Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்10

அனைவரையும் ஆட்டிப் படைக்கும் காலம் என்னும் சர்வ வல்லமை கொண்ட இயந்திரம் தன் வேலையைச் சரியாகச் செய்ய.. வருடங்கள் ஓடியது.

        அதிகாலை ஐந்து மணி.. அன்றைய லேப் இன்டர்னல் எக்ஸாமிற்காக பாதி உறக்கமும்.. பாதி விழிப்புமாக அப்சர்வேஷன் நோட்டில் மகிழினி கண்ணைப் பதித்திருக்க.. மற்ற புலன்கள் யாவும் சமையலறை வாயிலில் தன் அம்மாவின் கை மணம் கமழும் காஃபிக்காகத் தவம் கிடக்கத் துவங்கியது.

         அறை வாயிலில் நிழல் தெரிய.. ஆர்வமாக நிமிர்ந்தவள் முகம் சுருங்கியது.. வந்தது அவள் அவ்வா.. இவள் வாயைத் திறந்து காஃபி என்பதற்குள் அவர் “போய் வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வா” என விரட்டினார்.

      “தினமும் நான் தானே பண்றேன்.. இன்னைக்கு எனக்கு லேப் இன்டர்னல் இருக்கு.. நீயா வந்து பண்ணப் போற.. நாளைக்கு செய்றேனே.. நான் படிக்கனும்” என சிணுங்கலாகக் கூற



Advertisement

       அவளை முறைத்தவர் “தினமும் நீ பண்ற ஒரே வேலை இதான்.. இன்னைக்கு அதுக்கும் மட்டமா.. போடி.. போய் வாசத் தெளிச்சுட்டு வந்தா தான் காப்பி.. இந்தா தனம் எனக்குத் தெரியாம அவளுக்கு கொடுத்த அவ்வளவு தான்” என மருமகளையும் மிரட்டியவர்.. பின்புறம் சென்றார்.

      அவளுக்கும் தூக்கம் தள்ளியதால் வாசல் கூட்டித் தெளித்தால் தூக்கம் சற்றே மட்டுப்படும் என எண்ணியவள் எழுந்து வெளியே வந்தாள்.. பக்கத்து வீட்டு வாசலில் ரேவதி கோலம் போட்டுக் கொண்டிருக்க “குட் மார்னிங் சித்திமா” என அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிவிட்டு அவளோடு பேசியபடியே வாசல் பெருக்கினாள்.

      ரேவதிக்கு தன் விதி இப்படியிருக்க.. யாரை நொந்து என்ன செய்ய என எண்ணி மகிழிடம் எப்போதும் போலவே பேசுவாள்.. மகிழுக்கும் ரேவதியை மிகவும் பிடிக்கும்.. நன்றாகப் பேசிக் கொண்டிருந்த ரேவதி இவளிடம் கண்ஜாடை காட்டிவிட்டு வீட்டுக்குள் செல்ல.. மகிழினி ‘வா.. வா.. இன்னைக்கு உன்னை என்ன செய்யறேன்னு பாரு’ என மனதில் கருவிக் கொண்டாள்.

Advertisement

     அவள் எதிர்பார்த்தபடி சாரதா கோவிலுக்கு கிளம்பி வெளியே வரவும்.. இவர்கள் வீட்டைக் கடக்கும் போது வேண்டுமென்றே வாசல் தெளிப்பது போல நன்றாக அவர் மீது தண்ணீரைத் தெளிக்க.. அவர் காண்டாகி “ஏன்டி கண்ணைத் தின்னவளே.. ஆளு வரது தெரியலை” என அவளிடம் சண்டைக்கு வர

Advertisement

     “எங்களுத்தான் வயசாச்சு கண்ணுத் தெரியலை.. நீ குமரிப்புள்ளை தானே.. ஓரமாப் போக வேண்டியது தானே” என அவளும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்க

[the_ad id=”6605″]

      “அப்படியே அப்பத்தாயா வாயி.. எவன் மாட்டிட்டு சீக்கியடிக்கப் போறானோ.. அடியே.. வயசுப்புள்ளை மாதிரி நடந்துக்க” என திட்டிவிட்டு நகர..

Advertisement

      அந்த நேரம் நந்தாவின் அப்பா சரவணன் வெளியே வர.. அவர் அடிக்கடி தன் தந்தைக்கு இடைஞ்சல் செய்வது நினைவில் வர “நாங்க ஒழுங்கா தான் நடக்கறோம்.. நீங்களும் கொஞ்சம் தலையில நடக்காம கால்ல நடங்க.. இல்லைனா அடிபட்ரும்” என அவரையும் குத்திக் காட்டிவிட்டு.. எட்டுப் புள்ளியில் நான்கு கோடுகளை இழுத்து கோலம் என பெயர் பண்ணிவிட்டு உள்ளே நுழைய.. அவளை தனம் கோவத்துடன் எதிர்கொண்டார்.

     ‘ஐயோ.. காலையிலேயே அர்ச்சனையா.. இப்ப எப்படி எஸ்கேப் ஆகறது’ என யோசித்தவள் வெளியே ஈஈஈஈ என இளித்து வைக்க.. அதில் சற்றும் மனம் இளகாத தனம் “எத்தனை தடவை சொல்றது பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசுன்னு.. நீ இப்படியே பண்ணா.. எல்லாரும் என்னைத் தான் பேசுவாங்க.. எப்படி புள்ளை வளத்துருக்கா பாருன்னு” என அவளை அர்ச்சிக்கத் துவங்க

     சலிப்பானவள் “ம்மா.. அந்த அனகோண்டாவை நான் வம்பிழுக்கறதும் அது என்னைத் திட்றதும் புதுசா என்ன.. உம்புள்ளை சமத்து ம்மா.. அப்பாவி.. அதுகிட்ட மட்டும் அப்படி நம்பும்மா” என அவர் தாடை பற்றி கொஞ்ச.. அவள் கையைத் தட்டி விட்டவர் சமையலறை செல்ல.. முந்தானையைப் பிடித்தபடி தானும் பின்னோடு சென்றாள்.

     அங்கு அவரை சமாதானம் செய்துவிட்டு காஃபியை ஒரு கையில் எடுத்தவள்.. மறுகையால் அம்மாவின் இடையைக் கிள்ளிவிட்டு ஓட.. அதில் ஆத்திரமடைந்த தனம் “எருமைக்குப் பொறந்தவளே” என அருகில் இருந்த ஸ்பூனைத் தூக்கி அவள் மேல் எறிய.. அது சரியாக அப்போது உள்ளே வந்த ராகவன் மேல் மோதி கீழே விழுந்தது.

      மனைவியின் கோவத்தையும் மகளின் துறுதுறு விழிகளையும் கண்டவருக்கு இது தன் மகளதிகாரத்தின் ஒரு பகுதி என விளங்க.. மகிழிடம் திரும்பி அவள் நோட்புக்கை கவனித்து என்ன பரிட்சை என விசாரித்துவிட்டு.. மனைவியிடம் ‘தோட்டம் செல்கிறேன்’ என கூறிவிட்டு நகர்ந்தார்.. இளம் புன்னகையுடன்.

      அதன்பிறகு வழக்கம் போல அவ்வாவை வம்பிழுத்தபடியே.. கல்லூரிக்கு ரெடியான மகிழ்.. தன் சைக்கிள் பஞ்சர் ஆனதால் முகிலனை பஸ் ஸ்டாப்பில் விடச் சொல்லிச் சென்றாள்.. அங்கே முத்து இவளுக்காகக் காத்திருந்தாள்.

      இருவரும் அருகில் இருந்த கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயில்கின்றனர்.. முத்து ஆங்கில இலக்கியம்.. மகிழ் இயற்பியல்.. பஸ் வருவதற்குள் நேற்றைக்குப் பார்த்த சீரியலைப் பற்றி அலசிக் கொண்டிருக்க.. அப்போது தான் நினைவு வந்தவளாய் முத்து “இன்னைக்கு ராஜாண்ணா வரதா அப்பா சொல்லிட்டு இருந்தார் டி” என மகிழிடம் சொல்ல..

     “வரானா.. இவ்வளவு நாள் ஊரு உருப்படியா இருந்துச்சு.. இனி அவ்வளவு தான்” என உதட்டைச் சுழிக்க.. அவளை முறைத்த முத்து “போடி.. உனக்கு வேற வேலையே இல்லை.. எப்பப் பாரு எங்கண்ணனை மட்டம் தட்டிட்டே இருக்க” என நொடித்துக் கொண்டாள்.

     அதற்குள் பஸ் வந்துவிட.. அதை மறந்துவிட்டு வேறொரு விஷயத்தைப் பேசியபடியே கல்லூரி சென்றனர்.. ஒருவழியாக அன்றைய இன்டர்னலை நன்றாகவே செய்துவிட்டு வீடு வர.. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மணி அண்ணன் தலையில் கட்டுடன் இருக்க.. பதறி விசாரித்தாள்.

      வழக்கமான பிரச்சனை தான்.. நந்தாவின் தாத்தாவும் மகிழின் தாத்தாவும் நன்றாக இருந்த சமயம்.. அவர்கள் சம்பாத்தியத்தில் தண்ணீர் பாய்கின்ற காட்டை ஆளுக்கு இரண்டு ஏக்கராக வாங்கிப் போட்டிருந்தனர்.

     அவர்கள் சொத்துக்கள் பெரும்பாலூம் அருகருகே இருக்க.. ஒற்றுமையாய் இருந்த வரை எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.. ஆனால் என்று சண்டை வந்ததோ அன்றில் இருந்து பிரச்சினை தான்.

      ராகவன் பெரும்பாலும் தன் தந்தையின் வாக்கிற்குக் கட்டுபட்டு அமைதியாக இருக்க.. சரவணன் தன் பழி உணர்ச்சியை இப்படிக் காட்டத் துவங்கினார்.. விடிய விடிய அவர்கள் நிலத்தில் தண்ணீர் பாய்ந்திருக்க.. காலையில் தண்ணீர் கட்டச் சென்ற மணியனிடம் தண்ணீர் விடமாட்டேன் என அவர்கள் பிரச்சனை செய்து.. அது கைகலப்பாக முடிய.. மண்வெட்டி மணியன் தலையைப் பதம் பார்த்திருந்தது.

     மணியனிடம் மருத்துவர் என்ன சொன்னார் எனக் கேட்டுவிட்டு.. உள்ளே நுழைய ராகவன் கோவமாகத் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்..

[the_ad id=”6605″]

 

     “நீங்க சொல்லித்தான் நான் சும்மா இருக்கேன் நைனா.. இன்னைக்கு மணியனுக்கு ஏதாவது ஆயிருந்தா.. அவன் மேல கை வைக்க இவன் யாரு.. இவங்கூட மாரடிக்க முடியாதுன்னு தானே நான் கார்த்திகை முதலுக்கே விதைச்சேன்.. இத்தனை நாள் சும்மா இருந்துட்டு இப்ப தொல்லை பண்றான்.. தண்ணீ விடறது இல்லை.. இப்ப தண்ணி கட்டுனாத்தான் கல்லக்கா புடுங்க முடியும்.. இல்லைனா அடுத்த தண்ணிக்குள்ள பருப்பு முளைச்சுப் போயிரும்.. அவனுக்கும் கொடி எல்லாம் அழுகிப் போயிரும்.. ஆனாலும் புரியாம திரியறான்” என புலம்பித் தள்ளினார்.

     நாராயண சாமி “பேசறவங்களே பெரியவங்களா இருக்கட்டும்ப்பா.. விட்டுக் குடுத்துப் போ.. அதுல ஒன்னும் தப்பில்லை.. நீ மத்த வயிலைப் பாரு.. இதை நான் பாத்துக்கறேன்” என அவரை சமாதானம் செய்து அனுப்ப.. அவரும் இயலாமையோடு வெளியே சென்றுவிட்டார்.

     தனம், அவளது அவ்வா என அனைவரும் அங்கே தான் அமர்ந்திருந்தாலும் யாரும் ஒன்றும் பேசவில்லை.. ஆனால் மகிழினியால் அப்படி இருக்க முடியவில்லை.

     தாத்தாவை நெருங்கி.. அவர் காலடியில் அமர்ந்தவள் “எதுக்குத் தாத்தா குட்டக் குட்டக் குனியனும்.. இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயமே இல்ல.. ஆனாலும் இடைஞ்சல் குடுக்கறாங்க.. நீ நைனாவை சும்மா இருக்கச் சொல்ற.. ஏன்” என அவர் நோக்கி வினவ

      தன் வயோதிகக் கரத்தால் அவள் தலையை தடவிய தாத்தா “கண்ணா.. சண்டைப் போட்டா இன்னும் அதிகமா நம்மளைத் தொல்லை பண்ணனும்னு உன் மாமனுக்குத் தோணும்.. சும்மா இருந்தா கொஞ்ச நாள் ஆடிட்டு அடங்கிடுவான்.. அதான்” என்க.. “அப்படிப் பொறுத்துப் போக என்ன அவசியம் தாத்தா” என மீண்டும் கேட்க

   “பாரதத்துல துரியோதனும் அர்ஜூனனும் கிருஷ்ணங்கிட்ட வரம் கேக்கப் போனாங்களாம்.. துரியன் தலைமாட்டிலும் அர்ஜூன் கால்மாட்டிலும் உட்கார.. கிருஷ்ணன் கண்ணு முழிச்சு அர்ஜூனனைத் தான் முதல்ல பாத்தானாம்.. தாழ்ந்து போறவங்க என்னைக்கும் கெட்டுப் போக மாட்டாங்க சரியா.. அதோட உன் மாமனும் நான் வளத்த புள்ளை தானே.. எங்கிட்ட ஒன்னும் பண்ணமாட்டான்” என பொறுமையாக விளக்கினார்.

    “ஆனா.. எப்பவும் பொறுமையாவே இருக்கக் கூடாது தாத்தா.. முன் ஏர் போற வழியில தான் பின் ஏர் போகனும்.. அப்பத்தான் எல்லாம் சரிப்பட்டு வரும்” என தீவிரமாகச் சொன்னவளை.. தாத்தா விளையாட்டுப் பிள்ளையென எண்ணி அவள் தலையைக் கலைத்து விட..

[the_ad id=”6605″]

     அவ்வா தான் “உந்தாத்தனுக்குப் புத்தி சொல்ற அளவுக்கு வந்துட்டியோ.. வர வர வாய் அதிகம் தான்” என அவளை மிரட்ட.. அப்போது உள்ளே வந்த முகிலன் “அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு.. இன்னைக்கு தாத்தா பேசி தண்ணி விட்டாச்சு.. ஆனா நாளைக்கு கல்லக்கா பறிக்க ஆள் இல்லை.. எல்லாம் அந்த வயலுக்கு களை எடுக்கப் போறாங்களாம்.. நாளைக்கு பறிக்கலைன்னா காடு காஞ்சுபோய்டும்.. மறுபடியும் தண்ணிக்கு சத்தம் போடனும்.. குத்தகை ஆளு விடவும் நீங்க விடறது இல்லை இதெல்லாம் யார் கைலாகிறது” என சலித்துக் கொண்டான்.

       “டேய்.. நாங்க பாத்த அதே வேலையைத் தான் நீங்க இப்ப பாக்கறிங்க.. ரொம்பத்தான் சடைச்சுக்கிற.. நானாச்சு நீ போட்ட முதல்லை எடுக்க.. நாளைக்கு நான் வந்து பறிச்சுத் தரேன்.. எல்லாத்துக்கும் இவ தான் காரணம்.. வந்ததும் வராததுமா வம்பிழுத்து விட்டுட்டு இருக்கா பாரு” என மகிழை முறைத்தார் அவ்வா.

தாத்தா இடை புகுந்து “கண்ணாளை ஒன்னும் சொல்லாதே.. அவ குழந்தை” என அவளுக்கு சப்போர்ட் செய்ய.. அவள் பாட்டியைப் பார்த்து பழிப்புக் காண்பித்தாள்.

    “கட்டுத்தாரை திறமா இருந்தா.. கன்னுக்குட்டி துள்ளிட்டுக் குதிக்குமாமா.. எல்லாம் அப்பனும் தாத்தானும் குடுக்கற செல்லம்.. போய் கை கால் கழுவிட்டு வாடி” என அவளை விரட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!