்கள் அப்படியும் இப்படியுமாய் நகர்ந்து கொண்டிருந்தது.

சுப்புவிற்கு இறுதியாண்டு இறுதி செமஸ்டர் நெருங்கிக் கொண்டிருந்தது.

இம்முறை முழுதாய் நான்கு மாதம் தாரணியை பார்ப்பதை முயன்று தவிர்த்து வந்தான்.

தன்னை பற்றிய அவளது எண்ணம் தான் என்ன? தான் அவளுக்குள் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறோமா என்று அறிந்து கொள்ளும் கட்டாயம் அவனுக்கு.

நான்கு மாதத்திற்கு பிறகு குச்சம்பள்ளி சென்றவனை குடைந்தெடுக்க காத்திருந்தாள் தாரணி.

அவனை பார்த்த பார்வையில் அவ்வளவு மாறுபாடு.

என்ன இப்படி பார்க்கிறா? உள்ளுக்குள் குழப்பம் சுப்புவிற்கு.

தாரு நாலு மாசமா நான் உன்னை பார்க்க வரலியே… உனக்கு ஏதாவது தோணுச்சா? எனக்கு சாதகமாய் ஏதாவது சொல்லேன் என்று ஏங்கியது அவன் விழிகள்.

அவள் மௌனமாய் நிற்க… தாரு என்னை பத்தி என்ன நினைக்கிற…? தன் மனதை திறந்து காட்ட தத்தளித்துக் கொண்டிருந்தான்.

நான் ஒன்னு கேட்கவா? தாவணியை முறுக்கிக் கொண்டு நின்றாள். மாலை நேர சூரிய வெம்மை அவளுக்கு தெப்பமாய் வியர்க்க வைத்தது.

தன் கைக்குட்டையை எடுத்து நீட்டினான்.

கை நீட்டி வாங்காதவள் அவனை பார்த்து எச்சில் விழுங்கியபடி
நீ… நீங்க என்னை காதலிக்கிறீங்களா? கேட்டே விட்டாள்.

அவள் கேள்வியில் அவன் அதிரிந்து நின்றான்.

சொல்லுங்க! நிலம் பார்த்து குரல் உயர்த்திக் கேட்டாள்.

யாரு சொன்னது? மெல்லிதாய் தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டே கேட்டான்.

லதா சொன்னா!

அது யாரு?

என் கிளாஸ்மெட் அவ. அவ தான் சொன்னா நீங்க என்னை பார்க்க வறீங்களே அது காதலினால் தானாம்.

அப்படியா சொன்னா? நீ என்ன நினைக்கிற? அவன் இரண்டாண்டுகளாக கேட்க தயங்கிய ஆனால் கேட்க விரும்பிய வார்த்தை அல்லவா அது தான் அவ்வளவு எதிர்பார்ப்பு அவன் முகத்தில்.

எனக்கு தெரியலையே என்று உதடு பிதுக்கியவளை கண்டு அவ்வளவு காதல் பொங்கியது சுப்புவிற்கு.

தாரு என்னை உனக்கு பிடிக்குமா?

ம்ம்ம்ம்ம்…. மெல்லிதான முணு முணுப்பு தான் பதில் என்றாலும் அவன் செவி நுழைந்த வார்த்தை இதயத்தை நிறைத்தது.

அப்போ நாம விவாகம் பண்ணிக்கலாமா? அவன் சட்டென்று கேட்டு வைக்க அவளுக்கு தான் திக்கென்றானது.

சொல்லு தாரு!

எ… என்ன கேட்டீங்க?

நாம விவாகம் பண்ணிக்கலாம். உன்னை என் கடைசி மூச்சு வரை மகாராணி மாதிரி பார்த்துக்குவேன். பள்ளிக்கு எதிர்புறம் வெட்டவெளி மரத்தடியில்  நின்று வாக்குறுதி கொடுத்து நின்றான் சுப்ப கிருஷணா நந்தமூரி அதை அவனால் காப்பாற்ற இயலாமல் போனது தான் அந்தோ பரிதாபம்.

நான் வீட்டுக்கு கிளம்பணும்…. புத்தகப் பையை இறுக்கிக் கொண்டாள்.

தாரு இன்னும் மூனு மாசம் தான் உனக்கு படிப்பு இருக்கு. அப்புறம் உனக்கு வரன் தேட ஆரம்பிச்சுடுவாங்க. தனக்கு வீட்டில் வரன் பார்த்து வைத்து விட்ட தகவலை அவளோடு பகிரவில்லை.

அடுத்த மாதம் இதே தேதி உன்னை பார்க்க வருவேன். என் காதல் உண்மை என்று உன் மனசு சொன்னால் எனக்கு சம்மதம் சொல்லு!

“—————-“

பாபு ஒரு நிமிஷம்… சுற்றி முற்றி பார்த்து விட்டு சுப்புவிடம் ஓடி வந்தார் ராகவலு.

சொல்லுங்க மாமய்யா என்று நின்றாலும் அவர் முகத்தை படித்து விட்டான்.

பாபு உங்க குடும்பம் அந்தஸ்து வேற… எங்க வாழ்க்கை முறை வேற… இது சரியா வராது. வேண்டாம் விட்டுடுங்க! அவ்வளவு தான் ராகவலு சென்றுவிட்டார்.

மாமய்யா… ஒரு நிமிஷம்…. மூச்சிரைக்க ஓடி நின்றவன் எனக்கு தாருவை ரொம்ப பிடிச்சிருக்கு. என்னை நம்புங்க… நான் அவளை நல்ல விதமா வைத்து வாழ்வேன்.

பாபு தயவுசெய்து கற்பனையை வளர்த்துக்காதீங்க! உங்களுக்கு ஷியாமளாவை பேசி முடித்து அடுத்த மாசம் நிச்சயம் பண்ண போறாங்க.

என்ன சொல்றீங்க? ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

உங்க நடவடிக்கையில் மாற்றம் தெரியுதாம்…! சீக்கிரம் உங்களுக்கு கால்கட்டு போடணும்னு முடிவு பண்ணிட்டார் மாமய்யா.

ராகவலு சென்றுவிட அவ்விடத்திலே சிலையென நின்றுவிட்டான் சுப்பு.

“——————“

கூடத்தில் துணி மடித்துக் கொண்டிருந்த லீலாவிடம் வந்தவன் ம்மா இந்த வீட்டுல என்ன நடக்குது…. கோபத்தில் பல்லை கடித்தான்.

என்னாச்சு பாபு? புரியாமல் பார்த்தார்.

எனக்கு விவாகம் பண்ண பிளான் பண்ணியிருக்கீங்களா?

ஆமா… பின்னாலிருந்து குரல் கேட்டது.

ராம கிருஷ்ணாவின் குரல் தான்.

இப்போ விவாகம் பண்ண  என்ன அவசரம்?

அவசரம் இல்லை… அவசியம். அழுத்தமாக கூறினார் ராமகிருஷ்ணா.

எனக்கு பெண் பார்த்து நிச்சயம் பண்ற வரைக்கும் போயிருக்கீங்க… என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கல.

ஏன் கேட்கணும்? மீசையை நீவிக் கொண்டு முறைத்தார் ராமகிருஷ்ணா.

எனக்கு ஷியாமளாவை விவாகம் பண்ற எண்ணம் இல்லை. இதுவரை தந்தை முன் குரலை உயர்த்தாதவன் அன்று எகிறிவிட்டான்.

உன்னை யாரும் யோசனை கேட்கலை. கை நீட்டி காட்டுற பொண்ணு கழுத்துல தாலி கட்ட வேண்டியது மட்டும் தான் உன் வேலை.

என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது.

ஏன் முடியாது?மனசுல வேற ஏதாவது நோக்கம் இருந்தா அடியோட அழித்துடு. நான் எடுக்கிறது தான் முடிவு! என் தங்கை பொண்ணு தான் இந்த வீட்டு மூத்த மருமகள். ஆவேசமாய் உறுமிவிட்டு நாற்காலியை எட்டி உதைத்துத்தள்ளி விட்டு போனார் ராம கிருஷ்ணா.

ம்ம்மா என்ன இதெல்லாம்? தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் சுப்பு.

சுப்பு நாயனா என்ன செய்தாலும் உன் நன்மைக்கு தான். கணவனை விட்டுக்கொடுக்காது பேசிவிட்டு சென்றார் லீலா.

“———————-“

குச்சம்பள்ளி சென்றவன் நேரே தாருவின் வீட்டிற்கு சென்றான்.

அவனை எதிர்பாராத தாருவின் பெற்றோர் திகைத்து நிற்க… பட படத்து நின்றாள் விஜய தாரணி.

உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்னு தான் உங்களை பார்க்க வந்திருக்கேன்.

ராகவலு மாமய்யாக்கு தெரிந்திருக்குன்னா உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

தாரணியை பெண் கேட்டு வந்திருக்கேன். சுற்றிவளைக்கவில்லை கொஞ்சமும் தயக்கம் இல்லை நேரடியாக கேட்டு நின்றான்.

இல்லை பாபு மன்னிக்கணும்! உங்க அந்தஸ்துக்கு நாங்க நூறில் ஒரு பங்கு கூட இல்லை. எங்க தகுதிக்கு உங்க வீட்டுல பொண்ணு கொடுக்க கனவில் கூட நினைக்க முடியாது திட்டவட்டமாக கூறிவிட்டார் தாருவின் தந்தை.

என்னை நம்பி பெண் கொடுக்க மாட்டீங்க? உடைந்து போன குரலுடன் கேட்டான்.

பாபு விவாகம் விளையாட்டு சமாச்சாரம் இல்லை. உங்க பெற்றவங்க சொல்றதை கேளுங்க! அடுத்து பேசாது உள்ளே சென்று விட்டார் தாரணியின் தந்தை.

தாரணி கண்ணீர் மல்க கதவுக்கு பின்னால்  மறைந்து நின்றாள்.

வலி நிறைந்த விழிகளுடன் அவளை பார்த்தவன் எதுவும் பேசாது வெளியேறி விட்டான்.

“———————“

இரண்டு மாதமாக வீட்டிற்கு வரவில்லை சுப்பு.

விடுதியில் இருந்து கடிதமும் எழுதுவதில்லை. லீலாவதி ஏக்கமாக கடிதம் எழுதினால் தாயிற்கும் பதில் அனுப்புவதில்லை.

எவ்வளவு நாள் உனக்கு இந்த வீம்பு இருக்கும் பார்த்துக் கொள்கிறேன் நீயா நானா என்ற நினைப்பில் இருந்தார் ராமகிருஷ்ணா.

தன் தாய் பிறந்த வீட்டிற்கே தான் மருமகளாக செல்ல போகிறோம் என்ற கனவில் மிதந்து கொண்டு இருந்தால் ஷியாமளா.

இன்னும் ஓராண்டு ஷியாமளாவிற்கு படிப்பு இருந்தாலும் விவாகம் முடிந்து படித்துக் கொள்ளட்டும் என்று கராறாகக் கூறிவிட்டார் புவனேஸ்வரி.

இரு குடும்பமும் ஆவலுடன் காத்திருந்தது சுப்புவின் வருகைக்காக. தங்கள் வீட்டில் நடக்கும் முதல் விவாகம் அதை எப்படி எல்லாம் செல்வ செழிப்புடன் நடத்திக் காட்ட வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தனர் பெரியவர்கள்.

தனது முதுகலை தேர்வு முடிந்து சுப்புவும் வந்தான். வந்தவன் தனியே வரவில்லை. மாலையும் கழுத்துமாக தாரணியின் கரம் பற்றி வந்து நின்றான்.

கருகமணி தாலி பூட்டி தங்கள் முறைப்படி விவாகம் செய்து அழைத்து வந்திருந்தான் விஜய தாரணியை.

சுப்பு…. கொதித்து நின்றார் ராமகிருஷ்ணா.

அமைதியாய் தந்தையின் முகம் நோக்கினான் சுப்பு.

சுப்பு நீயா இப்படி? முந்தானையை வாயில் பொத்தி விம்மி அழுதார் லீலாவதி.

அம்மா என்னை மன்னிச்சிடுங்க எனக்கு வேறு வழி தெரியலை. என் விவாகத்தில் நீங்க என்னோட விருப்பத்தை கேட்கவே இல்லை எனக்கு இந்த தாருவை தான் பிடித்திருக்கு. இந்தப் பெண்ணை பிடித்திருக்கும் போது நான் எப்படி ஷியாமளாவை விவாகம் முடிக்க முடியும்?

உன் நியாயத்தை யாரும் கேட்க விரும்பலை என் பரம்பரையில் யாரும் செய்யாத ஈன செயலை செய்துட்டு வந்து நிற்கிற…. உனக்கு இனி இந்த வீட்டில் இடம் இல்லை வெளியே போ….! வாயிலை நோக்கி கை நீட்டி கர்ஜித்தார் ராமகிருஷ்ணா.

எதிர்பார்த்தது தான் என்றாலும் வலிக்க தான் செய்தது.

தாரணியின் அழுகை நிற்கவேயில்லை. இதனால் தான் வேண்டாம் என்று அவள் மறுத்தாள்.

அழுது நின்றவளின் கரம் பற்றி அழைத்து சென்றான்.
அடுத்து தாரு வீட்டிலும் இதே புறக்கணிப்பு தான் நிகழும் என்று தெரிந்திருந்தாலும் அங்கும் சென்றார்கள்.

விஜி நீ எவ்வளவு அமைதியான பொறுமையான பொண்ணு நீ போய் இப்படி பண்ணிட்டியே… புலம்பி அழுதார் அவளின் தந்தை.

தம்பி நீங்க செய்தது சரியா? நீங்க என் பொண்ணை விரும்பி விவாகம் பண்ணினதா சொல்ல மாட்டாங்க என் பொண்ணு உங்களை மயக்கிடதா சொல்லுவாங்க.

உள்ளே வா என்று அவர்களும் அழைக்கவில்லை.

+2 பொதுத்தேர்வு முடிந்த அடுத்த வாரமே விஜயதாராணியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரபோகிறார்கள் என்று செய்தி கேட்டவுடன் தான் அவளுக்கு மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. இதுவரை தோன்றாத உணர்வு தோன்றியது. அவளே சுப்புவிற்கு கடிதம் எழுதினாள்.

அவளின் ஒத்தை வார்த்தைக்கு காத்திருந்தவன் ஓடோடி வந்து விட்டான்.

இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்காத நிலையில் சுப்புவின் நண்பர்கள் உதவியுடன் திருப்பதி பாலாஜி சந்நிதானத்தில் விவாகம் செய்து கொண்டனர்.

“——————–”
இது தான் நடக்கும் என்று முன்பே அறிந்திருந்தபடியால்
விஜயாவாடாவில் வீடு பிடித்து வைத்திருந்தான்.

தங்களின் வாழ்வை சிறிய இல்லத்தில் பெரிய மகிழ்வுடனே தொடங்கினார்கள். போக போக இரு குடும்பத்திலும் ராசியாகி நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்று சுப்பு தன் காதல் மனையாளை வெகுவாக தேற்றி இருந்தான்.

படித்த படிப்பு உடனடியாக வேலை வாய்ப்பை பெற்றுத் தந்தது.

எவ்வளவு பெரிய குடும்பத்து பிள்ளை மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறானே என்று வேதனை கொண்டது தாரணி தான்.

மகிழ்வுடனே வேலைக்கு சென்ற சுப்பு. இதுவும் ஒரு அனுப்பவம் என்று ஏற்றுக் கொண்டான்.

தன்னை நம்பி வந்த சிறு பெண்ணை குழந்தையாய் பாவித்து கண்ணும் கருத்துமாய் கவனித்து வந்தான் சுப்பு.

சிறிய கூட்டுக்குள் அன்றில் பறவைகளாய் அன்னியோன்யமாய் வாழ்ந்து வந்தனர்.

இரு தரப்பு உறவும் இல்லை என்ற கவலையை தவிர  இரு தரப்பில் இருந்தும் உதவி இல்லையே என்று ஒரு நாளும்  வருந்தவில்லை. எதை எண்ணியும் அவர்கள் கலங்கவில்லை.

“——————”
பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த ஷியாமளா அழுது கரைந்து ஆர்ப்பாட்டம் செய்தாள்.

சுப்புவை விட நூறு மடங்கு வசதியான மாப்பிள்ளையை உனக்கு கட்டி வைக்கிறேன் என்றார் அவளின் தந்தை டாக்டர் ஜெயச்சந்திரன்.

நான் மாமய்யா வீட்டுக்கு மருமகளாக போக தான் ஆசைப்பட்டேன் என்றாள் அழுகையுடன்.

நீ அழாதேரா அம்மாயி நீ இப்போதும் கிருஷ்ணா குடும்பத்து மருமகள் தான். தங்கை மகளின் கண்ணீர் துடைத்தவர் தன் அடுத்த மகன் வெங்கட கிருஷ்ணாவிற்கு ஷியாமளாவை கட்டி வைக்கிறேன் என்றார்.

வெங்கட் இப்போது தான் இளங்கலை முடித்திருக்கிறான். ஷியாமளாவை விட ஒரு வயதே பெரியவன்.

வெங்கட்டிற்கு ஷியாமளா மீது ஈர்ப்பு இல்லை என்றபோதும் உடைந்து போயிருக்கும் தந்தையின் மனதை ஆறுதல் படுத்த எண்ணி ஒப்புக்கொண்டான்.

விஜயவாடாவில் அண்ணன் தங்கியிருக்கும் முகவரி அறிந்து தேடி வந்தான் கோகுல கிருஷ்ணா.

தன்னைத் தேடி ஒரே உறவாக தம்பி வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி சுப்புவிற்கு.

தம்பி கூறிய செய்தி அவ்வளவு உவகையாக இல்லை என்ற போதும் தன்னால் என்ன செய்ய முடியும் என்று மனதை தேற்றிக் கொண்டான் சுப்பு.

யாரையும் எடுத்தெறிந்து பேசும் ஷியாமளாவின் குணம் எப்போதுமே சுப்புவிற்கு பிடிக்காது.

வெங்கட்டின் பொறுமைக்கு ஷ்யாமளாவோடு எப்படி வாழ்வான் என்ற கவலை மட்டுமே….

“———————“

ஷியாமளா வெங்கட கிருஷ்ணா திருமணம் இனிதே நடைபெற்றது.

திருமணத்திற்கு சுப்புவை அழைக்க அவர்கள் விரும்பவில்லை.

கொடுமை என்னவெனில் பல காலமாய் தங்களிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராகவலுவை வேலையில் இருந்து நிறுத்தி இருந்தார் ராமகிருஷ்ணா.

நீ உடந்தையாய் இருந்து உன் உறவுக்கார பெண்ணுக்கு என் மகனை மாப்பிள்ளையாய் வளைத்து விட்டாய் என்ற குற்றசாட்டு.

மூத்த மகன் தன் வீட்டில் இல்லை என்ற எக்கம் லீலாவிற்கு. ஒரு தாய் பத்துக் குழந்தை பெற்றாலும் மூத்த குழந்தை எப்போதுமே ஸ்பெஷல் தான்.

இப்போதெல்லாம் தொழிலை தனியாக நிர்வகிக்க முடியாமல் திணறுகிறார் ராமகிருஷ்ணா.

சுப்பு ஒருவன் இருந்தால் மொத்த வேலையும் ஒற்றை ஆளாய் பார்ப்பான் என்று வாய்விட்டு புலம்பினார் லீலா.

மகனின் ஏக்கம் ராமகிருஷ்ணாவிற்கு இல்லாமல் இல்லை. ஆயினும் மகனால் பட்ட அவமானம் அவரை வெகுவாய் உருகுலைய வைத்தது.

ராமகிருஷ்ணா மகன் பரம்பரை பெருமை மறந்து ஒரு ஏழை பெண்ணை மணந்து கொண்டான் என்று சொந்தம் பந்தம் பேசி சிரித்த போதெல்லாம் ஏற்பட்ட வலியும் அவமானமும் அவரை இன்னும் இறுகி அமர வைத்தது.

தொழிலில் கவனம் சிதறி சிறு சிறு நட்டம் ஏற்பட தொடங்கியது. வெங்கட கிருஷ்ணாவிற்கு அவ்வளவாய் தொழில் சூட்சமம் புரிப்படவில்லை.

“——————–“

சுப்பு திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகி இருந்தது.

தாரணியால் காலையில் கண்விழித்து எழவே முடியவில்லை. தலை சுற்றி கீழே தள்ளியது. வாயில் ஊற்றாய் உமிழ் நீர் சுரந்து வாந்தி வரும் போல் குடலுக்குள் ஏதோ பிரட்டியது.

இன்னும் சிறு குழந்தை போல் உறங்கும் மனைவியை எண்ணி சிரித்துக் கொண்ட சுப்பு காபி கலந்து அவளை எழுப்பினான்.

தட்டுத் தடுமாறி முகம் கழுவி வந்தவள் ஒரு மிடறு காபி பருகி ஓங்காரமாய் குமட்டி வாந்தி எடுத்து நாற்காலியை பற்றிக் கொண்டு சரிந்து அமர்ந்தாள்.

தாரு… தாரு…. அவளை அள்ளி கொண்டு வந்து பாயில் படுக்க வைத்து மின்விசிறியை சுழலவிட்ட சுப்பு பெதம்மா என்று கத்தி கொண்டே ஹவுஸ் ஓனர் வீட்டுக்குள் ஓடினான்.

பதட்டமாய் வந்த பெண்மணி அவள் சோர்ந்த முகமும் வெளிறிய கண்களையும் பார்த்து விட்டு எப்போ தலைக்கு குளிச்ச என்றார்.

தாரணி புரியாமல் பார்க்க… எப்போ பீரியட்ஸ் ஆச்சுன்னு கேட்கிறாங்க… லப் டப்பை கட்டுப்படுத்திக் கொண்டான் சுப்பு.

சற்று நிதானித்து கண்மூடி முணு முணுத்தவள் அம்பது நாள் ஆகுது என்றாள்.

சுப்பு… அநேகமா இது கர்ப்பமா இருக்கலாம் என்றார் புன்னகையுடன்.

மனைவியின் முகத்தை அவன் ஆசையாய் நோக்க….. சுப்பு எதுக்கும் ஆஸ்பத்திரி போயிட்டு வந்துடுங்க! நம்ம கணிப்பு சரின்னு சொல்லிட முடியாது.

பழம் இருந்தா ஜுஸ் போட்டுக் கொடு! டிபன் செய்ய வேண்டாம் நான் கொண்டுவரேன் என்று சென்றுவிட்டார்.

கர்ப்பம் தான் என்று இருவருக்குமே உறுதியாக நம்பிக்கை.

தாரணியின் கண்ணில் கண்ணீர் முத்துக்கள்.

என்னடாமா? காதலுடன் தழுவிக் கொண்டான்

பயமா இருக்கு… அம்மா வேணும் என்றாள் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு.

கண்ணீருடன் அவள் உச்சியில் முத்தம் வைத்தான்.

“——————-“

மருத்துவமனைக்கு சென்று அங்கு கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.

இந்த சந்தோஷ செய்தியை இரு வீட்டிற்கும் கடிதம் எழுதி தெரியப் படுத்தினான் சுப்பு.

கடிதத்தை படித்த தாரணியின் தாய் கண்ணீர் விட்டு கதறினாள்.

கர்ப்பம் தாங்கி நிற்கும் ஒற்றை பெண் மகவை பார்க்க முடியவில்லையே என்ற வேதனை அந்த அன்னைக்கு.

தாரணியின் பெற்றவர்களுக்குமே வருத்தம் தான் தன்மகள் இப்படி ஒரு செயலை செய்வாள் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஏழ்மை நிலையில் இருந்தாலும் கௌரவமாக வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள்.

சுப்புவுடன் தாரணியின் திருமணம் முடிந்தவுடன் ராமகிருஷ்ணாவின் உறவினர்கள் வந்து எவ்வளவு கீழ்த்தரமாக பேசி சென்றார்கள் என்று ஊருக்கே தெரியும்!

எது எப்படி ஆயினும் பெற்றவளால் மகளை ஒதுக்கி விட முடியுமா?

அவர்களே மகனை ஒதுக்கி வைத்திருக்கும் போது நாம் போய் உறவு கொண்டாடுவது முறையாக இருக்காது… வேறு மாதிரி பேச்சுக்கு இடம் கொடுத்துவிடும்.

நாம் போய் பார்க்க வேண்டாம் என்று வேதனையுடன் கூறிவிட்டார் தாரணியின் தந்தை.

சுப்புவின் வீட்டிலோ கடிதத்தை படித்து ரகசியமாய் அழுது கொண்டு இருந்தார் லீலாவதி. தன் மகனுக்கு ஒரு வாரிசு என்ற பூரிப்பும் அவருக்கு இல்லாமல் இல்லை.

தாரணியின் கர்ப்ப செய்தி கேட்டு ஷியாமளா நொடித்துக் கொண்டாள்.

ஓடிப்போனவ குழந்தை உண்டானது பெரிய விஷயமா போய் வேலையை பாருங்க  என்று வேலையாட்களிடம் சிடுசிடுத்தாள்.

“——————“

மகனை பார்க்க வேண்டும் என்ற அலாதி ஆவல் லீலாவை பலவீனப்படுத்தியது. ஆண்கள் வெளியுலகம் சென்று விட்டால் சொந்தகதை சோகத்தை எல்லாம் மறந்து விடுவார்கள்  வீட்டில் இருக்கும் பெண்களுக்கு?

சரியாக உண்ணாமல் உறங்காமல் தவிக்கும் பாரியாலிடம் கோபத்தை காண்பிக்க முடியாமல் வெதும்பினார் ராமகிருஷ்ணா.

இவளுக்கு மட்டும் தான் மகனா?எனக்கு அவன் முதல் குழந்தை இல்லையா? எனக்கு அவன் மீது பாசம் இல்லையா? நான்கு தொழிலை ஒற்றை ஆளாய் தூக்கி சுமந்து ஏற்கனவே சோர்வுடன் இருப்பவர் மனைவியின் வாட்டம் கண்டு இன்னும் நொந்து போனார்.

மாலை நான்கு மணியளவில் ஆயில் மில்லில் இருந்து தகவல் வந்தது அரிசி ஆலையில் இருக்கும் வெங்கட்டிற்கு.

ராமகிருஷ்ணா மயங்கி விழுந்து விட்டார் கரீம் நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே மகன் கவலையில் இருக்கும் லீலா கணவன் மயங்கிய செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தார்.

தம்பதியர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் .ஜெயச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து சுப்பு கிருஷ்ணா வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தொலைபேசி தகவல் சென்று சேர்ந்தது.

விழுந்தடித்துக் கொண்டு சுப்பு கிருஷ்ணா மனைவியை கையோடு அழைத்து வந்து சேர்ந்தான்.

சர்க்கரை அளவு குறைந்து லீலாவதி மயங்கி இருக்க அதீத மன அழுத்தத்தில் பிபி எகிறி ராம கிருஷ்ணா மயங்கி இருந்தார்.

“——————-“

நாயனா என்னை மன்னிச்சுடுங்க! உங்க சுப்பு வந்திருக்கேன் என்னை பாருங்க….மயங்கி கிடந்த தந்தையின் கரம் பற்றி குற்ற உணர்வுடன் கண்ணீர் உகுத்தான் சுப்பு.

செல்ல மகனின் கெஞ்சல் குரல் சோர்ந்து கிடந்த மூளைக்குள் மின்சாரம் பாய்ச்ச மெல்ல கண்விழித்தார் ராமகிருஷ்ணா.

சற்று தேறிய உடனே கணவன் அருகில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார் லீலா.

பயத்துடன் நின்றிருந்த மருமகளை ஆசையுடன் பார்த்தார்.

இன்னும் மேடிடாத அவள் மணிவயிற்றை பார்வையால் வருடினார்.

ராமகிருஷ்ணாவின் பார்வையில் கனிவு இல்லை,அதேசமயம் வெறுப்பும் இல்லை.

என்ன பேச வேண்டும் என்று சுப்புவிற்கு தெரியவில்லை…. அவனிடம் முகம் பார்த்து பேச ராமகிருஷ்ணாவும் விரும்பவில்லை.

என்ன செய்ய வேண்டும் என்று வெங்கட்டிற்கும் புரியவில்லை.

மருத்துவமனையில் வைத்து விலாவரியாக பேசி கெஞ்சி மன்னிப்பு கேட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் விருப்பம் சுப்புவிற்கு இல்லை.

பார்த்துக்கோ வெங்கட் நான் கிளம்புறேன்…. அம்மாவை ஏக்கமாய் பார்த்தபடி சுப்பு மனைவியின் கரம் பற்றி நடக்கத் தொடங்கினான்.

தோள்கள் குலுங்க முந்தானையால் முகத்தை மூடி தேம்பி அழுதார் லீலாவதி.

பாலும் பருப்பும் ஊட்டி போஷாக்காய் வளர்த்த செல்ல மகன் துரும்பாய் இளைத்திருப்பதாக அந்த தாயின் மனம் துடித்தது.

வெங்கட் அவனை நம்ம வீட்டுக்கு போக சொல்லு! முகத்தை சுவற்றின் புறம் திருப்பிக் கொண்டு ராமகிருஷ்ணா சொல்ல லீலாவதியின் முகத்தில் மின்னல் ரேகை.

அப்போதும் சுப்பு தயக்கமாய் நிற்க… அவன் பாரியாலையும் சேர்த்து தான் சொல்றேன் என்றார் கடுகடுப்பாய்.

என்னங்க வாயா வயிரா இருக்க பொண்ணை அப்படியே போக சொல்றதா… வெகுவாய் குறைபட்டுக் கொண்டார் லீலா.

நீ போய் ஆரத்தி எடேன்!இடக்காக சொன்னார் ராமகிருஷ்ணா.

அதேதான்… டேய் வெங்கட் நீ நயனாவை டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்துரு நான் போய் என் பிள்ளைகளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கிறேன்… ஒரே நாளில் பத்து வயது குறைந்து பாய்ந்து ஓடினார் லீலா.

“——————–“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!