Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்15

ஒரு வாரம் கழித்து.. இருள் பிரியாத அதிகாலையிலேயே நந்தாவின் தாத்தா எழுந்து வெளியே செல்ல வர.. நான்கு நாட்களாய் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்க.. இப்படி நடந்தால் மீண்டும் இளைப்பு வரும் என பயந்து போனவராய்..

“ஏனப்பா.. இன்னைக்குத் தான் மேல் நல்லாருக்கு.. வீட்டுல இல்லாம எங்க போறிங்க” என கேள்வி கேட்டபடியே சாரதா பின்னாலேய வர

“நான் போறேன்.. நாலாளுக்கு மேலாளா.. கேட்கறா பாரு.. வீட்லயே இருக்க ஒரு மாதிரி இருக்கு.. அதான்” என தள்ளாடியபடியே படிகளில் இறங்கினார்.

எந்த நேரத்தில் சொன்னாரோ என்னவோ.. தளவுப் படியில் கால் இடறி மல்லாக்க விழ.. இடுப்பில் நல்ல அடி.. அவரையே பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தாவின் “ஏப்பா” என்ற அலறலில் மொத்த வீடும் ஓடி வர.. தாத்தா மயக்கத்திற்குச் சென்றிருந்தார்.



Advertisement

அவசர அவசரமாக அவரை மருத்துவமனை எடுத்துச் சென்று கட்டுப் போட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.. மகிழும் ரேவதியும் அவர் வந்ததும் அருகில் அமர்ந்து கண்ணீர் விட “இப்பவே என்ன அழுகாச்சி.. அதான் வந்துட்டேனே” என இருவரையும் மெல்லிய குரலில் அதட்டினார்.

அதன்பின்னும் இளைப்பு கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்ல.. மருத்துவரைக் கேட்டால் வயது முதிர்வு.. இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை.. என்றுவிட்டார்.

படுக்கையில் விழுந்ததும் சில நேரம் நன்றாய் பேசுவார்.. சில நேரம் நினைவு பிழன்றது போலப் பேசுவார்.. வீட்டினருக்குத் தான் அதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.. ஊரார் அனைவரும் வந்து ஒவ்வொருவராய்ப் பார்த்துச் செல்ல.. மகிழின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை.

Advertisement

திடீரென நந்தாவிடம் “எனக்கு காரியம் பண்ணிறப்பா” என நன்றாகப் பேசுவார்.. சில சமயம் ரேவதியிடம் “அந்தப் பாப்பாவை ஏன் மேல உட்கார வச்சிருக்க.. கீழே இறக்கி விடு.. விழுந்து போகுது” என எங்கோ கை காட்டிச் சொல்லுவார்..

Advertisement

இத்தனையும் செவி வழிச் செய்தியாய்க் கேட்டிருந்த மகிழின் தாத்தாவும் உணவு உறக்கம் ஏதுமின்றி அவரின் நினைப்பாகவே இருந்தார்.. நண்பனைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்.. மீண்டும் ஏதாவது பிரச்சனை ஆகி விடுமா என பயந்தார்.

அடுத்த நாள் அதிகாலை.. மகிழ் ஏதோ சத்தம் உணர்ந்தவளாய் எழுந்து பார்க்க.. அப்புச்சிக்கு தொண்டைக்கு நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டிருந்தது.. அவசரமாக அம்மத்தாவை எழுப்பியவள்.. அவரிடம் “அப்புச்சி.. என்ன பண்ணுது.. இங்க பாருங்க” எனக் கத்தியவள்..

ஹாலில் இருந்த சரவணனிடமும் சொல்லிவிட்டு.. நந்தாவைத் தேடி ஓடினாள்.. ஏற்கனவே அவள் சத்தத்தில் உறக்கம் விழித்து எதிர் வந்தவனிடம் “அப்புச்சி” என தேம்பித் தேம்பி அழ.. அவளையும் அழைத்துக் கொண்டு அவர் இருந்த அறைக்குச் சென்றான்.

Advertisement

அங்கே மூவரும் அவரிடம் அழதபடியே பேசிக் கொண்டிருக்க.. நந்தா “ப்பா.. ஹாஸ்பிட்டல் கொண்டு போலாம்பா.. வாங்க” என அழைக்க.. சாரதா மறுத்தவராய் மகனிடம் “போய்.. மாமாவை வரச் சொல்லு” என தன் கண்ணீரை அடக்கியபடி கூற.. அவரும் மறு பேச்சின்றி மகிழின் வீட்டை நோக்கி ஓடினார்.

அமிர்து அவ்வாவும்.. தனமும் மட்டுமே விழித்திருக்க.. தயங்கி தயங்கி வீட்டினுள் நுழைந்த சரவணனைக் கண்டு துணுக்குற்றார் அமிர்து.. அனுமானித்த செய்தி தான்.. “அத்தை அப்பா” என மேற்கொண்டு சொல்ல முடியாமல் விசும்ப.. அவரும் தாமதிக்காமல் கணவரை எழுப்ப விரைந்தார்.

அவரிடம் சரவணன் வந்திருக்கும் விஷயத்தைக் கூற தன் வயதிற்கும் வேகமாய் அவனை நெருங்கி வந்த நாராயண சாமி “அவனுக்கு என்ன அவசரமாமா இப்ப.. விட்டுட்டு போக” என்றவர் நடக்கத் துவங்க.. வீட்டினரும் அவர் பின்னாடியே சென்றனர்.

ரேவதியை துளசி பறித்து வரும்படி அனுப்பிய சாரதா கணவனின் இறப்பிற்கு தயாராக இருந்தாலும்.. மகிழின் தாத்தாவைக் கண்டவுடன் தன்னை மறந்து “பாத்திங்களா அண்ணா.. என்னையை விட்டுப் போக போறாரு” என கதறத் துவங்கினார்.

தன் நண்பனின் அருகில் சென்றவர் “ஏன்டா.. போகனும் வான்னு கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேன்ல.. நான் மட்டும் இன்னும் பாக்க என்ன இருக்கு” என அவர் கைப் பற்றி கண் கலங்க.. நந்தாவின் தாத்தா முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.. அணையப் போகும் விளக்காய்.

நண்பனை அடையாளம் கண்டு கொண்டவருக்கு ஏதோ பேச வேண்டும் போல இருக்க.. அனைத்தும் கண்ணீராய் வெளியே வர.. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர்.. ரேவதி மேல் தன் பார்வையை வைத்தபடியே இருந்தார்.

அனைவரும் துளசித் தீர்த்தம் அளிக்க.. நந்தா அளித்து முடித்ததும் லேசாக உடம்பு அடங்கத் துவங்கியது.. கொஞ்ச கொஞ்சமாய் நண்பனின் கை இறுக.. அதை உணர்ந்த நாரயண சாமி “போறியாடா.. என்னை மட்டும் தனியா விட்டுட்டு போறியா” என தன் வயதை மறந்து அழ ஆரம்பிக்க.. அவர் உயிர்ப்பறவை மெல்ல மெல்ல விலகி.. விடைபெற்றுச் சென்றே விட்டது.

எதிர்பார்த்த இழப்பு.. எதிர்பாரா நேரத்தில்.. இரு குடும்பங்களுமே ஸ்தம்பித்துப் போயிருந்தன.. மகிழின் தாத்தா இலக்கற்று வெறித்துக் கொண்டிருக்க.. ராகவன் தான் முதலில் சுதாரித்து முகிலிடம் முத்துவின் அப்பாவிடமும்.. ஊரில் உள்ள பெரியவர்களிடமும் சொல்லி வரச் சொல்லி அனுப்ப.. பின் சரவணனும் தன் உறவினர்களுக்கு நந்தாவிடம் சொல்லச் சொன்னார்.

முத்துவின் வீட்டில் இருந்து ஆட்கள் வந்திருக்க.. குமாரசாமியை ஹாலில் படுக்க வைத்து.. செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய ஆரம்பித்தனர்.. முத்துவின் அப்பா தேங்காய் பழம் உடைத்து.. அவருக்குப் பொட்டிட்டு கற்பூரம் பற்ற வைக்க.. பின் அழுகை ஆரம்பமாகியது.

கோய அலங்கரிச்சு
கொட்டாரம் அலங்கரிச்சு
உங்க கொட்டாரத்துக்குள்ளார
உங்க குரலுச் சத்தம் கேப்பதெப்போ
உங்க குரலுச் சத்தம் கேப்பதெப்போ

என்னைச் சாமி அலங்கரிச்சு
சத்திரத்தை அலங்கரிச்சு
உங்க சத்திரத்துக்குள்ளார
உங்க சலங்கச் சத்தம் கேப்பதெப்போ
உங்க சலங்கச் சத்தம் கேப்பதெப்போ

என உறவுப் பெண்மணிகள் அழுகை அந்த தெரு முழுதும் எதிரொலிக்க.. ரேவதியைத் தான் பார்க்க முடியவில்லை.. அப்படி ஒரு அழுகை.. இத்தனை வருட இழப்பிற்கும் சேர்த்து ஒரு பேரழுகை.

தனமும் சகுந்தலையும் கேட்கும் பொருள் அனைத்தும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்க.. மகிழ் ஒரு வித திகைப்பில் இருந்தாள்.. இன்றோடு பதினோரு நாட்கள் ஆகியது அவள் இங்கு வந்து.

முழுதாய் நேற்று இருந்த மனிதர் இன்று இல்லை.. என்ன வாழ்க்கை இது.. இவ்வளவு தானா அனைத்தும்.. அதும் அவர் இறந்த விதம் தொண்டையை அடைக்க.. தலைமாட்டில் அமர்ந்து விளக்கில் எண்ணெயை ஊற்றியவளை ஒரு பெண்மணி எண்ணெய் அரப்புத் தேய்க்க இரண்டு கிண்ணங்களைக் கேட்க எழுந்து சென்றாள்.

அவள் எடுத்து வந்து தர.. அருகில் இருந்த மற்றொரு பெண் “புள்ளைத்தாச்சிப் புள்ளை.. கவனமா இரும்மா.. ஈரம் வழுக்கிவிடப் போகுது” என்க.. மூளையில் ஏதோ ஒன்று தோன்றிட.. அமைதியாகப் படுத்திருந்த குமார சாமி மீது தன் பார்வையைத் திருப்பியவள்.. அவரைப் பார்த்தவாறே அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

பத்து நாட்கள் கழித்து பெண்ணைப் பார்த்தாலும் அவளிடம் பேச தனத்திற்கோ அமிர்துவிற்கோ சூழ்நிலை அமையாமல் போக.. அனைவரும் தத்தமது வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

முகில் வெளிவேலைகளை ஓடியாடிப் பார்த்துக் கொண்டிருக்க.. நந்தா பூந்தேர் கட்டும் இடத்தில் இருந்தான்.. ராகவன் தன் நண்பன் பக்கத்தில் இருக்க.. மகிழின் தாத்தா ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.

    
கொட்டு மஞ்சக் கொட்டி அள்ள
என்னைக் கொண்டு வந்த
கோவிலருந் திண்ணையில
என்ன கொண்டு வந்த
கோவிலருந் திண்ணையிலிருக்க
கோவில் சிலையழிக்க
குங்குமப் பொட்டழிக்க

சாரதா அப்பத்தாவின் பாட்டில் அனைவருக்குமே கண்ணீர் பெருகியது..

நேரம் கடக்க.. இறுதிக்கட்ட சடங்குகள் ஆரம்பமாயின.. அவருக்கு சவரம் செய்த பின்.. குளிப்பாட்ட பித்தளை அண்டாவில் நீர் நிரப்பப் பட்டிருக்க.. அவரைக் குளிக்க வைத்தனர்.

நந்தா ஒரு குடத்தைத் தூக்கப் போக.. அவனைத் தடுத்த மகிழ் “செய்ய வேண்டாம் பாவா” என்றாள் கணீரென்ற குரலில்.

பாட்டியின் அழுகை மட்டுமே ஒலித்திருக்க.. இவளின் குரல் நன்றாகவே கேட்டது அனைவருக்கும்.. அவள் முகத்தை வைத்தே ஏதோ முடிவில் இருக்கிறாள் என கணித்த நந்தா முறைக்க.. குழப்பமாய்ப் பார்த்த அப்பத்தாவிடம் “உன் கொள்ளுப் பேரன் என் வயித்துல இருக்கையில யாருக்கு காரியம் பண்ணப் போறாரு உன் பேரன்” என அவரிடமே கேட்டாள்.

நந்தா அவளை ஆவேசமாய் பார்க்க.. அதை கண்டு கொள்ளாமல் “உங்களைத் தானே அப்புச்சி காரியம் பண்ணச் சொன்னாங்க.. வயித்துல புள்ளை இருக்கும் போது காரியம் என்ன தாடி மீசையே வாங்கக் கூடாது தானே” என மேலும் பேசினாள்.

தனம் “மகிழ்” என சப்தமிட அவள் நேர்ப்பார்வையாய் கணவனைத் தான் பார்த்தாள்.. அவளது சூது புரியாமல் “ஆமா ராஜா.. நீ பண்ணாதே உங்கப்பன் பண்ணட்டும்” என்றார் சாரதாவும்.. அனைவரும் அதையே வற்புறுத்த..

பொறுக்க முடியாத நந்தா “என் அப்பாருக்கு நான்தான் பண்ணேவேன்.. இது அவரோட கடைசி ஆசை.. அப்புறம் என் பொண்டாட்டி மாசமா இல்லை.. பொய் சொல்லித் தான் கல்யாணம் பண்ணேன்” என்றவன் மகிழிடம் திரும்பி “போதுமாடி.. போதுமா.. நீ சொன்ன மாதிரி நான் உண்மையை சொல்லிட்டேன்.. ஆனா இப்படி ஒரு சூழ்நிலையில நீ கேப்பேன்னு நான் நினைக்கலை.. போய்டு இங்க இருந்து” என அவளை இழுத்து வெளியே தள்ளப் பார்த்தான்.

அனைவரும்அதிர்ந்து அவனைப் பார்க்க.. அவளைத் தாங்கிய முகில் அவனை ஏதோ திட்ட வர ராகவன் “முகில்.. செத்த வீட்ல பிரச்சனை பண்ணாதே.. ஒருத்தர் வாழ்ந்த முழு வாழ்க்கையும் எப்படின்னு அவங்க சாவுல தெரியும்.. மாமாவை அமைதியா கொண்டு போய் கரை சேர்க்கனும்” என அதட்டினார்.

மகிழ் மெதுவாக சாரதாவின் அருகில் சென்று “உன் பேரன் பிள்ளைக்காகத் தானே என்னைக் கூட்டிட்டு வந்தான்.. அதான் இல்லைன்னு ஆகிடுச்சே.. இனி எனக்கு பூசாரி வேஷமும் வேண்டாம்.. பொங்கலும் வேண்டாம்” என்றவள் யாரும் எதிர்பாராததாய் தன் மாங்கல்யத்தைக் கழட்டி நந்தாவின் தாத்தா கால்மேட்டில் வைத்தவள்.. அவரை வணங்கிவிட்டு.. தன் தந்தையின் அருகில் வந்தாள்.

தனம் அவளைத் தடுக்க வர.. அவரை ஒதுக்கி ராகவனிடம் “அப்பா பேச்சைக் கேக்கனும்னு புரிஞ்சுகிட்டேன் நைனா.. என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போறிங்களா” என கண்கள் கலங்கக் கேட்க.. அவரும் முற்றும் கலங்கியவராய் தலையை அசைத்தார்.

தன் மனைவியிடம் மகளை அழைத்துச் செல்லுமாறு கூற.. நந்தா மகிழ் கூறியபடி போகும் அவளை வேடிக்கை பார்த்தபடி கையைக்கட்டி நின்றான்.

நாயகன் வருவான்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!