நாயகனோ நானறியேன் – நாயகன்21
அதில் அவள் மனம் உணர்ந்து கொண்டவன்.. இன்னும் நெருங்க.. அவனைத் தடுத்தவள் “ஐயோ என்ன பண்றிங்க.. யாராவது வந்துடப் போறாங்க.. விடுங்க” என தப்பிச் செல்லப் பார்க்கவும்..
“என்னை சாமியார்னு சொல்லி நீயும் அந்தக் குட்டிப்பிசாசும் கேலி பண்ணி சிரிப்பிங்க தானே” என நிதானமாக அவளை நெருங்கியவன்.. அவள் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி “இது என்னைப் பேரழகனாக் காட்ற இந்தக் கண்ணாடிக்கு” என அவள் இரு கண்களிலும் மென்மையாக முத்தமிட்டான்.
அவள் தன் வாயைப் பிளந்தபடி ஆச்சரியமாக நிற்கவும்.. கண்ணாடியை அணிவித்தவன் “இனி சொல்லுவ சாமியார்னு” என மிரட்டவும்.. ‘இல்லை’ எனப் படு வேகமாகத் தலையசைத்தாள்.
“இப்ப இதைப்பத்தி யோசிக்கக் கூடாது தான்.. ஆனாலும் பயமா இருக்கே.. இதெல்லாம் சரியா வருமாங்க” என பயந்தவாறே கேட்டாள் முத்தமிழ்.
Advertisement
அவள் கையை அழுத்திப் பிடித்தவன் “எல்லாம் நல்லதே நடக்கும்டி.. என்னை நம்பு” என்க.. அதற்கும் தலையாட்டியவளைக் கண்டு சிரித்தவன் “எப்படித்தான் பசங்களுக்குப் பாடம் எடுக்கற.. நீயே இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ணிட்டு” என அவள் கன்னம் கிள்ளிக் கொஞ்ச.. அதற்குள் வெளியே பேச்சு சத்தம் கேட்கவும் அவனை விலக்கிவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.
அவனும் சற்றுப் பொறுத்து வெளியே செல்ல.. அங்கு இவனைத் தேடியபடி இருந்த நந்தாவும்,ஸ்பாட்டும் இவனை ஓட்ட ஆரம்பிக்க.. தன் சிகையைக் கோதியபடி இளித்து சமாளித்தவன்.. பின் அவர்களோடு இணைந்து விருந்தை கவனிக்க ஆரம்பித்தான்.
என்னதான் தன்னை வெறுப்பேத்தினாலும்.. மகிழின் மீதான நந்தாவின் பார்வையிலேயே ராகவன் மனம் குளிர்ந்து விட.. ஒரு கட்டத்தில் அவன் அலப்பறைகள் தாங்காமல் ராகவனே மனம் விட்டு சிரித்து “போதும் மாப்ளை.. நீ அவளை நல்லாத்தான் பாத்துக்கற சாமி.. இனியாவது அவளை அவ வேலையை செய்ய விடு.. எப்ப என்னைக் கண்ல பாத்தாலும் பொண்டாட்டியை கூப்பிடற.. மாமனைப் பாத்து பயமோ” என தன் இயல்புக்கு மாறாக மீசையை நீவி கிண்டலடிக்க.. நந்தா அசடு வழிய.. சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது.
Advertisement
இருவரும் இப்படித்தான் பேசிக் கொள்வார்கள்.. ராகவன் இயல்பே சற்று இறுக்கம் தான் என்றாலும் நண்பனிடம் அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் இருந்தது இல்லை.. ஆனால் இன்று ஒரு புன்னகைக்குக் கூட பஞ்சமாகி பெரும் இடைவெளியே விழுந்துவிட்டது.
Advertisement
என்னதான் சரவணனுக்கும் ராகவனுக்கும் மகிழும் நந்தாவும் மகிழ்வாக இருப்பது பிடித்தாலும்.. வந்திருப்பவர்களின் பரிதாபப் பார்வையை தள்ளிக் கொடுத்து ஏற்றுக் கொண்டிருந்த ரேவதியையும் ரகுவையும் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ சுருக்கென்று தான் இருந்தது.
வீடு முழுதும் சொந்த பந்தங்கள் இருந்தாலும்.. ஓர் இரண்டு முறை ஸ்பாட்டின் அப்பா சுப்பிரமணியம் நந்தாவிடம் பேச வந்து தயங்கிச் செல்வதும்.. இன்னொரு முறை முயன்று பேச வந்தவரை முத்துக்குமரன் தோளில் கை போட்டு அழைத்துச் செல்வதும் அவனுக்கு வித்தியாசமாகப் பட.. அப்போதைக்கு யோசிக்க முடியாமல் வேலைகள் அணிவகுத்து நிற்க.. அதை தற்காலிகமாக மறந்து போனான் நந்தா.
அனைத்தும் முடிந்ததும்.. சகுந்தலைக்கு வீட்டை ஒழுங்குபடுத்த உதவி செய்தவள்.. பின் ஆசாரத்தில் அமர்ந்திருந்த சாரதா அப்பத்தாவின் மடியில் சென்று படுத்துக் கொண்டாள்.. நந்தாவும், சரவணனும் அறைக்குச் சென்றிருந்தனர்.. அப்பத்தா அவள் தலையை நீவி விட.. நேற்று காலை நந்தா பேசியது அனைத்தும் மகிழுக்கு நியாபகம் வந்தது.
Advertisement
அவரிடம் “ஏன் அம்மத்தா.. நைனாவும் மாமாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸா.. எனக்கு நிறைய நியாபகம் இல்லை.. அதான் கேட்கறேன்” என ஆரம்பிக்க
அவரும் பெருமையாக “ஆமா.. உங்க அப்புச்சியும் தாத்தனையும் விட இவனுங்க ரெண்டு பேரும் கூட நல்ல தோஸ்த்.. உங்கத்தையை கூட்டிட்டு வந்து உம்மாமனுக்கு கண்ணாலம் பண்ணி வச்சதே உங்கப்பன் தான்.. என்ன செய்ய விதி.. என்னெல்லாமோ நடந்து இப்ப ஒருத்தனை ஒருத்தன் பாத்துக்கறது கூட இல்ல.. எல்லாம் சீக்கிரமா சரி ஆகிடனும்” என்றார்.
மகிழும் தலையசைத்தபடி அங்கே வந்த சகுந்தலையிடம் “அத்தை நீங்க லவ் மேரேஜா.. சொல்லவே இல்லை” என அவரிடம் வாய் வளர்க்க ஆரம்பிக்கவும்.. ரேவதியும் “என்ன இப்படிக் கேட்டுட்ட அண்ணனும் அண்ணியும் எப்பேர்ப்பட்ட காதல் பறவைகள் தெரியுமா” என அவளோடு கூட்டு சேர்ந்து கொண்டார்.
சகுந்தலை மகிழை முறைத்து “முதல்ல உன் ரூமுக்கு கிளம்புடி.. கொஞ்சமாவது மாமியார்னு மட்டு மரியாதை இருக்கான்னு பாரு” என அவள் கையில் பால் டம்பளரைத் தந்து விரட்டி விட்டார்.
மகிழ் தங்கள் அறைக்குச் செல்ல.. அங்கு நந்தா கட்டிலில் இல்லாமல் கீழே ஒரு ஃபோர்ம் பெட்டை விரித்து அதில் அமர்ந்தபடி மொபைல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் பாலைக் கொடுத்தவாறே முறைத்தவள் “ரொம்பத்தான் நைனாட்ட கெத்து காட்றிங்க.. இப்ப அவர் உங்களுக்கு மாமனார் மாமா.. ஒழுங்கா இருங்க” என அவனை மிரட்ட.. டம்பளரை வாங்கி அருகில் வைத்து விட்டு.. அவள் கரம் பற்றி இழுத்து தன் அருகில் அமர வைத்தவன் “அதெல்லாம் மாமனார் மருமகன் இடையில இருக்கறது.. நீ நடுவுல வராத சரியா” என்றவன் சற்றே நிறுத்தி.. அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அது அவளுக்கு முற்றிலும் புதிதான பார்வையாக இருக்க “என்ன” என்றாள் சற்றே திணறி.. அவள் காதோர முடியை ஒதுக்கியவன் “இன்னைக்கு நாள் ஃபுல்லா ஓடிட்டே இருந்து ரொம்ப டயர்ட்.. உடம்பெல்லாம் செம வலியா இருக்கு.. சோ..” என அவன் இழுக்க.. அவளும் “சோ” என சற்றே மிரண்டு போய்ப் பார்த்தாள்.
அவன் பிபியை முடிந்த வரை ஏற்றி “நான் குப்புறப் படுத்துக்கறேன்.. நீ மேல ஏறி நட.. சரியா” என்றான் ஒரு மந்தகாசப் புன்னகையுடன்.. அதில் அவளும் சத்தமாக சிரித்துவிட்டு “சரி நான் போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு ஓடி வந்துடறேன்” என அவனை விலக்கிவிட்டுச் செல்ல.. அவனும் சிரித்தபடி பாலைப் பருகினான்.
சொன்னபடியே உடை மாற்றி வந்தவள் லேசாய் தயங்கி “மாமா வலிக்கும் மாமா.. வேண்டாம்” என பேக் அடிக்க.. அவளை முறைத்தவன் “நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன் டி.. இதுக்கு மேல நோ மோர் ஆர்க்யுமெண்டஸ்.. ம்ம்.. ஃபாஸ்ட்” என அவளைத் துரிதப்படுத்தினான்.
“சரியான இம்சை.. பிடிவாதம் பிடிச்ச மங்குனி மாமா” என திட்டியவாறே சுவற்றில் ஒரு கை ஊன்றி பாதம் நோகாமல் அவன் மீது நடக்கவும்..
அவனோ “காதல் சொன்ன பெண்ணை இன்று காணோமே கண்ணா.. கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா” என அவளை வெறுப்பேற்றப் பாட.. அதில் வேண்டுமென்ற அவனை நன்றாக மிதிக்க.. வலியில் “ம்மா” என முணகியவன் “தாலி கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா” என மீண்டும் பாடினான்.
அவள் அதைக் கண்டு கொள்ளாமல் தன் கருமமே கண்ணாக இருக்கவும் “மயிலும்மா.. இப்ப நீ என்ன நினைக்கற” என ரொமாண்டிக்காகக் கேட்கவும் “உங்களுக்கு அடுத்து எப்ப கழுத்து வலி வரும்னு நினைக்கறேன்” என வெடுக்கெனச் சொல்ல.. சற்றே புரண்டவன்.. தடுமாறிய அவளின் கரம் பற்றி அமர வைத்து “ஏன்டி இந்தக் கொலைவெறி” என்றான்.
அவன் திடுக்கென கீழே தள்ளியதில் சற்றே அதிர்ந்தவள் “பின்ன என்ன.. நான் மாறிட்டேனா.. ஐ ஹேட் யு.. போ” என அவனைத் தள்ளிவிட.. “ஏன்டி ரெண்டு நாள் முன்னாடி அவ்வளவு ஃபீலிங்கா பேசினேன்ல.. அப்ப நீ எதுவுமே சொல்லலை.. அது கூட பரவால்ல.. இப்ப ஹேட் யு சொல்ற.. உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க” என்கவும்..
“மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா.. அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா” எனப் பாடியவள் அவன் நெற்றி முட்ட.. “தங்கமயிலு” என அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் நந்தா.
அடுத்த நாள் காலை..
ஸ்பாட் வேகவேகமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருக்க.. அவன் தந்தை சுப்பிரமணியம் ஓதோ யோசனையில் வாசலில் அமர்ந்திருந்தார்.. அவரது சோர்ந்த
முகம் கண்டு அவன் அன்னையிடம் விசாரிக்க.. அவரும் தெரியாது என்றார்.
முழுதும் தயாராகி வெளியே வந்தவன் தன் அப்பாவிடம் “ஏங்கப்பா.. உடம்பு எதுவும் பண்ணுதுங்ளா.. ஆஸ்பத்திரி போவோமா” எனக் கேட்கவும்..
அவர் சற்றே சுதாரித்தவாறு “அதெல்லாம் இல்லைப்பா.. உனக்கு வேலை எல்லாம் எப்படி இருக்கு.. புது இடம்” அவன் கூட்டுறவு சொசைட்டியில் வேலை பார்ப்பதைப் பற்றிக் கேட்டார்..
அவனும் சற்றே மனக்குழப்பத்தில் இருந்தான்.. எனவே தந்தையிடமே “வேலையெல்லாம் சரிதாங்கப்பா.. ஆனா கொஞ்சம் அசந்தா நம்ம தலையில மிளகா அரைச்சுடுவாங்க போல.. எல்லாம் திருடனுங்களா இருக்கானுங்க” என்றான் வேதனையாக..
“என்னப்பா ஆச்சு” எனப் பதறியவரிம்.. அமைதிப்படுத்தியவன் “இல்லீங்க்பா.. முந்தா நேத்து.. அந்த கிளார்க் அம்மா.. பீரோல இருந்து ஏதோ பத்திரம் எடுத்துச்சு.. அப்ப அடகு வச்ச மோதிரம் ஒன்னு அது டேபிள் கீழே விழுந்துடுச்சு.. நானும் இந்தம்மா எடுக்கும் எடுக்கும்னு பாத்தேன்.. எடுக்கவே இல்லை.. அப்புறம் நானே கூப்பிட்டு சொன்ன அப்புறம் எடுத்துடுச்சு.. நான் கவனிக்காம விட்ருந்தா அதை முழுங்கிட்டு புதுசா வந்த என்மேல தான் பழியைப் போட்ருப்பாங்க.. எனக்கு பயமா இருக்குங்ப்பா” என்றவன் அவரிடம் விடைபெற்றுச் செல்ல.. அவனையே வேதனை சுமந்த முகத்துடன் பார்த்த சுப்பிரமணியனிற்கு இரண்டு நாளைக்கு முன்பு நடந்த சம்பவங்கள் நினைவில் வந்தது.
நாயகன் வருவான்..
