Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்17

        அடுத்த நாள் பள்ளியில்.. வழக்கம் போல மகிழ் தன் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கவும்.. நந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. ‘அட என்னங்கடா இது.. தினமும் யாராவது ஒருத்தர் பாக்க வராங்க.. இன்னைக்கு இவனா’ என சலித்தபடி அவன் அறை நோக்கிச் செல்ல.. வழியில் குட்டி நந்து காரிடாரில் அமர்ந்து டிராயிங் பண்ணிக் கொண்டிருக்க அவனிடமும் பேசிவிட்டு நந்தாவின் அறைக்குள் நுழைந்தாள்.

      அவன் யாரிடமோ படு பவ்யமாக ஃபோனில் பேசிக் கொண்டிருக்க.. இவளைக் கண்டதும்.. ‘ஒரு நிமிடம்’ என்பது போல சைகை காட்டிவிட்டு அவன் ஃபோனில் பிசியாகி விட.. ‘இதுக்கு ஏன்டா என்னைக் கூப்பிடனும்’ என நினைத்தவள் அறையைச் சுற்றி தன் விழிகளைச் சுழற்றினாள்.

       ‘ட்ரஸ்ட் நெவர் ரீகெய்ன்ட் ஈசிலி’ என்ற வாசகத்தைத் தாங்கிய வைட் போர்டின் மீது பார்வை விழவும்.. அந்த நாளை நினைவு கூர்ந்தவள்.. நடந்ததைத் தான் மாற்ற முடியவில்லை.. இதையேனும் மாற்றுவோம் என.. அதன் அருகில் சென்றாள்.

       பேச்சு ஃபோனில் இருந்தாலும் அவள் மீது கவனம் வைத்திருந்தவன்.. அவள் எழுதச் செல்லவும் சுவாரஸ்யமாக அவளை வேடிக்கை பார்க்க.. ஏற்கனவே எழுதியதை அழித்துவிட்டு  ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என எழுதிவிட்டு.. சற்றே தள்ளி நின்று அழகு பார்த்தாள் மகிழ்.



Advertisement

        அவனுக்கும் அந்த வாசகத்தில் மெல்லிய புன்னகை தோன்ற.. பேச்சை முடித்துக் கொண்டவன்.. அவளிடம் நெருங்கி “என்ன திடீர்னு அறிவு.. சாரி.. அன்பு.. யார்மேல” என வினவ.. அவனை அவ்வளவு அருகில் எதிர்பாராதவள்.. முதலில் திகைத்து பின் சற்றே விலகி “ஒரு வெங்காயமும் இல்லை.. எழுதி ரொம்ப நாள் ஆச்சுல்ல அதான்” என விருப்பமின்மை போல பதில் கூற

      “ஆனா பர்ட்டிகுலரா இந்த குறள் ஏன்.. எனி ரீசன்ஸ்” என மீண்டும் அவன் துருவவும்.. “அப்பா சாமி.. சும்மா தோணுச்சுன்னு எழுதினேன்.. இத்தனை கேள்விக்கு இது தேவையே இல்லை” என வெகு வேகமாக அழிக்கச் சென்றவளின் கரத்தைப் பிடித்தவன்.. வேண்டாம் என்பதாய் தலையசைக்க.. அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் “எதுக்குக் கூப்டிங்க” என கேட்டாள்.

      “அட.. அதை மறந்துட்டேன் பாரு.. இப்ப எனக்கு டைம் இல்லை.. ஒரு இம்பார்ட்டண்ட் வொர்க்.. ஈவ்னிங் எனக்காக வெய்ட் பண்றியா” என ஆவலாகக் கேட்கவும் நிர்தாட்சண்யமாக மறுத்தவள் “உங்களுக்குத் தேவைன்னா நீங்களாத்தான் தேடி வந்து பேசனும்.. என்னை வரவழைக்கறது.. வெய்ட் பண்ணச் சொல்றதெல்லாம் கூடாது” என அவன் கேட்டதற்காக வேண்டுமென்றே மறுக்கவும்.. அவனும் சமர்த்துப் பையனாய் சரி சரி எனத் தலையாட்ட.. முறைத்துக் கொண்டே வெளியேறியவளைக் கண்டு வழக்கம் போல ஒரு சிறு முறுவல் அவன் இதழ்களில்.

Advertisement

‘எதுக்கு வர சொல்லியிருப்பான்’ என மூளையைக் குடைந்து கொண்டிருந்தாள் மகிழ்.. அவள் படிப்பு முடியும் வரை அது ஒன்றே குறிக்கோளாய் இருக்க.. சமீப காலங்களாக என்னவோ ஒரு வெறுமை மனதை சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது.

Advertisement

       அதை எங்கு சென்று தொலைப்பது என புரியவில்லை.. அவள் கோவத்தையும் மீறி நந்தாவைக் காணும் போது அவளுக்குத் தோன்றும் இளக்கம் வேறு அவளை பயமுறுத்திக் கொண்டிருக்க.. ‘வாழ்க்கை இப்படியே போய் விடுமோ’ என்ற சலிப்பும் ஒருபுறம்.

      இத்தனையும் யோசித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவளுக்கு உறக்கம் வேறு ‘உங்கிட்ட வருவேனா’ என்பது போல ஆட்டம் காட்டியது.. மொபைலில் ஃபைல்களுக்குள் ஃபைலாக மறைத்து வைத்திருந்த நந்தாவும் அவளும் பழகும் காலத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபியையே வைக்க மனமின்றி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ்.

      அவனது அப்போதைய தோற்றமும் இப்போதைய பெரிய மனித தோற்றமும் கண்களில் நிறுத்தி யோசித்தவளுக்கு இரண்டிலுமே அவன் மேன்லிதான் என மனது சர்ட்டிஃபிகேட் கொடுக்க.. அவளே அறியாமல் ஒரு இளம் புன்னகை அவள் உதட்டில்.

Advertisement

      திடீரென வந்த ஃபோனின் அழைப்பில் பயந்தவள் வந்த பெயரைப் பார்க்கவும் இன்னும் பயந்தாள்.. நந்தா தான் அழைத்துக் கொண்டிருந்தான்.. நான்கு வருடங்களாக அந்த எண் தேமே என்று அவள் ஃபோனில் இருக்க.. இன்று அலாவூதீன் பூதம் போல உடனே தோன்றக் காரணம் என்னவாக இருக்கும் என யோசித்தவள் அழைப்பை கோட்டை விட்டாள்.

     அழைப்பு நின்று போக ‘அப்பாடி’ என பெருமூச்சு விட்டவள்.. மூச்சை மேலும் விடாதபடி மீண்டும் அழைப்பு வர வேறு வழியின்றி அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

      ஒரு ஹலோ கூட சொல்லாமல் “மயிலு ரூம் டோர் ஓபன்ல தானே இருக்கு” என தினமும் ஃபோன் பேசுபவன் போல நந்தா வினவ.. அவன் கேட்ட அவசரத்திற்கு இவளும் “ஆமா” எனப் பதில் சொல்ல.. அவன் உடனே கட் செய்துவிட்டான்.

      ‘என்னைப் பழி வாங்கவே பொறந்துருப்பான் போல.. இந்நேரத்துக்கு எதுக்கு ஃபோன்.. அதுவும் தேவை இல்லாம ஒரு டிடெய்ல் கேட்க’ என அவனை அர்ச்சித்துக் கொண்டிருக்க.. அவசரமாக அவள் அறையின் உள்ளே நுழைந்து கதவை லாக் செய்து அதன் மீது சாய்ந்து இளைப்பாறியவனைக் கண்டு அவள் அர்ச்சனை அந்தரத்திலேயே நின்றது.

      ஆவென விழி விரித்து அவனைப் பார்த்தபடி இருந்தவளைக் கண்டு நந்தாவிற்கு சிரிப்பு வர “மாமன் அழகு தான் டி செல்லம்.. அதுக்காக இப்படி வச்ச கண்ணு வாங்காம பாத்தா எப்படி” என்ற அவன் கேள்வியில் சுயம் திரும்பியவள்

      “யோவ்.. முட்டாள் மாமா.. இங்க என்ன பண்ற” எனக் கத்த ஆரம்பிக்கவும்.. வேகமாக அவளை நெருங்கியவன் “ஏன்டி கத்துற.. சத்தம் கேட்டு உங்கப்பன் வந்து என்னை எரிச்சுடப் போறாரு” என அவள் வாயைப் பொத்த

     அதை முயன்று விலக்கியவள் “இல்லை நீ வந்த நேரத்துக்கு உனக்கு விருந்தா வைப்பாங்க.. அறிவு இருக்கா.. இன்னும் நீ திருந்தலையா.. இந்நேரத்துக்கு வந்துருக்க.. எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசாத” என அப்போதும் அவனைத் திருத்தியவளைக் கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டான்.

      “என்னை என் பொண்டாட்டி கூட சேர விடாம பண்ண உங்கப்பனுக்கு கோவில் தான் கட்டனும்” என நக்கலாகச் சொல்ல.. அவனை முறைத்தவள் “நீங்க ரூம் மாறி வந்துட்டிங்க மிஸ்டர்.. இது என்னோட ரூம்.. எங்க நைனா ரூம் கீழே இருக்கு” என அலட்சியமாகக் கூறினாள்.

      “ஆஹான்.. இப்பையே போய் கேட்கறேன்.. நான் நடுராத்திரியில உலாத்துறேன்.. உனக்கு மட்டும் என்னய்யா தூக்கம் கேட்குது.. மீசை.. கம் ஐ சே மீசை” என மெதுவாகக் கத்தியவாறே கதவைத் திறக்கப் போகவும்.. தன்னையே நொந்தவள் அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள் “ஏன்யா உயிரை வாங்குற.. யாராவதுக்கு தெரிஞ்சா மானம் மூணு காசுக்கு வித்துப் போய்டும்.. ஒழுங்கா கிளம்பு” என தன்மையாகவே கூறினாள்.

      “என்ன நீ மாத்தி மாத்திப் பேசற.. எங்கப்பாட்ட பேசுன்னு சொல்ற பேசப் போனா தடுக்குற.. என்னைத் தேடி வான்னு சொன்ன.. வந்தா போன்னு சொல்ற” என கிண்டர் கார்டன் பையன் போல அவள் மீது புகார் சொல்ல.. நொந்து தான் போனாள்.

      “அதுக்கு ஒரு நேரம் காலம் வேண்டாமா.. வான்னு சொன்னா.. உடனே வேப்பமரத்துல ஏறி வீட்டுக்கு வந்துடுடறதா.. எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கிங்க” என அவளும் பதிலுக்கு வாயடிக்க.. இத்தனை நேரமாய் அவள் யோசித்த ஒரு வெறுமை உணர்வு அவளறியாமலேயே விடைபெற்றுச் சென்றது.

       “இப்போதைக்கு உன் மாமன் ஒருத்தன் தான் மயிலு” எனப் புன்னகைத்தவனிடம்.. “எதுக்கு வந்தன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பு மாமா” என அவள் அடம் பிடிக்க.. “இன்னைக்கு நீ அந்த பர்ப்பிள் சேரில செமையா இருந்த.. அதான் சொல்லலாம்னு” என இழுத்தான்.

      அவளது கேவலமான பார்வையில் “என்னடி கண்ணாலேயே காறித் துப்புற” என கொஞ்ச.. “சகிக்கலை.. துப்பாம என்ன செய்ய.. நான் கட்டியிருந்தது லைம் எல்லோ” என தலையில் அடித்துக் கொண்டாள்.

      “அப்ப பர்ப்பிள் எப்ப கட்டியிருந்த” என அவன் யோசிக்கவும்.. “அதான் சொல்லியாச்சுல்ல.. கிளம்பு” என அவன் முதுகில் கை வைத்து தள்ள.. அவளிடமிருந்து விலகியவன்.. அவள் ஸ்டடி டேபிள் சேரை இழுத்து கட்டில் அருகில் போட்டவன்.. சேரில் அமர்ந்து அதன் மேல் கால் வைத்து தலையை பின்னால் சரித்தான்.

     அவன் முகத்திலேயே அப்பட்டமான சோர்வு தெரிய “என்ன ஆச்சு” என்ற வார்த்தைகள் தானாய் வந்து விழ.. “அலைச்சல் மயிலு.. நம்ம பில்டிங் ஓபனிங்க்கு மினிஸ்டர் டேட் வாங்கப் போனேன்.. நான் போன நேரம்.. சிஎம் கூட கான்ஃபரன்ஸ் கால்.. இரண்டு மணி நேரம் வெய்ட் பண்ணி.. அவரைப் பாத்து டேட் கன்ஃபார்ம் பண்ணிட்டு.. அப்படியே போய் சாம்பிள் இன்விடேஷன் அடிக்கக் கொடுத்துட்டு வீடு வரவே மணி எட்டு ஆகிடுச்சு.. இதுல நான் வேற உன்னை வெய்ட் பண்ணச் சொன்னேன்” என தலையைப் பிடித்துக் கொண்டான்.

       “இத்தனை அலைச்சல்.. இதுல இங்க வேற வரனுமா.. பேசாம தூங்கித் தொலைய வேண்டியது தானே.. சாப்டிங்களா இல்லையா” என கடுமை போலக் கேட்டாலும்.. அதில் இருந்த அக்கறை உணர்ந்து.. இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவன் “ஆச்சு மயிலு.. தலைவலி.. கொஞ்சம் பிடிச்சு விடேன்” என அவள் கரம் பற்றி இழுத்து தலையில் வைத்து அவள் உள்ளங்கையை அழுத்த.. மறுக்கத் தோன்றினாலும் அவன் முகச் சுருக்கம் வருத்த.. மெதுவாக அவன் நெற்றியை அழுத்த ஆரம்பித்தாள்.

       மெது மெதுவாக அவன் முகம் சீராக.. வேண்டுமென்றே “ஆயில் இல்லையா மயிலு” என்க.. “தோடா.. இவர் தலை தீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளை.. நல்லெண்ணெய் காய்ச்சி ஆயில் மசாஜ் பண்றேன்.. வாயை மூடுங்க.. இல்லைனா அடிச்சு துரத்திடுவேன்” என அதட்டல் போட.. இதற்கு மேல் பேச அவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

      கடந்தகாலம், எதிர்காலம் என எதையும் கருத்தில் கொள்ளாமல் இருவருக்கும் இருக்கும் இந்த நிமிடம் உண்மையாய்ப் பட அதை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

     அவன் பின் நின்று நெற்றி வருடிக் கொண்டிருந்தவள் அவன் தலையில் ஆங்காங்கு முளைத்திருந்த ஒன்றிரண்டு நரை முடிகளைக் கண்டு பெருமூச்சு விட்டவள் “ஏன் மாமா நீ வேற கல்யாணம் பண்ணிக்கலை” எனக் கேட்டாள்.

     இத்தனை நேரம் மனைவியின் கரங்கள் செய்த மாயத்தை ஒரே நிமிடத்தில் அவள் சொற்கள் அறுத்து எறிய.. சேரில் சாய்ந்து அவளுக்கு முகம் காட்டி அமர்ந்திருந்தவன் மெதுவாக விழிகளை மலர்த்தி.. ஒன்றும் பேசாமல் ஒரு பார்வை மட்டும் பார்த்தான்.. அதுவே மகிழை உறையச் செய்ய.. கண்களில் நீர் வேறு வந்து விடுவேன் என பயமுறுத்தியது.

நாயகன் வருவான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!