Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்14

   மலைகளில் முகட்டில் சோம்பல் முறித்த சூரியன்.. கடமை தவறாத ஒரு அரசாங்க ஊழியன் போல.. தன் வேலையச் செய்ய வந்திருந்தான்.. நேற்று நடந்த கூத்தில் அனைவரும் வெவ்வேறு எண்ணங்களில் சுழன்றவாறே இருந்து.. விடிகாலையில் தான் சற்றே கண் அசந்திருக்க.. நந்தாவின் வீட்டில் யாரும் இன்னும் விழித்திருக்கவில்லை.

     தான் இழுத்து வந்திருக்கும் வினையின் வீரியம் பற்றி அறியாமல்.. மனம் கொண்டவளையே மணம் கொண்டு.. அவள் குடும்பத்தையும் தன் அத்தைக்காக பழி வாங்கி விட்டோம் என்ற மிதப்பில்.. சுகமான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.. சமீபமாக வில்லன் அவதாரம் ஏற்ற நாயகன் நந்தா.

       மற்றவர்கள் எப்படியோ ஆனால் சகுந்தலை மட்டும் எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலை எழுந்து.. வழக்கம் போல தனது வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க.. மகிழ் அப்பாரு அப்பத்தாவின் அறையில் இருந்து வந்தாள்.

      நேற்று கட்டியிருந்த புடவை நன்றாகவே நெகிழ்ந்து போயிருக்க.. தலையும் கலைந்து போய்.. கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தவள்.. நேற்றைய சுவடுகள் எதுவுமின்றி.. பின்வாசல் சென்று தொட்டியில் இருந்த தண்ணீரை அள்ளி முகம் கழுவினாள்.



Advertisement

      பின் தலையில் காய்ந்து போயிருந்த மலர்ச்சரத்தை பிரித்து எறிந்தவள்.. தலைமுடியை கொண்டை போட்டுக் கொண்டாள்.. அருகே ஏதோ சத்தம் கேட்க.. வீட்டில் மேல் வேலை செய்யும் பெண் தேங்காயை உடைக்க முடியாமல் கல்லைத் தாங்கி அதன் மேல் போட்டுக் கொண்டிருந்தார்.. அது நழுவி நழுவிப் போக.. சற்று நேரம் அவரை வேடிக்கை பார்த்தவள் “க்கா.. அருவாக்கத்தி எங்கிருக்கு” என்க.. சமையலறையை ஒட்டிய சிறு அறையை கை காட்டினார் அவர்.

     அங்கு சென்று அருவாளை எடுத்து வந்தவள்.. அவரைத் தடுத்து.. அந்தத் தேங்காயை லாவகமாக மட்டை வாங்க.. இவள் பேச்சு சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த சகுந்தலை வாயை பிளந்துவிட்டார்.

     நேற்று நந்தாவை எரிப்பது போல பார்த்தது என்ன.. இன்று இப்படி எதுவும் நடவாதது போல நடந்து கொள்வது என்ன.. அவளை அவர் ஆச்சரியமாகப் பார்க்க.. மொத்தக் குடும்பமுமே அதைத் தான் செய்து கொண்டிருந்தது.

Advertisement

     சொல்லாமல் கொள்ளாமல் நேற்றைய நியாபகம் நினைவில் வந்தது.. நந்தா மகிழ் வீட்டில் பிரச்சனை செய்வதை மணியன் சென்று அவர்கள் வீட்டில் வந்து சொல்ல.. அப்போது அவர்கள் வீட்டில் இருந்தது ரேவதியும் அவனது தாத்தாவும் தான்.. இருவரும் அதில் அதிர்ந்து போய் வெளியே வர கண்டது மகிழின் கரம் பற்றி இழுத்து வந்த நந்தாவைத்தான்.

Advertisement

        அவர்கள் இருவரையும் பார்த்தவன் எந்த விளக்கமும் சொல்லாமல்.. அவர்களைப் பார்க்கவும் முடியாமல் மகிழை தன் அறையினுள் அழைத்து வந்தவன் அமர வைத்து “மயிலு.. நான் பண்ணது தப்பு தான்” என ஆரம்பிக்க

      கண்களில் கனலை ஏந்தி அவனை முறைத்தவள் “தப்பா.. நீ பண்ணது துரோகம்.. உன்னை கொஞ்சமாவா நம்பினேன் நான்” என சீற்றமாக வார்த்தைகள் வெளிவர

      “எனக்கு வேற வழி தெரியலை டி.. உங்கப்பா என்னையே நேர்ல வந்து பாத்து மிரட்டிட்டுப் போனாரு.. அந்தக் கோவத்துல” அவன் சொல்வது அவனுக்கே நியாயமில்லாததாய்ப் பட வார்த்தைகளை மென்று விழுங்கியபடியே தான் கூறினான்.

Advertisement

       அதைக் கேட்டவுடன் எழுந்த மகிழ் “எங்கப்பா மிரட்டினா நீ நேரா வந்து அவர் சட்டையைப் பிடிச்சிருக்கனும்.. இப்படி குறுக்கு வழியில கிறுக்குத் தனமா யோசிச்சிருக்கக் கூடாது.. அவர் உன்னை சொன்னதுல என்ன தப்பு இருக்கு.. நீ இப்ப என்ன வேலை பாத்திருக்க.. என்னை நம்ப வச்சு அசிங்கப்படுத்திட்ட தானே.. ஊர் என்னைக் கொஞ்சமாவா பேசும்” என அவன் சட்டையைப் பிடித்து உலுக்க..

       அங்கு அனைவரையும் சமாளித்தவனால் இங்கு இவளை சமாளிக்க முடியவில்லை.. அவள் சொல்வது உண்மை தானே.. அவன் மீது அவள் கொண்ட நம்பிக்கையை வைத்துத் தானே இந்தச் செயலைச் செய்தோம் என அவனால் மறுத்துப் பேசவே முடியவில்லை.

      ஆனாலும் “புரியாம பேசாத மயிலு.. இன்னைக்கு நான் இப்படிச் செய்யலைன்னா நீ வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிருப்ப.. அதான் வேணுமா உனக்கு” என அவளை அடக்குவதற்காகக் கூற

      அதில் இன்னும் கோவம் கொண்டவள் “இது ஒன்னு தான் வழின்னு நீயே நினைச்சுகிட்டாப் போதுமா.. உனக்கு என் அப்பாவைப் பழி வாங்கனும்.. அதுக்கு சாதகமா நான் வரவும் நீ யூஸ் பண்ணிகிட்ட.. நான் தான் பைத்தியகாரி.. உனக்காக எல்லார்கிட்டவும் பேசி.. இப்ப இப்படி இருக்கேன்” என அவள் கோவம் முழுவதும் அழுகையாய் மாறியது.

      அவள் தன்னைப் புரிந்து கொள்வாள் என எண்ணி அவன் செய்த காரியம் தவறு என உறுத்திக் கொண்டே இருக்கவும்.. அவளை தன்னால் சமாதானம் செய்ய முடியவில்லை என்ற ஆற்றாமையும் ஒன்றாய் சேர “இப்ப என்னடி.. ஆமா.. பழி வாங்கத் தான் பண்ணேன்.. உன்னால என்ன செய்ய முடியும்.. எங்கத்தைக்கு நடந்ததை விட மோசமா ஒன்னும் நடக்கலையே.. உன்னை அப்படியே விடாம அதான் தாலி கட்டிட்டேனே.. இன்னும் ஏன் ஒப்பாரி வச்சு ஊரைக் கூட்ற” என கோவத்தில் கத்தி விட்டான்.

      அதைக் கேட்டு கண்களில் வழிந்த நீருடன் இளக்காரமாகச் சிரித்தவள் “ஓகோ.. நீ என்னை அசிங்கப்படுத்திட்டு இந்த செயினைக் கழுத்துல போட்டா எல்லாம் சரி ஆகிடுச்சா.. ஒரு பெத்தவங்க கேக்கற வார்த்தை தானா அது.. எல்லாத்தையும் விடு நீ எப்படி என்னை தப்பாச் சொல்லலாம் யார் நீ எனக்கு.. நீ சொல்லிட்டா நான் இப்படியே இருந்திடுவேனா.. நான் இன்னைக்கும் எங்கப்பாக்கு பொண்ணு தான்னு நிரூபிச்சு.. உன்னை என்ன பண்றேன்னு பார்” என அங்கிருந்து செல்ல விழைந்தவளை

       “நில்லுடி.. ஒரே ஒரு இன்ஜக்ஷன் போட்டு உங்கம்மாவையே நீ கர்ப்பமா தான் இருக்கன்னு யோசிக்க வச்ச எனக்கு.. நீ கொண்டு வர பிரின்டட் பேப்பர்ஸை பொய்னு சொல்லத் தெரியாதா” என்ற நந்தாவின் ஏளனக் குரல் தடுத்து நிறுத்தியது.

       அப்போது தான் அவள் அம்மா குழம்பியது நியாபகம் வர.. இவன் சொன்ன சம்பவம் சரியாக பத்து நாட்கள் முன்பு.. அவள் கல்லூரி இறுதி நாளின் போது நடந்தது.. அன்று கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வரும்போது.. புடவை தட்டி சைக்கிளின் கம்பி கணுக்காலைக் கிழித்து விட.. நொண்டி நொண்டி நடந்தவளை நந்தா தான் தோப்பு வீட்டுக்கு அழைத்துச் சென்று.. டிடி இன்ஜக்ஷன் போட்டுவிட்டான்.. அவன் மேல் கொண்ட நம்பிக்கையில் குருட்டுத் தனமாக இருந்த தன்னை என்னவென்று சொல்வது என நொந்து கொண்டாள்.

     அதே எரிச்சலில் “கர்ப்பம்னு தானே சொல்லியிருக்க.. உம்புள்ளை வயித்துலேயே இருக்குமா.. பொறந்து தானே ஆகனும்.. இன்னும் பத்து நாள் போனா எல்லாருக்கும் தெரியத் தானே போகுது.. அப்ப நான் எங்க வீட்டுக்குப் போகத்தான் போறேன்” என நக்கலாகச் சொன்னவளை என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது எனத் தெரியாமல்..

       “நீ என்ன ட்ரை பண்ணாலும் நானா உண்மையை சொல்ற வரை.. யாருக்கும் தெரியாது.. மிஞ்சி மிஞ்சிப் போனா வீட்ல இருக்கவங்களுக்குத் தெரியும்.. அவங்களை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்.. நீ இதே மாதிரி நிரூபிக்கறேன்.. எங்க வீட்டுக்குப் போவேன்னு உளறிட்டு இருந்தா.. பொய்யை உண்மையாக்க வேண்டியது தான்” என அவளை நெருங்கி வந்தவனைத் தள்ளிவிட்டு..

    முறைத்துப் பார்த்தவள் “இவ என்ன செய்வான்னு மட்டும் நினைச்சுடாத.. உன் வாயாலையே நான் கர்ப்பமும் இல்லை ஒரு மண்ணும் இல்லைன்னு சொல்ல வைப்பேன்.. அப்ப நீ கட்டின இந்த செயினுக்கு வேலை இருக்காதுல்ல.. உன் கண்ணு முன்னாடி என் வீட்டுக்கு நான் போகத்தான் போறேன்.. அதை நீ கையைக் கட்டி வேடிக்கை பாக்கத்தான் போற” என்றவளைக் கண்டு வழக்கம் போல அவன் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை எழுந்தது.

      அவள் அழுகைக்கு.. இந்த வீம்பும் வீராப்பும் எவ்வளவோ மேல் என எண்ணியவன் ஏதோ சொல்ல வருவதற்குள்.. ஹாலில் அவனது அப்பாவின் சத்தம் கேட்க.. இனியும் கேள்விகளைத் தவிர்க்க முடியாதவனாய்.. அவளை மீண்டும் தரதரவென இழுத்தவாறே அங்கே சென்றான்.

        “பேரன் பேரன்னு செல்லங் கொடுத்து கெடுத்திருக்கிங்க.. இன்னைக்கு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கான் பாருங்க” என தன் அன்னை தந்தையிடம் சத்தமிட்டுக் கொண்டிருந்த சரவணன் நந்தாவை ஒரு முறைப்புடன் பார்க்க.. அவன் கையை வெடுக்கென உதறிய மகிழ் சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள் இறுகிய முகத்துடன்.. அவள் கழுத்தில் நந்தா அணிவித்திருந்த பதிமூன்று பவுன் தாலி யாரும் சொல்லாமலேயே பளிச்சென நடந்தது அத்தனையும் உண்மை என விளக்கியது.

      கோவிலுக்குச் சென்றிருந்த சாரதா அப்பத்தாவும்.. அவன் அம்மா சகுந்தலையும் வர.. விஷயம் கேள்விப்பட்டு வேகவேகமாக வீட்டுக்குள் வந்த சரவணன் திட்டத் துவங்கியிருந்தார்.

      நந்தாவின் பாட்டி தாத்தாவால் இதை ஏற்கவே முடியவில்லை.. தங்கள் பெண்ணின் வாழ்வைக் காரணம் காட்டித் தானே அவர்களை ஒதுக்கி வைத்தோம்.. இன்று அவர்களுக்குத் தங்கள் பையன் செய்திருப்பது என்ன.. என எண்ணியவர்களால் மகிழையே கூட பார்க்க முடியவில்லை.. இதில் எந்த முகத்தை வைத்து மகிழின் பாட்டி தாத்தாவை நாளை வெளியில் காண்பது என மனதுள் வெந்தனர்.

       சரவணனுக்கும் அதே அதிர்ச்சி தான்.. அதுவும் மகிழே குழந்தை போலத்தான் தெரியும் அவருக்கு.. அவளை ஒரு குழந்தைக்குத் தாயாய் யோசிக்க முடியவில்லை.. தனக்கே இப்படி என்றால் தன் நண்பனுக்கு எப்படி இருக்கும்.. என ஒவ்வொருவரும் மற்றவர் நிலையில் இருந்து யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. ஆக மொத்தம் குழந்தை விஷயத்தில் நந்தா சொன்னது பொய் என யாரும் எண்ணவில்லை.

     ஆனால் நந்தா மட்டும் தன் நிலைப்பாட்டில் எத்தகைய தவறும் இல்லை.. இப்படி நடக்காவிட்டால் மகிழும் வரமாட்டாள்.. அவர்களுக்குத் திருமணமும் நடந்திருக்காது என்பது அவனது உறுதியான எண்ணன்.. எனவே தந்தை கேட்ட கேள்விகளுக்கு எதுவுமே பதில் கொடுக்கவில்லை.

       இறுதியில் ரொம்ப நேரம் பேசுகிறாரே பாவம் என நினைத்து “சும்மா கத்தாதிங்க.. சூழ்நிலை.. பண்ணிகிட்டோம்.. இங்க இருக்கறது பிடிக்கலைன்னா சொல்லுங்க.. கிளம்பறோம்” என அவனும் பதிலுக்கு சப்தமிட..

       சரவணன் ஆத்திரமாக “உன்னால எப்படிடா இத்தனை அழுத்தமா இருக்க முடியுது.. ஒரு சின்னப் பிள்ளையை என்ன நிலமைல உட்கார வச்சிருக்க.. உங்க அத்தையை தினமும் கண்ணாரப் பாத்தும் இன்னொரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்க எப்படி மனசு வந்துச்சு உனக்கு.. சபையில வச்சு பெத்தவன் கேட்டுக்கற
பேச்சா அது” என பொரிந்தார்.

       “அத்தையைப் பாத்ததுனால தான் அப்படிப் பண்ணனும்னு தோணுச்சுப்பா.. நாளைக்கு எனக்கப்பறம் என்புள்ளை வாழ்க்கை என்ன ஆகும்னு அப்பாரு படற வருத்தத்துல கால் பங்காச்சு அந்தக் குடும்பம் படவேண்டாம்.. அதையும் மீறி உங்க மருமகளை பிடிச்சுத் தான் கூட்டிட்டு வந்திருக்கேன்” என அழுத்தமாக தன் மனநிலையை உரைத்தான் நந்தா.

      ராகவன் அவனிடம் வந்து என் பொண்ணை விட்ரு என மிரட்டி அவசரமாக அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்யவும்.. இவனும் பதிலுக்குச் செய்து அதை நிறுத்தி அவளை அழைத்தும் வந்துவிட்டான்..  அவன் ப்ரத்யேகமாக பழி வாங்கவெல்லாம் மகிழைத் திருமணம் செய்யவில்லை.. ஆனால் அவன் செயலால் அவர்கள் வருந்தினால் அதில் ஒரு சிறிய குரூர திருப்தி அவ்வளவே.. அதனால் தானோ என்னவோ மகிழை ஏமாற்றிய குற்றவுணர்வு மட்டுமே அவனிடம்.. மற்றபடி எந்த தப்பும் செய்துவிட்ட வருத்தமும் இல்லை.

      நந்தாவின் இறுதி வார்த்தை அனைவரையும் சற்றே மகிழச் செய்தாலும்.. மகிழின் முகம் சொன்னது அவள் கொலைவெறியில் தான் இருக்கிறாள் என.. இருவரின் வாழ்க்கையும் எப்படிப் போகும் என்ற மலைப்பு ஒவ்வொருவரிடமும்.. அது தவிர அவளிடம் வேற்றுமை பாராட்ட ஒன்றும் இல்லையே.. அவளும் தாங்கள் பார்க்கப் பிறந்த பெண் அல்லவா..

     இவர்கள் இப்படி மாறி மாறி வாக்குவாதம் செய்ய.. மகிழ் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தாள்.. அவள் எழுந்த வேகத்தில் அனைவரும் திகைக்க.. அவளோ யாரையும் கண்டு கொள்ளாமல்.. அங்கே இருந்த ஒரு அறைக்குள் புகுந்து கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!