Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்14

      இரவு உணவு யாரும் உண்ணும் மனநிலையில் இல்லை தான்.. நடந்ததை இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் தான்.. அவளை பட்டினி போடவும் மனமில்லாமல் ரேவதி சென்று பார்க்க.. அவளோ தரையில் சுவர் ஓரமாகப் படுத்து உறங்கிப் போயிருந்தாள்..

     அவளை எழுப்பும் தைரியம் இன்றி ரேவதி திரும்பி விட.. அவள் இருந்த தங்கள் அறைக்குள் வந்தனர் நந்தாவின் அப்பாரும் அப்பத்தாவும்.. “இந்தப் பய இப்படிப் பண்ணிப் போட்டினே” என சாரதா விசும்ப

“அவன் என்ன பண்றான்னு பாக்காத உட்ட நம்ம தப்பு தான.. யாருக்கு என்ன விதிச்சிருக்கோ அதான் நடக்கும்.. நீ போய்த் தூங்கு போ” என அப்பாரு ஆறுதல் சொன்னார்.

      “புள்ளைத்தாச்சிப் பொண்ணு சாப்பிடாம தூங்குதே” என்ற அங்கலாய்ப்புடன்.. அவள் அருகிலேயே பாயை விரித்து அப்பத்தாவும் படுக்க.. அரை உறக்கத்தில் இருந்த மகிழுக்கு அனைத்தும் எட்டவே செய்தது.



Advertisement

       அருவாள் சத்ததில் நிகழ் காலத்திற்கு வந்த சகுந்தலை அவளைப் பார்க்க.. சரியாக ஒவ்வொரு வெட்டும் ஒரே கோட்டில் விழ.. அருவாளை நேக்காக அசைத்து மட்டையை பிரித்தவள்.. அதைச் சுற்றியுள்ள நாரையும் சுத்தம் செய்து அந்தப் பெண்ணிடம் கொடுக்க.. அவரின் ஆச்சரியம் கண்டவள் “ஏக்கா உடைச்சு குடுக்கட்டுமா” என்க.. தலையாட்டியவர் வேகமாக உள்ளே சென்று விட்டார்.

      அருவாளை அதன் இடத்தில் வைத்தவள்.. மட்டையை தண்ணீர் காயவைக்கும் அடுப்பின் அருகில் போட்டுவிட்டு உள்ளே வந்து.. சாவகாசமாக தன்னை வேடிக்கை பார்த்த அத்தையிடம் “காப்பி வேணும்த்தை” என்க.. ‘இவ என்ன மேக்’ என அனைவரையும் யோசிக்க வைத்தாள்.

     அப்பாரும் அப்பத்தாவும் இன்னும் அறையில் இருக்க.. நந்தாவின் அப்பா தான் ஹாலில் அமர்ந்திருந்தார்.. அவர் அருகில் கேஷூவலாக அமர்ந்தவள்.. வீட்டைச் சுற்றி சுற்றிப் பார்வையை ஓட்டினாள்.

Advertisement

      அதற்குள் அவள் கேட்ட வரக்காப்பியை அத்தை கொண்டு வந்து கொடுக்க.. அவரிடமே திருப்பி கொடுத்து ஆற்றிக் கொடுக்கச் சொன்னாள்..

Advertisement

      “அப்புறம் அத்தை என்ன சமையல்” என்றவளை எத்தனை முறைதான் அவர்களும் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள்..

       “காலைல இட்லி செய்யறேன்.. மதியம் தோப்புல இருந்து கொண்டு வந்த பண்ணைக் கீரை இருக்கு.. ரக்கிரி கடையனும்” என்றவரிடம் முகத்தை சுழித்தவள் “இன்னைக்கு சனிக்கிழமை அத்தை.. நான் கீரை சாப்பிட மாட்டேன்.. அதை நாளைக்கு பண்ணுங்க.. இன்னைக்கு எண்ணெய்க் கத்திரிக்கா குழம்பு வைங்க.. அப்படியே உங்க மாமியார் நூல் புடவை ஒன்னு எடுத்துட்டு வாங்க போங்க” என அவருக்கு வேலை மேல் வேலை சொன்னாள்.

     அடுத்து நம்மையும் மாடு மேய்க்கப் போகச் சொல்லுவாள் போலும் என பயந்த சரவணன்.. எப்போதும் ஆசைப்பட்டுக் குடிக்கும் மனைவியின் காஃபியைக் கூட மறந்தவராக “தோட்டம் போறேன்” என பொதுவாக ஒரு சத்தம் கொடுத்துவிட்டு ஓடப் பார்க்க “மாமா” என்ற சத்ததில் நின்றார்.

Advertisement

       அவர் அருகில் வந்தவள் “சீசரை தோட்டத்தில இருந்து யார்ட்டயாவது கொடுத்து அனுப்புங்க” என அவருக்கும் வேலை சொன்னவள்.. சகுந்தலை கொடுத்த நூல் புடவையை.. ரேவதியிடம் கொடுத்து தனக்கு ஒரு சுடிதார் அடிக்கச் சொல்லிவிட்டு மீண்டும் வந்து சோபாவில் அமர்ந்து அனைவரையும் வேடிக்கை பார்த்தாள்.

       தங்கள் அறையில் நிலைக் கதவு அருகில் நின்றவாறே இது அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த சாரதா அப்பத்தாவிற்கு இதழ்களில் புன்னகை நெளிந்தது.. ‘குண்டம்மா பேத்தியை அவ நகலா வளத்துருக்கா.. அவ ரெண்டு மாமியாளை சமாளிச்சா.. இவ வந்த மொத நாளே மாமியாவை ஓட விடறாளே.. பேராண்டி பாவம்’ என எண்ணியவாறே சாமியறையில் நுழைந்து ஏதோ வேண்டிக் கொண்டு திருநீரைப் பூசினார்.

     அதற்குள் மகிழ் முன்புற வாசலுக்குச் சென்றிருக்க.. அப்பத்தாவும் சென்றார்.. சீசரை ஒருவர் கொண்டுவந்து விட்டிருக்க அதனோடு துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள்.. புடவை எல்லாம் சகட்டு மேனிக்கு இருக்க.. ஏதோ குழந்தைக்கு புடவையை சுற்றியது போல் இருந்தது.. தனக்குத் தெரிந்த அளவு இழுத்து போர்த்தியவாறே குதித்துக் கொண்டிருந்தாள்.

      அந்தக் காலை வேளையிலேயே அவர்களுக்கு திருமணம் ஆன செய்தி கேள்விப் பட்டு அவர்களின் சொந்தத்தில் ஒரு நான்கைந்து பெண்கள் விசாரிக்க வந்திருந்தனர்.

        வந்தவர்கள் சும்மாவும் இல்லாமல் அப்போது தான் குளித்துவிட்டு வந்த மகிழ்.. நந்தா அழைந்து வரும்போது அணிந்திருந்த நகைகளை எல்லாம் அப்பத்தா அறையிலேயே கழட்டி வைத்தபடி.. பளிச்சென்று இருக்கவும் “புள்ளை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா நம்ம ஜாடை சுத்தமா இல்லையே.. ஏன்த்தை உம்பேரன் இப்படிப் பண்ணான்” என சாரதா அப்பத்தாவிடம் கேட்டனர்.

       இன்னும் சற்று நேரம் மகிழ் நந்தாவின் ஒரு நாள் திருமண வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்கள் கிளம்ப.. அதுவரை தன் மயிலின் துப்பாக்கிப் பார்வைக்கு பயந்து அறையை விட்டு வெளிவராத நந்தா.. வேறு வழியின்றி வர.. அவர்கள் பேசிச் சென்ற கடுப்பையும் சேர்த்து அவனை முறைத்துப் பார்த்தாள் மகிழ்.

      நந்தாவின் அம்மாவும் அவனை கண்டு கொள்ளாமல் இருக்க.. ரேவதியும் குற்றப் பார்வை பார்க்க.. சாரதாவிற்கே பாவமாகப் போய்விட்டது.. முதல்ல இந்த வினையை சமாதானம் செய்வோம் என எண்ணி..

     “கண்ணாயா” என லேசாகக் கூப்பிட
“சொல்லாயா” பட்டெனப் பதில் வந்தது அவளிடமிருந்து.. ‘அது சரி.. விதையொன்னு போட்டா.. சுரையொன்னா மொளைக்கும்.. அப்படியே அப்பத்தா வாய்’ என மனதுள் அவளை வறுத்தவர்..

“மூக்குத்தி நல்லா மின்னுதே.. என்ன ஜாதி வைரம்” எனக் கேட்க..

“எனக்கென்ன தெரியும்.. உம்பேரன் பண்ணிப் போட்டது தான்.. அங்க கேளு” என்கவும் குடித்துக் கொண்டிருந்த காஃபி தலைக்கு ஏறியது நந்தாவிற்கு.. ‘குட்டிச் சாத்தான்.. குட்டையைக் குழப்பிட்டா’ என அவளை முறைத்தவன்.. பாட்டியின் கேலிப் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் நெளிய..

      ‘ஓஓ.. அவ்வளவு பிரியமோ.. ஆனா இவ தான் மூஞ்சியை இழுத்துகிட்டே திரியறாளே’ என பேரனுக்காகப் பரிந்து “ஏஞ்சாமி.. யாரா இருந்தாலும் விருப்பப்பட்ட புள்ளையை அப்படி நிலையில விடுவாங்களா.. அதான் அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டான்.. நீ கொஞ்சம் பொறுத்துப் போகக் கூடாதா” என்க.. மகிழுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ..

     அவர் வயதைக் கூட கருத்தில் கொள்ளாமல் “ஓஓ.. உம்பேரன் விருப்பப்பட்ட புள்ளையை கை விடாத உத்தமன்.. நான் மட்டும் வயித்துப் புள்ளையோட இன்னொருத்தனைக் கட்டிக்கப் போய்டுவேனா” சுள்ளெனக் கேட்டே விட்டாள்.

பாட்டி வாயடைத்துப் போய்விட.. ரேவதி தான் சுதாரித்து “கண்ணா” என அதட்ட.. அந்தக் குரலில் இருந்த அழுத்தத்தில் கண்கள் கலங்க.. பின்வாசலுக்கு ஓடிவிட்டாள்.

        நந்தாவிற்கு தான் செய்த விஷயத்தின் வீரியம் புரிபட ஆரம்பிக்க.. அவன் தாத்தா அறையில் இருந்து வெளியே வந்து “உம்பேரன் பண்ண கூத்துக்கு அவ ஊரைக் கூட்டி பஞ்சாயத்து வைக்காம இருக்கறதே பெரிசு.. இதுல அவ உடனே உம்பேரனுக்குப் பொண்டாட்டி ஆகனும்னு சொல்ல உனக்கென்ன பைத்தியமா” என மனைவியிடம் காய்ந்தவர்.. மகிழைத் தேடி பின்பக்கம் சென்றார்.

        அழுது கொண்டிருந்தவளின் தோள் மீது கை வைத்து “கண்ணாயா” என அழைக்கவும்.. அதைத் தட்டியவள் “ஒன்னும் பேசாத அப்புச்சி.. எனக்கு உங்க யாரையுமே பிடிக்கலை” என மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

        மெதுவாக அவள் அருகில் அமர்ந்தவர் “ஏன் நான் என்ன பண்ணேன்.. நீ சொல்லு அந்த படவா ராஸ்கோலு என்ன பண்ணான்னு சொல்லு.. அவனை ஏன்டான்னு நான் கேட்கறேன்” என சமாதானம் செய்ய முயன்றார்.

       அது அவளுக்கு தன் தாத்தாவை நியாபகப் படுத்தி விட.. அவர் தோளில் சாய்ந்து கொண்டவள் மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.. அவள் தலையை ஆதரவாகத் தடவியவர் “ஏன்டா உனக்கும் அவனைப் பிடிச்சுது தானே.. ஆனா ஏன் இப்படி இருக்க” என ஆதூரமாக வினவ

      “பிடிச்சுது அப்புச்சி.. ஆனா எங்க நைனாவை அசிங்கப்படுத்தி இப்படி ஒரு கல்யாணம் பிடிக்கலை.. அதைப் பண்ண உன் பேரனை பிடிக்கலை.. இங்க இருக்க யாரையுமே பிடிக்கலை.. என்னால முடிஞ்சா உன் பேரன் தலையில குழவிக் கல்லைப் போட்டுக் கொன்னே போடுவேன்” என தேம்பிக் கொண்டே இருந்தாள்.

       வீட்டை விட்டு எதிர்பாரா நிலையில் இப்படி ஒரு பழிச் சொல்லுடன் வந்திருந்தே அவளை பலவீனப்படுத்தி இருக்க.. வந்து சென்றவர்களே இப்படிப் பேசியிருக்க.. இன்னும் தன் வீட்டினர் காது பட என்னவெல்லாம் பேசுவார்களோ.. இதில் தப்பே செய்யாமல் தனக்கு இப்படி ஒரு அவப்பெயர் தேவைதானா.. எதற்காக எல்லாம் இந்தப் பாழாய்ப் போன அன்பிற்காக என எதை எதையோ எண்ணி ஏக மனக்குழப்பம் மகிழிற்கு.

      அவள் சுள்ளெனக் கேட்டாலும்.. உண்மை இல்லாமல் அப்படிக் கேட்டிருக்க முடியாது என நந்தாவின் தாத்தா யோசிக்க.. முதல்முறை நந்தா பொய் சொல்கிறானோ இந்த விஷயத்தில் என நினைத்தவாறே மகிழைப் பார்த்தார்.. பால்முகம்.. நிச்சயம் இது தவறு செய்யாது.. பேரனும் ஒன்றும் வரைமுறை அறியாதவன் அல்ல.

     அனைத்திற்கும் காரணம் அவசரப்புத்தி தான் என அவனை நொந்து கொண்டவர்.. மகிழிடம் “சரி கண்ணா.. உனக்கு இப்ப என்ன பண்ணனும் சொல்லு.. அப்புச்சி செஞ்சு தரேன்” என்க

      அவரை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு இந்த வீட்டை விட்டுப் போகனும்.. எனக்கு எதுவுமே வேண்டாம்.. ஆனா உன் பேரன் வாயால உண்மையைச் சொன்னாத்தான் அது நடக்கும்” என்க.. “சரி.. அதுக்கு நான் ஒரு வழி பண்றேன்.. ஆனா நீ இனி அழக் கூடாது சரியா” என அவள் கன்னம் தட்டியவர் எதையோ யோசித்தவாறே வெளியே சென்றார்.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!